மீட்பின் மூலம் விடுதலை

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
இயேசுவின் தியாகத்தின் மூலம் உங்கள் பரலோகச் சுதந்திரத்தை எவ்வாறு பெறுவது என்பதை டெரெக் பிரின்ஸின் 'மீட்பின் மூலம் விடுதலை' என்ற போட்காஸ்ட் வழியாகக் கண்டறியுங்கள். 'நமது சுதந்திரத்தைச் சுதந்தரித்தல்' தொடரின் முதல் பகுதியில், நாம் தேவனுடைய ராஜ்யத்தின் வாரிசுகள் என்பதை வெளிப்படுத்தும் வேத சத்தியங்களை ஆராயுங்கள். இறைவார்த்தை எவ்வாறு நம்மை வழிநடத்தி, தெய்வீகச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள உதவுகிறது என்பதையும், கர்த்தருடைய ஒளியில் உண்மையான நிறைவை அடைவது எப்படி என்பதையும் இதில் கற்றுக்கொள்ளுங்கள்.
Transcript
இந்த புதிய வாரத்தின் துவக்கத்தில் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன். அந்த உண்மைகள், என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது உங்களுக்கும் அப்படியே செய்யும். இந்த வாரம், “நமது சுதந்தரத்தை உரிமை கோருதல்” என்ற கருப்பொருளைக் கையாளப் போகிறேன்.
முதலில், எனக்கு கடிதம் எழுதியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியைத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.
கிறிஸ்தவ நம்பிக்கையின் சாதனம் புதிய ஏற்பாடு ஆகும். நாம் “ஏற்பாடு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது, அதே அர்த்தத்தில் “இன்னாருடைய கடைசி உயிலும் மரண சாசனமும்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், மற்றொருவரின் மரணத்தின் மூலம் ஏதோவொன்று நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. நமக்காக இயேசுவின் மரணத்தின் மூலம் நமக்குக் கிடைத்த அனைத்தையும் புதிய ஏற்பாடு சொல்கிறது. அது நமது சுதந்தரத்தை வெளிப்படுத்துகிறது. நாம் ஒரு ராஜ்யத்தின் வாரிசுகள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பல கிறிஸ்தவர்கள் தங்களுடைய உண்மையான சுதந்தரம் என்ன என்பதையும் அல்லது அதை எவ்வாறு பெறுவது என்பதையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் ஒரு பெரிய செல்வத்தின் வாரிசாக இருக்கும் ஒரு மனிதனைப் போன்றவர்கள், ஆனால் அவரது சுதந்தரம் என்ன என்பதைக் கண்டறியவோ அல்லது அதை உரிமைக் கொண்டாடவோ ஒருபோதும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, அதுவே இந்த வாரம் எனது கருப்பொருளாக இருக்கும், கிறிஸ்தவர்களாகிய நமது சுதந்தரத்தைக் கண்டுபிடித்து உரிமை கோருவதாகும்.
இந்தக் கருப்பொருளில் நாம் பார்க்கப்போகும் முதல் வேதபகுதி கொலோசெயர் 1: 12-14 ஆகும், அங்கு பவுல் இவ்வாறு கூறுகிறார்:
12 ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு [தேவனுடைய மக்களுக்காக வைக்கப்பட்டுள்ள ஒரு சுதந்தரத்தை, வெளிச்சத்தில் உள்ள ஒரு சுதந்தரத்தைப் பற்றி பவுல் பேசுவதை நீங்கள் அங்கு காணலாம். பின்னர் அவர் வெளிச்சத்தின் சுதந்தரத்தை நாம் பெற வேண்டுமானால், என்ன சம்பவிக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.], நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும் [அல்லது நம்மை திறமையாக்கியது], 13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி [அதாவது பிதாவாகிய தேவன்], தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். 14 [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
எனவே, பவுல் இங்கு இரண்டு ராஜ்யங்களை சித்தரிக்கிறார்: இருளின் ராஜ்யம், ஒளியின் ராஜ்யம். ஒளியின் ராஜ்யம் என்பது தேவனின் ராஜ்யம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம்; இருளின் ராஜ்யம் என்பது சாத்தானின் ராஜ்யமாகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானது. நம்முடைய சுதந்தரம் ஒளியின் ராஜ்யமாகிய தேவனின் ராஜ்யத்திலும், இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்திலும் உள்ளது. ஆனால், நாம் நமது சுதந்தரத்தைப் பெறுவதற்கு, முதலில் ஏதாவது சம்பவிக்க வேண்டும். நாம் இருளின் களத்திலிருந்து, அதாவது நம் மீதும் நமது வாழ்வின் மீதும் உள்ள சாத்தானின் அதிரகாரத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இது மீட்பின் மூலம் வருகிறது, இது சிலுவையில் இயேசுவின் மரணத்தின் மூலம் தேவன் நமக்கு வழங்கிய மீட்பாகும். அவருடைய மீட்பின் மூலம் நாம் பாவ மன்னிப்பைப் பெறலாம். நாம் பாவ மன்னிப்பைப் பெற்றவுடன், சாத்தானுக்கு நம்மீது சட்டப்பூர்வமான உரிமை இல்லை, அவனுடைய களத்திலிருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம், மேலும், இயேசு கிறிஸ்துவின் ராஜ்யமாகிய ஒளியின் ராஜ்யத்தில் நாம் நமது சுதந்தரத்திற்குள் நுழையக்கூடியவர்களாக மாற்றப்படுகிறோம்.
இருப்பினும், இருளின் ராஜ்யத்தில் நம் நிலையைப் பற்றி நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், மக்கள் இருளில் இருக்கும்போது, அவர்களின் உண்மையான நிலையை அவர்களால் பார்க்க முடியாது. சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் மக்களுக்கு அது உண்மையான காரியம்; அவர்கள் இருளில் இருக்கிறார்கள், அவர்களின் உண்மை நிலையை அவர்களால் பார்க்க முடியாது. இருளுக்குள் வந்து நம் உண்மை நிலையை வெளிப்படுத்த நமக்கு ஒரு ஒளி தேவை. அந்த ஒளி நற்செய்தியின் மூலம், தேவனின் வார்த்தையால் வழங்கப்படுகிறது. கிறிஸ்து நம்மிடம் வந்து நம்மை மன்னித்து மீட்பதற்கு முன் நாம் இருளான ராஜ்யத்தில் சாத்தானின் ஆதிக்கத்தில் இருக்கும்போதே நம் நிலையைப் பற்றி தேவனுடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது. பவுல் இந்த வார்த்தைகளை எபேசியர் 2:1-3 இல் பயன்படுத்துகிறார்:
1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார் [பவுல் நாம் உடல்ரீதியாக இறந்துவிட்டோம் என்று அர்த்தப்படுத்தவில்லை, ஆனால் நாம் ஆவிக்குரிய விதத்தில் மரித்து, அந்நியப்பட்டு, தேவனில் உள்ள ஜீவனிலிருந்து துண்டிக்கப்பட்டோம் என்று கூறுகிறார்]. 2 அவைகளில் [அதுதான், அக்கிரமங்களிலும், பாவங்களிலும்] நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள் [ஆகவே, இருளின் ராஜ்யத்தில், நம்முடைய அக்கிரமங்கள் மற்றும் பாவங்களில், நாம் ஆகாயத்து அதிகாரப் பிரபு என்று அழைக்கப்படும் ஆவிக்குரிய வல்லமையின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தோம், மேலும், அதை கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியைசெய்கிறது என்றும் சொல்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுக்கு நாம் கீழ்ப்படியாமல் இருக்கும்போது, தானாகவே சாத்தானின் ஆதிக்கத்திற்குள் நாம் இருப்பதை வெளிப்படுத்துகிறது. பின்னர், பவுல் இதுவே நம் அனைவரின் உலகளாவிய நிலை என்று கூறுகிறார்]. 3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
எனவே, இது நம் அனைவருக்குள்ளும் உண்மையாயிருக்கிறது. நமது இயற்கையான நிலையில் நாம் தேவனோடு பகையாக இருக்கிறோம்; நாம் தேவனிடமிருந்து அந்நியப்பட்டுள்ளோம்; நாம் இருளில் இருக்கிறோம், நமது மாம்சம் மற்றும் மனதின் ஆசைகளால் கவரப்படுகிறோம். அந்த தீமையான, தெய்வபக்தியற்ற ஆசைகள் மூலம் நாம் இருளின் பிரபுவாகிய சாத்தானால் அடிமைப்படுத்தப்படுகிறோம். இப்போது சுவிசேஷத்தின் மூலம், அந்த இருளான சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்து, ஒளியின் ராஜ்யத்தில் நம் சுதந்தரத்திற்குள் கொண்டு வருவதே தேவனின் நோக்கமாகும். இது அப்போஸ்தலர் 26:18 இல் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, அங்கு பவுல் புறஜாதியாருக்கு நற்செய்தியைக் கொண்டு செல்ல இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்ற அழைப்பை மீண்டும் கூறுகிறார். இதைத்தான் சுவிசேஷத்தின் மூலம் கிறிஸ்து பவுலுக்குக் கட்டளையிட்டார்:
18 அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக் கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு,
மீண்டும், தேவனின் இறுதி நோக்கத்தை நீங்கள் காணலாம், நாம் பாவ மன்னிப்பைப் பெற்று, ஒளியின் ராஜ்யத்தில் நமது சுதந்தரத்திற்கு தகுதி பெறலாம். ஆனால், இது நிகழும் பொருட்டு, முதலில், தேவன் நம் உண்மை நிலையைப் பற்றி நமது கண்களைத் திறந்து, இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தேவனுக்கும் நம்மைத் திருப்ப வேண்டும். ஆகவே, இந்த வேத வசனங்களிலிருந்தும், நம் சொந்த அனுபவத்திலிருந்தும் இருளுக்கு வல்லமை உண்டு என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். சாத்தானின் வல்லமை உண்மையானது. இது ஒரு கற்பனை அல்ல, இது ஒரு இறையியல் கற்பனையும் அல்ல, ஆனால் சாத்தான் உண்மையான வல்லமை கொண்ட ஒரு உண்மையான உயிரினம், அவன் உண்மையிலே, தேவனிடமிருந்து அந்நியப்பட்டவர்களை ஆதிக்கம் செலுத்துகிறான். தேவனுடைய ராஜ்யத்தில் நுழைவதற்கு, முதலில் சாத்தானின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். நம் சார்பாக இயேசுவின் மரணத்தின் மூலம் மட்டுமே இந்த விடுதலை சாத்தியமானது. “மீட்பு” என்ற வார்த்தையின் அர்த்தத்தை நாம் இன்னும் துல்லியமாக புரிந்துகொள்ள வேண்டும். இது “மீட்க” என்ற வினைச்சொல்லில் இருந்து வருகிறது. மீட்பது என்பது திரும்ப வாங்குதல், அல்லது மீட்கும் பொருளாகும். ஒரு உதாரணமாக, ஒரு செல்வந்தரின் மகன் கடத்தல்காரர்களால் எடுத்து செல்லப்பட்டு, அவனை மீட்கும் பணத்திற்காக வைத்திருந்தால், அந்த செல்வந்தர் கடத்தல்காரர்களால் கேட்கப்பட்ட மீட்கும் பணத்தை செலுத்த தயாராக இருப்பார், இதனால் அவரது மகன் அவருக்கு மீட்கப்படுவான். செல்வந்தன், விலை கொடுத்து, கடத்தல்காரர்களிடமிருந்து தன் மகனை மீட்டுக்கொண்டான் என்று சொல்வோம்.
இப்போது, இயேசு செய்தது என்னவென்றால், சாத்தானின் ராஜ்யத்திலிருந்து நம்மை மீட்டுக்கொள்வதற்கான விலையை செலுத்தினார். ரோமர் 7:14 இல் பவுல் இவ்வாறு கூறுகிறார்:
14 மேலும், நமக்கு தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன் [மற்ற மொழிபெயர்ப்புகள் நான் சரீரப்பிரகாரமானவன் என்று கூறுகிறது].
அங்குள்ள கிரேக்க மொழியில், “பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு” என்று கூறுகிறது. இது ரோம உலகிலிருந்து எடுக்கப்பட்ட உருவகம். ரோமானிய உலகில், அடிமைச் சந்தையில் ஒருவர் விற்கப்படும்போது, அவர் ஈட்டியின் கீழ் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஏனென்றால், அவர் ஒரு கம்பத்தில் நிறுத்தப்பட்டு, அவரது தலைக்கு மேலே, அந்த கம்பத்தில் ஒரு ஈட்டி குத்தப்பட்டிருக்கும். அதனால், அவன் இந்த நீட்டிய ஈட்டியின் கீழ் விற்கப்பட்டான் என்பது, அவன் அடிமையாக விற்கப்பட்டான் என்பதற்கான ஆதாரமாகிறது. பவுல் சொல்வது என்னவென்றால், நாம் நம்முடைய பாவத்தின் மூலம், சாத்தானின் அடிமை சந்தையில் அடிமைகளாக வெளிப்படுத்தப்பட்டோம். மேலும் நம் தலையின் மேல் நீட்டப்பட்டுள்ள ஈட்டி, நாம் செய்த பாவத்துக்கு நாம் விற்பனையாக வந்துள்ளோம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இப்போது, பழங்காலத்தில், ஒரு நபர் அடிமையாக விற்கப்படும்போது, அவர்கள் என்ன தொழிலை செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் வழி எதுவும் இல்லை. சிலர் வீட்டு பணியாளர்கள், அல்லது ஆசிரியர்கள் அல்லது, செவிலியர்கள் போன்ற மிகவும் மரியாதைக்குரிய தொழில்களை எடுக்க நிர்பந்திக்கப்படலாம், ஆனால் மற்றவர்கள் ஒரு கழிப்பறையை சுத்தம் செய்பவராக அல்லது விபச்சாரம் போன்ற மிகவும் கீழ்த்தரமான அல்லது ஒழுக்கக்கேடான தொழில்களுக்கு விற்கப்படலாம். அடிமையாக இருப்பவருக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை எதுவும் இல்லை, அவரை வாங்கி சொந்தமாக்கினவருக்கே தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.
பாவிகளாகிய நமக்கும் அப்படித்தான். நாம் அனைவரும் இயல்பாகவே சாத்தானின் அடிமைகள், ஆனால் நம்மில் சிலர் மரியாதைக்குரிய பாவிகள், சிலரோ மரியாதைக் குறைவான பாவிகள். இறுதியில், மரியாதைக்குரிய பாவிகளுக்கும், மரியாதைக் குறைவான பாவிகளுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. சரி, இயேசு பூமிக்கு வந்தபோது நடந்தது என்னவென்றால், அவர் சாத்தானின் அடிமைச் சந்தைக்குள் நுழைந்தார், அங்கே நாம் விற்பனைக்கு இருப்பதைக் கண்டார், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும், சாத்தானின் அடிமைச் சந்தையிலிருந்தும் நம்மை விலைக்கு வாங்கினார். அவர் செலுத்திய விலை அவருடைய விலைமதிப்பற்ற இரத்தமாகும். எபேசியர் 1:7 இல் பவுல் கூறுகிறார்:
7 அவருடைய [கிறிஸ்து] கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
நம்முடைய பாவ மன்னிப்பைப் பெற்ற இயேசுவின் இரத்தத்தால் நமது மீட்பு செலுத்தப்பட்டது. நாம் மன்னிக்கப்படுவதற்கும், ஒளியில் பரிசுத்தவான்களின் ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதற்கும், தகுதிபெறுவதற்கும் அவர் நம்முடைய இடத்தில் நம்முடைய பாவங்களின் தண்டனையைச் சுமந்தார். இது 1 பேதுரு 1:17-19 இல் மீண்டும் கூறப்பட்டுள்ளது, இது ஒரு மிக அழகான வேதவசனம்.
17 அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். 18 உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், 19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
ஆகவே, இயேசு நமக்காக சிந்திய விலைமதிப்பற்ற இரத்தமே நமது மீட்பின் விலையைச் செலுத்தியது, சாத்தானின் அடிமைச் சந்தையிலிருந்தும் இருளின் ராஜ்யத்திலிருந்தும் நம்மை விடுவித்தார், நமக்காக பாவ மன்னிப்பைப் பெற்று, ஒளியில் உள்ள பரிசுத்தவான்களின் சுதந்தரத்தில் நுழைவதற்கு நம்மைத் தகுதிப்படுத்தினார்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். நாளை, இரண்டு அம்சங்களிலிருந்து மீட்பின் செயல்பாட்டை முழுமையாக விளக்குகிறேன். அந்த அம்சங்கள்: நாம் எதிலிருந்து மீட்கப்பட்டோம் மற்றும் நாம் எதற்காக மீட்கப்பட்டோம் என்பதாகும்.
குறியீடு: RP-R022-101-TAM









