இராணுவமும் வேதமும்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
டெரெக் பிரின்ஸின் "இராணுவமும் வேதாகமமும்" என்ற போட்காஸ்ட் தொடரைக் கேளுங்கள். இதில் அவர் தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார். பகுதி 3-ல், தனது கல்வி, கிறிஸ்தவத்தின் மீதான அதிருப்தி, மற்றும் தத்துவங்கள் மூலம் அவர் தேடிய உண்மைகளை விவரிக்கிறார். இரண்டாம் உலகப் போர் மற்றும் அவரது மனசாட்சி சார்ந்த முடிவுகள், வேதாகமத்தில் அவர் பதில்களைக் கண்டடைய எவ்வாறு வழிநடத்தின என்பதை இதில் அறிந்து கொள்ளுங்கள்.
Transcript
மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. நேற்று நான் பிரிட்டனில் எனது கல்விப் பின்னணி பற்றிச் சொன்னேன், நான் பிரிட்டனின் மிகவும் மதிப்புமிக்க இரண்டு நிறுவனங்களாகிய ஈடன் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு அறிஞராக எப்படி படித்தேன் என்று சொன்னேன்.
எனது பதின்ம வயது முழுவதும், வாழ்க்கையில் எங்காவது ஒரு அர்த்தமும், நோக்கமும் இருக்க வேண்டும் என்ற ஆழமான, உள் நம்பிக்கை எனக்கு எப்போதும் இருந்தது. இருப்பினும், பிரிட்டனின் ஸ்டேட் சபையில் நான் அனுபவித்ததைப் போல, நான் கிறிஸ்தவத்தின் மீது ஏமாற்றமடைந்தேன். எனவே, சத்தியத்திற்கான எனது தேடலில், நான் தத்துவத்திற்கும், பல்வேறு ஓரியண்டல் அமைப்புகளுக்கும் குறிப்பாக, யோகாவிற்கும் திரும்பினேன்.
கல்வியில் நான் வெற்றியடைந்தேன், வழக்கத்திற்கு மாறாக சிறு வயதிலேயே, நான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பதவிபெற்றேன். இருப்பினும், எனது அனைத்து கல்வி வெற்றிகளிலும், நான் தேடுவதை நான் கண்டுபிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில், நான் இன்னும் குழப்பமாகவும், தடுமாற்றமாகவும் இருந்தேன். பதிலைக் கண்டுபிடிப்பதில் கிறிஸ்தவம் செய்ததை விட தத்துவம் உதவவில்லை. நான் வேறு எங்கே பார்க்க முடியும்?
எனது வாழ்க்கையில் இந்த கட்டத்தில், இரண்டாம் உலகப் போர் வெடித்து, ஐரோப்பா முழுவதையும் கிளர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியது. இந்தப் போரின் தாக்கத்தால் நிரந்தரமாக மாறிய இலட்சக்கணக்கான உயிர்களில் என்னுடையதும் ஒன்று. நான் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு அழைக்கப்பட போகிறேன் என்பதை உணர்ந்தேன் – அமெரிக்காவில் டிராஃப்டட் என்று சொல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த நிலை வந்தால் என்ன செய்வேன் என்று பல வருடங்களாக யோசித்தேன். மனசாட்சிக்கு விரோதமாக இருப்பதே சரியானது என்று நான் எப்போதும் நினைத்தேன். இருப்பினும், எனது குடும்பப் பின்னணி காரணமாக, அது மிகவும் கடினமான முடிவாகும். நான் எனது முடிவுகளை கிறிஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டதாக எடுக்கவில்லை, நான் அவற்றை தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டேன்.
இறுதியில், நான் ஒரு மனசாட்சி எதிர்ப்பாளரின் நிலைப்பாட்டை எடுத்து, ஒரு தீர்ப்பாயத்துக்கு (நியாய சபைக்கு) முன் சென்றேன். எனது ஆட்சேபனைகள் (எதிர்ப்புகள்) செல்லுபடியாகும் என ஏற்றுக்கொள்ளப்பட்டு நான் இராணுவ மருத்துவப் படையில் ஒரு மருத்துவமனை உதவியாளராக நியமிக்கப்பட்டேன், நான் ஒருபோதும் இராணுவ ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை என்ற உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டேன். எனவே, எனது வாழ்வின் ஒரு கட்டத்தின் முடிவில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி, முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைக்கும், முற்றிலும் மாறுபட்ட சூழலுக்கும், அறியப்படாத எதிர்காலத்திற்கும் செல்லவிருந்தேன். என்னை மிகவும் தொந்தரவு செய்த விஷயம் என்னவென்றால், நான் பழகிய நூலகங்களை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான். அதுவரை, ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய, சிறந்த கையிருப்பு நூலகங்கள் சிலவற்றிலுள்ள ஒரு புத்தகத்தை எந்த நேரத்திலும் நான் பார்க்க விரும்பினேன். இப்போது நான் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு சென்று கொண்டிருந்தேன், எனது உலக உடைமைகள் அனைத்தையும் ஒரு நீண்ட, கருப்பு பையில் (அதை இராணுவத்தில் “கிட் பேக்” என்று அழைப்பார்கள்) எடுத்துச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும், மேலும், புத்தகங்கள் கனமானவையாக இருந்தது. நான் என்னுடைய நிறைய புத்தகங்களை இழுத்துச் செல்ல விரும்பவில்லை, இருப்பினும், நான் ஏதாவது படிக்க விரும்பினேன்.
எனவே, அந்த நேரத்தில், நான் ஒரு தத்துவ ரீதியில் என்னை நியாயப்படுத்தினேன், நான் சொன்னேன், “இப்போது, உலகத்திலே, மனித வரலாற்றில் வேறு எந்தப் புத்தகத்தையும் விட பரவலாக வாசிக்கப்பட்ட மற்றும் செல்வாக்கு மிக்க ஒரு புத்தகம் உள்ளது, மேலும், இது ஒரு வகையான தத்துவப் புத்தகம், எனக்கு அதைப் பற்றி அதிகம் தெரியாது. நான் அதைப் படிக்க வேண்டும்.” நான் மனதில் வைத்திருந்த புத்தகம் என்னவென்று தெரியுமா? வேதாகமம். அந்த நாட்களில் கூட மனித வரலாற்றில் வேதத்தின் தனித்துவமான முக்கியத்துவத்தை அடையாளம் காண எனக்கு போதுமான உணர்வு இருந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சந்தேகத்திற்கு இடமின்றி, இது மனித இனத்தின் வரலாற்றில் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட மற்றும் செல்வாக்கு மிக்க புத்தகம் என்று நான் அழைத்தேன். அதனால் என்னுடன் ஒரு வேதத்தை எடுத்துக் கொண்டு இராணுவத்தில் படிப்பது என் தத்துவக் கடமை என்று தீர்மானித்தேன். நான் எனக்கு ஒரு நல்ல புதிய கருப்பு பைபிளை வாங்கி, அதனுடன் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்ந்தேன்.
ஆனால், இராணுவத்தில் ஒருவர் பைபிளைப் படிக்கும்போது அவர் மிகவும் கவனத்தை ஈர்க்கக் கூடியவராக மாறுவார் என்பதை நான் உணரவில்லை. புதிதாக பட்டியலிடப்பட்ட இருபத்தி நான்கு சிப்பாய்களுடன் பாராக் அறையில் எனது முதல் நாள் இரவு எப்போதும் எனக்கு நினைவில் இருக்கும். நான் படுக்கையில் அமர்ந்து பைபிளைத் திறந்து படிக்க ஆரம்பித்தேன். நான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன், “நீ எந்த புத்தகத்தையும் எதிலிருந்து தொடங்குவாய்?” அதற்கான பதில், “முதல் அதிகாரத்திலிருந்து.” எனவே, நான் ஆதியாகமம், அதிகாரம் ஒன்றில் வசனம் ஒன்றைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், மற்ற வீரர்கள், நான் வேதத்தைப் படிப்பதை பார்த்தவுடன், ஒருவிதமான விசனமுள்ள நிசப்தம் அறை முழுவதும் உண்டானது, எல்லோரும் என்னை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால், அசாதாரணமான விஷயம் என்னவென்றால், நான் வேதத்தை படிக்காதபோது, வேதத்தைப் படிக்கும் பெரும்பாலான மக்கள் வழிநடத்தும் வாழ்க்கையைப் போலல்லாத ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் திரும்பிப் பார்க்கும்போது நான் வெட்கப்படுகிறேன், ஆனால் நான் இதைச் சொல்ல வேண்டும், நான் விஸ்கியை அதிகமாகக் குடிப்பவனாக இருந்தேன். நான் ஒரு குடிகாரன் அல்ல, ஆனால் நான் விரக்தியடையும் போதெல்லாம் அதிலிருந்து விடுவிக்க விஸ்கிக்கு திரும்புவேன், என்னை விடுவிக்க ஒரே வழி, அதிகமாகக் குடிப்பதுதான். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், நான் வழக்கமாக நிந்தனை செய்யும் ஒரு மனிதன். நான் இதை ஆழ்ந்த வருத்தத்துடனும், வெட்கத்துடனும் சொல்கிறேன், ஆனால் நான் தொடர்ந்து அசுத்தமான அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். நான் இராணுவத்திற்கு சென்றபோது நான் மோசமாக இருந்தேன், இராணுவத்தில் இருந்த ஆறு மாதங்களுக்கு பிறகும் நான் இன்னும் மோசமாக இருந்தேன்.
அடிப்படையில், பிரிட்டிஷ் இராணுவம் மனிதகுலத்தில் எங்கும் காணப்படாத மனிதர்களின் மிகவும் அவதூறான குழுவாக இருக்கலாம். நான் மற்றவர்களைப் போலவே மோசமாக இருந்தான்.
எனவே, நான் என் வேதத்தைப் பிடித்து, விஸ்கியைக் குடித்து, தூஷித்து, அனைவரையும் குழப்பி, என்னை நானே குழப்பிக் கொண்டேன். வேதம் என்னை குழப்பியது. நான் படித்ததில் எனக்கு புரியாத முதல் புத்தகம் வேதம் ஆகும். அதை எப்படி வகைப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. அது சரித்திரமா? அது புராணமா? அது கவிதையா? அது தத்துவமா? இது எந்த வகையிலும் பொருந்தவில்லை. மேலும், இது மிகவும் கடினமாகவும், சலிப்பாகவும் இருப்பதைக் கண்டேன். ஆனால் நான் ஒரு உறுதியான நபராக இருந்தேன், நான் சொன்னேன், “எந்தப் புத்தகமும் என்னை வெல்லப்போவதில்லை. நான் இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டேன், ஆரம்பம் முதல் இறுதிவரை படிக்கப் போகிறேன்.” அதனால் ஒவ்வொரு நாளும் நான் உட்கார்ந்து வேதத்திலிருந்து ஏதாவது வாசித்தேன். உண்மையில், நான் அதை ஆதியாகமம் அதிகாரம் ஒன்று, வசனம் ஒன்றில் தொடங்கி தொடர்ச்சியாக வரிசையாகப் படித்தேன், நான் அதைத் தொடர்ந்து படித்தேன்.
இராணுவத்தில் சுமார் ஒன்பது மாதங்களின் முடிவில், நான் யோபு புத்தகத்தில் எங்கோ சென்றேன், பின்னர், என் வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றம் ஒன்று நடந்தது.
எனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில், எனது குழு இங்கிலாந்தின் மற்றொரு பகுதியான யார்க் ஷைருக்கு மாற்றப்பட்டது. இப்பொழுது, நான் எப்பொழுதும் தென் இங்கிலாத்தில் வளர்ந்தவன். யார்க் ஷைரில் உள்ளவர்கள் வழக்கத்திற்கு மாறாக நட்பானவர்களும், விருந்தோம்பல் பண்புள்ளவர்களாகவும் இருந்ததை நான் கண்டுபிடித்தேன், மேலும் அவர்கள் சிப்பாய்களாக இருந்த எங்களை தங்களுடைய வீடுகளுக்குச் சாப்பாட்டிற்காகவும், மற்றும் பலவற்றிற்காகவும் அழைத்தார்கள். அதனால் நான் கிறிஸ்தவர்களாக இருந்த சிலரின் வீட்டிற்கு அழைக்கப்பட்டேன். ஆனால் அவர்கள் நான் அறிந்த மாதிரியான கிறிஸ்தவர்கள் அல்ல. முதலாவதாக, அவர்கள் தாழ்மையானவர்களாகவும், படிக்காதவர்களாகவும் இருந்தார்கள். இது எனக்கு மிகவும் தெளிவாக இருந்தது, ஆனால் அவர்களில் ஏதோ ஒரு வித்தியாசம் இருந்தது. என்னால் அதை வகைப்படுத்த முடியவில்லை, ஆனால் நான் அவர்களை சந்தித்த தருணத்திலும், அவர்களின் வீட்டிற்குச் சென்ற தருணத்திலும் அதை உணர்ந்தேன்.
அவர்கள் என்னை உணவுக்கு அழைத்தார்கள், நாங்கள் மேஜையை சுற்றி அமர்வோம், அவர்கள் செய்த முதல் காரியம் உணவின் மீது ஜெபம் செய்வார்கள். உணவுக்காக ஜெபம் செய்யும் எந்த வீட்டிலும் நான் இருந்ததில்லை, ஆனால் நான் அதற்கு என்னை சரிப்படுத்திக்கொண்டு, சாப்பிட்டு மகிழ்ந்தேன், பின்னர், உணவின் முடிவில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அவர்கள் மீண்டும் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்கள். அந்த பெரிய வட்ட வடிவிலான மேஜையைச் சுற்றி சுமார் ஏழு அல்லது எட்டு பேர் இருந்தார்கள். அவர்கள் மாறி மாறி ஜெபிக்கிறார்கள் என்பதையும், என் முறை வரப்போகிறது என்பதையும் அறிந்து நான் திகிலடைந்தேன்!
இப்போது, நான் என் வாழ்நாளில், எங்கும் பொது இடங்களில் சத்தமாக ஜெபித்ததில்லை, என்ன சொல்வது அல்லது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. பீதி என்னைப் பற்றிக் கொண்டது என்று சொன்னால் அது மிகையாகாது. என் முறை வந்ததும், நான் என் வாயைத் திறந்து, இந்த வார்த்தைகளை உளறிக்கொண்டிருந்தேன், “ஆண்டவரே, உம்மை நம்புகிறேன், என் அவநம்பிக்கையில் எனக்கு உதவுங்கள்.” நான் அதைச் சொன்ன பிறகு, என் வாய் ஒரு பொறியைப் (கண்ணி) போல மூடியது, மேலும் என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை. நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன், “எனக்கு அந்த வார்த்தைகள் எங்கிருந்து வந்தது? நான் எவ்வாறு அப்படியெல்லாம் சொல்ல முடியும்?”
ஆனால், நான் அந்த வீட்டுப் பெண் மீது குறிப்பாக ஆர்வமாக இருந்தேன்: ஒரு சிறிய, பெலவீனமான பெண், ஐம்பதுகளின் பிற்பகுதியில், வெளிப்படையாக மிகவும் கடினமான வாழ்க்கையை கொண்டிருந்தார். மேலும், அந்த பெண் என்னை முற்றிலும் உலுக்கிய ஒரு விஷயத்தைச் சொன்னார். முதலாம் உலகப் போரில் தனது கணவருக்கு இராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக அவள் கூறினார், ஏனென்றால், அவளது கணவருக்கு ஒரு நூரையீரலில் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சரி, அவருக்கு இராணுவ விலக்கு பெற அது சரியான மருத்துவ நோயறிதலாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். பின்னர், அவள் என்னிடம், “நான் பத்து வருடங்களாக என் கணவருக்காக தினமும் ஜெபம் செய்தேன்,” என்று சொன்னாள். மேலும், “பத்து வருஷத்துக்கு யாராவது தினமும் ஏதாவது ஜெபிக்க முடியுமா?” என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். ஒரு நபர் அப்படி செய்வதைக் குறித்து என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. ஆனால் அவள் சொன்னது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவள் சொன்னாள், “பத்து வருடங்களின் முடிவில் நான் ஒரு அறையில் தனியாக ஜெபம் செய்து கொண்டிருந்தேன். எனது கணவர் படுக்கை அறையில், தனது படுக்கையில் உட்கார்ந்து இருந்தார், படுக்கையில் முடங்கிக்கொண்டு, இருமலில் இரத்தம் சிந்திக்கொண்டிருந்தார். நான் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, என்னால் தெளிவான சத்தத்தைக் கேட்க முடிந்தது, அது சொன்னது, “உரிமையாக்கிக்கொள்!” அவள் சொன்னாள், “ஆண்டவரே, நான் இப்பொழுது உரிமையாக்கிக் கொள்கிறேன்! என்று நான் சத்தமாகச் சொன்னேன்.” அவள் ஒரு அறையிலே அப்படிச் சொன்னபோது, மற்றொரு அறையில் இருந்த அவளது கணவர் காசநோயிலிருந்து சுகத்தைப் பெற்றுக்கொண்டார். மருத்துவரிடம் பரிசோதனை செய்ய சென்றபோது, பாதிக்கப்பட்ட நுரையீரல் ஒருபோதும் பாதிக்கப்படாத நுரையீரலை விட வலிமையாக இருக்கிறது என்று மருத்துவர் அவரிடம் கூறினார்.
இப்போது, இவர்கள் மிகவும் எளிமையான, படிக்காத மக்களாக இருந்தனர். அவர்கள் எந்தவிதமான ஏமாற்றுத்தனம் அல்லது மோலோட்டமான தன்மை இல்லாதவர்கள் என்று நான் கூறுவேன். இந்தப் பெண்மணி பத்து வருடங்கள் ஜெபித்து, அவரது கணவர் காசநோயால் குணமடைந்தார் என்றக் கதையைக் கேட்டபோது, எனக்குள் ஏதோ ஒன்று கேட்டது, “இதையா நீ தேடிக்கொண்டிருக்கிறாய்?” நான் யோசித்தேன், “இதுவாக இருக்கலாம்!” ஆனால் அவர்கள் எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் உண்மையாக சொல்ல முடியும், அவர்கள் கிரேக்க மொழியில் பேசியிருந்தால், நான் அவர்களை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பேன். அவர்களிடம் என்ன இருந்தது அல்லது அதை எப்படி பெற்றுக்கொண்டார்கள் என்பதை அவர்களால் எனக்கு தெரிவிக்க முடியவில்லை.
மேலும், என் மனதில் மூன்று கேள்விகள் இருந்தன: நான் இதில் ஈடுபட்டால், எனது பல்கலைக்கழக வாழ்க்கை என்னவாகும்? என் நண்பர்கள் என்ன சொல்லுவார்கள்? மேலும், என் குடும்பத்தினர் என்ன சொல்லுவார்கள்? நான் ஒரு மனசாட்சியை எதிர்ப்பவனாக மாறியது மோசமானது, ஆனால் நான் ஒரு மத வெறியனாக மாறுபவனாக இருந்தால்? என் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? அதனால், இந்த மூன்று கேள்விகளும் என் மனதைக் குடைந்து கொண்டிருந்தன. எனது பல்கலைக்கழக வாழ்க்கை என்னவாகும்? என் நண்பர்கள் என்ன சொல்லுவார்கள்? என் குடும்பத்தினர் என்ன சொல்லுவார்கள்? நான் இன்னும் குழப்பமடைந்தேன், விரக்தியடைந்தேன்.
எனவே, நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் நான் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை சத்தியத்தைத் தேடும் எனது கதையை தொடர்கிறேன். நான் தேடுவதை எப்படிக் கண்டுபிடித்தேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
குறியீடு: RP-R030-103-TAM









