பொதுவான செழிப்பு

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
டெரெக் பிரின்ஸின் 'தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தில் நடத்தல்' என்ற இந்தப் பகுதியில், வாழ்க்கையை மாற்றும் ஆழமான உண்மைகளைக் கண்டறியுங்கள். யோசுவாவைப் போலவே, இயேசு நம்மை வாக்குத்தத்தங்கள் நிறைந்த தேசத்திற்குள் வழிநடத்தி, நமது சுதந்தரத்தைச் சுதந்தரிக்கச் செய்வதை அறிந்து கொள்ளுங்கள். செழிப்பு மற்றும் சுகமளித்தல் குறித்த தெளிவைப் பெற்று, தேவனுடைய வார்த்தை எவ்வாறு ஒரு நிறைவான வாழ்விற்கு வழிநடத்துகிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
Transcript
ஒரு புதிய வாரத்தின் தொடக்கத்தில் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. எனது வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்திய உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.
முதலில், எனக்கு கடிதம் எழுதியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியைத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக, “தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தின் வழியாக நடப்பது” என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்த வாரம் முழுவதும் இதே தலைப்பில் தொடரப்போகிறேன்.
பழைய ஏற்பாட்டில் யோசுவா என்ற தலைவரின் கீழ், தேவன் தம் மக்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு வந்தார்; ஆனால் புதிய ஏற்பாட்டில், இயேசு என்ற தலைவரின் கீழ், தேவன் தம் மக்களை வாக்குத்தத்தங்களின் தேசத்திற்கு கொண்டு வருகிறார். எனவே, பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம்; புதிய ஏற்பாட்டில் வாக்குத்தத்தங்களின் தேசம். பழைய ஏற்பாட்டில் தேவன் யோசுவாவுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை உடைமையாக்க ஒரு குறிப்பிட்ட வழியைக் கொடுத்தார். அது படிப்படியாக, அடுத்தடுத்த நிலையாக, பகுதி பகுதியாக இருந்தது. இது யோசுவா 1:3 இல், சுருக்கப்பட்டுள்ளது, அங்கு தேவன் சொல்கிறார்:
3 நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
புதிய ஏற்பாட்டில் நமக்கும் அப்படித்தான். நாம் நமது சுதந்தரத்துக்குள் நுழையும் விதம் சரியாக அதேபோல உள்ளது. இது வாக்குத்தத்தம் வாக்குத்தத்தமாக, நிலை நிலையாக, பகுதி பகுதியாக இருக்கிறது. தேவனின் ஒவ்வொரு புதிய வாக்குத்தத்தத்தின் மீதும் நாம் கால் வைக்கும்போது, அந்த அளவுக்கு அதிகமான நம்முடைய சுதந்தரத்தை வைத்திருக்கிறோம்.
இந்த வாரம், எனது பேச்சுகளில், நமது சுதந்தரத்தின் இரண்டு முக்கிய பகுதிகளான, செழிப்பு மற்றும் குணமாக்குதல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப் போகிறேன். முந்தைய பேச்சுகளில், யோசுவா 1:8 இல், தேவன் யோசுவாவுக்குக் கொடுத்த செழிப்பு மற்றும் வெற்றியின் விரிவான வாக்குத்தத்தத்தை நாம் ஏற்கனவே பார்த்தோம்:
8 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.
அந்த வாக்குத்தத்தத்தை கவனியுங்கள், “நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.” யோசுவா நிறைவேற்ற வேண்டிய மூன்று அடிப்படை நிபந்தனைகளை பின்வருமாறு தொகுத்துள்ளோம்: முதலில், தேவனுடைய வார்த்தையை சிந்தியுங்கள்; இரண்டாவதாக, தேவனுடைய வார்த்தையைப் பேசுங்கள்; மூன்றாவதாக, தேவனுடைய வார்த்தையை செயல்படுத்துங்கள். நிச்சயமாக யோசுவா 1:8 இல் கொடுக்கப்பட்டுள்ள அந்த வாக்குத்தத்தம் வேறு எந்த வாக்குத்தத்தத்தைப் போல நேர்மறையாகவும் முழுமையாகவும் இருக்கிறது. இருப்பினும், இது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று நாம் செழிப்புக்கான வாக்குத்தத்தத்தைப் பார்க்கப் போகிறோம், இது முற்றிலும் பொதுவானது, மேலும், அதன் பயன்பாட்டில் அனைத்தையும் உள்ளடக்கியது. தெளிவாகக் கூறப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் எவரும், எங்கும், எந்த நேரத்திலும் அதை உரிமைக் கோரலாம். நான் அதை மீண்டும் சொல்கிறேன். இன்று நாம் பார்க்கப்போகும் வாக்குத்தத்தம் முற்றிலும் பொதுவானது, மேலும் அனைத்தையும் உள்ளடக்குகின்ற ஒன்றாகும். கூறப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் எவரும், எங்கும், எந்த நேரத்திலும் அதை உரிமைக் கோரலாம்.
நாம் இப்போது சங்கீதத்தின் ஆரம்ப வசனங்களுக்குத் திரும்பப் போகிறோம். சங்கீதம் 1:1-3. சாராம்சத்தில், சங்கீத புத்தகம், தேவனுடன், அவரை அறிந்து, அவருடைய வழியில் நடப்பதுடனும் தொடர்புடையதாக இருக்கிறது, மேலும், ஆசீர்வதிக்கப்பட்டதற்காக, தேவனுக்கு துதியும் நன்றியும் செலுத்தும் ஒரு புத்தகமாக இருக்கிறது. இந்த ஆசீர்வாதமானது சங்கீதப் புத்தகத்தின் தொடக்கத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சங்கீதம் 1:1-3:
1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 3 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
வாக்குத்தத்தங்களை இப்போது பார்க்கலாம். அவை உண்மையில் நான்கு பகுதிகளாக உள்ளன. முதலாவது: நிபந்தனைகளை நிறைவேற்றும் மனிதன், நீரோடைகளில் உறுதியாக நடப்பட்ட மரம் போல் இருப்பான். “உறுதியாக நடப்பட்டது” என்பது காற்றினால் அல்லது புயல்களால் அசைக்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாத அளவுக்கு மண்ணுக்குள் ஆழமாகச் செல்லும் ஒரு மரத்தைக் குறிக்கிறது. எனவே, நம்மிடம் இருக்கும் முதல் காட்சி அல்லது காட்சியின் முதல் பகுதி வல்லமையான, உறுதியான, அசைக்க முடியாத ஒரு மனிதனைப் பற்றியது. அவர் துன்பம் அல்லது சாதகமற்ற சூழ்நிலைகளால் அசைக்கப்படவில்லை. அவருடைய வேர்கள் மிகவும் ஆழமாக இருப்பதால், அத்தகைய விஷயங்கள் அவரை அசைக்கவோ, அவரைத் தூக்கி எறிந்துவிடவோ முடியவில்லை.
பின்னர், அவரது வேர்கள் நீரோடைகள் வழியாகச் செல்கின்றன என்றும் கூறப்படுகிறது, அதனால் அவரது வேர்களுக்கு எப்போதும் தண்ணீர் கிடைக்கும், அது நிச்சயமாக, வேர்கள் வழியாக மரத்துக்குள் கடத்தப்பட்டு, முழு மரத்திற்கும் உயிரையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. அவர் தற்காலிக மழையையோ அல்லது தற்காலிக மழைக் குறைவையோ சார்ந்திருப்பவர் அல்ல, ஆனால் அவர் தொடர்ந்து ஒரே இடத்தில் இருக்கிறார், மேலும், தொடர்ந்து ஓடும் நீரோடைகளுடன் உறவில் இருக்கிறார். அதனால், தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு மாறாத இந்த நீரோடைகளில் இருந்து அவர் நீரைப் பெறுகிறார்.
காட்சியின் இரண்டாம் பகுதி என்னவென்றால், அவர் அந்த பருவத்தில் தனது பலனைத் தருகிறார், அவர் கனித் தரும் நபராக இருக்கிறார். மேலும், தேவன் நம் அனைவரின் வாழ்விலும் கனிகளை எதிர்பார்க்கிறார். புதிய ஏற்பாட்டில் இவ்வாறு கூறுகிறார், “நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.” நல்ல கனியைத் தருவது, தேவனின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, தேவனின் தயவையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிப்பதன் ரகசியம் இங்கே உள்ளது.
மூன்றாவதாக, அவனுடைய இலைகள் உதிர்வதில்லை என்று கூறுகிறது. இலை என்பது ஒரு மரத்தின் பெரும்பகுதியை காண்பிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதன் செழுமையின் சித்திரத்தை முன்வைக்கிறான் என்பதை அந்த காட்சி சுட்டிக்காட்டுகிறது என்று நினைக்கிறேன். நீங்கள் அவரைப் பாருங்கள், அவர் செழித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறியலாம். அது அவரது கண்களில், அவரது வாகனத்தில், அவரது ஆடைகளில் எல்லாவற்றிலும் நன்றாகவே இருக்கிறது.
இறுதியாக, நாம் அதிகமாக வாழ விரும்பும் வாக்குத்தத்தம்: அவர் செய்வதெல்லாம் வாய்க்கும். அவர் எதைச் செய்தாலும் வெற்றியைப் பெறுகிறார். அவருக்கு தோல்வி தெரியாது, அவருக்கு ஏமாற்றம் தெரியாது. அவர் தேவனின் வார்த்தை மற்றும் அவரது நோக்கங்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறார், அவர் செய்யும் அனைத்தும் தேவனுடைய ஆசீர்வாதத்துடன் செல்கிறது. என்ன ஒரு அழகான காட்சி, என்ன ஒரு அழகான வாக்குத்தத்தம்.
வாக்குத்தத்தங்களைப் பார்த்தோம், இப்போது நிச்சயமாக, நாம் நிபந்தனைகளைப் பார்க்க வேண்டும். ஐந்து நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன: மூன்று எதிர்மறையானது மற்றும் இரண்டு நேர்மறையானது.
முதலில், எதிர்மறையான நிபந்தனைகளைப் பார்ப்போம். முதலாவதாக, அத்தகைய மனிதன் துன்மார்க்கரின் ஆலோசனையின் படி நடப்பதில்லை. அவர் தனது ஆலோசனையையும், உள்ளீடையும் தவறான ஆதாரத்திலிருந்து பெறுவதில்லை. “துன்மார்க்கரின் ஆலோசனையை” நாம் எப்படி வரையறுப்போம்? துன்மார்க்கரின் ஆலோசனையுடன் எளிதில் தொடர்புபடுத்தக் கூடிய சில வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். முதலாவதாக, அது “நெறிமுறையற்றதாக” இருக்கலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது மற்றவர்களை தவறான வழியில் நடத்துவதற்கு நம்மை வழிநடத்தும் அறிவுரையாக இருக்கும். மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறே நாம் அவர்களை நடத்த வேண்டும் என்பதே வேதத்தின் அறிவுரையும் அறிவுறுத்தலுமாகும்.
இரண்டாவதாக, துன்மார்க்கரின் ஆலோசனை பெரும்பாலும் “நேர்மையற்றதாக” இருக்கிறது, அது நிழலான நடைமுறைகளுக்கு வழிவகுக்கிறது. ஒருவேளை வருமான வரியை ஏமாற்றலாம் அல்லது பணம் மற்றும் கணக்குகளை கையாள்வதில் நேர்மையற்று இருக்கலாம். அது ஒரு வெளிப்படையான சாத்தியமாகும்.
மூன்றாவதாக, துன்மார்க்கரின் ஆலோசனை பெரும்பாலும் “ஒழுக்கமற்றது,” அது ஒழுக்கத்தின் பகுதியில் தேவனின் சட்டத்திற்கு முரணான செயல்களுக்கு நம்மை வழிநடத்துகிறது.
நான்காவதாக, துன்மார்க்கரின் ஆலோசனை “தவறான உந்துதல் கொண்டது,” அது தேவனை மையமாகக் கொண்டது அல்ல, அது தேவனுக்கு ஏற்ப இருக்காது.
ஐந்தாவதாக, அதிலிருந்து உண்மையில் பின்தொடரும் ஒன்று, துன்மார்க்கரின் ஆலோசனை தேவனுடைய கொள்கைகளுடன் ஒத்துப்போவதில்லை, அது பிரபஞ்சத்தை ஆளும் கொள்கைகளுக்கு முரணாக இயங்குகிறது. எனவே, இறுதியில், அது தோல்வியில் முடிவடைகிறது.
இரண்டாவதாக, இரண்டாவது எதிர்மறை நிபந்தனை: அத்தகைய மனிதன் பாவிகளின் வழியில் நிற்கக்கூடாது. இது வித்தியாசமான வாழ்க்கை முறையையும், வெவ்வேறு ஐக்கியத்தையும் குறிக்கிறது. அவர் தவறான இடத்தில் “தங்கியிருக்கவில்லை.” மதுபானம் அருந்தும் இடத்திலோ அல்லது தவறான மக்கள் கூடும் வேறு சில தாழ்வான இடத்திலோ அவருக்கு ஈர்ப்பு இருக்காது. அவர் ஒரு வித்தியாசமான வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறார், அவருடைய நண்பர்கள் வேறுவிதமாக இருப்பார்கள். அவரது முழு தொடர்புகளும் வேறுபட்டவை.
மூன்றாவதாக, பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காருவதில்லை. என்னைப் பொறுத்தவரை “பரியாசக்காரரின் இருக்கை” என்பது உறுதியான இழிவான மனப்பான்மையைக் குறிக்கிறது. இன்றைய வணிக உலகில், பெரும்பாலும் நிலவுகிற காரியம் இருளான, சந்தேகமான பார்வையுள்ள வாழ்க்கையாகும், அதுதான் விரக்திக்கும் தோல்விக்குமான உறுதியான பாதை என்று நான் நம்புகிறேன்.
இந்த மூன்று நிபந்தனைகளிலும், ஒரு வேகக் குறைவைக் கவனியுங்கள். அத்தகைய மனிதன் நடக்கத் தொடங்குகிறான், பின்னர் அவன் நிற்கிறான், அவன் உட்காருவதுடன் முடிக்கிறான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவனது நிலையும், நிலைமையும் மோசமாகிக்கொண்டே போகிறது.
இப்போது, சாதகமான நிபந்தனைகளைப் பார்ப்போம். இவை இரண்டு மடங்காகும். முதலாவதாக, அத்தகைய மனிதன் கர்த்தருடைய சட்டத்தில் மகிழ்ச்சி அடைகிறார். அவர் தேவனுடைய வார்த்தையிலும், தேவனுடைய சத்தியத்தின் வெளிப்பாட்டிலும் மகிழ்ச்சி அடைகிறார். “சட்டம்” என்ற வார்த்தையின் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கு எபிரேய வார்த்தை, “தோரா” ஆகும், நிச்சயமாக, இன்று யூத மக்களிடையே நன்கு பயன்படுத்தப்படுகிறது.
நாம் சில சமயங்களில், “தோரா” அல்லது சட்டம் என்பது விதிகளின் தொகுப்பாக நினைக்கிறோம், ஆனால் அது அப்படியல்ல. இந்த வார்த்தையின் மூல அர்த்தம் “வழி காட்டுவது” என்பதாகும். தோரா என்பது தேவனுடைய வெளிப்பாடாகும், இது தேவனின் தயவையும், அவருடைய ஆசீர்வாதத்தையும் நாம் விரும்பினால், நாம் வாழ வேண்டிய வழியைக் காட்டுகிறது. எனவே, அத்தகைய மனிதன் அதில் தியானம் செய்கிறார், அதில் பிரியமாயிருக்கிறார், அதில் பிரியமாயிருப்பதன் விளைவாக, அவர் அதில் தியானம் செய்கிறார், அவருடைய எண்ணங்கள் அதைச் சுற்றி எப்போதும் மையமாக இருக்கிறது. மேலும், அப்படி தியானிக்கையில், அருகே ஓடும் நீரோடைகளிலிருந்து தண்ணீர் எடுக்கும் மரம் போல இருக்கிறார். அவர் புதிய வாழ்க்கையையும், புதிய வல்லமையையும், புதிய உத்வேகத்தையும் எடுக்கிறார். சரியான தியானத்தின் முக்கியத்துவத்தை என்னால் இதற்கு அதிகமாக வலியுறுத்த முடியாது. அதுவே உண்மையான செழிப்புக்கான திறவுகோல் என்று நான் நம்புகிறேன். நீங்கள் தவறாக நினைத்து சரியாக வாழ முடியாது. மேலும், நீங்கள் சரியாக வாழ்ந்து, தவறாக நினைக்க முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் சிந்தனை உங்கள் வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கப் போகிறது. எனவே, நீர்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போல இருக்கிற மனிதனின் காட்சி அதுதான். அவர் எதை செய்தாலும் அது வாய்க்கும்.
இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை செழிப்பு என்ற இதே தலைப்பில் தொடர்கிறேன். செழிப்புக்கான ஒரு குறிப்பிட்ட சிறப்பு வழியை நான் விளக்குகிறேன்.
குறியீடு: RP-R026-101-TAM









