செய்தி 3: ஜெபத்தினால் வரலாறே மாற்றப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன் திரும்பவும் உங்களோடு இருப்பதை நன்றாக உணருகிறேன். நம்முடைய அரசாங்கத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்று நமக்கிருக்கும் பொறுப்பைக் குறித்து நேற்றைய செய்தியில் நான் பேசினேன். நல்ல அரசாங்கம், தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்பதைக் குறித்து நான் விளக்கிச் சொன்னேன். காரணம், நல்ல அரசாங்கம், சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு தடையாயிருக்காது. மாறாக, அதற்கான வழிவாய்ப்புகளை ஏற்படுத்தி, இலகுவாக்கிக் கொடுக்கும். சுவிசேஷம் அறிவிக்கப்படுவதுதான், இவ்வுலகத்தைக் குறித்த தேவனுடைய பிரதானமான நோக்கமாயிருக்கிறது. ஒரு நல்ல அரசாங்கம் நமக்கு தானாகவே அமைந்து விடாது. ஆகையால் நாம் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் காத்துக் கொண்டிருக்கிறார்! நம்முடைய ஜெபங்கள், எந்த அரசாங்கத்தின் கீழ் நாம் வாழ்கின்றோமோ, அதன் மீது வல்லமையான தாக்கத்தை உண்டாக்குகின்றன. ஆனால் இதை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டதில்லை. அவர்கள் இதன் வல்லமையை அனுபவப்பூர்வமாகக் கண்டதுமில்லை.

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இன்றைய செய்தியில் நான் பேசப் போகிறேன். ஜெபத்தினால் வரலாறே மாற்றப்பட்டதை நானே தனிப்பட்ட விதத்தில் பார்த்திருக்கிறேன். அதைத்தான் இன்று நான் பேசப் போகிறேன்.

என்னுடைய முதல் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்படி, என்னுடைய கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்ப வருடங்களுக்கு நான் திரும்பிச் செல்கிறேன். 1940-ம் வருடம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பேராசியராக இருந்த நான், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் அந்தச் சமயத்தில், பிரிட்டிஷ் இராணுவத்திற்குள் சேர்க்கப்பட்டேன். 1941-ம் வருடம், ஜீலை மாதம், இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் அறையில், கர்த்தரோடு தனிப்பட்ட விதத்தில் ஒரு நேரடிச் சந்திப்பு எனக்கு உண்டானது. அதன் விவரங்களுக்குள் இப்பொழுது என்னால் செல்ல முடியாது. ஆனால் அது என் வாழ்க்கையை முற்றிலும் உருமாற்றியது. அது என் வாழ்க்கையின் ஓட்டத்தையே மாற்றியது. அந்த வருடத்தின் பின் பகுதியில், எங்களுடைய யூனிட்டைச் சேர்ந்தவர்கள் வடக்கு ஆப்பிரிக்காவிற்கு அனுப்பப்பட்டோம். வடக்கு ஆப்பிரிக்காவில், பிரிட்டிஷ் இராணுவத்தில், ஒரு மருத்துவ பணியாளராக நான் பணிபுரிந்தேன். பிரிட்டிஷ் ராணுவத்தின் வரலாற்றில், மிகவும் நீளமான தூரத்திற்கு பின் வாங்கும் நடவடிக்கையில் பங்கு பெறும் அனுபவம் எனக்குக் கிடைத்தது. இதை விசேஷமான வாய்ப்பு என்று சொல்வதா என்று எனக்குத் தெரியவில்லை. லிபியாவின் அலகாலா என்ற இடத்திலிருந்து கெய்ரோவின் நுழைவாயில் வரை, 700 மைல்களுக்கும் அதிகமான தொலைவிற்கு தொடர்ச்சியாய் இந்தப் பின் வாங்கும் நடவடிக்கை இருந்தது. ஒன்றை நான் சொல்கிறேன். கொடூரமான இந்தப் பாலைவனத்தில் 700 மைல்கள் தொடர்ந்து இந்தப் பின் வாங்கும் நடவடிக்கையில் செய்த பிரயாணம், என்னை மிகவும் களைப்படையச் செய்தது. அது என்னை மனச்சோர்வுக்குள்ளாக்கியது. அப்படிப்பட்ட ஒரு அனுபவமாகத்தான் அது இருந்தது.

அந்த நேரத்தில், மத்திய கிழக்கு நாடுகளின் நிலை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. ஜெர்மனி நாசிகளின் கூட்டுப்படையினர் (ஆக்சிஸ் ராணுவப்படைகள்) தொடர்ந்து முன்னேறிச் சென்று, கெய்ரோவைக் கைப்பற்றியிருப்பார்கள் என்றால், அவர்கள் சூயஸ் கால்வாயை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பார்கள். அதன் மூலம், பிரிட்டிஸ் பேரரசின் மிக முக்கியமான போக்குவரத்துப் பாதையை அவர்கள் துண்டித்திருப்பார்கள். கடைசியில், இஸ்ரவேல் தேசமும், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளங்கள் முழுவதும், அவர்களுடைய கண்ணசைவின் கீழ் வந்திருக்கும். ஆக, அது ஒரு இக்கட்டான ஒரு நேரமாயிருந்தது.

இந்தப் பின் வாங்கும் நடவடிக்கைக்கு நிச்சயமாக பல காரணங்கள் உண்டு. என்னால் அவற்றையெல்லாம் விரிவாக அலசி ஆராய முடியவில்லை. ஆனால் அதிகாரிகளுக்கு, அவர்களின் கீழ் செயல்படும் போர்வீரர்கள் மீது நம்பிக்கையில்லை என்பதுதான் எனக்கு முக்கியமான ஒரு காரணமாகத் தெரிந்தது. ஒழுக்கம் என்பது மிகவும் மோசமான ஒரு நிலையில் இருந்தது. தகவல்பரிமாற்றமும் மோசமாகத்தான் இருந்தது. அதிகாரிகள் தங்களுடைய தனிப்பட்ட சௌகரியங்களைக் குறித்துதான் அதிக அக்கறையுள்ளவர்களாய் இருந்தனர். நாங்கள் அதைத்தான் பார்த்தோம். அதிகாரிகள், தங்களின் கீழ் செயல்படும் போர்வீரர்களின் தேவைகளைக் காட்டிலும், தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். யுத்தத்தை மேற்கொண்டு ஜெயிக்க வேண்டும் என்பதற்குக்கூட அவர்கள் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை.

எடுத்துக்காட்டிற்கு, தண்ணீர் அங்கே ஒரு பெரும்பிரச்சனையாக இருந்தது. மோசமான தண்ணீர் பற்றாக்குறையை நாங்கள் எதிர்கொண்டோம். அளந்து அளந்துதான் தண்ணீர் கொடுக்கப்பட்டது. ஒரு இராணுவ வீரருக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு மிலிட்டரி தண்ணீர் பாட்டில்தான் கொடுக்கப்பட்டது. அவருடைய எல்லாத் தேவைகளுக்கும், துவைப்பதற்கு, சமைப்பதற்கு, குடிப்பதற்கு என எல்லாவற்றிற்கும் அந்த அளவு தண்ணீரைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். ஆனாலும் ஒன்றை எங்களால் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது. இவ்வளவு தண்ணீர் பற்றாக்குறையுடன் நாங்கள் அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், அதிகாரிகள் தங்களுடைய விஸ்கியோடு கலந்து குடிப்பதற்கு, மற்ற எல்லாவற்றிற்கும் நாங்கள் பயன்படுத்தின அளவை விட அதிகமான அளவு தண்ணீரை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தினார்கள். இதை எங்களால் நேரடியாகப் பார்க்க முடிந்தது. அது அதிகாரிகளுக்கும், அவர்களின் கீழே வேலை பார்த்தவர்களுக்கும் இடையே ஒரு நல்ல உறவை உருவாக்கி விடவில்லை என்பதுதான் உண்மை.

அப்பொழுது ஒரு கிறிஸ்தவனாய், கர்த்தராகிய இயேசுவை அறிந்திருந்தேன். அவரோடு ஒரு நிச்சயமான உறவு எனக்கு இருந்தது. நான் வேதாகமத்தை விசுவாசித்தேன். எனவே அந்தச் சூழ்நிலையில் நான் ஜெபிக்க வேண்டும் என்ற அவசியத்தை நான் உணர்ந்தேன். ஆனால் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆகையால் தேவனே எனக்கு ஒரு ஜெபத்தைக் கொடுக்கும்படி நான் காத்திருந்தேன். அதாவது அவர் விரும்புகிற விதத்தில் ஜெபிக்க வேண்டும் என்று நான் காத்திருந்தேன். சில நாட்களுக்குப் பிறகு, தேவன் இந்த ஜெபத்தை குறிப்பாக எனக்குக் கொடுத்தார்: “கர்த்தாவே, நல்ல வெற்றியைக் கொடுக்கக்கூடிய நல்ல தலைவர்களை எங்களுக்குத் தாரும். அதன் மூலம் உம்முடைய நாமம் மகிமைப்படட்டும்.” நான் இந்த ஜெபத்தை ஜெபிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் நான் இந்த ஜெபத்தை ஒழுங்காகச் செய்தேன். என்ன நடந்து கொண்டிருந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவன் துரிதமாய், தீவிரமாய் கிரியை செய்ய ஆரம்பித்தார். பிரிட்டிஷ் அரசாங்கம், வட ஆப்பிரிக்காவில் மத்திய கிழக்குப் படையிலிருந்த அவர்களுடைய இராணுவத்திற்கு ஒரு புதிய தளபதியை நியமித்தனர். பொறுப்பேற்கும்படி இவர் கெய்ரோவிற்குச் சென்றபோது, இவர் சென்ற விமானம் தரையிறங்கும் நேரத்தில், விபத்துக்குள்ளாகி, இவர் கொல்லப்பட்டார். ஆகையால் யுத்தத்தின் மிகவும் இக்கட்டான ஒரு நேரத்தில், பிரிட்டிஷ் இராணுவத்தை வழி நடத்த ஒரு தளபதி இல்லாத நிலை உருவானது.

அந்தச் சூழ்நிலையில், அப்பொழுது பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் உடனடியாக செயல்பட்டு, ஒரு அதிகாரியை நியமித்தார். அவர் பிரிட்டனிலிருந்து புறப்பட்டு வந்தார். அவருடைய பெயர் பெர்னார்ட் மான்ட்கோமெரி. நான் அவரை கவனித்ததன் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். மான்ட்கோமெரி, தேவபயமுள்ள, அர்ப்பணிப்புள்ள ஒரு கிறிஸ்தவர். அவர் ஒரு நல்ல ஒழுக்கமுள்ள மனுஷன். அவர் மிகவும் சிறப்பான விதத்தில் தளபதியாக செயல்படக்கூடியவர். நல்ல அனுபவமுள்ளவர். பிரிட்டிஷ் படைகளை ஒருங்கிணைக்கும் வேலையில் அவர் இறங்கினார். அவர் திரும்பவும் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் உள்ளே கொண்டு வந்தார். அதிகாரிகளின் பொறுப்புணர்வை, மனப்பான்மையை, நடத்தையை ஒரு ஒழுங்குக்குள் அவர் கொண்டு வந்தார். அப்பொழுது நன்கு அறியப்பட்ட எல்-அலாமெயின் என்ற யுத்தம் நடந்தது. அந்த யுத்தத்திலேயே கூட்டுப்படையின் முதல் முக்கியமான வெற்றியாய் அது இருந்தது. அது வடக்கு ஆப்பிரிக்காவில் யுத்தத்தின் போக்கையே கூட்டுப்படைகளுக்கு சாதகமாக திருப்பி விட்டது. அதுதான் எல்-அலாமெயின் யுத்தமாகும்.

நான் அந்த நேரத்தில் அந்தப் பாலைவனத்தில் ஒரு மிலிட்டரி ஆம்புலன்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அது முன்னேறிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் படைகளுக்குக் கொஞ்சம் தள்ளி பின்னால் சென்று கொண்டிருந்தது. ட்ரக்கின் பின் பகுதியில், ஒரு ரேடியோ இருந்தது. எல் அலாமெயின் யுத்தத்திற்கு முன்பு மான்ட்கோமெரியின் தலைமையகத்தில் நடந்த ஆயத்தங்களைக் குறித்து செய்தி வாசிப்பாளர் சொல்லிக் கொண்டிருந்தார். மான்ட்கோமெரி வெளியே வந்து, அதிகாரிகளையும், யுத்த வீரர்களையும் கூடி வரச் செய்து, “நமக்கு வெற்றியைக் கொடுக்கும்படி, யுத்தத்தில் வல்லவரான நம் கர்த்தரிடம் ஜெபிப்போம். வாருங்கள்,” என்று சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் நான் அந்தச் செய்தியில் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த வார்த்தைகளையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தபோது, பரலோகத்தின் மின்சாரம் இறங்கி, என் தலையைத் தொட்டு, என் பாதம் வரை பரவிப் பாய்ந்தோடியதை நான் உணர்ந்தேன். அப்பொழுது தேவன் மெல்லிய சத்தத்தில், ஆனால் உறுதியாக என்னுடைய ஆவியில் இவ்வாறு சொன்னார், “இதுதான் உன் ஜெபத்திற்கான பதில்.”

ஆக, ஜெபத்தினால் வரலாற்றின் போக்கையே மாற்றி விட முடியும் என்பதை என்னுடைய கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்பத்திலே நான் கற்றுக் கொண்டேன். இது வேதவசனத்திற்கு ஒத்திருக்கிறது. எடுத்துக்காட்டிற்கு, சங்கீதம் 75:6-7 வசனங்களில், சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறான். நாம் வாசிப்போம்:

6 கிழக்கிலும், மேற்கிலும் வனாந்திர திசையிலுமிருந்து ஜெயம் வராது. [அல்லது உயர்வு வராது. “வனாந்திர திசையிலிருந்து வராது” என்ற வார்த்தைகளை முக்கியமாகக் கவனியுங்கள். இது என் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமானதாய் இருந்தது. பிறகு இது தொடர்ந்து சொல்கிறது:] 7 தேவனே நியாயாதிபதி. ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.

அதுதான் அப்படியே அந்தச் சூழ்நிலையில் நடந்தது. மனிதத் தலைவர்கள், ஒரு படைத்தளபதியைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் தேவன் அந்த நபரைக் கீழே இறக்கி, இன்னொரு மனுஷனை உயர்த்தினார். தேவன் உயர்த்தின இந்த மனுஷன், தேவனுக்கு மகிமையைக் கொடுக்கிறவராய் இருந்தார். ஆகையால் ஒரு நல்ல தலைமைக்காக ஜெபிக்கும்போது, அதற்கு நிச்சயம் பலனுண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வரலாற்றையே மாற்றின ஜெபத்திற்கு இரண்டாவது எடுத்துக்காட்டையும் நான் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். இது 1960-ம் வருடம் நிகழ்ந்தது. கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா தேசத்தில், ஆப்பிரிக்க மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் கல்விப் பணியில் நான் ஈடுபட்டிருந்தபோது இது நிகழ்ந்தது. அந்த நேரத்தில், அடுத்த இரண்டு வருடங்களுக்குள், கென்யா, பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து சுதந்தரமடையப் போகும் சூழ்நிலையிலிருந்தது. அப்பொழுது கென்யா தேசம் பயங்கரமான அரசியல் நெருக்கடியின் வழியாக கடந்து சென்று கொண்டிருந்தது. மாவ் மாவ் எமர்ஜென்சி தேசத்தை இரண்டாகக் கிழித்தது. கறுப்பர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் இடையே மட்டுமல்ல, ஆப்பிரிக்காவின் பல்வேறு இனத்தவர்களுக்கிடையேயும் அது பகைமையையும், நம்பிக்கையின்மையையும் உருவாக்கியது. அந்த நேரத்தில்தான், மேற்கேயிருந்த பெல்ஜியன் காங்கோ, பெல்ஜியத்திடமிருந்து சுதந்திரம் பெற்றது. உடனே அங்கு மிகவும் மோசமான உள்நாட்டு யுத்தம் நடந்தது. பெல்ஜியன் காங்கோவைக் காட்டிலும் மோசமான ஒரு சூழ்நிலைதான் கென்யாவிலும் உருவாகும் என்று அரசிய நிபுணர்கள் எல்லோரும் முன் கூட்டியே கணித்தனர்.

அந்த வருடம், ஆகஸ்ட் மாதம், ஆப்பிரிக்க வாலிபர்களுக்காக நடந்த வேதாகமக் கருத்தரங்கில், நானும் பிரசங்கித்தேன். அந்தக் கருத்தரங்கு ஒரு வாரம் நடந்தது. கடைசி நாள் இரவும் வந்தது. அப்பொழுது தேவனுடைய ஆவியானவர் சர்வ வல்லமையுள்ளவராய், முற்றிலும் தனித்தன்மையுள்ள விதத்தில் அங்கு வந்திறங்கினார். ஒரு குறிப்பிட்ட தருணத்தில், சர்வ வல்ல தேவனோடு எல்லா விதத்திலும் நேரடியாக நாங்கள் இணைக்கப்பட்டதைப்போல உணர்ந்தேன். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்பதையும் நான் உணர்ந்தேன். ஆகையால் நான் மேடை ஏறிச் சென்று, ஜெபித்துக் கொண்டிருந்த வாலிபர்களை அமைதிப்படுத்தினேன். அவர்களுடைய தேசத்தின் எதிர்காலத்திற்காக ஜெபிக்கும்படி நான் அவர்களுக்கு சவால் விட்டேன். தங்களுடைய அரசாங்கத்திற்காக ஜெபிக்க வேண்டிய பொறுப்பு கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது என்பதை நான் அவர்களிடம் சுட்டிக் காண்பித்தேன். இப்பொழுது அவர்களுடைய தேசம் பயங்கர இக்கட்டான சூழ்நிலையை, நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னேன். அவர்களுடைய ஜெபங்கள் மட்டுமே அவர்களுடைய தேசத்தை இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்றும் அவர்களிடம் சொன்னேன்.

அவர்கள் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு ஒருமனப்பட்டு ஜெபித்தனர். அங்கே 300 வாலிபர்கள் அவ்வாறு ஜெபித்தனர். அவர்கள் தேவனை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஜெபித்தனர். அதுவரை எனக்குக் கிடைத்த மிகவும் வல்லமையான அனுபவங்களில் இதுவும் ஒன்றாயிருந்தது. பிறகு அவர்கள் அமைதியானார்கள். அப்பொழுது மேடையில் எனக்கு பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த ஆப்பிரிக்க வாலிபன் தன்னுடைய சக ஆப்பிரிக்க வாலிபர்களிடம் மெல்லிய சத்தத்தில் பேசினான். அவன் சொன்னான், “இங்கு நாம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது. நான் ஒரு தரிசனத்தைப் பார்த்தேன். அதை நான் உங்களிடத்தில் சொல்ல விரும்புகிறேன். சிவப்புக் குதிரையில் ஒரு மனுஷன் வருவதை நான் அதில் பார்த்தேன். அந்தக் குதிரை பார்ப்பதற்கே பயங்கரமாக, கொடூரமானதாக இருந்தது. அது கிழக்கேயிருந்து கென்யாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதற்குப் பின்னால், இன்னும் பல சிவப்புக் குதிரைகளும் வந்து கொண்டிருந்தன. அவைகளும் பார்ப்பதற்கு பயங்கரமானவைகளாக, கொடூரமானவைகளாக இருந்தன. ஆனால் நாம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, அந்தச் சிவப்புக் குதிரைகளெல்லாம் அப்படியே திரும்பி, கென்யாவை விட்டு விலகி, வடக்கு திசையை நோக்கிச் சென்று விட்டன.” பிறகு அவன் தொடர்ந்து இவ்வாறு சொன்னான், “நான் இதை தியானித்துக் கொண்டிருந்தபோது, தேவன் என்னிடம் இவ்வாறு சொன்னார்: ‘என் ஜனங்களுடைய ஜெபத்தின் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமைதான், கென்யாவிற்கு எதிராக வந்து கொண்டிருந்த இந்தப் பயங்கரங்களை வழி விலகி ஓடச் செய்தது.’” தேவன் சொன்ன இந்த வார்த்தைகளை நான் திரும்பவும் சொல்கிறேன். “என் ஜனங்களுடைய ஜெபத்தின் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமைதான், கென்யாவிற்கு எதிராக வந்து கொண்டிருந்த இந்தப் பயங்கரங்களை வழி விலகி ஓடச் செய்தது.”

அதைத் தொடர்ந்த வருடங்களில் நிகழ்ந்த வரலாற்றின் விவரங்களுக்குள் இப்பொழுது என்னால் செல்ல முடியாது. ஆனால் அந்த ஆப்பிரிக்க வாலிபனுக்குக் கொடுக்கப்பட்ட தரிசனம் அப்படியே நிறைவேறியது என்பதை நான் நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும். மூன்று, நான்கு வருடங்களுக்குப் பிறகு, கிழக்கிலிருந்து மிகவும் தீவிரமான கம்யூனிசம் வந்து, கென்யாவிற்குள் நுழைந்து, அந்த தேசத்தை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சித்தது. ஆனால் கென்யாவின் முதல் அதிபராகிய ஜோமோ கென்யாட்டா என்பவர் ஞானமாய் திட்டமிட்டு எடுத்த நடவடிக்கையினால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட்களால் கென்யாவில் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. அவர்கள் வடக்கு நோக்கிச் சென்று, சோமாலியாவை ஆக்கிரமித்தனர். அது அடிப்படையில் ஆயுதம் ஏந்திய கம்யூனிஸ்ட்களின் ஒரு கூடாரமாகவே மாறி விட்டது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பிறகு, அன்றிலிருந்து இன்றுவரை, புதிதாய் தோன்றிய 50 ஆப்பிரிக்க தேசங்களைக் காட்டிலும், அதிக ஸ்திரத்தன்மையும் வளர்ச்சியும் உடைய ஒரு தேசமாக கென்யா எழுந்து நிற்கின்றது. ஆனால் இது அரசியல் நிபுணர்களின் கணிப்புப்படி நடக்கவில்லை. இது நிச்சயமாக ஜெபத்தினால் மட்டுமே நிகழ்ந்தது. நெருக்கடியான ஒரு நேரத்தில், தேசத்தின் எதிர்காலத்திற்காக, விசுவாசிகள் சபையோராய் ஒன்றுகூடி, ஒருமனப்பட்டு, ஏகசிந்தையோடும் விசுவாசத்தோடும் ஏறெடுத்த ஜெபத்தினால்தான் இது நிகழ்ந்தது.

இந்த செய்தியை முடிக்கின்ற இந்த நேரத்தில், ஒரு கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இது பொருந்துமா? கென்யாவைக் குறித்து 1960-ல், அந்த ஆப்பிரிக்க வாலிபனிடம் தேவன் என்ன சொன்னாரோ, அது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் நடக்குமா? “என் ஜனங்களுடைய ஜெபத்திற்கு இருக்கும் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமைதான், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராக வந்து கொண்டிருக்கிற பயங்கரங்களை வழி விலகி ஓடச் செய்யும்,” என்று தேவன் சொல்கிறார்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை “ஜெபத்தினால் ஆளுகை செய்தல்” என்ற இந்தக் கருப்பொருளைத் தொடர்ந்து பேசுவேன். “நமது தேசத்தின் சுகமாக்குதல்” என்பதற்கான தேவனுடைய ஏற்பாட்டை விளக்குவேன்.

லைக்
பகிரவும்