கனி எப்படி வருகிறது

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 9
பரிசுத்த ஆவியின் ஒன்பது கனிகளான அன்பு, சந்தோஷம், சமாதானம் மற்றும் பலவற்றைக் கண்டறியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் இந்தக் கனியை எவ்வாறு உருவாக்குகிறார் என்பதையும், தேவனுடைய ராஜ்யத்தில் வரங்கள் மற்றும் கனிகள் இரண்டின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளுங்கள். டெரெக் பிரின்ஸின் 'கனி எவ்வாறு உருவாகிறது' (ஆவியின் கனி, பகுதி 1) என்ற இந்த ஆழமான செய்தி, தேவனுடைய வார்த்தையைப் பற்றிய உங்கள் புரிதலை மேம்படுத்தும்.
Transcript
இந்த புதிய வாரத்தின் துவக்கத்தில் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன். அந்த உண்மைகள், என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.
எனக்கு எழுதியவர்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக, பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்த வாரமும், அடுத்த வாரமும் நாணயத்தின் அடுத்த பக்கம் என்று நான் அழைப்பேன் – அதாவது பரிசுத்த ஆவியின் கனியைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கலாத்தியர் 5: 22-23 இல் பட்டியலிடப்பட்டுள்ள பரிசுத்த ஆவியின் கனியில் ஒன்பது வடிவங்களைக் காணலாம்:
22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். 23 சாந்தம், இச்சையடக்கம்; …..
அந்த பட்டியலை மீண்டும் சொல்கிறேன். ஆவியின் கனி – ஒன்பது வடிவங்கள் - அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இனி வரும் நாட்களில், ஒன்பது வகையான கனியில் ஒவ்வொன்றாகக் கையாள்வேன். ஆனால், இன்று எனது முதல் பேச்சு அறிமுக உரையாக இருக்கும். கனி எப்படி வருகிறது என்பதைப் பற்றி பேசப் போகிறேன்.
கனி மற்றும் வரங்கள் ஆகிய இரண்டும் சமமாக பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவர் வரங்களைத் தருகிறார்; பரிசுத்த ஆவியானவர் கனியைக் கொண்டு வருகிறார். இரண்டும் சமமாக தேவனின் விருப்பமாகும். தேவன் தம்முடைய மக்கள் வரங்களைப் பயன்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார்; தேவன் தம்முடைய மக்கள் கனியைக் கொண்டுவர வேண்டுமென்று விரும்புகிறார். இரண்டுக்கும் இடையே எந்தவித முரண்பாடும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்துவின் உடலுக்குள், குழுக்கள் எதிரெதிர் பக்கங்களில் அணிவகுத்து நிற்கும் போக்கு உள்ளது. ஒரு குழுவானது, “சரி, எங்களிடம் ஆவியின் கனி இருக்கிறது. எங்களுக்கு வரங்கள் தேவையில்லை.” என்ற மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். மற்ற குழு, “சரி, எங்களிடம் ஆவியின் வரங்கள் உள்ளன. எங்களுக்கு உண்மையில் கனி தேவையில்லை” என்ற எதிர் மனப்பான்மையை எடுக்க முனைகிறது. ஒவ்வொரு குழுவும் தவறானது. ஒவ்வொரு குழுவும் வேதத்திற்கு புறம்பாக இருக்கிறது. ஏனென்றால், எல்லா விசுவாசிகளும் கனிகளைக் கொண்டுவருவதும், வரங்களைப் பயிற்சி செய்வதும் தேவனின் சித்தமாயிருக்கிறது என்று தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
“சரி, கனிக்கும், வரங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?” என்று நீங்கள் சொல்லலாம். நான் உங்களுக்கு ஒரு சுருக்கமான, எளிமையான விளக்கத்தை தருகிறேன். ஒரே ஒரு சுருக்கமான பரிவர்த்தனையில் வரங்கள் வழங்கப்பட்டு, பெறப்படுகின்றன. அவற்றை சம்பாதிக்க முடியாது. அவற்றை வேலை செய்து பெறமுடியாது. மறுபுறம், கனியானது படிப்படியான வளர்ச்சியின் மூலம் வருகிறது, மேலும், அது பண்படுத்தப்பட வேண்டும். வேண்டுமென்றே பயிரிடப்படாத கனிகளை, இன்று உலகில் எந்த இடத்திலும் சந்தைப்படுத்துவது சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும். வித்தியாசத்தின் தெளிவான காட்சியை உருவாக்க, நாம் இரண்டு மரங்களை கருத்தில் கொள்ளலாம். ஒரு ஆப்பிள் மரம் மற்றும் ஒரு கிறிஸ்துமஸ் மரம். ஒரு ஆப்பிள் மரம் கனிகளைத் தருகிறது, கிறிஸ்துமஸ் மரம் பரிசுகளைத் தருகிறது. ஆப்பிள் மரத்தில் வரும் கனியானது, படிப்படியான வளர்ச்சியின் மூலம் வருகிறது, மேலும் அது பல்வேறு காரணிகளைப் பொறுத்து, நல்ல கனியாக இருக்கும். மறுபுறம், கிறிஸ்துமஸ் மரத்தில் உள்ள பரிசுகளை ஒரு சுருக்கமான செயலால் அங்கு வைக்கப்பட்டு, ஒரு சுருக்கமான செயலால் மரத்திலிருந்து எடுக்கப்படுகின்றன.
எனவே, ஆப்பிள் மரம் கனிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும், கிறிஸ்துமஸ் மரம் வரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நாம் இதை இவ்வாறு சுருக்கமாகக் கூறலாம்: அடிப்படையில், வரங்கள், திறன் அல்லது வல்லமையைக் குறிக்கின்றது, கனி குணத்தைக் குறிக்கின்றது. இப்போது, ஒவ்வொன்றுக்கும் மற்றொன்று தேவைப்படுகிறது. குணம் இல்லாமல், வரங்கள் அல்லது வல்லமை ஆபத்தானது. ஒரு புதிய ஸ்போர்ட்ஸ் காரை வைத்திருக்கும் ஒரு இளைஞனைப் போலவும், அந்த இளைஞன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாது மற்றும் ஓட்டவும் அறியாததுபோல அவைகள் இருக்கின்றன. அத்தகைய காரில் நீங்கள் அவனைத் தளர்வாக விட்டால், ஒருவேளை அவன் சிதைவை ஏற்படுத்துவான். வரங்கள் அல்லது வல்லமையை, நீங்கள் எந்த விதத்தில் விவரிக்க விரும்பினாலும், அது குணமில்லாமல் ஆபத்தானது. மறுபுறம், வரங்கள் இல்லாத குணமும் பயனற்றது. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மக்களுக்கு அனுதாபத்தை வழங்குவதை விட அதிகமானது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு பழமொழி – யாரோ ஒருமுறை இவ்வாறு கூறியதை நான் கேட்டிருக்கிறேன் – “நான் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன், பிரச்சனையின் பகுதியாக இல்லை.” ஒரு கிறிஸ்தவர் – தீர்வின் ஒரு பகுதியாக - இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் நாம் தீர்வின் ஒரு பகுதியாக மாற வரங்கள் தேவைப்படுகிறது. வியாதிப்பட்ட நபருக்கு அனுதாபம் காட்டுவது ஒரு விஷயம், ஆனால் அந்த வியாதிப்பட்ட நபரின் தேவையைப் பூர்த்தி செய்ய விசுவாசம், அல்லது குணமாக்கும் வரம் அல்லது அற்புதங்களை செய்யும் சக்தி அவசியமானது. இயேசுதான் சரியான உதாரணமாவார். அவர் தனது வாழ்க்கையிலும், குணத்திலும் ஆவியின் பரிபூரண கனியைக் கொண்டிருந்தார், ஆனால் அவர் ஆவியின் வரங்களையும் பயிற்சி செய்தார். ஆவியின் வரங்கள் அவருடைய குணத்தை செயலில் வெளிப்படுத்த அவருக்கு உதவியது. எனவே, நமக்கு வரங்களும், கனியும் ஆகிய இரண்டும் தேவை.
இருப்பினும், ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது, அது இதுதான்: குணம் நிரந்தரமானது; வரங்கள் தற்காலிகமானவை. வரங்கள் தற்காலிகமானவை என்ற உண்மையை பவுல், 1 கொரிந்தியர் 13:8-10 இல் மிகத் தெளிவாகக் கூறுகிறார். அவர் அன்பைப் பற்றி பேசுகிறார், மேலும் அன்பே கனியின் முதன்மை வடிவம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் சொல்கிறார்:
8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். 9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. 10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
எனவே, இப்போது நமக்கு வரங்கள் தேவைப்படுகிறது. நமக்கு அறிவை உணர்த்தும் வசனம் வேண்டும், நமக்கு தீர்க்கதரிசனம் வேண்டும், மற்ற வரங்கள் வேண்டும், ஏனென்றால் நாம் இன்னும் பரிபூரணத்திற்கு வரவில்லை; ஆனால் நம் உயிர்த்தெழுதலின் வாழ்க்கையில், நாம் பரிபூரணமாக வரும்போது, இனி நமக்கு வரங்கள் தேவைப்படாது. ஆனால், நம் உயிர்த்தெழுதலின் வாழ்க்கையில் குணம் இன்னும் நிரந்தரப் பகுதியைக் கொண்டிருக்கும். நித்தியம் முழுவதும் நீங்கள் என்னவாக இருக்க போகிறீர்கள் என்பதுதான் உங்கள் குணமாக இருக்கிறது. எனவே, அதை மனதில் கொள்ளுங்கள்; வரங்கள் தற்காலிகமானது, குணம் நிரந்தரமானது.
கனிகளை பயிரிட வேண்டும் என்று நான் சொன்னேன். இப்போது கனிகளை எவ்வாறு பயிரிட வேண்டும் என்பதற்கான சில சுருக்கமான வழிகாட்டுதல்களை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். முதலில், 2 தீமோத்தேயு 2: 6 ஐப் பார்ப்போம், அங்கு பவுல் இவ்வாறு கூறுகிறார்: “பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.” – அல்லது விளைச்சல் அல்லது கனியை முதலில் பெற வேண்டும். பவுல் மிக எளிய அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறார்: பயிர்கள் அல்லது கனியை பயிரிட கடினமாக உழைக்க வேண்டும். அது முயற்சியின்றி செய்யப்படுவதில்லை, ஆவியின் கனியைப் பொறுத்தவரையிலும் அதுவே உண்மை – அதை வளர்ப்பதற்கு கடின உழைப்பு தேவை. உங்கள் வாழ்க்கையில் ஆவிக்குரிய கனியை வளர்க்க நீங்கள் செய்ய வேண்டிய நான்கு விஷயங்களை நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன்.
முதலில், நீங்கள் தேவனுடைய வார்த்தையை படிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையே நமக்கான எல்லா ஏற்பாடுகளுக்கும் அடிப்படையானவை. அவருடைய வார்த்தையை நாம் நன்கு அறிந்திருக்கவில்லை என்றால், அவருடைய பல ஏற்பாடுகளை பெறாமல், கிட்டதட்ட தவிர்க்க முடியாமல் செல்கிறோம். 2 தீமோத்தேயு 2:15 இல், பவுல் திரும்பவும் தீமோத்தேயுக்கு சொல்கிறார், “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.” எனவே, சத்திய வார்த்தை – அதுதான் வேதம், தேவனுடைய வார்த்தையை – கையாளுவதற்கு, துல்லியமாக, நீங்கள் ஒரு ஊழியக்காரனாக (தொழிலாளியாக) இருக்க வேண்டும். அதற்கு நேரம் எடுக்கும். ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், நீங்கள் உங்கள் சட்டைக் கைகளை சுருட்டிக்கொண்டு, அதற்குள் வரவேண்டும்.
நான் உங்களுக்கு கொடுக்கும் இரண்டாவது வழிகாட்டுதல், ஜெபத்தில் நேரத்தை செலவிட வேண்டும். மேலும், ஜெபத்தின் மூலம், தேவனுடன் நாம் பேசுவதை மட்டும் குறிக்கவில்லை, ஆனால் அது போலவே முக்கியமான ஒன்று, ஒரு வேளை இன்னும் முக்கியமானது, தேவன் பேசுவதை கவனிப்பதாகும். இங்கே, மீண்டும், இயேசு நமக்கு சரியான மாதிரியை வழங்குகிறார். இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் முழு அடிப்படையும் அவருடைய தந்தையுடனான அவரது உறவாகும். அந்த உறவை வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும், இயேசு ஜெபத்தில் நிறைய நேரத்தை செலவிட்டார். பெரும்பாலும், அதிகாலையில்; அங்கு அவர் தந்தையின் குரலைக் கேட்டு, அவருடைய ஊழியத்திற்கான வழிகாட்டுதலைப் பெற்றார்.
நான் உங்களுக்கு வழங்கும் மூன்றாவது வழிகாட்டுதல் இதுதான்: ஐக்கியத்தை வளர்ப்பது. கிறிஸ்தவ வாழ்க்கையை நீங்களே நடத்த முயற்சிக்காதீர்கள். நாம் அனைவரும் ஒரே உடலின் அவயவங்கள் என்றும், அனைவருக்கும் மற்றொருவர் தேவை என்றும் வேதம் கூறுகிறது. தாவீது கோலியாத்தை சந்திக்கச் செல்வதை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். அவர் எடுத்த ஆயுதங்கள், ஆற்றிலிருந்து ஐந்து வலுவலுப்பான கற்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அந்தக் கற்கள் ஏன் வலுவலுப்பாக இருக்க வேண்டும்? சரி, அவைகள் மென்மையாக இல்லாவிட்டால், நிச்சயமாக அவை துல்லியமாக இருந்திருக்காது. அவற்றில் ஏதாவது குவியலாகவோ அல்லது கரடுமுரடாகவோ இருந்தால், அவை பறக்கும்போது நம்பிக்கையற்றதாகவும், துல்லியமற்றதாகவும் மாறியிருக்கும். அவை தாவீதின் உயிரை இழக்கச் செய்திருக்கலாம். கற்கள் ஏன் மென்மையாக இருந்தன? ஏனென்றால், அவைகள் ஆற்றிலே கிடந்திருந்தன. ஆற்றில் அவைகளுக்கு என்ன சம்பவித்தது? சரி, முதலில் தண்ணிர் அவைகள் மீது தவறாமல் கடந்துசென்றன. இரண்டாவதாக, அவைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன, மற்றும் கூர்மையான விளிம்புகளைத் தேய்த்துக்கொண்டு இருந்தன.
இப்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர் பயன்படுத்தக்கூடிய கிறிஸ்தவர்களைக் கண்டுபிடிக்க விரும்பினால், அவர் ஆற்றுக்குச் செல்கிறார் என்று நான் நம்புகிறேன். தேவனுடைய வார்த்தையின் சுத்தமான நீர் அவர்கள் மேல் பாய்ந்து, அவர்களை கழுவி, அவர்களைச் சுற்றி வளைந்து கொண்டிருக்கும் இடத்திற்கு செல்கிறார்; இரண்டாவதாக, அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஐக்கியத்தில் இருந்து, கரடுமுரடான விளிம்புகளை ஒருவருக்கொருவர் தேய்த்துக் கொண்டிருப்பார்கள். எனவே, ஐக்கியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், அது உங்களை ஒரு மென்மையான கல்லாக மாற்றும்.
உங்களுக்காக நான்காவதும் இறுதியான பரிந்துரையைத் தருகிறேன், அதுதான் ஒழுக்கத்திற்கு அடிபணிவதாகும். ஒழுக்கம் இல்லாமல் எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் கனி வராது; இரண்டு முக்கியமான ஒழுக்கத்தின் வடிவங்களை மனதில் வைத்திருக்கிறேன். முதலில், சுய ஒழுக்கம்; உங்கள் சொந்த ஒழுக்கமாகும்; நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒழுங்கமைக்கும் விதம். நீங்கள் எழுந்ததும், என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன உடுத்துகிறீர்கள், உங்களை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறீர்கள் போன்ற எளிய விஷயங்கள் கூட. கனிகளை வளர்ப்பதற்கு இவை அனைத்தும் அவசியமானது. ஆனால், அதற்கு அப்பால், சாதாரண சூழ்நிலைகளில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் தேவாலய ஒழுக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு தேவாலய உறுப்பினராகவும், சபை தலைவர்களின் அதிகாரத்தின் கீழ், அவர்களின் ஒழுக்கத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
அவையே என்னுடைய நான்கு பரிந்துரைகளாகும் – தேவனுடைய வார்த்தையைப் படிப்பது, ஜெபத்தில் நேரத்தைச் செலவிடுவது, ஐக்கியத்தை வளர்ப்பது, ஒழுக்கத்திற்கு அடிபணிவது.
சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை, நான் ஆவியின் கனியின் முதல் வடிவமான “அன்பின் கனி” பற்றி பேசுவேன்.
குறியீடு: RP-R009-101-TAM









