திரும்பவும், உங்களோடு இருப்பது சந்தோஷம். “மரணத்தின் மீது வெற்றி” என்ற தலைப்பில், இந்த வாரச் செய்திகளை நாம் கேட்டுக் கொண்டு வருகின்றோம்.

நம்முடைய மீட்பரும், சுதந்தரவாளியுமான இயேசுவின் அழகான படத்தை நேற்று நான் வரைந்தேன். பழைய ஏற்பாட்டில், மீட்கும் உரிமையை உடைய ஒரு சுதந்தரவாளிக்கு இரண்டு முக்கியமான பொறுப்புகள் உண்டு என்று நான் சுட்டிக் காண்பித்தேன். முதலில், தனக்கு நெருக்கமான உறவினன் ஒருவன் கொல்லப்பட்டால், அதற்கு பழிக்குப் பழி வாங்க வேண்டும். இரண்டாவதாக, தனக்கு நெருக்கமான உறவினன் மரித்துப் போனால், குடும்பத்திற்குள்ளே அந்தச் சொத்தைப் பாதுகாத்துக் கொள்ளும்படி, அவனுடைய விதவை மனைவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இயேசு இவ்விரண்டு பொறுப்புகளையும் நிறைவேற்றினார். முதலில், மனுஷ கொலைபாதகனாகிய சாத்தானை பழிக்குப் பழி வாங்கினார். இரண்டாவதாக, அவர் சபையை தம்முடைய மணவாட்டியாக தம்மோடு சேர்த்துக் கொண்டார். அதன் மூலம், தேவனால் கொடுக்கப்பட்ட உரிமைச் சொத்து திரும்பவும் நமக்கு மீட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு நான் கிருபாதார பலியைக் குறித்துப் பேசப் போகிறேன். சிலுவையில் தம்முடைய மரணத்தின் மூலம் இயேசு நமக்காக செய்து முடித்த வேலையாய் இது இருக்கிறது. உண்மையில், வேதாகமத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடும் இந்தக் கிருபாதார பலியைத்தான் மையமாகக் கொண்டிருக்கிறது. கிருபாதார பலி, உண்மையிலேயே அழகானது. இதைப் பயன்படுத்துகிற பலர், மெய்யாகவே இதற்கு என்ன அர்த்தம் என்பதை அறியாமலிருக்கிறார்கள். கிருபாதார பலி என்பதற்கான ஆங்கில வார்த்தையாகிய atonement என்ற வார்த்தையை மூன்றாக பிரிக்கலாம். at - one – ment. Atonement என்றால் at - one – ment.. அதாவது கிருபாதார பலி என்பது பாவியை தேவனுடைய தயவுடன் திரும்ப இணைக்கிறது. இது ஒப்புரவாக்குதலாகும். இது தனித்தனியே பிரிக்கப்பட்டிருந்த தேவனையும், பாவியையும் திரும்ப ஒப்புரவாக்கி ஒன்றாய்ச் சேர்க்கிறது. At–one-ment. இது தேவனோடு நம்மை முழுமையாய் ஒப்புரவாக்கியிருக்கிறது. இது நம்மை தேவனோடு ஒன்றிசையச் செய்திருக்கிறது.

சுவிசேஷத்தின் ஒட்டுமொத்தச் செய்தியில், கிருபாதார பலிக்குரிய இடத்தை விளக்கிக் காண்பிக்கும்படி, ஒரு தெளிவான படத்தை இங்கே முன் வைக்க விரும்புகிறேன். அது ஒரு சக்கரமாகும். எளிமையாகச் சொன்னால், ஒரு சக்கரத்தில் மூன்று பகுதிகள் இருக்கின்றன: வெளி வட்டம், சக்கரத்தின் மையத்தையும் வெளிவட்டத்தையும் இணைக்கின்ற ஆரக்கம்பிகள் (ஸ்போக்ஸ் கம்பிகள்), அதன் மையப் பகுதி. இந்தப் படத்தில், வெளி வட்டம் என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தேவையையும் சந்திப்பதற்கு தேவன் செய்து வைத்திருக்கிற முன்னேற்பாட்டைக் குறிக்கிறது. இது ஆவிக்குரிய தேவைகள், சரீரப்பிரகாரமான தேவைகள், பொருளாதாரத் தேவைகள் மற்றும் இந்த வாழ்க்கைக்கும், இனி வரும் நித்தியத்திற்கும் தேவையான சகலத்தையும் கூட உள்ளடக்கியிருக்கிறது. சுவிசேஷத்தின் மூலம் தேவன் செய்து வைத்திருக்கிற இந்த முன்னேற்பாடு, சக்கரத்தின் வெளிவட்டத்தைப்போல இருக்கிறது. இது சகலத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. வெளிவட்டத்தைத் தாங்கி நிற்கிற ஆரக்கம்பிகள் (ஸ்போக்ஸ் கம்பிகள்), தேவன் செய்து வைத்திருக்கிற முன்னேற்பாட்டிற்கு நடத்திச் செல்லும் வழிகளாய் இருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு, பாவ மன்னிப்பு, நமக்கு சமாதானத்தைக் கொடுக்கிறது. சுகமளித்தல், நமக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுகத்தையும் கொடுக்கிறது. விடுதலை, நமக்கு சுதந்திரத்தைக் கொடுக்கிறது. வேறுபிரிக்கப்படுதல், நமக்கு பரிசுத்தத்தைக் கொடுக்கிறது. ஆக, தேவனுடைய முன்னேற்பாட்டிற்கு அடையாளமாகிய வெளிவட்டத்தை ஆரக்கம்பிகள் (ஸ்போக்ஸ்) தாங்கி நிற்கின்றன. ஆனால் அதன் மையத்தில், அதன் மையப் பகுதியில்தான் கிருபாதாரபலி இருக்கிறது. இந்த ஸ்போக்ஸ் என்ற ஆரக்கம்பிகள் இந்த மையப்பகுதியின் மீது ஊன்றியிருக்கின்றன, இந்த மையப்பகுதியோடு பொருத்தப்பட்டிருக்கின்றன. அதாவது இந்த மையப்பகுதிதான், ஸ்போக்ஸ் என்ற இந்த ஆரக்கம்பிகளைத் தாங்குகின்றன. மையப்பகுதி இல்லையென்றால், இந்த ஆரக்கம்பிகளால் எதையும் தாங்கி நிற்க முடியாது. அது மட்டுமல்ல, இந்த மையப்பகுதியிலிருந்துதான், சக்கரம் ஓடுவதற்கான உந்து சக்தி அல்லது இயக்கு விசை கிடைக்கிறது.

தேவனுடைய திட்டப்படி, கிருபாதார பலிதான் மையப்பகுதியாய் இருக்கிறது. மற்ற சகல விஷயங்களும் இதைத்தான் சார்ந்திருக்கின்றன. கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான வல்லமை இதிலிருந்துதான் கிடைக்கின்றது.

எபிரெயர் 2:9-ல் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று கவனிப்போம்:

9 என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசி பார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் (அதன் வேதனையை அனுபவித்ததினிமித்தம்) மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.

“தேவனுடைய கிருபையினால், ஒவ்வொருவருக்காகவும் இயேசு மரணத்தை ருசி பார்த்தார்,” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். நம்முடைய மரணத்தை அவர் ருசி பார்த்தார். அவர் நம்முடைய இடத்தை எடுத்துக் கொண்டார். நம் மேல் வர வேண்டிய தண்டனை, அவர் மேல் வந்தது. இது ஏசாயா 53:6-ல் சொல்லப்பட்டிருக்கிறது:

6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப் பண்ணினார்.

இது இயேசுவைக் குறித்துப் பேசுகிறது. இங்கு “அக்கிரமம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற வார்த்தைக்கு “முரட்டாட்டம் அல்லது கலகம் பண்ணுதல்” என்ற அர்த்தமும் உண்டு. மனுக்குலம் முழுவதும் செய்த முரட்டாட்டமும், அந்த வார்த்தைக்குள் தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் எல்லோருமே அவரவர் தன் தன் வழியிலே போனோம். நாம் தேவனுக்கு நம் முதுகைக் காண்பித்தோம். நாம் நமக்குப் பிரியமான காரியங்களையே செய்தோம். நாம் நம் சுயநலத்தையே திருப்திப்படுத்தி வாழ்ந்தோம். நமக்கென்று ஒரு அளவுகோலை நாமே நம் முன் வைத்துக் கொண்டோம். நம்மை நாமே பிரியப்படுத்திக் கொண்டோம். நாம் நமக்காகவே வாழ்ந்தோம். நாம் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தோம். ஆனால் தேவனோ நாம் எல்லோரும் செய்த எல்லா முரட்டாட்டங்களையும் இயேசுவின் மீது வைத்தார். இயேசு சிலுவையில் தொங்கியபோது, நம் எல்லோருடைய முரட்டாட்டமும் அவர் மீது வைக்கப்பட்டது. அவர் சிலுவையில் தொங்கியபோது, முரட்டாட்டத்தினால் வரக்கூடிய எல்லாத் தீமையான விளைவுகளும் அவர் மீது வந்தது. அதாவது, வியாதி, நிராகரிக்கப்படுதல், வலி, தாங்க முடியாத வேதனைகள், கடைசியில் மரணம் என ஒன்று விடாமல், எல்லா பொல்லாத விளைவுகளும் அவர் மீது வந்தது. ஆனால் அவர் தனக்காக மரிக்கவில்லை. அவர் நம்முடைய மரணத்தில் மரித்தார். அவர் நம்முடைய இடத்தில் இருந்து, நம்முடைய மரணத்தை ருசிபார்த்தார். அவரே நம் மீட்பரும், நம் சுதந்தரவாளியுமாய் அங்கே செயல்பட்டார்.

ஏசாயா 53:6-ஐத் தொடர்ந்து வரும் வசனங்களில், சிலுவையில் இயேசு அனுபவித்த பாடுகளைக் குறித்த தெளிவான, விவரமான வருணனை காணப்படுகிறது. சிலுவையில் இயேசுவின் மரணம் நிகழ்வதற்கு 700 வருடங்களுக்கு முன், இவை தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருந்தன. இப்பொழுது நாம் 7 முதல் 9 வரையுள்ள வசனங்களை வாசிப்போம்:

7 அவர் நெருக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். 8 இடுக்கண்ணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார். அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும். ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார். என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். 9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள். ஆனாலும் அவர் மரித்தபோது, ஐசுவரியவானோடே இருந்தார். அவர் கொடுமை செய்யவில்லை. அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

இயேசுவின் சிலுவைப் பாடுகள் மற்றும் மரணத்தில் மிகவும் துல்லியமாக நிறைவேறிய இந்தக் காரியங்களைக் குறித்து நாம் பார்ப்போம். முதலில், “அவர் தம்முடைய வாயைத் திறக்கவில்லை,” என்ற காரியத்தைப் பார்ப்போம். தன்னைக் குற்றஞ்சாட்டுகிறவர்களுக்கு பதிலளிக்கும்படி அவர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை, தன்னைத்தானே அவர் நியாயப்படுத்திக் கொள்ளவில்லை, தன்னுடைய வழக்கை அவரே வாதாடிக் கொள்ளவில்லை என்று சுவிசேஷத்தின் பல இடங்களில் முக்கியப்படுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆம், “அவர் தம்முடைய வாயைத் திறக்கவில்லை.”

“இடுக்கண்ணிலும், நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்.” அதாவது நியாயமற்ற குற்றச்சாட்டுகளும், அநீதியான விசாரணையும் அவருடைய மரணத்தில் முடிந்தன.

“ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அவர் அறுப்புண்டு போனார்,” என்ற வார்த்தைகள் திரும்பவும், அவருடைய மரணத்தைத்தான் குறிக்கின்றன.

பிறகு அவருடைய அடக்கத்தைக் குறித்த விவரங்கள், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தத்தக்க விதத்தில், துல்லியமாக நிகழ்ந்தன. “துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள். ஆனாலும் அவர் மரித்தபோது, ஐசுவரியவானோடே இருந்தார்,” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். “துன்மார்க்கரோடு” என்று பன்மையில் ஆரம்பித்து, “ஐசுவரியவானோடு” என்று ஒருமையில் முடிகின்றது. வரலாற்றில் பார்க்கும்போது, அடக்கம் பண்ணப்படும்படி இயேசு கீழே இறக்கப்பட்டபோது, அவரோடு இரண்டு திருடர்களையும் இறக்கினார்கள். காரணம், இரண்டு திருடர்கள் அவருடைய இரண்டு பக்கத்திலும் சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். ஆனால் அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு என்ற ஐசுவரியவானுடைய கல்லறையில் அவர் அடக்கம் பண்ணப்பட்டார். இந்தத் தீர்க்கதரிசனம் எவ்வளவு துல்லியமாக நிறைவேறியது என்று பாருங்கள். இது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

“அவர் கொடுமை செய்யவில்லை. அவர் வன்மையாக நடந்து கொள்ளவில்லை. அவருடைய வாயில் சூதும், வஞ்சகமும் இல்லை,” என்று இவ்வசனங்கள் சொல்கின்றன. அதாவது அவர் தன்னுடைய பாவத்திற்காக மரிக்கவில்லை; அவரிடத்தில் எந்த குற்றமும் காணப்படவில்லை என்பதைத்தான் இவை திரும்பவும் இங்கு வலியுறுத்திச் சொல்கின்றன. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனாலும் அவர் ஒரு குற்றவாளி மரிக்க வேண்டிய மரணத்தை மரித்தார்.

தொடர்ந்து, ஏசாயா 53:10-12 வசனங்களை நாம் வாசிப்போம். இயேசுவின் மரணத்தில், தேவனுடைய நோக்கம் நிறைவேறுவதை இங்கே நம்மால் பார்க்க முடியும். இப்பொழுது நாம் இவ்வசனங்களை கவனிப்போம்:

10 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரை பாடுகளுக்குட்படுத்தினார். அவருடைய ஆத்துமா தன்னை குற்ற நிவாரண பலியாக ஒப்புக் கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு நீடித்த நாளாயிருப்பார். கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 11 அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார். என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார். அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார். 12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன். பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக் கொள்வார்.

இந்த விவரங்களெல்லாம் எவ்வளவு துல்லியமாக நிறைவேறியது என்பதை நாம் பார்ப்போம். “அவர் தன்னை குற்ற நிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தார்,” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். இயேசுவின் மரணத்திற்கான முக்கியமான காரணம் இங்கே 10-ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் முழு மனுக்குலத்திற்காகவும் குற்ற நிவாரண பலியாக, பாவ பலியாக மாறினார். 10-ம் வசனத்தில் தொடர்ந்து

வரும் வார்த்தைகளில், அவருடைய உயிர்த்தெழுதலைக் குறித்து தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். “அவர் தம்முடைய சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார். கர்த்தருக்குச் சித்தமானது அவருடைய கையினால் வாய்க்கும்,” என்ற வார்த்தைகளை கவனிக்கும்போது, நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியும். ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அவர் அறுப்புண்டு போனார் என்று ஏற்கனவே இவ்வேதப்பகுதியில் நாம் பார்த்தோம். ஆனாலும் இப்பொழுது, அவர் தம்முடைய சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார் என்று இவ்வசனங்கள் சொல்கின்றன. அப்படியென்றால், அது உயிர்த்தெழுதலின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.

11-ம் வசனத்தின் பின் பகுதியில் வாசித்துப் பாருங்கள். அது சொல்கிறது, “என் தாசனாகிய நீதிபரர், தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார். அவர்களுடைய அக்கிரமங்களை அவரே சுமந்து கொள்வார்.” இயேசு நம்முடைய அக்கிரமங்களை சுமந்து கொண்டபடியால், நம்முடைய முரட்டாட்டத்தின் விளைவாக நம் மீது வர வேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டபடியால், இப்பொழுது அவரால் தம்முடைய நீதியை நமக்குக் கொடுக்க முடிகிறது, அவரால் நம்மை நீதிமான்களாக்கவும் முடிகிறது.

அடுத்ததாக, 12-ம் வசனத்தைப் பார்ப்போம். “அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார்,” என்று அது சொல்கிறது. இதை லேவியராகமம் 17:11-ம் வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. நான் அதை உங்களுக்கு பலிபீடத்தின் மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காக பாவ நிவிர்த்தி செய்யும்படிக்கு கட்டளையிட்டேன். ஆத்துமாவிற்காக பாவ நிவிர்த்தி செய்கிறது இரத்தமே.

“உயிர்” என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற வார்த்தைக்கு இணையாக எபிரெய மூல பாஷையில் பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தையின் அர்த்தம் “ஆத்துமா” என்பதாகும். எனவே இவ்வசனத்தை, “மாம்சத்தின் ஆத்துமா, இரத்தத்தில் இருக்கிறது,” என்றுதான் நாம் வாசிக்க வேண்டும். ஆக, இயேசு சிலுவையில் தம் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தினபோது, அவர் தம்முடைய ஆத்துமாவையே அங்கு ஊற்றினார். அவர் தம்முடைய ஆத்துமாவை பாவ நிவாரண பலியாக, தேவனோடு நம்மை ஒப்புரவாக்கும் கிருபாதாரபலியாக ஒப்புக்கொடுத்தார். அவர் நம்முடைய மரணத்தை அங்கே மரித்தார். அவர் நம்முடைய பாவ நிவாரண பலியாக மாறினார். மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டபோது, அவரால் தம்முடைய நீதியை நமக்குக் கொடுக்க முடிந்தது. அவர் தம்முடைய சந்ததியைப் பார்த்தார். அவர் மீது விசுவாசம் வைத்து தேவனிடம் வருகிற நாம், மறுபடியும் புதிதாய் பிறக்கின்றோம். நாம் அவருடைய சந்ததியாய் மாறுகின்றோம். அவர் என்றென்றக்குமாய் தம்முடைய நாட்களை நீட்டித்துக் கொள்வார். அவர் திரும்பவும் நித்திய ஜீவனுக்குள் உயிரோடு எழுப்பப்பட்டார். கர்த்தருடைய விருப்பம், அவருடைய கைகளினால் வாய்க்கும். இந்தப் பூமியில் தேவனுடைய எல்லா நோக்கங்களையும் நிறைவேற்றக்கூடிய ஒரே கருவியாய் அவர் மாறுகிறார்.

முக்கியமாக, அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் என்ற வாக்கியத்தை தியானியுங்கள். அவர் தம்முடைய இரத்தத்தையே ஊற்றினார். இதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பது எனக்குத் தெரியாது. இயேசுவின் இரத்தம் சிலுவையில் சிந்தப்பட்டபோது, சர்வ வல்ல தேவனுடைய ஜீவன் முழுவதும் இவ்வுலகத்தின் மீட்பிற்காக அப்படியே கொடுக்கப்பட்டது. இந்த முழு உலகத்திலும் இருக்கின்ற பாவம் மற்றும் அக்கிரமத்தின் எல்லா சக்திகளையும் ஒன்றாய் திரட்டினாலும், அவற்றின் வல்லமையைக் காட்டிலும், இயேசுவின் ஒரு சொட்டு இரத்தத்தில் மிக மிக அதிகமான வல்லமை இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு தம்மையே சிலுவையில் ஒப்புக்கொடுத்தபோது, அவர் தம்முடைய ஆத்துமாவை அங்கே ஊற்றியபோது, அவர் தம்முடைய இரத்தத்தை அங்கே சிந்தியபோது, தேவனுடைய முடிவில்லாத, நித்திய ஜீவனின் எல்லா ஐசுவரியங்களும், எல்லா வளங்களும் நமக்குக் கிடைக்கும்படி அவர் செய்து விட்டார். மரித்தோரிலிருந்து அவர் உயிரோடு எழும்பியபோது, அதன் மூலம், அவர் நமக்கு சமாதானத்தையும், பாவ மன்னிப்பையும் முழுமையாய் தருகிறார். இவ்வாறு அவர் நம்முடைய எதிரியைத் தோற்கடித்து, நம்முடைய உரிமைச் சொத்தை திரும்ப நமக்கு மீட்டுக் கொடுத்ததன் மூலம், அவர் நம்முடைய மீட்பரும், சுதந்தரவாளியுமாக இருக்கிறார்.

இன்றைக்கு, நம்முடைய நேரம் முடிந்து விட்டது. நாளை இதே நேரம், நான் திரும்பவும் உங்களைச் சந்திப்பேன். வரலாற்றில் நிகழ்ந்த மிக மிக அதி முக்கியமான ஒரே சம்பவமாகிய, இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து நாளை நான் பேசுவேன்.

லைக்
பகிரவும்