திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுதலின் நோக்கம்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
தேவனுடைய ஜனங்களுக்கான அவருடைய அந்திக்கால மறுசீரமைப்பு நோக்கத்தைக் கண்டறியுங்கள். இஸ்ரவேலரை மீண்டும் ஒன்றுசேர்ப்பதன் முக்கியத்துவத்தையும், அது அவர்களின் ஆதி மீட்புடன் எவ்வாறு தொடர்புடையது என்பதையும் இந்தச் செய்தி விளக்குகிறது. உடன்படிக்கையின் அடிப்படையில் கர்த்தருடனான தனிப்பட்ட உறவை இது வலியுறுத்துகிறது. 'மறுசீரமைப்பு' தொடரின் 14-ஆம் பாகமான இது, நற்செய்தி மற்றும் திருவசனத்தோடு இது எவ்வாறு இணைகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
Transcript
தேவனுடைய ஜனங்களுக்கான அவருடைய முடிவுகால புதுப்பித்தலின் நோக்கம் எவ்வாறு நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒன்றாகத் தொடர்ந்து பார்க்கும்போது, இன்றும் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. எவ்வாறு புதுப்பிக்கப்படுதல் நடக்கின்றது என்பதைக் குறித்து நேற்று நாம் பார்த்தோம். வேதாகமத் தீர்க்கதரிசனங்கள், இஸ்ரவேல் திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுகிற நிகழ்வைக் குறித்து மட்டும் கணித்துச் சொல்லவில்லை என்பதையும் நாம் பார்த்தோம். திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுகின்ற நிகழ்வு, எவ்வாறு, எந்த வழிமுறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டும் என்பதை எடுத்துக் காண்பிக்கக்கூடிய மிகவும் தெளிவான, துல்லியமான படங்களையும் அது நமக்குக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டிற்கு, ஒரு இடத்தில், நான் மீன் பிடிக்கிறவர்களையும், வேட்டையாடுகிறவர்களையும் பயன்படுத்துவேன் என்று தேவன் சொல்கிறார். இன்னொரு இடத்தில், தேவன் தம்மை குயவனாகவும், இஸ்ரவேலை தம்முடைய கரத்தினால் வனைந்து உருவாக்குகிற களிமண் பாத்திரமாகவும் ஒப்பிட்டுப் பேசுகிறார். இந்தச் சத்தியத்தைக் குறித்த ஆராய்ச்சியில், இன்று நான் இன்னும் ஒரு அடி முன்னே எடுத்து வைத்துச் செல்லப் போகிறேன். திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுதலுக்கான நோக்கத்தைக் குறித்து நான் பேசப் போகிறேன்.
மோசேயின் கீழ் இஸ்ரவேலை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் விடுதலையாக்கினதன் நோக்கமும், இப்பொழுது இஸ்ரவேலை தேவன் திரும்பக் கூட்டிச் சேர்ப்பதன் நோக்கமும் முழுமையாய் ஒன்றாய் இசைந்திருக்கிறது. அப்பொழுது அவர் தம்முடைய நோக்கத்தை இவ்வாறு தெரிவித்தார். யாத்திராகமம் 19:4-5 வசனங்களை வாசிப்போம்.
4 நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக் கொண்டதையும் நீங்கக் கண்டிருக்கிறீர்கள். 5 இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்தச் சம்பத்தாயிருப்பீர்கள். பூமியெல்லாம் என்னுடையது.
இங்கு இரண்டு குறிப்புகளை நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். முதலில், தேவன் பிரதானமாக ஒன்றைச் சொல்கிறார், “நான் உன்னை என்னோடு சேர்த்துக் கொண்டேன்.” அவர்களுக்கு ஒரு பிரமாணத்தைக் கொடுப்பதோ அல்லது ஒரு தேசத்தைக் கொடுப்பதோ, தேவனுடைய முதன்மையான நோக்கமல்ல. மாறாக, அவர்களைத் தம்மோடு ஒரு நேரடியான, தனிப்பட்ட உறவிற்குள் கொண்டு வருவதுதான் அவருடைய பிரதானமான நோக்கமாகும். தேவன் மனுஷனை நடத்துகிற விஷயங்களில், இதுதான் எப்பொழுதும் முதன்மையான நோக்கமாயிருக்கிறது. மனுஷனைத் தம்மோடு ஒரு தனிப்பட்ட உறவிற்குள் வேரூன்றச் செய்ய வேண்டும் என்பதைத்தான் தேவன் விரும்புகிறார். ஆனால் இஸ்ரவேலின் வரலாற்றில் சோகமான, பெருந்துயரமான ஒன்று நிகழ்ந்து விட்டது. வேறு எதைக் காட்டிலும், நியாயப்பிரமாணத்தைக் காட்டிலும், தேசத்தில் அவர்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் காட்டிலும், தேவனுடைய மற்ற எல்லா ஆசீர்வாதங்கள் மற்றும் நன்மைகளைக் காட்டிலும் மேன்மையான ஒன்றாக, பிரதானமான ஒன்றாக, தேவனோடு அவர்களுக்கிருக்கும் தனிப்பட்ட உறவை, அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை என்பதுதான் அந்த சோகமான நிகழ்வாகும்.
இரண்டாவது குறிப்பு, இந்த உறவு ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் அமைந்திருந்தது. தேவன் சொல்கிறார், “நீங்கள் என் உடன்படிக்கையை கைக்கொள்வீர்கள் என்றால், உங்களுக்கும் எனக்கும் இடையேயான உறவு நிலைவரப்படும்.” இவ்விரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, தேவனோடுள்ள உறவும், உடன்படிக்கையும் ஒன்றோடொன்று நேரடியாக இணைக்கப்பட்டிருக்கின்றன. வேதாகமம் அதைத்தான் சொல்கிறது. அதாவது, எந்த ஒரு நேரத்திலும், ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில்தான், தேவனோடு ஒரு நிரந்தர உறவு உண்டாகிறது என்று வேதாகமம் சொல்கிறது.
இதே கோட்பாடுகள், புதுப்பிக்கப்படுதலைக் குறித்த தீர்க்கதரிசனங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று இப்பொழுது நான் விரும்புகிறேன். முதலில், எரேமியா 50: 4-5 வசனங்களை நாம் பார்ப்போம்:
4 அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள். அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்து வந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்கிறார். 5 மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்து கொள்வோம், வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.
எபிரெய பாஷையின் மூல வடிவத்தில் இது இவ்வாறு சுட்டிக் காண்பிக்கப்பட்டிருக்கிறது: சீயோனுக்குச் செல்லும் வழி, ஒரு நித்திய உடன்படிக்கையின் மூலமாய் கர்த்தரோடு இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் கர்த்தருக்கும் இஸ்ரவேலுக்கும் இடையேயான உடன்படிக்கையின் உறவைப் புதுப்பிப்பதுதான், முழுமையான, பரிபூரணமான, நித்தியத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடிய புதுப்பித்தலுக்கு ஒரே வழியாய் இருக்கிறது. தேவனும், அதைத்தான் செய்வேன் என்று இங்கு அறிவிக்கிறார்.
இப்பொழுது நாம் எரேமியா 31:31-34 வசனங்களை வாசிப்போம். இது முழுமையாய் அங்கு சொல்லப்பட்டிருக்கிறது:
31 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்கிறார். அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும், யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். 32 நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல. ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப் போட்டார்களே என்று கர்த்தர் சொல்கிறார். 33 அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப் போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்கிறார். 34 இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்து கொள் என்று போதிப்பதில்லை. அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும், எல்லோரும் என்னை அறிந்து கொள்வார்கள் என்று கர்த்தர் சொல்கிறார். நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
இந்தத் தீர்க்கதரிசனத்தோடு தொடர்புடைய சில குறிப்புகளை நான் வெளிக் கொண்டு வர விரும்புகிறேன். முதலில் ஒன்றை நாம் கவனித்தாக வேண்டும். முதல் உடன்படிக்கை, தேவனை இஸ்ரவேலுக்கு ஒரு கணவனாக்கியது. சீனாய் மலையில், தேவன் அவர்களோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தபோது, அவர் அவர்களுக்கு ஒரு புருஷனாய் இருப்பதற்குரிய உறவையும், பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அந்த நேரத்திலிருந்து, வேதவசனம் அந்த அர்த்தத்தில்தான் தொடர்ந்து மாறுபடாமல் ஒரே நிலையில் பேசுகிறது. ஆனாலும் அவர்கள் தங்களுடைய உண்மையற்ற நடத்தையினால், தேவன் தங்களுக்குப் புருஷனாயிருந்த அந்த உறவை முறித்தார்கள். தேவன் இஸ்ரவேலைப் புதுப்பித்தபோது, அவர் அவர்களோடு ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவார். அது இந்த உறவை திரும்பவும் நிலைநிறுத்தும். ஆனால் இந்தப் புதிய உடன்படிக்கை என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். அது ஒருபோதும் முறிக்கப்படாது. சீனாய் மலையில் ஏற்படுத்தப்பட்ட முதல் உடன்படிக்கையிலிருந்து இதை வித்தியாசமாக்கும்படி, சில தனித்துவமான அம்சங்கள் இதில் இருக்கும். முதலில், இதில் தேவனுடைய பிரமாணம் உள்ளே எழுதப்படும். தேவனுடைய பிரமாணம் இனி, கற்பலகைகளில் எழுதப்பட்டவைகளாய் பார்க்கப்பட மாட்டாது. அவை அவர்களுடைய இருதயங்களில் எழுதப்படும். அவை அவர்களுடைய உள்ளான ஒரு பகுதியாகவே மாறி விடும்.
இரண்டாவதாக, ஒவ்வொரு இஸ்ரவேலனும் கர்த்தரோடு ஒரு நேரடியான, தனிப்பட்ட உறவைப் பெற்றுக் கொள்வான். “கர்த்தரை அறிந்து கொள்,” என்று ஒருவனும் இன்னொரு இஸ்ரவேலனிடம் சொல்ல வேண்டிய தேவையிருக்காது. காரணம், அவர்கள் எல்லோரும் தேவனை தனிப்பட்ட விதத்தில், நேரடியாக, இன்னும் நெருக்கமாக அறிந்து கொள்வார்கள். காரணம், இதுதான் உடன்படிக்கையின் நோக்கமாயிருக்கிறது. “சிறியவன் முதல் பெரியவன் வரை” என்று இவ்வசனங்கள் சொல்வது, சுவாரசியமாக இருக்கிறது. பெரியவன் முதல் சிறியவன் வரை என்று இது சொல்லவில்லை. மிகவும் தாழ்மையான, பெரும்பாலும் எல்லோராலும் அறியப்படாத ஆவிக்குரியவரிகளிலிடமிருந்து இது ஆரம்பிக்கும் என்பதுபோலத் தெரிகிறது.
இந்தப் புதிய உடன்படிக்கையின் மூன்றாவது அம்சம் இதுதான். இஸ்ரவேல் தேவனுக்கு விரோதமாகச் செய்த பாவம் மற்றும் முரட்டாட்டத்தினால் உண்டான கறையை நிரந்தரமாக அகற்றுவேன் என்று தேவனே இங்கு சொல்கிறார். அவைகளை நான் இனி நினைக்க மாட்டேன் என்றும் அவர் சொல்கிறார்.
இப்பொழுது நாம் இன்னொரு தீர்க்கதரிசனத்தைப் பார்க்கப் போகிறோம். தேவன் இஸ்ரவேலை திரும்பக் கூட்டிச் சேர்த்து, அவர்களுக்கு ஒரு கணவனாய் இருப்பதற்குரிய உறவில் திரும்ப நுழையும்போது, அவர் ஏற்படுத்துகிற ஒரு உடன்படிக்கையைக் குறித்து இதில் பேசுகிறார். இந்தத் தீர்க்கதரிசனம், ஓசியா 2-ம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. முதலில், நான் 14-16 வசனங்களை வாசிக்கிறேன்.
14 ஆயினும், இதோ, நான் அவளுக்கு (இங்கு அவள் என்று இஸ்ரவேலைக் குறித்துதான் தேவன் இவ்வாறு சொல்கிறார்) நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக் கொண்டு போய், அவளோடே பட்சமாய் பேசி, 15 அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன். அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும், தான் எகிப்து தேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். 16 அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்வாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
இங்கு ஈஷி மற்றும் பாகாலி என்ற இரண்டு வார்த்தைகளுமே “என் கணவர்” என்ற அர்த்தத்தில்தான் வருகின்றன. ஆனால் இவையிரண்டும் வித்தியாசமான வெவ்வேறு நிலையில் இருக்கின்றன. “கணவன்” என்பதற்கான தற்கால எபிரெய வார்த்தை, இனி பாகாலி என்று பயன்படுத்தப்படாது, ஈஷி என்றுதான் சொல்லப்படும். இது ஒரு புதிய வகையான கணவன் உறவைக் குறிக்கிறது.
இப்பொழுது நான் ஓசியா புத்தகத்தின் அதே 2-ம் அதிகாரத்தில், 18-20 வசனங்களை வாசிக்கிறேன்.
18 அக்காலத்தில் நான் அவர்களுக்காக காட்டுமிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும் ஒரு உடன்படிக்கை பண்ணி, வில்லையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய் படுத்துக் கொண்டிருக்கப் பண்ணுவேன். 19 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்வேன். நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்வேன். 20 உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்வேன். நீ கர்த்தரை அறிந்து கொள்வாய்.
இங்கு கணித்துச் சொல்லப்பட்டிருக்கிற சில காரியங்களை இப்பொழுது நாம் பார்ப்போம். முதலில், தேவனுக்கு இஸ்ரவேலுடன் வனாந்திரத்தில் ஒரு நேரம் நியமிக்கப்பட்டிருக்கிறது. தேவன் இஸ்ரவேலை ஒரு தேசமாய் தனிப்பட்ட விதத்தில், நேரடியாக கையாளுவார் என்றே நான் நம்புகிறேன். இடையில் அங்கே ஒருவரும் இருக்க மாட்டார்கள். அங்கே எந்தப் பிரசங்கியார்களும் இருக்க மாட்டார்கள். கர்த்தருக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே அங்கே தனிப்பட்ட விதத்தில், நேரடியான ஒரு சந்திப்பு நடக்கும். தேவனே அதற்கு நேரத்தையும், இடத்தையும் முன் குறித்திருக்கிறார். அது வனாந்தரத்தில் எங்காவது ஒரு இடத்தில் நடக்கும்.
இரண்டாவதாக, தேவன் இஸ்ரவேலை ஆகோர் பள்ளத்தாக்கு எனும் உபத்திரவத்தின் வழியாக, அவர்களுடைய உரிமைச் சுதந்தரத்திற்குள் நடத்துவார். நிச்சயமாக, இப்பொழுது அவர்கள் “உபத்திரவத்தின் பள்ளத்தாக்கு” வழியாகத்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
மூன்றாவதாக, இஸ்ரவேலோடு தேவனுக்கிருந்த கணவன் என்ற உறவு திரும்பவும் நிலைநிறுத்தப்படும், ஆனால் அது புதிய தளத்தில் நிலைநிறுத்தப்படும். சீனாய் மலையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் மூலம் உண்டான அந்தப் பழைய உறவைக் குறிக்கும்படி பயன்படுத்தப்பட்ட வார்த்தை, ‘பாகாலி’ என்பதாகும். ஆனால் இந்தப் புதிய உறவைக் குறிக்கும்படி பயன்படுத்தப்படுகிற வார்த்தை ‘ஈஷி’ என்பதாகும். இதன் அர்த்தம், புதிய உயர்வான தளத்தில் உருவாகிற கணவன் உறவைக் குறிக்கிறது.
திரும்பவும் சொல்கிறேன், இந்தப் புதிய உறவு ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் உண்டானதாயிருக்கும். ஒரு உடன்படிக்கை இல்லாமல், தேவன் எந்தவொரு நிரந்தரமான உறவையும் ஒருபோதும் வைத்துக் கொள்வதில்லை என்று நாம் பார்த்தோம். ஒரு விதத்தில் பார்க்கும்போது, இந்தப் புதிய உறவு, ஒரு திருமண உடன்படிக்கையாகும். இந்தப் புதிய உறவிலிருந்து, இஸ்ரவேல் மெய்யான சமாதானத்தைத் திரும்பவும் பெற்றுக் கொள்கிறது. வில்லும், ஈட்டியும், யுத்தமும் தேசத்திலிருந்து முற்றிலுமாய் நீக்கப்படும்.
பிறகு திரும்பவும், தேவன் இங்கே “விவாகம் (திருமணம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இது நாம் ஏற்கனவே என்ன சொன்னோமோ, அதோடு பொருந்துகிறது. அதாவது தேவனுக்கும், இஸ்ரவேலுக்கும் இடையே ஒரு புதிய திருமண உறவு அங்கே நியமிக்கப்படுகிறது.
“அப்பொழுது நீங்கள் கர்த்தரை அறிந்து கொள்வீர்கள்,” என்று தேவன் இங்கே கடைசி வாக்கியத்தில் இஸ்ரவேலிடம் சொல்கிறார். இதைத்தான் இதுவரை நாம் பார்த்த மற்ற வசனங்களிலும்கூட பார்த்திருக்கிறோம். வேறு வார்த்தைகளில் சொன்னால், தேவனோடு தனிப்பட்ட விதத்தில் ஒரு நேரடியான உறவு உங்களுக்கு உண்டாகியிருக்கும் என்று சொல்லலாம்.
ஆக, கோட்பாடுகள் எப்பொழுதும் அதே கோட்பாடுகள்தான். தேவன் இஸ்ரவேலை திரும்பவும் கூட்டிச் சேர்க்கப் போகிறார். அது ஒரு உடன்படிக்கையில் அடிப்படையில் இருக்கப் போகிறது. இந்த உடன்படிக்கை, இஸ்ரவேலோடு தேவனுக்கிருக்கும் உறவை, ஒரு கணவன் என்ற புதிய உறவாக நிலைநிறுத்தும். இது இஸ்ரவேலை தேவனோடு தனிப்பட்ட விதத்தில் ஒரு நேரடியான உறவிற்குள் கொண்டு வரும். அங்கு மத்தியஸ்தர் என்று ஒருவரும் தேவையில்லை. அவர்களுக்கும் கர்த்தருக்கும் இடையே வேறு ஒருவரும் இருக்க மாட்டார்கள். “கர்த்தரை அறிந்து கொள்” என்று அவர்களில் ஒருவனும் இன்னொருவனிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த உடன்படிக்கையில் அவர்களில் ஒவ்வொருவரும் கர்த்தரை நேரடியாக, தனிப்பட்ட விதத்தில் அறிந்து கொள்வார்கள்.
ஆக, இதுதான் தேவன் இஸ்ரவேலை திரும்பக் கூட்டிச் சேர்க்கிற கிரியைக்கான நோக்கத்தின் ஒட்டுமொத்த படமாக இருக்கிறது. ஒன்றைக் குறித்து என்னுடைய முந்திய செய்திகளில் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். திரும்பக் கூட்டிச் சேர்க்கிற கிரியையின் ஆரம்பம், அரசியல்ரீதியாகவும், பூகோளரீதியாகவும் இருக்கும். ஆனால் இதில் தேவனுடைய உச்சகட்ட நோக்கம் எப்பொழுதும் ஆவிக்குரிய ஒன்றாகத்தான் இருக்கும். எல்லா மனுஷரைக் குறித்தும், யூதராய் இருந்தாலும், புறஜாதியாராய் இருந்தாலும், நீங்கள் யாராய் இருந்தாலும், நீங்கள் எந்த இடத்தில் இருந்து வந்திருந்தாலும், எல்லா மனுஷர்களைக் குறித்தும், தேவனுடைய உச்சகட்ட நோக்கம், தனிப்பட்ட விதத்தில், நேரடியான, நெருக்கமான ஒரு ஐக்கியத்தை உங்களோடு உருவாக்கி, நிலைநிறுத்திக் கொள்வதுதான். அந்த உறவு, ஒரு உடன்படிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இஸ்ரவேலையும், மற்ற எல்லாத் தேசங்களையும் இரட்சிக்கும்படி வந்த மெசியாவும், இரட்சகருமாகிய இயேசுவின் இரத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில்தான் இன்று அந்த உறவு அமைந்திருக்கிறது.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை இஸ்ரவேலின் புதுப்பித்தலைக் குறித்த இந்தத் தலைப்பில் என்னுடைய கடைசி செய்தியாக இருக்கும். இஸ்ரவேலைப் புதுப்பிக்கும்படி தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது, அதற்கு நம்முடைய பதிற்செய்கை என்னவாக இருக்க வேண்டும் என்ற மிகவும் முக்கியமான, நடைமுறைக்கேற்ற கேள்வியை நான் கேட்டு, அதற்குப் பதில் சொல்லப் போகிறேன்.
குறியீடு: RP-R013-104-TAM









