சுத்திகரிப்பு மற்றும் பரிசுத்தமாக்குதல்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 9
கர்த்தர் அருளும் சுத்திகரிப்பையும் பரிசுத்தமாக்குதலையும் அனுபவியுங்கள்! தேவனுடைய வார்த்தை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைக் கண்டறியுங்கள். 'தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்' என்ற தொடரின் 8-ஆம் பாகமான இந்தச் செய்தியில், வேதவசனத்தின் உருமாற்றும் வல்லமையை டெரெக் பிரின்ஸ் விளக்குகிறார்.
Transcript
மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம், “தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்” என்ற தலைப்பில் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
நேற்று, எவ்வாறு அவருடைய வார்த்தையின் மூலம், பாவத்தின் மீதும் சாத்தானின் மீதும் தொடர்ந்து நாம் வெற்றி அடைவதை தேவன் சாத்தியமாக்கியுள்ளார் என்பதை நான் விவரித்தேன். தேவனுடைய வார்த்தை உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மேலும் இரண்டு விளைவுகளைப் பற்றி இன்று நான் பேசப் போகிறேன். அவை சுத்திகரிப்பு மற்றும் பரிசுத்தமாக்குதல் ஆகும்.
முதல் வசனமாக, எபேசியர் 5: 25-27 ஐ நாம் திருப்புவோம். பவுல் இந்த வார்த்தைகளை புருஷர்களுக்கு உரையாற்றுகிறார், ஆனால் அவர் சொல்வதன் முக்கிய அம்சம் என்னவென்றால் மனிதர்களில் கணவன் மனைவி இடையிலான உறவை பற்றி அல்ல, ஆனால் கிறிஸ்து மணவாளனாக தன் மணவாட்டி திருச்சபையுடன் உள்ள உறவைப் பற்றி கூறுகிறார். மேலும் அவர் இரண்டு மிக முக்கியமான காரியங்களை ஏற்படுத்தியிருக்கிறதை சொல்கிறார், கிறிஸ்து மீட்பராகவும், கர்த்தராகவும் இருக்கிறார் மற்றும் சபைக்காக மணமகனாகவும் ஆகியுள்ளார். இதோ, அவர் சொல்வது:
25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, 26 தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், 27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
இயேசு சபைக்காக அங்கு இரண்டு காரியங்கள் ஏற்படுத்தியிருக்கிறதை நீங்கள் காணலாம். அவருடைய மக்களின் நலனுக்காக இரண்டு இன்றியமையாத ஏற்பாடுகள். முதலாவது: அவளுக்காக அவர் தன்னையே தந்தார். அதாவது, அவர் சிலுவையில் தம்முடைய மக்களின் சார்பாக மீட்கும் மரணம் அடைந்தார். அங்கே அவர் தம்முடைய மக்களை மீட்பதற்காகத் தன் இரத்தத்தைச் சிந்தினார். எனவே, கிறிஸ்து முதலாவது தமக்காக, தம்முடைய இரத்தத்தினாலே நமக்கு மீட்பை ஏற்படுத்தினார். ஆனால், அவர் மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அவர் தம் இரத்தத்தால் நம்மை மீட்டார் என்று அது சொல்கிறது. வார்த்தையின் தண்ணீர் மூலம் அவர் நம்மை சுத்திகரித்து பரிசுத்தமாக்குவார். அங்கே வார்த்தை என்றால், நிச்சயமாக, தேவனுடைய வார்த்தை என்பதாகும். எனவே, வேதாகமத்தில் உள்ள மற்ற இடங்களில் உள்ளதைப் போலவே, தேவனுடய வார்த்தையும் அதன் செயல்பாட்டில் சுத்தமான தண்ணீருடன் ஒப்பிடப்படுகிறது, அது நம் மீது செயல்படும்போது, நம்மை சுத்திகரித்து பரிசுத்தப்படுத்துகிறது. கிறிஸ்துவின் இந்த இரண்டு ஏற்பாடுகளும் நாம் அவருடைய மணவாட்டியாக, அவர் விரும்பும் விதமான தேவாலயமாக மாறுவதற்கு முக்கியமானவை என்று வேதம் சுட்டிக்காட்டுகிறது.
முதலாவது, நாம் இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டோம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும், ஆனால் அதுவே அனைத்தும் அல்ல. அதற்கு அப்பால், நாம் சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட, நம் இதயங்களிலும், சிந்தனைகளிலும், வாழ்விலும் அவருடைய வார்த்தையின் செயல்பாட்டிற்கு நம்மை சமர்ப்பிக்க வேண்டும், அதனால் நாம் பரிசுத்தமாகவும், குற்றமற்றவர்களாகவும் இருக்க முடியும். இது தேவன் நமக்கு நிர்ணயித்திருக்கும் ஒரு மகத்தான இலக்காகும், ஆனால் தேவனே இலக்கை நிர்ணயித்திருப்பதால், அதை நாம் அடைவதற்கான வழிமுறைகளையும் அவர் நமக்கு அளித்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.
இப்போது, சுத்திகரிப்புக்கும் பரிசுத்தமாக்கப்படுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை எளிமையான முறையில் புரிந்துகொள்வது முக்கியமானது. அன்றாட வாழ்வில் கூட “சுத்தப்படுத்துதல்” என்ற வார்த்தை ஒரு பழக்கமான வார்த்தையாகும். சுத்தமாக அல்லது தூய்மையானதாக ஆக்குவது என்று பொருள். தேவனுடைய வார்த்தையின் முதல் செயல்பாடு என்னவென்றால் அவர் நம்மை சுத்திகரிக்கிறார். அவர் நம் மனதை, நம் இதயங்களை, நம் எண்ணங்களை, நம் நோக்கங்களைத் தூய்மைப்படுத்துகிறார். பாவமான, அசுத்தமான மற்றும் இழிவானவற்றை அவர் கழுவுகிறார், ஆனால் அவர் நம்மை பரிசுத்தமுமாக்குகிறார். இப்போது “பரிசுத்தப்படுத்து” என்னும் வார்த்தை சில சாதாரண மக்களை பயமுறுத்தும் ஒரு மதச்சொல்லாக இருக்கிறது, ஆனால் இதை எளிய முறையில் உங்களுக்கு விளக்குகிறேன்: “படுத்து” அல்லது “படுத்துதல்” என்று முடிவடையும் எந்த வார்த்தையும், ஒரு வார்த்தையின் ஆரம்பத்தில் வரும் “எதுவாக இருந்தாலும் அதை உருவாக்குவது” என்று பொருள்படும். அதுபோல, “தூய்மைப்படுத்து” என்பது “தூய்மையாக்கு” ஆகும், “தூய்மைப்படுத்துதல்” என்றால் “தூய்மையாக்குதல்” என்பதாகும். இப்போது “பரிசுத்தப்படுத்து” என்றால் “பரிசுத்தமாக்கு” என்பதாகும். நீங்கள் சொல்கிறீர்கள், “சரி, பரிசுத்தம் என்றால் என்ன?” இது “புனிதம்” என்ற அதே வார்த்தையாகும். புனிதம் என்றால் என்ன? வேதத்தின் மூல மொழியில், இது “பரிசுத்தம்” என்பதற்கான வார்த்தையாகும். எனவே, மிக எளிமையாக, பரிசுத்தமாக்குதல் என்றால் “நம்மை பரிசுத்தமாக்குகிறது” என்பதாகும்.
இப்போது பரிசுத்தமாக்குதலில் இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலில் எதிர்மறையையும், பின்னர் நேர்மறையையும் காணலாம். எதிர்மறையில், பரிசுத்தமாக்குதல் என்பது பாவத்திலிருந்து பிரிந்து இருப்பது; தூய்மையற்ற, தேவனால் ஏற்றுக்கொள்ள முடியாத எல்லாவற்றிலிருந்தும் தேவனுக்குப் பிரிக்கப்பட்டிருப்பதாகும். ஆனால், அதற்கு அப்பால், பரிசுத்தமாக்குதலின் நேர்மறையான அம்சமும் உள்ளது, அதாவது தேவனின் சொந்த பரிசுத்தத்தில் பங்குகொள்வது. தேவனுடைய பரிசுத்தத்துடன் பரிசுத்தமாக மாறுதல். இது எபிரெயர் 12: 10 & 14 இல் கூறப்பட்டுள்ளது. 10 ஆம் வசனத்தில், மனித தந்தைகளின் ஒழுக்கத்திற்கும், நமது பரலோகத் தந்தையாகிய தேவனின் ஒழுக்கத்திற்கும் இடையிலான உறவைக் குறித்து எழுத்தாளர் கூறுகிறார். அவர் சொல்கிறார்:
10 அவர்கள் [மனித தந்தைகள்] தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ, தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
ஆகவே, நம் வாழ்வில் தேவனின் கையாளுதல்கள் மற்றும் ஒழுக்கத்தின் இறுதி நோக்கம் என்னவென்றால் நாம் அவருடைய சொந்த பரிசுத்தத்தில் பங்குகொள்ள வேண்டும். இது எதிர்மறையானது மட்டுமல்ல. இது வெறும் பாவத்திலிருந்தும் மற்றும் தூய்மையற்ற நிலையிலிருந்தும் விலகி இருப்பது மட்டுமல்ல, ஆனால் அது உண்மையில் நமக்குள் தேவனின் இயல்பையும் பரிசுத்தத்தையும் பெறுகிறது, அதனால் நாம் தேவனுடைய பரிசுத்தத்தோடு பரிசுத்தமாகிறோம். பின்னர் 14 ஆம் வசனத்தில், இதே சூழலில், எபிரெய எழுத்தாளர் தொடர்ந்து கூறுகிறார்:
14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
இது மிகவும் தீவிரமான உண்மையாகும்; நாம் எப்போதும் கர்த்தரை காண வேண்டுமானால், நாம் பரிசுத்தமாக மாற வேண்டும். நம்மை பரிசுத்தமாக்க தேவனின் ஏற்பாடு என்னவென்றால் “வார்த்தையால் தண்ணீரில் கழுவுதல்”, அது நம்மை சுத்திகரித்து பரிசுத்தமுமாக்குகிறது. அது நம்மை பரிசுத்தமாக்குகிறது.
இருப்பினும், நம்மைப் பரிசுத்தமாக்க தேவன் செயல்படுத்தும் விதமும், மதம் அடிக்கடி பின்பற்றும் முறைகளிலும் முக்கியமான வேறுபாடு உள்ளது. மதம் வெளியில் இருந்து உள்நோக்கி செயல்பட முனைகிறது. இது வெளிப்புறத்துடன் தொடங்குகிறது. இது சொல்கிறது, “இதைச் செய், அதைச் செய்யாதே, அப்போது நீ பரிசுத்தமாக இருப்பாய்.” இயேசு இந்த விதமான பரிசுத்தத்தை மத்தேயு 23 இல் சொல்கிறார். ஆனால் அது திருப்தியற்றதாகவும், போதுமானதாகவும் இல்லாததால் அதை அவர் நிராகரிக்கிறார். அதுவே வேதபாரகர் மற்றும் பரிசேயர்களின் பரிசுத்தம். அவர் அவர்களிடம் சொல்வது இதுதான்.
23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. 26 குருடனான பரிசேயனே! போஜன பானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
இயேசு என்ன சொன்னார் என்பது உங்களுக்கு புரிந்ததா. அவர் சொல்கிறார், “பரிசேயரே, நீங்கள் எப்போதும் போஜன பானபாத்திரங்களின் வெளிபுறத்தை சுத்தம் செய்வதில் வேலைசெய்கிறீர்கள், ஆனால் நீங்கள் உள்புறத்தை சுத்தம் செய்யவில்லை. உள்புறம் அவசியமானது, அது எப்போதும் வெளிபுறத்தை மீண்டும் அசுத்தமாக்கிவிடும், எத்தனை முறை சுத்தம் செய்ய முயன்றாலும் பரவாயில்லை.” அந்த வகையான மதத்தின் தவறு, வெளியில் இருந்து உள்நோக்கி வேலை செய்வதன் மூலம் நம்மை பரிசுத்தமாக்க முயற்சிக்கிறது. இன்றைய சபையின் பல பிரிவுகளில், அதற்கு ஒத்த பல விஷயங்கள் உள்ளன, அதில் மனிதனால் உருவாக்கப்பட்ட விதிகளின் தொகுப்பால் பரிசுத்தம் அடையப்படுகிறது. பிரச்சனை என்னவென்றால், அது மனிதனை உள்ளுக்குள் மாற்றவே இல்லை.
இப்போது, நம்மைப் பரிசுத்தமாக்குவதற்கான தேவனின் வழி என்னவென்றால் உள்ளிருந்து வெளிப்புறமாக வேலை செய்வதாகும். மத்தேயு 5:8 இல் இயேசு சொல்வதை சற்று ஒப்பிட்டு பாருங்கள்.
8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
இயேசு சொல்கிறார், உங்கள் இதயம் சுத்தமாக இருந்தால், அது உங்களை தேவனின் பிரசன்னத்திற்கு சரியாக அழைத்துச் செல்லும். நீங்கள் இதயத்தில் தூய்மையாக இருந்தால், உங்கள் வார்த்தைகள், உங்கள் எண்ணங்கள், உங்கள் செயல்கள் அனைத்தும் தூய்மையாக இருக்கும், ஏனென்றால் நீதிமொழிகள் 4:23 இல் வசனம் சொல்கிறது, ஜீவ ஊற்றுகள் அனைத்தும் இதயத்திலிருந்து வெளியே வருகின்றது. நம் வாழ்வில் உள்ள அனைத்தும் இறுதியில் இதயத்தில் இருந்து புறப்படுகிறது. இதயம் தூய்மையாக இருந்தால், வாழ்க்கை தூய்மையாக இருக்கும். ஆனால், தூய்மையான இதயம் இல்லாமல் தூய்மையான வாழ்க்கையைப் பெற முடியாது. இப்போது, நம் மனதைப் புதுப்பிப்பதன் மூலம், நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம், நம்மை உள்ளத்தில் தூய்மையாக்க தேவன் செயல்படுகிறார். இது ரோமர் 12:2 இல் கூறப்பட்டுள்ளது.
2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்யாமலும், தேவனை கனம்பண்ணாமலும் இருக்கிற உலக மக்களைப் போல் நாம் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. நாம் வித்தியாசமாக இருக்க வேண்டும். நாம் மாற்றப்பட வேண்டும், ஆனால் வெளிப்புற விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் அல்ல, மாறாக நம் மனதைப் புதுப்பிப்பதன் மூலமாக நாம் மாற்றப்பட வேண்டும். மாற்றம் உள்ளிருந்து தொடர வேண்டும், மேலும், பவுல் நமக்கு சொல்கிறார், நம் மனம் புதுப்பிக்கப்பட்டவுடன், அனுபவத்தில், எது நல்லது, ஏற்றுக்கொள்ளக்கூடியது மற்றும் சரியானது என்பதை நாம் கண்டுக்கொள்ள முடியும். நம் வாழ்வில் உண்மையான தேவனுடைய சித்தத்தை கண்டுக்கொள்ள முடியும். புதுப்பிக்கப்படாத மனதுக்கு தேவனின் சித்தம் வெளிப்படுவதில்லை. புதுப்பிக்கப்பட்ட மனம் மட்டுமே தேவனின் சித்தத்தை உணர்ந்துகொள்ளவும், அதில் நுழையவும் முடியும்.
இப்போது, தேவனுடைய வார்த்தை எப்படி நம் மனதை புதுப்பிக்கிறது? நாம் மூன்று வழிகளில் சிந்திக்கலாம் என்று நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். முதலாவது, அது அசுத்தத்தைக் கழுவுகிறது. அசுத்தமான எண்ணங்களிலிருந்தும், அசுத்தமான பேச்சிலிருந்தும், தீய ஆசையிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது. அது அந்த விஷயங்களை நம்மிடமிருந்து கழுவி விடுகிறது. இரண்டாவதாக, அது நமது மதிப்புகளை மாற்றுகிறது. நாம் வித்தியாசமான தரங்களைப் பெறுகிறோம். நாம் விஷயங்களை வித்தியாசமாகப் பார்க்கிறோம். தேவன் எப்படி மதிப்பிடுகிறாரோ அவ்வாறே நாம் விஷயங்களை மதிப்பிடுகிறோம். நாம் பாவத்தை பாவம் என்றும் நீதியை நீதி என்றும் அழைக்க ஆரம்பிக்கிறோம். தேவனுக்குப் பிடிக்காத விஷயங்களுக்கு ஆடம்பரமான உளவியல் சொற்களைப் பயன்படுத்தினாலும் நாம் ஏமாற்றப்படுவதில்லை. மூன்றாவதாக, நமக்குள் செயல்படும் தேவனுடைய வார்த்தையானது தேவனுடைய நோக்கங்களுடன் நம்மை அடையாளம் காண வைக்கிறது. நமது நோக்கங்கள் மாறுகின்றன. இனி, பிரதானமாக நாம் விரும்புவதைப் பற்றி நாம் கவலைப்படமாட்டோம், ஆனால் தேவன் என்ன விரும்புகிறார் என்பதில் நாம் அக்கறை கொள்வோம். பூமியில் தேவனுடைய நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதை நாம் அடையாளம் காண்போம். கர்த்தருடைய ஜெபத்தில், இயேசு நமக்கு சொல்ல கற்றுக்கொடுத்ததாவது, “உம்முடைய ராஜ்யம் வருவதாக.” தேவனுடைய ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதே நம் வாழ்வின் முக்கிய நோக்கமாகவும், விருப்பமாகவும் மாறும். இந்த நோக்கத்துடன் நாம் வேறுவிதமாக வாழாமல் இருக்க முடியாது.
இப்போது, இந்த மாற்றங்கள் அனைத்தும் நம் மனதில் உருவாகும்போது, அவை நமது வெளிப்புற நடத்தையில் ஏற்படும் மாற்றங்களில் பிரதிபலிக்கும், ஆனால் தேவன் தனது வார்த்தையுடன் மனதில் தொடங்குகிறார்.
சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். “தேவனுடைய வார்த்தை உங்களுக்கு என்ன செய்யும்” என்ற தலைப்பில் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பலருக்கும் அறிமுகமில்லாத தேவனுடைய வார்த்தையின் ஒரு அம்சத்தைப் பற்றி நாளை நான் பேசுகிறேன்: தேவனுடைய வார்த்தை நமது கண்ணாடி.
குறியீடு: RP-R006-103-TAM









