“நமது சுதந்தரத்தை உரிமை கோருதல்” என்ற இந்த வாரத்திற்கான நமது செழுமையான, உற்சாகமான கருப்பொருளை நாம் தொடர்ந்து படிப்பதில் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது.

நேற்றைய எனது பேச்சில், 2 பேதுரு 1:2-4 இல் உள்ள உண்மையை வெளிப்படுத்தினேன், ஏனெனில் இந்த வசனங்கள், நமக்கான தேவனுடைய ஏற்பாட்டுடன் தொடர்புடையது. இந்த வசனங்களில் உள்ள உண்மையை நான் தொடர்ந்து ஏழு வாக்கியங்களில் தொகுத்துள்ளேன், மேலும் இந்த வாக்கியங்களை மீண்டும் ஒருமுறை எனது இன்றைய பேச்சின் அறிமுகமாகப் பார்க்கலாம்.

முதலாவது, தேவனின் ஏற்பாடு மிகுதியாக உள்ளது.

இரண்டாவதாக, தேவன் மட்டுமே ஆதாரம், இயேசு மட்டுமே வழி.

மூன்றாவதாக, தேவனின் வல்லமை நமக்கு தேவையான அனைத்தையும் ஏற்கனவே கொடுத்துள்ளது. மேலும் அது செயல்முடிவுபெற்றக் காலம் என்பதை பார்த்தோம், தேவன் ஏதோ ஒன்றை செய்யப்போவது அல்ல, அவர் ஏற்கனவே செய்த ஒன்றாகும்.

நான்காவதாக, இது வலியுறுத்துவதற்காக மீண்டும் சொல்லப்படுகிறது, இவை அனைத்தும் இயேசுவை அறிவதில் அல்லது அங்கீகரிப்பதில் அடங்கியுள்ளது; அதாவது, அறிவார்ந்த முறையில் அவரைப் பற்றி அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், அவரை அங்கீகரிப்பதும், நம் வாழ்வில் அவருக்கு உரிய இடத்தை வழங்குவதுமாகும்.

ஐந்தாவது, இந்த ஏற்பாடு வாக்குத்தத்தங்களில் உள்ளது. எல்லாவற்றையும் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் அதுதான். மீண்டும் சொல்கிறேன். இதை மனதில் கொள்ளுங்கள். அதை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். ஏற்பாடு வாக்குத்தத்தங்களில் உள்ளது.

ஆறாவதாக, வாக்குத்தத்தங்களை பயன்படுத்துவதன் மூலம், நாம் தெய்வீக இயல்பில் பங்கேற்கிறோம். தேவனின் தன்மையே நமக்குள் வருகிறது.

ஏழாவதாக, நாம் இதைச் செய்யும் விகிதத்தில், தேவனின் தன்மையும், கேடும் பொருந்தாததால், தீய ஆசைகளால் உலகில் உள்ள கேட்டிலிருந்து தப்பிக்கிறோம். தேவனின் தன்மை எங்குவந்தாலும் கேட்டிற்கு இடமில்லை.

இன்று நான் நமது சுதந்தரத்துக்குள் நுழைவதற்கு நாம் எடுக்க வேண்டிய உண்மையான படிகளை நடைமுறை வழியில் கையாளப் போகிறேன். பழைய ஏற்பாட்டில், தேவனுடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் எவ்வாறு தேவன் அவர்களுக்கு வாக்குக்கொடுத்த சுதந்தரத்துக்குள் நுழைந்தார்கள் என்பதை விவரிக்கும் ஒரு புத்தகம் உள்ளது. அதுதான் யோசுவாவின் புத்தகம். சரியாக புரிந்துகொண்டால், யோசுவாவின் இந்தப் புத்தகம், புதிய ஏற்பாட்டில் நம்முடைய சுதந்தரத்திற்குள் நுழையும்போது நாமும் பின்பற்றக்கூடிய ஒரு மாதிரியை வழங்குகிறது. யோசுவா புத்தகத்தின் முதல் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களைப் படிக்கப் போகிறேன். (யோசுவா 1:1-3):

1 கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: 2 என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். 3 நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.

இப்போது யோசுவா புத்தகத்தின் துவக்கத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. புத்தகத்தின் மற்ற பகுதிகளில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலை இது நமக்கு வழங்குகிறது. இதை மனதில் கொள்ளுங்கள், தேவன் யோசுவாவிடம் சொல்ல வேண்டியதை இவ்வாறு சொல்கிறார், “என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது” ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு வகையான கொள்கையை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன், பெரும்பாலும் ஒரு மரணம் ஒரு புதிய நகர்வுக்கு முன்னதாகவே இருக்கும். பல முறை, அடுத்த நகர்வை எடுப்பதற்குள் ஏதாவது இறக்க வேண்டும். தேவன் தம்முடைய மக்களுக்குக் கொடுத்த மிகப் பெரிய தலைவர்களில் ஒருவராக மோசே இருந்தார், ஆனால் அவருடைய மரணத்திற்கு பிறகுதான் அவருடைய மக்கள் தங்கள் சுதந்தரத்துக்குள் செல்ல முடிந்தது. எனவே, அவர்கள் மோசேயின் மரணத்திற்கு துக்கம் அனுசரித்தாலும், அது ஒரு பேரழிவு அல்ல, ஆனால் அது அடுத்த நகர்வுக்கு அவசியமான பூர்வாங்கமாக இருந்தது.

ஆவிக்குரிய ரீதியில் நம்முடைய சொந்த வாழ்க்கையில் இதை நாம் காணலாம் என்று நான் நம்புகிறேன். இதுகூட, நான் நினைக்கிறேன், பருவங்களின் சுழற்சிப் போன்றது. கோடைகாலத்தின் முடிவில், இலையுதிர்வு வருகிறது, பின்னர் குளிர்காலம் மரணத்தின் நேரம்போன்றது. ஆனால் குளிர்காலத்தின் இறப்பு நேரத்திலிருந்து ஒரு வசந்தத்தின் புதுமை மற்றும் புதுபித்தல் வருகிறது. நமது வாழ்க்கையில் அப்படி ஒன்று இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் அடிக்கடி கவனித்திருக்கிறேன், தேவன் எனக்கு முன்னால் ஏதாவது புதியதாக வைத்திருக்கும்போது, நான் புதியதாக மாறுவதற்கு முன்பு பழைய ஒன்று முதலில் இறக்க வேண்டும்.

யோசுவாவிடமிருந்து இந்தப் பாடத்தை தொடரலாம். இரண்டாவது விஷயம் என்னவென்றால், எல்லா மக்களும் கடந்து செல்ல வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். சமகால தேவாலயத்திலிருந்து இது மிகவும் வித்தியாசமானது, அங்கு 50% பதிலைப் பெற்றால், நாம் நன்றாக செயல்படுகிறோம் என்று நினைக்கலாம். ஆனால், இந்த கட்டத்தில், தேவன் தம் மக்களுடன் கையாள்வதில், அவர்களில் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது என்று சொல்கிறார். அவர்கள் அனைவரும் கடந்து செல்ல வேண்டும். மேலும், அடுத்த சில ஆண்டுகளில் தேவனுடைய மக்களுக்கு முன்னால் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நான் நம்புகிறேன், தேவனின் மக்களுக்கு சொந்தமான மற்றும் தேவனின் சுதந்தரத்தில் சேர விரும்பும் அனைத்து மக்களும் கடந்து செல்ல வேண்டும்.

தேவன் பயன்படுத்தும் காலங்களை கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வசனம் 2 இல் “நான் கொடுக்கும்” என்ற நிகழ்காலத்தை அவர் பயன்படுத்துகிறார், ஆனால் வசனம் 3 இல் “நான் அவர்களுக்கு தேசத்தைக் கொடுத்தேன்” என்ற செயல்முடிவுபெற்ற காலத்தைப் பயன்படுத்துகிறார். பாடம் இதுதான்: தேவன் ஒருமுறை “நான் அதை உனக்குத் தருகிறேன்” என்று சொன்னபிறகு, தேவன் அதை மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை. அதற்குப் பிறகு, தேவனைப் பொறுத்த வரை, அது கொடுக்கப்பட்டது. “நான் தருகிறேன்” என்று தேவன் சொல்லும்போது, அது தீர்க்கப்படுகிறது. அதன் பிறகு, “நான் கொடுத்தேன்” என்பதுதான். அது கொடுக்கப்பட்டது.

அப்போதிருந்து, முழு தேசத்திற்கும் தேவனால் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமை இஸ்ரவேலுக்கு இருந்தது, ஆனால் அவர்கள் இன்னும் தேசத்தை அனுபவபூர்வமாக பெறவில்லை. தேவன் பேசுவதற்கு முன்பு அவர்கள் செய்ததை விட அனுபவ ரீதியாக அவர்கள் எந்த தேசத்தையும் சொந்தமாக்கவில்லை. ஆகவே, தேவன் நமக்கு வாக்குத்தந்தவற்றின் சட்டப்பூர்வ உரிமைக்கும், அனுபவப்பூர்வ உடைமைக்கும் வித்தியாசம் இருப்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். கிறிஸ்தவர்களாகிய நமக்கு இது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். சில சமயங்களில் இவ்வாறான கருத்தை தெரிவித்திருக்கிறேன், இஸ்ரவேலர்கள் சில கிறிஸ்தவர்களைப் போல இருந்திருந்தால், 3 ஆம் வசனத்தில், “நான் முழு தேசத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்” என்று தேவன் அவர்களிடம் சொன்ன பிறகு, அவர்கள் யோர்தான் நதியின் கிழக்குக் கரையில் வரிசையாக நின்று, நதியின் குறுக்கே மேற்கு நிலத்தை நோக்கிப் பார்த்து, “எல்லாம் எங்களுடையது” என்று சொல்லியிருப்பார்கள். சரி, அது சட்டப்படி உண்மையாக இருந்திருக்கும், ஆனால் அனுபவ ரீதியாக அது உண்மையல்ல. கானானியர்கள் இன்னும் அந்த தேசத்தில் ஆதிக்கம் செலுத்தினர். எனவே, யோசுவா புத்தகத்திலிருந்து வெளிப்படும் இந்த கொள்கையை மனதில் கொள்ளுங்கள். சட்டப்பூர்வ உரிமை இருப்பது வேறு, அனுபவ உடைமை என்பது வேறு விஷயம்.

இப்போது, இஸ்ரவேல் தேசத்திற்குள் நுழைந்த உண்மையான செயல்முறையை பார்ப்போம். அவர்களின் முதல் இரண்டு வெற்றிகளும் அற்புதங்கள் மூலம் கிடைத்தன. யோர்தானை கடப்பதற்கு ஒரு அற்புதசெயல் அவர்களுக்கு வழியைத் திறந்தது, மேலும், ஒரு அற்புதத்தின் மூலம் அவர்கள் முதல் நகரமான எரிகோவை கைப்பற்றினர். ஆனால் இதைக் கவனியுங்கள். அதன் பிறகு, மீதி அனைத்திற்கும் அவர்கள் யுத்தம் செய்ய வேண்டியதாயிருந்தது. அவர்கள் உண்மையில் அனுபவப்பூர்வ உடைமையைப் பெற்ற ஒரே வழி, அவர்கள் உரிமை கோரின நிலத்தில் தங்கள் கால்களை வைத்த பிறகுதான். தேவன் அவர்களிடம், “நீங்கள் உங்கள் கால் மிதிக்கும் ஒவ்வொரு இடமும், சட்ட உரிமையில் மட்டுமல்ல, அனுபவத்திலும் உங்களுடையது.” என்றார்.

நாம் நமது சுதந்தரத்தைப் பெறும்போது, இவை அனைத்தும் புதிய ஏற்பாட்டிற்கு மிக இணையாக இருக்கிறது. சுவாரஸ்யமாக, யோசுவா என்ற எபிரேய பெயரும் மூல மொழியில் இயேசு என்ற பெயரும் ஒன்றுதான். ஒரே பெயரில் இரண்டு வெவ்வேறு வடிவங்கள் உள்ளன, மேலும், இந்த வகையான காட்சியைப் பெறுகிறோம்: பழைய ஏற்பாட்டில், யோசுவா என்ற தலைவரின் கீழ், தேவன் தம் மக்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்றார். புதிய ஏற்பாட்டில், இயேசு (அதே பெயர்) என்ற தலைவரின் கீழ், தேவன் தம் மக்களை வாக்குத்தத்தங்களின் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார். எனவே, நீங்கள் வித்தியாசத்தைப் பார்க்கிறீர்களா? பழைய ஏற்பாட்டில், சுதந்தரம் வாக்குப்பண்ணப்பட்ட தேசமாக இருந்தது. புதிய ஏற்பாட்டில், சுதந்தரம் என்பது வாக்குத்தத்தங்களின் தேசமாகும்.

யோசுவாவும், இஸ்ரவேலரும் தங்கள் சுதந்தரத்தில் நுழைவது பற்றின உதாரணம், கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய சுதந்தரத்துக்குள் நுழையும் மிகத் தெளிவான நடைமுறை வழி போன்றது என்று நான் விளக்கினேன். நீங்கள் பார்க்கலாம், நாம் மறுபடியும் பிறந்து சட்டப்பூர்வமாக தேவனின் பிள்ளைகளாக மாறும்போது, அதுமுதல் தேவனுடைய எல்லாவற்றுக்கும் நாம் வாரிசுகளாகிறோம். ரோமர் 8:16-17இல் பவுல் சொல்வது இதுதான்:

16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் [அவர் தான் பரிசுத்த ஆவியானவர்] தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சிக் கொடுக்கிறார்.

அது இன்றியமையாதது. நாம் உண்மையில் தேவனின் பிள்ளைகள் என்பதை பரிசுத்த ஆவியானவரின் சாட்சியின் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், நாம் தேவனின் பிள்ளைகள் என்ற வார்த்தையை பரிசுத்த ஆவியானவர் அங்கீகரிக்கமாட்டார். நம்முடைய உரிமை கோரலுக்கு பரிசுத்த ஆவியானவரின் அங்கீகாரம் இருக்க வேண்டும். பின்னர் பவுல் தொடர்ந்து சொல்கிறார்:

17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே;

அது உற்சாகமானது. தேவனின் முழு சுதந்தரமும் நமக்கு சொந்தமானது. நாம் இயேசு கிறிஸ்துவுடன் சுதந்தரத்தை பகிர்ந்துகொள்கிறோம். இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமான அனைத்தும் தேவனின் மகன்களாகிய நமக்குச் சொந்தமானது. “ஆனால்” என்ற வார்த்தை பின்தொடர்ந்து வருகிறது, சில சமயங்களில் மக்கள் வேதத்தை படிக்கும்போது, “ஆனால்” என்ற வார்த்தையை தவிர்த்துவிடுகிறார்கள், “ஆனால்” என்பது மிகவும் முக்கியமான வார்த்தை. நான் அதை மீண்டும் வாசிக்கிறேன்:

17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் [இப்போது இங்கே “பட்டால்” இருக்கிறது] அப்படியாகும்.

எனவே, முழு சுதந்தரத்துக்கும் நாம் வாரிசுகள். எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நாம் வாரிசுகள், ஆனால் பாடுகளுக்கும் நாம் வாரிசுகளாக இருக்கிறோம். நாம் பாடுகளை தவிர்த்துவிட்டு, ஆசீர்வாதங்களைப் பெறுவோம் என்று எதிர்பார்க்க முடியாது. இது மிகவும் தெளிவானது. “நாம் அவருடனேகூடப் பாடுபட்டால்” என்பதுதான் நிபந்தனை. எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் நமது சுதந்தரத்தை அனுபவப்பூர்வமான உடைமையைப் பெற, நாம் இஸ்ரவேலின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். நதியின் கிழக்கு கரையில் வரிசையாக நின்று நமது சுதந்தரத்தைப் பார்த்து, “எனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது” என்று சொன்னால் மட்டும் போதாது. “நான் இயேசுவை ஏற்றுக்கொண்டபோது அனைத்தையும் பெற்றுக்கொண்டேன்” என்று என்னிடம் சொன்னவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். எனது பதில் என்னவென்றால், “நீங்கள் அனைத்தையும் சட்டப்பூர்வமாகப் பெற்றுள்ளீர்கள், ஆனால் நீங்கள் அனுபவப்பூர்வமாக அனைத்தையும் கொண்டிருக்கவில்லை.” இது சரியாக இஸ்ரவேலர்களின் அனுபவத்தால் விளக்கப்பட்டுள்ளது, சில சமயங்களில் நான் மக்களிடம் இப்படி சொல்லும் அளவிற்கு செல்கிறேன், “சரி, நீங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டால், அவை அனைத்தும் எங்கே?” அதைப் பார்ப்போம்! அதை செய்துகாட்டுங்கள்! அதை பயன்படுத்துங்கள்! அதற்கு ஆதாரம் காட்டுங்கள்! ஆனால் பலமுறை மக்கள் கொள்கையில் அனைத்தையும் வைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைத்தையும் கோட்பாட்டில் வைத்திருக்கிறார்கள், ஆனால் உண்மையான அனுபவத்தில் அவர்களிடம் ஒன்றும் இல்லை, யோசுவாவின் பாடத்தை இதற்குதான் நாம் பயன்படுத்த வேண்டும். நமக்குப் பொருந்தும் கொள்கைகள் என்ன? முக்கிய கொள்கைகளை நான் பரிந்துரைக்கிறேன்:

1. தேவையான இடங்களில் தேவன் அற்புதங்களை செய்வார். ஆனால் தேவன் தேவையில்லாத இடங்களில் அற்புதங்களைச் செய்யமாட்டார்.

2. இஸ்ரவேலரைப் போல, நம்முடைய பெரும்பாலான சுதந்தரத்துக்காக நாம் போராட வேண்டியிருக்கும். நம்மை எதிர்க்கும் இருளின் வல்லமைகளை உரிந்துகொள்ளவும், தேவன் நமக்குக் கிடைக்கச் செய்த ஆயுதங்களால் அவற்றைத் தோற்கடிக்கத் தயாராக இருந்தால் ஒழிய, நாம் நமது சுதந்தரத்துக்குள் நுழைய மாட்டோம். சண்டையிடாத கிறிஸ்தவர்கள் தங்கள் சுதந்தரத்துக்குள் நுழைய மாட்டார்கள்.

இன்று பொதுவான பேச்சில் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய மோசமான வார்த்தை உள்ளது. அதுதான் “துணிவு (கட்ஸ்)” என்ற வார்த்தையாகும். இது ஒரு பிரசங்கத்தில் சொல்லப்படும் வார்த்தை அல்ல. சிலர் இதை “குடல் வலிமை” என்று அழைக்கிறார்கள், ஒரு வேளை நீங்கள் இறையியல் இல்லாமல் பரலோகம் செல்வீர்கள் என்று நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். தைரியம் இல்லாமல் நீங்கள் அங்கு வருவீர்களா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு தைரியம் தேவை. நமது சுதந்தரத்திற்குள் நுழைவதற்கு “தைரியம்” தேவைப்படுகிறது.

3. யோசுவாவின் கீழ் இஸ்ரவேலின் மூன்றாவது கொள்கை இதுதான்: தேவன் நமக்கு வாக்குத்தந்தவற்றின் மீது நாம் கால்களை வைக்க வேண்டும். அதை நாம் தனித்தனியாகவும் தனிப்பட்ட முறையிலும் உரிமைக்கொள்ள வேண்டும். இங்குதான் பாடுகள் வருகின்றன, ஏனென்றால் நாம் அதைச் செய்யும்போது, கிறிஸ்துவின் பாடுகளில் நாம் தவிர்க்க முடியாமல் பங்குபெறுவதைக் காண்போம்.

நான் முடிப்பதற்கு முன், நமது இரண்டு பொறுப்புகளை, நாம் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். அவற்றை மிகக் குறுகிய வார்த்தைகளில் சொல்லப் போகிறேன்.

முதலில், நாம் போராட தயாராக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, நம்முடைய சுதந்தரத்தை நாம் உரிமைக் கொண்டாடுவதில் நாம் கால்களை பதிக்க வேண்டும்.

போராடு!

கால்களை வை!

சரி, இன்றைக்கு எனது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். நாளை, ஒன்றிலும் குறையாத அனைத்து வாக்குத்தத்தங்களிலும் நமது சுதந்தரத்தின் முழு அளவையும் உங்களுக்கு வெளிப்படுத்துவேன்.

லைக்
பகிரவும்