தேவனுடைய ஜனங்களுக்கான அவருடைய முடிவுகால நோக்கத்தை நாம் ஒன்றாகத் தொடர்ந்து பார்க்கும்போது, மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.

இன்று நான் உங்களிடம் இன்னொரு மரமாகிய திராட்சைக் கொடியைக் குறித்துப் பேசப் போகிறேன். திராட்சைக்கொடி சபைக்கு அடையாளமாயிருக்கிறது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், இஸ்ரவேலின் புதுப்பித்தலுக்கு இணையாக சபையின் புதுப்பித்தலும் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன்.

இப்பொழுது நாம் திரும்பவும் யோவேல் புத்தகத்திற்குச் செல்வோம். சபையின் புதுப்பித்தலைக் குறித்த ஒரு தீர்க்கதரிசன முன்னோட்டத்தை அங்கே பார்ப்போம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலத்தின் முடிவில், தம்முடைய ஜனங்களுக்காக தேவன் செய்யப் போகிறவைகளைக் குறித்து யோவேலின் தீர்க்கதரிசனத்தில் ஒட்டுமொத்தமாக தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இதை நாம் மறக்கக்கூடாது.

முதலில் ஒரு வரலாற்று உண்மையை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். சபையானது முதலில் பெந்தேகோஸ்தே நாளில்தான் முழு உருவமெடுத்தது. இதை எல்லா வரலாற்று அறிஞர்களும், இறையியல் வல்லுநர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். பெந்தேகோஸ்தே நாளில், பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டதன் மூலமாகத்தான் சபை உருவானது. இதைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட உடனே, தேவனுடைய மற்றும் சபையினுடைய பிரதிநிதியாய் பேதுரு, யோவேல் தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து வசனங்களை மேற்கோள் காண்பித்துப் பேசினான். இதைத்தான் நாம் அப்போஸ்தலர் நடபடிகள் 2:16-17 வசனங்களில் வாசிக்கிறோம். பெந்தேகோஸ்தே நாளில், பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட பிறகு உடனே என்ன நிகழ்ந்தது என்பதை இது பேசுகிறது. பேதுரு சொல்கிறான்:

16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது (பிறகு பேதுரு, யோவேலின் வசனங்களை மேற்கோள் காண்பித்துப் பேசினான்). 17 ‘கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்.’

நாம் திரும்பி யோவேல் புத்தகத்திற்குச் செல்வோம் என்றால், பேதுரு மேற்கோள் காண்பித்துப் பேசிய வசனத்தை புதுப்பித்தலின் வாக்குத்தத்த வசனத்திற்கு பிறகு உடனடியாக நாம் பார்க்க முடியும். புதுப்பித்தலின் வாக்குத்தத்தம் மைய வாக்கியமாக இருக்கிறது. அது யோவேல் 2:25-ம் வசனத்தில் வருகின்றது. “நான் திரும்ப அளிப்பேன்,” என்பதுதான் அந்த வாக்கியம். பேதுரு மேற்கோள் காண்பித்துப் பேசிய தீர்க்கதரிசனம் அந்த அதிகாரத்தின் 28-ம் வசனத்தில் இருக்கின்றது.

யோவேல் 2-ம் அதிகாரத்தில், புதுப்பித்தலின் வாக்குத்தத்தத்தை நாம் இன்னும் ஆழமாகப் பார்ப்போம் என்றால், மழையைக் குறித்த ஒரு வாக்குத்தத்தம், இங்கு ஒரு தீர்க்கதரிசன அடையாளமாக திரும்பவும் எடுத்துக் காண்பிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடியும். யோவேல் 2:23-ம் வசனத்திலிருந்து வாசிப்போம்:

23 சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள். அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன் மாரியையும், பின் மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப் பண்ணுவார்.

‘ஏற்கனவே’ என்ற வார்த்தை வருகின்ற இடத்தில், ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில், ‘முதல் மாதத்தில்’ என்று வருகின்றது. அதுதான் சரி என்று நான் நினைக்கிறேன். எனவே உங்களுக்கு முன் மாரியையும், முதல் மாதத்தில் பின் மாரியையும் வருஷிக்கப் பண்ணுவார் என்பதே சரியாயிருக்கும். காரணம், உண்மையாய் என்ன நடக்கிறது என்று பார்த்தால், இஸ்ரவேல் தேசத்தில் பின் மாரி என்பது வழக்கமாக முதல் மாதமாகிய பஸ்கா மாதத்தில் பெய்யும். அது ஏப்ரல் மாதமாகும். ஆனால் தேவன் இந்த புதுப்பித்தலின் கிரியையில் முன் மாரி, பின் மாரி என்ற இரண்டு முக்கியமான பெரிய மழையையும் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுப்பேன் என்று தம்மையே உறுதியாக ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதைக் குறித்த வாக்குத்தத்தத்திற்குப் பிறகு உடனடியாக இது வருகிறது. பேதுரு யோவேலில் இருந்து இதைத்தான் மேற்கோள் காண்பித்துப் பேசினான்.

யோவேல் 2:28 சொல்கிறது: அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தீர்க்கதரிசனங்களையும் காண்பார்கள். (தேவனே இதைச் சொல்கிறார்).

ஆக, இந்த எல்லா வேதவசனங்களையும் ஒன்றாய் சேர்த்துப் பார்க்கும்போது, மூன்று முக்கியமான முடிவுகளுக்கு நேராக நாம் நடத்தப்படுகிறோம். முதலில், பெருமழை என்பது தேவனுடைய ஆவியானவர் ஊற்றப்படுவதற்கான ஒரு தீர்க்கதரிசன அடையாளமாய் இருக்கிறது. இரண்டாவதாக, ஆவியானவர் ஊற்றப்படுதல் என்பது புதுப்பித்தலின் கிரியையில் நடக்கின்ற அத்தியாவசிமான ஒன்றாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர்தான் சபையை உருவாக்கிக் கொண்டு வந்தார், பரிசுத்த ஆவியானவர்தான் சபையைத் தொடர்ந்து தொய்வில்லாமல் இயங்கச் செய்து கொண்டிருக்கிறார் என்றால், இப்பொழுது சபைக்கு புதுப்பிக்கப்படுதலும், புதுப்பித்தல்ம் தேவைப்படுகிறது எனும்போது, அதையும் பரிசுத்த ஆவியானவர்தானே செய்தாக வேண்டும். அதுதானே சரியாக இருக்கும். மூன்றாவது முடிவு, இஸ்ரவேலின் வானிலையில் முன் மழை, பின் மழை இருந்ததுபோல, சபையின் இரண்டு முக்கியமான ஊற்றப்படுதல்களிலும் பரிசுத்த ஆவியானவர்தான் மழையாய் பொழியப்படுவார் அல்லது ஊற்றப்படுவார்.

சபைவரலாற்றின் நாட்களிலும், இன்று சபையிலும் தேவனுடைய ஆவியானவர் கிரியை செய்கிற விதத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இஸ்ரவேலில் மழை பெய்கிற மாதிரியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காரணம், மழை என்பது பரிசுத்த ஆவியானவரின் அடையாளமாக இருக்கிறது. இஸ்ரவேலில் மழை பொழிகின்ற விதம், சபையில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலைச் சுட்டிக் காண்பிக்கிறது.

நான் இதை இன்னும் தெளிவாக எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இஸ்ரவேலில் இரண்டு முக்கியமான பருவ காலநிலைகள் இருக்கின்றன: வெப்பமான, வறண்ட காலநிலை. இன்னொன்று, குளிர்ந்த, பெரும்பாலும், ஈரமான கால நிலை. இது முழுவதும் ஈரமாக இருக்காது. வெப்பமான, வறண்ட வானிலை வழக்கமாக முதல் மாதத்தில் ஆரம்பிக்கிறது. அது ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து, அக்டோபர் அல்லது நவம்பர் வரை நீடிக்கிறது. பெரும்பாலான நேரங்களில், ஏப்ரல் முதல் நவம்பர் வரை, இஸ்ரவேலில் மழை என்பதே இருக்காது. இதைப் பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். குளிர்காலம் என்பது வழக்கமாக நவம்பரில் ஆரம்பித்து மார்ச் வரை செல்லும். வறண்ட காலத்தின் முடிவில், குளிர் காலத்தின் ஆரம்பத்தில், முன் மழை பெய்கிறது. இது குளிர் காலத்தை ஆரம்பித்து வைக்கிற மழையாகும். இது வழக்கமாக நவம்பரில் பெய்யும். வறண்ட காலத்தின் முடிவில், தேவனுடைய பொருளாதாரத்தில், இந்த மழையின் நோக்கம், மண்ணை மென்மையாக்குவதன் மூலம், விவசாய வேலையை புத்தம்புதியதாய் தொடங்கும்படியே ஆகும். பிறகு குளிர் கால மாதங்கள் வருகின்றன. குளிர்கால மாதங்களில், மழை பெய்யும். ஆனால் அதைக் கணிக்க முடியாது. இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம் என இடையிடையில் பெய்யும். குளிர்கால மாதங்களில் வழக்கமாக, தேசமெங்கும் மழை, பெருமழை என்றெல்லாம் இருக்காது. பிறகு பின் மழை என்பது முதல் மாதமாகிய ஏப்ரலை ஒட்டி பெய்கின்றது. அது ஈரமான குளிர் காலத்தின் முடிவைக் குறிக்கின்றது. இது வறண்ட காலநிலையின் ஆரம்பத்தையும் குறிக்கின்றது. அந்த முழு வருடத்திற்கும் சேர்த்து, கனமழையாய், பெருமழையாய் அது பெய்கின்றது. இது தேசமெங்கும் பெருமழையாய் ஊற்றுகின்றது. தேவனுடைய பொருளாதாரத்தில் இதன் நோக்கம், விதைக்கப்பட்ட விதையை முளைவிடச் செய்து, அறுவடையைச் சாத்தியமாக்குவதே ஆகும்.

இப்பொழுது நாம் இதை சபை வரலாற்றோடு எளிமையாகவும், மிகச் சுருக்கமாகவும் பொருத்திப் பார்ப்போம். சபை வரலாற்றில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதல் மற்றும் அவருடைய கிரியை என்பது, இஸ்ரவேல் தேசத்தில் மழை எப்பொழுது எவ்வாறு பெய்ய வேண்டும் என்று தேவன் முன் குறித்திருக்கிறாரோ அதற்கு ஒத்திருக்கிறது என்றுதான் நான் விசுவாசிக்கிறேன்.

முதலில், முன் மழை என்பது குளிர்காலத்தின் ஆரம்பத்தில் பெய்கின்றது. இந்த முன் மழை ஆதித் திருச்சபையில் பெய்தது என்று நான் விசுவாசிக்கிறேன். இது முதலில் பெந்தேகோஸ்தே நாளில் பெய்தது. இது தொடர்ந்து ஆதித்திருச்சபையில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக பெய்து வந்தது. அதற்குப் பிறகு, பலப் பல நூற்றாண்டுகளாக, பரிசுத்த ஆவியானவர் அவ்வளவு வல்லமையாக, உலகளாவிய விதத்தில், சபையெங்கும் கிரியை செய்யவில்லை என்பதை கிட்டத்தட்ட எல்லா வரலாற்று அறிஞர்களும் ஒத்துக் கொள்வார்கள். பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதல்கள் இருந்தன. தேவனுடைய ஜனங்களின் வரலாற்றில், புதிய ஏற்பாட்டுக் காட்சிகள் திரும்பவும் அரங்கேற்றப்பட்ட நேரங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அது இஸ்ரவேல் தேசத்தின் குளிர்காலத்தில் பெய்கின்ற மழையைப் போல இருக்கிறது. அதை முன்கூட்டியே கணிக்க முடியாது. அது இடையிடையில் இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம் என்ற அளவில்தான் பெய்தது. ஆனால் சபை முழுவதையும் பாதிக்கக்கூடிய ஒரு பெருமழையாய் அந்த அசைவாடுதல் இருக்கவில்லை.

இப்பொழுது நாம் பின் மாரிக்கு வருவோம். இதில் கடைசியாக, மிகப் பெரிய அளவில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவார். இது உலகமெங்கும் நடக்கின்ற, எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு ஊற்றப்படுதலாய் இருக்கிறது. இந்தப் பின் மாரி, இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சபை மீது திரும்பவும் பெய்ய ஆரம்பித்தது என்று நான் தனிப்பட்ட விதத்தில் விசுவாசிக்கிறேன். இதற்கு சில தனித்துவமான அம்சங்கள் இருக்கின்றன. இது உலகமெங்கும் நடக்கின்றது. ஒரு தேசமும் இதன் தொடுதலை பெறாமல் விடப்படுவதில்லை. இது சபையின் எல்லாப் பிரிவுகளையும் தழுவிக் கொள்கிறது. ஒரு சபைப்பிரிவும் இதன் தொடுதலைப் பெறாமல் போவதில்லை. தேவனுடைய கடைசி கால நோக்கங்களைக் குறித்த என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி, இந்தப் பின் மாரி கடைசி மழையாயிருக்கும். இதில் இயேசுகிறிஸ்துவின் சபையின் மீது பரிசுத்த ஆவியானவர் முன் ஒருபோதும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவில் ஊற்றப்படுகிறார்.

தம்முடைய ஜனங்களின் மீது தயவைக் காண்பிக்கும்படி தேவன் முன் குறித்த நேரத்தைப் பற்றித்தான் நாம் இந்தச் செய்திகளில் பேசிக் கொண்டிருக்கிறோம். என்னுடைய நேற்றைய செய்தியில், இது எவ்வாறு இஸ்ரவேலின் சமீப கால வரலாற்றிற்குப் பொருந்துகிறது என்று நான் உங்களுக்குக் காண்பித்தேன். இப்பொழுது நடக்கின்ற இஸ்ரவேலின் புதுப்பித்தல் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் எவ்வாறு தொடங்கியது என்று நான் உங்களுக்குக் காண்பித்தேன். அது ஒருவேளை 1897-ல் அல்லது அதை ஒட்டிய காலகட்டத்தில் தொடங்கியிருக்கலாம். இந்த நூற்றாண்டு முழுவதிலும், இஸ்ரவேலின் வரலாற்றில் புதுப்பித்தலின் கிரியை எவ்வாறு படிப்படியாக நிகழ்ந்தது என்பதையும் நான் உங்களுக்குக் காண்பித்தேன். 1948, 1967 போன்ற சில முக்கியமான வருடங்களையும் நான் சுட்டிக் காண்பித்தேன். மனுஷ வரலாற்றின் இந்த முடிவுக் காலகட்டத்தில், தேவனுடைய பூரணமான தீர்க்கதரிசன முன்னோட்டத்தை நீங்கள் பார்க்க முடியும். தேவனுடைய இரண்டு உடன்படிக்கை ஜனங்களாகிய, அதாவது அத்திமரமாகிய இஸ்ரவேலுக்கும், திராட்சைக் கொடியாகிய சபைக்கும் புதுப்பித்தலைக் குறித்த வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதுப்பித்தலுக்கென்று ஒரு நேரமும் முன்குறிக்கப்பட்டிருக்கிறது. மனுஷ வரலாற்றில், இஸ்ரவேலை மறுபடியும் மீட்க வேண்டும் என்ற தேவனுடைய நோக்கம் வெளிப்படையாய் வெளிப்படுகிற அதே நேரத்தில்தான், பின் மாரிக்கான தேவனுடைய நேரம் வந்திருக்கிறது என்பதைக் குறித்த அடையாளங்களும் முக்கியத்துவம் வாய்ந்த விதத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தப் பின் மாரி, உலகமெங்கும் கடைசியாக, மிகப் பெரிய அளவில் சபையின் மீது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுகிற ஒரு நிகழ்வாக இருக்கிறது.

நாளைய எனது செய்தியில், இன்று நான் சொல்லியவற்றை உறுதிப்படுத்தும் வருடங்களையும் உண்மைகளையும் உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன். ஆனால் இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆகவே நாளை இதே நேரத்தில் மீண்டும் உங்களுடன் இருப்பேன். நாளை நான் குறிப்பாக பரிசுத்த ஆவியானவரின் பின்மாரியைப் பற்றி பேசப் போகிறேன்; இந்த நூற்றாண்டின் தொடக்கத்தை ஒட்டி ஆரம்பித்து, இப்போது உலகளாவிய ஊற்றப்படுதலின் அளவை எட்டியிருக்கிற ஆவியானவரின் அசைவாடுதலைப் பற்றி பேசுவேன்.

லைக்
பகிரவும்