மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. எவ்வாறு ஜெபித்து, நீங்கள் ஜெபித்த அந்தக் காரியத்தையே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து, இவ்வாரத்தின் செய்திகளில் நா0ம் கற்றுக் கொண்டு வருகின்றோம். ஜெபத்தில் தேவனை சரியான விதத்தில் அணுகுவதற்கான நிபந்தனைகளைக் குறித்து இப்பொழுது பார்த்துக் கொண்டு வருகின்றோம். ஜெபத்தில் தேவனை அணுகுவதற்கான நிபந்தனைகளில் இரண்டு நிபந்தனைகளை நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்.

முதல் நிபந்தனை, நம்முடைய சுய சித்தத்தை மறுப்பதாகும். நம்முடைய சுய சித்தத்தை நாம் உறுதியாய் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு வரைக்கும், தேவனுடைய சித்தத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. தேவனுடைய சித்தம், நம்மைக் குறித்து நாமே கற்பனை செய்வதற்கும், நினைப்பதற்கும் மிகவும் அதிகமானதாய், மிகவும் சிறந்ததாய், உயரியதாய் இருக்கிறது.

இரண்டாவது நிபந்தனை, நாம் தேவனை விசுவாசத்தோடு அணுக வேண்டும். இது விசுவாச போதனைகளையோ அல்லது இறையியல் அறிவையோ குறித்ததல்ல. மாறாக, தேவனுடைய உண்மையின் மீதும், அவருடைய குணாதிசியத்தின் மீதும், அவருடைய நம்பகத்தன்மையின் மீது வைக்கும் விசுவாசமாயிருக்கிறது.

இன்றைக்கு மூன்றாவது நிபந்தனையைக் குறித்து பேசப் போகிறேன். இயேசுவின் நாமத்தில் நாம் ஜெபிக்க வேண்டும் என்பதுதான் அது. இப்பொழுது நாம் புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்ட சில வேதவசனங்களைப் பார்க்கலாம். இது இவ்வசனங்களில் மிகவும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. யோவான் 14:13-14 வசனங்களில் இயேசு இவ்வாறு சொல்கிறார்:

13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன். 14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.

திரும்பவும், யோவான் 16:23-24 வசனங்களில் இது எழுதப்பட்டிருக்கிறது. நாம் வாசிப்போம்:

23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்க மாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வது எதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். 24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்.

இந்த வசனங்களில், “என் நாமத்தினால்” என்ற வார்த்தை நான்கு முறை வருகின்றது. அதில் மூன்று முறை, இயேசுவின் நாமத்தில், தேவனிடத்தில் ஜெபிப்பதைக் குறித்துப் பேசுகிறது. ஆனால் நான்காவது முறை, இயேசுவின் நாமத்தில் நாம் கேட்டதை தேவன் நமக்குத் தருவார் என்று அது சொல்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், தேவனோடு நமக்கிருக்கும் உறவு, இரண்டு வழிகளிலும், இயேசுவின் நாமத்தில் உண்டாயிருக்கிறது என்று சொல்லலாம். அதாவது, நாம் தேவனிடம் ஜெபிக்கும்போதும், தேவன் நமக்குக் கொடுக்கும்போதும் என்று அதைச் சொல்லலாம். இயேசுவின் நாமத்தில் நாம் ஜெபிக்கும்போது, அது குறிப்பாக எதைச் சுட்டிக் காண்பிக்கிறது? இயேசுவின் நாமத்தில் நாம் தேவனிடம் வரும்போது, அது சுட்டிக் காண்பிக்கிற மூன்று முக்கியமான காரியங்களை நான் இங்கே சொல்கிறேன்.

முதல் காரியம், இயேசு நமக்காக என்ன செய்து முடித்திருக்கிறாரோ, அதன் அடிப்படையில் நாம் தேவனிடம் வருகின்றோம். நான் அதைத் திரும்பவும் சொல்கிறேன். இயேசு நமக்காக என்ன செய்து முடித்திருக்கிறாரோ, அதன் அடிப்படையில்தான் நாம் தேவனிடம் வருகின்றோம். இயேசுவின் நாமத்தில் நாம் ஜெபிக்கும்போது, அதுதான் நம் ஜெபத்தின் பின்னணியில் இருக்கிறது. பாவத்திற்கான தண்டனையை, நமக்காக இயேசு ஏற்றுக் கொண்டார். அவர் நம்முடைய இடத்தில் மரித்தார். அவர் நம்முடைய குற்ற உணர்வையும், ஆக்கினைத்தீர்ப்பையும் தன் மேல் ஏற்றுக் கொண்டார். எவ்வித குற்ற உணர்வும், நிந்தை அவமானமும் இல்லாமல் தேவனிடம் வரும்படி, அவர் நமக்காக வழியை திறந்து விட்டிருக்கிறார்.

அதைத்தான் 1 பேதுரு 3:18 சொல்கிறது:

18 ஏனெனில் கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி, அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக, நீதியுள்ளவராய் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

நம்முடைய பாவங்களை சுமந்தவராய், நம்முடைய இடத்தில், சிலுவையில் அவர் மரித்ததற்கான நோக்கம், அவர் நம்மை தேவனிடத்தில் கொண்டு வருவதே ஆகும். தேவனிடத்தில் செல்வதற்கு சரியான வழி நமக்கு உண்டாகும்படியாகவே அவர் சிலுவையில் மரித்தார்.

திரும்பவும், எபேசியர் 2:13-ல் பவுல் இதைச் சொல்லியிருக்கிறார்:

13 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.

கிறிஸ்துவின் இரத்தம், நம்முடைய சார்பில் இயேசு தம்மையே கிருபாதார பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதற்கு, நம் கண்களால் பார்க்கக்கூடிய, நித்திய ஆதாரமாயிருக்கிறது. ஆகையால் இயேசுவின் நாமத்தில் நாம் வரும்போது, நம் சார்பில் அவர் சிந்தின இரத்தத்தினால் உண்டான தகுதியின் அடிப்படையில் நாம் வருகின்றோம்.

எபிரெயர் 12:24-ம் வசனம், பரலோகத்தில் நடக்கின்ற காரியங்களைக் குறித்துப் பேசுகிறது:

24 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப் பார்க்கிலும், நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.

பழைய ஏற்பாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் ஒரு அழகான ஒப்பீடு இங்கு செய்யப்பட்டிருக்கிறது. காயீன், ஆபேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? காயீன் தன் சகோதரனாகிய ஆபேலைக் கொன்று போட்டான். அப்பொழுது தேவன் காயீனிடம், “நீ என்ன காரியத்தைச் செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு காயீன் தன் மீது இரக்கம் காண்பிக்கும்படி தேவனிடம் மன்றாடினான். தேவன் சொன்னார், “நியாயத்திற்காகவும், பழி வாங்கும்படியாகவும் உன்னுடைய சகோதரனுடைய இரத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கி கதறிக் கொண்டிருக்கிறது.”

ஆனால் இங்கே எபிரெய நிருப ஆசிரியர் என்ன சொல்கிறார்? பரலோகத்தில் தெளிக்கப்பட்டிருக்கிற இயேசுவின் இரத்தம், இப்பொழுது நமக்கு ஆதரவாக, நமக்காகப் பேசிக் கொண்டிருக்கிறது. ஆபேலின் இரத்தம் பேசினதைக் காட்டிலும் நன்மையானவைகளை இயேசுவின் இரத்தம் பேசிக் கொண்டிருக்கிறது. அதைத்தான் எபிரெய நிருப ஆசிரியர் இங்கு எழுதியிருக்கிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், இயேசுவின் இரத்தம், ஒப்புரவாகுதலைக் குறித்தும், இரக்கம், மன்னிப்பு மற்றும் கிருபாதார பலியைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். சில நேரங்களில், பயங்கரமான அழுத்தங்களின் கீழ் நான் இருக்கும்போது, ஜெபிப்பதே எனக்குக் கடினமாக இருக்கும். அந்த நேரத்தில், இந்த வேதவசனம்தான் மிகப் பெரிய ஆறுதலாக எனக்கு இருக்கிறது. ஜெபத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை என்றாலும், பரலோகத்தில் இயேசுவின் இரத்தம் எனக்காகப் பேசிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதே எனக்கு மிகப் பெரிய ஆறுதல்தான். இயேசுவின் நாமத்தில் நான் வரும்போது, இந்த நன்மையும் அதில் உள்ளடங்கியிருக்கிறது.

இயேசுவின் நாமத்தில் வரும்போது, நமக்கு உண்டாயிருக்கிற இரண்டாவது தகுதி, இயேசுதாமே யாராயிருக்கிறார் என்ற அந்த அடிப்படையில் நாம் வருகின்றோம். எபிரெயர் 10:19-22 வரையுள்ள வசனங்களில் என்ன எழுதியிருக்கிறது என்று கவனிப்போம்:

ஆகையால் சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு…………அவருடைய (இயேசுகிறிஸ்துவினுடைய) இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிற படியினாலும், தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மகா ஆசாரியர் (இயேசுகிறிஸ்து) நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், உண்மையுள்ள இருதயத்தோடும், விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

நம்முடைய பிரதான ஆசாரியராகிய இயேசுவோடுதான் நாம் வருகின்றோம். திரும்பவும் இதே காரியத்தை, 1 யோவான் 2:1-ல் யோவான் எழுதியிருக்கிறார்:

1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவம் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

“பரிந்து பேசுகிறவர்” என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் “அட்வகேட் (advocate)” என்று வருகின்றது. அட்வகேட் என்றால், நமக்கு உதவி செய்யும்படி, நமக்காக நம்முடைய வழக்கை பரிந்து பேசி மன்றாடும்படி, நம் கூடவே இருக்கிறவர் என்று அர்த்தம். ஆகையால் இயேசுவின் நாமத்தில் நாம் வரும்போது, இயேசுவே நம்முடைய பிரதான ஆசாரியர், நம்முடைய அட்வகேட் என்ற நிலையில் நாம் வருகின்றோம். நம்முடைய பிரதான ஆசாரியராய், அவர் நம்முடைய ஜெபங்களை நம் சார்பில் தேவனிடம் ஏறெடுக்கிறார். இயேசுவால் நம்முடைய ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகிறபடியால், அவை நிச்சயம் தேவனைச் சென்றடையும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். நம்முடைய அட்வகேட்டாய், அவர் நமக்காக தேவனிடம் பரிந்து பேசி மன்றாடுகிறார். நம்முடைய வழக்கிற்காக நாம் மன்றாடுவதைக் காட்டிலும், மேலான விதத்தில் அவர் அங்கே தேவனிடம் மன்றாடுகிறார்.

ஆகையால், இயேசுவின் நாமத்தில் நாம் வரும்போது, இயேசு நமக்கு யாராய் இருக்கிறார் என்ற அடிப்படையில்தான் நாம் வருகின்றோம் என்று அர்த்தம். நாம் யார், நாம் என்னவாய் இருக்கிறோம் என்ற அடிப்படையில் அல்ல. மாறாக, அவர் யார் என்ற அடிப்படையில்தான் நாம் வருகின்றோம். முதலில், அவர் நம்முடைய ஆசாரியராய் இருந்து, நம்முடைய ஜெபங்களை தேவனிடம் ஏறெடுக்கின்றார். இரண்டாவதாக, அவர் ஒரு அட்வகேட்டாக இருந்து, தேவனிடம் நேரடியாக, நமக்காக, நம் சார்பில் பேசுகிறார். நாம் தவறுகள் செய்யும்போது, பாவம் செய்தால்கூட, நாம் தேவனிடமிருந்து விலகியிருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் அதைக் குறித்து, கூனிக் குறுகிப் போக வேண்டிய அவசியமுமில்லை. நாம் விடுதலையானவர்களாய் தேவனிடம் வர முடியும். காரணம், இயேசுவே நம்முடைய அட்வகேட்டாக இருக்கிறார். அவர் நம் சார்பில் தேவனிடம் பரிந்து பேசி, வழக்காடி, மன்றாடுகிறவராக இருக்கிறார்.

இயேசுவின் நாமத்தில் வரும்போது உண்டாகிற மூன்றாவது நன்மையைக் குறித்து பார்ப்போம். அது இயேசுவின் மூலம் தேவனோடு நமக்கு உண்டாயிருக்கிற உறவின் அடிப்படையில், நாம் தேவனிடம் வரும்படி செய்கிறது. எபேசியர் 1:3-6 வசனங்களில் பவுல் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம்:

3 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். 4 தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே, 5 பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, 6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய் தமக்கு சுவீகாரப் புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.

காலம் என்ற ஒன்று ஆரம்பிப்பதற்கு முன்னே அல்லது சிருஷ்டிப்பு நடப்பதற்கு முன்னே, தேவன் தம்முடைய இருதயத்திலும், மனதிலும் நித்தியமான ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்தார். தேவன் நம்மை முன்னறிந்திருந்தார். இயேசு கிறிஸ்துவின் மூலம், நம்மை தம்முடைய பிள்ளைகளாய், தம்முடைய குடும்பத்திற்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாயிருந்தார். மனுஷ வரலாற்றில், அதற்குரிய காலம் வந்தபோது, அது நிறைவேறியது. இயேசு வந்தார், நம் சார்பில், நமக்காக மரித்தார். ஆனால் இது முன் கூட்டியே தேவன் நினைத்திராத ஒன்று அல்ல. இது தேவனுடைய நித்திய நோக்கமாயிருந்தது. மனுஷ வரலாற்றில், இது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் மூலம், நம்மை தம்முடைய பிள்ளைகளாய் தம்மோடு சேர்த்துக் கொள்ளும்படி, தேவன் நம்மை முன் குறித்திருக்கிறார். இதுதான் தேவனுடைய நோக்கமாயிருந்தது. பிறகு இது சொல்கிறது: “தமக்குப் பிரியமான கிறிஸ்துவுக்குள் தேவன் இதை நமக்கு இலவச ஈவாகத் தந்திருக்கிறார். தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக தேவன் இதைச் செய்திருக்கிறார்.”

கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில், எபேசியர் 1:6-ம் வசனம் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது:

6 தேவன் தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தமக்குப் பிரியமானவராகிய கிறிஸ்துவுக்குள் நம்மை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

“பிரியமானவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நம்மை ஏற்றுக் கொண்டிருக்கிறார் (Accepted in the Beloved)” என்ற வார்த்தைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம். அதாவது, பிரியமான இயேசுகிறிஸ்துவுக்குள், நாம் தேவனிடம் வரும்போது, நாம் அவருடைய பிள்ளைகளாய் ஏற்றுக் கொள்ளப்படுகிறோம். நாம் யார் என்பதினால் நாம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மாறாக, இயேசு யார் என்பதினால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறோம். இன்றைய கலாச்சாரத்தில், உளவியல்ரீதியான, உணர்ச்சிப்பூர்வமான ஒரு பெரிய, முக்கியமான பிரச்சனை, மற்றவர்களால் நிராகரிக்கப்படுவதால் உண்டாகும் பிரச்சனையாகும். நிறைய பேர், மற்றவர்களுக்கு வேண்டாதவர்களாய், மற்றவர்களால் விரும்பப்படாதவர்களாய், நிராகரிக்கப்பட்ட உணர்வுடன் வாழ்கின்றனர். மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். இது ஒருவேளை, அவர்களுடைய பெற்றோர்களால் தவறாக நடத்தப்பட்டதன் நிமித்தம் உண்டான ஒரு விளைவாயிருக்கலாம். அல்லது ஒருவேளை, ஒரு திருமண உறவில், கணவன் அல்லது மனைவியின் தவறான மனநிலையினால் உண்டாகியிருக்கலாம். நிராகரிக்கப்படுவதால் உண்டாகும் காயத்தைக் காட்டிலும், வேறு பெரிய காயம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் அந்தக் காயத்தை ஆற்றுவதற்கான முதல் படி, நாம் இயேசுவுக்குள் தேவனிடம் வரும்போது, நாம் நிராகரிக்கப்படுவதில்லை என்பதுதான். தேவன் ஒருபோதும் தம்முடைய பிள்ளைகளை நிராகரிப்பதில்லை. நாம் பிரியமானவருக்குள் ஏற்றுக் கொள்ளப்படுகிறோம். இதுதான் தேவனிடம் நாம் வரும்போது, எல்லா வித்தியாசத்தையும் உண்டாக்குகிறது.

இந்த அடிப்படையில், இயேசுவின் மூலம், நாம் தேவனிடம் வரும்போது, நமக்குக் கிடைக்கக்கூடியதாய் பல ஆச்சரியமான காரியங்களை தேவன் வைத்திருக்கிறார். முதலில், ரோமர் 8:32-ஐ நாம் வாசிப்போம்:

32 தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

இது நம்மை ஆச்சரியப்படுத்தவில்லையா? அவரோடு கூட, அதாவது இயேசுவோடு கூட, தேவன் எல்லா நன்மைகளையும் நமக்கு இலவச ஈவுகளாகக் கொடுத்திருக்கிறார். ஆனால் இதெல்லாம் “அவரோடு கூட”, அதாவது “இயேசுவோடு கூட” என்பதைத்தான் சார்ந்திருக்கிறது. இயேசுவோடு கூட, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், எல்லா நன்மைகளையும் பெறுவதற்கு உரிமையை உடையவர்களாயிருக்கிறோம். ஆனால் அவர் இல்லாமல், நமக்கு எந்த உரிமையும் இல்லை.

பிறகு எபேசியரில், இல்லை, இல்லை, பிலிப்பியர் 4:19-ல் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது:

19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி, உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

“உங்கள் குறைவையெல்லாம் (தேவைகளையெல்லாம்) நிறைவாக்குவார்” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். அதாவது உங்களுடைய எந்த ஒரு தேவையும் சந்திக்கப்படாமல் போவதில்லை. உங்களுடைய எல்லா தேவைகளும் நிச்சயமாய் சந்திக்கப்படும். தேவனுடைய மகிமையின் ஐசுவரியத்திலிருந்து அவை சந்திக்கப்படும். தம்முடைய பிள்ளைகள் எல்லோருடைய எல்லா தேவைகளையும் சந்திப்பதற்கு தேவன் போதுமென்பதற்கும் அதிகமானவராக இருக்கிறார், ஐசுவரியமுள்ளவராக இருக்கிறார். அதினால் அவர் ஒன்றையும் இழக்கப் போவதில்லை என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் இந்தத் தேவைகளெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள்தான் சந்திக்கப்படும். எனவே தேவன் என் தேவைகளை சந்திப்பார் என்று கிறிஸ்து இயேசுவுக்கு வெளியே நாம் உரிமை பாராட்ட முடியாது.

கடைசியாக, 2 கொரிந்தியர் 1:20-ம் வசனத்திற்குச் செல்வோம். நாம் அதை வாசிப்போம்:

20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத் தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.

தேவன் எவ்வளவு நிறைய வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருந்தாலும், அவையெல்லாம் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கின்றன. வேதாகமத்தில் கிட்டத்தட்ட 8000 வாக்குத்தத்தங்களை தேவன் கொடுத்திருக்கிறார் என்று ஒருவர் கணக்கிட்டிருக்கிறார். தேவனுடைய வாக்குத்தத்தங்களை கணக்கிட முடியாத ஒரு நிலை இருந்தாலும், அவையெல்லாம் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன. தேவன் தாம் கொடுத்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் கிறிஸ்துவுக்குள் நிறைவேற்றுவதற்கு தம்மை அர்ப்பணித்திருக்கிறார்.

ஆகையால் இந்த வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் நாம் தேவனிடம் வந்து, வாக்குத்தத்தை சுதந்தரிக்கும்போது, தேவன் அதற்கு “ஆம்” என்று சொல்கிறார். நாம் “ஆமென்” என்று தேவனிடம் திரும்பச் சொல்கிறோம். அது கிறிஸ்துவுக்குள் இருக்கிறபடியால், தேவன் “ஆம்” என்று சொல்கிறார். நாம் “ஆமென்” என்று சொல்கிறோம். அங்கேயே அது முடிந்து விடுகிறது. அவ்வளவுதான்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். ஜெபத்தில் தேவனை அணுகுவதற்கான அடுத்த முக்கியமான நிபந்தனையை நாளை எடுத்துக் காண்பிப்பேன்.

லைக்
பகிரவும்