இன்று திரும்பவும், உங்களோடு இருப்பது எனக்கு சந்தோஷம். “மரணத்தின் மீது வெற்றி” என்ற இந்த வாரத்திற்கான தலைப்பில், வேதவசனங்களை நாம் கற்றுக் கொண்டு வருகின்றோம்.

நேற்று ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதாவது, ஜீவனும், மரணமும் நம் கண்களுக்குத் தெரியாத ஆவிக்குரிய உலகத்திலிருந்து வருகின்றன என்பதை நாம் புரிந்து கொள்வோம் என்றால், நாம் இரண்டு நபர்களை நேருக்கு நேராய் சந்திக்கின்றோம். ஒருவர், ஜீவனைக் கொடுக்கிற இயேசு. இன்னொருவன், ஜீவனைப் பறிக்கிற சாத்தான்.

நம்மை மீட்கும் உரிமையை உடைய சுதந்தரவாளியும், மீட்பருமாகிய இயேசுவைக் குறித்து இன்று நான் பேசப் போகிறேன். இப்படியொரு அழகான படம், மிகவும் தெளிவாக பழைய ஏற்பாட்டில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. நாம் அதை நம் மீட்போடு பொருத்திப் பார்க்கப் போகிறோம். முதலில், இயேசு இங்கு வந்ததன் நோக்கத்தை திரும்பவும் ஒருமுறை பார்ப்போம். இம்முறை அது 1 யோவான் 3:8-ல் சொல்லப்பட்டிருக்கிறது:

8 பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

இது எவ்வளவு தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். பிசாசினுடைய கிரியைகள் எவை? திருடவும், கொல்லவும், அழிக்கவும் பிசாசு வருகின்றான் என்று நேற்று நாம் பார்த்தோம். நமக்கு விரோதமாக பிசாசு செய்யும்படி வந்த ஒவ்வொரு காரியத்தையும் அழிப்பதற்காகவே தேவனுடைய குமாரன் வந்தார். ஆகையால் நாம் நம்முடைய கண்களை, ஜீவனைக் கொடுக்கிற இயேசுவின் மீதும், ஜீவனைப் பறிக்கிற சாத்தான் மீதும் எப்பொழுதும் பதித்திருக்க வேண்டும்.

இயேசு இங்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால், அவர் மனுக்குலமாகிய நம்மோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. மற்ற பெயர்களைக் காட்டிலும், சுவிசேஷ நூல்களில் தம்மைக் குறிப்பிடும்படி அவரே மிகவும் விரும்பிப் பயன்படுத்திய பெயர்களில் ஒன்று, “மனுஷ குமாரன்”; “ஆதாமின் குமாரன்”; “ஆதாமின் சந்ததியிலிருந்து வந்தவர்”. அவர் தம்மை மனுக்குலத்தில் ஒருவராகவே அடையாளப்படுத்திக் கொண்டார். எபிரெயர் 2:14 மற்றும் அதைத் தொடர்ந்து வருகிற வசனங்களில், அதை எழுதியவர் இவ்வாறு சொல்கிறார்:

14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் (இயேசுவும்) அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,

இந்த இரண்டு நபர்களுக்கும், அவர்கள் செய்கிற வேலைகளுக்கும் இடையே உள்ள தெளிவான வித்தியாசத்தை இங்கு திரும்பவும் கவனியுங்கள். மரணத்திற்கு அதிகாரி, அதன் அதிபதி, பிசாசு. இயேசு அவனைத் தோற்கடித்து, அவனுடைய வல்லமையை முறித்து, அவனை அழிக்கும்படியே வந்தார். 15-ம் வசனத்தை வாசிப்போம்:

15 ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்.

மரணத்தைக் குறித்து ஜனங்கள் எவ்வளவு காலம் பயப்படுகிறார்களோ, அவ்வளவு காலமும் அவர்கள் அதற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். காரணம், மரணத்தைக் குறித்த பயம், எந்த ஒரு காரியத்தையும் அவர்கள் செய்யும்படி, அவர்களை பலவந்தப்படுத்தும். அந்த பயம் இல்லையென்றால், அவர்கள் அதையெல்லாம் செய்ய மாட்டார்கள். இதுதான் அடிமைத்தனத்தின், மரணத்தைக் குறித்த பயத்தின் உச்சகட்ட வடிவமாகும். அந்த அடிமைத்தனத்திலிருந்து, மரணத்தைக் குறித்த பயத்திலிருந்து நம்மை விடுதலையாக்கும்படியே இயேசு வந்தார். அதாவது மரணத்தைக் குறித்த பயத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுதலையாக்கும்படி இயேசு வந்தார். அவ்வாறு நம்மை விடுதலையாக்கும்படி, அவரும் நம்மைப்போலவே மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். தொடர்ந்து எபிரெயர் 2:17-ம் வசனத்தை நாம் வாசிப்போம்:

17 அன்றியும் அவர் (இயேசு) ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கு ஏதுவாக.............எவ்விதத்திலும் (எல்லா விதத்திலும்) தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது.

ஆக, இயேசு எல்லா விதத்திலும் நம்மைப் போலவே ஆனார். அதே நேரத்தில், அவர் தம்முடைய தெய்வீகத் தன்மையை விட்டு விடவில்லை. அவர் ஒரு மனுஷனாகவும் வாழ்ந்தார். அவர் மனுஷ குமாரனாக, மனுக்குலத்தின் ஒரு அங்கமாக மாறினார். இவ்விதத்தில், அவர் நம்மை மீட்கும் உரிமையை உடைய சுதந்தரவாளியாய், மீட்பராய் வெளிப்பட்டார். வேதாகமம் அவரை அப்படித்தான் அழைக்கிறது. இது பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட மிக முக்கியமான ஒரு சத்தியமாகும். இது புதிய ஏற்பாட்டிலும் தொடருகின்றது.

நான் இதை உங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். காரணம், பெரும்பாலான ஆங்கில மொழிபெயர்ப்புகளில், இந்த எபிரெய வார்த்தை வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு அர்த்தத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கால் (gaal) என்ற எபிரெய வார்த்தைதான் இது. இவ்வார்த்தை பின் வரும் விதத்தில், வெவ்வேறு அர்த்தங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது: இரத்தத்திற்காக பழி வாங்க வேண்டியவன் (பழி வாங்கும் உரிமையுள்ளவன்); அடுத்தது, மீட்பர், மீட்கும்படி அடுத்த நிலையில் இருக்கும் நெருக்கமான உறவினன். நான் இதைத் திரும்பவும் சொல்கிறேன்: இரத்தத்திற்காக பழி வாங்க வேண்டியவன் (பழி வாங்கும் உரிமையுள்ளவன்); அடுத்தது, மீட்பர், மீட்கும்படி அடுத்த நிலையில் இருக்கும் நெருக்கமான உறவினன். மீட்பர் என்பதைக் குறிக்கும் கால் (gaal) என்ற எபிரெய வார்த்தை, தேவனைக் குறிக்கும்படி பழைய ஏற்பாட்டில் கிட்டத்தட்ட 20 முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ், இஸ்ரவேலில் ஒரு கலாச்சார வழக்கம் இருந்தது. கால் (gaal) என்ற எபிரெய வார்த்தை, மீட்க வேண்டிய பொறுப்பில் இருந்த நெருங்கின உறவினனையும் குறித்தது. அவனுக்கு இரண்டு முக்கியமான பொறுப்புகள் இருந்தன. முதலில், அவனுடைய நெருங்கிய உறவினன் ஒருவன் கொல்லப்பட்டால், அதற்கு அவன் பழிக்குப் பழி வாங்க வேண்டும். இரண்டாவது, அவனுடைய நெருங்கிய உறவினன் ஒருவன் மரித்தால், அவனுடைய மனைவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது சொத்து அந்தக் குடும்பத்திற்குள்ளேயே பாதுகாக்கப்படும். இந்த முதல் பொறுப்பு, எண்ணாகமம் 35:19-ல் சொல்லப்பட்டிருக்கிறது:

19 பழி வாங்க வேண்டியவனே கொலைபாதகனைக் [கால்–gaal] கொல்ல வேண்டும். அவனைக் கண்ட மாத்திரத்தில் அவனைக் கொன்று போடலாம்.

இது அவனுடைய முதல் பொறுப்பு. நெருங்கின உறவினனும், சுதந்தரவாளியும், மீட்பருமானவனின் [கால்–gaal] இரண்டாவது பொறுப்பு, ரூத் புத்தகத்தில் மிகவும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ரூத் ஒரு மோவாபியப் பெண். அவள் தன் மாமியார் நகோமியுடன் பெத்லகேம் திரும்பியிருந்தாள். நல்ல செல்வாக்கு உடைய போவாஸ் என்ற பணக்காரன் அவளுடைய நெருங்கிய உறவினன் என்று நகோமி அவளிடம் சொன்னாள். சிந்திய கோதுமை மணிகளைப் பொறுக்கி சேகரிக்கும்படி, போவாஸின் வயலுக்கு ரூத் சென்றாள். அங்கே அவர்களுக்கிடையே உறவு உண்டானது. அது திருமணத்தில் முடிந்தது. ஆனால் போவாஸ் ரூத்தைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன், சில காரியங்களை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது. ரூத் புத்தகத்தின் 3-ம் அதிகாரத்திலிருந்து ஒரு பகுதியை நான் வாசிக்கிறேன்:

7 போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக் கொண்டான். அப்பொழுது அவள் மெல்லப் போய், அவன் கால்களின் மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக் கொண்டாள். 8 பாதி ராத்திரியிலே, அந்த மனுஷன் அரண்டு, திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு, 9 நீ யார் என்று கேட்டான். அவள், “நான் உம்முடைய அடியாளாகிய ரூத். நீர் உம்முடைய அடியாள் மேல் உம்முடைய போர்வையை விரியும். நீர் சுதந்தரவாளி [கால் – gaal],” என்றாள்.

ஆக, அவன் தன் நெருங்கிய உறவினனாய் இருக்கிறபடியால், தன்னை மீட்க வேண்டிய அவனுடைய பொறுப்பை அவன் நிறைவேற்ற வேண்டும் என்று அவள் உரிமை கோருகிறாள். ஆனால் போவாஸைக் காட்டிலும் நெருங்கின உறவினன் ஒருவன் அங்கே இருந்தான். ஆனால் அவன் சொத்தை சுதந்தரிக்க விரும்பினால், அவன் ரூத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. நாம் இதை ரூத் 4-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். 3-ம் வசனத்திலிருந்து வாசிக்கலாம். போவாஸ் அந்த சுதந்தரவாளியிடம் சொல்கிறான்:

3 ..............”எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல் நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப் போகிறாள். 4 ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக் கொள்ளும்படி உமக்கு அறியப் பண்ண வேண்டும் என்றிருந்தேன். நீர் அதை சுதந்தர முறையாக மீட்டுக் கொள்ள மனதிருந்தால், மீட்டுக் கொள்ளும். அதை மீட்டுக் கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும். உம்மையும், உமக்குப் பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை,” என்றான். அதற்கு அவன், “நான் அதை மீட்டுக் கொள்கிறேன்,” என்றான். 5 அப்பொழுது போவாஸ், “நீர் நகோமியின் கையிலே அந்த வயல் நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப் பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்க வேண்டும்,” என்றான். 6 அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி, “நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக் கொள்ள மாட்டேன். நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக் கொள்ளும். நான் அதை மீட்டுக் கொள்ள மாட்டேன்.”

பாருங்கள், மீட்க வேண்டிய உரிமையை உடைய இந்த நெருங்கிய உறவினன், மரித்தவனுடைய சொத்தை திரும்ப வாங்குவதோடு நின்று விடக்கூடாது. மரித்தவனுடைய பெயர், இஸ்ரவேலில் இருந்து அழித்தொழிக்கப்படாமல், நிலைத்திருக்கும்படிக்கு, அவன் மரித்தவனுடைய விதவை மனைவியை திருமணம் செய்து கொள்ளவும் வேண்டும்.

ஆக, கால் (gaal) என்ற மீட்கும் உரிமையை உடைய அந்த நெருங்கி உறவினனுக்கு இரண்டு பொறுப்புகள் இருக்கின்றன. முதலில், அவனுடைய நெருங்கிய உறவினனைக் கொன்றவனை பழிக்குப்பழி வாங்க வேண்டும். இரண்டாவதாக, மரித்துப்போன அவனுடைய நெருங்கிய உறவினனின் உரிமைச் சொத்தை திரும்ப வாங்கும்படி, அந்த நெருங்கிய உறவினனின் விதவை மனைவியை திருமணம் செய்து கொள்ளவும் வேண்டும். அப்பொழுது மரித்துப் போன அந்த நெருங்கிய உறவினனின் பெயரைச் சுமந்த சந்ததியை அவன் எழும்பச் செய்வான்.

நம்மை மீட்கும் உரிமையை உடைய நம் நெருங்கிய உறவினனாக, நம்முடைய கால்(gaal) ஆக, இயேசு வந்தார் என்று நான் சொன்னேன். அவர் தம்முடைய ஸ்தானத்தில் இருந்து கொண்டு தம்முடைய பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றினார்? முதலில், அவர் மனுஷ கொலைபாதகனாகிய சாத்தானுக்கு எதிராக எழும்பி, நம் மீதிருந்த அவனுடைய வல்லமைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார். ஆக, அவரே நம்முடைய இரத்தத்திற்கு பழிக்குபழி வாங்கினார். நம்முடைய மரணத்திற்குக் காரணமானவனை அவர் பழிக்குப் பழி வாங்கினார். இரண்டாவதாக, போவாஸ் ரூத்தைத் திருமணம் செய்து கொண்டதுபோல, இயேசு சபையை தம்முடைய மணவாட்டியாக தம்மோடு சேர்த்துக் கொண்டார். இதன் மூலம், நாம் இழந்த நம்முடைய உரிமைச்சொத்தை அவர் திரும்ப நமக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறார். ரோமர் 7:4-6 வசனங்கள், இதை நமக்கு மிகவும் அழகாக எடுத்துக் காண்பிக்கின்றன. பவுல் அங்கே இவ்வாறு எழுதுகிறார்.

4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவரகளாகி (அதாவது, திருமண உறவில் இணைக்கப்பட்டவர்களாகி), தேவனுக்கென்று கனி கொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். 5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன் செய்தது. 6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதனின்று விடுதலையாக்கப் பட்டிருக்கிறோம்.

இப்பொழுது நாம் இந்த வேதப்பகுதியை நம்மை மீட்கும் உரிமையை உடைய நெருங்கின உறவினரும், சுதந்தரவாளியுமான இயேசுவோடு பொருத்திப் பார்ப்போம். நாம் நியாயப்பிரமாணத்தோடு திருமண உறவில் இணைக்கப்பட்டிருந்தோம் என்று பவுல் இங்கு சொல்கிறார். ஆனால் சிலுவையில் நிகழ்ந்த இயேசுவின் மரணத்தின் மூலம், நியாயப்பிரமாணத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்த நிலையிலிருந்து நாம் விடுதலையாக்கப்பட்டோம். விடுதலையாக்கப்பட்ட நிலையில், இப்பொழுது நாம் வேறொருவரான இயேசுவோடு திருமண உறவில் இணைக்கப்பட்டிருக்கிறோம். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவர். அவரே நம் மீட்பர், நம்மை மீட்கும் உரிமையை உடைய சுதந்தரவாளியும், நெருங்கிய உறவினருமாயிருக்கிறார். ரூத் மற்றும் போவாஸின் விஷயத்தில், மீட்கும்படி சட்டப்பூர்வமான உரிமையை உடைய இன்னொரு சுதந்தரவாளியும் அங்கே இருந்தான். அதேபோல, இங்கே நம்முடைய மாம்ச சுபாவம், நம்முடைய பழைய ஜென்ம சுபாவம் இருக்கிறது. ஆனால் நம்முடைய பழைய ஜென்ம சுபாவமாகிய மாம்ச சுபாவம் நமக்கு உதவி செய்யும்படி முன் வரவில்லை. ஆக, ரூத்தைபோல, நாம் இங்கே நம் பரலோக போவாஸாகிய இயேசுவிடம் தஞ்சம் புகுந்திருக்கிறோம் (தற்செயலாகப் பார்த்தீர்கள் என்றால், இங்கு போவாஸ் என்ற பெயரின் அர்த்தம் “அவருக்குள் பெலன்” என்பதாகும்).

ஆக, கிறிஸ்து நம்மை தம்முடைய மணவாட்டியாக, மணப்பெண்ணாக தம்மோடு சேர்த்துக் கொண்டார். போவாஸ் ரூத்திற்கு என்ன செய்தானோ, அதை இயேசு நமக்காகச் செய்திருக்கிறார். அவரோடு நாம் இணைந்ததன் மூலம், நம்முடைய உரிமைச்சொத்து நமக்கு திரும்ப மீட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவனுக்குப் பிரியமான கனிகளை நாம் கொடுக்கிறோம். ஆக, பழைய ஏற்பாட்டில் காணப்படுகிற, மீட்கும் உரிமையை உடைய சுதந்தரவாளியின் இந்த எடுத்துக்காட்டில், நம்முடைய மீட்பராய், நம்முடைய சுதந்தரவாளியாய் வெளிப்படுகிற இயேசுவின் அழகான படத்தை பரிசுத்த ஆவியானவர் மூலமாக நாம் இங்கே பார்க்கிறோம். ஆக, மீட்கும் உரிமையை உடைய சுதந்தரவாளியைக் குறித்த ஒரு எடுத்துக்காட்டை பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கிறோம். அதில் நம்முடைய மீட்பராய், நம்முடைய சுதந்தரவாளியாய் வெளிப்பட்டிருக்கிற இயேசுவின் அழகான படத்தை பரிசுத்த ஆவியானவர் மூலமாக நாம் பார்க்கிறோம். நம்முடைய மரணத்திற்குக் காரணமானவனை அவர் பழிக்குப் பழி வாங்கினார். அதைச் செய்யும்படி, அவர் நம்முடைய மரணத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டார். நம்முடைய தண்டனைக்கான விலைக்கிரயத்தை அவர் செலுத்தினார். இவ்வாறு அவர் நம்மை மரணத்தைக் குறித்த பயத்திலிருந்து விடுதலையாக்கினார். அவர் நம்மை தம்முடைய மணவாட்டியாக தம்மோடு சேர்த்துக் கொண்டார். அவர் நம்முடைய உரிமைச்சொத்தையும் திரும்ப மீட்டுக் கொடுத்திருக்கிறார்.

சாத்தான் ஒரு திருடன், அவன் திருடும்படியே வந்தான் என்பது உங்கள் நினைவிலிருக்கும். ஆனால் இயேசு சொன்னார், “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவுமே வந்தேன்.” ஆக, இயேசு நம்முடைய உரிமைச்சொத்தை நமக்குத் திரும்ப மீட்டுத் தந்திருக்கிறார். அவர் நம்மை தம்முடைய மணவாட்டியாக தம்மோடே சேர்த்துக் கொண்டார். நாம் நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கபப்ட்டிருக்கிறோம். நாம் மரண பயத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். மரணத்தின் விடாத, தொடர்ச்சியான அச்சுறுத்தல், நம்மை இனி அடிமைத்தனத்திலேயே பிடித்து வைத்திருக்க முடியாது. மரண பயம் நம்மிடமிருந்து அகற்றப்பட்டிருக்கிறது. இப்பொழுது நமக்கு ஒரு புதிய உரிமைச் சொத்து கிடைத்திருக்கிறது. இது இயேசுகிறிஸ்துவுக்குள் உண்டான நித்திய சுதந்தரமாக இருக்கிறது. அவர் நம்முடைய ஆத்துமாவின் மணவாளனாக இருக்கிறார். இந்த உறவின் மூலம், நியாயப்பிரமாணத்தின் கீழ் நம்முடைய மாம்ச சுபாவத்தினால் வெளிப்பட்ட பாவக்கிரியைகளுக்குப் பதிலாக, இப்பொழுது நாம் நீதியின் கனிகளைக் கொடுக்கிறோம். நாம் தேவனுக்குப் பிரியமானவர்களாய், தேவனால் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கவர்களாய் மாறியிருக்கிறோம். இப்பொழுது குற்ற உணர்வு இல்லை. பயம் இல்லை. “இருள் கடந்து போகிறது. இப்பொழுது மெய்யான ஒளி பிரகாசிக்கிறது,” யோவான் சொன்னதுபோலவே நடக்கிறது. நம்முடைய சுதந்தரவாளியும், மீட்பருமானவர் வந்து, நம்மை அவரோடு சேர்த்துக் கொண்டார். அவர் கொலைபாதகனை பழிக்குப் பழி வாங்கியிருக்கிறார், நம்முடைய உரிமைச் சொத்தை நமக்கு திரும்ப மீட்டுக் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு நிஜமாய் மாறும்வரை, இதை ஆழமாய் தியானித்துக் கொண்டிருங்கள். இது அவ்வளவு அழகான ஒரு படமாயிருக்கிறது.

நல்லது, இன்றைக்கு நம்முடைய நேரம் முடிந்து விட்டது. நாளை திரும்பவும் இதே நேரம் நான் உங்களை சந்திக்கிறேன். நமக்காக இயேசு செய்து முடித்த வேலையை நாளை நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம். சிலுவையில் நமக்காக அவருடைய மரணத்தின் மூலம் அவர் செய்து முடித்த வேலையைக் குறித்தும், அவருடைய கிருபாதார பலியைக் குறித்தும் நாளை நான் பேசுவேன்.

லைக்
பகிரவும்