தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைந்த தேசத்தின் வழியாக நாம் நடத்திய பயணத்தில் ஒரு படி மேலே செல்லும்போது உங்களுடன் மீண்டும் இருப்பது நல்லது. இந்த வாரம் எனது முந்தைய மூன்று பேச்சுகளில், நான் கையாண்ட நமது சுதந்தரத்தின் முக்கிய பகுதி செழுமையின் பகுதியாகும். இன்று நான் நமது சுதந்தரத்தின் மற்றொரு முக்கிய பகுதியான குணமாக்குதல் மற்றும் ஆரோக்கியத்திற்கு செல்லப் போகிறேன்.

தேவன் தம்முடைய மக்கள் அனைவருக்கும் வழங்கியிருக்கும் குணமாக்குதல் மற்றும் ஆரோக்கியத்திற்கான சிறந்த அடிப்படை அடித்தளத்தை இன்று நான் விளக்கப் போகிறேன். இது தேவனுடைய சொந்த வார்த்தையான வசனங்களாகும்.

தேவன் முதன்முதலில் இஸ்ரவேலை எகிப்திலிருந்து மீட்டெடுத்த உடனேயே, அவர்கள் அவருடைய மீட்கப்பட்ட உடன்படிக்கை மக்களானார்கள், அவர் அவர்களுக்குக் கொடுத்த தம்மைப் பற்றிய முதல் குறிப்பிட்ட வெளிப்பாடு என்னவென்றால், அவர் அவர்களைக் குணமாக்குவேன் என்பதுதான். இது யாத்திராகமம் 15:26 இல் கூறப்பட்டுள்ளது. கர்த்தர் இஸ்ரவேலரிடம் கூறினார்:

26 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்னேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

அந்த வார்த்தையான, “உங்கள் பரிகாரி,” நவீன எபிரேயத்தில் “உங்கள் மருத்துவர்” என்பதாகும்; துல்லியமாக யாத்திராகமம் 15இல் பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தையே மருத்துவருக்கான நவீன எபிரேய வார்த்தையாகும். எபிரேய மொழியின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றில் அதன் அர்த்தத்தை அது மாற்றவில்லை. கர்த்தர் இஸ்ரவேலரிடம், “நான் உங்கள் மருத்துவர்” என்று உறுதியாகக் கூறுகிறார். மேலும், அவர் தனது சொந்த பெயரான கர்த்தராகிய யெகோவா என்பதோடு அவர் இணைக்கிறார், மேலும், அவர் அதை ஒரு உடன்படிக்கையாக ஏற்படுத்துகிறார்.

மாறாத இரண்டு விஷயங்கள் கர்த்தரின் பெயர் மற்றும் கர்த்தரின் உடன்படிக்கையாகும். மேலும், கர்த்தரின் நிலையும், தம் மக்களைக் குணப்படுத்தும் செயலும் அவருடைய நாமத்தோடும், அவருடைய உடன்படிக்கையோடும் இணைந்திருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது மாறாதது என்பதாகும்.

பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, இயேசு இஸ்ரவேலுக்கு இரட்சகராகவும், மீட்பராகவும் வந்து, மேசியாவின் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றிய போது, அவர் மீண்டும் குணமாக்கும் தேவனாக தம்மை வெளிப்படுத்தினார். மத்தேயு 8:16-17 ஐ நாம் வாசிக்கலாம்:

16 அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் [இயேசுவினிடத்தில்] கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார். 17 அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இயேசு நோயுற்ற அனைவரையும் குணப்படுத்தினார் என்பதை நாம் காண்கிறோம். மீண்டும், அவருடைய மக்களுக்கு குணமாக்கும் தேவனாக தம்முடைய மாறாத தன்மையை வெளிப்படுத்தினார். இதைப் பற்றிய இயேசுவின் சொந்தக் கருத்தை யோவான் 14:9-10 இல் காணலாம். அவர் கூறுகிறார்:

9 என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்…..

பின்னர் வசனம் 10இல்:

10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

எனவே, இயேசுவின் குணமாக்கும் ஊழியம் அவரிடமிருந்து தொடரவில்லை, அது அவருடன் ஆரம்பிக்கவில்லை; இது தேவனுடைய குணமாக்கும் தன்மையின் வெளிப்பாடாகவும், அவருடைய மக்களுக்கு தேவனுடைய குணமாக்கும் உடன்படிக்கையாகவும் இருந்தது. தம்முடைய மக்களுக்கான குணமாக்குதலும், ஆரோக்கியமும் ஆகிய தேவனுடைய ஏற்பாட்டின் அடித்தளம் அவருடைய வார்த்தையாகிய வேதமாகும். இது சங்கீதம் 107:17-20 இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, அங்கு சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்:

17 நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். 18 அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.

மருத்துவ உதவிகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன, அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று அவர்கள் கூறுவது ஒரு வியத்தகு வழியாகும், அவர்கள் மரணத்தின் வாசலில் இருந்தனர், இறப்பதற்குக் காத்திருந்தனர். ஆனால், பின்னர் அவர்கள் கர்த்தரிடம் மன்றாடினார்கள் என்று வாசிக்கிறோம். அதைப் பற்றிய எனது கருத்து என்னவென்றால், மக்கள் பெரும்பாலும், ஜெபிக்க மிகவும் தாமதமாக இருக்கிறார்கள். இந்த மக்கள் மரணத்தின் வாசலில் இருக்கும்போது, அவர்களுக்கு ஜெபிக்க தோன்றியது. நம் வாழ்வில் எத்தனை முறை அப்படி இருக்கிறோம். தேவனைத் தவிர வேறு எந்த உதவியும் இல்லாத வரை நாம் ஜெபிக்க மாட்டோம். அந்த வசனம் இவ்வாறு தொடர்கிறது.

19 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; [தேவன் எவ்வாறு பதிலளித்தார்? இது பின்வரும் வார்த்தைகளில் கூறப்பட்டுள்ளது] அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார். 20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

தேவன் எவ்வாறு தலையிட்டார் என்பதற்கான அந்த மூன்று தொடர்ச்சியான அறிக்கைகளை கவனியுங்கள்: அவர் அவர்களை காப்பாற்றினார் (இரட்சித்தார்), அவர் அவர்களைக் குணமாக்கினார், அவர் அவர்களை தப்புவித்தார். நம் வாழ்வில் நமக்கு உதவ தேவன் கிருபையால் தலையிடும் மூன்று சிறந்த வழிகளை அவை சுட்டிக்காட்டுகின்றன என்று நான் நம்புகிறேன். அவர் இரட்சிக்கிறார், அவர் குணமாக்குகிறார், அவர் தப்புவிக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தேவையை பூர்த்தி செய்கின்றன. பாவத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறார். அவர் நம்மை நோயிலிருந்து குணமாக்குகிறார். ஆனால் சாத்தானின் வல்லமையிலிருந்து நம்மை விடுவிக்கிறார்.

அவர் இதை எப்படி செய்கிறார்? அடிப்படையில், நமது தேவையின் இந்த மூன்று பகுதிகளையும் பூர்த்தி செய்ய இந்த மூன்று கிருபையின் செயல்களுக்கான அவரது ஏற்பாடு அவருடைய வார்த்தையில் உள்ளது. “அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி அவர்களைக் குணமாக்கினார்.” அவருடைய வார்த்தையின் மூலமாகவே அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளித்தார், மரணத்தின் வாசலில் உதவிக்காக அவர்கள் கூக்குரலிட்டார்கள். நம்முடைய தேவைக்கான தேவனின் பதில் முதன்மையாக அவருடைய வார்த்தையில் இருப்பதைப் பார்ப்பது எவ்வளவு முக்கியமானது. நாம் அவருடைய வார்த்தையை புறக்கணித்தால், அவர் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், நாம் அவருடைய வார்த்தையின் பக்கமாக திரும்பி, அவருடைய வார்த்தையின் மூலம் அவரைத் தேடினால், அவருடைய வார்த்தையில் அவர் நம்முடைய எல்லா தேவைகளையும்: ஆவிக்குரிய, மற்றும் சரீரப்பிரகாரமான தேவைகளையும் பூர்த்தி செய்கிறார் என்பதை நாம் காண்போம். எனவே, தேவன் நம்மைக் குணப்படுத்த தம்முடைய வார்த்தையை அனுப்புகிறார்.

இப்போது, நான் ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு திரும்பப் போகிறேன், வேதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மூலம் தேவன் நமக்கு முழுமையான சுகத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்குகிறார். இது எனக்கு மிகவும் விலைமதிப்பற்ற ஒன்றாகும், ஏனென்றால், நான் மருத்துவமனையில் ஒரு வருடம் படுத்திருந்த பிறகு, மருத்துவர்களால் குணமாக்க முடியாத நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்தேன், நீதிமொழிகள் புத்தகத்தின் நான்காவது அதிகாரத்தில் காணப்படும் இந்த வார்த்தையின் மூலம் நான் தேவனைத் தேடும்போது, தேவன் அவர் வாக்குத்தத்தம் பண்ணின சுகத்தையும் ஆரோக்கியத்தையும் எனக்கு வழங்கினார். இது ஒரு தற்காலிக சுகம் அல்ல, இது ஒரு முப்பத்தைந்து அல்லது முப்பத்தாறு ஆண்டுகளாக, இந்த நேரம் வரை எனக்கு நீடித்த ஆரோக்கியத்தின் மறுசீரமைப்பாகும். எனவே, நீதிமொழிகள் 4:20-22இல் உள்ள இந்த அழகான வார்த்தைகளை நான் படிக்கும்போது கவனமாகக் கேளுங்கள். அவை “என் மகனே” என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கிறது. அதை தேவன்தான் பேசுகிறார், அவர் உங்களிடமும், என்னிடமும் அவருடைய பிள்ளைகளாக பேசுகிறார். குணமாக்குதல் பிள்ளைகளின் அப்பம் என்று இயேசு கூறியதை நினைவில் கொள்ளுங்கள். இது தகப்பன் தனது அனைத்து பிள்ளைகளுக்கும் வழங்குகிறார். எனவே இந்த வாக்குத்தத்தம் தேவனுடைய பிள்ளைகளுக்குரியது.

20 என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். 21 அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். 22 அவைகளை கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.

அந்தக் கடைசி பகுதியைக் கவனியுங்கள், “அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.” நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் படுக்கையில் படுத்திருந்தபோது, விசுவாசத்தோடு அந்த வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டேன், “அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.” நான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன், “தேவன் என் உடல் முழுவதும் ஆரோக்கியத்தை வழங்குகிறார் என்றால், நோய்க்கு இடமே இல்லை. எங்கு ஆரோக்கியம் இருக்கிறதோ, அங்கே நோய் இல்லை. என் உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருந்தால், நான் நன்றாக இருக்க முடியும், நோய்வாய்ப்படாமல் இருக்க முடியும்.”

பின்னர் நான் மீண்டும் அதைப் பார்த்தேன், தேவன் சொல்கிறார், “அவைகளை கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.” “அவைகள்” என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? அதை நான் திரும்பப் பார்த்தபோது, அது தேவனுடைய வார்த்தைகளும், தேவன் சொன்ன சொற்களும் என்பதைக் கண்டேன்: “என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.” எனவே, தேவனுடைய வார்த்தைகளும், தேவன் சொன்ன காரியங்களையும் கண்டுபிடிக்க முடிந்தால், அது நமக்கு ஜீவனாகவும், நம் முழு உடலுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நான் அந்த நேரத்தில், மாற்று வாசிப்புகளுடன் சிறிதளவில் வேதத்தை வாசித்தேன், மேலும் “ஆரோக்கியத்திற்கான” சிறிதளவில் இருந்த மாற்று வாசிப்பு “மருந்து” ஆகும். சரி, அது எனக்கு இன்னும் நன்றாக இருந்தது. எனக்கு நானே சொல்லிக்கொண்டது, "நான் நன்றாக இருந்தால், அது என்னை நன்றாக வைத்திருக்கும்; நான் நோய்வாய்ப்பட்டால், அது என் மருந்தாக இருக்கும்.“ அதனால் தேவனுடைய வார்த்தையை என் மருந்தாக எடுத்துக்கொள்ள நான் மிகவும் எளிமையான முறையில் முடிவு செய்தேன். நானே ஒரு மருத்துவமனை உதவியாளராக இருந்ததால், மக்களுக்கு மருந்து கொடுப்பதில் எனக்கு மிகவும் பரிச்சயம் இருந்தது. “இப்போது, மக்கள் மருந்தை எப்படி எடுத்துக்கொள்ளுவார்கள்,” என்று நானே சொல்லிக்கொண்டேன். அதற்கான பதில், “பொதுவாக ஒரு நாளைக்கு மூன்று முறை, உணவுக்குப் பிறகு.” அதனால் நான் சொன்னேன், “அப்படித்தான் நான் தேவனுடைய வார்த்தையை எடுக்கப் போகிறேன். தினமும் மூன்று முறை, உணவுக்குப் பிறகு, நான் அதை மருந்தாக எடுக்கப் போகிறேன்.”

சரி, தேவன் என்னிடம் சத்தமாக அல்ல, ஆனால் என் மனதிற்கு மிகத் தெளிவாகப் பேசினார், “மருத்துவர் ஒரு நோயாளிக்கு மருந்தை ஒரு பாட்டிலில் கொடுக்கும்போது, அதை எடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் அந்த பாட்டிலில் இருக்கும், என்னுடைய இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் பாட்டிலில் உள்ளன. நீ அதை படித்தால் நன்றாக இருக்கும்.” ஆகவே, அந்த நீதிமொழிகளின் வசனங்களை நான் திரும்பிப் பார்த்தேன், தேவனுடைய வார்த்தையை மருந்தாக எடுத்துக்கொள்வதற்கு நான்கு தெளிவான வழிகள் இருப்பதைக் கண்டேன்.

முதலாவது, கவனம் செலுத்து. தேவன் சொல்வதை மிகவும் கவனமாகக் கேள்.

இரண்டாவது, உன் செவியை சாய். நான் தலை குனிய வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணிவாக, கற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும். தேவனுடன் வாதிடாமல், எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காமல், நான் தேவனிடத்தில் இருந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பாருங்கள், பலர் வேதத்தைப் படிக்கிறார்கள், தேவன் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஏற்கனவே மனதில் நிர்ணயிக்கிறார்கள், அவர் வேறு ஏதாவது சொன்னால் அவர்கள் அதைக் கேட்க மாட்டார்கள். அவர்கள் செவியை சாய்க்கவில்லை.

மூன்றாவது நிபந்தனை: அவைகள் உன் கண்களை விட்டு பிரியாதிருப்பதாக. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களில் உங்கள் கண்களை ஒருமுகப்படுத்த வேண்டும். அவைகளை அலைக்கழிக்க விடவேண்டாம்.

இறுதியாக, அவற்றை உன் இருதயத்தில் வை. உங்கள் மொத்த இயல்பின் மிக மையப் பகுதிக்கு அதைச் சரியாகப் பெற வேண்டும்: உங்கள் மனம், உங்கள் ஆவி, உங்கள் வாழ்க்கை முழுவதும் இறுதியில் உருவாகும் அந்த பகுதிக்குள் வைக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை அங்கு வரும்போது, அது உங்களுக்கு சுகத்தையும், ஆரோக்கியத்தையும் தருகிறது.

நான் சாட்சியமளிக்க விரும்புகிறேன், தேவனுடைய வார்த்தையை எனது மருந்தாக எடுத்துக்கொள்வதற்கான மிக எளிய வழிமுறையின் மூலம், தினமும் மூன்று முறை, உணவுக்கு பிறகு, நான் மிகவும் மோசமாக இருந்த காலநிலையில், இயற்கையில் எனக்கு எதிரான அனைத்தும் இருந்தபோது, தேவன் எனக்கு வாக்களித்ததை நான் சரியாகப் பெற்றேன்: என் உடல் முழுவதும் ஆரோக்கியத்தைப் பெற்றேன். நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன், உங்களுக்குத் தேவைப்பட்டால், அதே வழியில் தேவனுடைய வார்த்தையை உங்கள் மருந்தாக எடுத்துக் கொள்ளுங்கள், அது உங்களுக்கும் அப்படியே செய்யும். கவனம் செலுத்துங்கள், உங்கள் செவியை சாயுங்கள், உங்கள் கண்களை ஒருமுகப்படுத்துங்கள், அதை உங்கள் இதயத்தின் மத்தியில் வைத்திருங்கள். அது உங்களுக்கு ஜீவனாக இருக்கும், மேலும், உங்கள் முழு உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.

சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை குணமாக்குதல் மற்றும் ஆரோக்கியம் ஆகிய இந்த பகுதியை மீண்டும் கையாள்வேன். தேவன் தம்முடைய மக்களை குணமாக்கும் மற்றொரு வழியைக் குறித்து நான் விளக்குகிறேன்.

லைக்
பகிரவும்