இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.

இந்த வாரம் "தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்" என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். புதிய பிறப்பால் நம்மில் உருவாகியிருக்கும் புதிய வாழ்க்கைக்குத் தேவையான ஆவிக்குரிய ஊட்டச்சத்தை தேவனுடைய வார்த்தை எவ்விதம் அளிக்கிறது என்பதை நேற்று விளக்கினேன். இந்த ஊட்டச்சத்து நமது ஆவிக்குரிய வளர்ச்சியின் தொடர்ச்சியான நிலைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களில் வருகிறது என்று நான் சொன்னேன்: முதலில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பால்; பின்னர் வளர்ந்து வருபவர்களுக்கு அப்பம்; இறுதியாக, முதிர்ந்தவர்களுக்கு திட உணவு அல்லது முழுமையான உணவு.

இன்று நான் ஒரு படி மேலே செல்கிறேன். தேவனுடைய வார்த்தை, நம் உள்ளார்ந்த ஆவிக்கு மட்டுமல்ல, நம்முடைய சரீரத்துக்கு என்ன செய்யும் என்பதைப் பற்றி நான் பேசப் போகிறேன். தம்முடைய வார்த்தையின் மூலம், தேவன் எவ்வாறு நமது உடல் ஆரோக்கியத்தையும் குணப்படுத்துதலையும் வழங்குகிறார் என்பதை நான் உங்களுக்குக் காட்டப்போகிறேன். நாம்

பார்க்கப் போகும் முதல் வசனப்பகுதியான சங்கீதம் 107:17-20 இல், சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்:

"17 நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். 18 அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்."

இங்கே நாம் பயங்கரமான உச்சநிலையில் மனிதர்களைக் காண்கிறோம். அவர்கள் மரணத்தின் வாயிலில் இருக்கிறார்கள். அவர்கள் இனி சாப்பிட முடியாது. அவர்கள் அழிந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள். இனி எந்த நம்பிக்கையும் இல்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டார். அவர்கள் தங்கள் கலகத்தனமான வழிகள் மற்றும் அக்கிரமங்களின் காரணமாக அங்கே இருக்கிறார்கள் என்று சங்கீதக்காரன் கூறுகிறார். அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பின்னர் சங்கீதக்காரன் வசனம் 19 இல் கூறுகிறார்:

"19 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார். 20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்."

உதவிக்கான நமது ஆற்றொணா அழுகைக்கு தேவன் எவ்வாறு பதிலளிக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் நாம் அந்தப் பதிலை அடையாளம் காணவில்லை என்றால், அவர் அனுப்பும் உதவியை நாம் பெறாமல் போகலாம்.

இந்த ஆற்றொணா நிலையில் மரணத்தின் வாசலில் நிற்கும் மனிதர்களின் அழுகைக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார்? "அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பினார்" என்று வசனம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உதவிக்கான நமது அழுகைக்கு, தேவனுடைய வார்த்தையே விடையாக அமைகிறது. தேவனுடைய வார்த்தையின் மூலமாக நமக்கு உதவி வருகிறது. இப்போது அந்த பத்தியில் தேவன் தம்முடைய வார்த்தையை அனுப்புவதன் மூலம் தம்மிடம் மன்றாடிய மக்களுக்கு மூன்று காரியங்களை செய்தார் என்று வேதம் கூறுகிறது. அவர் அவர்களை இரட்சித்தார், அவர் அவர்களைக் குணப்படுத்தினார், அவர்களுடைய அழிவிலிருந்து அவர்களைத் தப்புவிவித்தார்.

தேவனுடைய கிருபையின் அந்த மூன்று செயல்பாடுகளைக் கவனியுங்கள். அவர் இரட்சிக்கிறார். அவர் குணப்படுத்துகிறார். அவர் தப்புவிக்கிறார். இது மனித தேவைகளான ஆவிக்குரிய மற்றும் சரீர தேவைகளுக்கான தேவனுடைய மொத்த ஏற்பாடு என்று நான் நம்புகிறேன்.

இரட்சிப்பது என்பது பாவத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவதாகும் - அதன் குற்ற உணர்வு, அதன் வல்லமை மற்றும் அதன் விளைவுகள். இது ஆவிக்குரிய காரியம்.

குணப்படுத்துவது உடல் ரீதியானது. நோயிலிருந்து குணமடைந்தோம். தேவன் தம்முடைய வார்த்தையை அனுப்புகிறார், பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறார், அதோடு கூட நோயிலிருந்தும் நம்மைக் குணப்படுத்துகிறார்.

அவருடைய வார்த்தையின் மூலம் அவர் செய்யும் மூன்றாவது காரியம் - அவர் நம்மைத் தப்புவிக்கிறார். அல்லது சில மொழிபெயர்ப்பாளர்கள் "மீட்பு" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். விடுதலை என்பது முதன்மையாக பாவத்திலிருந்தோ அல்லது நோயிலிருந்தோ அல்ல, மாறாக அது சாத்தானின் ஆளுமை மற்றும் வல்லமையிலிருந்து என்று நான் நம்புகிறேன். இரட்சிப்பு பாவத்திலிருந்து. குணம் நோயிலிருந்து. விடுதலை சாத்தானின் வல்லமையிலிருந்து. இரட்சிப்பு, குணப்படுத்துதல் மற்றும் தப்புவித்தல் ஆகிய இந்த மூன்று விஷயங்களையும் தேவன் நமக்கு வழங்குவதற்கான அடிப்படை வழி அவருடைய வார்த்தையை அனுப்புவதன் மூலம் என்பதைக் கவனிக்கவும்.

எனது தனிப்பட்ட அனுபவத்தில் இதை நான் எவ்வாறு நிரூபித்தேன் என்பதை இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இரண்டாம் உலகப் போரில் வட ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் நோயாளியாக நான் பல மாதங்கள் படுக்கையிலிருந்தேன் என்று இந்த வாரத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். விரக்தியின் இருண்ட பள்ளத்தாக்கில் நான் எப்படி இருந்தேன் என்பதை விவரித்தேன். ரோமர் 10:17 இல் இருந்து ஒரு அற்புதமான ஒளிக்கதிர் எனக்கு எப்படி வந்தது: "விசுவாசம் வரும்." நான் விசுவாசம் இல்லாமல் இருக்க வேண்டியதில்லை, நான் விசுவாசத்தைப் பெற முடியும், விசுவாசத்தின் மூலம் நான் சரீர சுகமாக்குதலைப் பெற முடியும் என்று தேவன் எனக்குக் காட்டினார். உண்மையில், நான் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை மருத்துவமனையில் கழித்தேன். நான் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது, நான் விசுவாசத்தைப் பெற்றிருந்ததாலும், என்னுடைய சரீரத்திற்கு தேவன் தரும் சுகத்தை எப்படி உரித்தாக்குவது என்பதை கற்றுக்கொண்டதாலும் தான்.

தேவன் என்னை அவருடைய மருந்து பாட்டிலுக்கு அழைத்துச் சென்றார். இது நீதிமொழிகள் 4:20-22 இல் காணப்படுகிறது. நான் உங்களுக்கு வழங்குவது வெறும் கோட்பாடு அல்லது இறையியல் அல்ல, இது எனது தனிப்பட்ட அனுபவத்தின் சாட்சியமாகும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்த மருந்து பாட்டில் என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியது, என்னைக் குணப்படுத்தியது, என்னைக் காப்பாற்றியதற்காய் தேவனுக்கு நன்றி. இதுவே "தேவனுடைய மருந்து பாட்டில்". நீதிமொழிகள் 4:20-22:

"20 என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். 21 அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். 22 அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்."

"அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்" என்ற இந்தக் கடைசி சொற்றொடரைக் கவனியுங்கள். நான் அந்த மருத்துவமனை படுக்கையில் படுத்துக்கொண்டு, “அவர்களுடைய உடம்பெல்லாம் ஆரோக்கியம்” அல்லது “அவர்களுடைய சதைகள் அனைத்திற்கும்” என்ற அந்த வார்த்தைகளைப் படிக்கும்போது, “அதை நான் சரியாகப் புரிந்து கொண்டால், தேவன் என் உடல் முழுவதற்கும் ஆரோக்கியத்தை வாக்குத்தத்தமாக அளிக்கிறார். என் உடல் முழுவதும் ஆரோக்கியம் இருந்தால், நோய்க்கு இடமில்லை, ஏனென்றால் ஆரோக்கியமும் நோயும் எதிரெதிர். நோய் இருக்கும் இடத்தில் ஆரோக்கியம் இருக்காது. ஆரோக்கியம் இருக்கும் இடத்தில் நோய் இருக்காது." ஆகவே, "நான் திரும்பிச் சென்று அதை மீண்டும் படித்து, அது உண்மையில் என்ன சொல்கிறது என்பதைக் கண்டுபிடிக்கப் போகிறேன்" என்றேன். மேலும் இது தேவனுடைய மருந்து பாட்டில் என்ற சரியான முடிவுக்கு வந்தேன். ஆனால் நான் இதைப் பற்றி தியானித்து, "சரி, என் தேவைக்கு இதோ, குணமடைவதற்கான ஏற்பாடு" என்று முடித்தபோது, தேவன் உண்மையில் என்னிடம் பேசினார். அவர் கேட்கும்படியாக பேசவில்லை, ஆனால் அவர் என் மனதில் தெளிவாக பேசினார். மேலும் அவர் இவ்வாறு கூறினார்: “மருத்துவர் தனது நோயாளிக்கு மருந்து பாட்டிலைக் கொடுக்கும்போது, அதை எடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் பாட்டிலில் இருக்கும். நோயாளி அறிவுறுத்தல்களின்படி அதை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், மருத்துவர் அவருக்கு எந்தவித சுகமும் அளிக்க முடியாது". தேவன் என்னிடம், “இது என்னுடைய மருந்து பாட்டில். வழிமுறைகள் பாட்டிலில் உள்ளன. நீ அவற்றைப் படிப்பது நல்லது" என்றார். அதனால் நான் திரும்பிச் சென்று அந்த வசனப்பகுதியை பலமுறைகள் படித்தேன். அறிவுறுத்தல்கள் பாட்டிலில் இருப்பதை நான் பார்த்தேன். மேலும் தேவன் கேட்கின்ற நான்கு விஷயங்கள் உள்ளன.

முதலில், தொடக்க வார்த்தைகள் "என் மகனே" என்பதை கவனியுங்கள். நம்முடைய பிதாவாகிய தேவன், நம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகத் தம் பிள்ளைகளாகப் பேசிக்கொண்டிருக்கிறார். தேவனை தந்தையாக அறியாதவர்களுக்கு இது இல்லை. இது தேவனுடைய குடும்பத்திற்கு மட்டுமே. புதிய ஏற்பாட்டில் ஒரு இடத்தில் இயேசு குணப்படுத்துவதை "பிள்ளைகளின் அப்பம்" என்று அழைத்தார். இது தேவனுடைய பிள்ளைகளின் அப்பம். அது நமது நியாயமான உரிமை. ஆனால் தேவனை தந்தையாக அறியாதவர்களுக்கு இது வழங்கப்படுவதில்லை. தேவன் கூறுகிறார், "என் மகனே."

பின்னர் அவர் இந்த வார்த்தைகளை வழங்குகிறார். இப்போது பாட்டிலில் நான்கு விதமான வழிமுறைகள் உள்ளன. முதலில், கவனம் செலுத்துங்கள். இரண்டாவதாக, உங்கள் செவியைச் சாய்த்துக் கேளுங்கள். மூன்றாவதாக, அவைகள் உங்கள் பார்வையிலிருந்து விலகிச் செல்ல அனுமதிக்காதீர்கள். நான்காவதாக, அவற்றை உங்கள் இதயத்தின் மத்தியில் வைத்திருங்கள். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதில் என்னென்ன இருக்கிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலில், "கவனம் கொடுங்கள்." அதாவது சிதறாத கவனம் செலுத்துங்கள். உங்கள் பைபிளை வானொலி அல்லது தொலைக்காட்சியை கவனித்துக்கொண்டோ அல்லது உங்கள் தினசரி மெனுவைச் செய்துகொண்டே அல்லது உங்கள் அலுவலக வழக்கத்தைத் திட்டமிட்டுக்கொண்டோ படிக்காதீர்கள். எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, தேவன் உங்களுக்கு என்ன சொல்லுகிறார் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

இரண்டாவதாக, "உங்கள் செவியைச் சாய்க்கவும்." அதாவது காதைக் குனிந்து சாய்த்தல். காதைக் குனிதல் என்றால் என்ன அர்த்தம்? இது பணிவு மனப்பான்மை. "தேவனே, நீரே ஆசிரியர், நான் மாணவன், நீரே எனக்குக் கற்றுத் தாரும்" என்று சொல்கிறீர்கள். பலர், தேவன் என்ன சொல்ல வேண்டும், அவர்களின் இறையியல் கோட்பாடு முன்முடிவுகளுடன் அல்லது தேவனால் தங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பது பற்றிய அவர்களின் சொந்த முன்முடிவு யோசனைகளுடன் வேதத்தை அணுகுகிறார்கள். அதன் விளைவாக அவர்கள் காது குனிவதில்லை. தேவன் அவர்களுக்கு கற்பிக்க அவர்கள் உண்மையில் அனுமதிப்பதில்லை.

மூன்றாவது தேவை, "அவைகள் உங்கள் பார்வையிலிருந்து விலகிச் செல்ல அனுமதிக்காதீர்கள்." உங்கள் ஆவிக்குரிய பார்வையை, தேவனுடைய வாக்குத்தத்தங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கண்களை அலைய விடாதீர்கள், ஏனென்றால் பல, பல எழுத்துக்கள், விசுவாசத்தை வளர்க்காத பல போதனைகள் உள்ளன. பல சமயங்களில் அவைகள் உண்மையில் அவிசுவாசத்தையே வழங்குகின்றன. நாம் விசுவாசத்தை விரும்பினால், நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

நான்காவதாக, "உங்கள் இதயத்தின் நடுவில் அவைகளை வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறுகிறது. நீதிமொழிகளின் அடுத்த வசனம் இவ்வாறு கூறுகிறது: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் இதயத்தில் உள்ளவை உங்கள் வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கும். அது நன்றாகப் போகிறதா அல்லது மோசமாகப் போகிறதா என்பது உங்கள் இதயத்தில் உள்ளதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் உங்கள் இதயத்தில் தேவனுடைய வார்த்தையை நீங்கள் பெற முடிந்தால், அது உங்களுக்கு ஜீவனாகவும், உங்கள் எல்லா சரீரத்திற்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மேலும் தேவனுடைய வார்த்தை உள்ளே வருவதற்கு இரண்டு வாயில்கள் உள்ளன, அவை காது வாயில் மற்றும் கண் வாயில். அது "உங்கள் காதைச் சாய்த்துக்கொள்" என்று கூறுகிறது-அதுதான் காது வாயில். "அவை உங்கள் கண்களை விட்டு விலக வேண்டாம்" என்று அது சொல்கிறது - அதுதான் கண் வாயில். தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தங்கள் மற்றும் அறிக்கைகளின் மீது நீங்கள் காதையும் கண்ணையும் செலுத்தி, அவற்றை உங்கள் இதயத்தில் பெறும்போது, தேவன் கூறுகிறார், “மருந்து அதன் வேலையைச் செய்யும் என்று நான் உத்தரவாதம் தருகிறேன். இது உங்கள் உடல் முழுவதும் ஆரோக்கியத்தைக் கொண்டுவரும்."

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் அடுத்த வாரம் மீண்டும் உங்களிடம் வருவேன். "தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்" என்ற தலைப்பில் நான் தொடர்ந்து பேசுவேன். தேவனுடைய வார்த்தையைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள இன்னும் பல அற்புதமான இரகசியங்கள் என்னிடம் உள்ளன.

சில முக்கிய அறிவிப்புகளுக்கு இப்போது காத்திருங்கள்; குறிப்பாக, விசுவாசத்தின் அடித்தளம் என்ற எனது புத்தகத்தை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பது பற்றி. தேவனுடைய வார்த்தையின் இரகசியங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் ஆகியவற்றை இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்துகொண்டது சேர்த்து, இதுபோன்ற பல காரியங்கள் அடங்கிய இந்தப் புத்தகம் நிரந்தரமான, அச்சிடப்பட்ட வடிவில், உங்களுக்குக் கிடைக்கும்.

லைக்
பகிரவும்