வெற்றிகரமான ஜெபம் - சரியான உறவுகளின் அடிப்படை

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
சரியான உறவுகளே பயனுள்ள ஜெபத்திற்கு அடிப்படை. பிறருடன் சமரசம் செய்வது கர்த்தரை மகிமைப்படுத்தி, உங்கள் ஜெப வாழ்வில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்பதை டெரெக் பிரின்ஸின் 'வெற்றிகரமான ஜெபத்தின் கூறுகள் 3 - சரியான உறவுகள்' செய்தியில் கண்டறியுங்கள். நடைமுறை மற்றும் வேதப்பூர்வமான போதனைகளுக்கு 'ஜெபிப்பது எப்படி, ஜெபத்திற்குப் பதில் பெறுவது எப்படி, பகுதி 8' தொடரைக் கேளுங்கள்.
Transcript
திரும்பவும், உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. பல வருடங்களாக வேதாகமத்தை ஆராய்ந்து வாசித்ததிலும், ஊழியத்திலும், தேவன் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிற விலையேறப்பெற்ற வேதவசன சத்தியங்களை நான் உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகின்றேன். “எவ்வாறு ஜெபித்து, நீங்கள் எதற்காக ஜெபித்தீர்களோ அதையே பெற்றுக் கொள்வது,” என்ற தலைப்பில், இன்றும் நான் செய்தியைத் தொடருகின்றேன்.
வெற்றிகரமான ஜெபத்திற்குத் தேவையான அடுத்த முக்கியமான விஷயத்தைக் குறித்து இன்று நான் போதிக்கப் போகிறேன். அதாவது, உறவுகளில் நாம் சரியான நிலையைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து இன்றைக்கு நான் பிரசங்கிக்கப் போகிறேன். ஜெபத்தைக் குறித்த இந்த முக்கியமான விஷயத்தை, கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறார்கள். ஆனால் வேதாகமம் அதைக் குறித்து அதிகமாகப் பேசுகிறது.
மலைப்பிரசங்கத்திலிருந்து நாம் ஆரம்பிப்போம். கிறிஸ்தவ ஜீவியத்திற்கான அத்தியாவசியமான ஒரு வேதப்பகுதியாய் இது இருக்கிறது. மத்தேயு 5:23-24 வசனங்களில், இயேசு இவ்வாறு சொல்கிறார். நாம் அதை கவனிப்போம்:
23 ஆகையால் நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், 24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து விட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
பழைய ஏற்பாட்டு பலிகளோடு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் புதிய ஏற்பாட்டிற்கும் இது பொருந்துகிறது. இன்றைக்கு நாம் ஒரு பலிபீடத்தின் முன்பாகச் செல்லப் போவதில்லை. ஆனால் நாம் தேவனுடைய பிரசன்னத்திற்குள் செல்கின்றோம். நாம் அங்கே முழங்கால்படியிடுகிறோம். ஆக, இயேசு இங்கே இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் தேவனிடம் ஜெபிக்கச் செல்லும்போது, ஒரு விஷயம் திடீரென்று உங்களுடைய நினைவுக்கு வருகின்றது. உங்களுக்கும் உங்களுடைய சகோதரனுக்கும் இடையே ஏதோ ஒரு மனக்கசப்பு உண்டாயிருக்கிறது. நீங்கள் செய்த ஒரு காரியம், உங்களுடைய சக விசுவாசியை காயப்படுத்தி விட்டது. அதினால் அவருடைய மனம் புண்பட்டிருக்கிறது. அதினால் அவருக்கு ஏதோ தீங்கு உண்டாகி விட்டது. நீங்கள் அவரிடம் இதைக் குறித்து எதுவும் பேசவில்லை. நீங்கள் இன்னும் அதைச் சரி செய்யவில்லை. (இயேசு தொடர்ந்து சொல்கிறார்) இந்த நிலையில், நீங்கள் பலிபீடத்தின் முன்பாக உங்களுடைய காணிக்கையை வைத்து விடுங்கள். உங்களுடைய காணிக்கையில் உங்களுடைய ஜெபமும் உள்ளடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஜெபத்தை ஆரம்பித்து விடாதீர்கள். முதலில், உங்களுடைய சகோதரனிடம் திரும்பிச் செல்லுங்கள். உறவில் அவரோடு ஒப்புரவாகுங்கள். அதை சீர் செய்யுங்கள். பிறகு வந்து, உங்களுடைய பலியைச் செலுத்துங்கள். அதாவது, உங்களுடைய ஜெபத்தை ஆரம்பியுங்கள்.” இயேசு இதைத்தான் சொல்கிறார். சக விசுவாசியோடு சரியான உறவில் இல்லாமல், நாம் ஜெபிப்போம் என்றால், தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்பார் என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது. இதைத்தான் இந்த வேதப்பகுதி தெளிவாக நமக்குச் சுட்டிக் காண்பிக்கிறது. ஆகவே நம்முடைய ஜெபம் கேட்கப்பட வேண்டும் என்றால், முதலில், நாம் அந்த விசுவாசியிடம் சென்று, நம் உறவை சீர்படுத்த வேண்டும், ஒப்புரவாக வேண்டும்.
இதை என்னுடைய வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை, அனுபவமாக நான் கடந்து வந்திருக்கிறேன். ஜெபத்தில் நான் தேவனைத் தேடும்போது, நான் சொன்ன அல்லது செய்த ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் என் மனச்சாட்சியில் நினைவுக்குக் கொண்டு வருவார். நானும் திரும்பிச் சென்று, அதைச் சரி செய்வேன்.
பல வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகின்றது. எங்களுடைய மகள்களில் ஒருவர், அப்பொழுது அவருக்கு 12 வயதிருக்கும், எனக்கு எரிச்சல் உண்டு பண்ணக்கூடிய ஒன்றைச் செய்து விட்டார். நான் அவளைத் திட்டி விட்டேன். நான் காரணமில்லாமல் கோபப்பட்டேன். அவள் செய்த தவறுக்கும் அதிகமாகவே நான் கடுமையாக அவளிடம் நடந்து கொண்டேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு, ஒவ்வொரு முறையும் நான் ஜெபிக்க முயற்சித்தபோது, என் மகளிடம் நான் என்ன சொன்னேனோ அதைத்தான் என்னால் சிந்திக்க முடிந்தது. கடைசியில், நான் என்னை தாழ்த்தி, என் மகளிடம் சென்று, “என்னை மன்னித்து விடு. நான் உன்னிடம் அதிகமாக கோபப்பட்டு விட்டேன். அதில் நியாயமில்லை. தயவு செய்து என்னை மன்னித்து விடு,” என்று சொன்னேன். அதற்குப் பிறகு, ஜெபத்தில் எனக்கு ஆச்சரியமான விடுதலை உண்டானது. ஆகையால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும், உங்களுடைய சக விசுவாசிகளுக்கும் இடையில் ஏதேனும் மனக்கசப்பு இருக்கின்ற நிலையில், உங்களுடைய காணிக்கையை எடுத்துக் கொண்டு, தேவனுடைய பலிபீடத்திற்கு வராதீர்கள். அது உங்களுடைய சொந்தக் குடும்பத்தாராகக்கூட இருக்கலாம்.
பவுல் இதே குறிப்பை, 1 தீமோத்தேயு 2:8-ல் சொல்லியிருக்கிறார். ஜெபத்தைக் குறித்து பேசும்போது, அவர் இவ்வாறு சொல்கிறார்:
8 அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ண வேண்டுமென்று விரும்புகிறேன்.
இங்கு இரண்டு நிபந்தனைகளை கவனியுங்கள். முதலில், நாம் பரிசுத்த கைகளை உயர்த்த வேண்டும். “பரிசுத்தம்” என்ற வார்த்தை, நம் கைகள் தீய செயல்களால், பழக்கங்களால் கறைபட்டிருக்கவில்லை என்பதை சுட்டிக் காண்பிக்கிறது. அதாவது நம்முடைய அன்றாட வாழ்க்கையும், நம்முடைய வாழ்க்கைக்காக நாம் சம்பாதிக்கும் வழிமுறைகளும் தேவனுக்குப் பிரியமானதாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். ஆனால் பவுல் பிறகு நம்முடைய உறவுகளைக் குறித்துப் பேசுகிறார். “கோபமும், தர்க்கமும் இல்லாமல்,” என்று அவர் சொல்கிறார். நம் உறவுகளுக்குள் கோபமும், தர்க்கமும், வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் இருக்கக்கூடாது என்று அவர் சொல்கிறார். ஒன்றை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நிறைந்திருக்கும்போது, ஒரு சபையில் வாக்குவாதங்களும், தர்க்கங்களும், பிரிவினைகளும் நிறைந்திருக்கும்போது, தேவன் பதிலளிக்கக்கூடிய விதத்தில் ஜெபிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இன்றைக்கு சபைகளில்கூட நிறைய கோபமும், பிரிவினைகளும் காணப்படுகிறது. சபை மூப்பர்களுக்கு இடையிலும் கூட அப்படிப்பட்ட காரியங்கள் மிகுதியாக காணப்படுகிறது. இந்த நிலையிலும், அவர்கள் தேவனிடம் சென்று, ஜெபிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஜெபங்களுக்கு பதில் கிடைக்கப்போவதில்லை. காரணம், முதலில், நாம் கோபத்தையும் தர்க்கத்தையும் விட்டு விட வேண்டும் என்று பவுல் இங்கு சொல்கிறார். நம் உறவுகளுக்கிடையில் சமாதானமும், சரியாக சீர்பொருந்திய நிலையும், ஒப்புரவாகுதலும், ஒத்திசைவும் காணப்படும்போதுதான், நாம் ஜெபிக்க முடியும்.
1 பேதுரு 3:7-ல், இது குறிப்பாக கணவன் – மனைவி உறவோடு பொருத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. பேதுரு சொல்கிறார்:
7 புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்கு தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனே கூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்கிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
கணவன் – மனைவிக்கு இடையேயான உறவு சரியான நிலையில் இல்லாதபோது, அவர்களுடைய ஜெபங்களுக்கு தடை உண்டாகக்கூடிய சாத்தியக்கூறு நிறையவே இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர்களுடைய உறவு சரி செய்யப்படவில்லை என்றால், அவர்களுடைய ஜெபங்களுக்கு பதில் கொடுக்கும்படி தேவன் கிரியை செய்ய மாட்டார். பிரதானமாக, தேவன் இந்தப் பொறுப்பை கணவன் மீதுதான் வைத்திருக்கிறார். “உங்களுடைய மனைவியைப் புரிந்து கொண்டவர்களாய் வாழுங்கள்,” என்று தேவன் சொல்கிறார். மனைவி, ஒரு பெலவீனமான பாத்திரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த உலகத்தில், பெலவீனமான ஒருவரை மற்றவர்கள் சந்திக்கும்போது, அவர்கள் அந்த நபரை அலட்சியமாய் நடத்துவார்கள், தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, ஒடுக்கி நடத்துவார்கள். இதுதான் உலக நடைமுறை. ஆனால் சுவிசேஷ செய்தி முற்றிலும் வித்தியாசமானது. பவுல் சொல்கிறார், “மனைவி பெலவீனமான பாத்திரமாக இருக்கிறபடியால், அவருக்கு அதிகமான கனத்தைக் கொடுங்கள். நித்திய ஜீவனை அவரும் உங்களோடு சேர்ந்து சுதந்தரிக்கப் போகிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.” நான் இதை இவ்வாறு புரிந்து கொள்கிறேன். அன்றைய நாட்களில் நடைமுறையில் இருந்த பிரமாணத்தின்படி, ஒரு குறிப்பிட்ட சுதந்திரத்திற்கு இரண்டு பேர் உடன் சுதந்தரர்களாக இருந்தார்கள் என்றால், ஒருவரை தவிர்த்து விட்டு இன்னொருவர் மட்டுமே அந்த சுதந்திரத்தை சுதந்தரிக்க முடியாது. ஒரு கணவன்-மனைவி இருவருமே கிறிஸ்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு இது பொருந்தும் என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். தேவனுக்குள் ஒரு ஆச்சரியமான சுதந்திரம் அவர்களுக்கு உண்டாயிருக்கிறது. அது அவர்களுக்குரியதாய், அவர்கள் சுதந்தரிக்கும்படி இருக்கிறது. ஆனால் ஒருவரைத் தவிர்த்து விட்டு இன்னொருவர் மட்டும் அந்தச் சுதந்திரத்தை சுதந்தரிக்க முடியாது. அந்தச் சுதந்திரத்திற்குள் நுழைவதற்கு, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள். அப்படியென்றால், ஒருவரோடு ஒருவர் சரியான உறவில் இருக்கும்போதுதான், அவர்களால் அதை சுதந்தரிக்க முடியும்.
இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கிற இந்த சரியான உறவின் நிலையை நாம் எவ்வாறு அடையப் போகிறோம்? அதற்கு ஒரு திறவுகோல் வார்த்தை இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். “மன்னித்தல்” என்ற வார்த்தைதான் அது. ஆகையால், பல நேரங்களில், தேவனிடம் வரும்போது நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், மற்றவர்களை மன்னிக்கும் செயலை பயிற்றுவித்துக் கொள்வதுதான். இது கர்த்தர் கற்றுக் கொடுத்த ஜெபத்திலும் இருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் பின்பற்ற வேண்டிய மாதிரி ஜெபமாக இது இருக்கிறது. மத்தேயு 6:12-ல், இவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று இயேசு நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்:
12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எந்த அளவிற்கு நாம் நம் சக மனுஷர்களை மன்னித்திருக்கிறோமோ, அந்த அளவிற்கு தேவனிடமிருந்து மன்னிப்பை நாம் கோர முடியும். நாம் அதற்கு தகுதியும், உரிமையும் உடையவர்களாகிறோம். இதை நாம் கவனிக்க வேண்டும். நாம் மற்றவர்களை முற்றிலும் மன்னித்து விட்டோம் என்றால், முழுமையான மன்னிப்பை தேவனிடமிருந்து நாம் கோர முடியும். ஆனால் சிலரை நாம் இன்னும் மன்னித்திருக்கவில்லை என்றால், சில விஷயங்களை நாம் இன்னும் மன்னிக்கவில்லை என்றால், முழுமையான மன்னிப்பை நாம் தேவனிடமிருந்து கோர முடியாது. தேவனிடமிருந்து முழுமையான மன்னிப்பை நாம் பெறாதவரை, நம்முடைய ஜெபத்திற்கு நிறைய தடைகள் அங்கே காணப்படும்.
இந்த ஜெபத்தில், கடன்கள் மற்றும் கடனாளிகளைக் குறித்து இயேசு பேசுகிறார். ஆனால் ஒரு சில வசனங்கள் தள்ளி, அவர் இவ்வாறு சொல்கிறார். மத்தேயு 6:14-15 வசனங்களை நாம் வாசிப்போம்:
14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
ஆக, கடன்கள் என்று சொல்லும்போது, அது பண விஷயத்தின் கடன்களை மட்டும் சொல்லவில்லை. அதற்கும் அப்பாற்ப்பட்ட விஷயத்தை அது பேசுகிறது. நம் வாழ்க்கையில் நமக்கிருக்கும் பல்வேறு கடமைகள் மற்றும் பொறுப்புகளைக் குறித்து இது பேசுகிறது. ஒருவர் ஒன்றைச் செய்கிறேன் என்று நமக்கு உறுதி கொடுத்து விட்டு, பிறகு அவர் அதைச் செய்யத் தவறி, நாம் அவரை மன்னிக்கவில்லை என்றால், ஒருவர் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு விரோதமாக ஒன்றைச் செய்து விட்டார் என்பதற்காக, நாம் அவரை மன்னிக்கவில்லை என்றால், நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய குற்றங்களை மன்னிக்க மாட்டார். அப்பொழுது தெளிவான மனச்சாட்சியோடு அவர் முன் நம்மால் வர முடியாது. விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடு, நம் ஜெபத்திற்கான பதில்களைப் பெறும்படி நாம் வர முடியாது.
இப்பொழுது ஒன்றை நாம் கவனிப்போம். மன்னிக்க வேண்டிய பொறுப்பை தேவன் யார் மீது வைக்கிறார்? யார் தேவனிடம் ஜெபிக்கப் போகிறார்களோ, அவர்கள் மீதுதான் தேவன் இந்தப் பொறுப்பை வைக்கிறார். நீங்கள் ஒருவேளை சொல்லலாம், “நான் ஜெபிக்க விரும்புகிறேன். மற்றவர்கள் மீது எனக்குள் கோபம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் என்னிடம் வந்து, என்னிடம் மன்னிப்பு கேட்பார்கள் என்றால், நான் அவர்களை மன்னிப்பேன்.” ஆனால் அது அப்படி வேலை செய்வதில்லை. அவர்கள் உங்களிடம் வரவில்லை என்றாலும், நீங்கள் அவர்களை மன்னிக்க வேண்டும். உங்களுக்கு விரோதமாக அவர்கள் செய்த தவறை அவர்கள் உணரவில்லை என்றாலும், நீங்கள் அவர்களை மன்னிக்க வேண்டும். உங்களுடைய ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் மற்றவர்களை மன்னிக்க ஆரம்பிக்க வேண்டும்.
மாற்கு 11:25-ல் இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்.
25 நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
“யாரைக் குறித்தாவது உங்களுக்குள் கோபமும், மனக்கசப்பும் உண்டாயிருக்குமானால், நீங்கள் அவர்களை மன்னியுங்கள்,” என்று இயேசு சொல்கிறார். இது ஒருவரையும் விட்டு விடவில்லை. முழுமையாய் மன்னிக்க வேண்டிய பொறுப்பை அவர், ஜெபிக்கின்ற நபர் மீதுதான் வைக்கின்றார். ‘’நீங்கள் மன்னிப்பீர்கள் என்றால், உங்களுடைய பரலோகப்பிதாவும் உங்களை மன்னிப்பார். நீங்கள் மன்னிக்கவில்லை என்றால், உங்களுடைய பரலோகப் பிதாவும் உங்களை மன்னிக்கப்பட்டார்.”
இன்னொரு இடத்தில், ஒரு வேலைக்காரன் தன் எஜமானிடம் 10,000 தாலாந்து கடன் பட்டிருந்த ஒரு உவமையைக் குறித்து இயேசு சொல்கிறார். 10,000 தாலந்து என்பது கிட்டத்தட்ட 6 மில்லியன் டாலர்களுக்குச் சமமாக இருக்கிறது. அவனால் அதைச் செலுத்த முடியவில்லை. ஆகையால் அவன் அவன் தன் எஜமானிடம் இரக்கத்திற்காக மன்றாடினான். அவனுடைய எஜமானும், அவனுடைய முழுக் கடனையும் அவனுக்கு மன்னித்தான் (கேன்சல் செய்தான், தள்ளுபடி செய்தான்). ஆனால் அவன் வெளியே சென்றான். அவனிடம் கிட்டத்தட்ட 17 டாலர்கள் கடன் பட்ட தன்னுடைய சக வேலைக்காரனைச் சந்தித்தான். அந்தக் கடனை உடனடியாய் செலுத்தித் தீர்க்கும்படி அவன் அந்த சக வேலைக்காரனை நெருக்கினான். அவனுடைய சக வேலைக்காரன் அவனிடம் இரக்கத்திற்காக மன்றாடிய போதும், அவன் அவனுக்கு இரக்கம் காண்பிக்க மறுத்தான். அவன் அவனை சிறையில் அடைத்தான். இதைக் குறித்து அவனுடைய எஜமான் கேள்விப்பட்டபோது, மன்னியாத அந்த வேலைக்காரன் மீது அவன் கடும் கோபம் கொண்டான். “பொல்லாத வேலைக்காரனே,” என்று சொல்லி, அவன் அவனை சிறையில் அடைத்தான். “உன்னுடைய பெருங்கடனை செலுத்தித் தீர்க்கும்வரை நீ வெளியே வரக்கூடாது,” என்று சொன்னான். இது ஒரு உவமை. நாம் ஒவ்வொருவருமே தேவனுக்கு வானளாவிய அளவிற்கு கடன்பட்டிருக்கிறோம். அது ஆறு மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான, கணக்கிட முடியாத அளவிற்கு அதிகமான பெருங்கடனாக இருக்கிறது. ஆனால் இரக்கத்திற்காக தேவனிடம் நாம் மன்றாடும்போது, அவர் நம்மை மன்னிக்கிறார். ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில் அதைச் செய்கிறார். நாம் வெளியே சென்று, நம்முடைய சக ஊழியனை நாம் மன்னிக்க வேண்டும். நம்முடைய சக ஊழியன் நமக்குப் பட்ட கடனை நாம் மன்னிக்கவில்லை என்றால், நாம் தேவனுக்குப் பட்ட கடனை, அவர் நமக்கு மன்னிக்க மாட்டார். அவருக்கு அந்த உரிமை உண்டு. நமக்கு கடன் பட்டவர்களுடைய பத்திரங்களை நாம் கிழித்தெறிய வேண்டும். அதாவது நமக்கு எதிராக தவறிழைத்தவர்களை, துரோகம் செய்தவர்களை நாம் மன்னித்து விட வேண்டும்.
இந்த சத்தியத்தை நான் பிரசங்கித்தபோது, நிகழ்ந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகின்றது. நான் சொன்னேன், “நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கலாம். உங்களுடைய கணவர் உங்களுக்கு எதிராக நிறைய தவறுகளை, தீங்குகளைச் செய்திருக்கலாம். அவர் அதைக் குறித்து எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் இருக்கலாம். அதன் நிமித்தம், உங்களுக்குள் உண்டான மன வருத்தங்களில் நியாயம் இருக்கலாம். அவர் உங்களுக்குப் பட்ட கடன் பத்திரங்களையெல்லாம் நீங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள். ஆனால் தேவனுக்கு விரோதமாக நீங்கள் நிறைய காரியங்களைச் செய்திருக்கிறீர்கள். அதன் விவரங்களை தேவன் தன் கையில் வைத்திருக்கிறார். நீங்கள் தேவனுக்குப் பட்ட கடன்பத்திரங்களையெல்லாம் இப்பொழுது அவர் தன் கையில் வைத்திருக்கிறார். இப்பொழுது தேவன் சொல்கிறார், ‘உன்னுடைய கையிலிருக்கும் கடன் பத்திரங்களை கிழித்தெறிந்து விடு. நீ பட்ட கடன் பத்திரங்களை நான் கிழிந்தெறிந்து விடுகிறேன். நீ உன்னுடைய கையில் இருப்பதை இறுக்கமாய் பிடித்துக் கொள்வாய் என்றால், நான் என்னுடைய கையில் இருப்பதை இறுக்கமாய் பிடித்துக் கொள்வேன்.’” இவ்வாறு நான் பிரசங்கித்து முடித்தேன். அந்தச் செய்தியின் முடிவில், ஒரு பெண் என்னிடம் வந்தார். அவருடைய முகம் பிரகாசமாய் இருந்தது. அவருக்கு 30 வயதிருக்கும். அவர் நன்றாக உடை அணிந்திருந்தார். அவர் சொன்னார், “மிஸ்டர் பிரின்ஸ், நான் உங்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 30,000 டாலர்கள் மதிப்புள்ள கடன் பத்திரங்களை இப்பொழுதுதான் கிழித்துப் போட்டேன்.” அவருடைய முகம் அவ்வளவு பிரகாசமாயிருந்தது.
ஆகையால், இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேவனிடம் வந்து, பதில் பெறும் ஜெபத்தை வெற்றிகரமாகச் செய்ய வேண்டுமென்றால், முதலில், உங்களிடமிருக்கும் எல்லா கடன் பத்திரங்களையும் நீங்கள் கிழித்தெறிய வேண்டும். அதாவது, உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் எல்லோரையும் நீங்கள் முதலில் மன்னிக்க வேண்டும்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். வெற்றிகரமான ஜெபத்திற்கான அடுத்த முக்கியமான விஷயத்தைக் குறித்து நாளை பேசுவேன். அது பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதைக் குறித்ததாகும்.
குறியீடு: RP-R019-103-TAM









