மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் முழுவதும் பெயரிடப்படாத ஆனால் மிக முக்கியமான இரு நபர்களான பழைய சுயம் மற்றும் புதிய சுயம் பற்றி வேதம் சித்தரித்து இருக்கிறதை நான் கையாள்கிறேன். இரண்டினுடைய தோற்றம் மற்றும் தன்மையை விளக்கமாக சொன்னேன். சுருக்கமாக நான் இதை இப்படிச் சொல்லலாம். முதலில், பழைய சுயம். பழைய சுயம் என்பது சாத்தானின் பொய்யாகிய ஏமாற்றத்தின் (வஞ்சகத்தின்) விளைபொருளாகும். நாம் வஞ்சகத்திற்கு அடிபணியும்போது, அது இச்சையை உண்டாக்குகிறது; அதாவது, அது வக்கிரமான தீங்கு விளைவிக்கும் ஆசையாகும். நாம் இச்சைக்கு இணங்கும்போது, அது பாவத்தை உருவாக்குகிறது; மேலும், பாவம் அதன் போக்கை எடுக்கும்போது, மரணத்தை உருவாக்குகிறது. பழைய சுயம் இரண்டு தனித்துவமான அடையாளங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, இது கேடானது – ஆவிக்குரிய ரீதியில், ஒழுக்க ரீதியில் மற்றும் உடல் ரீதியில் இது கேடுள்ளதாகும். இரண்டாவது, இது ஒரு கலகமாகும். “நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கலகம் இருக்கிறது” என்று நான் வெளிப்படுத்தினேன்.

இப்போது, புதிய சுயம். புதிய சுயம் தேவனால் பிறந்தது அல்லது உருவாக்கப்பட்டது. இது சத்தியமாகிய தேவனுடைய வார்த்தையின் விளைப்பொருளாகும்; நிச்சயமாக, பொய்யாகிய சாத்தானுடைய ஏமாற்றத்திற்கு எதிரானது. புதிய சுயத்தில் தேவனுடைய நோக்கமும், தேவனுடைய சாயலும் மீட்டெடுக்கப்படுகின்றன. புதிய சுயத்தின் தன்மையை விவரிக்கும் வார்த்தைகள் நீதி மற்றும் பரிசுத்தமாகும். இந்த புதிய சுயம் தெய்வீகமானது, நித்தியமானது, அழியாதது என்பதே அதன் தனித்துவமான அடையாளங்கள் ஆகும். இது தெய்வீகமான, நித்தியமான, அழியாத தேவனுடைய வார்த்தையாகிய விதையின் விளைபொருளாகும். விதையைப் போலவே, அந்த விதையிலிருந்து உருவாகும் தன்மையும் தெய்வீகமானது, நித்தியமானது, அழியாததாகும். உண்மையில், இது இயேசுவின் சொந்த இயல்பாகும்.

இன்று, புதிய சுயத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதையும், இந்த புதிய நபரை நமக்குள் எவ்வாறு முதிர்ச்சியடையச் செய்து, தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றுவது என்பதையும் நான் விளக்கப் போகிறேன். எபேசியர் 4:22-24இல் உள்ள முக்கிய பகுதிக்கு மீண்டும் ஒருமுறை செல்வோம், ஆனால், இந்த வசனங்களில் இதுவரை நான் கையாளாத ஒரு அம்சத்தை வலியுறுத்தப் போகிறேன். பவுல் கூறுகிறார்:

22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே, கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, 23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, 24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

இப்போது பழைய சுயத்தை களைந்துபோட்டு, புதிய சுயத்தை அணிவதற்கு இடையில், நாம் செய்ய வேண்டிய ஏதோ ஒன்று இருப்பதாக பவுல் கூறுகிறார். நமது மனதிலே புதிதான ஆவியுள்ளவர்களாக வேண்டும். நமது மனங்களிலே ஏதோ நடக்க வேண்டும். நாம் நினைக்கும் விதத்தில் மொத்தமாக மாற்றம் இருக்க வேண்டும், இது பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே முடியும். எனவே, “ஆவி” என்ற வார்த்தையை குறிக்கிறது. சாத்தானின் பொய்களாலும், சாத்தானின் வஞ்சகங்களாலும் நமது மனங்கள் ஆதிக்கம் செலுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, இப்போது, நாம் நமது மனதை சத்திய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவருக்கு வெளிப்படுத்த வேண்டும், அவர் தேவனுடைய சத்தியத்தை நம்மிடம் கொண்டு வருகிறார். இது ரோமர் 12:2இல் பவுல் கூறுவதோடு ஒத்திருக்கிறது.

2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

இந்த உலகத்திற்கு ஒத்துப்போக வேண்டாம் என்று பவுல் அறிவுறுத்துகிறார். அது பழைய சுயத்தை நம் வாழ்வில் அனுமதிக்காது, மாறாக, புதிய சுயத்தின் வளர்ச்சிக்காகவும், முதிர்ச்சிக்காகவும் தேவனுடைய விருப்பத்தைக் கண்டறிய நாம் மறுரூபமாக வேண்டும். ஆனால், நம் மனம் புதிதாகிறதன் மூலம் மறுரூபம் நிகழப் போகிறது என்று சொல்கிறார். எனவே, எபேசியர் 4 மற்றும் ரோமர் 12இல், பவுல் இந்த செயல்பாட்டில் ஒரு இன்றியமையாத கட்டம் என்னவென்றால், நம் மனம் புதிதாக்கப்படுகிறது என்று கூறுகிறார், இது பரிசுத்த ஆவியானவரின் செயலாகும். எபேசியர் 1:18-19இல், என்ன நடக்க வேண்டும் என்பதை பவுல் மேலும் விவரிக்கிறார். அவர் எபேசிய கிறிஸ்தவர்களுக்காக ஜெபிக்கும் ஜெபத்தை விவரிக்கிறார், அவர் சொல்கிறார்:

18 தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும்….. 19 …. நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

மீண்டும், அவரது அழைப்பின் நம்பிக்கையானது புதிய சுயத்தின் முழு வளர்ச்சியும், அவரது மகிமையின் நோக்கமும் ஆகும். ஆனால் அதை அறிந்துகொள்வதற்கு முன், நம்முடைய கண்கள் பரிசுத்த ஆவியானவரால் பிரகாசிக்கப்பட வேண்டும். நமது இதயங்கள் இருளிலும், அறியாமையிலும் இருந்தது என்பதே இதன் உட்பொருளாகும். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு சத்தியத்தின் ஒளியைக் கொண்டுவர வேண்டும், சத்தியத்தின் மூலம் நம் கண்கள் பிரகாசிக்கின்றன, மேலும், புதிய மனிதனில் தேவன் நமக்காக என்ன வைத்திருக்கிறார் என்பதை நாம் பார்க்கலாம்.

இப்போது, பவுலும், வேதவாக்கியங்களும் வெளிக்கொண்டுவரும் மற்றொரு முக்கியக் கொள்கை என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையின் கண்ணாடியின் மூலம் செயல்படுகிறார். அதை நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையின் கண்ணாடி வழியாக செயல்படுகிறார். யாக்கோபு 1:22-25இல் யாக்கோபு சொல்வது இதுதான்:

22 அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். 23 என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். [கவனியுங்கள், தேவனுடைய வார்த்தையை நாம் கேட்கிறபோது, நாம் கண்ணாடியின் முன்பாக நிற்கிறதைப் போன்றது.] 24 அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம் விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்று மறந்துவிடுவான். [அத்தகைய நபருக்கு தேவனுடைய வார்த்தையை வழங்குவது அவர்களுக்கு நிரந்தர நன்மையை ஏற்படுத்தாது, ஏனென்றால் அவர்கள் கண்ணாடியில் அவர்களின் உருவத்தை பார்த்தாலும், அவர்கள் திரும்பிச் சென்று, கண்ணாடி காட்டியதை மறந்துவிட்டு, தகுந்த நடவடிக்கையை எடுப்பதில்லை. இதற்கான மாற்று வசனம் 25இல் கூறப்பட்டுள்ளது.] 25 சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.

தேவனுடைய கண்ணாடி “சரியான சட்டம்” அல்லது “சுதந்தரத்தின் சட்டம்” என்று அழைக்கப்படும் ஒரு தெய்வீக சட்டத்தை நமக்குக் காட்டுகிறது, நாம் இந்த சட்டத்தின்படி நடந்து, அதற்குக் கீழ்ப்படிந்தால், நாம் செய்யும் காரியங்களில் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். கண்ணாடி உண்மையில் இரண்டு இயல்புகளை, இரண்டு சுயத்தை நமக்குக் காட்டுகிறது. முதலில், நாம் நம்முடைய இயல்பில் என்னவாக இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது: அதுதான் பழைய சுயம், குற்றவாளியான பரபாஸ், சிலுவையில் சரியான இடத்தைப் பெற்றவன். அதன் பின்னர், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை பெற்றுக்கொண்டு, அதை விசுவாசித்தால்; கிருபையினால், புதிய சுயமாக நாம் என்னவாக மாற முடியும் என்பதையும் கண்ணாடி காட்டுகிறது. 2 கொரிந்தியர் 3:18இல் பவுல் சொல்வது போலவே இதுவும் உள்ளது:

18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே [அதுதான் வார்த்தை] காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

“மறுரூபப்படுகிறோம்” என்ற வார்த்தையை மீண்டும் கவனியுங்கள். நம் மனதை புதுப்பிப்பதன் மூலம் நாம் மறுரூபமாக்கப்பட வேண்டும் என்று பவுல் கூறுகிறார். தேவனுடைய வார்த்தையின் கண்ணாடியில் நாம் பார்க்கும்போதும், கர்த்தருடைய மகிமையைக் காணும்போதும் நம் மனம் புதுப்பிக்கப்படுகிறது. அதைப் போலதான் மாற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் அதே சாயலாக மாற்றப்பட்டுள்ளோம்; அதாவது, தேவனுடைய சாயல் புதிய சுயத்தில் மீட்டெடுக்கப்பட்டது, மேலும், இது வெற்றியின் ஒரு செயல்முறையாகும் (“மகிமையின்மேல் மகிமைக்கு”). மேலும், அந்த செயலை செய்பவர் பரிசுத்த ஆவியானவர், ஆனால் நாம் தேவனுடைய வார்த்தையை கண்ணாடியில் பார்க்கும்போது மட்டுமே அவர் அதைச் செய்கிறார்! இது சம்பந்தமாக, நாம் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய மற்றொரு முக்கியமான கொள்கை உள்ளது. அது இதுதான்: புதிய மனிதன், பழைய மனிதனின் இழப்பில் வளர்கிறான். யோவான் 3:30இல், யோவான் ஸ்நானகன் இயேசுவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

“அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.”

இது நம் அனைவருக்குமான கொள்கையாகும். இயேசுவாகிய அவர், புதிய சுயம் பெருக வேண்டும்; ஆனால், நான், என்னுடைய பழைய சுயம் சிறுக வேண்டும். பழைய சுயம் குறையும் விகிதத்தில் மட்டுமே, புதிய சுயம் அதிகரிக்க முடியும். ஒரு புதிய வாழ்க்கை வருவதற்கு முன்பு ஒரு மரணம் இருக்க வேண்டும். இப்போது, பழைய மனிதனைக் கையாள்வதில் இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது, பழைய மனிதனைப் பற்றி தேவன் சொல்வதை நாம் விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். ரோமர் 6:6 இல், நாம் ஏற்கனவே பார்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம், அது நம்முடைய பழைய மனிதனைக் குறித்து சொல்கிறது, “நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டது.” இது தேவனுடைய வார்த்தையில் கூறப்பட்ட சரித்திர உண்மையாகும். அதை நாம் விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, ரோமர் 6:11இல், பவுல் தொடர்ந்து கூறுகிறார்:

11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.

“மரணதண்டனை” என்ற பழைய மனிதன் மீதான தேவனுடைய தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இயேசு சிலுவையில் மரித்தபோது, இயேசுவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற வேதப் பதிவை ஏற்றுக்கொள்கிறோம். எனவே, நமது விசுவாசம் தேவனுடைய வார்த்தையின் கூற்றுகளைப் பற்றிக் கொள்கிறது, மேலும் நாம் மரித்துவிட்டதாகக் கருதுகிறோம். பழைய சுயத்தை மரித்ததாக, அறையப்பட்டதாக கருதுகிறோம். பின்னர் நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுக்கென்று உயிரோடு இருப்பதாகக் கருதுகிறோம். பின்னர், நாம் வாழ்க்கையையும் புதிய சுயத்தின் செயல்பாட்டையும் எண்ணுகிறோம். இரண்டாவதாக, இது படிப்படியாக செயல்படுத்தப்பட வேண்டும். இது ஒரேமுறை உண்மையாக நடந்திருக்கிறது என்று நாம் எண்ணுகிறோம், ஆனால் அதை படிப்படியாக நம் வாழ்வில் செயல்படுத்துகிறோம். எனவே, ரோமர் 6:12- 13இல் பவுல் தொடர்கிறார்.

12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை பாவம் ஆளாதிருப்பதாக. 13 நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.

இதில் எதிர்மறையும், நேர்மறையும் இருக்கிறது. முதலில், எதிர்மறை. பழைய சுயத்தின் உரிமைகோருதலை நாம் மறுக்க வேண்டும். பழைய சுயம் தனக்கு இன்னும் உரிமைகள் இருப்பது போல் நடிக்க முயற்சிக்கும்! நான் இன்னும் அவனுக்கு அடிபணிய வேண்டும், அவனை கருத்தில் கொள்ளவேண்டும், அவனுடைய வழியில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்பது போல இருக்கும். ஆனால், நாம் பழைய சுயம் வேண்டாம் என்றுதான் சொல்ல வேண்டும். தம்மைப் பின்பற்றுவதற்கான முதல் படி நம்மையே மறுதலிக்க வேண்டும் என்பதாக இயேசு கூறினார். “மறுப்பது” என்றால் இல்லை என்று சொல்வதாகும். எனவே, ஒவ்வொரு முறையும் பழைய சுயம் தன்னை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளவும், செயல்படவும், கட்டுப்பாட்டை எடுக்கவும் முயற்சிக்கும்போது, நாம் சொல்லவேண்டியது, “இல்லை. உனக்கு எந்த உரிமையும் இல்லை. நீ மரித்துவிட்டாய். நான் உனக்கு அடிபணியமாட்டேன்.” அதுதான் எதிர்மறையானது.

நேர்மறையானது என்னவென்றால், நாம் பரிசுத்த ஆவியானவருக்கு நம்மை முன்வைக்கிறோம். நமது உறுப்புகளை வழங்குகிறோம். நமது உடலின் ஒவ்வொரு பகுதியையும், நமது ஆளுமையின் ஒவ்வொரு பகுதியையும் நாம் பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அதுதான் நேர்மறையானது. பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து கட்டுப்பாட்டை எடுக்க அனுமதிக்க வேண்டும். அதன் விளைவு கீழ்ப்படிதல் ஆகும். அதுதான் புதிய மனிதன் செயல்படுகிற விதம், புதிய சுயம் கீழ்ப்படிதலால் செயல்படுகிறது. அவன் கலகத்துக்கு எதிரானவன். கலகம் கீழ்ப்படியாமையில் வெளிப்படுத்தப்படுகிறது. புதிய சுயமானது, பரிசுத்த ஆவியானவருக்கு அடிபணிவதன் மூலம் கீழ்ப்படிதலில் வெளிப்படுத்தப்படுகிறது.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். பழைய சுயம் மற்றும் புதிய சுயம் என்ற இந்த கருப்பொருளில் தொடர்வோம். நாளை புதிய சுயத்திற்கான தேவனுடைய திட்டத்தைப் பற்றிப் பேசுகிறேன்.

லைக்
பகிரவும்