சோதோமின் சார்பாக ஆபிரகாம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
'பரிந்துபேசும் ஊழியம், பகுதி 1' தொடரில், 'சோதோமுக்காக ஆபிரகாம்' என்ற டெரெக் பிரின்ஸின் போதனையின் மூலம் பரிந்துபேசுதலின் வல்லமையை அறிந்து கொள்ளுங்கள். தேவனுக்கும் இரக்கம் தேவைப்படுபவர்களுக்கும் இடையில் நிற்பது தனிநபர்களையும் தேசங்களையும் எவ்வாறு மாற்றும் என்பதை இதில் கற்கலாம். சுவிசேஷத்தோடு இணைந்து, கடினமான சூழ்நிலைகளில் கர்த்தருடைய கிருபையைக் கொண்டுவரும் இந்த ஊழியத்தை முன்னெடுக்க இது ஓர் ஆழமான அழைப்பாகும்.
Transcript
இந்த புதிய வாரத்தின் துவக்கத்தில் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன். அந்த உண்மைகள், என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.
முதலாவது, எனக்கு எழுதியவர்களுக்கு நன்றி சொல்லுகிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.
கடந்த வாரம் முழுவதும் “ஜெபத்தால் ஆளுகை செய்தல்” என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்டிருந்தேன். உலகம் உண்மையில் ராஜாக்களால் அல்லது ஜனாதிபதிகளால் அல்லது சர்வாதிகாரிகளால் அல்லது பாராளுமன்றங்களால் ஆளப்படுவதில்லை, ஆனால் ஜெபம் செய்யத் தெரிந்தவர்களால் ஆளப்படுகிறது என்று நான் விளக்கினேன்.
நான் இந்த வாரம் இந்த கருப்பொருளைத் தொடரப் போகிறேன். எந்தவொரு கிறிஸ்தவர்களுக்கும் திறந்திருக்கும் மிக உயர்ந்த வல்லமையான ஊழியங்களில் ஒன்றான “பரிந்துபேசும் ஊழியம்” குறித்து நான் பேசப் போகிறேன். இந்த ஊழியம், வேறு எந்த வகையிலும் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு: தனிநபர்கள் அல்லது குடும்பங்கள் மற்றும் முழு நாடுகளின் வாழ்க்கையிலும் உள்ள பிரச்சனைகளுக்கு தேவனின் பதில் என்று நான் நம்புகிறேன்.
முதலில், பரிந்து பேசுதல் என்றால் என்ன என்பதை நான் வரையறுக்க வேண்டும். ஆங்கிலத்தில் “பரிந்து பேதல்” என்ற வார்த்தை உண்மையில் லத்தீன் மூலபாஷையிலிருந்து வந்தது, அதாவது,”இடையில் வருவது” என்பதாகும், மேலும், வேதத்துடன் தொடர்புடைய மற்ற மொழிகளான, எபிரேய மற்றும் கிரேக்கம் ஆகிய இரு மொழிகளிலும், இந்த வார்த்தைக்கு “இடையில் வருதல்” என்ற அடிப்படையில் ஒரே அர்த்தம் உள்ளது. இடையில் வருபவரே மத்தியஸ்தர் (பரிந்துபேசுபவர்) ஆவார்.
எதற்கு அல்லது யாருக்கு “இடையில்”? பதில் என்னவென்றால், தேவனுக்கும், தேவனின் நியாயமான கோபம் மற்றும் நியாயத்தீர்ப்பின் பொருள்களுக்கும் இடையில் பரிந்துபேசுபவர் வருகிறார். பரிந்துபேசுபவர், தேவனுக்கு முன்பாக நின்று, தேவனுக்கும் தேவனின் கோபத்திற்கும் நியாயத்தீர்ப்புக்கும் தகுதியானவர்களுக்கு இடையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, “தேவனே, உமது நீதியை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த மக்களை அடிக்க உங்களுக்கு முழு உரிமையுண்டு, ஆனால் நீங்கள் அவர்களை அடித்தால் என்னையும் அடிக்க வேண்டும், ஏனென்றால் நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நிற்கிறேன்” என்று சொல்வார்.
இந்த வாரம் பரிந்துபேசுபவர்களின் பாத்திரத்தை வகித்த தேவனின் ஊழியர்களில் பலரைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம், அவர்கள் அனைவரும் தேவனின் இருதயத்திற்கு நெருக்கமான மனிதர்களாக இருந்தார்கள் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்த குறிப்பிட்ட தோரணை, இந்த ஊழியம், தேவனின் இருதயத்திற்கு மிக மிக நெருக்கமான ஒன்று என்று நான் நிம்புகிறேன். நாம் பார்க்கப்போகும் முதல் உதாரணம், மிகவும் பொல்லாத நகரமாகவும், தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பக்குவமாகவும் இருந்த சோதோம் நகரத்தின் சார்பாக ஆபிரகாம் பரிந்து பேசும் உதாரணமாகும். ஆதியாகமம் 18 ஆம் அதிகாரத்தில், கர்த்தர் ஆபிரகாமை சந்திக்க வந்ததையும், கர்த்தர் அவருடன் இரண்டு தேவதூதர்களை கொண்டிருந்ததையும் நாம் வாசிக்கிறோம். ஆபிரகாம் அவர்களை வரவேற்று உபசரித்தார், வரவிருக்கும் வாரிசாகிய ஈசாக்கு குறித்ததான வாக்குறிதியைக் கொடுத்தார்கள். பின்னர் அவர்கள் செல்லத் தயாராக இருந்தார்கள், கர்த்தர் ஆபிரகாமிடம் கூறினார், “நான் சோதோம் நகரத்தைப் பற்றி கேள்விப்பட்ட செய்திகளைப் போலவே மோசமாக இருக்கிறதா என்பதை அறிய, நானே அதைப் பார்க்கப் போகிறேன்.” இந்த நேரத்தில், நாம் இப்போது, ஆதியாகமம் 18: 17,18 & 20-25ஐ படிப்போம்.
17 அப்பொழுது கர்த்தர்: …. 18 நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? [ஆமோஸ் புத்தகத்தில் உள்ள மற்றொரு வசனம், தேவன் தமது தீர்க்கதரிசிகளுக்கு இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யமாட்டார் என்று கூறுகிறது. ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி, தேவன் ஆபிரகாமுடன் அவருடைய ஆலோசனையையும், நோக்கங்களையும், அவருடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்பினார்]. 20 பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், 21 நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். 22 அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான். [“ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான்” என்ற அந்த வார்த்தைகளை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது கர்த்தருக்கும், சோதோம் நகரத்திற்கும் இடையே இருக்கிறது, அந்த நகரம் தேவனின் நிலுவையில் உள்ள தீர்ப்பின் பொருளாக இருந்தது.] 23 அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? 24 பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? 25 துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
இப்போது, இந்தச் சூழ்நிலையின் முக்கிய அம்சங்களையும், பரிந்து பேசுவதற்கான அதன் தாக்கங்களையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆபிரகாமின் தோற்றப்பாங்கினை பார்க்க வேண்டும் என்று நான் முன்னமே கூறியுள்ளேன். அவன் கர்த்தருக்கு முன்பாக நின்று, கர்த்தருக்கும் சோதோமுக்கும் நடுவே நின்று, அப்படியே தன் கைகளை பிடித்துகொண்டு, “ஆண்டவரே, இதற்கு மேல் போகாதிரும்” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
பிறகு, ஆபிரகாமுக்கும் கர்த்தருடன் உள்ள நெருக்கத்தை நாம் கவனிக்க வேண்டும். வேதாகமத்தில் மற்ற இடங்களில் ஆபிரகாம், “கர்த்தருடைய சிநேகிதன்” என்று அழைக்கப்படுகிறார். இங்கே, அவர் ஒரு நெருக்கமான மற்றும் தனிப்பட்ட நண்பராக எல்லாம் வல்ல தேவனிடம் பேசிக் கொண்டிருந்தார்.
ஆபிரகாமின் துணிச்சலையும் நாம் கவனிக்க வேண்டும். அவர் உண்மையில் தேவனுடைய நீதிக்கு சவால் விட்டார். அவர் பேசுவதற்கும், தான் நினைத்ததைச் சொல்லுவதற்கும் பயப்படவில்லை, அதே நேரத்தில் பரிசுத்த பயபக்தியுடன் இருந்தார்.
நேர்மறையான மற்றும் எதிர்மறையான தேவநீதியின் முழுமையான நம்பிக்கை ஆபிரகாமுக்கு இருந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். எதிர்மறையாக, தேவன் துன்மார்க்கரைத் தண்டிப்பார்; சாதகமாக, தேவன் துன்மார்க்கரைப் போல நீதிமான்களுடன் நடந்து கொள்ள மாட்டார். தேவனின் முழுமையான நீதியில் நம்பிக்கையாக இருப்பதுதான் ஒரு மத்தியஸ்தர் ஊழியத்தின் இன்றியமையாத பகுதியாகும்.
இப்போது உரையாடல் எப்படி தொடர்ந்தது என்பதைப் படிப்போம். ஆதியாகமம் 18: 26- 33:
26 அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுவதையும் இரட்சிப்பேன் என்றார். 27 அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். 28 ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுவதையும் அழிப்பீரோ என்றான். அதற்கும் அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். 29 அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். 30 அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். 31 அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். 32 அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். 33 கர்த்தர் ஆபிரகாமோடே பேசி முடித்த பின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
மீண்டும், நான் இரண்டு கூடுதல் காரியங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், தேவன் தனது ஊழியக்காரரின் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார். தேவன் ஆபிரகாமை ஒதுக்கித் தள்ளவில்லை, அவர் செவிசாய்த்தார். மேலும், ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், ஆபிரகாம் தம்மிடம் சொன்னவற்றின் தாக்கத்தை அவர் தனது செயல்பாட்டிற்கு அனுமதித்தார்.
தேவனின் செயல்பாட்டில், நாம் உண்மையில் செல்வாக்கு செலுத்தும் விதத்தில் தேவனிடம் பேசுவதற்கான பாக்கியம் மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டும் இருப்பதை நினைத்துப் பாருங்கள்.
தேவன் இரக்கம் காண்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறார் என்பதை நாம் கவனிக்கிறோம். அந்த பொல்லாத நகரத்தில், ஐம்பது பேர் இருந்தால் இரக்கம் கிடைக்குமா என்ற வாக்குறுதியிலிருந்து, பத்து நீதிமான்கள் மட்டும் இருந்தால் இரக்கம் கிடைக்கும் என்று அவர் கொடுத்த கடைசி வாக்குறுதி வரை படிப்படியாக இறங்கி வந்தார்.
இது சில வருடங்களுக்கு முன், என் மனதில் ஒரு கேள்வியை எழுப்பியது. ஆபிரகாமின் நாட்களில் சோதோமின் சாத்தியமான மக்கள் தொகை என்ன? மேலும், சில கணிசமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, அந்த நேரத்தில் சோதோமில் குறைந்தபட்சம் பத்தாயிரம் பேர் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். எனவே, குறைந்தது பத்து நபர்கள் இருந்தால், பத்தாயிரம் பேரைக் கொண்ட ஒரு நகரத்தை தேவன் காப்பாற்ற முடியும், அது நமக்கு ஒரு சுவாரஸ்யமான விகிதத்தை அளிக்கிறது. ஆயிரம் பேருக்கு ஒருவர். ஒரு நீதிமான், ஆயிரம் பொல்லாதவர்களிடமிருந்து தேவனின் தீர்ப்பைத் தடுக்க முடியும். கடந்த வாரம் எனது பேச்சுகளில், நான் பேசிய உப்பு பற்றிய உதாரணத்திற்கு மீண்டும் வரலாம். நாம் பூமிக்கு உப்பாக இருக்கிறோம் என்று இயேசு சொன்னார். உப்பின் இரண்டு செயல்பாடுகள்: முதலாவதாக, சுவை இல்லாதவற்றுக்குச் சுவையை வழங்குதல்; இரண்டாவதாக, கெட்டுப் போகும் செயல்முறையை தடுத்து நிறுத்துதல். ஆனால், உப்பு ஒரு துண்டாகவோ அல்லது ஒரு கட்டியாகவோ அல்லது ஒரு பெரிய பகுதியாகவோ எங்கேயோ கொட்டப்படுவதில்லை, ஆனால் அது உப்பிட வேண்டியதில் சிறிய சிட்டிகையாக சிதறியிருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாமும் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் சிறிதளவு உப்பாக இருக்க வேண்டும், ஆனால் நாம் கெட்டுப் போகும் செயல்முறையை தடுத்து நிறுத்தவும் வேண்டும், நாம் வாழும் பூமியின் குறிப்பிட்ட பகுதியை தேவனின் இரக்கத்திற்கும் தேவனின் தயவிற்கும் பரிந்துரைக்க வேண்டும்.
அந்த விகிதத்தை ஒரு கணம் அமெரிக்காவிற்கு பயன்படுத்துவோம். அமெரிக்காவின் மக்கள் தொகை 250 மில்லியன் என்று வைத்துக்கொள்வோம். இது சற்றே குறைவானது, ஆனால் அது நமக்கு ஒரு நல்ல முழு எண்ணாக இருக்கிறது. பின்னர், அந்த விகிதத்தின்படி, இந்த தேசத்திலிருந்து வரவிருக்கும் தேவனின் நியாயத்தீர்ப்பைத் தடுக்க 250 ஆயிரம் நீதிமான்கள் தேவைப்படும். இது காற்பங்கு மில்லியன் நீதிமான்களில் ஒரு பங்காகும். நான் தேவாலயத்திற்கு செல்வோரைப் பற்றி பேசவில்லை. மிகவும் நேர்மையான மரியாதைக்குரிய நீதியுள்ள நபர்களைப் பற்றி நான் பேசுகிறேன், அவர்கள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவது தேவனுக்கு அநீதியாக இருக்கும்.
இன்று அமெரிக்காவில் கால் மில்லியன் நபர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இன்னும் முக்கியமானது, நீங்கள் அவர்களில் ஒருவரா? உங்கள் வாழ்க்கை மிகவும் நீதியானதாக, மிகவும் தூய்மையானதாக, தேவனுக்கு முன்பாக நேர்மையானதாக உள்ளதா, நீங்கள் இருப்பது நீங்கள் வாழும் முழு சமூகம் அல்லது பகுதியிலிருந்து தேவனின் தீர்ப்பைத் தடுக்குமா?
இன்றைய உலகில் நீதிமான்கள் ஏற்படுத்தக்கூடிய மாபெரும் செல்வாக்கை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு வழிகளில்: அவர்களின் ஜெபங்கள் மற்றும் அவர்கள் இருப்பதின் மூலமாக. ஆபிரகாமை போன்ற, அவர்களுடைய ஜெபங்களால், நாம் தேவனுக்கும், அவருடைய நியாயமான கோபத்தின் பொருளுக்கும் இடையில் நின்று அவருடைய நியாயத்தீர்ப்பைத் தடுத்து நிறுத்தலாம்; மேலும், நாம் இருப்பதன் மூலம் நாம் இருக்கும் பகுதி, சமூகம், சமுதாயம் ஆகியவற்றை தேவனின் இரக்கம் மற்றும் தயவைப் பாராட்டுகிறோம். நாம் இருப்பது ஒரு முழு சமூகம் அல்லது நகரம் அல்லது தேசம் ஆகியவற்றிலிருந்து தேவனை, அவரது நீதியான தீர்ப்பிலிருந்து நிறுத்தச் செய்யலாம். ஆனால், மறுபுறம், தீமையை எதிர்கொள்வதில் செயலற்ற தன்மை மற்றும் அலட்சியம் பாவமாகும். யாக்கோபு 4:17 கூறுகிறது:
17 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
அந்த வசனம் உண்மையில் ஒருவிதமான தேர்ந்தெடுப்போடு நம்மை எதிர்கொள்கிறது. நம் தேசத்தின் மீது தேவனின் கோபத்தையும், தீர்ப்பையும் தடுத்து, நீதிமான்களாக, ஜெப வீரர்களாக, பரிந்து பேசுபவர்களாக இருக்க நாம் நம்மை அர்ப்பணிக்கப் போகிறோமா அல்லது நாம் செயலற்றவர்களாகவும், அலட்சியமாகவும் இருந்து, சூழ்நிலைக்கு ஏற்ப செய்யத் தவறுவோமா?
சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். பரிந்து பேசும் வல்லமை பற்றிய நமது பாடம் மோசேயின் வாழ்க்கையிலிருந்து நாளை எடுக்கப்படும். ஒரு மனிதனின் ஜெபம் எப்படி ஒரு முழு தேசத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றியது என்று பார்ப்போம்.
குறியீடு: RP-R021-101-TAM









