சபைக்கு புதுப்பித்தல் அவசியமா

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
திருச்சபை அதன் சரியான இடத்திலும் நிலையிலும் இருக்கிறதா? டெரெக் பிரின்ஸ் தனது 'மறுசீரமைப்பு' தொடரின் 6-வது பகுதியான 'திருச்சபைக்கு மறுசீரமைப்பு தேவையா?' என்பதில் இந்த முக்கியமான கேள்வியை ஆராய்கிறார். நற்செய்தியின் வல்லமை திருச்சபையின் புதுப்பித்தலுக்கு எவ்வாறு நம்பிக்கையை அளிக்கிறது என்பதைக் கண்டறியுங்கள்.
Transcript
ஒரு புதிய வாரத்தின் ஆரம்பத்தில் திரும்பவும் உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகின்றேன். இந்த சத்தியங்கள் என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வித்தியாசத்தைக் உண்டாக்கியிருக்கின்றன. இவை அதையே உங்களுக்கும் செய்யும்.
முதலில், எனக்கு எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு “நன்றி” என்று சொல்ல விரும்புகிறேன். இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய ஒரு அஞ்சல் முகவரியை உங்களுக்குக் கொடுப்போம். உங்களுடைய தனிப்பட்ட தேவைகள், பிரச்சனைகள், ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்.
கடந்த வாரம் முழுவதும், இன்றைய நம் உலகத்தில் தேவன் தம்முடைய முடிவு கால நோக்கங்களை எவ்வாறு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று உங்களுடன் நான் பகிர்ந்து கொண்டேன். தேவனுடைய நோக்கங்கள் எவ்வாறு இரண்டு விதமான ஜனங்களை மையமாகக் கொண்டிருக்கிறது என்று நான் விளக்கிச் சொன்னேன். அவர் இஸ்ரவேலிடமும், சபையிடமும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகள் மூலம் தம்மையே ஒப்புக்கொடுத்திருக்கிறார். அவர் அவற்றை மீற மாட்டார். தேவனுடைய நோக்கத்தை ஒரு வார்த்தையில் தொகுத்துச் சொல்லி விடலாம்: புதுப்பித்தல் என்ற வார்த்தைதான் அது.
“புதுப்பித்தல்” என்றால், காரியங்களை திரும்பவும் அவைகளுக்குரிய சரியான இடத்திலும், சரியான நிலையிலும் வைப்பதாகும் என்று நான் விளக்கிச் சொன்னேன். புதுப்பித்தலுக்கான தேவை, அத்தியாவசியமாக ஒன்றைச் சுட்டிக் காண்பிக்கிறது. அதாவது இப்பொழுது அந்தக் காரியங்கள் அவைகளுக்குரிய சரியான இடத்திலும், சரியான நிலையிலும் இல்லை என்பதுதான் அது. இதையும் நான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன்.
இந்த வாரத்தில், சபையின் புதுப்பித்தலுக்கான சத்தியங்களை இன்னும் விவரமாக நான் எடுத்துச் சொல்லப் போகிறேன். பிறகு அடுத்த வாரத்தில், இஸ்ரவேலின் புதுப்பித்தலைக் குறித்து நான் பேசுவேன்.
இப்பொழுது நாம் சபையின் புதுப்பித்தலைக் குறித்துப் பேசுகிறோம் என்றால், சபைக்கு புதுப்பித்தல் தேவை என்று அர்த்தமாகிறது. அப்படியென்றால், நம்முடைய விளக்கத்தின்படி, சபை தனக்குரிய சரியான இடத்தில், சரியான நிலையில் இப்பொழுது இல்லை என்று அர்த்தம். இது உண்மைதானா? ஆம் என்றால், எவற்றிலெல்லாம் சபைக்கு புதுப்பித்தல் தேவைப்படுகிறது? இப்பொழுது நான் இந்தக் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லப் போகிறேன். திரும்பவும் இந்தக் கேள்விகளை முன் வைக்கிறேன். சபை தனக்குரிய சரியான இடத்திலும், சரியான நிலையிலும் இல்லை என்பது உண்மைதானா? ஆம் என்றால், எந்தெந்த விஷயங்களிலெல்லாம் சபைக்கு புதுப்பித்தல் தேவைப்படுகிறது?
சபை எப்படியிருக்க வேண்டும் என்று தேவன் திட்டமிட்டிருக்கிறாரோ அதை வேதவசனத்தின் அடிப்படையில்தான் நாம் அறிந்து கொள்ள முடியும். அதாவது ஆதித்திருச்சபையை தேவன் எவ்வாறு உருவாக்கினார், புதிய ஏற்பாட்டில், பிரதானமாக, அப்போஸ்தலர் நடபடிகளில் சபையானது எவ்வாறு செயல்பட்டது என்று பார்ப்பதன் மூலம்தான் நாம் அதை அறிந்து கொள்ள முடியும். நிச்சயமாக, புதிய ஏற்பாட்டுச் சபையில் பல பிரச்சனைகள் இருந்தன. புதிய ஏற்பாட்டில் அவை எவ்வித ஒளிவுமறைவுமில்லாமல் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பிரச்சனைகளை மூடி மறைக்கும்படி எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆனால் அவற்றின் எல்லாப் பிரச்சனைகளின் மத்தியிலும், புதிய ஏற்பாட்டுச் சபையில் பின் வரும் ஏழு பொதுவான அம்சங்கள் காணப்பட்டன. இப்பொழுது நான் அந்த ஏழு அம்சங்களையும் பட்டியலிடுகிறேன்.
முதல் அம்சம்: எல்லா விசுவாசிகளின் மத்தியிலும் பொதுவான ஒரு ஒற்றுமை காணப்பட்டது. அந்த ஒற்றுமைக்குள், பல்வேறு வித்தியாசங்கள் இருந்தன. சில விசுவாசிகள் அப்பொழுதும் ஜெப ஆலயங்களில் ஆராதித்து வந்தனர். மற்றவர்கள் புதிய இடங்களில் கூடி ஆராதித்தனர். அவர்கள் மத்தியில் கலாச்சார வித்தியாசங்களும், இன்னும் மற்ற வித்தியாசங்களும் இருந்தன. இருந்தாலும், இந்த எல்லா வித்தியாசங்களின் மத்தியிலும், விசுவாசிகளுக்கிடையே ஒரு பொதுவான ஒற்றுமை காணப்பட்டது. பவுல் கொரிந்து சபைக்கு நிருபம் எழுதியபோது, அவர் பாப்டிஸ்ட் சபைக்கு அல்லது ப்ரெஸ்பெட்டீரியன் சபைக்கு அல்லது எபிஸ்கோபல் சபைக்கு அல்லது கத்தோலிக்க சபைக்கு என்று விலாசமிட்டு எழுதவில்லை. பல்வேறு பெயர்களுடன், பல்வேறு சபைகள் அங்கே காணப்படவில்லை. ஒவ்வொரு முக்கியமான பட்டணத்திலும், ஒரு சபைதான் இருந்தது. இது வெளியே தெரிந்த, ஒரு வரலாற்று உண்மை. இது நிச்சயம், இன்றைக்கு நாம் பார்க்கின்ற, நமக்குப் பழக்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.
இரண்டாவது அம்சம்: கிறிஸ்துவின் நிமித்தம், எல்லாவற்றையும் தியாகம் செய்யக்கூடிய, இன்னும் தங்கள் உயிரையே தியாகம் செய்யக்கூடிய ஒரு விருப்பம் அன்று எல்லா புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்குள்ளும் இருந்தது. அந்த நாட்களில், ஒருவர் கிறிஸ்தவராகும்போது, அவருடைய உயிரே போகக்கூடிய நிஜத்தை, அந்த சாத்தியத்தை அவர் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நிலைமை பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது. இன்றைக்கு கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள் மத்தியில், எல்லாவற்றையும் தியாகம் செய்யக்கூடிய விருப்பம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. உண்மையில், ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிறிய சிறிய தியாகங்கள்கூட இன்று வெறுத்து, ஒதுக்கப்படுகின்றன.
மூன்றாவதாக, சுவிசேஷத்தை இவ்வுலகத்தின் தேசங்களெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று இயேசு கொடுத்த கட்டளைக்கு ஒரு அர்ப்பணிப்பு புதிய ஏற்பாட்டுச் சபையில் இருந்தது. முதல் நூற்றாண்டுக்குள்ளேயே, சபையானது இந்த வேலையை நிறைவேற்றி முடிப்பதில் வெற்றி கண்டிருந்தது. அடுத்த 18 அல்லது 19 நூற்றாண்டுகளில், சபை அந்த வேலையில் பின் தங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் நூற்றாண்டின் முடிவில் காணப்பட்டதைக் காட்டிலும், இன்றைக்கு வாழ்கின்றவர்களில் அதிக விகிதத்திலான ஜனங்கள் சுவிசேஷத்தை ஒருபோதும் கேள்விப்பட்டிராத நிலையில் வாழ்கின்றார்கள்.
நான்காவதாக, புதிய ஏற்பாட்டுச் சபையில் காணப்பட்ட ஆவிக்குரிய அதிகாரமும், வல்லமையும் பெரிய பட்டணங்களிலும், மாகாணங்களிலும் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. ஒரு நேரத்தில், சுவிசேஷத்தை எதிர்த்தவர்கள், தங்களுடைய பட்டணத்திற்கு வந்த பிரசங்கியார்களைக் குறித்து இப்படியொரு புகாரைத் தெரிவித்தனர்: “உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்” (அப்போஸ்தலர் நடபடிகள் 17:6). இவர்கள் ஒருவேளை பிரசங்கிக்கிறவர்களை வரவேற்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இவர்களால் அவர்களை அலட்சியம் செய்து விட முடியவில்லை.
இன்றைக்கு நம்முடைய மேற்கத்திய உலகத்தின் பல பகுதிகளில், பெரும்பாலான ஜனங்கள் சபையை காலங்கடந்து விட்ட ஒன்றாக, தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாக பார்க்கிறார்கள். அவர்கள் சபையோடு போராடவில்லை, அவர்கள் சபையை எதிர்த்து நிற்கவுமில்லை. அவர்கள் அதை அலட்சியம் செய்து விட்டார்கள்.
ஐந்தாவதாக, ஆதித் திருச்சபையில், பரிசுத்த ஆவியானவரின் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வரங்கள் முறையாக, ஒழுங்காக பயன்படுத்தப்பட்டன. அது ஒரு குறிப்பிட்ட சிறிய குழு அல்லது பிரிவினருக்கே உரிய, விசேஷமான, விசித்திரமான ஒரு விஷயம் கிடையாது. அது முழுச் சபையின் வழக்கமான வாழ்க்கைமுறையாக இருந்தது.
ஆறாவதாக, புதிய ஏற்பாட்டு ஆதித் திருச்சபையில், வேதவசனத்திற்குரிய அதிகாரத்தை எந்தக் கேள்வியும் கேட்காமல், அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு நாம் அதிலிருந்து வெகு தூரம் கடந்து வந்து விட்டோம். பல்வேறு சபைப் பிரிவுகளில் இருக்கும் பல சபைத் தலைவர்கள், இயேசுவின் தெய்வீகத்தன்மை, இயேசுவின் கன்னிப்பிறப்பு, இயேசுவின் சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதல் போன்ற சுவிசேஷ சத்தியத்தின் எளிமையான அடிப்படைக் கோட்பாடுகளைக்கூட மறுதலிக்கக்கூடிய அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.
கடைசியாக, ஏழாவதாக, புதிய ஏற்பாட்டு ஆதித் திருச்சபையில் வாழ்ந்த விசுவாசிகளின் வாழ்க்கைமுறை, அவர்களைச் சுற்றியிருந்த அவிசுவாச உலகத்தின் வாழ்க்கைமுறையிலிருந்து துல்லியமாக வித்தியாசப்பட்டிருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. இன்னொருவரும் தன்னைப்போலவே ஒரு விசுவாசிதான் என்பதைக் கூட அறியாத நிலையில் இரண்டு கிறிஸ்தவர்கள் ஒரே அலுவலகத்தில் அருகருகில் வேலை பார்ப்பதற்கும் இன்று சாத்தியமிருக்கிறது.
ஆதித்திருச்சபையில் காணப்பட்ட இந்த ஏழு குணாதிசியங்களை நான் திரும்பவும் பட்டியலிடப் போகிறேன். இதைக் குறித்த ஒரு தெளிவான படத்தைப் பெற்றுக் கொள்வது நமக்கு முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
முதலாவதாக, ஆதித்திருச்சபையில் எல்லா விசுவாசிகளின் மத்தியிலும் ஒரு பொதுவான ஒற்றுமையும், ஒத்திசைவும், இணக்கமும் காணப்பட்டது.
இரண்டாவதாக, கிறிஸ்துவின் நிமித்தம், எல்லாவற்றையும், இன்னும் தங்களுடைய உயிரையும் தியாகம் செய்யக்கூடிய விருப்பம் அவர்களுக்குள் அப்பொழுது இருந்தது.
மூன்றாவதாக, இவ்வுலகத்தின் எல்லா தேசங்களுக்கும் சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற இயேசுவின் கட்டளைக்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்திருந்தனர்.
நான்காவதாக, ஆதித்திருச்சபையின் ஆவிக்குரிய அதிகாரமும், வல்லமையும் பல பட்டணங்கள் மற்றும் மாகாணங்கள் முழுவதிலும் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.
ஐந்தாவதாக, பரிசுத்த ஆவியானவரின் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வரங்களை அவர்கள் ஒரு வழக்கமாக, ஒழுங்காக பயன்படுத்தி வந்தனர்.
ஆறாவதாக, வேதவசனத்தின் அதிகாரத்தை எவ்விதக் கேள்வியும் எழுப்பாமல், அப்படியே ஏற்றுக் கொண்டனர்.
ஏழாவதாக, ஆதித்திருச்சபையில் வாழ்ந்த விசுவாசிகளின் வாழ்க்கை, அவர்களைச் சுற்றியிருந்த அவிசுவாச உலகத்தாரின் வாழ்க்கைமுறையிலிருந்து துல்லியமாக வேறுபட்டிருந்தது.
சபையைக் குறித்து நமக்கு தெரிந்தபிரகாரம், நாம் அதைப் பார்ப்போம். பூமியின் மேற்குப் பகுதி எல்லைக்குள் நம்மை உட்படுத்திக் கொள்வோம். இரும்புத் திரை அல்லது மூங்கில் திரைக்குப் பின்னால் உள்ள சபைகளை அல்லது ஆசியாவின் சில பகுதிகளிலுள்ள சபைகளைக்கூட நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம். அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்திலுள்ள (இவற்றை சுதந்திர தேசங்கள் என்று நாம் தவறாக அழைக்கின்றோம்) சபைகளை நாம் பார்ப்போம். இந்த தேசங்களின் சிலவற்றில் வாழ்கின்ற சில கிறிஸ்தவப் பிரிவினர், இந்தக் குணாதிசியங்களில் சிலவற்றை வெளிப்படுத்துகின்றனர். ஒரு சிலர் இந்த எல்லா குணாதிசியங்களையும் கிட்டத்தட்ட வெளிப்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டிற்கு, ஆவிக்குரிய வரங்களை வழக்கமாக, ஒழுங்காக பயன்படுத்துகிற பிரிவினர்களும் இருக்கிறார்கள். இவர்கள் இவ்வுலகம் சுவிசேஷமயாக்கப்பட வேண்டும் என்ற வேலைக்கு தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்யுமளவிற்கு தங்களை ஒப்புக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் வேதவசனத்தின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட பிரிவினர்களுடைய வாழ்க்கைமுறை, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, இவர்களைச் சுற்றி வாழ்கின்ற அவிசுவாசிகளின் வாழ்க்கைமுறையிலிருந்து வேறுபட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பிரிவினர் நிச்சயம் சிறுபான்மையினராகத்தான் இருக்கிறார்கள். ஆதித்திருச்சபையின் இந்தத் தனித்துவமான குணாதிசியங்களில், ஐந்து அல்லது ஆறு குணங்களையாவது உடைய பிரிவினரைக் கண்டுபிடிப்பது கடினம் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் நிச்சயமாக, இன்று சபையில் ஒரு குணாதிசியம் முற்றிலும் காணப்படவில்லை. அது ஒற்றுமை, ஒத்திசைந்து செல்கிற குணமாகும். நாம் ஒத்திசைவும், ஒற்றுமையும் கொஞ்சம் கூட இல்லாத நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சபையைக் குறித்த இந்த யதார்த்தமான மதிப்பீட்டை நாம் எதிர்கொள்ளும்போது, நம்மையே நாம் சில கேள்விகளை கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். முதலில், தேவன் சபையைக் குறித்த தம்முடைய திட்டத்தையோ அல்லது சபைக்கான தமது அளவுகோலையோ மாற்றி விட்டாரா? இல்லை என்பதுதான் என் பதில். தேவன் தாம் விரும்பின விதத்தில்தான், சபையை ஆரம்பித்தார். அவர் அதை ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. பொதுவாக, தேவன் தம்முடைய காரியங்களை சரியாகத்தான் ஆரம்பிக்கிறார். தேவன் செயல்படுகிற விதங்களில் இது ஒரு அம்சமாகும்.
இரண்டாவது கேள்வி: தேவனால் தம்முடைய சபையை அதற்குரிய சரியான நிலைக்குத் திரும்பக் கொண்டு வர முடியுமா? நீங்கள் இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? பலரால் அப்படியொன்றை சிந்தித்துப் பார்க்கவே முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்களுக்கு அது சாத்தியமற்ற ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் என் பதில், தேவனால் அதைச் செய்ய முடியும் என்பதுதான். ஆம், நிச்சயமாக, தேவனால் தம்முடைய சபையை அதற்குரிய சரியான நிலைக்குத் திரும்ப மீட்டுக் கொண்டு வர முடியும். தேவன் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டார் என்று நான் உறுதியாக விசுவாசிக்கிறேன். நிறைவேற்றி முடிக்க முடியாத ஒரு வேலையை தேவன் ஒருபோதும் எடுத்துச் செய்ய மாட்டார் என்றும் நான் விசுவாசிக்கிறேன். இவ்விஷயத்தில் தம்முடைய அர்ப்பணிப்பை தேவன் வேதவசனத்தில் கொடுத்திருக்கிறார். நான் அதை விசுவாசிக்கிறேன். எபேசியர் 5:25-27 வசனங்களில் பவுல் எழுதியதை நான் வாசிக்கிறேன்:
கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு, தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல், பரிசுத்தமும், பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக் கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார் (கிறிஸ்து தம்மையே சபைக்காக ஒப்புக்கொடுத்தார் என்ற வார்த்தைகளிலிருந்து, தேவன் எவ்வளவு தூரம் தம்மையே சபைக்காக அர்ப்பணித்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.)
கிறிஸ்து சபைக்குள் கிரியை செய்து கொண்டிருக்கிறார். மணவாட்டியாகிய அவளுக்குள் சில குறிப்பிட்ட தனித்துவமான குணாதிசியங்களை உருவாக்கும்படி அவர் கிரியை செய்து கொண்டிருக்கிறார். அவள் மகிமையானவளாய், கறையற்றவளாய், பரிசுத்தமானவளாய், களங்கமில்லாதவளாய் மாற வேண்டும். அதுதான் தேவனுடைய நோக்கம். அவர் அதை நிச்சயம் செய்து முடிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளையும் இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களிலும், சபையின் புதுப்பித்தலில் நடைமுறையாக என்னென்ன உள்ளடங்கியுள்ளது என்பதைப் பற்றி பேசப் போகிறேன். தேவன் விரும்புகிற ஒற்றுமைக்கு நம்மைத் திரும்ப கொண்டு செல்லக்கூடிய சில எளிய வேதவசன அடிப்படையிலான படிகளை விளக்கப் போகிறேன்.
குறியீடு: RP-R012-101-TAM









