ஒரு புதிய வாரத்தின் ஆரம்பத்தில் உங்களோடு இருப்பதும், வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதும் ரொம்ப நல்லது. இந்த சத்தியங்கள் என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வித்தியாசத்தை உண்டாக்கியிருக்கின்றன. இவை அதையே உங்களுக்கும் செய்யும்.

முதலில், எனக்கு எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு “நன்றி” என்று சொல்ல விரும்புகிறேன். இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய ஒரு அஞ்சல் முகவரியை உங்களுக்குக் கொடுப்போம். உங்களுடைய தனிப்பட்ட தேவைகள், பிரச்சனைகள், ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்.

இந்த உலகத்தின் சூழ்நிலையை என்னோடுகூட முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கும்படி இன்று நான் உங்களுக்கு அழைப்பு கொடுக்கிறேன். இந்தக் கண்ணோட்டம், இன்றைய மீடியாக்களில், நாளிதழ்களில், டிவிக்களில், செய்தி விவாதங்களில், பொருளாதார ஆய்வு, அலசல்களில் வெளிவருவதில்லை. இது தேவனுடைய நோக்கங்களின் அடிப்படையிலான கண்ணோட்டமாகும்.

உலகத்தின் இன்றைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, நீங்கள் குழம்பிப் போயிருக்கிறீர்களா, விரக்தியடைந்திருக்கிறீர்களா, என்ன செய்வதென்று அறியாத நிலையில் குழம்பிப் போயிருக்கிறீர்களா? சில நேரங்களில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அது அமைதியற்ற, அங்குமிங்கும் அலசடிபடுகிற கடலைப்போல தெரிகின்றது. பலத்த சூறாவளிக் காற்று அடிக்கின்றது. வலிமையான நீரோட்டங்கள் ஒன்றுக்கொன்று எதிர்த்து நிற்கின்றன. அதன் சக்தி, நம்முடைய புரிதலுக்கும், கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்ப்பட்ட விதத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டதுபோல இருக்கிறது. இன்று நாமும் பல்வேறு திசைகளிலிருந்து வரும் பல விதமான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகிறோம். பொருளாதார அழுத்தங்கள், அரசியல் நெருக்கடிகள், சமுதாய அழுத்தங்கள் என பல விதமான அழுத்தங்கள். நம்முடைய மனதின் சிந்தையை தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ளும்படி, எண்ணற்ற கொள்கைகளும், கோட்பாடுகளும், சித்தாத்தங்களும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. எதிரி தேசங்களுக்கிடையே காணப்படும் பதற்றம் எப்பொழுதும் தணிக்கப்படுவதில்லை, யுத்தத்தில்தான் முடிகின்றன. எண்ணெய் உற்பத்தி செய்யும் தேசங்கள் கூட்டாகச் செயல்படுகின்றன. ஐரோப்பிய பொருளாதார யூனியன் இருக்கிறது. சோவியத் கூட்டமைப்பு இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகள் இருக்கின்றன. கம்யூனிச சீனாவின் தாக்கத்தைக் கணிக்க முடியாது. இதற்கெல்லாம் மையமாக, நடுவில், இஸ்ரேல் எனும் பிரச்சனையும் இருக்கிறது. இஸ்ரேலைச் சுற்றி எண்ணற்ற அரபு தேசங்கள் சூழ்ந்து கொண்டு, தொடர்ந்து அதை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் பகைவிரோதம், சமாதானத்திற்கான நம்பிக்கையை அற்றுப் போகச் செய்து விட்டது. கடந்த 30 வருடங்களில், ஏற்கனவே அந்தப் பிரச்சனை நான்கு முறை யுத்தமாக வெடித்தது. ஒரே இரவில் ஐந்தாவது முறையும் அது வெடிக்கக்கூடும். மத்திய கிழக்குப் பகுதியில் ஒவ்வொரு முறையும் அப்படிப்பட்ட யுத்தம் வெடித்தபோது, அது மூன்றாம் உலகப் போரா என்று சொல்லுமளவிற்குச் சென்றது. நியுக்ளியர் அணு ஆயுதங்களைக் கொண்டு அந்த யுத்தம் செய்யப்பட்டது. அது உண்டாக்கின பேரழிவை கணக்கிடவே முடியாது.

“சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறிச் சென்று விட்டதா? இந்தக் குழப்பத்திற்கு ஒருவராலும் தீர்வு காண முடியாதா? அல்லது தேவன் வேறு எங்கோ கிரியை செய்து கொண்டிருக்கிறாரா? அவரிடம் பெரிய திட்டம் ஏதாவது இருக்கிறதா? அவர் தம்முடைய அழிவில்லாத ஞானம் மற்றும் வல்லமையைக் கொண்டு கிரியை செய்து கொண்டிருக்கிறாரா?” என்ற கேள்விகளெல்லாம் உங்களுக்குள் எழும்பலாம். நான் என்ன நிச்சயமாக நம்புகிறேனோ, அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இன்று நம்முடைய உலகத்தில் காணப்படும் சூழ்நிலையில் தேவன் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்று நான் உறுதியாக விசுவாசிக்கிறேன். அவரிடம் ஒரு முக்கியமான, பெரிய செயல் திட்டம் இருக்கிறது என்றும் நான் விசுவாசிக்கிறேன். வரலாறு தன் ஓட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே, அவர் அதை தன் மனதில் நிலைநிறுத்தியிருந்தார். தேவன் நிச்சயமாய் தம்முடைய திட்டத்தை வெற்றிகரமாய், முழுமையாய் நிறைவேற்றி முடிப்பார் என்று நான் உறுதியாய் விசுவாசிக்கிறேன்.

வெளிப்படையாகச் சொல்கிறேன், நான் அதை விசுவாசிக்கவில்லை என்றால், நான் மனச்சோர்வுக்குள்ளாகியிருப்பேன். இருதயம் கலங்கின நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பேன்.

நான் விசுவாசிக்கிறபடி, தேவனுடைய முக்கியமான திட்டம் என்ன என்பதை உங்களிடம் எளிமையாகப் பகிர்ந்து கொள்கிறேன். தேவனுடைய திட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் முதலில், அவர் எவ்வாறு சூழ்நிலைகளை மதிப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய முன்னுரிமைகள் எங்கே இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும். தேவனைப் பொறுத்தவரை, ஜனங்கள்தான் மிகவும் முக்கியமானவர்களாய் இருக்கிறார்கள். இதைப் பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.

ஒரு ஆத்துமா, ஒரு மனுஷனுடைய ஆத்துமா இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மற்ற காரியங்களின் மதிப்பைக் காட்டிலும் அதிகமானது என்று இயேசு தம் போதனையில் நமக்குச் சொல்லியிருக்கிறார். நான் இந்த மதிப்பீட்டை ஏற்றுக் கொள்கிறேன். இது தேவனுடைய மதிப்பீடு. இது சரியென்றுதான் நான் நினைக்கிறேன். இதோடு நான் ஒத்துப் போகிறேன்.

இந்த மதிப்பீட்டை, இன்று நம் உலகத்தில் வாழும் ஒவ்வொரு தனி நபருக்கும் பொருத்திப் பார்க்கக் கூடாது. இதை தேவனுடைய ஜனங்களுக்கு ஒட்டுமொத்தமாக பொருத்திப் பார்க்க வேண்டும். தேவனிடத்தில் தங்களை அர்ப்பணித்திருக்கிற ஜனங்களை ஒட்டுமொத்தமாக தேவஜனங்கள் என்று சொல்லலாம். இந்த உலகத்தில், அவர்கள் அவருடைய பங்காக இருக்கிறார்கள்.

உபாகமம் 32:9 சொல்கிறது:

9 “கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு."

இன்றைய உலகச் சூழ்நிலையில், தேவனுடைய ஜனங்கள்தான் மெய்யாகவே அவருக்குச் சொந்தமானவர்களாய் இருக்கிறார்கள். தேவனிடத்தில் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கு தேவனும் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். தேவனுடைய அர்ப்பணிப்பின் அடிப்படை எப்பொழுதுமே மாறாததாய் இருக்கிறது. அது ஒரு உடன்படிக்கை. அவரோடு ஒரு உடன்படிக்கையில் நுழைவதன் மூலமாக நாம் தேவனுடைய ஜனங்களாகின்றோம். தேவன் அந்த உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதில் அவர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தினவுடனே, “நான் ஏற்படுத்தின இந்த உடன்படிக்கையை நான் ஒருபோதும் மீற மாட்டேன், முறிக்க மாட்டேன்,” என்று தேவனே அழுத்தந்திருத்தமாக அறிவிக்கின்றார். அதன்படி நடப்பதில், அவர் தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.

பழைய உடன்படிக்கையின் கீழ், தேவன் இஸ்ரவேலுக்குத் தந்த சில வாக்குத்தத்தங்களை நாம் பார்ப்போம். காரணம், இந்தக் கோட்பாடு இன்றைக்கும் பொருந்துகிறது. ஏசாயா 41:10-ல், தேவன் இஸ்ரவேலிடம் சொல்கிறார்:

10 “நீ பயப்படாதே. நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே. நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி, உனக்கு சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலக்கரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”

கொந்தளிப்பு, குழப்பம், பாதுகாப்பற்ற நிலைமையின் மத்தியில், இவ்வார்த்தைகள் நமக்கு எவ்வளவு ஆறுதலையும், ஆனந்தத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன என்று சிந்தித்துப் பாருங்கள். “நீ பயப்படாதே. நான் உன்னோடு கூட இருக்கிறேன். உன் எதிர்காலத்தைக் குறித்து கவலையோடு இருக்காதே,” என்ற சர்வவல்ல தேவனுடைய இந்த ஆறுதலான, தைரியப்படுத்துகிற வார்த்தைகளைக் கேட்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இங்கு தீர்வு மனுஷனிடம் இல்லை. தீர்வு, தேவனை நோக்கிப் பார்ப்பதில்தான் இருக்கிறது. தேவன் சொல்கிறார், “நான் உன் தேவன். நான் உன்னைப் பெலப்படுத்துவேன். நிச்சயமாய் நான் உனக்கு உதவி செய்வேன். நிச்சயமாய் நான் உன்னை என் நீதியின் வலது கரத்தினால் தாங்கி ஏந்துவேன்.” ஏசாயா 43:2-ல், தேவன் திரும்பவும் சொல்கிறார்:

2 “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது, நான் உன்னோடு இருப்பேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது, அவைகள் உன் மேல் புரளுவதில்லை. நீ அக்கினியில் நடக்கும்போது, வேகாதிருப்பாய். அக்கினி ஜீவாலை உன் பேரில் பற்றாது.”

சோதனையின் நேரங்களையும், அழுத்தங்களையும், கஷ்டங்களையும் நாம் ஒருபோதும் கடந்து செல்ல மாட்டோம் என்று தேவன் சொல்லவில்லை. நாம் தண்ணீர்களையும், ஆறுகளையும், அக்கினியையும் கடந்து செல்வோம். ஆனால் இவை எல்லாவற்றின் மத்தியிலும், தேவனுடைய பிரசன்னம் நம்மோடு இருக்கும் என்று அவர் நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். ஒன்றும் நம்மை சேதப்படுத்தாது, நமக்கென்று அவர் வைத்திருக்கிற நல்ல நோக்கங்களில் ஒன்றும் தோற்றுப் போகாது, நிறைவேறாமல் போகாது என்று அவர் வாக்குப் பண்ணியிருக்கிறார்.

தம்முடைய ஜனங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிற உச்சகட்ட திட்டம் எப்பொழுதுமே நன்மையானதாகத்தான் ல்இருக்கிறது. இஸ்ரவேலின் எடுத்துக்காட்டை நாம் திரும்பவும் பார்க்கலாம். எரேமியா 29:11-ல், தேவன் இதைச் சொல்கிறார்:

11 “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்கிறார். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.”

இது தேவனுடைய ஜனங்களுக்கு எப்பொழுதுமே பொருந்துகிறது. தேவனுடைய திட்டங்கள் அழிவுக்கேதுவானவை அல்ல. அவை நன்மைக்கும், சமாதானத்துக்கும் ஏதுவானவைகள். அவை நமக்கு நல்ல எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கின்றன. நாம் ஒருபோதும் நம்பிக்கையில்லாத நிலையில் வாழ மாட்டோம்.

இந்தக் காலகட்டத்தில் தேவன் தம்முடைய ஜனங்களுக்கென்று வைத்திருந்த நோக்கத்தை ஒரு முக்கியமான வார்த்தையில் தொகுத்துச் சொல்லலாம். அது “புதுப்பித்தல்” என்ற வார்த்தையாகும். எருசலேம் பட்டணத்தில், பேதுரு பேசுவதைக் கேட்கும்படி கூடியிருந்த யூத ஜனங்களிடம் அவன் என்ன சொன்னான் என்பதை கவனிப்போம். அப்போஸ்தலர் நடபடிகள் 3:19-21 வசனங்களை வாசிப்போம்.

19 ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், 20 உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும்பொருட்டு, நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். 21 உலகத்தோற்றம் முதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசி களெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீரும் காலங்கள் வருமளவும் (சகலத்தையும் தேவன் புதுப்பிக்கும் காலம் வருமளவும்) பரலோகம் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் (அவர் அதாவது இயேசு பரலோகத்திலேயே இருக்க வேண்டும்).

“சகலத்தையும் தேவன் திரும்பவும் மீட்டெடுக்கும் (புதுப்பிக்கும்) காலம்” என்ற முக்கியமான வார்த்தையைக் கவனியுங்கள். இது ஒரு மொழிபெயர்ப்பு. இன்னொரு தற்கால மொழிபெயர்ப்பு இதை இவ்வாறு சொல்கிறது: “எல்லாவற்றையும் திரும்பவும் மீட்டெடுக்கும் காலகட்டம்.” பாருங்கள், தேவனுடைய உச்சகட்ட நோக்கத்தில், எல்லாவற்றையும் திரும்பவும் புதுப்பித்தல் செய்து மீட்டெடுக்கிற ஒரு காலகட்டம் இருக்கிறது. எல்லாவற்றையும் புதுப்பிக்கிற இந்தக் காலகட்டம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மறுவருகையோடு நெருக்கமாக தொடர்பு கொண்டிருக்கிறது. “புதுப்பிக்கிற இந்தக் காலகட்டம் வரும்வரை”, அவர் பரலோகத்தில் இருந்தாக வேண்டும்,” என்று இது சொல்கிறது. ஆக, புதுப்பிக்கிற காலகட்டம் வரும்போது, அது கர்த்தராகிய இயேசு திரும்பி வரும் நேரம் என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

கர்த்தர் திரும்பி வரும் அந்த நாளையோ அல்லது அந்த மணி நேரத்தையோ நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதையும் இப்பொழுது நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ரொம்பவும் முக்கியம். பிதாவைத் தவிர வேறு ஒருவரும் இதை அறியார்கள், இயேசுவும் கூட இதை அறியார் என்று வேதவசனம் சொல்கிறது. ஆனால் நாம் காலங்களையும், நேரங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் வேதவசனம் நமக்குச் சொல்கிறது. ஆகையால் நாம் நாளையும், நேரத்தையும் குறித்துப் பேசவில்லை. மாறாக, நாம் காலங்களையும், நேரங்களையும் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இளைப்பாறுதலின் காலங்கள், பிறகு சகலத்தையும் திரும்பவும் தேவன் மீட்டெடுக்கிற நேரம்.

அப்போஸ்தலர் நடபடிகள் 3-ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட அந்த வசனங்களை நாம் பார்ப்போம் என்றால், இந்தக் காலகட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும்படி தேவன் வைத்திருக்கிற திட்டத்தைச் சுருக்கமாக நாம் இதில் பார்க்க முடியும். அதை நான்கு வார்த்தைகளில் தொகுத்துச் சொல்லலாம். எதேச்சையாக, ஆங்கில மொழியில், இவ்வார்த்தைகள் ஒவ்வொன்றும் “r-e” என்ற வார்த்தைகளில் ஆரம்பிக்கின்றன. அந்த நான்கு வார்த்தைகள்: மனந்திரும்புதல் (repentance), இளைப்பறுதல் (refreshing), புதுப்பித்தல் (restoration), மறுவருகை (return). மறுவருகை என்பது கர்த்தராகிய இயேசுவின் மறுவருகையாகும். நான் திரும்பவும் அந்த நான்கு வார்த்தைகளைச் சொல்கிறேன்: மனந்திரும்புதல் (repentance), இளைப்பறுதல் (refreshing), புதுப்பித்தல் (restoration), மறுவருகை (return).

முதல் படி, மனந்திரும்புதலாகும். இதில் பொறுப்பு, தேவனுடைய ஜனங்களாகிய நம் மீது வைக்கப்பட்டிருக்கிறது. மனந்திரும்பும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனந்திரும்பும்போது, தேவன் புத்துணர்ச்சியூட்டும் இளைப்பாறுதலின் காலத்தை அனுப்புகிறார். இளைப்பாறுதலின் காலத்திலிருந்து, அவர் தம்முடைய நோக்கத்தின் நிறைவாகிய புதுப்பித்தலின் காலத்திற்குள் நம்மை நடத்துகிறார். புதுப்பித்தலின் நோக்கம் நிறைவேறும்போது, அங்கே தற்பொழுதைய காலகட்டத்தின் உச்சகட்டம் அரங்கேறுகிறது. அது கர்த்தராகிய இயேசுவின் மறுவருகையாகும்.

தேவனுடைய திட்டம் செயல்பட வேண்டும் என்றால், அதற்கு முதலில் நாம் ஒன்றைச் செய்ய வேண்டும். இதைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இங்கே நமக்கு ஒரு எடுத்துக்காட்டு இருக்கிறது. தேவனுடைய முன்னறிவிற்கும், ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி நமக்கிருக்கும் உரிமைக்கும் இடையே நுணுக்கமான சமநிலை இருக்கிறது. பல வேத வசனங்கள் இதைச் சொன்னாலும், இது ஒரு எடுத்துக்காட்டு. இது நடக்கப் போகிறது என்று தேவன் சொல்கிறார். பிறகு அவர் தொடர்ந்து சொல்கிறார், “ஆனால் அது நடக்க வேண்டுமென்றால், நீங்களும் ஒன்றைச் செய்தாக வேண்டும்.” ஆக, அது நடக்கும் என்று தேவன் அறிவித்திருந்தாலும், அது நம்முடைய பொறுப்பிலிருந்து நம்மை விடுவித்து விடுவதில்லை.

தேவனுடைய கடைசி கால திட்டம் செயல்பட ஆரம்பிக்க வேண்டுமென்றால், அதற்கு நம்முடைய பொறுப்பு என்ன? நாம் மனந்திரும்ப வேண்டும் என்பதுதான் அது.

மனந்திரும்புதல் என்றால் என்ன என்பதை நான் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். மனந்திரும்புதலை பலர் புரிந்து கொள்வதில்லை. அது ஒரு உணர்ச்சி அல்ல. அது ஒரு தீர்மானம். நம்முடைய தனி வழியிலிருந்து திரும்பும்படி, நம்முடைய காரியங்களையே திட்டமிட்டு செய்து கொண்டிருக்கும் வாழ்க்கைமுறையை நிறுத்தும்படி, நமக்கென்று ஒரு தனி அளவுகோலை வரையறுப்பதை நிறுத்தும்படி எடுக்கின்ற ஒரு தீர்மானமாகும். இது தேவனிடம் திரும்பும்படி எடுக்கின்ற ஒரு தீர்மானமாகும். தேவனிடம் நம்மை அர்ப்பணிக்கும்படி எடுக்கின்ற ஒரு தீர்மானமாகும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் நமக்குச் சொல்லும்படி, நாம் அவருக்கு செவி கொடுக்கும்படி எடுக்கின்ற ஒரு தீர்மானமாகும். இக்காலகட்டத்தின் முடிவில் நிகழப் போகிற தேவனுடைய திட்டத்தில் நாம் பங்கெடுப்பதற்கான முக்கியமான ஒரு திறவுகோல் இதுதான்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை தேவன் தம்முடைய ஜனங்களுக்காக வைத்திருக்கிற புதுப்பித்தலின் திட்டத்தை இன்னும் முழுமையாக உங்களுக்குத் தொடர்ந்து விளக்கப் போகிறேன்.

லைக்
பகிரவும்