ஒரு புதிய வாரத்தின் ஆரம்பத்தில் உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. வாழ்க்கை எனக்குப் போதித்திருக்கிற சத்தியங்களிலிருந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்தச் சத்தியங்கள் என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வித்தியாசத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. அதையே இவை உங்களுக்கும் செய்ய முடியும்.

எனக்கு கடிதம் எழுதிய எல்லோருக்கும் முதலில் நன்றியைச் சொல்லி விடுகிறேன். நான் இந்தச் செய்தியை முடிக்கும்போது, நாங்கள் இன்னொரு விலாசத்தை உங்களுக்குக் கொடுப்போம். உங்களுடைய தனிப்பட்ட தேவைகளை, பிரச்சனைகளை, உங்களுடைய ஜெப விண்ணப்பங்களை அந்த விலாசத்திற்கு நீங்கள் தாராளமாக எழுதி அனுப்பலாம்.

“மரணத்தின் மீது வெற்றி” என்ற தலைப்பில், வேதாகமத்தின் சத்தியங்களை கடந்த வாரம் முழுவதும் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இது அவ்வளவு அர்த்தச் செறிவு உள்ள ஒரு போதனையாக, அருமையான ஒன்றாக, நமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதே தலைப்பில்தான் இந்த வாரமும் நான் தொடரப் போகின்றேன். இன்னும் நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.

நம்முடைய மீட்பரும், நெருங்கின சுதந்தரவாளியுமாகிய இயேசு எவ்வாறு நம் மீது வர வேண்டிய மரண தண்டனையை தன் மேல் ஏற்றுக் கொண்டு, நம் சார்பில் பாவ நிவாரண பலியாக தம்முடைய ஆத்துமாவை மரணத்தில் ஊற்றி, அதன் மூலம் நம்முடைய குற்ற உணர்வுக்கு பரிகாரம் செய்திருக்கிறார், அதை அவர் நிவிர்த்தி செய்திருக்கிறார் என்பதைக் குறித்து கடந்த வாரம், நான் விளக்கிச் சொன்னேன். பிறகு மூன்றாம் நாள், இயேசுவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த யூதர்கள் மற்றும் ரோமர்களின் நீதிமன்றங்கள் கொடுத்த அநீதியான தீர்ப்பை பிதாவாகிய தேவன் புறந்தள்ளி விட்டு, அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை உயிரோடு எழுப்பியதன் மூலம், அவருடைய நீதியை உறுதிப்படுத்தினார், நிலைநாட்டினார்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இருந்து, இன்றைக்கு நான் தொடர்ந்து போதிக்கப் போகிறேன். அது நம் ஒவ்வொருவருக்கும் என்னவாக இருக்கிறது என்பதை நான் விளக்கிச் சொல்லப் போகிறேன்.

நம்முடைய பிரதிநிதியாய் சிலுவையில் மரித்த இயேசுவின் உயிர்த்தெழுதல், இயேசுவின் மூலம் தேவன் நமக்கு அருளுகிற பாவ மன்னிப்பு மற்றும் இரட்சிப்பிற்கு நிச்சயமான ஒரு முத்திரையாக இருக்கிறது என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும்.

தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மீது ஆபிரகாம் வைத்த விசுவாசம் எவ்வாறு அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்பதை ரோமர் 4:18-22 வசனங்களில், பவுல் விளக்கிச் சொல்கிறார். பிறகு அவர், இன்றைக்கு விசுவாசிகளாய் இருக்கும் நமக்கும் கூட அது எவ்வாறு பொருந்துகிறது என்று தொடர்ந்து சொல்கிறார். ரோமர் 4:23-25 வசனங்களில், பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

23 அது அவனுக்கு (ஆபிரகாமுக்கு) நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். 25 அவர் (அதாவது, இயேசு) நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப் பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

இந்தக் கடைசி வசனத்தை நான் திரும்பவும் வாசிக்கிறேன்: “இயேசு நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.” இவ்வசனத்தில் “நீதிமானாக்கப்படுதல்” என்ற வார்த்தை, ஒரு இறையியல் வார்த்தையாகும். நாம் அதை “குற்றமற்றவர் அல்லது நிரபராதி என்ற தீர்ப்புடன் விடுதலை செய்யப்படுகிற நிலை” என்று சொல்லலாம். அல்லது, “நாம் நீதிமான்கள் என்று அறிவிக்கப்படுகிற ஒரு நிலையாகவும்” இதை நாம் சொல்லலாம். நீதிமானாக்கப்படுதல் என்ற வார்த்தைக்கு மிகச் சிறந்த விளக்கம் இதுவாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்: அதாவது, நீதிமானாக்கப்படுதல் என்றால், “நான் ஒருபோதும் பாவம் செய்திராதவனைப் போல அறிவிக்கப்படுகிற ஒரு நிலையாகும்.” காரணம், கிறிஸ்துவின் நீதி, அவருடைய பாவமற்ற நீதி, நம்முடைய விசுவாசத்தின் மூலம் நமக்குள் வேரூன்றப்படுகிறது.

“மரித்தோரின் உயிர்த்தெழுதல் (Resurrection of the Dead)” என்ற என்னுடைய புத்தகத்தில், நான் இதை விளக்கமாக எழுதியிருக்கிறேன். இப்பொழுது நான் அதை வாசிக்கப் போகிறேன்.

“நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் கிறிஸ்து ஒப்புக்கொடுக்கப்பட்டார். நாம் நீதிமான்களாக்கப்படும்படி, கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டார்,” என்று ரோமர் 4:25-ல் பவுல் எழுதியிருக்கிறார்.

பாவி நீதிமானாக்கப்படுகிற கிரியை, மரித்தோரிலிருந்து கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்ட நிகழ்வைச் சார்ந்திருக்கிறது. அதைத்தான் இவ்வசனம் நமக்கு வெளிப்படுத்துகிறது. கிறிஸ்து சிலுவையிலே அல்லது கல்லறையிலேயே இருந்திருப்பார் என்றால், இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவனைக் குறித்து பாவிக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் ஒருபோதும் நிறைவேறியிருக்காது. உயிரோடு எழுந்த கிறிஸ்துவை விசுவாசத்து, அறிக்கை செய்து, அவரை ஏற்றுக் கொள்ளும்போது மட்டுமே, அது ஒரு பாவியை பாவ மன்னிப்பு, சமாதானம், நித்திய ஜீவன் மற்றும் பாவத்தின் மீதான வெற்றிக்கு நேராக நடத்துகிறது.

இதே சத்தியத்தை பவுல், ரோமர் 10:9-ல் வெளிப்படுத்துகிறார். நாம் அதை வாசிப்போம்:

9 “என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று, உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.”

இரட்சிப்பு என்பது இரண்டு விஷயங்களை சார்ந்திருப்பதாக, இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. முதலில், இயேசுவே கர்த்தர் என்று வெளிப்படையாக அறிக்கை செய்ய வேண்டும். இரண்டாவதாக, தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பிப்னார் என்று இருதயத்தில் விசுவாசிக்க வேண்டும். ஆகையால், இரட்சிக்கின்ற விசுவாசம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மீதான விசுவாசத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை விசுவாசிக்காதவர்களுக்கு, நிச்சயமாக இரட்சிப்பு உண்டாக முடியாது.

உண்மையைச் சொன்னால், வாதங்களும் – அறிவாற்றலும் இதை எவ்விதத்திலும் மறுக்க முடியாது, இது தவறு என்று நிரூபிக்க முடியாது. கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டிருக்கவில்லை என்றால், ஒரு பாவியை மன்னிப்பதற்கோ அல்லது இரட்சிப்பதற்கோ அவருக்கு எந்த வல்லமையும் இருந்திருக்காது. ஆனால் அவர் எழுப்பப்பட்டார் என்று வேதவசனம் சொல்கிறது. இதுவே ஒரு பாவியை மன்னிப்பதற்கும், இரட்சிப்பதற்கும் அவருக்கு வல்லமை இருக்கிறது என்பதற்கான ஒரு ஆதாரமாக இருக்கிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் உண்டான இந்தப் பலனைக் குறித்து எபிரெயர் 7:25-ம் வசனம் தெளிவாக நம் முன் வைக்கிறது:

25 “மேலும் தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு, அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால், அவர்களை முற்றுமுடிய (முழுமையாய்) இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.”

ஆக, தேவன் அருளும் இரட்சிப்பிற்கு அடிப்படையாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இருக்கிறது. இது எவ்வளவு முக்கியமானது, அத்தியாவசியமானது என்று பவுல், 1 கொரிந்தியர் 15:14 மற்றும் 17 வசனங்களில் எடுத்துச் சொல்கிறார்.

14 கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா (வீண்), உங்கள் விசுவாசமும் விருதா (வீண்). 17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும். நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.

இன்றைய கிறிஸ்தவர்களின் நிலைமையை, இந்த நேரடியான வேதவசன வாக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. கிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதலை நிராகரிக்கிற இறையியல் வல்லுநர்கள், தங்களுக்குப் பிரியமானபடியெல்லாம் நிறைய இறையியல் கோட்பாடுகளை உருவாக்கி யிருக்கலாம், ஒழுங்குபடுத்தியிருக்கலாம். ஆனால் பாவங்கள் மன்னிக்கப்பட்டதால் உண்டாகக்கூடிய சமாதானம் மற்றும் சந்தோஷத்தை ஒருபோதும் அவர்களால் தனிப்பட்ட விதத்தில் அறிந்து கொள்ளவோ, அனுபவிக்கவோ முடியாது.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், நம் ஒவ்வொருவருக்கும் தேவன் அருளும் பாவ மன்னிப்பு மற்றும் இரட்சிப்பை உறுதிப்படுத்தும் ஒரு முத்திரையாயிருக்கிறது என்பதைத்தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இரண்டாவதாக, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், நம்முடைய உயிர்த்தெழுதலுக்கான ஒரு உத்தரவாதமாக இருக்கிறது. கொலோசெயர் 1:18- ம் வசனத்தில், பவுல் இயேசுவைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்:

18 அவரே (கிறிஸ்துவே) சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும், மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

தேவனுடைய முதல் சிருஷ்டிப்பின் ஆரம்பமாக இயேசு இருந்தார். அவருடைய உயிர்த்தெழுதலின் மூலம், தேவனுடைய புதுச் சிருஷ்டிப்பின் ஆரம்பமாகவும் அவர் இருக்கிறார். தேவனுடைய புதுச் சிருஷ்டிப்பு, இப்பொழுது விசுவாசத்தின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது. கொலோசெயர் 1:18-ல் எழுதப்பட்ட இவ்வசனத்தில், இயேசுவே ஆரம்பம் என்றும், அவரே மரித்தோரிலிருந்து எழுந்த, பிறந்த முதற்பேறுமானவர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இங்கு உயிர்த்தெழுதல் என்பது மரணத்திலிருந்து மறுபடியும் பிறக்கின்ற நிகழ்வோடு ஒப்பிடப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இது சங்கீதம் 2:7-ம் வசனத்தோடு ஒத்துப் போகிறது. சங்கீதம் 2-ம் அதிகாரம், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்த தீர்க்கதரிசன முன் படமாகவும் இருக்கிறது. 7-ம் வசனத்தில், இயேசு பேசுகிறார். தன்னைக் குறித்து பிதாவாகிய தேவன் கொடுத்த ஆணையைப் பற்றி, இயேசு இங்கு பேசுகிறார். அவர் என்ன சொல்கிறார் என்பதை நாம் கவனிப்போம்:

7 தீர்மானத்தின் விவரம் சொல்வேன். கர்த்தர் என்னை நோக்கி, “நீர் என்னுடைய குமாரன். இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்.”

உயிர்த்தெழுதலின் நாளாகிய இந்த நாளில்தான், பிதாவாகிய தேவன் குமாரனை ஜநிப்பித்தார், பெற்றெடுத்தார். மரித்தோரிலிருந்து இயேசுதான் முதலில் பிறந்தார், பெற்றெடுக்கப்பட்டார். அவருடைய உயிர்த்தெழுதல், மரணத்திலிருந்து புதிய மற்றும் நித்திய ஜீவனுக்கேதுவாக பிறக்கின்ற ஒரு பிறப்பாயிருக்கிறது.

கொலோசெயர் 1:18-ம் வசனத்திற்கு திரும்பச் செல்வோம் என்றால், பவுல் அங்கே இயேசுவை சரீரமாகிய சபைக்குத் தலையாக, மரித்தோரிலிருந்து முதலில் பிறந்தவராக படம் பிடித்துக் காண்பிக்கிறார். உயிர்த்தெழுதலை ஒரு பிறப்பாக நாம் பார்ப்போம் என்றால், ஒரு குழந்தை தன் தாயின் கருவிலிருந்து பிறக்கும்போது என்ன நடக்கிறதோ, அதையே இதற்கும் நாம் பொருத்திப் பார்க்க முடியும். குழந்தையின் தலைதான் முதலில் வெளியே வரும், பிறகு அதன் சரீரம் அதைத் தொடர்ந்து வரும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். இது இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும், நம் உயிர்த்தெழுதலுக்கும் பொருந்தும். உயிர்த்தெழுதலில், தலையாகிய இயேசு முதலில் வந்திருக்கிறார். ஆகையால் சரீரமாகிய நாமும் தலையைப் பின் தொடர்ந்து வெளியே வருவோம் என்பதற்கு இது உத்தரவாதமாக இருக்கிறது. இது ஒரு அழகான படம். ஆக, இயேசுவின் உயிர்த்தெழுதல், விசுவாசத்தினால் அவரோடு ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிற நாமும் அவரைப் போலவே உயிரோடு எழுப்பப்படுவோம் என்பதற்கு ஒரு நிச்சயமான உத்தரவாதமாய் நமக்கு உண்டாயிருக்கிறது. தலையாகிய அவர் ஏற்கனவே வெளியே வந்திருக்கிறார். தேவன் முன் குறித்த நேரத்தில், சரீரமாகிய நாமும் வெளியே வருவோம். இதை இயேசுவே சுருக்கமாகத் தொகுத்துச் சொல்கிறார். யோவான் 14:19-ஐ வாசிப்போம்:

19 “நான் பிழைக்கிறபடியினால், நீங்கள் பிழைப்பீர்கள்.”

அவருடைய ஜீவன், நம்முடைய ஜீவனாய் இருக்கிறது. நாம் அவரோடு ஒன்றாய் இணைக்கப்பட்டு, இசைந்திருக்கிறபடியால், அவருடைய உயிர்த்தெழுதலில் நாம் நிச்சயம் பங்கடைவோம் என்ற ஒரு உத்தரவாதம் நமக்கு உண்டாயிருக்கிறது.

உயிர்த்தெழுதலைக் குறித்த மூன்றாவது உண்மை, அதுதான் நம் கிறிஸ்தவ ஜீவியத்தின் இலக்காயிருக்கிறது. இதைக் குறித்து பவுலுக்குள் இருந்த உந்துதலையும், எண்ணத்தையும் நாம் பார்ப்போம். பிலிப்பியர் 3:10-14 வசனங்களில், அவரே இதை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்தவ ஜீவியம் மற்றும் ஊழியத்தைக் குறித்த ஒட்டுமொத்த நோக்கத்தைப் பற்றி பவுல் இங்கே பேசுகிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்:

10 இப்படி நான் அவரையும் (அதாவது, கிறிஸ்துவையும்), அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி எப்படி யாயினும், நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாகும் படிக்கும் (“எப்படியாகிலும், நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாகி விட வேண்டும்,” என்பது பவுலின் உந்துதலாய், நோக்கமாய் இருந்ததை நாம் இங்கு கவனிக்க வேண்டும்), 11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். 12 நான் அடைந்தாயிற்று (அதாவது, நான் உயிர்த்தெழுதலை அடைந்து விட்டேன்) அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ, அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய் தொடருகிறேன் (அதாவது, கிறிஸ்து இயேசுவினால் உயிர்த்தெழுதலை அடையும்படியாகவே நான் பிடிக்கப்பட்டேன். அதையே பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய் தொடருகிறேன். பவுல் இந்த விஷயத்தில் அவ்வளவு உறுதியாக இலக்கை நோக்கித் தொடருகிறார்). 13 சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேன் என்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன். பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, 14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

மரித்தோரின் உயிர்த்தெழுதலை அடைய வேண்டும் என்பதில் பவுலின் சிந்தை இதுவாகத்தான் இருந்தது. அவர் அதை ஏற்கனவே அடைந்து விட்டதாக நினைக்கவில்லை. மாறாக, அதை எப்படியாவது அடைய வேண்டும் என்பது அவருடைய நோக்கமாயிருந்தது. அவர் சொல்கிறார், “எனக்கும், என்னைக் குறித்த கிறிஸ்துவின் நோக்கம் நிறைவேறுவதற்கும் இடையே எதுவும் நிற்க முடியாது. நான் இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் செல்லப் போகிறேன். எதுவும் என்னை பின்னோக்கி இழுக்க முடியாது. பரம சிந்தையுள்ளவனாய், நான் இதை நோக்கி தொடர்ந்து முன்னே செல்லப் போகிறேன். இவ்வுலகத்தின் சூழ்நிலைகளோ, ஆளுமைகளோ, மற்றவர்களின் எண்ணங்களோ, இக்காலகட்டத்தின் மற்ற காரியங்களோ, என்னுடைய இந்தப் பிரதான இலக்கை விட்டு, என்னை விலகச் செய்ய முடியாது. மரித்தோரின் உயிர்த்தெழுதலை அடைவதுதான் என் பிரதான இலக்காகும்.”

நிச்சயமாக, பவுல் ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய வாழ்க்கையில், இதுதான் அவருடைய பிரதானமான இலக்காக இருந்தது என்றால், நம்முடைய மனப்பான்மை மட்டும் எப்படி வித்தியாசமாக இருக்க முடியும்? அவருடைய சிந்தையில் இராத விஷயங்களை, நம்முடைய சிந்தையில் நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அவருக்குள் இருந்த அதே சிந்தையை, நமக்குள்ளும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமல்லவா? “நான் அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து ஓடுகிறேன். நான் அதை இன்னும் அடையவில்லை. ஆனால் அதை அடைவதுதான் என் நோக்கமாயிருக்கிறது. எனக்கும், என் நோக்கத்தின் நிறைவேறுதலுக்கும் இடையே எதுவும் நிற்க முடியாது,” என்று நாமும் சொல்ல வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில், நம் ஒவ்வொருவரின் உயிர்த்தெழுதலைக் குறித்த சவால்தான் நம் முன் நிற்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.

இன்றைக்கு நம் நேரம் முடிந்து விட்டது. நாளை இதே நேரம், நான் உங்களை திரும்பவும் சந்திக்கிறேன். உயிர்த்தெழுதல் எவ்வாறு பழைய ஏற்பாட்டில் தெளிவாக, முன் கூட்டியே கணிக்கப்பட்டிருந்தது என்பதைக் குறித்து நான் நாளைய செய்தியில் விளக்கிச் சொல்வேன். வேதாகம தீர்க்கதரிசனத்தின் அதிசயிக்கத்தக்க துல்லியத்திற்கு இது மிகச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

லைக்
பகிரவும்