திரும்பவும், உங்களோடு இருப்பதில் எனக்கு சந்தோஷம். இந்த வாரத்தின் முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம். “மரணத்தின் மீது வெற்றி” என்ற தலைப்பில் இந்த வாரச் செய்திகளை நாம் கேட்டுக் கொண்டு வருகிறோம். கிறிஸ்துவின் அளவற்ற, அள்ள அள்ளக் குறையாத ஐசுவரியங்களில் சிலவற்றைக் குறித்து இந்தச் செய்திகளில் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொண்டு வருகிறோம். இது நமக்குக் கிடைத்த விசேஷமான சிலாக்கியமாக இருக்கிறது.

கிருபாதார பலியைக் குறித்து நேற்று நான் பேசினேன். “atonement”, அதாவது “at- one-ment” என்ற கிருபாதார பலியில், தேவனும் மனுஷனும் ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்தோம். ஏசாயா 53-ம் அதிகாரத்திலிருந்து, நான் மூன்று சத்தியங்களை விளக்கிச் சொன்னேன். முதலில், நம்முடைய மீட்பரும், சுதந்தரவாளியுமாகிய இயேசு நம்முடைய மரணத்தை மரித்தார். இரண்டாவதாக, அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்தில் ஊற்றி, தம்முடைய இரத்தத்தை சிந்தி, மனுக்குலம் முழுவதற்குமான பாவ நிவாரண பலியாக தம்மையே ஒப்புக்கொடுத்தார். மூன்றாவதாக, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, அவர் தம்முடைய நீதியை நமக்குத் தந்திருக்கிறார்.

இதுவரை வரலாற்றில் நிகழ்ந்த மிக மிக அதி முக்கியமான ஒரு சம்பவத்தைக் குறித்து இன்று நான் பேசப் போகிறேன். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்தான் அது. கிறிஸ்தவ செய்தியின் இருதயமே, இந்த உயிர்த்தெழுதல்தான். உண்மையைச் சொன்னால், உயிர்த்தெழுதல் இல்லாமல், கிறிஸ்தவ செய்தி எதுவுமில்லை. இது எல்லாமே இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைச் சுற்றித்தான் சுழலுகின்றன.

இது ஒரு தத்துவம் அல்ல. இது ஒரு தியரியும் அல்ல. இது ஒரு வரலாற்று உண்மையாகும். ஒன்று, இது ஒரு வரலாற்று உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இதினால் ஒரு பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை. இது வெறுமனே ஒரு தியரியாக இருக்குமென்றால், அல்லது ஒரு தத்துவமாக இருக்குமென்றால், மனுக்குலத்திற்கு உதவி செய்யக்கூடிய வல்லமை எதுவும் இதற்கு இருக்காது. ஆனால் தேவனுக்கு நன்றி. இது ஒரு உண்மை, இது ஒரு வரலாற்று உண்மையாகும். 1 கொரிந்தியர் 15:1, 3 மற்றும் 4 வசனங்களில் பவுல் என்ன சொல்கிறார் என்பதை நாம் பார்ப்போம்.

1 அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக் கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். 3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 4 அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்...

இந்த மூன்று எளிமையான வரலாற்று உண்மைகளின் அடிப்படையில்தான், பவுல் தன்னுடைய செய்தி மற்றும் ஊழியம் முழுவதையும் அமைத்திருந்தார்: முதலில், கிறிஸ்து மரித்தார். இரண்டாவது, அவர் அடக்கம் பண்ணப்பட்டார். மூன்றாவதாக, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டார். இவற்றில் ஏதாவது ஒன்றை நீக்கினாலும், நமக்கு ஒரு செய்தியும் இருக்காது. கிறிஸ்தவத்திற்கு வேறு எந்த அஸ்திபாரங்களும் இல்லை.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து நாம் என்ன சொல்லப் போகிறோம்? மார்கஸ் டாட்ஸ் என்ற பேராசிரியர் சொன்ன ஒரு வாக்கியத்தை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். முந்திய தலைமுறையின் கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டியில், நன்கு அறியப்பட்ட ஒரு வரலாற்றுப் பேராசிரியராக இவர் இருந்தார். இவர் நன்கு மதிக்கப்பட்ட ஒரு வரலாற்றாசிரியராக இருந்தார். அவர் இப்படிச் சொன்னார்:

வரலாற்றினால் உறுதிப்படுத்தப்பட்ட மிகச் சிறந்த உண்மைகளில் ஒன்று, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலாகும்.

இது தொழில்ரீதியாக வரலாற்று ஆசிரியராய் பணிபுரியும் ஒருவரது கருத்தாகும். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சான்றளிக்கக்கூடிய ஐந்து உண்மைகளை நான் இங்கு சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். முதல் உண்மை, சட்டப்படி, ஒரு வரலாற்று உண்மையை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் சாட்சிகளைக் காட்டிலும் மிகவும் அதிக எண்ணிக்கையிலான நம்பத்தகுந்த சாட்சிகளால் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, அந்த சாட்சிகளுடைய வாழ்க்கையில் இது வல்லமையான, நிரந்தரமான ஒரு மாற்றத்தை உண்டாக்கியது. எனவே திருப்திகரமான மாற்று விளக்கங்கள் வேறு எதுவும் தேவைப்படவில்லை. மூன்றாவதாக, அவர்கள் தங்களுடைய சாட்சிக்கு உண்மையாய் வாழ்ந்தபடியால், அவர்களில் பலர் தங்களுடைய வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இவ்வுலக வழக்கப்படி பார்த்தால், அதிலிருந்து ஆதாயமாக அவர்கள் ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான்காவதாக, இது வரலாற்றின் போக்கிலும் நிரந்தரமான, முழுமையான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. வரலாறு முன்பு போல அதே நிலையில் இருக்கவில்லை. அந்த மாற்றத்திற்கு திருப்திகரமான வேறு எந்த மாற்று விளக்கங்களும் இல்லை. ஐந்தாவதாக, தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், உயிர்த்தெழுந்த கிறிஸ்து தனிப்பட்ட விதத்தில் தம்மை இலட்சக்கணக்கானோருக்கு உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். நானும் அவர்களில் ஒருவன். அதற்கு நான் ஒரு சாட்சியாயிருக்கிறேன்.

1941-ல், நான் பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு போர்வீரனாய் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு இரவு நேரத்தில், வீரர்கள் தங்கும் அறையில் இருந்தபோது, இயேசு தம்மை தனிப்பட்ட விதத்தில், நேரடியாக எனக்கு வெளிப்படுத்தினார். நான் ரொம்பவும் மத நம்பிக்கை உள்ள ஒரு நபர் கிடையாது. கற்பனையான, விசித்திரமான, விசேஷமான அனுபவங்களையெல்லாம் நாடித் தேடுகிற ஒரு நபர், நான் அல்ல. அந்தக் கணத்தில், என் உளவியலில் வழக்கத்திற்கு மாறாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் இயேசு அவ்வளவு நிஜமானவராய், தனிப்பட்ட விதத்தில் எனக்கு வெளிப்படுத்தினார். அந்த நாளிலிருந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் ஒருபோதும் வந்ததில்லை. அவர் உயிரோடிருக்கிறார் என்றால், அதுதான் வரலாற்றின் மிக முக்கியமான ஒரு உண்மையாயிருக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு வரலாற்று உண்மை என்று நான் சொன்னேன். ஆனாலும் பலர் இதை நிராகரிக்கிறார்கள். ஏன் அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள்? ஏன் அவர்கள் அந்த ஆதாரத்தை ஏற்றுக் கொள்வதில்லை? அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். முதல் காரணம், உளவியல்ரீதியானது. இரண்டாவது, ஆவிக்குரிய காரணமாகும். உளவியல்ரீதியாகப் பார்க்கும்போது, மனுஷனுடைய பிரச்சனைகளை இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட விதத்தில், தேவனால் நேரடியாகத் தலையிட்டு தீர்க்க முடியும் என்ற சாத்தியத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை என்பதுதான் உண்மை. இது இப்படித்தான் என்று அவர்கள் முடிவெடுத்து விட்ட ஒன்றை தேவனால் மாற்ற முடியும் என்ற எண்ணத்தையே அவர்கள் வெறுக்கிறார்கள். ஆனாலும் இந்த மனப்பான்மைக்கு அறிவியல்பூர்வமான, தர்க்கரீதியான எந்தக் காரணமும் இல்லை. நான் கொஞ்சம் அதிகாரத்துடன் இதை தைரியமாகச் சொல்கிறேன். காரணம், நானே முன்பு ஒரு தத்துவப் பேராசிரியராக இருந்தேன். தர்க்கரீதியிலான அறிவியல் என்ற ஒரு பாடத்தையும் நான் அதில் கற்றிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நடக்கவில்லை என்று எந்த ஒரு வாதத்தையும் அறிவியலால் முன் வைக்க முடியாது என்பதை என்னால் தைரியமாகச் சொல்ல முடியும். அது நடக்கவில்லை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியாது. அது நிகழ்ந்தது என்பதற்கான ஏற்கத்தக்க ஆதாரத்தை நிராகரித்தால், அறிவியல் கோட்பாடுகளை மீறியது போலாகி விடும்.

இயேசுவின் உயிர்த்தெழுதலை ஜனங்கள் விசுவாசிக்க மறுப்பதற்கான இரண்டாவது காரணம், ஆவிக்குரியதாகும். இது தெளிவாக 2 கொரிந்தியர் 4:4-ல் பவுலினால் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் சொல்கிறார்:

4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்கு பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

“இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்பது, வேதவசனத்தில் சாத்தானுக்குக் கொடுக்கப்படுகிற பல பெயர்களில் ஒன்றாக இருக்கிறது. சாத்தான்தான், மனுஷ கொலைபாதகன், திருடன், ஜீவனைப் பறிக்கிறவன் என்று நாம் பார்த்தோம். மாறாக, இயேசு ஜீவனைக் கொடுக்கிறவராய் இருக்கிறார். சிலுவையில், இயேசு சாத்தானை நேருக்கு நேராய் சந்தித்து, அவனை ஜெயித்திருக்கிறார். அவர் அவனை கடைசியாய், என்றென்றைக்குமாய் தோற்கடித்திருக்கிறார். அந்த நேரத்திலிருந்து, சிலுவை என்றாலே சாத்தானிடம் எந்தப் பதிலும் இருக்காது. அது அவனுடைய தோல்வியை உரக்கச் சொல்கிறது. அது மனுக்குலத்தின் மீது அவனுக்கிருந்த ஆதிக்கத்திற்கும், வல்லமைக்கும் முடிவு கட்டியிருக்கிறது. தன் கொடூரமான விருப்பங்களையெல்லாம் வலுக்கட்டாயமாக மனுக்குலத்தின் மீது திணித்து வந்த சாத்தானின் செயலுக்கு சிலுவை முடிவு கட்டியிருக்கிறது. உணர்வுப்பூர்வமாக, சரீரப்பிரகாரமாக, ஆவிக்குரிய ரீதியில், சொல்லொண்ணா துயரங்களையும், முடிவில்லா வேதனைகளையும் அவன் மனுக்குலத்திற்கு கொடுத்து வந்தான். அதற்கும் சிலுவை முடிவு கட்டியிருக்கிறது. ஆகையால், இப்பொழுது சாத்தானுக்கு பிரதானமாக ஒரே ஒரு இலக்குதான் இருக்கிறது. இயேசு சிலுவையில் மரித்தபோது, பிறகு மரித்தோரிலிருந்து அவர் உயிரோடு எழுந்தபோது என்ன நிகழ்ந்தது என்ற சத்தியத்தை மனிதர்கள் புரிந்து கொண்டு விடக்கூடாது. அதைத் தடுப்பதுதான் அவனுடைய ஒரே தலையாய நோக்கமாயிருக்கிறது.

ஆகையால்தான், இப்பிரபஞ்சத்தின் தேவன் அவிசுவாசிகளினுடைய மனதின் கண்களை குருடாக்கியிருக்கிறான் என்று பவுல் எழுதுகிறார். இயேசுகிறிஸ்துவின் மூலம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இரட்சிப்பு மற்றும் விடுதலையின் செய்தியை, தெளிவான, நேரடியான இந்தச் சத்தியத்தை அவர்களால் பார்க்க முடியாது. ஆகையால் இங்கே இரண்டு காரணங்கள் இருக்கின்றன: ஒன்று, உளவியல்ரீதியானது. தேவன்தான் இந்தப் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தார். எனவே அவரால்தான் அதன் பிரச்சனைகளைத் திர்க்க முடியும் என்ற உண்மையை பலர் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. இரண்டாவது, ஆவிக்குரிய ஒன்றாகும். இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினால் நிறைவேற்றி முடிக்கப்பட்டவைகளை மனுஷர்கள் பார்த்து விடக்கூடாதபடி சாத்தான் தடுத்துக் கொண்டிருக்கிறான், அவர்களுடைய கண்களை குருடாக்கியிருக்கிறான். காரணம், மனுஷரை வேதனைப்படுத்தி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படியான அவனுடைய வல்லமைக்கு சிலுவை முடிவு கட்டியிருக்கிறது.

இயேசுவின் உயிர்த்தெழுதல், தேவனுடைய பார்வையில் நியாயமானதாகவும், அத்தியாவசியமானதாகவும் இருந்தது. தேவன் தம்முடைய குமாரன் இயேசுவின் கீழ்ப்படிதலுக்கு நியாயமாய் கொடுத்த நீதியாய் அது இருந்தது. பவுல் இதை ரோமர் நிருபத்தின் முதல் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களில் குறிப்பிடுகிறார். நாம் அதை வாசிக்கலாம்.

1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காக பிரித்தெடுக்கப் பட்டவனுமாகிய பவுல், 2 ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப் பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது: 3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக. 4 இயேசுகிறிஸ்துவைக் குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம் பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், 5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

மாம்சத்தில், இயேசு தாவீதின் சந்ததியில் பிறந்தவராயிருந்தார். ஆனால் அவருடைய நித்திய சுபாவத்தின்படி, அவர் தேவனுடைய குமாரனாகவும், நம்முடைய கர்த்தராகவும் இருக்கிறார். மரித்தோரிலிருந்து இயேசுவை உயிரோடு எழுப்பியதன் மூலம், இயேசு தம்முடைய குமாரன் என்று தேவன் அறிவித்தார். இயேசுவின் உயிர்த்தெழுதல், அவர் தேவனுடைய குமாரன் என்பதற்கான தேவனுடைய மகத்தான நீதியாகவும், நியாயமாகவும் இருக்கிறது. இயேசு ஒரு குற்றவாளிக்குரிய மரணத்தை மரித்திருந்தாலும், மனுஷரால் அவர் நிராகரிக்கப் பட்டிருந்தாலும், அவர் தேவனுடைய குமாரன், அவர் நம்முடைய கர்த்தர் என்பதை பிரத்தியட்சமாய், வெளியரங்கமாய் இப்பிரபஞ்சத்திற்கு தேவன் வெளிப்படுத்திக் காண்பித்தார். “மரித்தோரின் உயிர்த்தெழுதல்” என்ற அர்த்தத்தில் வரும் “Resurrection of the Dead” என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தின் ஒரு பத்தியில் இதைத் தொகுத்துச் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது நான் இதை வாசிக்க விரும்புகிறேன்.

முதலில், மனுஷர்களால் நிர்வகிக்கப்படுகிற இரண்டு நீதிமன்றங்களின் முன், கிறிஸ்து நிறுத்தப்பட்டார். முதல் நீதிமன்றம், யூதர்களின் கவுன்சிலாகிய மதச் சட்டங்களின் அடிப்படையிலான நீதிமன்றம். இரண்டாவது நீதிமன்றம், பொந்தியு பிலாத்து என்ற ரோம கவர்னரின் கீழ் இயங்கின உலகப்பிரகாரமான சட்டங்களின் அடிப்படையிலான நீதிமன்றம். இயேசு, தேவனுடைய குமாரன் என்ற வாதத்தை இந்த இரண்டு நீதிமன்றங்களுமே நிராகரித்தன. இவ்விரண்டும் அவருக்கு மரண தண்டனை விதித்தன. அது மட்டுமல்ல, இயேசுவின் கல்லறை, எவ்விதத்திலும் திறக்கப்படாதபடி, அதைத் தடுப்பதற்கு எல்லா வித முயற்சிகளையும் இவ்விரண்டு நீதிமன்றங்களும் சேர்ந்தே எடுத்தன. யூதர்களின் கவுன்சில், தங்களுடைய விசேஷமான முத்திரையை அங்கே வைத்தது. ரோம கவர்னர், ஆயுதம் ஏந்திய படைவீரரை அங்கே நிறுத்தினான். ஆனாலும் மூன்றாம் நாள், தேவன் அங்கே இடைபட்டார். முத்திரை உடைக்கப்பட்டது. ஆயுதம் ஏந்திய படைவீரர் செயலிழந்து, ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். இயேசு கிறிஸ்து கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி வந்தார். இந்த உயிர்த்தெழுதலின் மூலம், யூதர்களின் கவுன்சில் மற்றும் ரோம கவர்னர் இயற்றிய தீர்மானங்களை தேவன் அங்கே மாற்றி எழுதினார், தலைகீழாகத் திருப்பிப் போட்டார். தாம் தேவனுடைய பாவமற்ற குமாரன் என்று சொன்ன கிறிஸ்துவின் வார்த்தைகளை தேவன் இவ்வாறு வெளியரங்கமாய், பிரத்தியட்சமாய் உறுதிப்படுத்தினார்.

ஆக, பாருங்கள், தேவனுடைய நீதி, இயேசுவின் உயிர்த்தெழுதலின் மூலமாய் உறுதிப்படுத்தப்பட்டது. மனுக்குலம் இயேசுவை ஒரு குற்றவாளியாய் நியாந்தீர்த்து, ஒதுக்கி வைத்தது. ஆனால் தேவனோ, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம், தாம் தேவனுடைய குமாரன் என்ற கிறிஸ்துவின் கூற்றின் மீது கையொப்பம் இட்டு, உறுதிப்படுத்தினார்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? உயிர்த்தெழுதலுக்கு முதல் சாட்சிகளாயிருந்த பெண்கள் என்ன செய்தார்கள் என்பதை நமக்குச் சொல்கிற ஒரு அழகான வேதப்பகுதியை நான் வாசிக்கிறேன். மத்தேயு 28:8-9 வசனங்களை கவனிப்போம்.

8 அவர்கள் (அந்தப் பெண்கள்) பயத்தோடும், மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். 9 அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு, “வாழ்க,” என்றார். அவர்கள் கிட்ட வந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.

அவர் யார், அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை நாம் எண்ணிப் பார்க்கும்போது, இதைத் தவிர வேறு எதை நாம் செய்ய முடியும்? வேறு எதுவும் பொருத்தமான ஒன்றாக இருக்க முடியாது. நாமும் அவரிடம் வந்து, அவருடைய பாதத்தில் தாழ விழுந்து, அவரை ஆராதிப்பதுதான் மிகச் சரியான, பொருத்தமான ஒரு செயலாயிருக்கும். நாம் அதைச் செய்வோம்.

நல்லது, இன்றைக்கு என்னுடைய நேரம் முடிந்து விட்டது. அடுத்த வாரம், இதே நேரம், நான் உங்களை திரும்பவும் சந்திக்கிறேன். அடுத்த வாரம் முழுவதும், திங்கள் முதல் வெள்ளி வரை, “மரணத்தின் மீது வெற்றி,” என்ற இதே ஆழமான, அருமையான பொக்கிஷ சத்தியத்தை நான் தொடர்ந்து உங்களோடு பகிர்ந்து கொள்வேன். “இயேசுவின் உயிர்த்தெழுதல், நமக்கு என்ன செய்திருக்கிறது?” என்ற கேள்விக்கான விடையை நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிப்பேன்.

இந்த வாரம், “மரித்தோரின் உயிர்த்தெழுதல்” என்ற அர்த்தத்தில் வரும் “Resurrection of the Dead” என்ற என்னுடைய புத்தகத்தை விசேஷமான சலுகையில் நான் கொடுக்கின்றேன். மரணத்தைக் குறித்த எல்லா பயங்களிலிருந்தும், நிச்சயமற்ற சிந்தையிலிருந்தும் உங்களை விடுதலையாக்கக்கூடிய சத்தியங்கள் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இது எவ்விதச் சலனமுமில்லாமல், அமைதலாய், அசைக்க முடியாத நிச்சயத்தோடு, உறுதியான உத்தரவாதத்தோடு மரணத்தையும், அதற்கு அப்பாற்ப்பட்டு இருக்கிற நித்தியத்தையும் தைரியமாய் எதிர்கொள்ளும்படி உங்களை பெலப்படுத்தும், ஆயத்தப்படுத்தும். விவரங்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

லைக்
பகிரவும்