ீட்பின் ஆவிக்குரிய நன்மைகள்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
'மீட்பின் ஆவிக்குரிய நன்மைகள்' நூலில், இயேசு கிறிஸ்துவின் மரணம் நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுவித்து, ஒளியின் ராஜ்யத்திற்குள் எவ்வாறு கொண்டுவருகிறது என்பதை டெரெக் பிரின்ஸ் விளக்குகிறார். சிலுவையின் மூலம், இயேசு நமது கீழ்ப்படியாமையின் சாபங்களைச் சுமந்து, நமக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை வழங்கினார். 'நமது சுதந்தரத்தைச் சுதந்தரித்தல்' தொடரின் 3-ஆம் பாகமான இதில், இந்த ஆசீர்வாதங்கள் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Transcript
மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த உண்மைகளை பகிர்ந்து கொள்கிறேன், அந்த உண்மைகள் என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது உங்களிடமும் அதையே செய்ய முடியும்.
இந்த வாரம் எனது முதல் இரண்டு பேச்சுகளில், இருளின் ராஜ்யத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடவும், ஒளியின் ராஜ்யத்தின் வாரிசுகளாக மாறவும் தேவன் எவ்வாறு ஒரு வழியை உருவாக்கினார் என்பதை விளக்கினேன். நமக்காக இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக, தேவன் நமக்கு அந்த வழியை உருவாக்கினார்.
சிலுவையில் இயேசு நம்முடைய கீழ்ப்படியாமையால் ஏற்பட்ட சாபங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டார் (இந்த சாபங்கள் இருளான ராஜ்யத்தின் முழு பகுதியையும் உள்ளடக்கியது), அதையொட்டி, இயேசு தம் கீழ்ப்படிதலால் சம்பாதித்த ஆசீர்வாதங்களுக்குள் நாம் நுழையலாம். இந்த ஆசீர்வாதங்கள் ஒளியின் ராஜ்யத்தில் முழுப் பகுதியையும் உள்ளடக்கியது. சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் இரண்டும் நமது வாழ்க்கையின் மூன்று முக்கிய பகுதிகளாகிய ஆவி, சரீரம் மற்றும் பொருள் ஆகியவற்றில் செய்லபடுகின்றன.
இன்று நான் ஆவிக்குரிய பகுதியைக் கையாளப் போகிறேன். கிறிஸ்து நம்மை விடுவித்த ஆவிக்குரிய சாபங்கள் என்ன? கிறிஸ்து நமக்கு கிடைக்கச் செய்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் என்ன?
நான் உபாகமத்தின் 28வது அதிகாரத்திற்கு திரும்ப போகிறேன், அது இரண்டு எதிர் விஷயங்களை மிக விரிவாகக் குறிப்பிடும் அதிகாரமாகும்: தேவனுக்குக் கீழ்ப்படிவதால் ஏற்படும் ஆசீர்வாதங்கள் மற்றும் தேவனுக்கு கீழ்ப்படியாமையால் ஏற்படும் சாபங்கள்.
முதலாவதாக, நான் மீண்டும் ஆசீர்வாதத்தை தரும் காரணங்களையும், சாபத்தைக் கொண்டு வரும் காரணங்களாகிய அடிப்படைக் காரணங்களைப் பார்க்க விரும்புகிறேன். நியூ அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பைபிளின் பகுதியில் உள்ள உண்மையான பதிப்பை விட அதிக நேரடியாக இருக்கும் மார்ஜினல் பதிப்பிலிருந்து நான் படிக்கப் போகிறேன். உபாகமம் 28:1-2, இது மார்ஜினல் பதிப்பு என்பதை மறுபடியும் சொல்கிறேன், ஆனால் இது மூல எபிரேய மொழிக்கு ஒத்திருக்கும்.
1 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். 2 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிக்கொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
பின்னர், வசனம் 15இல், மோசே சாபங்களைப் பற்றி சொல்கிறார், இதுவே சாபங்கள் வருவதற்கான காரணம்.
15 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதே போவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
ஆசீர்வாதங்களை பெறுவதற்கும், சாபங்களை பெறுவதற்கும் இடையே உள்ள தீர்க்கமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. இது ஒரு குறுகிய ஆனால் மிக முக்கியமான சொற்றொடரில் சுருக்கப்பட்டுள்ளது: “கர்த்தருடைய சத்தத்துக்கு செவிகொடுப்பது.” உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை நீங்கள் கவனமாகக் கேட்பீர்களானால், இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தும் உங்கள்மேல் வரும், ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கு நீங்கள் செவிசாய்க்காவிட்டால், இந்த சாபங்கள் அனைத்தும் உங்கள்மேல் வரும்.
எனவே, நலமான வாழ்வு அல்லது பேரழிவுக்கான நமது முழு விதியும் நாம் செவிகொடுக்கும் சத்தத்தால் தீர்க்கப்படுவதை நீங்கள் காணலாம். கர்த்தரின் சத்தத்துக்கு செவிசாய்ப்பதும், அவர் சொல்வதைக் கடைப்பிடிப்பதும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். ஆனால், கர்த்தரின் சத்தத்துக்கு செவிசாய்க்காமல் இருப்பது சாபத்தை, பல சாபங்களைக் கொண்டு வரும். நிச்சயமாக, நாம் கர்த்தர் சொல்வதைக் கடைப்பிடிக்காதவரை அவருடைய சத்தத்தைக் கேட்பது போதாது. ஆனால், அதற்கு மாறாக, நாம் முதலில் அவருடைய சத்தத்தைக் கேட்காதவரை, தேவன் சொல்வதைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை, ஏனென்றால், நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவருடைய சத்தம்தான் நமக்குச் சொல்கிறது.
கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரை எதிர்கொள்ளும் பெரிய ஆவிக்குரிய ஆபத்து என்னவென்றால், அவர்கள் தேவனின் சத்தத்துக்கு உணர்ச்சியற்றவர்களாக மாறிவிட்டனர். அவர்கள் தங்கள் மத நடவடிக்கைகளிலும், கடமைகளிலும் தொடரலாம், ஆனால் அது வழக்கமான மற்றும் முறையான ஒன்றாகும், அது ஒரு வாழ்க்கை முறையாகவும், அவர்கள் வளர்த்துக்கொண்ட பழக்கவழக்கங்களின் விஷயமாகும், ஆனால் தேவனின் சத்தத்தைப் பற்றி தொடர்ச்சியான விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை. நீங்கள் பார்க்கலாம், எல்லாக் காலக்கட்டங்களிலும், தேவன் தம்முடைய மக்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்: நாம் அவருடைய சத்தத்துக்கு செவிசாய்ப்பது.
உதாரணமாக, இது எரேமியா 7:22-23 இல், கர்த்தர் தாமே தெளிவாகக் கூறியுள்ளார். இந்த வசனங்களில் தேவன் இஸ்ரவேலை எகிப்திலிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தபோது, அவர்களிடம் உண்மையில் என்ன தேவைப்பட்டது என்பதை விளக்குகிறார். பலி செலுத்துவதற்கான சட்டத்தைக் கடைப்பிடிப்பது அல்ல, ஆனால் அவருடைய சத்தத்துக்கு செவிகொடுப்பதுதான் அவர் மனதில் இருந்த முதல் விஷயம் என்று அவர் கூறுகிறார். இப்போது, அவருடைய சத்தம், அவர்களை நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவும் பலிகளைச் செலுத்தவும் வழிநடத்தும். ஆனால் மறுபுறம், நியாயப்பிரமாணத்தின் வெளிப்புறங்களைக் கடைப்பிடிப்பதும், பலிகளைச் செலுத்துவதும், கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிசாய்த்ததன் விளைவாக அவர்கள் அதைச் செய்யாவிட்டால், அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நாம் அவருடைய சத்தத்துக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதே தேவனின் முக்கிய தேவையாகும். எரேமியா 7:22-23 இல் தேவன் என்ன சொல்கிறார்:
22 நான் உங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்ற பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும், 23 என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.
கர்த்தர் நம் தேவனாக இருக்க வேண்டும், நாம் அவருடைய மக்களாக இருக்க வேண்டும் என்ற எளிய தேவைகளைக் கவனியுங்கள், “என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.” இதை எவ்வளவு எளிமையாக சுருக்க முடியுமோ அவ்வளவு எளிமையாக சுருக்கிக் கூறப்பட்டுள்ளது.
இப்போதும் புதிய ஏற்பாட்டில் இது வேறுவகையாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படி இல்லை. அந்த கொள்கை ஒரே மாதிரியாக இருக்கிறது. யோவான் 10:27 இல் ஒரே ஒரு வசனத்தில் இயேசு அதைச் சுருக்கமாக கூறுகிறார்:
27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
நாம் உண்மையில் இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் என்பதற்கு அடையாளம், நாம் ஒரு குறிப்பிட்ட மத வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தில் ஆராதனை செய்வதோ அல்ல, ஆனால் அது அவருடைய சத்தத்தைக் கேட்பதுதான்; அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரைப் பின்பற்றுவதே ஆகும். எல்லா இனங்களிலும், எல்லா வயதினரிலும், எல்லா மதப் பிரிவுகளிலும் உண்மையான விசுவாசிகளின் அடையாளம் அதுதான். இது வெளிப்புறமான ஒன்றல்ல, ஆனால் தேவனுடனான உள்ளார்ந்த தனிப்பட்ட உறவே, அவருடைய சத்தத்தைக் கேட்கவும், அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவர் நம்மை எங்கு அழைத்துச் செல்கிறாரோ அங்கே நாம் பின்தொடரவும் நமக்கு உதவுகிறது. தேவனின் ஆசீர்வாதத்திற்கான எளிய வழி அவருடைய சத்தத்தைக் கேட்டு கீழ்ப்படிவதே என்பதை நாம் காண்கிறோம், ஆனால் தேவனின் சத்தத்தைக் கேட்காமலும், கீழ்ப்படியாமலும் இருப்பதன் தவிர்க்க முடியாத முடிவு சாபங்களாகும்.
இன்று நான் உங்களுக்காக சுருக்கமாக பட்டியலிடப் போகிறேன், தேவனுக்கு கீழ்ப்படியாமையால் ஏற்படும், ஆவிக்குரிய தளத்தில், உள்ளான தளத்தில், நமது உள் ஆளுமையின் தளத்தில் உள்ள சாபங்களை மோசே, உபாகமம் 28இல் பட்டியலிட்டுள்ளார். முதலாவதாக, வசனம் 20 இல், நாம் செய்யும் எல்லாவற்றிலும் குழப்பத்தை அனுபவிப்போம் என்று மோசே கூறுகிறார். அது குறிப்பிட்ட ஆவிக்குரிய முதல் சாபமாகும், அதுதான் குழப்பம். மேலும், நவீன அமெரிக்கா குழப்பம் நிறைந்ததாக இருப்பதை நான் கவனிக்கிறேன்.
வசனம் 28இல், மோசே புத்திமயக்கத்தையும், குருட்டாட்டத்தையும், மனத் திகைப்பையும் பட்டியலிடுகிறார். இவைகள் தேவனின் சத்தத்தைக் கேட்காததன் விளைவுகளாகும். இவைகள் சாபங்களாகும்.
வசனம் 34இல், உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய் என்று தேவன் கூறுகிறார். மனரீதியான மற்றும் உணர்ச்சி ரீதியான முறிவு ஒரு சாபம் என்றும், அது தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமையின் விளைவு என்றும் நாம் கூறலாம்.
என் அனுபவத்திலிருந்து கவனிக்கிற ஒரு காரியம் என்னவென்றால், நவீன அமெரிக்காவில் (வழக்குகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் தனிப்பட்ட கருத்தாக நான் பேசுகிறேன்) குழப்பம், மன முறிவு, உணர்ச்சிப்பூர்வமான முறிவு போன்றவற்றிற்கான மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று தேவனின் வார்த்தைகளால் தடைசெய்யப்பட்ட செயல்களிலும், மறைவான காரியங்களிலும், தவறான ஆவிக்குரிய உறவுகளிலும் ஈடுபடுவதேயாகும்.
பின்னர் 65 ஆம் வசனத்தை தொடர்ந்து பார்க்கும்போது, தத்தளிக்கிற இருதயத்தையும், மனசஞ்சலத்தையும் பற்றி மோசே கூறுகிறார். கீழ்ப்படியாமையின் ஆவிக்குரிய விளைவுகளைச் சுருக்கமாகச் சொல்ல முடியும் என்று நான் நம்புகிறேன் – இந்த ஆவிக்குரிய சாபங்கள் – குழப்பம், ஏமாற்றம், உள்ளான வேதனை மற்றும் சஞ்சலம் போன்றவையாகும். மக்களையும், அவர்கள் பிரச்சனைகளையும் ஒரு ஊழியராக நான் பேசுகிறேன். இவைகளைதான், இன்று அமெரிக்காவில் உள்ள மக்களின் வாழ்க்கையில் நாங்கள் தொடர்ந்து சந்திக்கும் விஷயங்கள்: குழப்பம், ஏமாற்றம், உள்ளான வேதனை மற்றும் சஞ்சலம் போன்றவையாகும்.
இப்போது, கீழ்ப்படிதலின் விளைவாக ஆவிக்குரிய தளத்தில் உள்ள ஆசீர்வாதம் என்ன? நிச்சயமாக, பல ஆசீர்வாதங்கள், எண்ணற்ற ஆசீர்வாதங்கள் உள்ளன. ஆனால், அவை உண்மையில் ஒரு சிறிய, அழகான வார்த்தையில் சுருக்கமாக கூறினால், அந்த வார்த்தை சமாதானம் என்று நான் நம்புகிறேன். ஏசாயா 53:5 இல், இயேசு சிலுவையில் மரித்தபோது நடந்த பரிமாற்றத்தை ஏசாயா சித்தரிக்கிறார், அவர் இதை சொல்கிறார், “நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது.” எனவே, நாம் தேவனோடு ஒப்புரவாகும்படி, நம்முடைய பாவத்தினாலும், கீழ்ப்படியாமையினாலும் வந்த நியாயத்தீர்ப்பையும் தண்டனையையும் இயேசு சகித்தார். மேலும், தேவனுடன் ஒப்புரவாகும்போது, உள்ளான வேதனை, சஞ்சலம், குழப்பம் மற்றும் விரக்தி போன்றவற்றிலிருந்து விடுவிக்கப்படுவோம், மேலும், ஆழமான, நிலையான, உள்ளான சமாதானத்தின் யதார்த்தத்தை நாம் அறியலாம். பல வருடங்களாக நான் ஆழ்ந்த சமாதானத்தை அனுபவித்து வருகிறேன் என்பதை என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சொல்ல விரும்புகிறேன். இது எனக்கு உண்மையான அனுபவமாக இருக்கிறது, இது ஒரு கோட்பாடோ அல்லது ஒரு இறையியலோ அல்ல.
இந்த சமாதானத்தைப் பற்றி பேசும் புதிய ஏற்பாட்டில் உள்ள மற்ற இரண்டு வேத வசனங்களைப் பார்ப்போம். ரோமர் 5:1:
1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
எவ்வளவு அழகான வார்த்தைகள், “தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.” இனி நாம் குற்றவாளிகள் அல்ல. நாம் தேவனை எந்தவிதத்திலும் பிரியப்படுத்தவில்லை என்று இனி பயப்படத் தேவையில்லை. நாம் தேவனோடு சமாதானம் கொண்டுள்ளோம். பின்னர் பிலிப்பியர் 4:7 இல் உள்ள ஒரு அழகான வசனம் நமக்குள் இருக்கும் அனுபவ விளைவுகளை விவரிக்கிறது:
7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
நமது சமகால நாகரீகத்தில் நம் இதயங்களையும், சிந்தைகளையும் காக்க தேவனின் சமாதானம் தேவைப்படுகிறது. ஆனால் தேவனுடைய சமாதானம் அதைச் செய்ய முடியும் என்று நான் சாட்சி கூற விரும்புகிறேன். உண்மையில், “சமாதானம்” என்ற வார்த்தை எபிரெய வடிவத்தில், மோதல் இல்லாதது, அதைவிட அதிகமாக, முழுமையான அல்லது நல்வாழ்வு என்ற அர்த்தமாகும். சமாதானம் உள்ளான மனிதனில் தொடங்கி, முழுமையான நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது என்று சொல்ல விரும்புகிறேன். இது நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும், சரீரத்திலும் பொருளாதாரத்திலும் செயல்படுகிறது.
சரி, இன்று நம் நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை நான் சரீரப் பகுதியில் மீட்பின் வெளிப்பாட்டைப் பற்றி பேசுகிறேன், அது கிறிஸ்து தம்முடைய மரணத்தின் மூலம் நமக்குக் கிடைக்கச் செய்த சரீர நன்மைகள் ஆகும்.
குறியீடு: RP-R022-103-TAM









