சரீரத்தில் உன் இடத்தை கண்டுக்கொள்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 10
கர்த்தருடைய திட்டத்தில் உங்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள்! கிறிஸ்துவின் சரீரமாகிய விசுவாசிகளின் ஐக்கியத்தில் உங்கள் இடத்தைக் கண்டறிவது, தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவதில் ஒரு முக்கியமான படியாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். டெரெக் பிரின்ஸின் 'உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டத்தை எப்படிக் கண்டறிவது' பகுதி 4-ன் இந்த ஆழமான போதனை உங்களுக்கு வழிகாட்டும்.
Transcript
இந்த வாரத்தில் என்னுடைய முந்திய செய்திகளில், உங்களுடைய வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய திட்டத்தை நீங்கள் கண்டறிய வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் எடுக்க வேண்டிய மூன்று முக்கிய அடிகளைக் குறித்து நான் பேசினேன். முதலில், தேவன் உங்களை மறுபடியும் புதிதாய் சிருஷ்டிக்கும்படி நீங்கள் இடம் கொடுக்க வேண்டும். அவர் தம்முடைய மாதிரி மற்றும் தம்முடைய நோக்கத்தின்படி, உங்களைத் திரும்பவும் உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஒப்புக்கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, நீங்கள் உங்களுடைய சரீரத்தை தேவனுடைய பலிபீடத்தில் ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். நீங்கள் உங்களையே முற்றிலும் அர்ப்பணிக்க வேண்டும், எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அர்ப்பணிக்க வேண்டும். மூன்றாவதாக, நீங்கள் இதைச் செய்யும்போது, தேவன் தம்முடைய சார்பில், உங்களுடைய மனதைப் புதிதாக்குக்கிறார். அவர் உங்களுக்கு வித்தியாசமான வழியில் சிந்திக்கும் திறனையும், காரியங்களைப் பார்க்கும் கண்ணோட்டத்தையும் கொடுக்கிறார். முற்றிலும் வித்தியாசமான மதிப்பீடுகளையும், அளவுகோல்களையும், நோக்கங்களையும், இலக்குகளையும் அவர் உங்களுக்குக் கொடுக்கிறார். உங்களுடைய மனம் இவ்விதத்தில் புதுப்பிக்கப்படும்போது மட்டுமே, உங்களுடைய வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய சித்தம் என்ன என்பதை உங்களுடைய தனிப்பட்ட அனுபவத்தில் நீங்கள் கண்டறிய ஆரம்பிக்க முடியும். தேவனுடைய சித்தத்தைக் கண்டறிவதில் நீங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்லும்போது, அது இன்னும் மேலான, மேம்பட்ட அனுபவமாக மாறுகிறது. முதல் கட்டத்தில், அது நன்மையானதாக இருக்கிறது. இரண்டாவது கட்டத்தில், அது பிரியமான, விரும்பத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஆனால் மூன்றாவது கட்டத்தில், அது பரிபூரணமானதாக, அது முழுமையானதாக, உங்களுடைய ஒவ்வொரு தேவையையும் சந்திக்கக்கூடியதாக, ஒவ்வொரு சூழ்நிலையையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
இன்றைக்கு நான் நான்காவது அடியைக் குறித்து உங்களுக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன். இது நான் ஏற்கனவே விளக்கிச் சொல்லியிருக்கிற மூன்று அடிகளைப் பின்பற்றி வருகிறது. இந்த நான்காவது அடி, கிறிஸ்துவினுடைய சரீரத்தில் உங்களுக்குரிய இடத்தைக் கண்டுபிடிப்பதாகும். அதாவது மெய்யாகவே கிறிஸ்துவிடம் தங்களை அர்ப்பணித்திருக்கிற உண்மையான விசுவாசிகள் அடங்கிய இந்த சரீரத்தில் உங்களுக்குரிய இடத்தைக் கண்டுபிடிப்பதாகும். நாம் திரும்பவும் ரோமர் 12:3-ம் வசனத்திற்குச் செல்வோம். புதுப்பிக்கப்பட்ட மனதோடு தொடர்புடைய விதத்தில், இந்த வசனத்தை நாம் நேற்று பார்த்தோம். அதிலிருந்து அடுத்த இரண்டு வசனங்களையும் நாம் வாசிப்போம். புதுப்பிக்கப்பட்ட மனதிலிருந்து உடனடியாக என்ன வெளிப்படுகிறது என்பதையும் கூட நாம் பார்ப்போம். 3-ம் வசனத்தையும், அதையடுத்த இரண்டு வசனங்களையும் நாம் வாசிப்போம்:
3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது, உங்களில் எவனானாலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும். 4 ஏனெனில் நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, 5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.
ஆக, புதுப்பிக்கப்பட்ட மனம் நம்மை சரீரத்தில் நமக்குரிய சரியான இடத்திற்கு நேராக நடத்துகிறது. நாம் ஒரு உறுப்பு மட்டுமே என்ற உணர்வுக்கு நாம் வருகிறோம். தனிப்பட்ட விதத்தில், நாம் முழுமையற்றவர்களாய் இருக்கிறோம். நம்முடைய தனிப்பட்ட பெலத்தில், நம்மால் செயல்பட முடியாதவர்களாய் இருக்கிறோம். அப்படியென்றால், தேவன் நம்மை முன் குறித்திருக்கிற விதத்தில் செயல்படும்படி, தேவனுடைய நோக்கம் மற்றும் தேவனுடைய திட்டத்தின்படி முழுமையாய் செயல்படும்படி, நாம் இந்தச் சரீரத்தின் ஒரு உறுப்பாய் மாற வேண்டியது அவசியமாகும். மற்ற உறுப்புகளோடு நாம் ஒரு அர்ப்பணிப்போடு இணைந்திருக்க வேண்டும். அது நம்மை தனித்தனி நபர்களாய் அல்ல, எல்லோரும் ஒன்றாய் இணைந்து வேலை செய்யும்படி செய்கிறது.
ஒரு விஷயம் என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. நான் பல முறை விமானத்தில் பிரயாணம் செய்திருக்கிறேன். ஒரு விமானம் ஒரு குறிப்பிட்ட விமான நிலையத்தை நோக்கிச் செல்லும்போது, அந்த விமானத்தின் ரேடார், அந்தக் குறிப்பிட்ட விமான நிலையத்தை நோக்கித் திரும்புகிறது. இப்பொழுது அதன் கவனம் முழுவதும், அந்த விமான நிலையத்தை நோக்கியும், அந்த விமான நிலையத்தின் ரேடாரிலிருந்து வரும் சிக்னலின் மீதும் பதிந்திருக்கிறது. அவையிரண்டும் பிரிக்க முடியாதபடி, ஒன்றோடொன்று இணைத்துக் கொள்கின்றன. அப்பொழுது அந்த விமானம், மிகச் சரியாக, அந்த விமான நிலையத்தில், அதற்கென்று கொடுக்கப்பட்ட சரியான இடத்தில், சரியான வேகத்தில் பாதுகாப்பாக தரையிறங்குகிறது. உங்களுடைய புதுப்பிக்கப்பட்ட மனதை, அந்த விமானத்தின் ரேடார் உடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் தேவனுடைய ஆவியானவரோடு பிரிக்க முடியாத விதத்தில் உங்களை இணைத்துக் கொள்ளும்போது, உங்களுடைய புதுப்பிக்கப்பட்ட மனம் உங்களை கிறிஸ்துவினுடைய சரீரத்தில் மிகச் சரியாக உங்களுக்குரிய இடத்தில் கொண்டு வந்து பொருத்தி விடும். நீங்கள் தேவனுடைய சரீரமாகிய, அதாவது, கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபையின் ஒரு அங்கமாக மாறி விடுகிறீர்கள். 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தில், பவுல் என்ன சொல்கிறார் என்பதோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்:
12 எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம். ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது. அந்தப்பிரகாரமாக கிறிஸ்துவும் இருக்கிறார். 14 சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது. 15 காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? 16 காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? 17 சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே? 18 தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
பவுல் எழுதிய இந்த வேதப்பகுதியில், மூன்று முக்கியமான காரியங்களை நாம் பார்க்க வேண்டும். முதல் காரியம், சரீரத்தில் நாம் எங்கே இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. அதை தேவன்தான் முடிவு செய்திருக்கிறார். தேவன்தான் உறுப்புகளை அங்கங்கே வைத்திருக்கிறார். இதை நாம் தீர்மானிக்க முடியாது. இதை தேவனே தீர்மானித்திருக்கிறார். அதை அவர் நமக்கு வெளிப்படுத்தியும் இருக்கிறார்.
இரண்டாவதாக, இது நம் வாழ்க்கையில் நிறைவேறும்போது, நாம் நம் வாழ்க்கையை ஒரு மிகப் பெரிய சரீரத்துடன் ஒன்றாக இணைத்துக் கொள்கிறோம். ஆனாலும் நாம் நம் தனித்தன்மையையும் காத்துக் கொள்கிறோம். இது ஒரு சிறிய விரல், ஒரு கரத்தில் தனக்குரிய இடத்தைக் கண்டறிவதுபோல இருக்கிறது. அதன் அருகருகே மற்ற நான்கு விரல்களும் இருக்கின்றன. இவ்வாறு அவை ஒரு முழு சரீரத்தின் நோக்கம் மற்றும் ஆற்றலோடும், அதன் ஜீவனோடும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை தங்களின் தனித்தன்மையை இழப்பதில்லை. ஒரு நீர்த் துளி கடலுக்குள் விழும்போது, அதன் தனித்தன்மையை இழப்பதுபோல, இங்கு சரீரத்தில் நடப்பதில்லை. கிறிஸ்தவர்களாகிய நாம், ஒருபோதும் நம்முடைய தனித்தன்மையை இழப்பதில்லை. நாம் மிகப்பெரிய கட்டமைப்பு உள்ள ஒரு கூட்டத்தின் ஒரு அங்கமாக மாறினாலும், நாம் நம்முடைய தனித்தன்மையையும் காத்துக் கொள்கிறோம். அதே நேரத்தில், தேவன் நம்மை முன் குறித்திருக்கிற அந்தக் குறிப்பிட்ட உறுப்பாகவும் நாம் இருக்கிறோம். கிறிஸ்தவ விசுவாசத்திற்கும், இன்றைக்கு எங்கும் பரவியிருக்கிற மற்ற பொய்யான மதங்கள் மற்றும் தத்துவங்களுக்கும் இடையே ஒரு தெளிவான வித்தியாசம் காணப்படுகிறது. அர்ப்பணிப்புள்ள ஒரு கிறிஸ்தவனாய் நான் மாறுவதற்கு முன், அவைகளைக் குறித்து கொஞ்சக் காலம் நான் வாசித்திருக்கிறேன். அந்தத் தவறான மதங்கள், அடிப்படையில் ஒரு மனுஷனை, கடலுக்குள் விழுந்து, தன் அடையாளத்தை இழந்துபோன ஒரு நீர்த் துளியைப்போலத்தான் நடத்துகின்றன. அது விரும்பத்தக்க காரியமல்ல. அது நல்லதுமல்ல. என்னைப் பொறுத்தவரை, நான் அப்படி வாழ விரும்பவில்லை. நான் என்னுடைய தனித்தன்மையை காத்துக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில், ஒரு பெரிய சரீரத்தின் ஒரு அங்கமாகவும் வாழ்ந்திடுவேன். தேவன் கிறிஸ்துவுக்குள் நமக்காக அதைத்தான் செய்து வைத்திருக்கிறார்.
சரீரத்தைக் குறித்து பவுலின் வார்த்தைகளில் தொடர்ந்து வெளிப்படுகிற மூன்றாவது சத்தியம் இதுதான்: சபையோராய் ஒன்றாய் சேர்ந்து, கிறிஸ்துவையும், அவருடைய பரிபூரண நிறைவையும் நம்மால் இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்திக் காண்பிக்க முடியும். நம்மில் ஒருவராலும் தனிப்பட்ட விதத்தில், ஒரு தனி நபராய் இருந்து, கிறிஸ்துவை முழுமையாக ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது. ஆனால் நாம் ஒரு சரீரமாய் ஒன்றாய் இணைந்திருக்கும்போது, அந்தச் சரீரத்தினால் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகத்திற்கு முழுமையாய் வெளிப்படுத்த முடியும்.
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் தங்களுக்குரிய இடத்தைக் கண்டுபிடிப்பதைக் குறித்து இன்னும் விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். இதற்காக பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு படத்தை நான் எடுத்துக் காட்டுகிறேன். எசேக்கியேல் 37-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். இது இக்காலத்தின் முடிவில் வாழ்கின்ற தேவனுடைய ஜனங்களைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனமாக இருக்கிறது. இந்தத் தரிசனம் இன்றைக்கு சபையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். எசேக்கியேலுக்கு ஒரு தரிசனம் உண்டாகிறது. அதில் அவன் தேவனுடைய ஜனங்களை உலர்ந்து போய், எங்கும் சிதறிக் கிடக்கின்ற எலும்புகளாக பார்க்கின்றான். அப்பொழுது தேவன் அங்கே தம்முடைய ஆவியானவரால் அசைவாட ஆரம்பிக்கும்போது, அங்கே அந்த எலும்புகளுக்கு ஏதோ ஒன்று நடந்தது. ஜீவன் அவர்களுக்குள் வந்தது. அவை அசைய ஆரம்பித்தன. முடிவில் அவை ஒரு சரீரத்தின் உறுப்புகளாய் ஒன்று கூட்டி சேர்க்கப்பட்டன. நாம் இந்த வேதப்பகுதியை வாசிக்க ஆரம்பிப்போம். எசேக்கியேல் 37, முதல் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம்.
1 கர்த்தருடைய கை என் மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, 2 என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப் பண்ணினார். இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய் கிடந்தது. அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது. 3 அவர் என்னை நோக்கி, "மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா?" என்று கேட்டார். அதற்கு நான், "கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர்," என்றேன். 4 அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 5 கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப் பண்ணுவேன். அப்பொழுது உயிரடைவீர்கள். 6 நான் உங்கள் மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள் மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன். அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார். 7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று. இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன் தன் எலும்போடே சேர்ந்து கொண்டது.
ஒரு இடத்தில் தனித்தனியாக சிதறிக் கிடக்கிற நபர்களைக் குறித்த ஒரு படம் இங்கு காண்பிக்கப்படுகிறது. இவர்கள் சரியான, பொருத்தமான உறவில் இல்லை. அங்கே தேவனுடைய ஆவியானவரின் கிரியை நடக்கிறது. அப்பொழுது இவர்கள் ஒருவரோடு ஒருவர் சரியான, பொருத்தமான ஒரு உறவிற்குள் கொண்டு வரப்படுகிறார்கள். சபையின் பல பிரிவுகள், அந்த உலர்ந்த எலும்புகளைப் போலத்தான் இருக்கிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் சுற்றிலும் சிதறிக் கிடக்கிறார்கள், உறவு துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஜீவன் இல்லை. அவர்களுக்குள் எவ்விதத் தொடர்பும், சரியான உறவும் இல்லை. ஆனால் தேவன் தம்முடைய ஜனங்களுக்காக இன்று தம்முடைய ஆவியானவரைக் கொண்டு மிகப் பெரிய அற்புதத்தைச் செய்து கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் இந்த எலும்புகளுக்குள் ஜீவனைக் கொண்டு வருகிறார். அவர் இந்த எலும்புகளை ஒன்றுகூட்டிச் சேர்க்கிறார். அவர் இந்த எலும்புகளை ஒரு முழுமையான சரீரத்தின் அடிப்படை கட்டமைப்பாக கட்டியெழுப்புகிறார்.
எடுத்துக்காட்டிற்கு இதைச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய கரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கரத்தின் அடிப்படைக் கட்டமைப்பில், மூன்று எலும்புகள் இருக்கின்றன. அவற்றின் மருத்துவப் பெயர்கள், ஹியூமெரஸ், ரேடியஸ் மற்றும் உல்னா. இந்த ஒவ்வொரு எலும்பும், வலிமையான, உறுதியான எலும்புகளாய் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக அசைய முடியும், மற்ற எலும்புகளைப் போலவே செயல்பட முடியும். ஆனால் இவற்றால் அவ்வளவுதான் செய்ய முடியும். பிரயோஜனமான எதையும் இவற்றால் செய்ய முடியாது. இது ஒரு செயல்படும் கரமாக மாறுவதற்கு முன், இந்த எலும்புகள் ஒன்றாய் இணைக்கப்பட வேண்டும். இந்த மூன்று எலும்புகளும் ஒன்றாய் இணைக்கப்பட்ட பிறகுதான், ஒரு கரமாய் பயனுள்ள விதத்தில் செயல்பட முடியும்.
இது உங்களையும் என்னையும் போல இருக்கிறது. நாம் தனித்தனியாக அங்குமிங்கும் இருக்கலாம். ஒரு கூட்டத்திலோ அல்லது ஒரு பெரிய கருத்தரங்கிலோ நாம் மற்ற எலும்புகளுடன் சேர்ந்து சத்தம் எழுப்பலாம். ஆனால் நாம் மற்ற எலும்புகளுடன் ஒன்றாய் இணைக்கப்படும்படி நம்மையே அர்ப்பணிக்கும்போது, நாம் செயல்படுகின்ற ஒரு கரமாய் மாறுகின்றோம். இந்தக் கரம், செயல்படுகின்ற ஒரு சரீரத்தின் அங்கமாக மாறுகின்றது. அப்பொழுதுதான் நம்மால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரயோஜனமான விதத்தில் செயல்பட முடியும். தேவன் தம்முடைய ஜனங்களிடத்தில் இன்று அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நம்முடைய மனம் புதுப்பிக்கப்படும்போது, அந்த ரேடார் கிறிஸ்துவின் சரீரத்தில் தேவன் நமக்கென்று முன் குறித்திருக்கிற அந்தச் சரியான, பொருத்தமான இடத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் விசுவாசிக்கிறேன்.
கிறிஸ்துவின் சரீரத்தைக் குறித்த ஒரு கடைசி படத்தை நாம் பார்ப்போம். எபேசியர் 4:15-16 வசனங்களை இப்பொழுது நாம் கவனிப்போம்:
15 அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
நாம் ஆவிக்குரிய குழந்தைகளாகவே எப்பொழுதும் இருந்து விடக் கூடாது, நாம் வளர வேண்டும் என்பதுதான் தேவனுடைய நோக்கமாகும். இதை நாம் கவனிக்க வேண்டும். இந்த வளர்ச்சியின் செயல்முறை, முழுமையான சரீரத்தை உருவாக்குகிறது. அடுத்த வசனம் இவ்வாறு சொல்கிறது:
16 அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன் தன் அளவுக்குத் தக்கதாய் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாக சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது.
ஆக, தேவனுடைய நோக்கம், தனித்தனியான எலும்புகளோ அல்லது தனித்தனியான உறுப்புகளோ அல்ல. மாறாக, உறுப்புகளெல்லாம் ஒன்றோடொன்று ஒன்றாய் இணைக்கப்பட்ட ஒரு முழு சரீரம், செயல்படுகிற சரீரம்தான் தேவனுடைய நோக்கமாகும். ஒவ்வொரு உறுப்பும், மற்ற உறுப்புகளோடு ஒன்றிசைவாய் இணைக்கப்பட்ட அந்த நிலையில், தனக்குத் தேவையான ஆற்றலையும், ஆதரவையும் மற்றவைகளிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன.
முழு நிறைவாய் இணைக்கப்பட்ட சரீரத்தில்தான், எல்லாத் தேவைகளும் சந்திக்கப்படுகின்றன என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முழு நிறைவாய் இணைக்கப்பட்ட இந்தச் சரீரத்தில், உங்களுக்குரிய இடத்தை நீங்கள் கண்டுபிடிக்கும்போது, அந்த இடத்தில் இருந்து கொண்டு, தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற வேலையை நீங்கள் செய்து முடிப்பதற்குத் தேவையான அளவு விசுவாசத்தை தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். விசுவாசமும், செய்ய வேண்டிய வேலையும் ஒன்றோடொன்று சேர்ந்தே செல்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் கண்டுபிடிக்கும்போது, உங்களுக்குத் தேவையான விசுவாசமும் உங்களிடம் இருக்கும்.
குறியீடு: RP-R014-104-TAM









