முழு வேதாகமத்தின் மிக அழகான தலைப்பாகிய “பரிசுத்த ஆவியின் கனி” பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் இன்று மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.

நேற்று, நான் உங்களிடம் சந்தோஷத்தின் கனிப் பற்றி பேசினேன். இன்று, ஆவியின் கனியின் மூன்றாவது வடிவமான “சமாதானத்தின் கனி” குறித்து கையாளப் போகிறேன்.

எதிர்மறையான பார்வையில், சமாதானம் என்பது மோதலின் முடிவை அல்லது மோதல் இல்லாமையைக் குறிக்கிறது. நிச்சயமாக, மோதல் இருக்கும்போது சமாதானம் இருக்காது. ஆனால், மோதலை முடிவுக்கு கொண்டுவர சமரசம் தேவை. அதைப் பார்ப்பது முக்கியமானது. இன்று உலகில் போர்கள் பற்றி நன்கு தெரிந்திருக்கும் நாம் பொதுவாக ஒரு பக்கத்தினர் மற்றொருவரை தோற்கடிக்கும்போது சமாதானம் வரும் என்று நினைக்கிறோம். ஆனால் அது உண்மையில் சமாதானம் இல்லை. இரண்டு எதிரெதிர் நபர்கள், அல்லது தேசங்கள், அல்லது அவர்கள் யாராக இருந்தாலும், ஒருவருக்கொருவர் சமரசம் செய்தால் மட்டுமே உண்மையான சமாதானம் கிடைக்கும். எனவே, மோதல்கள் நடந்த இடத்தில், சமரசம் செய்வதன் மூலமாகவும், சண்டையிடும் கட்சிகளை ஒன்றிணைப்பதன் மூலமாகவும், அவர்கள் இதயங்களில் உள்ள போர்களையும், பகைமையையும் அகற்றுவதன் மூலமாகவும் மட்டுமே சமாதானம் சாத்தியமாகும்.

இப்போது, ஒரு மோதல் இந்த பிரபஞ்சத்தில் முதலில் பாவத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில், விழுந்துபோன தேவதூதனாகிய சாத்தானின் பாவத்தினாலும், பின்னர், பூமியில் மனித இனத்தின் பாவத்தாலும். பாவம் பல்வேறு வகையான மோதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே மோதல் உள்ளது, ஏனென்றால், மனிதன் தேவனுடன் போரிடுகிறான், தேவனுடன் இணக்கமாக இல்லை. ஆனால் மனிதனுக்கும், மனிதனுக்குமே மோதல் இருக்கிறது. மனித இனத்தில் எல்லா இடங்களிலும் – குடும்பங்களில், தேசங்களில் மற்றும் சர்வதேச அளவில் போர், ஒற்றுமையின்மை, சண்டைகள் உள்ளன. சமாதானத்தை அடைய, நாம் சமரசத்தைக் கொண்டிருக்க வேண்டும். இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் தேவன் ஒரேயடியாக (நிரந்தரமாக) சமரசம் செய்தார். ஆனால், இயேசுவின் மரணத்தின் மூலம் கிடைத்த சமரசத்தைத் தவிர, சமாதானத்திற்கு வேறு வழியில்லை. ஏசாயா 53:5 இல் கூறியதைக் கேளுங்கள், இது நம் சார்பாக இயேசு அனுபவித்த பாடுகளின் தீர்க்கதரிசன முன்னோட்டம் என்று நான் நம்புகிறேன். அது கூறுகிறது:

5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

“நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது” என்ற மையச் சொற்றொடரைக் கவனியுங்கள். நமது குற்றங்கள் மற்றும் அக்கிரமங்கள் கையாளப்படாத வரை, சமரசம் இல்லாததால், சமாதானம் சாத்தியமில்லை. ஆனால், நம்முடைய குற்றங்களுக்கு இயேசு அபராதம் செலுத்தினார். நமக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை அவர் தாமே ஏற்றுக்கொண்டார். இவ்விதத்தில், தேவனின் தெய்வீக நீதி திருப்தியடைந்து, நாம் சமாதானத்திற்குள் – தேவனோடு சமாதானம் நுழைவதற்கான வழி திறக்கப்பட்டது. அந்த சொற்றொடரை மீண்டும் மேற்கொள் காட்டுகிறேன்: “நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது.”

கொலோசெயர் 1:19 & 20 இல், பவுல் அதே கருப்பொருளைக் கையாள்கிறார் – தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான சமரசம், இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் அடையப்பட்டது. பவுல் சொல்வது இதுதான்:

19 சகல பரிபூரணமும் அவருக்குள்ளே [அதுதான், இயேசுவானவர்] வாசமாயிருக்கவும், 20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

இயேசுவின் மரணத்தின் நோக்கம் சமரசமாகும். தேவன், அதன் மூலமாக சமாதானத்தை உண்டுபண்ணினார்; ஆனால், அந்த சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இயேசுவின் இரத்தம் சிந்தப்பட வேண்டும். நமக்காக தியாகம் செய்த அவரது வாழ்க்கையால் மட்டுமே, தேவனுடன் சமரசத்தை அனுபவிக்க முடிந்தது.

இப்போது, சிலுவைக்கு இரண்டு கற்றைகள் உள்ளன – செங்குத்தான மற்றும் தட்டையான கற்றைகள். ஒவ்வொரு கற்றையும் ஒரு குறிப்பிட்ட உறவைக் குறிக்கிறது. செங்குத்தான கற்றை – மேல் இருந்து கீழ் இருக்கும் கற்றை – தேவனுடனான நமது உறவைக் குறிக்கிறது. ஆனால், தட்டையான கற்றை நமது சக மனிதர்களுடனான நமது உறவைக் குறிக்கிறது. இப்போது, சிலுவையின் மூலம், இரு உறவுகளும் குணமடைந்துள்ளன. சமரசம் இரு திசைகளிலும் நீட்டிக்கப்படுகிறது. முதலில், தேவனிடமிருந்து மனிதனுக்கு, இரண்டாவதாக, மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையில்.

செங்குத்தான கற்றை மூலம் குறிப்பிடப்படும் சமரசத்தின் முதல் திசையைப் பார்ப்போம். ரோமர் 5:1 இல், பவுல் இவ்வாறு கூறுகிறார்:

1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

இயேசுவின் மரணத்தின் மூலம், நம்முடைய குற்றங்களிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டவுடன், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்கிறோம். தேவனுடன் சமரசம் அடையப்பட்டது. அது சமாதானத்தைக் கொண்டுவருகிறது.

இப்போது தட்டையான கற்றையைப் பார்ப்போம். மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள உறவு. எபேசியர் 2:14 & 15இல், பவுல் இயேசுவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி [அது முதன்மையாக, யூதர்கள் மற்றும் புறஜாதிகள் ஆவர்], பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து [மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த தடையை இயேசு தனது மரணத்தின் மூலம் உடைத்தார்], 15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம் பண்ணி,

இங்கே, சமாதானம் தட்டையான தளத்தில் இருப்பதைக் கவனியுங்கள் – அது ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையில் உள்ளது. இயேசு, சிலுவையிலே, அவரது மரணத்தின் மூலம், மனிதகுலத்தைப் பிளவுப்படுத்திய, மற்றும் பிரித்த தடைகளை உடைத்து, மனிதர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, மனிதகுலம் சிலுவையின் மூலமாக தவிர உண்மையான சமாதானத்தை ஒருபோதும் அறிய முடியாது. தனிமனிதர்கள், குடும்பங்கள், தேசங்கள், ஒட்டுமொத்த மனித குலம் போன்ற அனைத்தும் சமாதானத்தை அடைய வேறு வழியில்லை.

ஏசாயா 57:19-21 இல் தேவன் மனித இனத்திற்கு சொல்வதைக் கேளுங்கள்:

19 தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 20 துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப் போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. 21 துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.

இரண்டு விஷயங்களைக் கவனியுங்கள் – சமாதானம் குணமடைய வழிவகுக்கிறது. தேவன் சமாதானத்தை தருகிறார், பின்னர் அவர் கூறுகிறார், “நான் குணமாக்குவேன்.” மனித ஆளுமையின் ஒவ்வொரு பகுதியிலும் – மனம், உணர்வுகள், சரீரம், இது உண்மைதான். சமாதானம் சுகத்தைக் கொண்டுவருகிறது.

ஆனால், மறுபுறம், துன்மார்க்கருக்கு – பிடிவாதமாக, கலகக்காரர்களாக, சுய விருப்பமுள்ளவர்களாக, அடிபணியாமல் இருப்பவர்கள், சிலுவையின் சமரசத்தை நிராகரிப்பவர்கள் போன்றவர்களுக்கு சமாதானம் இல்லை. அவர்களுக்கு சமாதானத்திற்கு மாற்று வழியில்லை.

சமரசத்தின் மூலம் சமாதானம் அடையப்படும் என்று நான் கூறினேன். இருப்பினும், சமாதானம் என்பது மோதல் இல்லாமையை விட அதிகமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக, மோதல் இருக்கும்போது சமாதானம் இருக்க முடியாது; ஆனால், வெறுமனே மோதலின் முடிவு சமாதானத்தின் முழு அர்த்தம் அல்ல. சமாதானத்திற்கான எபிரேய வார்த்தை “ஷாலோம்” – இது யூதர்களால் பயன்படுத்தப்படும் வழக்கமான வாழ்த்துதல் ஆகும். “ஷாலோம்” என்பது எபிரேய மொழியில் ஒரு மூல வார்த்தையுடன் தொடர்புடையது, அதாவது “முழுமைப்படுத்துவது” ஆகும். “ஷாலோம்” என்பதற்கு முழுமை, நிறைவு, நல்வாழ்வு போன்ற அர்த்தமாகும். அதுதான் சமாதானத்தின் முழு அர்த்தம். சண்டைகள் இல்லாதது மட்டுமல்ல, அது மிகவும் சாதகமான ஒன்றாகும் – முழுமை, நிறைவு, நல்வாழ்வு.

சமாதானத்திற்கு இரண்டு திறவுகோல்கள் உள்ளன என்பதை நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். முதல் திறவுகோல் தேவனின் அரசாங்கம் ஆகும். ஏசாயா 9:7 இல், இந்த தீர்க்கதரிசனம் மேசியாவைப் பற்றியது:

7 அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை…

தேவனுடைய அரசாங்கத்துக்கும் (கர்த்தத்துவம்), சமாதானத்துக்கும் உள்ள தொடர்பை கவனியுங்கள். வரிசைமுறையைக் கவனியுங்கள். தேவனுடைய அரசாங்கம் (கர்த்தத்துவம்) முதலில் வருகிறது, பிறகு சமாதானம் வருகிறது. தேவனுடைய அரசாங்கத்தின் கீழ் இருப்பவர்களால் மட்டுமே சமாதானத்தை அறிய முடியும். தேவனுடைய அரசாங்கத்தை நிராகரிப்பவர்களுக்கு உண்மையான சமாதானத்தை ஒருபோதும் அறிய முடியாது. பெரும்பாலும், வேதத்தில், சுவிசேஷம் தேவனின் ராஜ்யத்தின் சுவிசேஷம் என்று குறிப்பிடப்படுகிறது. சுவிசேஷம் என்றால் “நற்செய்தி” என்று பொருள். நல்ல செய்தி என்ன? நல்ல செய்தி என்னவென்றால், தேவன் நம்மை ஆளத் தயாராக இருக்கிறார் – நம் வாழ்வின் மீது அவருடைய ராஜ்யத்தை அமைப்பதற்காக – அவர் இதைச் செய்யும்போது நாம் சமாதானத்தைப் பெறலாம், ஆனால் தேவனின் அரசாங்கம் இல்லாமல் சமாதானம் இருக்காது.

சமாதானத்திற்கான இரண்டாவது திறவுகோல், தேவனின் குரலைக் கேட்டு, அதற்கு கீழ்ப்படிவது என்று நான் நம்புகிறேன். ஏசாயா 48:18 இல் தேவன் இஸ்ரவேலராகிய தம்முடைய மக்களிடம் பேசுகிறார். அவர்கள் அவருக்கு கீழ்ப்படிந்து நடந்திருந்தால், அவர்களுக்கு என்ன கிடைத்திருக்கும் என்பதை அவர் நினைவுபடுத்துகிறார். அவர் சொல்வது இதுதான்:

18 ஆ, என் கற்பனையைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.

நதியைப் போன்ற சமாதானத்திற்கான திறவுகோல் என்ன? தேவனின் கட்டளைகளுக்கு கவனம் செலுத்தி, தேவன் சொல்வதைக் கேட்டு, அதைச் செய்வதே ஆகும்.

அதே கொள்கை புதிய ஏற்பாட்டிற்கும் கொண்டு செல்லப்படுகிறது. யோவான் 10:27 இல், இயேசு தம்முடைய சீஷர்களைப் பற்றி – தம்மை உண்மையாய் பின்பற்றுபவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.

இயேசுவின் உண்மையான சீஷர்களின் அடையாளம் என்ன? இது ஒரு மத முத்திரையல்ல. இது ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டு நிலைப்பாடு கூட இல்லை. அது இதுதான்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுத்து, எனக்குப் பின்செல்லுகிறது.”

இயேசுவின் உண்மையான விசுவாசியாக, உண்மையான சீஷனாக அடையாளப்படுத்தும் இரண்டு விஷயங்கள் யாவை? முதலில், அவருடைய குரலைக் கேட்பது; இரண்டாவதாக, அவரைப் பின்தொடர்வது, அதுவே சமாதானத்தைத் தருகிறது. இதைச் செய்பவர்களிடம் இயேசு, “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை” என்று கூறுகிறார்.

இது உலகம் தருவது போல் இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில், அது மிகவும் நிலையானது அல்லது ஸ்திரமானது அல்லது நீடித்தது அல்ல. எனவே, சமாதானத்திற்கான இரண்டு தேவைகள் என்ன? முதலாவதாக, தேவனுடனும், மனிதனுடனும் சிலுவையின் மூலம் சமரசமாவது. இரண்டாவதாக, தேவனின் குரலைக் கேட்டு கீழ்ப்படிவது.

இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால், நாளை இந்த நேரத்தில் நான் உங்களுடன் வருவேன். நாளை, ஆவியின் கனியில் நான்காவது வடிவமான “நீடிய பொறுமையின் கனி” பற்றி பேசுகிறேன்.

லைக்
பகிரவும்