ஒரு புதிய வாரத்தின் ஆரம்பத்தில் திரும்பவும் உங்களோடு இருப்பதை நன்றாக உணருகிறேன். இவ்வாழ்க்கையில் வேதாகமத்தின் சத்தியங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகின்றேன். இந்தச் சத்தியங்கள், என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வித்தியாசத்தை காண்பித்திருக்கின்றன. இவை அதையே உங்களுக்கும் செய்யும்.

முதலில், எனக்கு எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு “நன்றி” என்று சொல்ல விரும்புகிறேன். இந்தச் செய்தியை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய ஒரு அஞ்சல் முகவரியை உங்களுக்குக் கொடுப்போம். உங்களுடைய தனிப்பட்ட தேவைகள், பிரச்சனைகள், ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்.

கடந்த இரண்டு வாரங்களாக, ஒரு மிக முக்கியமான சத்தியத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன். இன்றைய நம்முடைய உலகச் சூழ்நிலையில், தேவன் தம்முடைய இரு வகையான ஜனங்களுக்காக தம்முடைய புதுப்பிக்கிற வேலையின் நோக்கங்களை எவ்வாறு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இஸ்ரவேல் மற்றும் சபைதான் இவர்கள். இந்த இரு வகையான ஜனங்களிடமும், அவர் ஒரு உடன்படிக்கையினால் தம்மையே அர்ப்பணித்திருக்கிறார். அவர் அதை ஒருபோதும் மீற மாட்டார்.

கடந்த வாரத்தில், சபை புதுப்பிக்கப்படுகிற காரியத்தைக் குறித்து நான் பேசினேன். இந்த வாரத்தில், இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுகிற காரியத்தைக் குறித்துப் பேசப் போகிறேன். இந்த இரண்டைக் குறித்தும், ஒன்றைப் புதுப்பித்தல் என்றால், அதை அதற்குரிய இடத்திலும், அதற்குரிய நிலையிலும் திரும்பக் கொண்டு வந்து வைத்தல் என்று நான் விளக்கம் கூறினேன். ஒன்றைப் புதுப்பிக்க வேண்டும் என்றால், அது இப்பொழுது அதற்குரிய இடத்திலும், அதற்குரிய நிலையிலும் இல்லை என்பதைத்தான் அது சுட்டிக் காண்பிக்கிறது.

ஆனாலும், இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுவதிலும், சபை புதுப்பிக்கப்படுவதிலும் அதன் ஒழுங்கில் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. சபை புதுப்பிக்கப்படுவதில், பிரதானமாக, அது ஆவிக்குரிய ஒன்றாக இருக்கிறது. அது ஆவிக்குரிய ஒன்றாக இருந்தாலும், தவிர்க்க முடியாத விதத்தில், அது உண்டாக்குகிற பலன்கள் இயற்கையான மண்டலத்திலும் வெளிப்படுகின்றன. இன்னொரு பக்கத்தில், இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுகிற கிரியை, ஆரம்பத்தில் அரசியல்ரீதியாகவும், பூகோளரீதியாகவும் நடக்கின்றது. ஆனால் ஆவிக்குரிய நிறைவின் ஒரு உச்சகட்டத்தை அது அடையாதவரை, அது முழுமையாய் நிறைவேறி முடியாது.

இன்றைக்கு என்னுடைய செய்தியில், எந்தச் சூழ்நிலை, இஸ்ரவேல் என்ற ஒரு கூட்ட ஜனங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை அத்தியாவசியமாக்கியது என்பதைக் குறித்துச் சொல்லப் போகிறேன். அதாவது, அவர்கள் எவ்வாறு தங்களுக்குரிய சரியான இடத்தையும், தங்களுக்குரிய சரியான நிலையையும் விட்டு வெளியே வந்தார்கள் என்பதை நான் விளக்கிச் சொல்லப் போகிறேன்.

இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குத் தேவன் சுதந்திரமாய் தந்த தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பே, மோசே மூன்று காரியங்களைத் தெளிவாக முன்கூட்டியே கணித்திருந்தான். இது குறித்து உபாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. முதலில், இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், உண்மையற்றவர்களாய் மாறுவார்கள். இரண்டாவதாக, அதற்கு ஒரு நியாயத்தீர்ப்பாய், தேவன் அவர்களை வேரோடு பிடுங்கி, புறஜாதியாரின் தேசங்களுக்குள் சிதறடிப்பார். மூன்றாவதாக, அந்த தேசம் வெறுமையாய் பாழாய்ப் போகும்.

அப்படிப்பட்ட கணிப்புகளில் ஒன்று, உபாகமம் 28-ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. 58-ம் வசனத்தில் தொடங்கி, நாம் அதைத் தொடர்ந்து வாசிக்கலாம்:

“உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும், பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்” என்று இது ஆரம்பிக்கிறது. தொடர்ந்து 63 முதல் 66 வரையுள்ள வசனங்களை வாசிக்கலாம். 63 கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும், உங்களைப் பெருகப் பண்ணவும் எப்படி உங்கள் மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும், உங்களை அதம் பண்ணவும் இரம்மியமாயிருப்பார். நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசத்திலிருந்து பிடுங்கி போடப்படுவீர்கள். 64 கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி, பூமியின் மறுமுனை மட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார். அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களை சேவிப்பாய். 65 அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது. உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது. அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்து போகிற கண்களையும், மனச் சஞ்சலத்தையும் கொடுப்பார். 66 உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும். உன் ஜீவனைப் பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில் கொண்டிருப்பாய்.

இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலோடு சம்பந்தப்பட்ட வரலாற்றை இப்பொழுது நாம் உற்று நோக்குவோம். வரலாற்றில், இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய சொந்த சுதந்திர தேசத்தை விட்டு, வெளியே புற தேசங்களுக்குள் இரண்டு முறை பெரிய அளவில் சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர். முதல் முறை, கி.மு 720-க்கும், 600-க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் சிதறடிக்கப்பட்டனர். இந்தச் சிதறடிக்கப்பட்ட நிகழ்வு, இரண்டு கட்டங்களாக நடந்தது. முதலில், இஸ்ரவேல் என்று அறியப்பட்ட வட ராஜ்யங்களெல்லாம் அசீரியாவினால் நாடு கடத்தப்பட்டனர். பிறகு யூதா என்றறியப்பட்ட தென் ராஜ்யங்கள் பாபிலோனால் நாடு கடத்தப்பட்டன. பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட அந்த நிலையிலிருந்து, கி.மு 530-லும், அதைத் தொடர்ந்த வருடங்களிலும் ஒரு பகுதியினர் திரும்பி வந்தனர்.

இரண்டாவது முறையாக பெரிய அளவில் சிதறடிக்கப்பட்ட நிகழ்வு, கி.பி 70-ம் ஆண்டை ஒட்டி நிகழ்ந்தது. இது முன்பைக் காட்டிலும் இன்னும் பெரிய அளவில் நடந்தது. அப்பொழுது இஸ்ரவேல் தேசத்தில் யூதர்கள் வாழ்ந்த பகுதி முழுவதும் அழிக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் ரோமர்களால் நாடு கடத்தப்பட்டனர். இந்த நூற்றாண்டின் நடுவில், இஸ்ரவேல் தேசம் திரும்ப உருவாகும்வரை, பெரும்பாலான யூதர்கள் சிதறடிக்கப்பட்ட நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். இப்பொழுதும்கூட, இவ்வுலகில் வாழ்கின்ற யூதர்களில் கால் பங்கினர் மட்டுமே திரும்பவும் தங்களுடைய சொந்த தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கி.பி 70-ம் ஆண்டில் ஆரம்பித்த இந்த இரண்டாம் சிதறடிப்பின் காலகட்டத்தில் பெரும் பகுதி நேரம், உபாகமம் 28-ம் அதிகாரத்தில் நான் வாசித்த வசனங்களின் கணிப்பிற்கு அப்படியே ஒத்ததாகத்தான் யூதர்களின் நிலை இருந்திருக்கிறது.

மோசே இஸ்ரவேலைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளில் சிலவற்றை நாம் திரும்பவும் பார்ப்போம்.

“நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசத்திலிருந்து பிடுங்கி போடப்படுவீர்கள்.”

கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி, பூமியின் மறுமுனை மட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்.

அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது.

உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது.

அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்து போகிற கண்களையும், மனச் சஞ்சலத்தையும் கொடுப்பார். உன் வாழ்க்கையைப் பற்றி எவ்வித நம்பிக்கையுமில்லாமல், நிச்சயமுமில்லாமல் இரவும் பகலும் திகில் கொண்டிருப்பாய்.

கடந்த இரண்டாயிரம் வருடங்களாக யூதர்களின் வரலாற்றில் நிகழ்ந்தவைகளை அறிந்திருக்கிற நேர்மையான எவரும், இந்தத் தீர்க்கதரிசனங்கள் அப்படியே திரும்பத் திரும்ப இவ்வுலகமெங்கும் அவர்கள் வாழ்ந்த ஒவ்வொரு தேசத்திலும் நிறைவேறியது என்பதை ஒத்துக் கொள்வார்கள். அது மட்டுமல்ல, இந்த நிறைவேறுதல், வேதாகமத்தின் காலங்களோடு முடிந்து விடவில்லை அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முடிந்து விடவில்லை, இப்பொழுதும் இந்த நூற்றாண்டிலும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

இதே போன்றதொரு கணிப்பு, லேவியராகமம் 26-ம் அதிகாரத்தில், 13-ம் வசனம் முதல், அந்த அதிகாரத்தின் கடைசி வரையுள்ள வசனங்களில் காணப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த தீர்க்கதரிசன வேதப்பகுதியில் ஒரு சில வசனங்களை மட்டும் நான் வாசிக்கிறேன். 32-33 வசனங்களில் கர்த்தர் இவ்வாறு சொல்கிறார்:

32 “நான் தேசத்தைப் பாழாக்குவேன். அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள். 33 ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன் (என் பட்டயத்தை உருவி, உங்களைத் துரத்துவேன்). உங்கள் தேசம் பாழும் (வீணாய்ப் போகும்), உங்கள் பட்டணங்கள் வனாந்திரமுமாகும் (சீர்குலைந்து, சிதைந்து அழிந்து போகும்).” [இப்பொழுது 36-37 வசனங்களை வாசிக்கலாம்] 36 உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சி அடையும்படி செய்வேன். அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும் (விரட்டும்). அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள். 37 துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவதுபோல, ஒருவர் மேல் ஒருவர் இடறி விழுவார்கள். உங்கள் சத்துருக்களுக்கு முன் நிற்க, உங்களுக்குப் பெலன் இராது.

இஸ்ரவேல் ஜனங்கள் சிதறடிக்கப்பட்ட இந்த நூற்றாண்டுகளிலெல்லாம், அவர்கள் இருந்த எல்லா தேசங்களிலும், எல்லாக் கண்டங்களிலும் இந்தத் தீர்க்கதரிசனங்கள் துல்லியமாக, திரும்பத் திரும்ப நிறைவேறியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

லேவியராகமம் 26-ம் அதிகாரத்தில், 13-ம் வசனத்திலிருந்து அதன் கடைசி வரையுள்ள வசனங்களில், தேவன் ஏன் இஸ்ரவேல் ஜனங்களை அவ்வளவு பயங்கரமாய் நடத்தினார் என்பதற்கான இரண்டு அடிப்படைக் காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த ஒவ்வொரு காரணமும், இந்த வேதப்பகுதியில் நான்கு முறை சொல்லப்பட்டிருக்கின்றன. “நீ எனக்கு செவி கொடுக்கவில்லை” என்பது முதல் காரணம். “நீ எனக்கு விரோதமாய் நடந்து கொண்டாய்,” என்பது இரண்டாவது காரணம். இதை இன்னொரு மொழிபெயர்ப்பு இவ்வாறு சொல்கிறது, “நீ என் வார்த்தைக்கு முரண்பட்டு நடந்து கொண்டாய்.”

நான் இந்த இரண்டு காரணங்களையும் திரும்பச் சொல்கிறேன். இது ஒவ்வொன்றும் நான்கு முறை சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவை இஸ்ரவேலின் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு விழுந்ததற்கான அடிப்படைக் காரணங்களாகும். முதலில், “நீ எனக்குச் செவி கொடுக்கவில்லை.” இரண்டாவது, “நீ எனக்கு விரோதமாய் நடந்து கொண்டாய்.” நான் அதை இவ்வாறு தொகுத்துச் சொல்கிறேன்: இது முரட்டுப் பிடிவாதத்துடன் எப்பொழுதும் தேவனை எதிர்த்து நிற்கிற செயலாயிருக்கிறது. இது இரண்டு விதங்களில் வெளிப்பட்டிருக்கிறது என்று நான் சொல்வேன். முதலில், தேவனால் கொடுக்கப்பட்ட பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல் போவதாகும். இரண்டாவது, தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளை நிராகரிப்பதாகும். நசரேயனாகிய இயேசுதான், அந்தத் தீர்க்கதரிசிகளில் கடைசியாய் வந்தவரும், மகா பெரிய தீர்க்கதரிசியுமானவருமாயிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்.

பொதுவாக, இஸ்ரவேலைக் குறித்த பதிவுகள், வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட்ட பாடங்களாயிருக்கின்றன. தேவனிடத்திலும், அவருடைய செய்தியைக் கொண்டு வருகிறவர்களிடத்திலும் முரட்டுப் பிடிவாதத்தோடு கீழ்ப்படியாமல் நடந்து கொள்வதால் உண்டாகும் விளைவுகளைக் குறித்த ஒரு எச்சரிக்கையை இவை எல்லா தேசங்களுக்கும், எல்லா இனங்களுக்கும் கொடுக்கின்றன. அதே கோட்பாடுகள் எல்லாத் தேசங்களுக்கும் வேலை செய்கின்றன. வேதவசனத்தில், இஸ்ரவேலின் வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கோட்பாடுகள், அமெரிக்க ஐக்கிய தேசங்கள் உட்பட, எல்லா தேசங்களுக்கும் வேலை செய்கின்றன.

ஆனாலும் தேவனுக்கு நன்றி. காரணம், தேவனுடைய இரக்கம் மற்றும் உடன்படிக்கையைக் காக்கும் அவருடைய உண்மையை பகிரங்கமாக வெளிப்படுத்திக் காண்பிக்கும் ஒரு அடையாளமாக இஸ்ரவேல் இருக்கிறது. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் விளைவாக நிகழ்ந்த இஸ்ரவேலின் சிதறடிப்புச் சம்பவங்களைக் குறித்து வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிற எல்லா கணிப்புகளும், அவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாதவை, மாற்ற முடியாதவை என்பதைச் சுட்டிக் காண்பிக்கின்றன. ஆனாலும் தேவனுடைய இரக்கத்திற்கான கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கிறது.

தேவனுடைய நியாயத்தீர்ப்பும், இரக்கமும் சேர்ந்தே செல்கின்றன என்பதை வெளிப்படுத்தும் ஒரு நல்ல, சுருக்கமான எடுத்துக்காட்டு, ஓசியா புத்தகத்தில் காணப்படுகிறது. ஓசியா 3:4-5 வசனங்களை நாம் வாசிப்போம்.

4 இஸ்ரவேல் புத்திரர் அநேக நாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.

இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்தத் தீர்க்கதரிசனத்தை ஓசியா சொன்ன நாளில், இங்கு பட்டியலிடப்பட்டிருக்கிற ஆறு காரியங்களும் இஸ்ரவேல் ஜனங்களிடம் இருந்தது. அவர்களிடம் ஒரு ராஜா இருந்தான். அவர்களிடம் அதிபதிகள் இருந்தனர். அவர்களிடம் பலி இருந்தது, சிலை இருந்தது, ஏபோத் வஸ்திரம் இருந்தது, தேராபீம் இருந்தது. ஆகையால் இந்த எல்லாக் காரியங்களும் எப்பொழுது அவர்களிடம் இல்லாமல் போனது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மை, கடந்த இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாகத்தான், உண்மையாக இருக்கிறது. இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்தக் காரியங்களெல்லாம் இல்லை. இந்தக் கணிப்பு அப்படியே துல்லியமாக நிறைவேறியிருக்கிறது.

இப்பொழுது அடுத்த வசனத்தைக் கவனிப்போம்:

5 பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் (நடுங்கிக் கொண்டே) வருவார்கள்.

முடிவில் நியாயத்தீர்ப்பு வெளிப்படவில்லை. மாறாக, தேவனுடைய இரக்கமும் கிருபையும்தான் வெளிப்படுகிறது. இதை நாம் கவனிக்க வேண்டும். இது இஸ்ரவேல் ஜனங்களை அவர்களுடைய கர்த்தராகிய தேவனிடம் மனந்திரும்பி, அவரை நாடித் தேடி வரச் செய்கிறது.

இப்பொழுது நான் ஒன்றைச் சொல்லி, இந்தச் செய்தியை முடிக்கின்றேன். சிதறடிக்கப்படுதலைக் குறித்த கணிப்புகளை விசுவாசித்து விட்டு, புதுப்பிக்கப்படுதலின் கணிப்புகளை நிராகரித்தால், அது பொருத்தமற்ற, முரண்பாடான ஒன்றாக இருக்கும். அது முற்றிலும் தவறானதாயிருக்கும். ஒரு காரியம் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்னொன்றும் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதுதான் சரியாக இருக்கும்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுதலைக் குறித்த தீர்க்கதரிசனங்களைப் பற்றி பேசப் போகிறேன்.

லைக்
பகிரவும்