பின் மாரி

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
தேவனுடைய ஜனங்களுக்காக அவர் வைத்திருக்கும் முடிவு கால நோக்கத்தைக் கண்டறியுங்கள்! 'மறுசீரமைப்பு' தொடரின் 5-ஆம் பகுதியான 'பின்மாரி' என்பதில், திருச்சபையின் புதுப்பித்தலுக்குப் பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு முக்கியம் என்பதை டெரெக் பிரின்ஸ் விளக்குகிறார். வேதவசனம் மற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமையின் அடிப்படையில் அமைந்த இந்த மறுசீரமைப்பு செய்தியின் மூலம் நம்பிக்கையையும் புரிதலையும் பெறுங்கள்.
Transcript
தேவனுடைய ஜனங்களுக்கான அவருடைய முடிவுகால நோக்கத்தை நாம் ஒன்றாகத் தொடர்ந்து பார்க்கும்போது, மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.
இந்த வாரத்தில் நான் கொடுத்த செய்திகளில், இன்றைய உலகத்தில் காணப்படும் அமளி மற்றும் குழப்பமான சூழ்நிலையின் மத்தியிலும், தேவன் எவ்வாறு தம்முடைய முடிவு கால நோக்கத்திற்காக தீவிரமாக, இடைவிடாமல், தளராமல் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்பதை நான் உங்களுக்குக் காண்பித்து வருகின்றேன். அதாவது தேவன் தம் ஜனங்களாகிய இஸ்ரவேலையும், சபையையும் புதுப்பிக்கும்படி எவ்வாறு தொய்வில்லாமல் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை நான் காண்பித்துக் கொண்டிருக்கிறேன். இஸ்ரவேலிலும், சபையிலும் புதுப்பித்தலின் கிரியை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கியது, அன்றிலிருந்து இரு பக்கத்திலும் அது இணையாக நடந்து வருகிறது என்பதை நான் உங்களுக்குக் காண்பித்தேன்.
இப்பொழுது சபையில் நடந்து கொண்டிருக்கிற புதுப்பித்தலின் கிரியையைக் குறித்து இன்று நான் அதிகமாகப் பேசப் போகிறேன். முதலில், பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் சபை உருவானது என்பதை நாம் நம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவர் வந்திருக்கவில்லை என்றால், சபை என்ற ஒன்று உருவாகியிருக்காது. பரிசுத்த ஆவியானவர் மூலமாய் தேவன் சிருஷ்டித்த ஒன்றுதான், சபையாகும். அன்றிலிருந்து சபையானது தன் ஜீவனுக்கான ஆதாரத்திற்காக பரிசுத்த ஆவியானவரைத்தான் சார்ந்திருக்கிறது. சபையில் பரிசுத்த ஆவியானவரின் பங்கு எவ்வளவு என்பதைப் பொறுத்துதான், சபையில் ஜீவன் எவ்வளவு என்பது வெளிப்படுகிறது. எப்பொழுதுமே இதுதான் அளவுகோலாகும். புதுப்பிக்கப்பட வேண்டிய தேவையில் சபை இருக்கிறதென்றால், பரிசுத்த ஆவியானவர் மட்டுமே சபையைப் புதுப்பிக்க முடியும். சபையின் புதுப்பித்தலுக்கோ அல்லது அதன் ஜீவனுக்கோ, பரிசுத்த ஆவியானவரைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை.
சபைக்குள் நடக்கின்ற பரிசுத்த ஆவியானவரின் வேலையைப் புரிந்து கொள்வதற்குத் திறவுகோலை யோவேல் புத்தகத்தில் பார்க்க முடியும் என்று நான் நேற்று குறிப்பிட்டுச் சொன்னேன். அடிப்படையில் இதைத்தான் நான் சொன்னேன்: பரிசுத்த ஆவியானவரின் ஊற்றப்படுதல், இயற்கையாக பெய்கின்ற பெருமழையோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இஸ்ரவேல் தேசத்தில் அதன் வழக்கமான வானிலையில், இரண்டு முக்கியமான பெருமழைகள் பெய்கின்றன. இஸ்ரவேலின் வானிலையில் பெய்கின்ற இந்த முன் மழையும், பின் மழையும் சபையில் பெருமளவு பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுகிற நிகழ்வுக்கு அடையாளமாக இருக்கின்றன. ஆக, இதுதான் சபைக்கென்று தேவன் செய்து வைத்திருக்கிற முன்னேற்பாடாய் இருக்கிறது. சபை தன் பூரண நிலையை அடையும்வரைக்கும், அதன் நோக்கம் முழுமையாய் நிறைவேறும்வரைக்கும், அதன் வளர்ச்சிக்கான காலகட்டம் முழுவதற்குமான தேவனுடைய திட்டமாய் இது இருக்கிறது.
அப்போஸ்தலர் நடபடிகளில் சொல்லப்பட்டிருக்கிறபடி, ஆதித் திருச்சபையில் அந்த முன் மழை பெய்தது என்றும் நான் சொன்னேன். அந்த ஒரு நூற்றாண்டின் காலத்திற்கு அது பெய்திருக்கலாம். பிறகு இந்தப் பின் மாரி இன்று உலகமெங்கும் சபையின் மீது பெய்து கொண்டிருக்கிறது என்றும் நான் சொன்னேன். நான் இதைத் திரும்பச் சொல்கிறேன். இது மிகவும் முக்கியமானது. நீங்கள் இதை உங்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு இதுதான் திறவுகோல். பரிசுத்த ஆவியானவரின் பின் மாரி இன்று சபையின் மீது உலகமெங்கும் பெய்து கொண்டிருக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுகிற இந்த இரண்டு முக்கியமான நிகழ்விலும் மூன்று அம்சங்களை நான் பொதுவாகப் பார்க்கின்றேன்: பரிசுத்த ஆவியானவரின் ஆரம்ப மழை, சபை வரலாற்றின் ஆரம்பம் மற்றும் இப்பொழுது சபை வரலாற்றின் உச்சகட்ட நிலையில் பெய்கின்ற பின் மழை. பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுகிற இந்த இரண்டு நிகழ்விலும் மூன்று விஷயங்களை நான் பொதுவாகப் பார்க்கிறேன். முதலில், தேவன் தாமாகவே முன் வந்து, சித்தங்கொண்டு, இவ்விரண்டையும் செயல்படுத்துகிறார். தேவனுடைய விருப்பத்தில்தான் இது ஆரம்பிக்கிறது. “நான் ஊற்றுவேன்………..நான் செய்வேன்,” என்று சொன்ன தேவனுடைய வார்த்தைகளில் இது வெளிப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். தேவன் இவ்விரண்டையும் முன் கூட்டியே கணித்திருந்தார். இரண்டாவதாக, பரிசுத்த ஆவியானவர் பெருமழையாய் ஊற்றப்படுகிற இந்த இரண்டு நிகழ்வுகளும் உண்டாக்கக்கூடிய விளைச்சல்களை மனுஷனால் உண்டாக்க முடியாது. அதற்கு ஒத்த ஒன்றை மனுஷனால் நிகழச் செய்ய முடியாது. மனுஷனுடைய திராணியோ அல்லது எந்தவொரு நிறுவனமோ அல்லது மனுஷனுடைய புத்திக்கூர்மையோ, அவனது அறிவாற்றலோ இப்படிப்பட்ட விளைபலன்களை உருவாக்கவே முடியாது. இது அவ்வளவு உயர் ரகமான விளைபலன்களை உண்டாக்குகிறது. மூன்றாவதாக, பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுகிற இந்த இரண்டு நிகழ்வும் சபை முழுவதற்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது சபையின் ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சபைப்பிரிவிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கோ மட்டுமே உரியதல்ல. மாறாக, இது உலகமெங்கும், உலகளாவிய சபை முழுவதும் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுகிற நிகழ்வாயிருக்கிறது.
இந்த வாரத்தின் நடுவில் கொடுத்த செய்தியில், இஸ்ரவேலின் புதுப்பித்தலில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்களின் வருடங்களை நான் கொடுத்தேன். அதேபோல, சபையின் புதுப்பித்தலிலும், சபையின் மீது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுகிற நிகழ்விலும் நடந்த சில முக்கியமான சம்பவங்களின் வருடங்களை இப்பொழுது நான் உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன். முதலில், 1890-களில், மத்திய கிழக்கு நாடுகளிலும், அதன் அருகிலுள்ள தேசங்களிலும் குறிப்பாக, பெர்சியா, ரஷ்யா மற்றும் அர்மேனியாவில் பரிசுத்த ஆவியானவர் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட விதத்தில், பெருமழையாய் பொழியப்பட்டார். தேவன் தாமாகவே விரும்பி இதைச் செய்தார். இந்த தேசங்களில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டதினால் அநேகருடைய வாழ்க்கை முற்றிலும் மாற்றப்பட்டது. அவர்களுடைய வம்சாவழியினர் இப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெர்சியா, ரஷ்யா மற்றும் அர்மேனியாவில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டார் என்ற உண்மைக்கு இவர்கள் இன்று நம் கண்களுக்குத் தெரிகிற சாட்சிகளாய் இருக்கிறார்கள். இவர்கள் வரலாற்றில் ஒரு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறார்கள்.
பிறகு ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, 1900-களில், குறிப்பாக 1904-ல், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பரிசுத்த ஆவியானவரின் முக்கியத்துவம் வாய்ந்த அசைவாடுதல்கள், இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட தளத்தில் நடக்க ஆரம்பித்தன. கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ்-ல், அசுஸா தெருவில் நிகழ்ந்த சந்திப்பு என்று இது அறியப்படுகிறது. இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளும் இங்கிருந்துதான் ஆரம்பித்தன.
1906-ல், மழை மிகவும் வேகமாக எல்லா இடங்களிலும் பெய்வதைபோல, ஆவியானவரின் அசைவாடுதலும் மழையைப்போல மிகவும் வேகமாக நடக்கிறது. ஒரே நேரத்தில் பிரிட்டனிலும், ஸ்காண்டிநேவியாவிலும், ஜெர்மனியிலும், கொஞ்சக் காலத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், சீனாவிலும், தொலைதூர கிழக்கு தேசங்களிலும் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டார்.
முதல் உலகப்போர் நடக்கின்ற நேரத்தில், மிஷனரி ஊழியங்களின் செயல்பாடுகள் மிகவும் அதிகமாய் பெருகின. பரிசுத்த ஆவியானவரின் இந்த ஊற்றப்படுதல்தான் இதற்குக் காரணமாக இருந்தது.
அடுத்தது, இரண்டாம் உலக யுத்தம். இரண்டாம் உலக யுத்தம் முடிக்கின்ற நேரத்தில், சுவிசேஷ ஊழியங்கள் பெருமளவில் நடந்தன. ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு சுகமளிக்கும் அற்புதங்களும், விடுதலையும் கிடைத்தன. பெருமளவில் கூட்டம் திரண்டது. தேசங்கள் முழுவதும் தொடப்பட்டன.
பிறகு 1950-களின் மத்தியில், பழம்பெரும் சபைப்பிரிவினர் என்ற நாம் அழைக்கக்கூடிய எபிஸ்கோபாலியன்ஸ், மெதடிஸ்ட்ஸ், பிரெஸ்பெட்டிரியன்ஸ் இன்னும் மற்றவர்களும் திடீரென்று பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலினால் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட விதத்தில் தொடப்பட்டனர். ஊழியர்களும், சபை ஜனங்களும் அவ்வாறு தொடப்பட்டனர்.
1967-ல், பரிசுத்த ஆவியானவர் கத்தோலிக்க சபையில் ஒரு புதிய பரிமாணத்தில் வல்லமையாய் கிரியை செய்தார். கடந்த 10 அல்லது 12 வருடங்களாக, உலகத்தின் ஒவ்வொரு தேசத்திலும் உள்ள கத்தோலிக்க சபைகளில் மிகவும் வேகமாய், மிகவும் வல்லமையாய் அவர் கிரியை செய்து கொண்டிருக்கிறார்.
பிறகு 1970-களின் ஆரம்பத்தில், ஆவியானவரின் பலத்த கிரியைகள் குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதிகளில், பாரம்பரியச் சபைகளில் நிகழ்ந்தது. என்ன நடந்தது என்று அறிக்கை தயாரித்துக் கொடுப்பது கடினம். காரணம், அறிக்கைகளைத் தயாரித்து, அவைகளை அச்சிடுவதற்கு முன்பே காலங்கடந்து விடுகிறது, செய்தி பழையதாகி விடுகிறது. தேவனுடைய ஆவியானவர் அவ்வளவு வேகமாக, தீவிரமாகச் செயல்படுகிறார்.
நம்முடைய நாட்களில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதைக் குறித்த என்னுடைய செய்தியை முடிக்கப் போகிற இந்த நேரத்தில், இன்னும் ஒரு முக்கியமான குறிப்பை நான் சொல்ல விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவரை ஊற்றுவதில் தேவனுடைய உச்சகட்ட நோக்கம் என்ன என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். சபையின் புதுப்பித்தல் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும், அதற்கு அப்பாற்ப்பட்டதாய் தேவனுடைய நோக்கம் செல்கிறது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
அறுவடையின் நிமித்தமாகவே மழை கொடுக்கப்படுகிறது என்பது வேதவசனம் முழுவதிலும் காணப்படும் ஒரு கோட்பாடாகும். இது இயற்கை மழையைக் குறித்தும் உண்மை. இது ஆவிக்குரிய மழையிலும் உண்மையாயிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் ஒன்று, புதிய ஏற்பாட்டில் ஒன்று என இரண்டு வேதப்பகுதிகளை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். எரேமியா 5:23-24 வசனங்களில், தேவன் இஸ்ரவேலைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்:
23 இந்த ஜனங்களோ முரட்டாட்டமும், கலகமுமான இருதயமுள்ளவர்கள். முரட்டாட்டம் பண்ணிப் போய் விடுகிறார்கள். 24 அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும், பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற (எங்களுக்காக பத்திரமாக வைத்திருக்கிற) எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.
தேவனுடைய கரம் மழையைக் கொடுக்காமலிருப்பதற்குக் காரணம், முரட்டாட்டமும், கீழ்ப்படியாமையும்தான் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். முன் மாரி, பின் மாரி என்ற இரண்டு பெருமழைப் பொழிவுகளைக் குறித்து இங்கு முக்கியப்படுத்திச் சொல்லியிருப்பதை நாம் இங்கு திரும்பவும் கவனிக்க வேண்டும். மழையின் உச்சகட்ட நோக்கமே, அறுவடையை அறுத்து சேகரிப்பதே ஆகும். இதை எப்பொழுதும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அறுவடையின் நிமித்தமே மழை கொடுக்கப்படுகிறது என்று வேதவசனம் முழுவதிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
புதிய ஏற்பாட்டிலும் இந்தக் கோட்பாடு கொண்டு வரப்பட்டிருக்கிறது. யாக்கோபு 5:7-8 வசனங்களை வாசிக்கலாம்:
7 இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டுமென்று, முன்மாரியும், பின்மாரியும் வருமளவும் நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். 8 நீங்கள் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
திரும்பவும் கவனியுங்கள், முன்மாரி, பின்மாரி என்ற இரண்டு பெருமழைகளையும் பெறும்வரை, விவசாயி அறுவடையைச் சேகரிக்க மாட்டான். அது மட்டுமல்ல, இது நேரடியாக கர்த்தருடைய மறுவருகையோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், கர்த்தருடைய மறுவருகை, பின்மாரியின் காலகட்டத்தோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொண்டிருக்கிறது. இதை நான் இவ்வாரத்தின் ஆரம்பத்திலேயே சொன்னேன். அதாவது சகலமும் புதுப்பித்தல் செய்யப்படுகிற காலகட்டத்தில், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மறுவருகையை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இப்பொழுது நான் சொல்லிக் கொண்டிருக்கிற முக்கியமான விஷயம் இதுதான்: எப்பொழுதும் அறுவடையின் நிமித்தமே மழை பெய்கின்றது. மத்தேயு 13:39-ல் இயேசு சொல்கிறார்:
39 “அறுப்பு உலகத்தின் முடிவு.”
அறுவடையை பல்வேறு விதங்களில் நாம் பார்க்க முடியும். அறுவடையை கடினமான உழைப்பின், அதிகமான விதைப்பின், அதிகமான தியாகத்தின், அதிகமான பிரயாசத்தின், அதிகமான திட்டமிடுதலின் ஒரு ரிசல்ட்டாக பார்க்கலாம். இது நிச்சயம் ஆக்கப்பூர்வமான விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த அறுவடை, உலகமெங்கும் உள்ள எல்லா தேசங்களிலிருந்தும் ஆத்துமாக்களை பெரிய அளவில் கடைசியாக சேகரித்து, தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வரும் ஒரு செயலாயிருக்கிறது. நீங்கள் இதைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது என்னுடைய பார்வை: தேவனுடைய இறுதி நோக்கம், தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிப்பது மட்டுமல்ல, தம்முடைய ஜனங்களை ஒரு ஆசீர்வாதமாக மாற்றுவதும்தான். தேவன் இன்றைய உலகத்தில் காணப்படும் வேதனைகளையும், குழப்பத்தையும் அறிந்திருக்கிறார். அவர் அதைக் கண்டும் காணாதவரைப்போல இருக்கவில்லை. அவர் அக்கறையுள்ளவராய் இருக்கிறார். ஆனால் அதற்காக அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் ஒழுங்கும்கிரமமுமாக ஒரு வழிமுறையைப் பின்பற்றி செயலாற்றிக் கொண்டிருக்கிறார். முதலில், பரிசுத்த ஆவியானவரை ஊற்றுவதன் மூலம், அவர் தம்முடைய சபைக்கு புதிய ஜீவனைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய சபைக்கு புதிய ஜீவனைக் கொடுப்பதற்குக் காரணம், அது சகல குழப்பங்களும் நிறைந்த நிலையில் மரித்துக் கொண்டிருக்கிற நம் உலகத்திற்கு புதிய ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். இயேசுவின் நாட்களில் காணப்பட்ட அதே சூழ்நிலைதான் இன்றும் காணப்படுகிறது. அவர் பெருந்திரளான கூட்டத்தைப் பார்த்து, இவ்வாறு சொன்னார், “அறுவடையோ மிகுதி. ஆனால் அறுவடையைச் சேகரிக்க வேண்டிய வேலையாட்களோ மிகவும் குறைவு.” இது இன்றைக்கும் உண்மையாய் இருக்கிறது. அறுவடை மிகுதியாய் இருக்கிறது. தேவன் வேலையாட்களை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். அவர் சகலத்தையும் ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய ஆயத்த வேலையில் ஒரு முக்கியமான வேலை, பரிசுத்த ஆவியானவரின் பின்மாரியாகும். இது இல்லாமல் அறுவடையைச் சேகரித்துக் கொண்டு வர முடியாது.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் அடுத்த வாரம் மீண்டும் உங்களுடன் இருப்பேன். அடுத்த வாரம் சபையின் புதுப்பித்தலைப் பற்றி விரிவாகக் கையாளப் போகிறேன். நடைமுறையில் அதற்கு என்ன தேவை, அது எவ்வாறு நிகழ முடியும் என்பதை விளக்குவேன். அதற்கு அடுத்த வாரம் இஸ்ரவேலின் புதுப்பித்தலைப் பற்றி பேசத் திட்டமிட்டுள்ளேன். ஆனால் இப்போது சில முக்கியமான அறிவிப்புகளுக்காக தொடர்ந்து கேளுங்கள். குறிப்பாக, “ஜெபம் மற்றும் உபவாசத்தின் மூலம் வரலாற்றை வடிவமைத்தல்” என்ற என் புத்தகத்தை எவ்வாறு பெறலாம் என்பதைப் பற்றி. விசுவாசிகளாகிய நீங்களும் நானும், தேவனுடைய மகத்தான முடிவுகாலத் திட்டத்தை நிறைவேற்றுவதில் அவருடன் ஒத்துழைக்க வேண்டிய சிலாக்கியத்தையும் பொறுப்பையும் பெற்றிருக்கிறோம் என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்தப் புத்தகத்தை எவ்வாறு பெறலாம் என்பதை அடுத்த அறிவிப்பு உங்களுக்குச் சொல்லும்.
குறியீடு: RP-R011-105-TAM









