பல வருட தனிப்பட்ட அனுபவம் மற்றும் கிறிஸ்தவ ஊழியத்தின் மூலம் தேவன் என் கையில் வைத்துள்ள வெற்றிகரமான வாழ்க்கைக்கான சில திறவுகோல்களை பகிர்ந்துகொள்வதில் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.

நேற்று, நான் மன வேதனையின் பிரச்சனையைக் கையாண்டேன். இவ்வாறான வேதனையிலிருந்து எப்படி விடுதலைப் பெறுவது என்பதையும் விளக்கினேன். இதிலிருந்து மிகவும் இயல்பாக பின்தொடருகிற ஒரு தலைப்புதான் இன்றைய எனது தலைப்பு. அதுதான் “உண்மையான மன நிம்மதியை எப்படி அனுபவிப்பது.” இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு எதிர் பக்கங்களைப் போல ஒன்றுடன் ஒன்று பொருந்துகின்றன – ஒன்று எதிர்மறையானது, மற்றொன்று நேர்மறையானது. மன வேதனையிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்பது எதிர்மறையானது; உண்மையான மன நிம்மதியை எப்படி அனுபவிப்பது என்பது நேர்மறையானது. எதிர்மறையானதைப் போலவே நமக்கு நேர்மறையும் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மன வெற்றிடத்தின் ஒரு வகையான நிலை உள்ளது, மேலும், கிட்டத்தட்ட மாறாமல் அந்த வெற்றிடத்தை நீண்ட காலம்வரை வைத்திருந்தால், சில தீய சக்திகள் அதன் வழியாய் முன்னேறி, நம் மனதை மீண்டும் கட்டுப்படுத்தும். எனவே, நமது பாதுகாப்பின் ஒரு இன்றியமையாத பகுதி, நமது மனதை தேவனுடைய சமாதானத்துடன் பாதுகாப்பதாகும். இதைத்தான் புதிய ஏற்பாடு நமக்குத் தெளிவாகக் கற்பிக்கிறது.

முதலில், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்கிறோமா என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சர்வவல்லமையுள்ள தேவனுடன் சரியான உறவு இல்லாவிட்டால், எந்த விதமான உண்மையான அல்லது நிரந்தர சமாதானமும் இல்லை. ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில், “துன்மார்க்கருக்கு சமாதானம் இல்லை” என்று வேதம் கூறுகிறது. தேவனுக்கு எதிரான கலகத்தில் அல்லது எதிர்ப்பில் இருப்பவர்களுக்கும்; தேவனின் சட்டங்களுக்கும் தேவைகளுக்கும் உட்பட்டு வாழ்க்கையை நடத்தாதவர்களுக்கும் சமாதானம் இல்லை, அத்தகைய நபர்களுக்கு சமாதானம் கிடைக்க வழி இல்லை. ஆகையால், முதலில், நாம் தேவனுடன் ஒப்புரவாகிவிட்டோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ரோமர் 5:1 இல் பவுல் கூறுகிறார்:

1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

மேலும், 11 ஆம் வசனத்தில் இயேசுவின் மூலம் நாம் ஒப்புரவாக்குதலைப் பெற்றுக்கொண்டோம் என்று கூறுகிறார். “ஒப்புரவாக்குதல்” என்ற வார்த்தை நாம் ஒப்புரவாகுதல் செய்ய வேண்டும் என்ற அவசியத்தைக் குறிக்கிறது. நமது சரீர இயல்பு மற்றும் பாவம் நிறைந்த வாழ்க்கையின் மூலம் நாம் சர்வவல்லமையுள்ள தேவனுடன் போரில் ஈடுபட்டோம். அவருடைய நியாயமான நியமங்களுக்கும், தேவைகளுக்கும் நாம் கீழ்ப்படியவில்லை, தேவனுக்கு மகிமையைக் கொண்டுவரும் விதமான வாழ்க்கையை நாம் நடத்தவில்லை, அதனால், நாம் மனந்திரும்பி, இயேசுவின் மூலம் தேவனால் நமக்கு நீட்டிக்கப்பட்ட ஒப்புரவாக்குதலை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. சிலுவையில் இருந்த இயேசு நமது பாவத்துடனும், கலகத்துடனும் அடையாளம் காணப்பட்டதால், அந்த பாவத்திற்கான தீர்ப்பு அவர் மீது வந்தது. மேலும், அவர் தம்முடைய மரணத்தின் மூலம் நம்முடைய பாவங்களுக்கான முழுமையான மற்றும் இறுதியான அபராதத்தை செலுத்தினார். எனவே இயேசுவின் மரணத்தின் மூலம் நாம் தேவனோடு ஒப்புரவாக முடியும்.

ஒப்புரவாகுதலினால், மன்னிப்புக்கான தேவனின் வாக்குத்தத்தத்தைப் பெற்று, நாம் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டோம் என்று பவுல் கூறுகிறார், ஆகவே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக நாம் இப்போது தேவனோடு சமாதானம் அடைந்திருக்கிறோம். “நியாயப்படுத்தப்பட்டது” என்ற வார்த்தை ஒரு முக்கியமான சொல். “நாங்கள் நீதிமான்களாக்கப்பட்டோம்” என்றும் அதை விளக்கலாம். ஏனென்றால், நாம் இயேசுவையும், அவருடைய மரணத்தையும் நம் சார்பாக நம்பும்போது, அவருடைய நீதி நம் விசுவாசத்தின் அடிப்படையில் நமக்குச் சுமத்தப்படுகிறது அல்லது நமக்குக் கணக்கிடப்படுகிறது. “நியாயப்படுத்துதல்” என்ற வார்த்தைக்கு தனிப்பட்ட முறையில், நான் மிகவும் விரும்புகிற ஒரு விளக்கம்: நான் ஒருபோதும் பாவம் செய்ய வில்லை என்பது போல. அது அழகாக இருக்கிறது, அல்லவா? இயேசுவின் நீதி தேவனால் எனக்குக் கணக்கிடப்பட்டால், நான் நீதியுள்ளவனாக இருக்கிறேன். என் சொந்த நீதியால் அல்ல, ஆனால் அவருடைய நீதியால். இயேசுவின் நீதி ஒருபோதும் பாவத்தை அறிந்ததில்லை, குற்றத்தை அறிந்ததில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் அபராதத்தை செலுத்திய ஒரே காரணம் அவர் அதை நம் சார்பாக செலுத்தினார், ஆனால் அவருக்காக செலுத்த அவருக்கு எந்த அபராதமும் இல்லை. எனவே, நியாயப்படுத்தப்பட்ட வகையில் சிந்தியுங்கள். உங்களுக்கே சொல்லிக்கொள்ளுங்கள், “நான் ஒருபோதும் பாவம் செய்யாதது போல் நான் நீதிமான். எனக்கு தேவனோடு சமாதானம் இருக்கிறது. தேவன் எனக்கு எதிராக எதையும் வைத்திருக்கவில்லை. நான் விடுவிக்கப்பட்டேன்.”

மன நிம்மதிக்கு அதுவே பெரிய அடிப்படையாகும். இதை நாம் அறிந்தவுடன், தேவன் நம் பக்கத்தில் இருக்கிறார், அது வாழ்க்கையில் எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.

பவுல் ரோமர் 8:31-32 இல் தொடர்ந்து சொல்கிறார், வேத வாக்கியங்களின்படி, நான் நீதிமான் என்ற இந்த ஒப்புரவாக்குதலைப் பெற்ற நமது சார்பாக பேசுகிறார். பவுல் கூறுகிறார்:

31 இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? [இது ஒரு நல்ல கேள்வி. தேவன் நமக்கு ஆதரவாக இருந்தால், யார் நமக்கு எதிராக இருக்க முடியும்? யாரோ ஒருவர் இவ்விதமாய் வெளிப்படுத்தினார்: எந்த சூழ்நிலையிலும், ஒரே மனிதனுடன் தேவன் இருக்கும் இடத்தில் ஒரு பெரும்பான்மை இருக்கிறது. பவுல் தொடர்கிறார்:] 32 தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

ஆகவே, தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை, தம்முடைய விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை, நமக்குக் கொடுக்க தயாராக இருந்தால், அத்தகைய அன்பு நமக்கு நலமானதை அல்லது நமக்குத் தேவையான எதையும் கொடுக்காமல் இருக்காது என்பதை நாம் அறியலாம். தேவன் இயேசுவைக் கைவிட்டார் என்றால், அவர் நமக்கு நல்லது எதுவும் செய்யமாட்டார். தேவன் நம் பக்கம் இருக்கிறார். அவர் நமக்காக இருக்கிறார். பரலோகத்தின் வளங்கள் நம் வசம் இருக்கின்றன. அதுவே மன நிம்மதிக்கு அடிப்படையானது. நாம் தேவனோடு ஒப்புரவாகிவிட்டோம், நீதிமான்களாக்கப்பட்டோம், இயேசுவின் நீதியோடு நாம் நீதிமான்களாகக் கருதப்படுகிறோம் என்பதை விசுவாசத்துடன் உண்மையாகப் புரிந்துகொண்டால், “நான் ஒருபோதும் பாவம் செய்யாதது போல் நான் நீதிமானாக்கப்பட்டேன்” என்று சொல்லலாம், பின்னர் நாம் நமது மன நிம்மதிக்கான தேவனின் முழுமையான நிறைவான ஏற்பாட்டிற்கு செல்லலாம்.

இந்த ஏற்பாடு, பிலிப்பியர் 4:6-8இல், எனக்கு தெரிந்தளவில் பவுலால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, அங்கு அவர் இவ்வாறு கூறுகிறார்:

6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

குறிப்பிடத்தக்க அழகான வார்த்தைகளை கவனியுங்கள், “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” வெற்றிடத்தின் அபாயத்தைப் பற்றி நான் சொன்னதுடன் இது ஒத்துப்போகிறது. நீங்கள் உங்கள் மனதை வெறுமையாக விட முடியாது, ஏனென்றால் நீங்கள் அப்படி செய்தால் சில தீய தாக்கங்களால் அழுத்தம் வரும். நீங்கள் அதை தேவனின் சமாதானத்தால் நிரப்ப வேண்டும், தேவனின் சமாதானம் உங்கள் மனதைக் காக்கும். கிரேக்க வார்த்தையின் அர்த்தம், “உங்கள் மனதைக் காத்துக்கொள்ளுங்கள்,” உங்கள் மனதை அடக்கிவைத்திருங்கள், இதனால் எந்த தீய அழுத்தங்களும் அல்லது வேதனையான தாக்கங்களும் உங்கள் மனதை அணுக முடியாது. பின்னர் பவுல் அடுத்த வசனத்தில் தொடர்கிறார்:

8 கடைசியாக, சகோதரரே, [இதுதான் முடிவு] உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.

சரி, நாம் ஏற்கனவே, அழகான வாக்குத்தத்தத்தை பார்த்தோம், “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” ஆனால், நினைவில் கொள்ளுங்கள், வாக்குத்தத்தத்தை நாம் உரிமை கோருவதற்கு, நாம் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். எனவே, இப்போது நிபந்தனைகளைப் பார்ப்போம். முதல் நிபந்தனை, கவலையை விட்டுவிடுதல், “எதற்கும் கவலைப்படாமல் இருங்கள்.” ஒவ்வொரு முறையும் கவலை உங்கள் மனதில் நகரத் தொடங்கும்போது, அதை மறுத்து பதில் சொல்லுங்கள். “நான் ஒருபோதும் பாவம் செய்யாதது போல் நான் நீதிமான். தேவன் எனக்கு எதிராக எதையும் வைத்திருக்கவில்லை. எனக்கு தேவனோடு சமாதானம் இருக்கிறது. தேவன் என் பக்கம் இருக்கிறார். தேவனின் அனைத்து வளங்களும் எனக்குக் கிடைக்கின்றன. நான் கவலைப்பட மறுக்கிறேன். நான் அதை நம்பும்போது, கவலைப்படுவது விவேகமானதோ அல்லது தர்க்கரீதியானதோ அல்ல.” எனவே, முதல் நிபந்தனை: கவலையை விட்டுவிடுங்கள்.

இரண்டாவது நிபந்தனை: எல்லாவற்றையுங் குறித்து ஜெபியுங்கள். ஒரு பழைய பாடல் இவ்வாறு சொல்கிறது:

ஓ, என்ன நாம் அமைதியை அடிக்கடி இழக்கிறோம், அட, என்ன தேவையில்லாத வலியை நாம் தாங்கிக் கொள்கிறோம் இவை அனைத்தும் ஜெபத்தில் எல்லாவற்றையும் தேவனுக்கு எடுத்துச்செல்லாமல் இருப்பதால்தான்.

பல சமயங்களில் நாம் ஜெபம் செய்யாததால் மன நிம்மதி கிடைப்பதில்லை. நாம் ஒரு பிரச்சனையில் அல்லது சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறோம், நம்முடைய சொந்த வளங்களைக் கொண்டு அதை கையாள முயற்சிக்கிறோம், மேலும் நாம் ஜெபித்தவுடன் நமக்குக் கிடைக்கும் அவருடைய ஞானம் மற்றும் அவருடைய வளங்களுக்காக நாம் தேவனிடத்தில் திரும்பாமலோ அல்லது அவரிடத்தில் ஜெபிக்காமலோ இருக்கிறோம்.

மூன்றாவது நிபந்தனை: எப்போதும் நன்றியுடன் இருங்கள். இது முற்றிலும் அவசியமானது. ஜெபித்தால் மட்டும் போதாது, ஸ்தோத்திரத்துடன் தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும். நன்றியுள்ள இதயம் பொதுவாக அமைதியான இதயம், ஆனால் நன்றியுணர்வு இல்லாத நபர் உண்மையான, நீடித்த அமைதியை அறிய முடியாது. நன்றியில்லாத உணர்வு தேவனின் முழு இயல்புக்கும் எதிரானது.

நான்காவது நிபந்தனை: சரியான விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள். சரியான விஷயங்கள் என்ன என்பதை பவுல் கூறுகிறார். அவருடைய பட்டியலை மீண்டும் பார்க்கலாம்: எவை உண்மையானவைகளோ – ஆனால் அது உண்மையாக மட்டும் இருந்தால் போதாது, ஏனென்றால், சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், அவற்றைப் பற்றி நாம் சிந்திக்கக் கூடாது. மனிதர்களின் தவறுகள், தோல்விகள், உண்மையாக இருந்தாலும், வேறு பல தகுதிகள் இருப்பதால் அவற்றைப் பற்றி நாம் சிந்திக்கக் கூடாது - உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் விரும்புவதில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது. நீங்கள் அதை கெட்டதில், எதிர்மறையானதில் கவனம் செலுத்தலாம் அல்லது நல்லதில் உயர்ந்த காரியத்தில் கவனம் செலுத்தலாம்.

பின்னர், உங்களுக்கு இன்னும் பிரச்சனைகள் இருந்தால், பரிசுத்த ஆவியானவரை அழைக்கவும். உங்களுக்கு உதவ நீங்கள் அவரை அழைக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் முடிப்பதற்கு முன், இயற்கையிலிருந்து ஒரு எளிய உதாரணத்துடன் இதை நான் விளக்குகிறேன். பல நாடுகளில் (குறிப்பாக எகிப்து, என்று நான் நினைக்கிறேன்), இரண்டு வகையான பறவைகள் உள்ளன: கேரியன் (அல்லது அழுகிய இறைச்சியை) உண்பவை மற்றும் புதிய இறைச்சியை உண்பவை. ஒவ்வொரு பறவையும் அது எதைத் தேடுகிறதோ அதையே கண்டுபிடிக்கும், நம் மனதிற்கும் அதுவே உண்மையாகும். நாம் நம் மனதுக்கு கேரியனை உணவளிக்கலாம், அல்லது புது இறைச்சியை உணவளிக்கலாம். நாம் தேடுவதையே கண்டுபிடிப்போம். ஆனால், நீங்கள் நேர்மறையான, நலமான, உயர்வான, பக்திவிருத்திக்கானவைகளை தேடினால், நீங்கள் அதைக் காண்பீர்கள்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் அடுத்த வாரம், திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். அடுத்த வாரமும், “தேவனின் வாக்குத்தத்தங்களின் தேசத்தின் வழியாக நடப்பது” என்ற இதே தலைப்புடன் தொடர்கிறேன். யோசுவா 13:1 இல், கர்த்தர் யோசுவாவை நினைவுபடுத்தினார்: “…….சுதந்தரித்துக் கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது.” தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தை நாம் ஆராயும்போது இன்று நமக்கும் இதுவே உண்மையாகும். அடுத்த வாரம் நான் கையாளும் வாக்குத்தத்தங்கள், சரியான துணையை கண்டுபிடிப்பது மற்றும் பிரச்சனையுள்ள குழந்தையை கையாள்வது உட்பட பல்வேறு நடைமுறை வடிவங்களில் அது ஞானத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

1
பகிரவும்