தேவனுடைய நோக்கங்களின் கண்ணோட்டத்தில் இன்றைய உலகத்தை நாம் ஒன்றாகத் தொடர்ந்து பார்க்கும்போது, மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இரண்டு வகையான ஜனங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதில்தான் இன்று தேவனுடைய நோக்கங்கள் மையம் கொண்டிருக்கின்றன. இதை நான் என்னுடைய முந்தைய செய்திகளில் விளக்கமாகச் சொன்னேன். இஸ்ரவேல் மற்றும் சபைதான் அந்த இரண்டு வகையான ஜனங்கள். தேவன் ஒரு உடன்படிக்கையின் மூலமாக, இவர்களிடம் தம்மையே அர்ப்பணித்திருக்கிறார். அதை அவர் ஒருபோதும் மீற மாட்டார். சபை புதுப்பிக்கப்படுதலைக் குறித்து என்னுடைய கடந்த வாரச் செய்திகளில் நான் பேசினேன். இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுவதைக் குறித்து இந்த வாரம் பேசிக் கொண்டிருக்கிறேன்.

இஸ்ரவேல் சிதறடிக்கப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைக் குறித்து நேற்றைய செய்தியில் நாம் பார்த்தோம். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், அவர் அவர்களை அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடு பிடுங்கியெடுத்து, மற்ற புறஜாதித் தேசங்களுக்குள் அவர்களை சிதறடித்து, ஒப்புக்கொடுப்பேன் என்று தேவன் திரும்பத் திரும்ப தெளிவாக இஸ்ரவேல் ஜனங்களை எச்சரித்திருந்தார் என்று நாம் பார்த்தோம். நாடு கடத்தப்பட்ட நிலையில், அகதிகளாய் அவர்கள் வாழ்கின்ற வெளி தேசங்களில், அவர்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்காது, நிலையாய் தங்குவதற்கு இடம் இருக்காது, பாதுகாப்பும் இருக்காது. கடந்த இரண்டாயிரம் வருடங்களிலும், இந்த நூற்றாண்டிலும் இந்தத் தீர்க்கதரிசனங்கள் எவ்வளவு துல்லியமாக நிறைவேறியிருக்கின்றன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு உயிரோடு இருக்கிற நம்மில் பலரது நினைவில் கூட இது இருக்கும். இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுவதைக் குறித்த வாக்குத்தத்தங்களை இன்றைய செய்தியில் நாம் பார்க்கப் போகிறோம். நிறைய வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சிறிய பகுதியைப் பார்க்குமளவிற்குத்தான் நமக்கு நேரம் இருக்கும்.

முதலில் ஒரு எளிமையான வாதத்தை முன் வைக்க விரும்புகிறேன். இன்னொன்றையும் நான் சொல்ல வேண்டும். தேவனுடைய வார்த்தையைப் போதிக்கிற ஒரு ஊழியக்காரனாய் நான் மாறுவதற்கு முன், தத்துவ வாதங்களைக் கற்றுக் கொடுக்கிற ஒரு பேராசிரியனாய் இருந்தேன். சிதறடிக்கப்படுவதைக் குறித்த தீர்க்கதரிசனங்கள், அது நிகழ்வதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கொடுக்கப்பட்டன. இரண்டாயிரம் வருடங்களுக்கும் அதிகமான ஒரு காலகட்டத்தில் அவை அப்படியே நிறைவேறின. இது உண்மையாயிருக்கும்போது, அதே காலகட்டத்தில், அதே இடத்திலிருந்து வந்த புதுப்பிக்கப்படுதலைக் குறித்த தீர்க்கதரிசனங்களும் அதே சம அளவு துல்லியத்தோடு நிறைவேறும் என்பதும் நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும்.

இப்பொழுது அந்தத் தீர்க்கதரிசனங்களில் சிலவற்றை நாம் பார்ப்போம். எரேமியா 31:7 மற்றும் 10 வசனங்களை முதலில் வாசிப்போம்.

7 கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய்க் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள். சத்தத்தைக் கேட்கப் பண்ணி, துதித்து, ‘கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும்,’ என்று சொல்லுங்கள். [இப்பொழுது 10-ம் வசனத்தை வாசிப்போம்] 10 ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, ‘இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக் கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும் வண்ணமாக அதைக் காப்பார்,’ என்று சொல்லுங்கள்.

இந்தத் தீர்க்கதரிசனத்தைக் குறித்த மூன்று உண்மைகளை நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். முதலில், இது சகல தேசத்தாருக்கும் பிரகடனப்படுத்த வேண்டும், அதிகாரப்பூர்வமாய் அறிவிக்க வேண்டும். எல்லா தேசங்களும் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அதாவது இஸ்ரவேலைப் புதுப்பிக்கும்படி அவர் தம்மையே ஒப்புக்கொடுத்திருக்கிறார், அவர் வாக்குப் பண்ணின பிரகாரமாகவே அவர் அவர்களை புதுப்பிக்கப் போகிறார் என்ற உண்மையை சகல தேசத்தார்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்தச் செய்தியின் மூலமாக, ஒரு விதத்தில் நான் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன் என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். அதாவது தேவன் இஸ்ரவேலை புதுப்பிக்கப் போகிறார் என்ற உண்மையை தேசங்களின் தலைவர்களிடம் இப்பொழுது நான் அறிவித்துக் கொண்டிருக்கிறேன்.

“இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக் கொள்கிறார்,” என்ற சுருக்கமான, எளிமையான வார்த்தைகளைக் கவனியுங்கள். எபிரெய மொழியில், இதை வெளிப்படுத்தும்படி மூன்று வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பொழுது நாம் மூன்று குறிப்புகளைக் கவனிப்போம்: அவர்களைச் சிதறடித்த அதே தேவன், அவர்களைத் திரும்ப ஒன்றுகூட்டிச் சேர்க்கிறார். எவர்கள் சிதறடிக்கப்பட்டார்களோ, அவர்களே திரும்பவும் ஒன்றுகூட்டிச் சேர்க்கப்படுவார்கள். சிதறடிக்கப்பட்ட நிகழ்வு எழுத்தின்படியே வரலாற்றில் நிகழ்ந்தது. எனவே ஒன்றுகூட்டிச் சேர்க்கப்படுகிற நிகழ்வும் எழுத்தின்படியே வரலாற்றில் நிச்சயம் நிகழும்.

அவர்களைக் காக்கும்படியே தேவன் அவர்களை ஒன்றுகூட்டிச் சேர்க்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், நிரந்தரமாய் தங்கி வாசம் பண்ணுவதற்கான இடத்தையும், பாதுகாப்பையும், சுகவாழ்வையும் அவர் அவர்களுக்குக் கொடுக்கப் போகிறார் என்று சொல்லலாம்.

இப்பொழுது இன்னொரு தீர்க்கதரிசனத்தை ஏசாயா 11:11-13 வசனங்களில் வாசிப்போம்.

11 அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக் கொள்ளத் திரும்ப இரண்டாம் விசை தமது கரத்தை நீட்டி, 12 ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். 13 எப்பிராயீமின் பொறாமை நீங்கும். யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள். எப்பிராயீம் யூதாவின் மேல் பொறாமையாயிரான். யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தான் (துன்பப்படுத்த மாட்டான்).

இங்கே திரும்பவும் மூன்று குறிப்புகளை நாம் கவனிக்க வேண்டும். இரண்டாம் முறையாக, இஸ்ரவேல் திரும்பவும் கூட்டிச் சேர்க்கப்படுவதைக் குறித்து ஏசாயா இங்கு பேசுகிறான். கர்த்தர் அதை இரண்டாம் முறையும் செய்வார். இது முதல் முறை சிதறடிக்கப்பட்ட நிகழ்வு நடந்ததற்கு முன்பே கணிக்கப்பட்டிருந்தது. தேவன் தம்முடைய தொலைநோக்கியின் மூலம், இரண்டாம் முறை சிதறடிக்கப்படப் போகிற நிகழ்வையும், இரண்டாம் முறை திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படப் போகிற நிகழ்வையும் பார்த்து விட்டார். தேவன் அவ்வளவு தூரம் அதை முன் கூட்டியே கணித்து விட்டார்.

பிறகு இது சொல்கிறது, “தேவன் இப்பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் திரும்பக் கூட்டிச் சேர்ப்பார்.” அதாவது இந்தப் பூமியின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும், ஒவ்வொரு மூலைமுடுக்கிலிருந்தும் அவர் திரும்பக் கூட்டிச் சேர்ப்பார் என்று அர்த்தம். இது பாபிலோனிலிருந்து திரும்பியபோது நிறைவேறவில்லை.

மூன்றாவதாக, இஸ்ரவேல் சிதறடிக்கப்படுவதைக் குறித்து தேவன் பேசுகிறபோது, எப்பிராயீம் மற்றும் யூதாவை இரண்டு எதிரெதிர் ராஜ்யங்களாக முன் வைக்கிறார். ஆனால் அவர்கள் திரும்பவும் ஒரே தேசமாக கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்று அவர் கணித்துச் சொல்கிறார். இது நம்முடைய காலத்தில்தான் அப்படியே துல்லியமாக நிறைவேறியிருக்கிறது.

இப்பொழுது நாம் ஏசாயா 43-ம் அதிகாரம், முதல் வசனத்திலிருந்து வாசிப்போம்:

1 இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது (தொடர்ந்து 5, 6 வசனங்களை வாசிப்போம்). 5 பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன். நான் உன் சந்ததியை கிழக்கிலிருந்து வரப் பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பேன். 6 நான் வடக்கே நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்திரத்திலிருந்து (மூலையிலிருந்து) என் குமாரத்திகளையும் (வரவழைப்பேன்)

பூமியின் நான்கு திசைகளிலிருந்தும் இஸ்ரவேல் வம்சத்தாரை திரும்பவும் கூட்டிச் சேர்க்கிற நிகழ்வைக் குறித்து தெளிவான ஒரு கணிப்பு இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் திரும்பக் கூட்டிச் சேர்க்கிற நிகழ்வில், ஒவ்வொரு திசைக்கும் வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாயிருக்கிறது. “கிழக்கிலிருந்து வரப் பண்ணுவேன்,” என்கிறார். அப்படியென்றால், இதில் அதிக எதிர்ப்பில்லை என்று அர்த்தம். “மேற்கிலிருந்து கூட்டிச் சேர்ப்பேன்,” என்கிறார். அப்படியென்றால், இதற்கான முயற்சியை தேவன்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம். “மேற்கு” என்று சொல்லும்போது, அது பிரதானமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் குறிக்கிறது. ஆனால் வடக்கு மற்றும் தெற்கு என்று வரும்போது, அங்கே மிகவும் வலிமையான எதிர்ப்பு இருப்பதைப் பார்க்க முடிகிறது. தேவன் சொல்கிறார்: “விட்டு விடு என்று நான் வடக்கைப் பார்த்துச் சொல்வேன்.” இது பிரதானமாக ரஷ்யாவைக் குறிக்கிறது. இன்றைக்கு அப்படியே அந்தச் சூழ்நிலைதான் காணப்படுகிறது. தெற்கை நோக்கி, இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ளாதே என்று தேவன் சொல்கிறார். தெற்கு என்பது நிச்சயமாக அரபு தேசங்களைக் குறிக்கிறது. புதுப்பிக்கப்படுதல் மற்றும் திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுதலைக் குறித்த இந்தக் கணிப்புகளின் ஒவ்வொரு விவரமும் நம்முடைய காலத்தில் நிறைவேறிக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

நம் கண்களுக்கு முன்பாக, உலகளாவிய விதத்தில், வேதவசனம், எழுத்தின்படியே, பிரத்தியட்சமாய் நிறைவேறுவதைப் பார்க்கின்ற நாட்களில் வாழ்வது, நமக்குக் கிடைத்த விசேஷமான சிலாக்கியம்!

இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுதல் மற்றும் திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுதலைக் குறித்த அதே காட்சி, எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதிலிருந்து இரண்டு நீளமான வேதப்பகுதிகளை நான் உங்களுக்கு வாசிக்கப் போகிறேன். முதல் பகுதி, எரேமியா 30:1-7 வசனங்களாகும். நான் இந்த வார்த்தைகளை வாசிக்கும்போது, அவை இன்று இவ்வுலகத்தின் இப்பொழுதைய சூழ்நிலையோடு எவ்வளவு துல்லியமாய் ஒத்துப் போகின்றன என்று பார்க்கும்படி பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார் என்று நான் நம்புகிறேன்.

1 கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: 2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக் கொள். 3 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்கிறார். அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பி வரப் பண்ணுவேன். அதை அவர்கள் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்று கர்த்தர் சொல்கிறார். 4 இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும், யூதாவையும் குறித்துச் சொன்ன வார்த்தைகளே. 5 கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம். திகிலுண்டு, சமாதானமில்லை. 6 ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப் பாருங்கள். பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின் மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன? 7 ஐயோ! அந்த நாள் பெரியது. அதைப்போல் ஒத்த நாளில்லை. அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம். ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.

திரும்பவும் இங்கு மூன்று குறிப்புகளைப் பார்க்கலாம். திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுதலைக் குறித்த மிகவும் தெளிவான ஒரு வாக்குத்தத்தத்தை திரும்பவும் நாம் இங்கே பார்க்கிறோம். “இஸ்ரவேல் மற்றும் யூதாவினுடைய சிறையிருப்பை நான் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பி வரப் பண்ணுவேன். அவர்கள் அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” இதை இன்னும் தெளிவாக எப்படிச் சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். ஆரம்பத்தில் இது ஒரு சமாதானத்தின் வாக்குத்தத்தமாகச் சொல்லப்படவில்லை. மாறாக, இது பயங்கரமான உபத்திரவம் மற்றும் அழுத்தத்தைக் குறித்த ஒரு முன் கணிப்பாக இருக்கிறது. இது உச்சகட்டமாய் “யாக்கோபின் இக்கட்டுக்காலம்” என்று சொல்லப்பட்ட ஒரு காலகட்டத்தில் போய் முடியும் என்பதை வெளிப்படையாய் பார்க்க முடிகிறது. பலர் யாக்கோபின் இக்கட்டுக்காலத்தை ஒரு தீர்க்கதரிசனமாக, புதிய ஏற்பாட்டில் மகா உபத்திரவ காலங்களாக சொல்லப்பட்ட ஒன்றோடு பொருத்திப் பார்க்கிறார்கள். கடைசியில் பாருங்கள். முடிவில் தேவன்தாமே இஸ்ரவேலின் சார்பில் தலையிடுவார். “இந்தக் இக்கட்டுக்காலத்திற்கு நீங்கலாக்கி, இஸ்ரவேல் இரட்சிக்கப்படுவான்,” என்று வசனம் சொல்கிறது. “இரட்சிக்கப்படுவான்” என்பது வழக்கமாக தேவனுடைய தலையீட்டைக் குறிக்கிறது.

திரும்பவும் எரேமியாவில் இன்னொரு பகுதியை வாசிப்போம். எரேமியா 32:37-42 வசனங்களை கவனிப்போம்:

37 இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து, அவர்களைச் சேர்த்துக் கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பி வரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். 38 அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். நான் அவர்கள் தேவனாயிருப்பேன். 39 அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும், ஒரே வழியையும் கட்டளையிட்டு, 40 அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின் வாங்குவதில்லை என்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னை விட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்கு பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, 41 அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள் மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும், என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன். 42 நான் இந்த ஜனத்தின் மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப் பண்ணினதுபோல, அவர்களைக் குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள் மேல் வரப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

திரும்பவும் இங்கே மூன்று குறிப்புகளை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முதலில், புதுப்பித்தல் என்பது அரசியல்ரீதியாக மட்டும் அல்ல. அது முடிவில், ஆவிக்குரிய ஒன்றாகவும் இருக்கப் போகிறது. தேவன் சொல்கிறார், “அவர்களுடைய நன்மைக்காக, அவர்கள் திரும்பவும் என்னை விட்டு விலகிப் போய் விடக்கூடாது என்பதற்காக, எனக்குப் பயப்படக்கூடிய ஒரு இருதயத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் நடத்துவதன் முடிவான நோக்கம், ஒருபோதும் அரசியல்ரீதியான ஒன்றாக மட்டுமே இருக்கப் போவதில்லை. அது எப்பொழுதும் ஆவிக்குரியதாகவும் இருக்கிறது.

இரண்டாவதாக, திரும்ப ஒன்றுகூட்டிச் சேர்க்கப்படும் இந்த நிகழ்வு, தேவனுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே ஒரு புதிய உடன்படிக்கை ஏற்படுவதில் முடிகின்றது. “நான் அவர்களோடே ஒரு நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்,” என்று தேவன் சொல்கிறார். தேவன் இஸ்ரவேலோடு ஏற்படுத்திய முதல் உடன்படிக்கை, முறிந்து போனது. அது ஒருவிதத்தில் இப்பொழுது ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தேவன் தம்முடைய பங்கில் இப்பொழுதும் உண்மையுள்ளவராக இருந்தாலும், இஸ்ரவேல் உண்மையற்றவர்களாய் இருந்தனர். தேவன் ஒரு புதிய உடன்படிக்கையை வாக்குப் பண்ணியிருக்கிறார். இம்முறை இஸ்ரவேல் உண்மையுள்ளவனாயிருப்பான் என்றும் அவர் வாக்குப் பண்ணியிருக்கிறார்.

இஸ்ரவேல் மீது கணிக்கப்பட்ட தீமையும், நன்மையும், இவ்விரண்டும் சம அளவில் துல்லியமாக, முழுமையாக நிச்சயம் நிறைவேறும் என்று தேவன் தம்மையே ஒப்புக்கொடுத்து வாக்குப் பண்ணியிருக்கிறார் என்பதையும் கவனியுங்கள். 42-ம் வசனம் சொல்கிறது:

42 நான் இந்த ஜனத்தின் மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப் பண்ணினதுபோல, அவர்களைக் குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள் மேல் வரப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கடந்த இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அவர்கள் மீது வந்திருக்கிற பேரழிவைக் குறித்த பதிவை நாம் பார்த்திருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை, பேரழிவைப்போலவே துல்லியமாக நன்மையும் வரும் என்று விசுவாசிக்கவில்லை என்றால், அது முற்றிலும் முரண்பட்டது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இஸ்ரவேலின் புதுப்பித்தலோடு தொடர்புடைய தீர்க்கதரிசனங்களை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதைக் குறித்த ஒரு கடைசிக் குறிப்பைச் சொல்லி, இந்தச் செய்தியை நான் முடிக்கின்றேன். நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்: இஸ்ரவேலைக் குறித்த இந்த வாக்குத்தத்தங்கள் இன்று நம்முடைய நாட்களில், நம் கண்களுக்குத் தெரியக்கூடிய விதத்தில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், வேதாகமம், உண்மையான - இன்றைக்கும் தொடர்புடைய - பொருத்தமான ஒரு புத்தகம் என்பது உலகளாவிய விதத்தில் நிரூபணமாகியிருக்கிறது.

இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். இஸ்ரவேலின் புதுப்பித்தலைக் குறித்த இந்தத் தலைப்பை நாளையும் தொடர்ந்து பேசுவேன். நாளை புதுப்பித்தலின் கிரியை எவ்வாறு நடக்கிறது என்பதைக் குறித்து பேசப் போகிறேன்.

லைக்
பகிரவும்