நாம் ஜெபித்து, ஜெபிப்பதைப் பெற தேவன் விரும்புகிறார்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
டெரெக் பிரின்ஸின் 'தேவன் நாம் ஜெபிப்பதையும், நாம் ஜெபிப்பதைப் பெற்றுக்கொள்வதையும் விரும்புகிறார்' என்ற போதனையில் ஜெபத்தின் வல்லமையைக் கண்டறியுங்கள். ஜெபம் எவ்வாறு தேவன் மீதான உங்கள் பார்வையை மாற்றி, கடமையாக இருந்த ஜெபத்தை கர்த்தருடனான உறவாக மாற்றும் என்பதை இதில் அவர் விளக்குகிறார். நற்செய்தியின் அடிப்படையில் அமைந்த வழிகாட்டுதலுக்கு 'எப்படி ஜெபிப்பது மற்றும் நீங்கள் ஜெபிப்பதைப் பெற்றுக்கொள்வது எப்படி, பகுதி 1' ஐக் கேளுங்கள்.
Transcript
ஒரு புதிய வாரத்தின் ஆரம்பத்தில் உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. வாழ்க்கை எனக்குப் போதித்திருக்கிற சத்தியங்களிலிருந்து உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன். இந்தச் சத்தியங்கள் என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வித்தியாசத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. இவை அதையே உங்களுக்கும் செய்யும்.
முதலில், எனக்கு எழுதிக் கொண்டிருக்கும் உங்களில் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தச் செய்தியை முடிப்பதற்கு முன், நீங்கள் எங்களுக்கு எழுதக்கூடிய ஒரு அஞ்சல் முகவரியை உங்களுக்குக் கொடுப்போம். உங்களுடைய தனிப்பட்ட தேவைகள், பிரச்சனைகள், ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வாரத்தில், எனக்கு மிகவும் பிடித்த தலைப்புகளில் ஒன்றைக் குறித்து நான் பிரசங்கிக்கப் போகிறேன். “ஜெபம்” இதுதான் இந்தச் செய்தித் தொடரின் தலைப்பாயிருக்கிறது. ஜெபம் என்பதே சிலருக்கு சோர்வடையச் செய்கிற, சலிப்படையச் செய்கிற, ஆனாலும் கட்டாயம் செய்தாக வேண்டுமே என்பதைப்போல உணரச் செய்கிற ஒரு மதக்கடமையாக இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் ஜெபிப்பதையே விரும்புகிறேன். வேறென்ன? நான் எதற்காக ஜெபித்தேனோ, அதையே பெற்றுக் கொள்ளவும் நான் விரும்புகிறேன். இந்த வாரம் அதைக் குறித்துதான் நான் உங்களிடம் பேசப் போகிறேன். எவ்வாறு ஜெபிக்க வேண்டும், எதற்காக ஜெபித்தோமோ அதையே எவ்வாறு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் பேசப் போகிறேன்.
நாம் ஜெபத்தில் தேவனிடம் வருகின்றோம். முதலில் தேவனுக்கும் நமக்கும் மத்தியில் தடையாக நிற்கின்ற, இடையூறாக இருக்கின்ற தேவனைக் குறித்த எதிர்மறையான, வேதாகமத்திற்கு முரண்பட்ட படங்களை நாம் மாற்ற ஆரம்பிக்க வேண்டும். முதலில் நாம் அவற்றை அகற்ற வேண்டும். உங்களுடைய அனுபவம் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னுடைய அனுபவம் இதுதான். ஒரு பள்ளிச் சிறுவனாய் நான் வளர்ந்து வந்த நாட்களில், பல வருடங்கள், பள்ளி விடுதிகளில்தான் நான் தங்கி படித்திருக்கிறேன். அவை என்னை சலிப்படையச் செய்த வருடங்களாய் இருந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் தேவன் என்றாலே, கண்டிப்பான ஒரு ஸ்கூல் டீச்சர் என்ற ஒரு கடுமையான படம்தான் எனக்குள் இருந்தது. உண்மையில், ஸ்கூல் டீச்சர்களைப் பார்த்தாலே எனக்கு பயம்தான் வரும். நான் தேவனையும் அப்படிப்பட்ட ஒரு ஸ்கூல் டீச்சராகத்தான் பார்த்தேன். ஒரு நீள வராந்தாவின் கடைசியிலிருக்கும் அவருடைய வாசிப்பறையில், அவர் அமர்ந்திருக்கிறார். நீங்கள் உங்களுடைய கண்டிப்பான ஸ்கூல் டீச்சரைப் பார்க்கச் செல்ல வேண்டுமென்றால், நீங்கள் அந்த வராந்தாவில் மெல்ல அடியெடுத்து வைத்து நடக்க வேண்டும். ஒருவேளை, நீங்கள் நடக்கும்போது, அந்தத் தரையில் சத்தம் உண்டாகலாம். நீங்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிக்கலாம். பிறகு நீங்கள் கதவைத் தட்டுகிறீர்கள். உள்ளே வரும்படி, எரிச்சலும், கடுமையும், கலந்த சத்தம் உங்களை அழைக்கிறது. ஒருவேளை நீங்கள் செய்யாத ஒன்றிற்காக, அவர் உங்களைத் திட்டலாம். நான் தேவனைக் குறித்து நினைத்தபோதெல்லாம், ஒரு கண்டிப்பான ஸ்கூல் டீச்சரைக் குறித்த ஒரு படம்தான் என் நினைவில் வரும். ஆகையால் நான் பலனுள்ள விதத்தில் ஜெபிக்க வேண்டுமென்றால், தேவனைக் குறித்து எனக்குள் இருந்த இந்தப் படம் மாற வேண்டும். தேவனைக் குறித்து இதே போன்றதொரு படம்தான் பலருடைய மனதிலும் இருக்கிறது. தேவன் ஏதோ தொலைதூரத்தில் உள்ள ஒரு நபரைப் போலவும், நம்முடைய ஜெபங்களால் தொந்தரவு செய்யப்பட விரும்பாத ஒரு நபரைப் போலவும், நம்மை திட்டித் தீர்க்கும்படி காத்திருக்கிற ஒரு நபரைப் போலவும்தான் பலர் சிந்திக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அவரை விட்டு தள்ளியிருக்கிறோமோ, அவ்வளவு நமக்கு நல்லது, சிறந்தது என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.
இது தேவனைக் குறித்த சரியான ஒரு படம் கிடையாது. உண்மையில், நாம் தேவனிடம் வரும்போது, அவர் நம்மைத் திட்டுவதில்லை. மாறாக, அவர் நம்மை வரவேற்கிறார் என்பதுதான் உண்மை. “ஏன் இவ்வளவு நாள் நீ என்னிடம் வரவில்லை?” என்றுதான் அவர் நம்மிடம் கேட்கிறார். தேவன் எவ்வாறு நம்மை வரவேற்கிறார் என்பதை அழகாக எடுத்துக் காட்டும் ஒரு படம் வேதாகமத்தில் இருக்கிறது. லூக்கா 15-ம் அதிகாரத்தில் நாம் அதைப் பார்க்க முடியும். வீட்டை விட்டு தொலைதூரம் சென்று, ஊதாரித்தனமாய் வாழ்ந்த ஒரு மகனைக் குறித்து இதில் எழுதப்பட்டிருக்கிறது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அவன் தன் வாழ்க்கையை வீணடித்தான். மோசமான ஒரு பிரச்சனைக்குள் இவன் தன்னைத் தானே சிக்க வைத்துக் கொண்டான். கடைசியில், எல்லாவற்றையும் இழந்த மிகவும் மோசமான வறிய நிலையில், அடிமட்டத்தில் இருந்தான். எல்லாம் முடிந்தது என்ற அந்த நிலையில், அவன் ஒரு தீர்மானமெடுத்தான்: “நான் என் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதுதான் நல்லது. ஒருவேளை என் தகப்பன் என்னை ஏற்றுக் கொள்வார். திரும்பவும், மகனாக ஏற்றுக் கொள்ளும்படி நான் அவரிடம் கேட்க மாட்டேன். மாறாக, அவருடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ளும் என்றுதான் நான் அவரிடம் கேட்கப் போகிறேன்.” லூக்கா 15:20-ம் வசனத்தை நாம் வாசிப்போம்:
20 அவன் எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். [இப்பொழுது அவனுடைய தகப்பன் எவ்வாறு அவனை ஏற்றுக் கொண்டான் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.] அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனை முத்தம் செய்தான்.
அவன் மனந்திரும்பி, திரும்ப தன் வீட்டிற்கு வந்தபோது, அவனுக்குக் கிடைத்த வரவேற்பு எத்தகையதாக இருந்தது என்று பாருங்கள்! “என்னை உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக வைத்துக் கொள்ளும்,” என்று சொல்வதற்கு அவனுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், அதற்கு முன்பே, அவனுடைய தகப்பன் அவனை முத்தமிட்டு, தன் பிள்ளையாகவே திரும்பவும் ஏற்றுக் கொண்டான். தேவன் நம்மை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார் என்பதைக் குறித்த ஒரு அழகான படமாக இது இருக்கிறது. அவர் நம்மை திட்டுவதில்லை. அவர் நம் மீது குற்றஞ்சுமத்துவதில்லை. அவர் தொலைதூரத்தில் இல்லை. எடுத்ததற்கெல்லாம் கோபப்படுகிற ஒரு கடுமையான நபர், அவர் அல்ல. அவர் அன்பானவர், கிருபை நிறைந்தவர், இரக்கமுள்ளவர். தேவனைக் குறித்த இந்த ஒரு படம் நமக்குள் வரும்போது, அது நாம் ஜெபிக்கிற விதத்தையே முற்றிலும் மாற்றி விடுகிறது.
ஞானத்திற்காக ஜெபிப்பதைக் குறித்து, யாக்கோபு நிருபத்தின் முதல் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நாம் அதை வாசிப்போம். யாக்கோபு 1:5 இவ்வாறு சொல்கிறது:
5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
தேவன் தாராளமாய் கொடுக்கிறார் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அவர் குற்றம் கண்டுபிடிக்கிறதில்லை. ஜெபத்தைக் குறித்து நீங்கள் நினைக்கும்போதெல்லாம், இதை மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். தேவன் தாராளமாய், சம்பூரணமாய் கொடுக்கிறார். அவர் குற்றம் கண்டுபிடிப்பதில்லை.
அவர் பிதாவாகிய தேவனை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்தும்படியே வந்தார். இயேசு நிறைய விஷயங்களைக் குறித்து போதித்திருக்கிறார். மற்ற போதனைகளைப் போலவே, ஜெபத்தைக் குறித்தும் அவர் நேர்மறையாக, ஆக்கப்பூர்வமான நோக்கில் போதித்திருக்கிறார். மலைப்பிரசங்கத்தில் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார். மத்தேயு 7:7-8 வசனங்களை நாம் வாசிப்போம்.
7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். 8 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான். தேடுகிறவன் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
ஆக்கப்பூர்வமான விதத்தில், நேர்மறையாக இங்கு சொல்லப்பட்டிருக்கிற மூன்று வாக்கியங்களைக் கவனியுங்கள். கேட்கிற ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்கின்றனர். தேடுகிற ஒவ்வொருவரும் கண்டடைகின்றனர். தட்டுகிற ஒவ்வொருவருக்கும் திறக்கப்படும். மத்தேயு 21:22-ம் வசனத்திலும் நாம் இதைப் பார்க்க முடியும்:
22 நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ, அவைகளையெல்லாம் பெறுவீர்கள்.
ஜெபத்தில் நீங்கள் கேட்கின்ற ஒவ்வொன்றையும் பெற்றுக் கொள்வீர்கள். மாற்கு 11:24-ம் வசனத்தில் இயேசு என்ன சொல்கிறார் என்பதையும் இப்பொழுது நாம் கவனிப்போம்:
24 ஆதலால் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்கிறேன்.”
எல்லாவற்றையும் ஆக்கப்பூர்வமான விதத்தில் உள்ளடக்கிய வாக்கியங்களாய் இந்த வேதவசனங்கள் இருக்கின்றன. ஜெபத்தில் நீங்கள் கேட்கின்ற ஒவ்வொன்றையும், ஜெபத்தில் நீங்கள் எவைகளைக் கேட்டாலும் என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். ஜெபத்தின் பலனாக நடக்கப் போகிற காரியத்தைக் குறித்து இயேசு இங்கு சொல்வதைக் கவனியுங்கள். அவர் சொல்கிறார், “நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று விசுவாசியுங்கள். [Believe that you have received it.]” நாம் ஜெபிக்கும்போது, பெற்றுக் கொள்கிறோம் என்பதை உணர வேண்டியது மிகவும் முக்கியமானதாயிருக்கிறது. நாம் எதற்காக ஜெபித்தோமோ, அதை மெய்யாகவே பெற்றுக் கொள்கிற ஒரு அனுபவத்திற்காக, நாம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஆனால் விசுவாசத்தினால், நாம் ஜெபிக்கும்போதே, நாம் எதற்காக ஜெபித்தோமோ அதைப் பெற்றுக் கொள்கிறோம். இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் போதித்த கடைசி போதனையைக் குறித்து யோவான் சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தேவன் நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கொடுப்பார் என்ற உத்தரவாதத்தை இயேசு இங்கே மூன்று முறை நமக்குக் கொடுத்திருக்கிறார். அந்த வார்த்தைகளை நாம் கவனிப்போம். யோவான் 14:13-14 வசனங்களை வாசிப்போம்.
13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். 14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.
“நீங்கள் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்.” எவ்வளவு விசாலமான வார்த்தைகள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்! யோவான் 15:7-ம் வசனத்தை வாசிப்போம்:
7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் (விரும்பி) கேட்டுக் கொள்வது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
“நீங்கள் விரும்புவது எதுவாயிருந்தாலும், அதைக் கேளுங்கள்.” இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்? யோவான் 16:24-ஐ வாசிப்போம்:
24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்.
நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கிடைக்கும்போது, விசேஷமான ஒரு சந்தோஷம் நமக்குள் உண்டாகிறது. பரலோகத்தையும் பூமியையும் சிருஷ்டித்த சிருஷ்டிகரும், இந்த முழு பிரபஞ்சத்தையும் ஆளுகை செய்கிறவருமாகிய சர்வ வல்ல தேவன் தம்முடைய செவிகளை நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களுக்கு திறந்தே வைத்திருக்கிறார்; நாம் அவரிடம் என்ன கேட்கிறோமோ, அவர் அதை நமக்குச் செய்வார் என்பதை அறிந்து கொள்ளும்போது, அது நமக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு அனுபவமாக இருக்கிறது. நமக்குள் அந்த சந்தோஷம் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதைப் பார்க்கும்போது வருகிற அந்த விசேஷமான சந்தோஷத்தை நாம் அனுபவிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். ஆகையால்தான் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “கேளுங்கள். உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி, நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.”
இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனோடு நமக்கு உண்டாயிருக்கிற உறவின் மூலம் நாம் எப்படி மாற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்? அதைக் குறித்துப் பேசுகிற வசனங்களை வாசித்து, இந்த செய்தியை நாம் முடிப்போம். வெளிப்படுத்தின விசேஷம் 1:6 வசனங்களை நாம் வாசிப்போம்:
6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும், வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
நமக்கு அருளப்பட்ட பாவமன்னிப்பின் மூலமாகவும், இயேசுவின் இரத்தத்தினால் உண்டான சுத்திகரிப்பின் மூலமாகவும், நாம் எப்படிப்பட்டவர்களாக மாறியிருக்கிறோம் என்பதை இங்கு கவனியுங்கள். நாம் ராஜாக்களும், ஆசாரியர்களுமாக மாறியிருக்கிறோம் என்றுதான் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற மொழிபெயர்ப்புகள், “ராஜாக்களும், ஆசாரியர்களும்” அல்லது “ஆசாரியர்களின் ராஜ்யம்” என்று சொல்கின்றன. ஆனால் இயேசுகிறிஸ்துவில் தேவனோடு நமக்கு உண்டான உறவின் மூலம் மனுஷனுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிற இரண்டு உயரிய பணிகளையும் நாம் இங்கு சேர்த்து பார்க்கிறோம். நாம் ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் இருக்கிறோம். நாம் ஆசாரியர்களின் ராஜ்யமாக இருக்கிறோம். அதற்கு என்ன அர்த்தம்? ராஜாக்கள் மற்றும் ஆசாரியர்களின் இரண்டு விசேஷமான பணிகள் என்ன என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம். ராஜாக்கள் என்ன செய்கிறார்கள் என்பது நம் ஒவ்வொருவருக்குமே தெரியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஆளுகை செய்கிறார்கள். அவர்கள் நிர்வாகம் செய்கிறார்கள். ஆனால் ஆசாரியர்களின் விசேஷமான பணி என்ன என்பதை அவ்வளவு தெளிவாக எல்லோருமே அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் வேதவசனம் அதை நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது. பலிகளைச் செலுத்துவதுதான் ஆசாரியர்களின் விசேஷமான பணி என்று வேதவசனம் தெளிவாகச் சொல்கிறது. ஆக, ராஜாக்களாய் நாம் ஆளுகை செய்ய வேண்டும். ஆசாரியர்களாய் நாம் பலி செலுத்த வேண்டும். ஆனால் நாம் ஆசாரியர்களின் ராஜ்யமாயிருக்கிறோம். வேறு வார்த்தைகளில், ராஜ்யத்தில் ஆளுகை செய்ய வேண்டுமென்றால், நாம் ஆசாரியர்களாக இருக்க வேண்டும். இதை எளிமையாக இப்படிச் சொல்லலாம். ஆசாரியர்களாய் ஊழியம் செய்யும்படி நாம் கற்றுக் கொள்ளும்போது மட்டுமே, மெய்யாகவே நம்மால் ஆளுகை செய்ய முடியும். ராஜாக்களாய் ஆளுகை செய்ய வேண்டுமென்றால், முதலில் ஆசாரியர்களாய் ஊழியம் செய்வதைக் குறித்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில், ஆசாரியர்களாகிய நாம் எப்படிப்பட்ட பலியை செலுத்த வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்? இதை நாம் கற்றுக் கொள்வோம்.
1 பேதுரு 2:5-ல், அது எப்படிப்பட்ட பலி என்று பேதுரு சொல்கிறார்:
5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்கு பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள்.
நாம் கிறிஸ்துவுக்குள் யாராயிருக்கிறோம் என்று இவ்வசனம் சொல்வதைக் கவனியுங்கள். நாம் அவருக்குள் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாய் இருக்கிறோம் என்று இவ்வசனம் சொல்கிறது. “ஆசாரியக் கூட்டம்” என்ற வார்த்தையோடு, “பலிகள்” என்ற வார்த்தையும் சேர்த்து எழுதப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். பரிசுத்த ஆசாரியர்களாகிய நாம், இயேசுகிறிஸ்துவின் மூலம், தேவனுக்குப் பிரியமான ஆவிக்குரிய பலிகளைச் செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். எப்படிப்பட்ட ஆவிக்குரிய பலிகளை செலுத்த வேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்? இயேசுவின் எடுத்துக்காட்டை நாம் பார்ப்போம். எபிரெயர் 5:7-ஐ வாசிப்போம். பூமியில் இயேசு வாழ்ந்த வாழ்க்கையைக் குறித்து இது பேசுகிறது:
7 அவர் (இயேசு) மாம்சத்திலிருந்த நாட்களில் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்து
அவர் எதை பலியாக செலுத்தினார்? விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் தான் அவர் பலியாகச் செலுத்தினார். ஆசாரியர்களாகிய நம்மிடமிருந்தும், ஜெபம் மற்றும் விண்ணப்பங்கள் என்ற பலியைத்தான் தேவன் எதிர்பார்க்கிறார். ஆக, ராஜாக்களாய் நாம் ஆளுகை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆசாரியர்களாய், ஜெபம் மற்றும் விண்ணப்பங்கள் என்ற பலியை நாம் செலுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் ஆளுகை செய்ய வேண்டுமென்றால், முதலில் நாம் ஆசாரியர்களாய் ஊழியம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில், ஜெபத்தின் மூலம் ஆசாரியர்களாய் ஊழியம் செய்வதைக் குறித்து முதலில் நாம் கற்றுக் கொள்ளவில்லை என்றால், ராஜாக்களாய் நிர்வகிப்பதற்கோ, ஆளுகை செய்வதற்கோ உரிய தகுதியை நாம் இழந்து விடுகிறோம். வேறு விதமாகச் சொன்னால், நாம் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளும்போதுதான், ஆளுகை செய்வதற்கான தகுதியைப் பெறுகிறோம். இன்னும் வேறு வழியில் சொன்னால், ஜெபிப்பதன் மூலம், நாம் ஆளுகை செய்ய கற்றுக் கொள்கிறோம். ஆனால் முதலில், நாம் ஜெபிப்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களில் நான் பேசப் போகிற தலைப்பு இதுதான்: “நீங்கள் ஆளுகை செய்யும்படி எவ்வாறு ஜெபிக்கக் கற்றுக் கொள்ளலாம்.”
இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். ஜெபத்தில் தேவனை எவ்வாறு அணுக வேண்டும் என்பதைக் குறித்து நாளை பேசத் தொடங்குவேன். தேவனை சரியான விதத்தில் அணுகுவதற்கு நான்கு முக்கியமான நிபந்தனைகள் இருக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன். அவற்றில் முதல் நிபந்தனையை நாளை எடுத்துக் காண்பிப்பேன்.
குறியீடு: RP-R018-101-TAM









