ஒரு புதிய வாரத்தின் ஆரம்பத்தில் உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. வாழ்க்கை எனக்குப் போதித்திருக்கிற சத்தியங்களிலிருந்து உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன். இந்தச் சத்தியங்கள் என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வித்தியாசத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. இவை அதையே உங்களுக்கும் செய்யும். முதலில், எனக்கு எழுதி வருகிற உங்களில் ஒவ்வொருவருக்கும் “நன்றி” சொல்ல விரும்புகிறேன். இந்தச் செய்தியை முடிப்பதற்கு முன், நீங்கள் எங்களுக்கு எழுதக்கூடிய ஒரு அஞ்சல் முகவரியை உங்களுக்குக் கொடுப்போம். உங்களுடைய தனிப்பட்ட தேவைகள், பிரச்சனைகள், ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடந்த இரண்டு வாரங்களாக நம் அனைவருக்கும் மிகவும் நடைமுறை முக்கியத்துவமுள்ள “எவ்வாறு ஜெபித்து, ஜெபித்ததைப் பெற்றுக்கொள்வது” என்ற கருப்பொருளில் உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன். இந்த வாரமும் ஜெபம் குறித்த இந்தக் கருப்பொருளைத் தொடரப் போகிறேன். கடந்த வாரம் பகிர்ந்த சில சத்தியங்களின் மீது தொடர்ந்து கட்டப் போகிறேன். விசுவாச ஜெபத்தின் மூலம் உண்டாகக்கூடிய எல்லையில்லா சாத்தியக்கூறுகளைக் குறித்து இவ்வாரச் செய்திகளில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

இதைத் தொடங்கும் விதமாக, மூன்று முக்கியமான சத்தியங்களை உங்களுக்கு நான் நினைப்பூட்டுகிறேன். முதலில், தேவன் நம்மை தம்முடைய ராஜ்யத்தின் ஆசாரியர்களாக ஏற்படுத்தியிருக்கிறார். அந்த ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜெபத்தின் மூலம் ஆளுகை செய்ய வேண்டியது நம் பொறுப்பாயிருக்கிறது. இந்த உலகம், ராஜாக்களாலோ, அதிபர்களாலோ, சர்வாதிகாரிகளாலோ ஆளுகை செய்யப்படவில்லை என்று வேதாகமம் வெளிப்படுத்துகிறது. அவர்கள் ஆளுகை செய்வதுபோல தெரிகிறது. ஆனால் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதை அறிந்தவர்கள்தான் மெய்யாகவே இவ்வுலகத்தை ஆளுகை செய்கிறார்கள்.

இரண்டாவதாக, பதில் பெறத்தக்க விதத்தில், பலனுள்ளதாய் இருக்க வேண்டுமென்றால், நம்முடைய ஜெபங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் அதிகாரத்தை உடையதாய் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் உதவி இல்லாமல், பலனுள்ள விதத்தில் நம்மால் ஜெபிக்க முடியாது.

மூன்றாவதாக, தேவனுடைய ஆவியானவரும், தேவனுடைய வார்த்தையும் எப்பொழுதும் ஒன்றாய் இணைந்தே கிரியை செய்கின்றனர். நம்முடைய ஜெபங்கள், வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிற தேவனுடைய வார்த்தையோடு ஒத்திசைந்திருக்கும் போது மட்டுமே, பரிசுத்த ஆவியானவரின் வல்லமை, நம்முடைய ஜெபங்களின் மூலம் கிரியை செய்ய முடியும். பதில் பெறத்தக்க ஜெபத்தை பலனுள்ள விதத்தில் செய்ய வேண்டுமென்றால், வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

எலியாவை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். எலியாவைக் குறித்து, யாக்கோபு 5:17-18 வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதை நாம் கவனிப்போம்:

17 எலியா என்பவன் நம்மைப்போல பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதபடிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான். அப்பொழுது மூன்று வருஷமும், ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. 18 மறுபடியும் ஜெபம் பண்ணினான். அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது. பூமி தன் பலனைத் தந்தது.

நம்மைப்போல சுபாவமுள்ள ஒரு மனுஷன் வாழ்ந்து வந்தான். ஆனாலும் மூன்றரை வருடங்கள், அந்த மனுஷனாகிய எலியா, இஸ்ரவேல் தேசத்தின் மீது மழை பெய்யாதபடி கட்டுப்படுத்தினான். வழக்கமாக, மனுஷனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரு விஷயம் என்னவென்றால், அது மழையாகத்தான் இருக்கும். சர்வ வல்ல தேவன், மழையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று வேதவசனம் திரும்பத் திரும்பச் சுட்டிக் காண்பிக்கிறது. ஆனால் இஸ்ரவேலின் வரலாற்றில் இந்தத் தருணத்தில், எலியா மூன்றரை வருடங்களுக்கு மழையின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டான். எது அவனுடைய இரகசியம்? தேவனுடைய வார்த்தையின் சத்தியங்களை அவன் அறிந்து, அவற்றை உபயோகித்தான் என்பதுதான் அவனுடைய இரகசியமாய் இருந்தது. அவனுடைய ஜெபத்திற்கு அவ்வளவு வல்லமையும், பலனும் இருந்தது. காரணம், அவன் தன்னுடைய ஜெபத்தில், தேவனுடைய வார்த்தையின் சத்தியங்களைப் பயன்படுத்தினான்.

எலியாவின் ஜெபம், தேவனுடைய வார்த்தையின் எந்த சத்தியங்களின் மீது கட்டமைக்கப்பட்டிருந்தது என்பதை நாம் பார்ப்போம். உபாகமம் 11-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 16-17 வசனங்களை வாசிப்போம். இஸ்ரவேல் ஜனங்கள், தங்களுக்கு சுதந்தரமாகக் கொடுக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன், மோசே அவர்களை எச்சரிக்கிறார். அவர்கள் மற்ற பொய்யான தெய்வங்களையோ, விக்கிரகங்களையோ ஆராதிக்கக்கூடாது என்பதுதான் அந்த முக்கியமான எச்சரிக்கை. அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்றால், தேவன் வானங்களை அடைத்து விடுவார்; மழையே பெய்யாது என்று அவன் அவர்களை எச்சரிக்கிறான்.

அவர்கள் தேசத்திற்குள் நுழைவதற்கு முன், மோசே அவர்களிடம் இதைத்தான் சொல்கிறான்.

16 உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். 17 இல்லாவிடில், கர்த்தருடைய கோபம் உங்கள் மேல் மூண்டு, மழை பெய்யாமல் போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும், வானத்தை அடைத்துப் போடுவார். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்து போவீர்கள்.

இங்கு எழுதப்பட்டிருக்கிற எச்சரிக்கையைக் கவனியுங்கள். நீங்கள் மற்ற தெய்வங்களை ஆராதித்து, அவற்றைப் பின்பற்றுவீர்கள் என்றால், தேவன் வானங்களை அடைத்து விடுவார். அங்கு மழையே பெய்யாது. அதைத்தான் இஸ்ரவேல் ஜனங்கள் செய்திருந்தனர். அவர்கள் தேவனை விட்டு விலகி, மற்ற தெய்வங்களை ஆராதித்தனர். ஆகையால் தேவனுடைய வார்த்தைக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், எலியா வானங்களை அடைத்தான். அதினால் அங்கு மழையே பெய்யாமல் போனது. ஆனால் இஸ்ரவேல் தங்கள் பொல்லாத வழிகளை விட்டு விட்டு, மனந்திரும்பி தேவனிடம் திரும்பி வந்தபோது உண்டாகக்கூடிய இன்னொரு நன்மையைக் குறித்த இன்னொரு வாக்குத்தத்தம் தேவனுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருந்தது. எலியாவினால் அதை உரிமை பாராட்டி ஜெபிக்க முடிந்தது. சாலமோன் கட்டிய தேவாலயத்தின் பிரதிஷ்டையின்போது, சாலமோன் சொன்ன ஒரு காரியம் எழுதப்பட்டிருக்கிறது. 1 ராஜாக்கள் 8-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 35-36 வசனங்களை வாசிப்போம். சாலமோன் இவ்வாறு சொல்கிறான்:

35 அவர்கள் (அதாவது இஸ்ரவேல் ஜனங்கள்) உமக்கு விரோதமாய் பாவம் செய்ததினால் வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பம் செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கை பண்ணி, அவர்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் (அதாவது, அவர்களுடைய பாவத்தின் நிமித்தம் தேவரீர் அவர்களைச் சிட்சிக்கையில்) தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால், 36 பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்க வேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக.

ஆக, அப்படியே அதற்கு நேரெதிரான ஒரு பக்கமும் இருக்கிறது. தேவனுடைய ஜனங்கள் தங்களுடைய பொல்லாத வழிகளை விட்டு விட்டு, தேவனிடம் மனந்திரும்பி வரும்போது, அங்கே அவர்களுக்கு தேவனுடைய இரக்கம் கிடைக்கின்றது. தேவன் திரும்பவும் மழையை அனுப்புவார் என்று அவருடைய வார்த்தை அறிவிக்கின்றது. ஆக, இஸ்ரவேல் ஜனங்கள் தேவனிடம் மனந்திரும்பி வருகின்றார்கள் என்பதற்கு அங்கே ஆதாரம் இருக்கும்போது, தேசத்தின் மீது திரும்பவும் தேவன் மழையை அனுப்புவார் என்று தேவனுடைய வார்த்தையில் எழுதப்பட்டிருக்கிற வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் ஜெபிப்பதற்கு எலியாவிற்கு உரிமை இருந்தது. எலியாவின் ஜெபம், நேரடியாக வேதவசனத்தில் தெளிவாய் எழுதப்பட்டிருக்கிற வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் அமைந்திருந்தபடியால், அவனுடைய ஜெபத்திற்கு அங்கே பலன் உண்டானது. இந்த இரகசியத்தை நாம் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிற வேதவசனங்கள் மற்றும் வாக்குத்தத்தங்களோடு நம் ஜெபம் ஒத்திசைந்திருக்கும் என்றால், நிச்சயம் அது பலனுள்ளதாய் இருக்கும். இதுதான் இரகசியம்.

கடந்த வாரத்தில் நான் சொன்ன காரியம், நினைவிலிருக்கிறதா? சங்கீதம் 33:6-ஐ திரும்பவும் வாசிப்போம்:

6 கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் (ஆவியானவரால்) அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

வேறு வார்த்தைகளில், சிருஷ்டிக்கப்பட்ட இந்த முழு பிரபஞ்சமும், இரண்டு காரியங்கள் ஒன்றாய் இணைந்து வேலை செய்ததினால் உருவாக்கப்பட்டது என்று சொல்லலாம். கர்த்தருடைய ஆவியானவரும், கர்த்தருடைய வார்த்தையும் இணைந்துதான் சகலத்தையும் சிருஷ்டித்தனர். தேவனுடைய வார்த்தையும், தேவனுடைய ஆவியானவரும் ஒன்றாய் இணைந்து வேலை செய்யும்போது, அவருடைய சிருஷ்டிப்பின் வல்லமையும், அவருடைய திறனும் அதில் வெளிப்படுகின்றது. இது நம் ஜெபத்திற்கும் பொருந்துகிறது. நம்முடைய ஜெபங்களில், தேவனுடைய வார்த்தையும், தேவனுடைய ஆவியானவரும் ஒன்றாய் இணைந்து கிரியை செய்யும்போது, இந்தப் பிரபஞ்சத்தையே சிருஷ்டித்த அதே வல்லமை நம் மூலமாய் பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடுகிறது. நான் இதை திரும்பவும் சொல்கிறேன். நீங்கள் இதை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நம் ஜெபங்களில் தேவனுடைய வார்த்தையும், தேவனுடைய ஆவியானவரும் ஒன்றாய் இணைந்து கிரியை செய்யும்போது, இந்தப் பிரபஞ்சத்தையே சிருஷ்டித்த அதே வல்லமை நம் மூலமாய் பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடுகிறது.

ஜெபத்திற்கு இருக்கும் வல்லமையைக் குறித்த ஒரு எடுத்துக்காட்டை புதிய ஏற்பாட்டிலிருந்து நான் எடுத்துக் காண்பிக்க விரும்புகிறேன். இப்பொழுது நான் காண்பிக்கப் போகிற எடுத்துக்காட்டு, ஒரு தனிநபரின் ஜெபம் அல்ல. இது எருசலேமில் சபையோர் எல்லோரும் சேர்ந்து ஏறெடுத்த ஜெபமாயிருக்கிறது. இதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில், ஒரு தனி நபரின் ஜெபத்தின் மூலம் தேவன் கிரியை செய்ய மாட்டார். அர்ப்பணிப்பின் இருதயமுள்ள விசுவாசிகள் எல்லோரும் ஒன்றுகூடி ஏகமனதாய் ஜெபிக்கிற ஜெபம் அவசியமாயிருக்கிறது. இந்தச் சம்பவத்தைத்தான் அப்போஸ்தலர் நடபடிகள் 12-ல் நாம் வாசிக்கின்றோம். அந்தப் பகுதியில் ஏரோது அரசாட்சி செய்தான். அவன் யாக்கோபைக் கொலை செய்திருந்தான். பிறகு அவன் பேதுருவையும் சிறைச்சாலையில் அடைத்திருந்தான். அவன் பேதுருவையும் கொல்லும்படி திட்டமிட்டிருந்தான். ஆனால் அவன் பஸ்கா பண்டிகை முடியும்வரை காத்திருந்தான். இதைக் குறித்துதான் அப்போஸ்தலர் நடபடிகள் 12:1-11 வசனங்கள் நம்மிடம் பேசுகின்றன. நாம் அதை வாசிப்போம்:

1 அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி, 2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலை செய்தான். 3 அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறது என்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத் தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப் பண்டிகை நாட்களாயிருந்தது. 4 அவனைப் பிடித்து சிறைச்சாலையிலே வைத்து, பஸ்கா பண்டிகைக்குப் பின்பு, ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியிலே கொண்டு வரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான். [இதைத்தான் உச்சகட்ட பாதுகாப்பை உடைய சிறைச்சாலை என்று நாம் அழைக்கிறோம். நான்கு போர்வீரர்களைக் கொண்ட நான்கு குழுவினர் ஒரு நபரை அந்த உட்காவலறையில் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.] 5 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில், சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்கள். [சபையார் அவனுக்காக ஊக்கமாய் ஜெபித்தார்கள் என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். அவர்களுடைய இந்தச் செயல்தான், அந்தச் சூழ்நிலையையே மாற்றிப் போட்டது.] 6 ஏரோது அவனை வெளியே கொண்டு வரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக் கொண்டிருந்தான். காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக் கொண்டிருந்தார்கள். 7 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான். அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது. 8 தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக் கொண்டு, என் பின்னே வா என்றான். 9 அந்தப்படியே அவன் புறப்பட்டு, அவனுக்குப் பின் சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய் என்று அறியாமல், தான் ஒரு தரிசனம் காண்கிறதாக நினைத்தான். 10 அவர்கள் முதலாங்காவலையும், இரண்டாம் காவலையும் கடந்து, நகரத்திற்குப் போகிற இருப்புக் கதவண்டையிலே வந்தபோது, அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது. அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு, ஒரு வீதி நெடுக நடந்து போனார்கள். உடனே தூதன் அவனை விட்டுப் போய் விட்டான். 11 பேதுருவுக்கு தெளிவு வந்தபோது, ஏரோதின் கைக்கும், யூத ஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்கு கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.

ஆக, இங்கே பாருங்கள், சபையார் எல்லோரும் ஒன்றுகூடி, ஏகமனதாய் ஜெபித்தபோது, அது தேவனிடமிருந்து ஒரு தூதன் வந்து அந்தச் சூழ்நிலையில் இடைபட்டு, பேதுருவை சிறைச்சாலையிலிருந்து விடுதலையாக்கும்படி வழியைத் திறந்து விட்டது. தூதர்கள் செய்யும் ஊழியத்தைக் குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். எபிரெயர் 1:14-ல், இது நமக்கு விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது:

14 இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களின் நிமித்தமாக ஊழியம் செய்யும்படி அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

இது ஒரு வல்லமையான சத்தியமாக இருக்கிறது. தூதர்கள், இரட்சிப்பின் சுதந்தரவாளிகளாகிய நமக்கு பணியாட்களாக இருக்கின்றனர். ஆனால் ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய ஜெபங்கள்தான், தூதர்களின் தலையீட்டைக் கொண்டு வருகின்றன. ஆனால் சம்பவம் இதோடு முடியவில்லை. அப்போஸ்தலர் நடபடிகள் 12-ம் அதிகாரத்தின் முடிவில், நாம் இதை வாசிக்கிறோம்:

21 குறித்த நாளிலே ஏரோது ராஜ வஸ்திரம் தரித்துக் கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம் பண்ணினான். 22 அப்பொழுது ஜனங்கள் இது மனுஷ சத்தமல்ல, இது தேவ சத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். 23 அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால், உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுப்புழுத்து இறந்தான். 24 தேவ வசனம் வளர்ந்து பெருகிற்று.

சபையோரின் ஜெபம் உண்டாக்கின இன்னொரு வல்லமையான விளைவைப் பாருங்கள். தேவனுடைய வார்த்தையையும், அவருடைய நோக்கத்தையும் எதிர்த்து நிற்கிற ஒவ்வொன்றும் அடித்து வீழ்த்தப்பட்டன. ஏரோதின் மரணம், மிகவும் பரிதாபமான விதத்தில் நிகழ்ந்தது. அது வலி வேதனை நிறைந்த, அவமானமான மரணமாக இருந்தது. அவன் ஒரு தூதனால் அடிக்கப்பட்டான். ஏரோதின் ஆட்சிக் காலத்தை, ஒரு தூதன் தலையிட்டு, ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தான். எது தூதனுடைய தலையீட்டைக் கொண்டு வந்தது? சபையின் ஜெபம்தான்.

இந்தச் சம்பவத்தின் வெளிச்சத்தில், இப்பொழுது ஒரு கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம்: யார் ஆளுகை செய்கிறார்கள்? ஏரோதா அல்லது சபையா? பதில் இதுதான்; ஏரோது சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தான். ஆனால் சபைதான் ஜெபத்தின் மூலம் ஆளுகை செய்தது.

இன்றைக்கும் அப்படிப்பட்ட ஒரு காரியம் நடக்க முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நம்முடைய சுயநலம் நிறைந்த வாழ்க்கைமுறைதான், கிறிஸ்தவர்களாகிய நம்மில் பெரும்பாலானோருக்கு பெரிய பிரச்சனையாயிருக்கிறது. சராசரி சபை விசுவாசி ஒருவர் வழக்கமாக இப்படித்தான் ஜெபிக்கிறார், “தேவனே, என்னை, என் மனைவியை, என் மகன் ஜானை, அவனுடைய மனைவியை ஆசீர்வதியும். வேறொன்றும் வேண்டாம். ஆமென்.” இந்த ஜெபம், நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிற இப்படிப்பட்ட பலன்களை உண்டாக்கப் போவதில்லை.

நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன்: உங்களுடைய எல்லைகளை விரிவடையச் செய்யும்படி, தேவனுக்கு இடம் கொடுப்பீர்களா? சிந்தியுங்கள். இதோடு இந்தச் செய்தியை முடிக்கின்றேன். “தேவனுடைய வார்த்தையின்படி ஜெபியுங்கள்,” என்ற தலைப்பில், இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களிலும் சத்தியங்களை தொடர்ந்து கற்றுக் கொள்வோம்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். தேவனுடைய வார்த்தை நம் மீது வைத்திருக்கிற, ஆனால் பல கிறிஸ்தவர்கள் கவனிக்காமல் விடுகிற ஒரு கடமையைக் குறித்து நாளை பேசுவேன்: “நம்முடைய அரசாங்கத்திற்காக ஜெபிக்க வேண்டிய கடமை.”

லைக்
பகிரவும்