பரிசுத்த ஆவியானவர் நமது உதவியாளர்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 11
டெரெக் பிரின்ஸின் 'நமது சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ளுதல்' தொடரின் 6-ஆம் பகுதியான 'பரிசுத்த ஆவியானவர்: நமது துணையாளர்' மூலம் பரிசுத்த ஆவியானவரின் உருமாற்றும் வல்லமையைக் கண்டறியுங்கள். சிலுவையில் இயேசுவின் தியாகம் நம்மைச் சாபங்களிலிருந்து விடுவித்து, நமது ஆவிக்குரிய, சரீர மற்றும் உலகப்பிரகாரமான வாழ்விற்கு ஆசீர்வாதங்களைத் திறப்பதை இதில் அறிந்துகொள்ளலாம். விசுவாசத்தின் மூலம் உங்கள் முழுமையான சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான திறவுகோல்களைக் கண்டறியுங்கள்.
Transcript
இந்த புதிய வாரத்தின் துவக்கத்தில் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன். அந்த உண்மைகள், என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.
முதலில், எனக்கு கடிதம் எழுதியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியைத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.
கடந்த வாரம் எனது பேச்சுகளில், நான் இரண்டு எதிரெதிர் ராஜ்யங்களை சித்தரித்தேன்: தேவனுடைய ஒளியின் ராஜ்யம் மற்றும் சாத்தானின் இருளின் ராஜ்யம். இருளின் ராஜ்யத்திலிருந்து நம்மை விடுவித்து, ஒளியின் ராஜ்யத்தில் நமக்கு ஒரு சுதந்தரத்தைக் கொடுப்பதே தேவனின் நோக்கமாகும்.
கிறிஸ்துவின் மீட்பின் மூலம் விடுதலை சாத்தியமானது. சிலுவையில் இயேசு நம்முடைய கீழ்ப்படியாமையின் சாபங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டார், அதையொட்டி, அவருடைய கீழ்ப்படிதலினால் ஆசீர்வாதங்களை அவர் நமக்குக் கிடைக்கச் செய்வார். இந்த ஆசீர்வாதங்கள் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது: ஆவி, சரீரம் மற்றும் பொருள்.
இந்த வாரம், கிறிஸ்து நமக்குக் கிடைக்கச் செய்த அனைத்து ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கும், அதன் மூலம் நமது முழு சுதந்தரத்துக்குள் நுழைவதற்குமான நடைமுறைக் கொள்கைகளை விளக்குகிறேன்.
நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து, அதாவது, தேவனுக்கு கீழ்ப்படியாமையினால் உண்டான சாபத்திலிருந்து மீட்பையும் விடுதலையையும் குறித்து பேசும் முக்கிய வேதாகமத்திற்கு மீண்டும் திரும்புவோம். இது கலாத்தியர் 3:13-14 ஆகும்:
13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். 14 ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.
கடந்த வாரம், பரிசுத்த ஆவியானவரின் மூலம் வேதம் வெளிப்படுத்திய அடிப்படைக் கொள்கையை விளக்கினேன், இயேசு சிலுவையில் தொங்கியபோது, சாபத்தை தாங்கியவராக காட்சியளித்தார் என்பதே அந்த அடிப்படைக் கொள்கையாகும், ஏனென்றால், உபாகமம் புத்தகத்தில் சொல்லப்பட்ட பழைய உடன்படிக்கையில், “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாபத்தை இயேசு தமக்காக அல்ல, நமக்காக சுமந்தார். அவர் நமக்கு மாற்றாக இருந்தார்! இனத்தான் (உறவின்முறையான) மீட்பர்! அவர் நமது இடத்தை எடுத்துக்கொள்ள நமது இயல்பை எடுத்தவர்!
எனவே நமது கீழ்ப்படியாமையின் காரணமாக வந்த சாபங்கள், இயேசுவின் மீது வந்தன, சாதகமான நோக்கம் என்னவென்றால், அவர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் மூலம், அவருடைய கீழ்ப்படிதலுக்கான ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம். பரிமாற்றங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று இயேசு சாபத்தை எடுத்துக் கொண்டார். இயேசு நமக்காக தீமையை எடுத்துக் கொண்டார், அதனால் நாம் அவருக்குரிய நன்மையைப் பெறுவோம். அதுதான் சிலுவையைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாகும். சுவிசேஷத்தின் முழுச் செய்தியையும் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் சிலுவையாகும்.
இப்போது, கலாத்தியர் 3:14இல், (நான் திரும்பவும் அந்த வசனங்களை வாசிக்கிறேன்) நான் ஆசீர்வாதத்தை குறித்து இது வரை விவரித்ததை விட பவுல் இன்னும் குறிப்பிட்டு சொல்கிறார். அவர், “ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாக” என்று சொல்கிறார். கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில், ஆபிரகாமின் சந்ததியாகிய இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் மூலம், நாம் ஆபிரகாமின் சந்ததியாக கணக்கிடப்படலாம் என்று அவர் விளக்குகிறார். நம்மில் பலர் புறஜாதியாரும், யூதர் அல்லாதவர்களும் இயற்கையான வம்சாவளியால் ஆபிரகாமின் சந்ததியினர் அல்ல, நாம் ஆபிரகாமின் சந்ததியார் அல்லாதவர்கள் என்றாலும், ஆபிரகாமின் வாக்களிக்கப்பட்ட சந்ததியான இயேசுவின் மீது நாம் கொண்ட விசுவாசத்தின் மூலம் ஆபிரகாமின் சுதந்தரத்துக்குள் நுழைகிறோம். மேலும், ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் தேவன் வாக்களித்த ஆசீர்வாதங்களுக்கு நாம் வாரிசாக மாறுகிறோம். ஆகவே, கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் மூலம், ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை தேவன் நமக்குக் கிடைக்கச் செய்கிறார். நிச்சயமாக, அவர் அதை யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் கிடைக்கச் செய்கிறார். ஏனென்றால், இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் யூத மக்களுக்கு மீட்பை சாத்தியமாக்கியதோடு, புறஜாதிகளாகிய நம்மையும் ஆபிரகாமின் சுதந்தரத்தில் சேர்த்துள்ளார்.
ஆபிரகாமின் ஆசீர்வாதத்தில் சரியாக என்ன அடங்கியுள்ளது என்பதை இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டும், இது இப்போது நமக்குக் கிடைக்கிறது, இது வேதத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆதியாகமம் 24:1இல் நாம் இதை வாசிக்கிறோம்:
1 ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.
மற்ற பதிப்புகளில் ஒன்று “எல்லாவற்றிலும்” என்று கூறுகிறது. எனவே, ஆபிரகாமின் ஆசீர்வாதம் மிகவும் அழகான ஆசீர்வாதம். அது “எல்லா வகையிலும்!” அது “எல்லாவற்றிலும்!” இருக்கிறது. இது நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியது. ஆபிரகாமின் அந்த ஆசீர்வாதத்திலிருந்து எதுவும் தவிர்க்கப்படவில்லை. ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள் ஆகிய இரண்டிலும்; ஆவி, சரீரம், மற்றும் பொருள் ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கியது என்று நான் சென்ற வாரம் சொன்னேன். அதுதான் “எல்லாவற்றிலும்.”
இருப்பினும், கலாத்தியர் 3:14க்குத் திரும்பிச் செல்லும்போது, மற்ற எல்லாவற்றிலுமிருந்தும் தனித்து நிற்கும் ஒரு குறிப்பிட்ட ஆசீர்வாதத்தைப் பற்றி பவுல் பேசுவதைக் காண்கிறோம். அவர் சொல்கிறார், “ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.” “ஆவி” என்ற வார்த்தை பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. எனவே, இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலம் நமக்குக் கிடைத்த அனைத்து ஆசீர்வாதங்களிலும், அனைத்து வாக்குத்தத்தங்களிலும், ஒரு ஆசீர்வாதமும், ஒரு வாக்குத்தத்தத்திலும் மற்ற எல்லாவற்றிலிருந்தும் தனித்துள்ளது, அதுதான் ஆவியானவரின் வாக்குத்தத்தமாகும். புதிய ஏற்பாட்டின் மற்ற இடங்களில் இயேசு இதைப் பற்றி பேசுகிறார், மேலும் அவர் அதை “பிதாவின் வாக்குத்தத்தம்” என்று அழைக்கிறார். அதுதான் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அவருடைய பிள்ளைகளான நமக்கு பிதாவாகிய தேவன் வைத்திருக்கும் குறிப்பிட்ட, விசேஷமான வாக்குத்தத்தமாகும்.
ஆவியானவரின் வாக்குத்தத்தம் தனிமைப்படுத்தப்பட்டதற்கான காரணம், அது மற்ற எல்லா ஆசீர்வாதங்களிலும் முக்கியமானதாகும். பரிசுத்த ஆவியானவரைப் பெறாமல், நம்மால் நமது சுதந்தரத்துக்குள் நுழைய இயலாது, நாம் தகுதியற்றவர்களாக இருக்கிறோம். பரிசுத்த ஆவியானவரே, சுதந்தரத்தை நிர்வகித்து, அதை நமக்குக் கிடைக்கச் செய்பவர்.
நாம் இப்போது யோவான் 14:15-18க்கு திருப்புவோம், அங்கு இயேசு தம்முடைய சீஷர்களை விட்டு பிரிவதற்கு முன்பு, மாம்சமாகிய சரீரத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு அவர்களிடம் பேசுகிறார். அவர் சொல்கிறார், “நான் போகும்போது, என்னுடைய இடத்திற்கு பதிலாக உங்களுடன் தங்குவதற்கு வேறு ஒருவரை அனுப்பப் போகிறேன்.” உண்மையில், அவர் கூறுகிறார், “நான் உங்களுடன் மூன்றரை வருடங்கள் மட்டுமே இருந்தேன், ஆனால் என் இடத்திற்கு மற்றொருவர் வருகிறார், அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அவர் என்றென்றும் உங்களுடன் இருப்பார்.” இயேசு அனுப்புவதாக சொன்ன மற்றொருவர், பரிசுத்த ஆவியானவர் ஆவார். மேலும், இயேசு அவருக்கு இங்கே ஒரு சிறப்பு பட்டத்தைக் கொடுக்கிறார், அதுதான் உதவியாளர் (அல்லது தேற்றரவாளர்). இயேசு சொல்வது இதுதான்:
15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். [நான் போகிறேன், ஆனால் என்னுடைய இடத்திற்கு இன்னொருவர் வருகிறார், அவர் தங்கப் போகிறார்.] 17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் [இது பரிசுத்த ஆவியானவரின் தலைப்புகளில் ஒன்றாகும்] காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். 18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
அங்கே ஒரு காட்சியை நீங்கள் காணலாம். பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், சீஷர்கள் திக்கற்றவர்களாகவும், அவர்களுக்கு யாரும் உதவவோ, ஆலோசனை வழங்கவோ, அல்லது அவர்களுடன் துணை நிற்கவோ அல்லது சிலுவையில் இயேசுவின் மரணத்தின் மூலம் எவ்வாறு தங்கள் சுதந்தரத்தைப் பெற முடியும் என்பதைக் காண்பிக்கவோ யாருமில்லாமல் சிறு குழந்தைகளைப் போல விடப்பட்டிருப்பார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர் நம்மை ஆதரவற்ற திக்கற்றவர்களின் நிலையில் விட்டுவிடமாட்டார், ஆனால் அவர் நம் உதவிக்கு வருகிறார், அவர் நமக்கு உதவியாளராக வருகிறார், மேலும், இயேசுவின் மரணத்தின் மூலம் நமக்குக் கொடுக்கப்பட்ட நமது சுதந்தரத்தை நாம் எவ்வாறு பெறலாம் என்பதையும், அந்த சுதந்தரத்தில் எப்படி நுழையலாம் என்பதையும் அவர் நமக்குக் காட்டுகிறார்.
இப்போது, பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவும் சில குறிப்பிட்ட வழிகளைப் பற்றி பேசப் போகிறேன். யோவான் 14:26 இல், இயேசு தம் சீஷர்களிடம் கூறுகிறார்:
26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
இயேசுவின் சீஷர்களாகிய நம்மிடத்தில் பரிசுத்த ஆவியினாவருக்கு இரண்டு பெரிய ஊழியங்கள் இருக்கின்றன. வேதம் மற்றும் தெய்வீக வெளிப்பாடு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அவர் நமக்குக் கற்பிக்கிறார், மேலும் நாம் மறந்துவிடக்கூடும் என்று இயேசு கற்பித்த விஷயங்களை அவர் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறார். அதனால்தான், புதிய ஏற்பாட்டு பதிவின் முழுமையான துல்லியத்தை நான் நம்புகிறேன், ஏனென்றால் அது மனித சிந்தனையையும் அல்லது மனித நினைவாற்றலையும் சார்ந்தது என்று நான் நம்பவில்லை. ஆனால், புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள், பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கற்பித்தார் என்றும், அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய விஷயங்களை அவர் நினைவுக்குக் கொண்டுவந்தார் என்றும் நான் நம்புகிறேன்.
பின்னர் யோவான் 16:13-14 இல், இயேசு மீண்டும் தொடர்கிறார். அவர் சொல்கிறார்:
13 சத்திய ஆவியாகிய [அவர் பரிசுத்த ஆவியானவரை ஒரு ஆற்றலாக அல்ல, ஒரு நபராக வலியுறுத்துகிறார் என்பதைக் கவனியுங்கள். அவர் அவரை, “அது” என்றல்ல, “அவர்” என்று அழைக்கிறார்] அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். 14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
அந்த வசனங்களில், பரிசுத்த ஆவியானவர் நம் உதவியாளராக வரும்போது, நம் வாழ்வில் நிறைவேற்றும் இன்னும் மூன்று ஊழியங்களை இயேசு சுட்டிக்காட்டுகிறார். சகல சத்தியத்திற்குள்ளும், இயேசு கிறிஸ்துவில் தேவன் நமக்காக வைத்திருக்கும் அனைத்தையும் பற்றிய முழு அறிவுக்கும் அவர் நம்மை வழிநடத்துவார். பரிசுத்த ஆவியானவர் நமது வழிகாட்டி. தேவனின் வாக்குத்தத்தத்தின் தேசத்துக்குள் - நமது சுதந்தரத்தின் தேசம்! வழியைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு தேசத்துக்குள் நம்மை அழைத்துச் செல்பவரைப் போன்றவர் அவர்!
மீண்டும், இயேசு சொல்கிறார், “வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.” அவர் எதிர்காலத்தை மறைக்கும் திரையை அகற்றி, எதிர்காலத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை வெளிப்படுத்துவார். வேதம் குறிப்பிடுவது போல, இந்த பூமியெங்கும் அழிக்கப்போகிற பயங்கரமான ஆபத்துகள் வரவிருக்கிற அபாயகரமான காலங்களில் நாம் வாழ்கிறோம் என்று நான் நம்புகிறேன், மேலும், முந்தைய தலைமுறையினர் பூமியில் பார்த்திராத சவால்களையும் எதிர்ப்புகளையும் நாம் எதிர்கொள்ளப் போகிறோம். எதிர்காலத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியதை பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்துவதைப் பொறுத்து நமது பாதுகாப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன், அதனால் சாத்தானின் ஆபத்துகள், இடர்பாடுகள், மற்றும் கண்ணிகளைத் தவிர்த்து, நமக்கு முன்னால் இருக்கும் அனுபவங்களின் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம். இது ஒரு ஆடம்பரமாக நான் நம்பவில்லை, வரவிருக்கும் விஷயங்களை பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.
மேலும், இயேசு கூறுகிறார், மூன்றாவதாக, யோவான் 16இல், அந்த பகுதியில், “அவர் என்னை மகிமைப்படுத்துவார்.” நினைவில் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவியானவர் தன்னை மகிமைப்படுத்தவோ அல்லது தன்னைப் பற்றி பேசவோ வருவதில்லை, ஆனால் அவர் இயேசுவை மகிமைப்படுத்துகிறார், மேலும், அவர் பரலோகத்தில் எதை கேள்விப்படுகிறாரோ அதை வெளிப்படுத்துகிறார், அவர் பூமியில் நம்மிடம் பேசுகிறார்.
பின்னர், அவர் கூறுகிறார், “அவர் என்னுடையதை [இயேசு பேசுகிறார்] எடுத்து, அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரிசுத்த ஆவியானவர் இயேசுவுக்குச் சொந்தமான அனைத்தையும் எடுத்துக்கொள்கிறார், அது நம்முடைய சுதந்தரம், அதை நமக்கு வெளிப்படுத்துகிறார். எனவே, பரிசுத்த ஆவியானவர் மூலம், கிறிஸ்துவில் நம்முடைய சுதந்தரத்தை நாம் அறிந்துகொள்கிறோம்.
புதிய ஏற்பாட்டில் 1 யோவான் 2:1 இல் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு முக்கிய வார்த்தையில் இதை நாம் சுருக்கமாகக் கூறலாம். யோவான் 14 இல் “உதவியாளர்” என்று மொழிபெயர்க்கப்பட்ட அதே வார்த்தை “பரிந்துபேசுகிறவர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அது இயேசுவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் நமக்காக பரிந்துபேசுகிறவராக வருகிறார் என்பதுதான் நான் குறிப்பிட விரும்புவதாகும். இப்போது அது சட்டப்பூர்வமான வார்த்தை. இது வழக்கறிஞரைப் போன்றது. எனவே, பரிசுத்த ஆவியானவர் பரலோகத்தின் சிறந்த வழக்கறிஞர், நாம் திக்கற்றவர்களாக இருக்கக்கூடாது என்பதற்காக நமக்காக அனுப்பப்பட்டவர், ஆனால் கிறிஸ்துவில் நம்முடைய சுதந்தரத்தை நமக்கு விளக்கி, அந்தச் சுதந்தரத்துக்குள் நுழைவதற்கு நாம் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை நமக்குக் காட்ட முடியும். அவர் நமக்காக பரிந்துபேசுகிறவர், நமது வழக்கறிஞர். நமக்காக அதை செய்யதான் வருகிறார்.
எல்லாம் சரி. இன்றைக்கு எனது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளைய தினத்தில், நமது சுதந்தரத்தை உரிமை கோருவதில் நமக்கு உதவ பரிசுத்த ஆவியானவர் வகிக்கும் பங்கை இன்னும் முழுமையாக விளக்குகிறேன்.
குறியீடு: RP-R023-101-TAM









