சரீரத்தை ஒப்புக்கொடு

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 9
உங்கள் வாழ்விற்கான தேவனுடைய திட்டத்தைக் கண்டறியுங்கள்! 'உங்கள் வாழ்விற்கான தேவனுடைய திட்டத்தை எப்படிக் கண்டறிவது' என்ற தொடரின் இரண்டாம் பகுதியான 'உங்கள் சரீரத்தை ஒப்புக்கொடுங்கள்' என்பதில், தேவனுடைய கிரியைகளை அனுபவிப்பதற்கான அடுத்த கட்டத்தை டெரெக் பிரின்ஸ் வெளிப்படுத்துகிறார். உங்கள் சரீரத்தை ஒரு ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதன் அவசியத்தை இது விளக்குகிறது. கர்த்தருடைய கிருபையினால் வேதவசனங்களை அன்றாட வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்த நடைமுறைப் போதனை காட்டுகிறது.
Transcript
இந்த இலக்கை நோக்கி நாம் எடுத்து வைக்க வேண்டிய முதல் முக்கியமான அடியைக் குறித்து நேற்று நான் விளக்கிச் சொன்னேன். நம் வாழ்க்கையில் உண்டாகியிருக்கிற பாவத்தின் விளைவுகளை முற்றிலும் கையாண்டு, தீர்க்கும்படி நாம் தேவனுக்கு முதலில் இடம் கொடுக்க வேண்டும். பிறகு நம்மை புத்தம் புதிய சிருஷ்டிப்பாக, முற்றுலும் புதிய ஒரு நபராக உருவாக்கும்படி அவருடைய சிருஷ்டிப்பின் கிரியைக்கு நாம் இடம் கொடுக்க வேண்டும்.
தேவனுடைய வல்லமையான இந்த சிருஷ்டிப்பின் கிரியை யாருக்குள் நடந்திருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே தேவனுடைய திட்டத்தின் அடுத்த கட்டம் வெளிப்படுகிறது. இந்தச் சிருஷ்டிப்பின் கிரியையைத் தொடர்ந்து, நாம் எடுத்து வைக்க வேண்டிய அடுத்த அடியை இன்று நான் உங்களுக்கு விளக்கிக் காண்பிக்கப் போகிறேன்.
முதலில், ரோமர் 12:1-ம் வசனத்திற்கு நாம் செல்வோம். ரோமர் நிருபத்தின் முதல் 11 அதிகாரங்களில் பவுல் வெளிப்படுத்திய தேவனுடைய சத்தியங்களை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதைச் சொல்லி, இந்த ரோமர் 12-ம் அதிகாரம் ஆரம்பிக்கிறது. இது முதல் 11 அதிகாரங்களில் எழுதப்பட்ட கோட்பாடுகளை எடுத்து, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு அவற்றைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று சொல்கிறது. “ஆகையால்” என்ற வார்த்தையோடு இந்த அதிகாரம் ஆரம்பிக்கிறது. நான் இதை பல முறை சொல்லியிருக்கிறேன். “ஆகையால்” என்ற வார்த்தையை நீங்கள் வேதாகமத்தில் பார்க்கும்போதெல்லாம், அந்த வார்த்தைக்கு முன் அங்கே என்ன இருக்கிறது என்று நீங்கள் பார்க்க வேண்டும், ஆராய வேண்டும். “ஆகையால்” என்ற வார்த்தை இங்கேயும் வருகின்றது. காரணம், இதற்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா வேதாகமச் சத்தியங்களையும் எவ்வாறு நம் அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இவ்வசனம் சொல்ல ஆரம்பிக்கிறது. பவுல் இங்கு எழுதுகிறார்:
1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
வேதாகமத்தைக் குறித்து என் கவனத்தை மிகவும் அதிகமாய் ஈர்த்த ஒரு விஷயங்கள் இவைதான். அது எதைக் குறித்தும் மழுப்பி, சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாகப் பேசுகிறது. அது ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து மேலோட்டமாகப் பேசுவதில்லை. அது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பின்பற்றுவதற்கு ஏற்ற காரியங்களைப் பேசுகிறது. ரோமர் நிருபத்தின் முதல் 11 அதிகாரங்களில், இப்படிப்பட்ட வல்லமை நிறைந்த வேதாகமச் சத்தியங்களைத்தான் நாம் நேருக்கு நேராக எதிர்கொள்கின்றோம். இப்பொழுது நாம் இவற்றை எங்கே பயன்படுத்தப் போகிறோம்? நம்முடைய சரீரத்திலிருந்து நாம் அதை ஆரம்பிக்கிறோம். நம்மிடம் தேவன் கேட்கிற முதல் காரியம், நாம் நம்முடைய சரீரத்தை ஜீவ பலியாய் அவரிடம் ஒப்புக்கொடுக்கிறோம்.
“அப்படியா? என் சரீரம் அவ்வளவு முக்கியமல்ல, என் ஆத்துமாதான் முக்கியம்,” என்றுதானே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தேவன் மிகவும் யதார்த்தமானவர். பாருங்கள், அங்கே மேஜையில் ஒரு டம்ளர் தண்ணீர் இருக்கிறது. “அந்த டம்ளரை எடுத்துக் கொடுங்கள்,” என்று நான் உங்களிடம் கேட்கிறேன். இப்பொழுது எனக்கு என்ன கிடைக்கின்றது? ஒரு டம்ளரையும், அதன் உள்ளே இருக்கும் தண்ணீரையும் நான் பெறுகின்றேன். டம்ளரைக் கொடுக்காமல், அதிலுள்ள தண்ணிரை மட்டும் நீங்கள் எப்படி எனக்குக் கொடுப்பீர்கள்? தேவனும் அதைத்தான் உங்களிடம் கேட்கிறார்? உங்களுடைய சரீரமாகிய பாத்திரமும், அதன் உட்பொருட்கள் அனைத்தும் அவருக்குத் தேவை. உண்மையைச் சொன்னால், நீங்கள் முதலில் பாத்திரத்தை தேவனிடம் கொடுக்காமல், அதற்குள் உள்ளவைகளை உங்களால் அவரிடம் கொடுக்க முடியாது. ஆகையால் தேவனுக்கு நீங்கள் வேண்டும். அதாவது பாத்திரமாகிய உங்களுடைய சரீரமும், அதற்குள் உள்ளவைகளும் அவருக்கு வேண்டும்.
அது “ஜீவ பலியாய்” ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்று தேவன் சொல்கிறார். அதற்கு என்ன அர்த்தம்? பழைய ஏற்பாட்டில் செலுத்தப்பட்ட பலிகளிலிருந்து இது வேறுபட்டிருக்கிறது. பழைய உடன்படிக்கையின் கீழ், விலங்குகள் பலியாக செலுத்தப்பட்டன. அவை கொல்லப்பட்டு, அவற்றின் செத்த சரீரங்கள் தேவனுடைய பலிபீடத்தில் கிடத்தப்பட்டன. இப்பொழுது தேவன் சொல்கிறார், “பழைய உடன்படிக்கையில், என்னுடைய பலிபீடத்தில் எவ்வளவு முழுமையாய் பலி செலுத்தப்பட்டதோ, அவ்வளவு முழுமையாய் நீயும் உன் சரீரத்தை என்னிடம் அர்ப்பணிக்க வேண்டும். ஆனால் ஒரு வித்தியாசம். உன் சரீரம் செத்த சரீரமாக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அது ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேன்.”
சுற்றி வளைத்துப் பேசாமல், தேவன் எவ்வளவு நேரடியாகப் பேசுகிறார் என்று கவனியுங்கள். மாயையான காரியங்களையோ, பகட்டான காரியங்களையோ தேவன் பேசுவதில்லை. அவர் சொல்கிறார், “உன் சரீரம்தான் எனக்கு வேண்டும். உன் சரீரத்தை நீ என்னிடம் அர்ப்பணிக்கும்போது, உன்னுடைய சகலமும் என்னிடம் அர்ப்பணிக்கப்படுகிறது.”
மத்தேயு 23-ம் அதிகாரத்தில், இயேசு பரிசேயர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர்களுடைய மார்க்கத்தில் மெய்யாகவே எது முக்கியம் என்பதைக் குறித்து அவர் அவர்களிடம் விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்கிறார். காரணம், அவர்களுடைய மதிப்பீடுகள் தவறானவைகளாய் இருந்தன. பலிபீடத்தைக் காட்டிலும், பலி தான் அதிக முக்கியமானது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இயேசு சொன்னார்:
19 “மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ (பலியா?), காணிக்கையைப் (பலியைப்) பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?”
இதன் கடைசி வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. பலிபீடம்தான், அதன் மீது வைக்கப்பட்ட பலியை பரிசுத்தமாக்குகிறது. தேவனுடைய பலிபீடத்தின் மீது வைக்கப்பட்ட அந்த நிலையில்தான், அந்த பலியானது பரிசுத்தமாக்கப்படுகிறது. உங்களுடைய சரீரத்திற்கும் இது பொருந்தும். நீங்கள் உங்களுடைய சரீரத்தை தேவனுடைய பலிபீடத்தின் மீது வைக்கும்போது, அது பரிசுத்தமாகிறது. அது வேறுபிரிக்கப்படுகிறது. அது தேவனுக்கென்று தனியே பிரிக்கப்படுகிறது. ஆனால் நீங்கள்தான் அதைச் செய்ய வேண்டும். உங்களுடைய சரீரம் தேவனுக்கு முழுமையாய் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பது உங்களுடைய தீர்மானமாக இருக்க வேண்டும்.
இதை நம் அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது எப்படி? தேவன் உங்களை அனுப்புகிற எந்த ஒரு இடத்திற்கும் நீங்கள் செல்வீர்கள், அவர் செய்யச் சொல்கிற எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் செய்வீர்கள் என்பதுதான் இதற்கு அர்த்தம். நீங்கள் செல்ல வேண்டிய இடம், ஒரு பாலைவனமாக இருக்கலாம், ஒரு பட்டணமாக இருக்கலாம், ஒரு மலையாக இருக்கலாம், நீங்கள் அங்கு செல்வீர்கள். நீங்கள் பாத்திரங்களை கழுவ வேண்டி வரலாம், நீங்கள் பிரசங்கிக்க வேண்டி வரலாம், உங்களுக்கு சம்பளம் கிடைக்கலாம், சம்பளமே இல்லாமலும் இருக்கலாம், நீங்கள் அதைச் செய்வீர்கள். நீங்கள் அந்தத் தீர்மானங்களையெல்லாம் தேவனுடைய விருப்பத்திற்கு விட்டு விடுவீர்கள். நீங்கள் உங்களுடைய சரீரத்தை தேவனிடம் அர்ப்பணித்து விட்டு, “தேவனே, இதோ, என் சரீரம். நீர் விரும்புகிறபடி, உமக்குப் பிரியமான விதத்தில் உம்முடைய நீதியின் ஆயுதமாக என் சரீரத்தை பயன்படுத்தும் என்று நான் உம்மிடம் அதை ஒப்படைக்கின்றேன்.” இதுதான் தேவனிடம் உங்களுடைய சரீரத்தை அர்ப்பணிக்கின்ற விதமாகும். அப்பொழுது இதன் விளைவாக வரும் மாற்றம், உங்களுடைய மனதில் தொடரும். ரோமர் 12-ம் அதிகாரத்தின், அடுத்த வசனமாகிய 2-ம் வசனத்தில், பவுல் இதைச் சொல்கிறார்:
2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தமும் இன்னதென்று பகுத்தறியத் தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
நீங்கள் உங்களுடைய சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, ஒரு மாற்றம் உங்களுடைய மனதில் உண்டாகிறது. இது விசித்திரமாகத் தெரியலாம். ஆனால் இது உண்மை. நீங்கள் வித்தியாசமான வழியில் சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். உங்களுடைய மனம் புதிதாக்கப்படுகிறது என்று தேவன் சொல்கிறார். உங்களுடைய மனம் புதுப்பிக்கப்படும்போது, உங்களைக் குறித்த தேவனுடைய சித்தம் என்ன என்பதை நீங்களே கண்டறிவீர்கள். தேவனுடைய சித்தத்தை வருணிக்கும்படி, பவுல் மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இவை மூன்றுமே அழகான வார்த்தைகளாய், நமக்கு உற்சாகமூட்டக்கூடிய வார்த்தைகளாய் இருக்கின்றன. அது நன்மையானது, அது பிரியமானது, அது பரிபூரணமானது என்று அவர் சொல்கிறார்.
இங்கே படிப்படியான வளர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும். தேவனுடைய சித்தத்தை நீங்கள் கண்டறிய ஆரம்பிக்கும்போது, அது நன்மையானது என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். தேவன் எப்பொழுதுமே தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மையானதையே விரும்புகிறார், அவர் ஒருபோதும் தீமையானதை விரும்புவதில்லை. நீங்கள் இன்னும் முன்னே செல்லும்போது, அது தேவனுக்குப் பிரியமானது என்பதைக் கண்டுபிடிப்பீர்கள். உண்மையாகவே, நீங்களும் அதைத்தான் விரும்புவீர்கள். பிறகு நீங்கள் அதைக் குறித்த முழுமையான புரிந்து கொள்ளுதலைப் பெற்றுக் கொள்வீர்கள். அப்பொழுது அது உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கிய பரிபூரண சித்தமாய் இருப்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். அது ஒவ்வொரு தேவையையும் சந்திக்கும். அதில் சந்திக்கப்படாத தேவை என்று எதுவுமில்லை. உங்களுடைய நன்மைக்காகவே, தேவனுடைய பரிபூரண சித்தம் இங்கே இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மனம் புதிதாக்கப்படும்போதுதான், உங்களால் தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் பாருங்கள், மதம் இப்படி கிரியை செய்வதில்லை. அது மனுஷனை வெளியே இருந்து மாற்றும்படி முயற்சிக்கிறது. ஆனால் தேவன் உள்ளேயிருந்து கிரியை செய்கிறார், மாற்றுகிறார். தேவன் சொல்கிறார், “உன்னுடைய மனதை நான் மாற்ற ஆரம்பிக்கும்போது, நீ மாறுவாய். உன் வாழ்க்கை முழுவதுமே, நீ வாழ்கின்ற விதமே மாறும். அப்பொழுது என் சித்தம், நன்மையானது, பிரியமானது, பரிபூரணமானது என்பதை என்னால் உனக்கு வெளிப்படுத்த முடியும்.”
ஏன், நம் மனம் புதிதாக்கப்பட்ட பிறகுதான், தேவனால் நம் மனதிற்கு தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்த முடியும் என்று இப்பொழுது நான் உங்களுக்கு விளக்கிக் காண்பிக்க விரும்புகிறேன். நம்முடைய மனதில் தேவன் இந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு முன், நம்முடைய பழைய மாம்ச சுபாவம்தான் நம் மனதை ஆட்கொண்டிருந்தது. அதினால் தேவனுடைய சித்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ரோமர் 8:7-ல், பவுல் இதைச் சொல்கிறார்: “மாம்ச சிந்தை, தேவனுக்கு விரோதமான பகை…”
அப்படியென்றால், தேவனுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிற மனதினால், தேவனுடைய சித்தத்தைக் குறித்த வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை தெளிவாய் புரிந்து கொள்ள முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். தேவனுக்கு விரோதமான பகை உணர்வோடு யுத்தம் பண்ணுகிற நம்முடைய மனதின் நிலை, முதலில், மாற்றப்பட வேண்டும். அது நம்முடைய மனம் புதிதாக்கப்படுவதன் மூலமாகத்தான் நடக்கிறது. அதன் மூலமாகத்தான் நம் மனம் உருமாறுகிறது, மறுரூபமாக்கப்படுகிறது. புதிதாக்கப்பட்ட மனதினால், புதிதாக்கப்பட்ட அந்த மனதினால் மட்டுமே தேவனுடைய சித்தத்தைக் குறித்த வெளிப்பாட்டை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
தேவனுக்கு விரோதமாக கலகம் செய்கிற மனுஷனுடைய முரட்டாட்ட ஆத்துமாவினுடைய எண்ணங்களின் விளைவாகத்தான் இந்த மாம்ச சிந்தை உண்டாயிருக்கிறது. இது மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது: நம் சுய சித்தம், நம் அறிவுத்திறன் மற்றும் நம் உணர்வுகள். மாம்ச சிந்தை எப்பொழுதுமே சுய நலமானது. “நான்” என்ற சிறிய வார்த்தையைச் சுற்றித்தான் அது சுழல்கின்றது. அது “நான்” என்ற அகங்காரத்தோடு செயல்படும். அது எளிமையான வாக்கியங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்தும். “எனக்கு இது வேண்டும்,” என்று நம் சுயசித்தம் சொல்கிறது. “இதுதான் சரியென்று நான் நினைக்கிறேன்,” என்று நம் மாம்ச புத்தி சொல்லும். “நான் இப்படித்தான் உணருகிறேன்,” என்று நம் மாம்ச உணர்வுகள் சொல்லும். “எனக்கு இது வேண்டும்”, “இதுதான் சரியென்று நான் நினைக்கிறேன்”, “நான் இப்படித்தான் உணருகிறேன்” என்ற இந்த மூன்று வாக்கியங்களால்தான் இன்னும் புதுப்பிக்கப்படாத, மாம்சீக சிந்தையுள்ள மனுஷன் கட்டுப்படுத்தப்படுகிறான். அவனுடைய வாழ்க்கையின் சகல காரியங்களும் இவைகளை மையமாகக் கொண்டே சுழலுகின்றன. இந்த நிலையில் அவனால் தேவனுடைய சித்தத்தைக் குறித்த வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள முடியாது. குறிப்பிடத்தகுந்த, தொடர்ச்சியாக நிகழக்கூடிய ஒரு மாற்றம் அவனுக்குள் நடந்தாக வேண்டும். “எனக்கு இது வேண்டும்”, “இதுதான் சரியென்று நான் நினைக்கிறேன்”, “நான் இப்படித்தான் உணருகிறேன்” என்ற மனநிலை உடைக்கப்பட வேண்டும், மறுக்கப்பட வேண்டும். தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வதற்கு முன், நாம் சில காரியங்களை விட்டு விட வேண்டும். மத்தேயு 16:25-ல், இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்.
25 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான். என் நிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்.
கிரேக்க மூலபாஷையில் “ஆத்துமா” என்று அர்த்தங்கொள்கிற வார்த்தைதான், இங்கு “ஜீவன்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆகையால் உங்களுடைய ஆத்தும ஜீவியத்தைக் காத்துக் கொள்ளும்படி நீங்கள் பிரயாசப்படுவீர்கள் என்றால், நீங்கள் அதை இழந்து போவீர்கள். மாறாக, உங்களுடைய ஆத்தும ஜீவியத்தை விட்டு விட விருப்பமுள்ளவர்களாயிருப்பீர்கள் என்றால், நீங்கள் புதிய ஜீவனைக் கண்டடைவீர்கள். அது தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கிற ஜீவனாகும்.
பழைய ஆத்தும ஜீவியத்தை இழப்பதென்றால் என்ன அர்த்தம்? அது உங்களுடைய சுயத்தை மறுதலிப்பதாகும். அதாவது உங்களுடைய சுயத்தைப் பார்த்து இவ்வாறு சொல்லுங்கள்: “இனி நீ என் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. நீ விரும்புகிற, நீ நினைக்கிற, நீ உணருகிற காரியங்கள் என்னை ஆளும்படி நான் இனி இடம் கொடுக்க மாட்டேன். நான் இனி வேறு மாதிரி வாழப் போகிறேன். எனக்குத் தேவையான வழிகாட்டுதல் இனி தேவனிடமிருந்து வரும். சுயநலத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களுக்கும் நான் இனி அனுமதி மறுக்கப் போகிறேன். என் உணர்ச்சிகளுக்கும், என் சுய சிந்தனைகளுக்கும் நான் இனி ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்க மாட்டேன். இவ்வளவு வருடங்களும் என் மீது ஆதிக்கம் செலுத்தின என்னுடைய பழைய ஆத்தும ஜீவியத்தை, தற்பெருமை கொண்ட வாழ்க்கைமுறையை, சிந்தனையை நான் பலிபீடத்தில் வைக்கிறேன். தேவன் எனக்காகத் திட்டமிட்டு ஆயத்தம் செய்து வைத்திருக்கிற புதிய ஜீவனை நான் கண்டடையப் போகிறேன்.”
நேற்று நான் சொன்ன காரியம் உங்களுடைய நினைவிலிருக்கிறதா? எபேசியர் 2:10-ஐ மேற்கோள் காண்பித்து, நான் சொன்னேன். நாம் கிறிஸ்துவுக்குள் வரும்போது, நாம் தேவனுடைய கைவேலைப்பாடாக உருவாக்கப்படுகிறோம். நாம் செய்யும்படி அவர் ஆயத்தம் செய்து வைத்திருக்கிற நற்கிரியைகளுக்காக நாம் உருவாக்கப்படுகிறோம். நாம் ஒவ்வொருவரும் நிறைவேற்றி முடிக்கும்படி ஒரு விசேஷமான, தனித்தன்மையுள்ள ஒரு வேலையை தேவன் நமக்காக முன் குறித்திருக்கிறார். ஆனால் பழைய வாழ்க்கைமுறையின்படியே நாம் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்போம் என்றால், சுயநலமான வாழ்க்கை நம்மைக் கட்டுப்படுத்தும்படி நாம் இடம் கொடுப்போம் என்றால், பழைய நோக்கங்களே நம்முடைய உந்துசக்தியாய் இருக்கும் என்றால், தேவன் நமக்காக ஆயத்தம் செய்து வைத்திருக்கிற அந்த நற்கிரியைகளை நாம் கண்டுபிடிக்க முடியாது, அவைகளில் நாம் நடக்கவும் முடியாது.
ஆக, இழக்க வேண்டிய வாழ்க்கை ஒன்று இருக்கிறது. கண்டடைய வேண்டிய வாழ்க்கை ஒன்றும் இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய திட்டத்தின் நிறைவை நீங்கள் மெய்யாகவே கண்டடையப் போகிறீர்கள் என்றால், சில கேள்விகளை உங்கள் முன் நீங்களே வைக்க வேண்டும், “பழைய ஆத்தும ஜீவியத்தை நான் விட்டு விட விரும்புகிறேனா? எனக்கு இது வேண்டும் -இதுதான் சரியென்று நான் நினைக்கிறேன் - நான் இப்படித்தான் உணருகிறேன் என்ற பழைய எண்ணங்களை விட்டு விடுவதில் எனக்கு விருப்பமிருக்கிறதா? என் மனதைப் புதுப்பிப்பதன் மூலம், தேவன் எனக்குள் மாற்றத்தை உண்டு பண்ணும்படி இடம் கொடுக்க, நான் விருப்பமுள்ளவனாயிருக்கிறேனா?”
இது ஒரு தீர்மானம்.
இதை நீங்கள்தான் எடுக்க வேண்டும்.
குறியீடு: RP-R014-102-TAM









