தேவனுடைய ஜனங்களுக்கான அவருடைய முடிவுகால புதுப்பித்தலின் நோக்கம் எவ்வாறு நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒன்றாகத் தொடர்ந்து பார்க்கும்போது, மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.

நேற்று நான், அப்போஸ்தலர் நடபடிகளில் காண்பிக்கப்பட்டிருக்கிற ஆதித்திருச்சபையை, இன்று பூமியின் மேற்குப் பகுதியில் நாம் பார்க்கின்ற சபையோடு ஒப்பிட்டுக் காண்பித்தேன். ஆதித்திருச்சபையின் அளவுகோலை இன்று நாம் பார்க்கின்ற சபை பல விதங்களில் எட்டவில்லை என்பதை நான் சுட்டிக் காண்பித்தேன். பிறகு நான் இரண்டு கேள்விகளைக் கேட்டேன். முதலில், தேவன் தம்முடைய சபைக்கான தமது திட்டத்தையோ அல்லது தமது அளவுகோலையோ மாற்றி விட்டாரா? இல்லை என்பதுதான் என் பதிலாயிருந்தது. இரண்டாவதாக, தேவனால் தம்முடைய சபையை அதற்குரிய சரியான நிலைக்குத் திரும்ப மீட்டுக் கொண்டு வர முடியுமா? ஆம், நிச்சயம் முடியும் என்பதுதான் என் பதிலாயிருந்தது. மெய்யாகவே சபை திரும்ப அதற்குரிய ஆதி நிலைக்கு மீட்கப்பட வேண்டும் என்றால், அதற்கு சில முக்கியமான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். இன்று நான் அதைத்தான் சொல்லப் போகிறேன்.

இன்றைய சபையின் பெரும் பகுதி நான்கு முக்கியமான விஷயங்களில் குறைவுபட்டிருப்பதை நான் பார்க்கிறேன். சபையைக் குறித்த தேவனுடைய நோக்கத்தின் நான்கு அம்சங்கள், அதன் ஒழுங்கான இயக்கத்திற்கு அத்தியாவசியமானவையாய் இருக்கின்றன. இன்றைய சபையின் பெரும்பகுதி குறைவுபட்டிருக்கிற இந்த நான்கு விஷயங்களை நான் பட்டியலிடுகிறேன்.

முதலில், பரிசுத்த ஆவியானவரின் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமை.

இரண்டாவதாக, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டியெழுப்பும்படி கொடுக்கப்பட்ட முக்கியமான ஊழியங்கள்.

மூன்றாவதாக, ஒழுங்கான ஆவிக்குரிய அரசாங்கமும், அதன் அதிகாரமும்.

நான்காவதாக, விசுவாசிகளுக்குள் இருக்க வேண்டிய ஏகசிந்தையும், ஒன்றாய் இசைந்த மனநிலையும்.

நான் இந்தப் பட்டியலை திரும்பவும் சொல்லப் போகிறேன். காரணம், இந்த வாரத்தின் எஞ்சிய செய்திகளில் நான் சொல்லப் போகிற எல்லாவற்றிற்கும் இது மிகவும் முக்கியமாகும். சபையைக் குறித்த தேவனுடைய நோக்கத்தில் நான்கு முக்கியமான நடைமுறை அம்சங்கள் இருக்கின்றன. இன்றைய சபையானது அந்த அம்சங்களில் பெரிதும் குறைவுபட்டிருப்பதை நான் பார்க்கிறேன். முதலில், பரிசுத்த ஆவியானவரின் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமை வெளிப்படும்படி இடம் கொடுக்க வேண்டிய விஷயத்தில் அது குறைவுபட்டிருக்கிறது. இரண்டாவதாக, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை கட்டியெழுப்பும்படி கொடுக்கப்பட்ட முக்கியமான ஊழியங்களில் அது குறைவுப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக, ஒழுங்கான ஆவிக்குரிய அரசாங்கத்தையும், அதன் அதிகாரத்தையும் வெளிப்படுத்துவதில் அது குறைவுபட்டிருக்கிறது. நான்காவதாக, விசுவாசிகள் ஏகசிந்தையோடும், ஒன்றாய் இசைந்த மனநிலையோடும் செயல்படுவதில் அது குறைவுபட்டிருக்கிறது.

இந்தச் செய்திகளை நான் தொடர்ந்து கொடுக்கும்போது, குறைபாடுகள் காணப்படுகிற இந்தப் பல்வேறு பகுதிகளுக்கிடையே ஒரு தொடர்பு இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். இன்று நான் முதல் அம்சமாகிய, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைக் குறித்துப் பேசப் போகிறேன். சபையைக் குறித்த மூன்று எளிமையான உண்மைகளை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். முதலில், சபையானது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட விதத்தில் உருவாக்கப்பட்டது. இரண்டாவது, சபை பலனுள்ள விதத்தில் இயங்கும்படி, அது எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவரையே சார்ந்திருக்க வேண்டும். மூன்றாவதாக, சபை பலனுள்ள விதத்தில் இயங்குவதற்கு வேறு மாற்று வழி ஏதும் இல்லை.

“இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட” என்ற வார்த்தையை நான் அழுத்தந்திருத்தமாக முக்கியப்படுத்திச் சொல்ல விரும்புகிறேன். இது நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லக்கூடிய, நம் உணர்வுகளைத் தூண்டி இழுக்கக்கூடிய காரியம் மட்டும் அல்ல. மனுஷனுடைய இயற்கையான திராணிக்கு மேலான ஒரு நிலையாகவும் இது இருக்கிறது. நான் வல்லமையை மட்டும் பேச விரும்பவில்லை. நான் கிருபையைக் குறித்தும் பேச விரும்புகிறேன். மனுஷனுடைய திராணிக்கு அப்பாற்ப்பட்டு, தேவனுடைய சித்தத்தின் நிலையில் நின்று செயல்படுவதற்குத் தேவையான கிருபையையும், வல்லமையையும் பெறும்படி சபையானது எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவரையே முழுமையாய் சார்ந்திருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். மனுஷனுடைய வல்லமை, ஞானம் மற்றும் நிர்வாகத்திறனைச் சார்ந்து சபை ஒருபோதும் பலனுள்ள விதத்தில் இயங்க முடியாது என்றுதான் நான் விசுவாசிக்கிறேன்.

பெந்தேகோஸ்தேயின் நோக்கங்கள் (Purposes of Pentecost) என்ற என்னுடைய புத்தகத்தில், நான் இதை மிகவும் தெளிவாக எழுதியிருக்கிறேன். அந்தப் புத்தகத்திலிருந்து இரண்டு பத்திகளை நான் வாசிக்கப் போகிறேன்.

திறந்த மனதோடு புதிய ஏற்பாட்டை நாம் வாசிப்போம் என்றால், ஆதித்திருச்சபை கிறிஸ்தவர்களின் வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் முழுவதும் அதன் ஒவ்வொரு பகுதியிலும் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆவியானவரின் வல்லமை ஊடுருவியிருந்தது என்ற உண்மையை நாம் மறுக்காமல், கட்டாயம் ஏற்றுக் கொள்வோம். இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட தேவரகமான அனுபவங்கள் என்பது ஏதோ எப்பொழுதாவது அல்லது கூடுதலாகக் கிடைக்கக்கூடிய அனுபவங்களாய் அவர்களுக்கு இருக்கவில்லை. அவை கிறிஸ்தவர்களாகிய அவர்களுடைய வாழ்க்கையோடு ஒன்றாய் ஒன்றரக் கலந்திருந்த அனுபவங்களாய் இருந்தன. அவர்களுடைய ஜெபம் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட அனுபவமாயிருந்தது. அவருடைய பிரசங்கத்தில் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட அனுபவம் வெளிப்பட்டது. அவர்கள் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட விதத்தில் வழி நடத்தப்பட்டனர், இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட விதத்தில் பெலப்படுத்தப்பட்டனர், இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட விதத்தில் பாதுகாக்கப்பட்டனர். அவர்களுடைய ஊழியப் பிரயாணம் கூட இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட விதத்தில் நிகழ்ந்தது. அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலிருந்து இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட அற்புதங்களை நீக்கி விட்டீர்கள் என்றால், அர்த்தமற்ற விஷயங்களின் ஒரு தொகுப்பாகத்தான் அது மிஞ்சியிருக்கும். பரிசுத்த ஆவியானவர் இறங்கியதைக் குறித்துப் பேசுகிற அப்போஸ்தலர் நடபடிகள் 2-ம் அதிகாரத்திலிருந்து தொடர்ந்து வாசிப்பீர்கள் என்றால், இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஒன்று நிகழ்ந்ததைக் குறித்துப் பேசாத ஒரு அதிகாரத்தைக் கூட உங்களால் கண்டுபிடிக்க முடியாது.

அதே புத்தகத்திலிருந்து இன்னொரு சிறிய பகுதியை வாசிக்கிறேன். எங்கே இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட தேவரகமான அற்புதங்களை நாம் பார்க்கவில்லையோ, அந்த அனுபவம் நமக்குக் கிடைக்கவில்லையோ, அங்கே புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவத்தைக் குறித்துப் பேசுவதற்கு நமக்கு எந்த உரிமையுமில்லை. அதுதான் உண்மை. புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவத்திலிருந்து இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட அனுபவங்களை ஒருபோதும் பிரிக்க முடியாது. அவற்றை தனியே பிரித்துப் பார்க்கவும் முடியாது. இந்த இரண்டு விஷயங்களும், அதாவது, இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட அனுபவங்களும், புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவைகளாய், பின்னிப் பிணைந்திருக்கின்றன, ஒன்றோடொன்று இழையோடியிருக்கின்றன.

சரி. இது என்னுடைய “பெந்தேகோஸ்தேயின் நோக்கங்கள்” என்ற புத்தகத்திலிருந்து எடுத்த மேற்கோளாகும்.

மனித இன வரலாற்றில், தேவனுடைய மீட்பின் கிரியை எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் குறித்து, மிகவும் எளிமையான, குழந்தைத்தனமான அளவிற்கு எளிமையான விதத்தில் சுருக்கமாக நான் சொல்ல விரும்புகிறேன். நான் அதை இரண்டு படிப்படியான நிகழ்வுகளாக எடுத்துக் காண்பிக்க விரும்புகிறேன். முதல் படி, பிதாவாகிய தேவன் தம்முடைய பிரதிநிதியாய் தம்மைப் பிரதிபலித்துக் காண்பிக்கும்படி குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். ஆகையால் குமாரனாகிய இயேசுவைத் தவிர்த்து விட்டு, ஒருவரும் பிதாவாகிய தேவனிடம் வர முடியாது, தேவனிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ள முடியாது.

இது தேவனுடைய ஒரு கோட்பாடாயிருக்கிறது. தேவன் ஒரு பிரதிநிதியை நியமிக்கும்போது, அவர் எப்பொழுதும் எல்லா விஷயத்திலும் அந்தப் பிரதிநிதியை கனம் பண்ணி, உயர்த்துகிறார். பிதாவாகிய தேவன் இயேசுவை மனித இனத்திற்கு தம்முடைய தனிப்பட்ட பிரதிநிதியாய் நியமித்தபோது, மனித இனம் முழுவதும் பிதாவாகிய தேவனைக் கனம் பண்ணுவதுபோல, இயேசுவையும் கனம் பண்ண வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்திருக்கிறார். எனவே குமாரனைத் தவிர்த்து விட்டு, தம்மிடம் வருவதற்கோ அல்லது பெற்றுக் கொள்வதற்கோ, வேறு ஒரு வழியையும், வேறு ஒரு நபரையும் பிதாவாகிய தேவன் நியமிக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சுவிசேஷப் பிரசங்கங்களிலும், பெரும்பாலான கிறிஸ்தவப் போதனைகளிலும் இது மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது. ஆனால் தேவனுடைய இந்த மீட்பின் கிரியையில் இரண்டாவது படியும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதுவும் சம அளவு வேதவசனத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போதனைகளில் இது பெரும்பாலும் அலட்சியம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் இரண்டாவது படி இதுதான்: தேவனுடைய குமாரன், தம்முடைய பிரதிநிதியாக தேவனுடைய ஆவியானவராகிய பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார், “நான் போகிறேன். உங்களுக்கு சிறந்த நன்மை உண்டாகும்படியே நான் செல்கிறேன். காரணம், நான் போகவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் வர மாட்டார். ஆனால் நான் போவேனேயாகில், பரிசுத்த ஆவியானவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் என்னுடையதில் இருந்து எடுத்து, அவற்றை உங்களுக்குத் தெரியப்படுத்துவார், உங்களுக்குக் கொடுப்பார்.”

ஆக, கர்த்தராகிய இயேசு, இந்தப் பூமியில் தம்முடைய தனிப்பட்ட பிரதிநிதியாக பரிசுத்த ஆவியானவரை அதிகாரப்பூர்வமாக நியமித்திருக்கிறார். பெந்தேகோஸ்தே நாளில், பரிசுத்த ஆவியானவர் ஒரு நபராய் சபைக்குள் வந்தார். ஆனால் இங்கு கோட்பாடு இதுதான். பிதாவாகிய தேவன் குமாரனை அனுப்பினார். ஆகையால் குமாரனைத் தவிர்த்து விட்டு, பிதாவாகிய தேவனிடம் ஒருவரும் வர முடியாது, ஒன்றையும் பெற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில், குமாரனாகிய இயேசு பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். ஆகையால், ஆவியானவரைத் தவிர்த்து விட்டு, ஒருவரும் குமாரனிடம் வரவோ, எதையும் பெற்றுக் கொள்ளவோ முடியாது.

இந்தக் கோட்பாடு இரண்டு விஷயத்திலும் வேலை செய்கிறது. அதாவது இது தேவனிடம் செல்வதற்கும், தேவனிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் முக்கியமாய் பின்பற்ற வேண்டிய ஒரு கோட்பாடாய் இருக்கிறது. எபேசியர் 2:18-ல், பவுல் இதைச் சொல்கிறார்:

அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் (யூதர்களும், ஒரே மெய்த்தேவனை அறியாத அந்நியர்களும்) ஒரே ஆவியானவராலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் (இயேசுவின்) மூலமாய் பெற்றிருக்கிறோம்.

குமாரன் மூலமாய், ஆவியானவரால், பிதாவிடம் சேருகிறோம் என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். இங்கு குமாரன் மற்றும் பிதாவாகிய தேவன் மட்டும் இல்லை. இந்தச் சங்கிலியில் பரிசுத்த ஆவியானவர் ஒரு அத்தியாவசியமான இணைப்பாய் இருக்கிறார். ஆவியானவரை எடுத்து விட்டீர்கள் என்றால், அங்கு இணைப்பு என்பதே இருக்காது.

இன்னொரு வழியிலும், இது உண்மையாக இருக்கிறது. அதாவது தேவன் விசுவாசிக்குள் வாசம் பண்ணுகிற விஷயத்திலும் இது உண்மையாயிருக்கிறது. நான்கு வசனங்கள் தள்ளி, எபேசியர் 2:22-ல், பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

அவர் மேல் (இயேசுவின் மேல்) நீங்களும் ஆவியானவராலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

ஆக, பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவுக்குள் ஆவியானவரால் நம்மில் வாசம் பண்ணுகிறார். திரும்பவும் சொல்கிறேன், ஆவியானவர் இங்கு அத்தியாவசியமான ஒரு சங்கிலி வளையமாய், இணைப்பாய் இருக்கிறார். இந்த இணைப்பை அகற்றி விட்டு, தேவனுடைய நோக்கத்தை நாம் நிறைவேற்றி விட முடியாது. பிதாவாகிய தேவன் ஆவியானவரால் குமாரனுக்குள் நம்மில் வாசம் பண்ணுகிறார்.

எபேசிய 2-ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட இந்த இரண்டு வசனங்களையும் ஒன்றாய் சேர்த்துப் பாருங்கள். நமக்கு ஒரு பொதுவான கோட்பாடு கிடைக்கும். பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், பிதாவாகிய தேவனிடம் செல்வதற்கு வழி ஏதும் இல்லை. அதேபோல, பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், தேவனுடைய ஜனங்களுக்குள் பிதாவாகிய தேவன் வாசம் பண்ணுவதற்கு வேறு ஒரு வழியும் இல்லை. நாம் பரிசுத்த ஆவியானவரையே எல்லாவற்றிற்கும் சார்ந்திருக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் மெய்யான பிரசன்னம் நம் மத்தியில் இல்லையென்றால், நம்மிடம் நிறைய பிரசங்கங்களும், போதனைகளும் இருக்கலாம். நாம் நிறைய ஜெபிக்கலாம். நாம் நிறைய சபை ஊழியங்களிலும், அதன் நடவடிக்கைகளிலும் இறங்கிச் செயல்படலாம். ஆனால் புதிய ஏற்பாடு பேசுகிற நிஜம் நம்மிடம் இருக்காது.

இப்பொழுது நாம் மிகவும் எளிமையான, ஆனால் ஆழமான ஒரு சத்தியத்தை 2 கொரிந்தியர் 3:17-ல் வாசிப்போம்.

“கர்த்தரே ஆவியானவர்……..”

இங்கு பெரிய எழுத்தான “S” பயன்படுத்தப்பட்டுள்ளது; அது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது.

ஒரே மெய்யான தேவனுக்கு புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்படுகிற பெயர் “கர்த்தர்” என்பதாகும். தேவனுடைய திரித்துவத்தில் ஒவ்வொருவருமே கர்த்தர் என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். பிதாவாகிய தேவனும் கர்த்தர்தான். குமாரனாகிய கிறிஸ்துவும் கர்த்தர்தான். ஆவியானவரும் கர்த்தர்தான். ஒவ்வொருவரும் சமமாக கர்த்தர் என்றே அழைக்கப்படுகிறார்கள். பிதாவையும், குமாரனையும் கர்த்தர் என்று நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவரை கர்த்தராக ஏற்றுக் கொள்வதற்கு நாம் தவறி விடுகிறோம்.

இதை நான் இவ்வாறு சொல்கிறேன். இயேசு சபையின் மீது கர்த்தராய் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரும் சபையில் கர்த்தராய் இருக்கிறார். இந்தப் பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சபையில் அவருடைய தனிப்பட்ட பிரதிநிதியாய் பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிறார். இயேசு பரலோகத்தில் இருக்கிறார். ஆவியானவர் இந்தப் பூமியில் இருக்கின்றார். சபையில் ஆவியானவர் கர்த்தராய் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறாரோ, அந்த அளவிற்குத்தான் சபையின் மீது இயேசுவின் கர்த்தத்துவம் ஆளுகை செய்யும், தேவனுடைய நோக்கமும் சபையில் நிறைவேறும். இதற்கு என்ன அர்த்தம்? பரிசுத்த ஆவியானவருக்குரிய இடத்தை நாம் அவருக்குக் கொடுக்கவில்லை என்றால், நாம் மனந்திரும்ப வேண்டும் என்பதுதான் அதற்கு அர்த்தம். நம் வழிகளை மாற்றிக் கொண்டு, நாம் மனந்திரும்புவதோடு நின்று விடாமல், எவ்விதக் கேள்வியையும், நிபந்தனையையும் முன் வைக்காமல், பரிசுத்த ஆவியானவரின் கர்த்தத்துவத்திற்கு நாம் நம்மையே அர்ப்பணிக்க வேண்டும். அவர் சபையில் கர்த்தராயிருக்கிறார். எனவே சபையில் அவர் மட்டுமே செய்யக்கூடிய கிரியைகளைச் செய்யும்படி, நாம் அவருக்கு மட்டுமே இடம் கொடுக்க வேண்டும்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை சபையின் புதுப்பித்தலுக்குத் தேவையான இரண்டாவது முக்கிய அம்சமான, கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்பும்படி கொடுக்கப்பட்ட முக்கியமான ஊழியங்களைப் பற்றி பேசப் போகிறேன்.

லைக்
பகிரவும்