மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் "தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்" என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தேவனுடைய வார்த்தை உங்களில் உண்டாக்கும் முதல் குறிப்பிட்ட விளைவைப் பற்றி நேற்று நான் உங்களிடம் பேசினேன்; அதாவது விசுவாசம். விசுவாசம் கேள்வியினாலும், கேள்வி தேவனுடைய வார்த்தையினாலும் வருகிறது என்பதை நான் உங்களுக்கு விளக்கினேன். மூன்று தொடர்ச்சியான கட்டங்கள்: முதலில், தேவனுடைய வார்த்தை; இரண்டாவதாக, நீங்கள் அதைக் கேட்கிறீர்கள்; மூன்றாவதாக, நீங்கள் அதைக் கேட்கும்போதும் அதைப் பெறும்போதும், அது உங்களுக்கு விசுவாசத்தை அளிக்கிறது. இந்த பேச்சின் ஆரம்பத்தில் நான் அதை மையப்படுத்தி சொல்கிறேன், ஏனென்றால் நீங்கள் இன்று கேட்கும்போது அதை மனதில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தேவனுடைய வார்த்தையிலிருந்து நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் அந்த மனப்பான்மையில் கேட்டால், இன்று உங்களுக்கு விசுவாசம் புகட்டப்படும். நான் பேசப்போகும் விஷயங்களை நீங்களே அனுபவிப்பீர்கள்.

இன்று நான் தேவனுடைய வார்த்தை உருவாக்கும் இரண்டாவது முக்கியமான விளைவைப் பற்றி விவரிக்கப் போகிறேன், அதுதான் புதிய பிறப்பு.

மற்ற எதைக் காட்டிலும் நம் வாழ்வில் முக்கியமான ஆவிக்குரிய அனுபவம் என்று ஒன்று உள்ளது. நாம் எப்போதாவது தேவனை அறிந்து, தேவன் விரும்புவது போல் ஆக வேண்டுமென்ற, ஒரு அதிசயம் நமக்கு இருக்க வேண்டும்.

நேற்று, தூதனின் செய்தியை கன்னி மரியாள் நம்பியபோது நடந்த அதிசயத்தைப் பற்றி பேசினேன். தேவதூதர் மூலம் தேவன் அனுப்பிய வார்த்தையை அவள் விசுவாசத்துடன் பெற்றாள். அவளுடைய விசுவாசம் அந்த வார்த்தையின் அதிசய வேலை செய்யும் வல்லமையை வெளியிட்டது.

உலகில் எங்கும், தேவனுடைய வார்த்தையைப் பெறும் எந்தவொரு நபரின் வாழ்க்கையிலும் நிகழக்கூடிய மற்றொரு வகையான அதிசயத்தைப் பற்றி இன்று நான் பேசப் போகிறேன். இந்த அதிசயம் புதிய பிறப்பு - மீண்டும் (அ) மறுபடியும் பிறப்பது. மேலும் இது, உங்கள் வாழ்க்கையிலோ என்னுடைய வாழ்க்கையிலோ நடக்கக்கூடிய மிக முக்கியமான விஷயம்.

யோவான் 3:3 இல் இயேசு சொல்வதைக் கேளுங்கள்.

"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்."

மீண்டும் பிறக்காத எவருக்கும் தேவனுடைய ராஜ்யம் மூடப்பட்டுள்ளது. தேவனுடைய ராஜ்யத்தைப் பார்ப்பதற்கும் பிரவேசிப்பதற்கும் முதன்மையான இன்றியமையாத தேவை மறுபடியும் பிறக்க வேண்டும். அந்தச் சமயத்தில் இயேசு பேசிக் கொண்டிருந்த நிக்கொதேமுக்கு அது புரியவில்லை. அவர், "ஒருவர் எப்படி மறுபடியும் பிறக்க முடியும்?" என்று கேட்டார். அது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு மனிதன் எப்படி மீண்டும் பிறக்க முடியும்?

நான் அதை உங்களுக்கு விளக்கப் போகிறேன். தேவனுடைய வார்த்தையைக் கேட்பதன் மூலம் அது எப்படி வருகிறது என்பதை நான் உங்களுக்குக் காட்டப் போகிறேன். 1 பேதுரு 1:22-23 இல், பேதுரு கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு கூறுகிறார்:

"22 ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்; 23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே."

எனவே புதிய பிறப்பை உருவாக்கும் விதை தேவனுடைய உயிருள்ள வார்த்தையாகும்.

இந்த தேவனுடைய வார்த்தையை விசுவாசத்தினாலே நம் இருதயங்களில் பெறும்போது, ​​பரிசுத்த ஆவியின் மூலமாக, ஜீவன் அதிலிருந்து வெளிவருகிறது. முற்றிலும் புதியதொரு வாழ்க்கை. மதத்தினாலோ அல்லது நல்ல செயல்களாலோ அல்லது நமது சொந்த முயற்சிகளாலோ நாம் ஒருபோதும் அடைய முடியாத ஒரு வாழ்க்கை. தேவனிடமிருந்து மட்டுமே வரக்கூடிய வாழ்க்கை.

விதை மற்றும் உயிர் பற்றி பிரபஞ்சம் முழுவதும் இயங்கும் ஒரு சட்டம் உள்ளது. அந்தச் சட்டத்தை நாம் இவ்வாறு கூறலாம்: விதையின் தன்மை அதிலிருந்து வரும் உயிரின் தன்மையை தீர்மானிக்கிறது. விதை அழியக்கூடியது, மாசடையக்கூடியது என்றால், அதிலிருந்து வெளிவரும் உயிரும் அழியக்கூடியதாக, மாசடையக்கூடியதாகவே இருக்கும். ஆனால் தேவனுடைய வார்த்தையின் விதை அழியக்கூடியது அல்ல, அது அழியாதது. அது தெய்வீகமானது, நித்தியமானது, மாசடையாதது. மேலும் அந்த விதையிலிருந்து வெளிப்படும் நமக்குள் இருக்கும் புதிய ஜீவனானது, விதையில் உள்ள அதே ஜீவன்தான். அது தெய்வீகமானது, நித்தியமானது, அழியாதது, மாசடையாதது. அப்படிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் பெற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் தேவனுடைய வார்த்தையின் விதையை நீங்கள் விசுவாசத்தால் பெறும்போதுதான் அது உங்களிடம் வரும்.

தேவனுடைய வார்த்தையின் விதை நம்மில் உருவாக்கும் வாழ்க்கை எப்படிப்பட்டதென்று இப்போது நான் உங்களிடம் மேலும் பேச விரும்புகிறேன். 1 யோவான் 3:8-9 இல் யோவான் இவ்வாறு கூறுகிறார்:

"8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்."

இப்போது அது மிகவும் பலமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யோவான் என்ன சொல்கிறார் என்பதை நாம் கொஞ்சம் கவனமாகப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர் ஒருபோதும் பாவம் செய்ய முடியாது என்று யோவான் கூறுகிறார் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்பவில்லை. அதற்கு ஒரு காரணம் என்னவென்றால், நான் மீண்டும் பிறந்த கிறிஸ்தவனாக இருந்தும், நான் மீண்டும் பிறந்ததிலிருந்து அவ்வப்போது நான் பாவம் செய்துவிட்டேன் என்று சொல்ல வருந்துகிறேன். பல முறை இல்லை, வேண்டுமென்றே அல்ல, ஆனால் நான் அதை செய்திருக்கிறேன். நான் மீண்டும் பிறந்தேன் என்று எனக்கு நன்றாக தெரியும்.

இந்த வசனத்தில் யோவான் நமக்கு சொல்வது இதுதான் என்று நான் நம்புகிறேன். தேவனின் விதையிலிருந்து வெளிவரும் புதிய சுபாவம் பற்றி அவர் பேசுகிறார். "விதை எப்படி இருக்கிறதோ, அதுபோலவே உயிரும் இருக்கிறது, அதிலிருந்து வெளிவருவதன் தன்மையும் அப்படித்தான்" என்று நான் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா? விதை தெய்வீகமானது, நித்தியமானது, அழியாதது, மாசடையாதது. வாழ்க்கையும் அப்படித்தான், அதிலிருந்து வெளிவருவதன் தன்மையும் அப்படித்தான். புதிய பிறப்பின் மூலம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புதிய ஜீவன், ஒரு புதிய சுபாவம் பிறக்கிறது. அதுவே தேவனின் ஜீவன். அது தெய்வீகமானது, அது நித்தியமானது, அது அழியாதது. அது பாவம் செய்ய முடியாதது. அது பாவம் செய்ய முடியாதது என்று யோவான் ஏன் கூறுகிறார் என்பதை நீங்கள் கவனிக்கிறீர்களா? ஏனென்றால் தேவனுடைய விதை அதில் தங்கியுள்ளது. ஒரு அழியாத விதை, ஒரு புனித விதை, அழியக்கூடிய அல்லது புனிதமற்ற ஒன்றை ஒருபோதும் உருவாக்க முடியாது.

இப்போது அந்த புதிய சுபாவத்தை நாம் எவ்வளவு வெளிப்படுத்திக் கொண்டு, நம் மூலமாக வாழ அனுமதிக்கிறோம் என்பதைப் பொறுத்து, விசுவாசிகளாகிய நம் வாழ்க்கையின் போக்கு தீர்மானிக்கப்படும். நாம் ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் நம்மில் இருக்கும் புதிய சுபாவம் ஒருபோதும் பாவம் செய்யாது என்பதுதான் அந்த உத்தரவாதம். அந்தப் புதிய சுபாவத்தை அதன் வழியில் போக நாம் அனுமதிப்போமானால், நாம் பரிசுத்தமான வாழ்க்கையை நடத்துவோம் என்று உறுதியளிக்க முடியும்.

இப்போது நான் இதை ஒரு படி மேலே கொண்டு செல்ல விரும்புகிறேன். தேவனுடைய வார்த்தையைப் பெறுவதைப் பற்றி நாம் பேசினோம். ஆனால் நாம் வெளிப்படுத்தின விசேஷம் 19:13 ற்குச் சென்றால், இயேசுவே தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்படுவதைக் காணலாம். எனவே வார்த்தை இரண்டு வடிவங்களில் உள்ளது. எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட வார்த்தை நம்மிடம் உள்ளது, அது எனது செய்தியின் மூலம் இப்போது உங்களுக்கு வந்துகொண்டிருக்கும் வார்த்தை. ஆனால் நம்மிடம் உயிருள்ள, தனிப்பட்ட வார்த்தையாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இருக்கிறார்.

இப்போது இந்த இரண்டும் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், ஒரே மாதிரியானவை. விதையின் ஒப்புமையிலிருந்து நன்றாக இதைப் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு கடைக்குச் சென்று விதைகள் அடங்கிய ஒரு பொதியை, ஒருவேளை தர்பூசணி விதைகளை வாங்குகிறீர்கள் எனலாம். உள்ளே சிறிய மற்றும் கருப்பு நிறத்திலான மற்றும் பளபளப்பான மற்றும் கடினமான ஒன்று, மிகவும் உயிரற்றதாகத் தெரிகிறது மற்றும் நிச்சயமாக அது அழகானதாக இல்லை. ஆனால் அந்த பொதியின் வெளிப்புறத்தில் உள்ள படத்தில் நீங்கள், ஒரு முழு, பழுத்த தர்பூசணியை பாதியாக வெட்டுவதைப் பார்ப்பீர்கள். அதில் சிவப்பு சதை இருப்பதையும், உங்கள் வாயில் தண்ணீர் வருவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும், "அந்த அழகான, கவர்ச்சியான, ருசியான பழம், பொதியில் இருக்கும் அந்தச் சிறிய கருப்பு பளபளப்பான கடினமான பொருளில் இருந்து எப்படி வெளிவரும்" என்று நீங்களே எளிதாகச் சொல்லிக்கொள்ளலாம். சரி, அது விதையின் அதிசயம். இயற்கையில் எங்கும் நம்மைச் சூழ்ந்திருக்கும் அதிசயம். தேவனுடைய பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையைப் பெறும்போது தேவன் நமக்கு என்ன செய்கிறார் என்பதற்கு இது ஒரு ஒப்புமை, ஒரு மாதிரி. வானொலி ஒலிபரப்பு மூலமாகவோ அல்லது எப்படியாக இருந்தாலும் சரி நமக்குக் கொண்டுவரப்படும் வார்த்தையானது, அந்தச் சிறிய கருப்பு பளபளப்பான விதை போன்றது. இது மிகப்பெரிய அழகு அல்லது வல்லமை கொண்டதாக தோற்றமளிக்கவில்லை. ஆனால் நாம் அதை நம் இதயங்களில் பெற்றால், அது நமக்கு அழகான மற்றும் பரிசுத்தமான மற்றும் நித்தியமான ஒரு வாழ்க்கையைப் பிறப்பிக்கும்.

அது உண்மையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவனையும் சுபாவத்தையும் நமக்குள் கொண்டுவரும். தேவன் தம்முடைய வார்த்தையை நமக்கு அனுப்பியதன் முழு நோக்கமும் அதுதான். இது வார்த்தையின் விதையிலிருந்து இயேசுவை நம்மில் இனப்பெருக்கம் செய்வதாகும்.

இப்போது நான் என்னுடைய நேரத்தின் முடிவில் இருக்கிறேன், ஆனாலும் நான் இதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்: நீங்களும் மறுபடியும் பிறக்க முடியும். நீங்கள் தேவனுடைய வார்த்தையின் விதையை, தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தத்தைப் பெற்றால், அது உங்களுக்குள் புதிய வாழ்க்கையைப் பிறப்பிக்கும். யோவான் 1:12 கூறுகிறது:

"அவருடைய (இயேசுவினுடைய) நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்."

பின்னர் அவர்கள் தேவனால் பிறந்தவர்கள் என்று கூறுகிறது. எனவே நீங்கள் உங்கள் இதயத்தைத் திறந்து இயேசுவைப் பெறுவீர்கள் என்றால், நீங்கள் தேவனிடமிருந்து பிறந்தவர்கள் ஆகலாம், மீண்டும் பிறக்கலாம். அவர் உங்கள் பாவங்களுக்காக மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று நம்புங்கள். உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள். உங்களை மன்னிக்கும்படி அவரிடம் கேளுங்கள். உங்கள் இதயத்தில் விசுவாசத்தால் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மீண்டும் பிறக்கலாம். என்னுடைய இந்தச் செய்தி இன்று முடிவடைவதற்கு முன்பே கூட நீங்கள் மீண்டும் பிறக்கலாம்.

இப்போது நம்முடைய நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் நான் உங்களுடன் வருவேன். மேலும் "தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்" என்ற இந்த கருப்பொருளில் தொடர்வேன். தேவனுடைய வார்த்தையை நமது ஆவிக்குரிய உணவாக நான் பேசப்போகிறேன்.

லைக்
பகிரவும்