திரும்பவும் உங்களோடு இருப்பதை நன்றாக உணருகிறேன். நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத, அத்தியாவசியமான “மரணத்தின் மீது வெற்றி” எனும் சத்தியத்தை நாம் கற்றுக் கொண்டு வருகிறோம்.

என்னுடைய முந்தைய செய்திகளில், நம்மில் ஒருவரும் தவற விட முடியாத இரண்டு முக்கியமான நியமனங்களைக் குறித்து நான் விளக்கிச் சொன்னேன். முதல் நியமனம், மரணம். இரண்டாவது நியமனம், நியாயத்தீர்ப்பு. கடைசியில், நாம் ஒவ்வொருவரும் இவ்வாழ்க்கையில் நாம் செய்த காரியங்களைக் குறித்து, தனிப்பட்ட விதத்தில் தேவனுக்கு முன்பாக கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

முடிவில், நம்முடைய நித்தியம், ஒரு விஷயத்தைச் சார்ந்திருக்கும். இயேசு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவுதான் அது. அவர்தான் மனுஷ ஆத்துமாக்களின் நித்தியத்தை தீர்மானிக்கிற திருப்புமுனையாக இருக்கிறார். அவர்தான் மனுஷ ஆத்துமாக்களாய் இரு வேறு நித்தியங்களுக்கு நேராக திருப்புகிற ஒரு உச்சியாய், முனையாய் இருக்கிறார். இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும்போது, அது நமக்கு பாவ மன்னிப்பையும், சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் உறுதி செய்கிறது. மறுபக்கத்தில், அவிசுவாசம், நிச்சயம் நம் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், நிராகரிப்பையும் கொண்டு வரும்.

இந்தச் சத்தியங்களை தனிப்பட்ட விதத்தில், நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் குறித்து இன்றைய செய்தியில் நான் சொல்லப் போகிறேன். “மரணத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?” என்பதுதான் இந்தச் செய்தியின் தலைப்பு. திரும்பவும் இதை உங்களுடைய நினைவுக்குக் கொண்டு வருகிறேன். நீங்கள் தவற விட முடியாத நியமனங்களில் ஒன்றைக் குறித்துதான் இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

சமாதானத்தோடும், தைரியத்தோடும், பதட்டமில்லாமல், அமைதலான நிச்சயத்தோடும் நீங்கள் மரணத்தை எதிர்கொள்ள வேண்டுமென்றால், அதற்கு நான்கு முக்கியமான காரியங்களை நீங்கள் செய்தாக வேண்டும். இதை ஒரு ஆலோசனையாக கொடுக்கிறேன். நான் அவைகளை உங்களுக்கு விளக்கிச் சொல்கிறேன். முதலில், நீங்கள் அதை எதிர்கொண்டாக வேண்டும்! நீங்கள் மரிக்கப் போகிறீர்கள் என்ற உண்மையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்! நீங்கள் மரிக்கப் போகிறீர்கள். நானும் மரிக்கப் போகிறேன். நாம் ஒவ்வொருவருமே மரிக்கப் போகிறோம். ஒரு ஊழியக்காரனாய், அடிக்கடி என்னை ஆச்சரியப்படுத்துகிற விஷயங்களில் ஒன்று இதுதான். உண்மையில், வெகு சிலரே மரணத்தை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்கிறார் என்ற உண்மைதான் அது. தாங்கள் நிச்சயமாய் மரிக்கப் போகிறோம் என்பதை உறுதியாக அறிந்த பிறகும், அந்த நிச்சயமான நிகழ்விற்காக எவ்விதமான ஆயத்தமும் செய்யாமலிருப்பது, அசாதாரணமான ஒரு காரியமாயிருக்கிறது. நீங்கள் மரிக்கப் போகிறீர்கள் என்ற உண்மையை எதிர்கொள்வதென்பது தவறான ஒரு விஷயம் கிடையாது. அதுதான் நிஜத்தைக் குறித்த சரியான பார்வையாகும். இவ்வாழ்க்கையின் முடிவில் வரப்போகிற ஒன்றிற்காக எவ்வித ஆயத்தமும் செய்யாமல் வாழ்வதுதான் தவறு. நிகழப் போகும் ஒரு நிஜத்தைக் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் வாழ்வதைத்தான் அது காண்பிக்கிறது. மரணத்தைக் குறித்து பவுல் என்ன சொன்னார் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். பிலிப்பியர் 1:21-ல், அவர் இவ்வாறு சொல்கிறார்:

21 கிறிஸ்து எனக்கு ஜீவன். சாவு எனக்கு ஆதாயம்.

மரிக்கப் போவதைக் குறித்து அவர் பயப்படவில்லை. அவர் பாவம், நியாயத்தீர்ப்பு மற்றும் அவருடைய வாழ்க்கையில் தேவன் இட்ட நிபந்தனைகளின் நிஜங்களை எதிர்கொண்டார். அவற்றையும், மரணத்தையும் எதிர்கொள்ளும்படியான விருப்பம் அவருக்கு இருந்தபடியால், தேவனோடு ஒரு ஆழமான உறவிற்குள் அவர் கடந்து வந்தார். அங்கே அவருக்கு எந்த பயமுமில்லை. ஆனால் இந்த மாம்சமான வாழ்க்கையின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பூரண பிரசன்னத்திற்குள் நுழைய வேண்டும் என்ற ஒரு வலிமையான வாஞ்சை அவருக்குள் மெய்யாகவே இருந்தது. பவுலுக்குள் இருந்த இதே சிந்தை நமக்குள்ளும் இருக்கும் என்றால், நமக்குள்ளும் அதே நிச்சயம் இருக்கும், பதட்டம் இருக்காது. அமைதலாய் மரணத்தை எதிர்கொள்வோம். “கிறிஸ்து எனக்கு ஜீவன். சாவு எனக்கு ஆதாயமே,” என்று பவுலைப் போல நம்மாலும் சொல்ல முடியும். ஒன்றை உங்களுக்கு விளக்கிச் சொல்லும்படி நான் கடமைப்பட்டிருக்கிறேன். “கிறிஸ்துவே எனக்கு ஜீவன்,” என்று உங்களால் சொல்ல முடியவில்லை என்றால், “சாவு எனக்கு ஆதாயமே” என்று உங்களால் சொல்ல முடியாது. சரி, இதுதான் முதல் நிபந்தனை. நீங்கள் மரிக்கப் போகிறீர்கள் என்ற உண்மையை எதிர்கொள்ளுங்கள்! அதற்கான ஆயத்தத்தைச் செய்யுங்கள்! ஆக்கினைத்தீர்ப்போ, பயமோ, நிச்சயமற்ற நிலையோ எவ்விதத்திலும் இல்லாத வகையில், இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனோடு உறவு கொள்ளுங்கள், அந்த உறவில் வளருங்கள்.

இது இரண்டாம் நிபந்தனைக்கு நேராக நடத்துகிறது: தேவன் அருளும் பாவமன்னிப்பையும், சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் ஏற்றுக் கொள்ளுங்கள். ரோமர் 5:1-ல், பவுல் இவ்வாறு சொல்கிறார்:

1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

நமக்காக சிலுவையில் நிகழ்ந்த இயேசு கிறிஸ்துவின் தியாக மரணத்தின் மீது நம் விசுவாசத்தை வைப்பதன் மூலம், அவருடைய நீதியை நாம் பெற்றுக் கொள்கிறோம். நம்முடைய பாவத்திற்கான தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டதன் மூலம், விசுவாசத்தினால், அவருடைய நீதி நமக்கு அருளப்பட்டிருக்கிறது. நாம் நீதிமானாக்கப் பட்டிருக்கிறோம். நீதிமானாக்கப்படுதல் என்றால் என்ன என்பது உங்களுடைய நினைவில் இருக்கிறதா? ஒருபோதும் ஒரு பாவம் செய்திராததைப்போல நீதிமானாக்கப்படுவதாகும். காரணம், ஒருபோதும் ஒரு பாவமும் அறியாத இயேசுகிறிஸ்துவின் நீதியே எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நீதியை உடையவனாய் இப்பொழுது நான் இருக்கிறேன். இந்த நீதியில் நான் நிற்கும்போது, என்னால் தேவனையும், மரணத்தையும், நித்தியத்தையும், எவ்வித பயமுமில்லாமல், நடுக்கமுமில்லாமல் எதிர்கொள்ள முடியும். அப்போஸ்தலனாகிய யோவான், தனது முதல் நிருபத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார் 1 யோவான் 5:11-13 வசனங்களை வாசிப்போம்:

11 தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 13 உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.

தேவன் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார் என்ற ஒரு சாட்சியை முழு மனுக்குலத்திற்கும் தேவன் தெரியப்படுத்தியிருக்கிறார். இந்த ஜீவன், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்ற நபருக்குள் இருக்கிறது. நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால், அவருக்குள் நித்திய ஜீவனையும் நாம் பெற்றுக் கொள்கிறோம். இது நிகழ்கால வினைச்சொல்லாக எழுதப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். “குமாரனை உடையவன், நித்திய ஜீவனை உடையவனாக இருக்கிறான்,” என்று இது பேசுகிறது. இது மரணத்திற்குப் பிறகு நிகழப் போகிற ஒரு காரியம் கிடையாது. இது இப்பொழுது இவ்வுலகத்தில் இக்காலகட்டத்தில் நிகழ்கிற ஒரு காரியமாகும். மரணம் வரை அல்லது மரணத்திற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் விட்டு விட்டீர்கள் என்றால், நீங்கள் அதைத் தவற விட்டு விட்டீர்கள் என்று அர்த்தம். அதைப் பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு காலதாமதமாகி விடும் என்று அர்த்தம். இப்பொழுதே நீங்கள் அதைக் குறித்து அக்கறையாய் செயலாற்ற வேண்டும்! தேவகுமாரனை உடையவன், இப்பொழுது நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்!

13-ம் வசனத்தில் அங்கே யோவான் என்ன சொல்கிறார் என்பதையும் கூட கவனியுங்கள். நாம் அதை வாசிப்போம்: “இப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாய் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்படி, தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைத்திருக்கிற உங்களுக்கு எழுதுகிறேன்.” இது நாம் விசுவாசிக்கிறோம் என்பதோடு முடிந்து விடவில்லை. விசுவாசிப்பதன் மூலம், நாம் ஒன்றை அறிந்து கொள்கிறோம். “நான் இயேசுவை விசுவாசிக்கிறேன்,” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் “உங்களுக்கு ஒன்று தெரியுமா?” என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். விசுவாசிப்பதன் நோக்கமே, அறிந்து கொள்வதுதான். இயேசு கிறிஸ்துவை எவ்வாறு விசுவாசிக்க வேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்? இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் விசுவாசிப்பதோடு நின்று விடக் கூடாது. நமக்குள் நித்திய ஜீவன் இருக்கிறது என்பதை அறிந்தவர்களாயும் நாம் இருக்க வேண்டும். இப்பொழுதே நமக்குள் நித்திய ஜீவன் இருக்கிறது. மரணத்திற்குப் பிறகு உண்டாகும் என்று நாம் அதற்காகக் காத்திருக்கவில்லை. மரணம் வரும்போது, இயேசு கிறிஸ்துவுக்குள் ஏற்கனவே நமக்கு உண்டாயிருக்கிற நித்திய ஜீவனை அந்த மரணம் தொடவோ அல்லது அழிக்கவோ முடியாது என்பதை நாம் நிச்சயமாக அறிந்து கொண்டிருக்க வேண்டும்.

மூன்றாவது நிபந்தனை: நீங்கள் உங்களையே இங்கே இப்பொழுது இவ்வாழ்க்கையில் கிறிஸ்துவின் ஊழியத்திற்கென்று அர்ப்பணிக்க வேண்டும். நல்லதோ அல்லது கெட்டதோ, நம்முடைய சரீரங்களைக் கொண்டு நாம் செய்த காரியங்களுக்குத் தக்க பலனை பெறும்படி, விசுவாசிகளாகிய நாம் எல்லோருமே கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கப் போகிறோம் என்று இவ்வாரத்தின் ஆரம்பத்தில் நான் சுட்டிக் காண்பித்தேன். ஒன்றை நான் உங்களுக்கு நினைப்பூட்டுகிறேன். இவ்வாழ்க்கையில், நாம் செய்யக்கூடிய காரியங்களை இரண்டு வகைப்படுத்தலாம், அவ்வளவுதான். ஒன்று, அவை நல்லவையாக இருக்கலாம் அல்லது கெட்டவையாக இருக்கலாம். ஒரு காரியம் நன்மையானதாக இல்லையென்றால், அது நிச்சயம் கெட்டதாகத்தான் இருக்கும். ஆகையால் நாம் எதைச் செய்தாலும், அது தேவனுக்குப் பிரியமானதாய், தேவன் ஏற்றுக் கொள்ளக்கூடியதாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட விதத்தில், நாம் நம்மையே கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

இவ்விஷயத்தில் நாம் மூன்று காரியங்களை சோதித்துப் பார்க்க வேண்டும்: நோக்கம், கீழ்ப்படிதல் மற்றும் பெலன். நம்முடைய நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன? அவை நம் சுயத்தை மையமாகக் கொண்டவையா? நம்முடைய தனிப்பட்ட இலட்சியங்களையும், தனிப்பட்ட சந்தோஷங்களையும், தனிப்பட்ட திருப்தியையும், மேன்மையையும்தான் நாம் நாடுகின்றோமா? அல்லது தேவனுடைய மகிமையைக் குறித்த வாஞ்சையினால் உத்தமமாகவே நாம் நெருக்கி ஏவப்படுகிறோமா? நம்முடைய நோக்கங்கள் எல்லாவற்றையும் தேவன் ஒரு நாள் சோதித்துப் பார்க்கப் போகிறார்.

இரண்டாவதாக, கீழ்ப்படிதல். நாம் தேவனுடைய அளவுகோலின்படி தேவனுக்கு ஊழியம் செய்கிறோமா அல்லது நம்முடைய வசதிக்கேற்ப தேவனுக்கு ஊழியம் செய்கிறோமா? வேதவசனத்தின் கோட்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நாம் கீழ்ப்படிகிறோமா? அல்லது வேதவசனத்தின் நிபந்தனைகளை விட்டு விட்டு, நம்முடைய சௌகரியத்திற்கேற்றபடி, நம்முடைய வசதிக்கேற்ப புது கோட்பாடுகளை உருவாக்கும்படி நாம் முயற்சிக்கின்றோமா? கீழ்ப்படிதலின் அடிப்படையில், நாம் சோதித்துப் பார்க்கப்படப் போகிறோம்.

பிறகு, பெலன். நாம் நம்முடைய பெலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்கிறோமா அல்லது அவருடைய பெலத்தில் அவருக்கு ஊழியம் செய்கிறோமா? நாம் பரிசுத்த ஆவியானவருக்கு இடம் கொடுக்கிறோமா? நம் மீது முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ளும்படி நாம் அவருக்கு அனுமதியளிக்கிறோமா? தேவனுக்கு ஏற்புடைய விதத்தில் ஊழியம் செய்யும்படி, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்ய, நம்மை நெருக்கி ஏவ, நம்மைப் பெலப்படுத்த, நமக்குத் திராணியளிக்க, நாம் இடம் கொடுக்கிறோமா?

இப்பொழுது நான் நான்காவது நிபந்தனைக்கு வருகிறேன். இது மிகவும் முக்கியமானது. ஆகையால் இதற்கு இன்னும் கொஞ்சம் அதிக விளக்கம் தேவை. நான்காவது நிபந்தனை, இவ்வுலகத்தின் இப்பொழுதைய காரியங்களின் ஈர்ப்பிலிருந்து உங்களை விலக்கி வைக்கும்படி, நீங்கள் தேவனுக்கு இடம் கொடுக்க வேண்டும். ஏசாயா 40-ம் அதிகாரத்திலிருந்து ஒரு வேதப்பகுதியை நான் வாசிக்க விரும்புகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு வேதப்பகுதியாகும். ஏசாயா 40:6-8 வசனங்களை வாசிப்போம்:

6 பின்னும் “கூப்பிட்டுச் சொல்,” என்று ஒரு சத்தம் உண்டாயிற்று. “என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன்,” என்றேன். அதற்கு, “மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப் போலவும் இருக்கிறது. 7 கர்த்தரின் ஆவி அதின் மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும். ஜனமே புல். 8 புல் உலர்ந்து, பூ உதிரும். நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்,” என்று உரைத்தது.

இந்த வாழ்க்கையைக் குறித்த எவ்வளவு ஒரு உண்மையான படமாக இது இருக்கிறது! பார்ப்பதற்கு அழகான காரியங்கள் நம்மைச் சுற்றியிருக்கின்றன. நாம் நேசிக்கிற ஜனங்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். விரும்புவதற்கும், பெருமைபாராட்டுவதற்கும் நிறைய காரியங்கள் இருக்கின்றன. ஆனாலும் நாம் பார்க்கிற இவையனைத்தும், நாம் உட்பட அனைத்தும், புல்லைப் போல இருக்கின்றன. காலையில், அவை அழகாய் வளருகின்றன. இரவிலோ, அவை உலர்ந்து, உதிர்ந்து, பட்டுப் போகின்றன. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் நாம் வாழ்கின்றோம். நாம் இப்படிப்பட்ட நபர்களாய்தான் இருக்கின்றோம். அது சொல்கிறது, “கர்த்தரின் ஆவி அதின் மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்.”

இதைக் குறித்து நான் ஆச்சரியப்படுவதுண்டு. ஒரு நாள் தேவன் இந்த சத்தியத்தை எனக்கு வெளிப்படுத்திக் காண்பித்தார். தேவன்தான் இந்தத் தற்காலிகமான உலகத்திற்கு அழகைக் கொடுத்திருக்கிறார். பிறகு அவரே அது உலர்ந்து, வாடி, பட்டுப் போகும்படி செய்கிறார். ஏன்? காரணம், இந்த அழகைக் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவர் உருவாக்கக்கூடிய அழகைக் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் இந்த உலகத்தில் நாம் நிரந்தரமாகத் தங்கி விடக்கூடாது என்றுதான் அவர் விரும்புகிறார். அதாவது இவ்வுலகம் நமக்கு நிரந்தரமான வீடாக இருக்கக்கூடாது என்றுதான் அவர் விரும்புகிறார். ஆகையால் இந்த அழகைக் குறித்த நம்முடைய உணர்வை அவர் தூண்டி விடுகிறார். இந்த அழகை நாம் ரசிக்கிறோம் என்றால், அது நல்லதுதான். பிறகு அவர் இவ்வுலகத்தின் தற்காலிகமான அழகு உலர்ந்து, வாடிப் போகும்படி கிரியை செய்கிறார். அப்பொழுதுதான் இவ்வுலகத்திற்கு அப்பாற்ப்பட்ட, இதற்கு அடுத்து வரும் நித்தியத்தின் அழகின் மீது நாம் நம் இருதயங்களைப் பதிப்போம். இதன் மூலம், இந்தத் தற்காலிகமான காரியங்களின் ஈர்ப்பிலிருந்து தேவன் நம்மை விலக்கி வைக்கிறார். இவைகளை நாம் மறக்கச் செய்கிறார். 1 கொரிந்தியர் 15:19-ல், பவுல் இதைச் சொல்கிறார்:

19 இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத் தக்கவர்களாயிருப்போம்.

கிறிஸ்துவின் மீதான நம் நம்பிக்கை, இவ்வாழ்க்கையோடு முடிந்து போவதில்லை. அது பிரகாசத்தின் மேல் பிரகாசமடைந்து, நித்தியத்திற்குள்ளும் கடந்து செல்கிறது. கொலோசெயர் 3:1-4 வசனங்களில் பவுல் இவ்வாறு சொல்கிறார்:

1 நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். 2 பூமியிலுள்ளவைகளையல்ல. மேலானவைகளையே நாடுங்கள். [உங்களுடைய இருதயங்களையும், உங்களுடைய மனங்களையும், உங்களுடைய விருப்பங்கள் மற்றும் நாட்டங்களையும், உங்களுடைய சிந்தைகளையும், உங்களுடைய தேடுதல்களையும் மேலானவைகளின் மீது நீங்கள் பதிக்க வேண்டும், மேலானவைகளை நோக்கியிருக்கும்படி செய்ய வேண்டும். பிறகு பவுல் தொடர்ந்து சொல்கிறார்:] 3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள். உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. 4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடே கூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.

இதை மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். விசுவாசிக்குக் கிடைக்கும் உச்சகட்ட நிலையான பலன், இக்காலகட்டத்திற்கு அப்பாற்ப்பட்டதாய், இதற்குப் பிறகு வரக்கூடியதாய் இருக்கிறது. அப்பொழுதுதான் மெய்யான ஜீவனாகிய கிறிஸ்து பூரண மகிமையில் வெளிப்படுவார். இது கல்லறையையும் தாண்டி, இனி மேல்தான் நடக்கப் போகிறது.

யோபு 5:26-ஐ வாசித்து, இந்த செய்தியை நான் முடிக்கிறேன்:

26 தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர் வயதிலே கல்லறையில் சேருவீர்.

மரணம் என்பது ஒரு விபத்தாக இருக்க வேண்டியதில்லை. அது அகால மரணமாகவோ அல்லது வெகு சீக்கிரத்தில், காலத்திற்கு முன்பே நிகழ்கிற ஒரு மரணமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தேவனுடைய நோக்கத்திற்காவே வாழ்கின்றீர்கள் என்றால், ஏற்ற காலத்தில் தானியங்கள் அறுவடையில் சேர்க்கப்படுவதுபோல, நீங்களும் மரிப்பீர்கள். தேவன் ஏற்ற நேரத்திலே உங்களை தம்மோடு சேர்த்துக் கொள்வார்.

இஸ்ரேலில் ரமல்லா எனும் பட்டணத்தில் நான் வாழ்ந்த நாட்கள், இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றது. அங்கு அரபு பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் ஒரு விசுவாசியாய் மரித்தார். என்னுடைய மனைவி லிடியா, அந்தப் பெண்மணியின் பேரனிடம், “அவர் எப்படி இறந்தார்?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பேரன் இவ்வாறு பதிலளித்தார், “அவர் எந்த வியாதியினாலும் மரிக்கவில்லை. அவர் மரிக்க வேண்டிய நேரம் வந்தது, அவ்வளவுதான்.” என்ன ஒரு அழகான பதில் இது! நீங்கள் எவ்வாறு மரிக்கப் போகிறீர்கள்? நன்கு முதிர்ந்த வயதிலா அல்லது காலத்திற்கு முன்பே மரிக்கப் போகிறீர்களா? ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வியாதியினால் மரிக்க வேண்டியதில்லை. வேதாகமத்தில், வெகு சில விசுவாசிகளைக் குறித்துதான், அவர்கள் வியாதியினால் மரித்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. வேதாகமம் அறிவுறுத்துகிற விதத்தில், நீங்கள் வாழ்வீர்கள் என்றால், நீங்கள் வியாதிப்பட்டு மரிக்க மாட்டீர்கள். மாறாக, தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றியவர்களாய், நல்ல பூரண வயதில் நீங்கள் மரிப்பீர்கள்.

சரி, இன்றைக்கு நம்முடைய நேரம் முடிந்து விட்டது. நாளை இதே நேரம் நான் திரும்பவும் உங்களை சந்திப்பேன். இன்றைய என்னுடைய செய்தியின் தொடர்ச்சியாகத்தான் நாளைய செய்தியும் இருக்கும். நாளைய செய்தியின் தலைப்பு, “நாம் மிகவும் நேசிக்கிற ஒருவருடைய மரணத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?”

லைக்
பகிரவும்