திரும்பவும் உங்களோடு இருப்பதை நன்றாக உணருகிறேன். “மரணத்தின் மீது வெற்றி” எனும் சத்தியத்தைத்தான் இந்த வாரம் முழுவதும் நாம் கற்றுக் கொண்டு வருகிறோம்.

முதலில், எனக்கு கடிதம் எழுதிய எல்லோருக்கும் “நன்றி” சொல்லி விடுகிறேன். நான் இந்தச் செய்தியை முடிக்கும்போது, நாங்கள் இன்னொரு விலாசத்தை உங்களுக்குக் கொடுப்போம். உங்களுடைய தனிப்பட்ட தேவைகளை, பிரச்சனைகளை, உங்களுடைய ஜெப விண்ணப்பங்களை அந்த விலாசத்திற்கு நீங்கள் தாராளமாக எழுதி அனுப்பலாம்.

இதுவரை நாம் கற்றுக் கொண்ட சத்தியங்களை தனிப்பட்ட விதத்தில், நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து நேற்று நாம் பார்த்தோம். “எவ்வாறு மரணத்தை எதிர்கொள்ள வேண்டும்?” என்பது நேற்றைய செய்தியின் தலைப்பாயிருந்தது.

நேற்றைய செய்தியின் தொடர்ச்சியாக, இன்றைய செய்தி இருக்கப் போகிறது. என்னுடைய இன்றைய செய்தியின் தலைப்பு, “நாம் மிகவும் நேசிக்கும் ஒருவருடைய மரணத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?”

இன்று நான் உங்களிடம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கிறேன். சில விஷயங்களை, அனுபவமாகக் கடந்து வந்த பிறகுதான், அவற்றை ஒரு நபரால் புரிந்து கொள்ள முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். இது என்னுடைய விஷயத்தில் உண்மை. 1975-ம் வருடம், என்னுடைய முதல் மனைவி லிடியாவை கர்த்தர் தம் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டார். அதாவது என் மனைவி லிடியா மரித்து விட்டார். 30 வருட திருமண வாழ்க்கையை நாங்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்திருந்தோம். வறுமை, ஐசுவரியம், நல்ல நேரங்கள், துயரமான நேரங்கள் என எல்லாவற்றையும் நாங்கள் பகிர்ந்து வாழ்ந்திருந்தோம். நாங்கள் குடும்பமாய் சேர்ந்து வாழ்ந்தோம். நாங்கள் இருவரும் சேர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்தோம். சில நேரங்களில், நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு சபை ஆராதனையில் அல்லது ஒரு கருத்தரங்கில் ஊழியம் செய்த பிறகு, ஜனங்கள் எங்களிடம் வந்து, “நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரே நபராக ஊழியம் செய்கின்றீர்கள்,” என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஏக சிந்தையும், ஒருமனப்பாடும் எங்களுக்கிடையே இருந்தது. கர்த்தர் லிடியாவை தம் வீட்டிற்குள் அழைத்துக் கொண்ட பிறகு, எனக்குள் இருந்த ஒரு பகுதியே என்னிடமிருந்து எடுக்கப்பட்டதுபோல இருந்தது. அது என் வாழ்க்கையின் தாங்கவொண்ணா துயரமாய் இருந்தது. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனாலும் தேவன் அதை ஒரு ஆசீர்வாதமாக மாற்றினார். கனிகள் நிறைந்த ஒரு அனுபவமாக அதை மாற்றினார். அதைத்தான் இன்றையை செய்தியில் நான் சொல்லப் போகிறேன்.

அதற்குப் பிறகு, மற்றவர்களுடைய வாழ்க்கையை நான் கவனிக்க ஆரம்பித்தேன். தங்களுடைய வாழ்க்கைத்துணையை இழந்த ஆண்கள், பெண்கள் எப்படியோ என்னிடமாய் ஈர்க்கப்பட்டார்கள். அப்பொழுது என்னால் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க முடிந்தது. ஆனால் அதற்கு முன்பு என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. தாங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவருடைய மரணத்தை ஏற்றுக் கொள்வதற்கு வெகு சிலர்தான் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொண்டேன். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து, 30 வருடங்களோ அல்லது 40 அல்லது 50 வருடங்களோ சேர்ந்து வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களில் ஒருவரை தம்மோடு சேர்த்துக் கொள்ளும்படி, தேவன் அழைக்கிறார் என்றால், அதற்கு அவர்கள் ஆயத்தமாக இருப்பதில்லை. நிச்சயமாக, இது நிஜத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற ஒரு மனநிலையாக இருக்கிறது. காரணம், நிச்சயமாக, தேவன் ஒருவரை எடுத்துக் கொள்ளப் போகிறார். திருமணமான கணவனும், மனைவியும் சேர்ந்தே மரிப்பதென்பது, எப்பொழுதாவது நிகழ்கிற ஒரு அரிதான நிகழ்வாகும். எப்பொழுதாவதுதான் அப்படி நடக்கிறது. அல்லது நாம் மிகவும் நேசிக்கின்ற ஒரு சகோதரனையோ அல்லது ஒரு சகோதரியையோ அல்லது அன்புக்குரிய ஒரு உறவினரையோ தேவன் எடுத்துக் கொள்ளலாம். பெற்றோர்களே, தேவன் சிறுபிள்ளைகளையும் தம்மோடு சேர்த்துக் கொள்கிறார், தம் வீட்டிற்குள் அழைத்துக் கொள்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் எல்லோருமே வளர்ந்து, பூரண வயதில், நன்கு முதிர்ந்த வயதில் மரிப்பதில்லை. மரணம் என்பது எல்லா நிலைகளிலும் நடக்கின்றது. எல்லா வகையான வயதினரும் மரிக்கின்றனர். நான் இதைச் சொல்லும்போது, இதை ஏதோ விரும்பத்தகாத, துயரமான நிகழ்வாக உணர்ந்தவனாய் சொல்லவில்லை. நான் நிஜத்தைப் பேசுகிறேன். ஆனால் ஒன்றை நான் கண்டுபிடித்துக் கொண்டேன். நாம் மிகவும் நேசிக்கும் ஒருவருடைய மரணத்தை நம்மால் வெற்றியாய் எதிர்கொள்ள முடியும் என்பதுதான் அது. ஆனாலும் அது தேவனுடைய அன்பையும், உண்மையையும் நிரூபிக்கக்கூடிய இன்னொரு ஆதாரமாக இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில், சில ஆலோசனைகளை நான் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தால், அந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய ஆறு காரியங்களை ஆலோசனையாக நான் கொடுக்கப் போகிறேன்.

முதலில், தேவனுடைய அன்பையும், ஞானத்தையும் நம்புங்கள். நான் இதைத் திரும்பவும் சொல்கிறேன், “தேவனை நம்புங்கள்! அவருடைய அன்பையும், ஞானத்தையும் நம்புங்கள்.” யோபுவின் வாழ்க்கையில் ஒரு அழகான எடுத்துக்காட்டை நம்மால் பார்க்க முடியும். யோபுவின் ஏழு மகன்களும், மூன்று மகள்களும் ஒரே பேரழிவில், ஒரு கணத்தில் மரித்துப் போனார்கள். ஆனால் அதைக் கேள்விப்பட்ட யோபு என்ன சொன்னான்? “கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்,” என்பதுதான் அவனுடைய வார்த்தைகளாய் இருந்தது. கர்த்தர் மீது நம்பிக்கையிழந்த நிலையில், அவன் இதைப் பேசவில்லை. மாறாக, கர்த்தர் மீது அவன் வைத்திருந்த நம்பிக்கையைத்தான் அவனுடைய இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தர் கொடுப்பார் என்று உங்களால் விசுவாசிக்க முடியும் என்றால், கர்த்தர் எடுத்துக் கொள்வார் என்று ஏன் உங்களால் விசுவாசிக்க முடியாது? அவருடைய ஞானத்தை உங்களால் நம்ப முடியவில்லையா? தேவன் தம்முடைய பிள்ளைகளில் ஒவ்வொருவரையும் எடுத்துக் கொள்வதற்கு சரியான வழியையும், சரியான நேரத்தையும் அறிந்திருக்க மாட்டாரா, என்ன? அவர் நிச்சயமாய் அறிந்திருக்கிறார் என்றுதான் நான் விசுவாசிக்கிறேன்.

நான் உங்களுக்குத் தரும் இரண்டாவது ஆலோசனை இதுதான்: நீங்கள் மிகவும் நேசிக்கும் அந்த உறவை தேவனிடம் விட்டுக் கொடுத்து, அர்ப்பணியுங்கள். இது சுலபமல்ல. என் மனைவி மரித்த பிறகு அந்த ஒரு மணி நேரம் என் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது நான் தேவனிடம் இவ்வாறு சொன்னேன், “நான் அவளைத் திரும்பக் கேட்கப் போவதில்லை. அவள் என்னுடையவளாக ஆவதற்கு முன், அவள் உமக்குச் சொந்தமானவளாக இருந்தாள்.” நான் அதைச் சொன்னபோது, என்னுடைய இருதயத்திலிருந்து ஏதோ ஒன்று வெளியே இழுக்கப்பட்டதைப்போல நான் உணர்ந்தேன். அது தேவனுடைய கரம் எனக்குள் நுழைந்து, அந்தக் காயத்தை ஆற்றும்படி இடம் கொடுத்தது. மாறாக, என் மனைவியையும், அவளைக் குறித்த நினைவுகளையுமே நான் விடாது இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தேன் என்றால், தேவனால் எனக்காக கிரியை செய்திருக்க முடியாது. ஆக, என்னுடைய இரண்டாவது ஆலோசனை இதுதான்: நீங்கள் மிகவும் நேசிக்கும் அந்த உறவை தேவனிடம் விட்டுக் கொடுத்து, அர்ப்பணியுங்கள்.

மூன்றாவதாக, உங்களுடைய விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்தி, அறிக்கை செய்யுங்கள். ஒரு பிரசங்கியார் இப்படிச் சொல்வது விசித்திரமாகத் தெரியலாம். ஆனால் தேவன் என்னுடைய மனைவியை எடுத்துக் கொண்டபோது, என்னை நானே இவ்வாறு கேட்டுக் கொண்டேன், “இவ்வளவு வருடங்களும் நான் பிரசங்கித்த காரியங்களை, நான் மெய்யாகவே விசுவாசிக்கிறேனா? உயிர்த்தெழுதல் நிச்சயம் ஒரு நாள் நடக்கும் என்பதை நான் மெய்யாகவே விசுவாசிக்கிறேனா? என் மனைவியை நான் திரும்பவும் நிச்சயம் பார்ப்பேன் என்பதை நான் மெய்யாகவே விசுவாசிக்கிறேனா?” இக்கேள்விகளுக்கு பதிலளிப்பது கொஞ்ச நேரத்திற்கு எனக்குக் கடினமாக இருந்தது. பிறகு நான் சொன்னேன், “நான் நிச்சயம் விசுவாசிக்கிறேன்! நான் நிச்சயம் விசுவாசிக்கிறேன்! நிச்சயம், உயிர்த்தெழுதல் ஒரு நாள் நடக்கும். நாங்கள் திரும்பவும் சந்திப்போம்! தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார்! வேதாகமம், நம்பப்பட வேண்டிய ஒரு புத்தகம்! நிஜமாயிராத, உண்மையற்ற ஒன்றின் மீது நான் விசுவாசம் வைக்கவில்லை. எல்லா சோதனையிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தேவனுடைய உண்மையின் மீதும், தேவனுடைய அன்பின் மீதும், வேதவசனத்தின் சத்தியத்தின் மீதும் நான் விசுவாசம் வைத்திருக்கிறேன்.” ஆக, இதுதான் நான் உங்களுக்குத் தரும் மூன்றாவது ஆலோசனையாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்ளும்போது, உங்களுடைய விசுவாசத்தை திரும்பவும் உறுதி செய்து, அதை அறிக்கை செய்யுங்கள். ஒவ்வொரு முறையும், நீங்கள் அதைச் செய்யும்போது, உங்களுடைய விசுவாசம் வலுப்பெறும். அது மேலும் மேலும் வலிமையடையும். உங்களுடைய எண்ணங்களில், சித்தங்கொள்வதில், உணர்வுகளில் மிகப் பெரிய வெற்றியை நீங்கள் பெறுவீர்கள்.

இன்றைக்கு நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயங்களைச் சொல்வதென்பது எனக்கு சுலபமான விஷயமல்ல என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் நான் இதைச் செய்வதற்குக் காரணம், இதற்கு இன்னும் ஆயத்தமாகாத நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன் என்பதுதான். இப்படிப்பட்ட சூழ்நிலை அவர்களுக்கு நேரிடும்போது, அவர்களால் அதை எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்பொழுது நான் இன்னும் மூன்று ஆலோசனைகளைக் கொடுக்கப் போகிறேன்.

இதுவரை நான் கொடுத்த மூன்று ஆலோசனைகளின் தொடர்ச்சியாக நான்காவது ஆலோசனை வருகின்றது. உணர்வுகளுக்கு மரத்துப்போன ஒரு நபராக வாழும்படி முயற்சிக்காதீர்கள். உங்களுடைய உணர்வுகளை அடக்கிக் கொள்ளாதீர்கள்! எந்த உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்வதென்பது ஒரு வாழ்க்கைமுறையாக (STOICISM) இருக்கிறது. இது ஒரே மெய்த் தேவனை அறியாதவர்களுடைய தத்துவமாய், கிரேக்கத்தில் ஆரம்பித்தது. இந்தத் தத்துவத்தின்படி வாழ்கின்ற ஒரு நபர் (STOIC), தன்னைக் காயப்படுத்தக்கூடிய, வருத்தத்தில் ஆழ்த்தக்கூடிய எந்தவொரு விஷயத்திற்கும் அனுமதி கொடுக்க மாட்டார். இவர் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொள்வார். இவர் ஒருபோதும் சிரிக்க மாட்டார். இவர் ஒருபோதும் கதறி அழ மாட்டார். இவர் ஒருபோதும் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். இதற்கும் கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. நாம் பெலவீனமான மனுஷர்கள் என்பது தேவனுக்குத் தெரியும். நாம் எதினால் உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியும் என்று வேதவசனம் சொல்கிறது. அவர் நம்முடைய உணர்வுகளையும், நம்முடைய எண்ணங்களையும் அறிந்திருக்கிறார். நம்மைக் காயப்படுத்தக்கூடிய விஷயங்களையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் வேதனைப்படுவீர்கள், மனதளவில் காயப்படுவீர்கள் என்பது அவருக்குத் தெரியும். அதற்காக தேவன் உங்களிடம் கோபப்படவில்லை. இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்த ஒரு உண்மை என்னை எப்பொழுதுமே பாதித்திருக்கிறது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து, அவர்கள் மீட்கப்பட்ட பிறகு, வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிய அவர்களுடைய பயணத்தின் ஒரு கட்டத்தில், அவர்கள் தங்களுடைய இரு முக்கியமான தலைவர்களாகிய மோசேயையும், ஆரோனையும் இழந்தனர். வெவ்வேறு தருணங்களில் நிகழ்ந்த இந்த இரு நிகழ்விலும், இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய தலைவர்களுக்காக 30 நாட்கள் துக்கம் அனுசரிக்கும்படி, தேவன் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார். ஒன்றுமே நடக்காததுபோல, அவர்கள் அப்படியே எழுந்து, கடந்து சென்று விட முடியாது என்பது தேவனுக்குத் தெரியும். அவர்களுடைய வாழ்க்கையோடு ஒன்றாய் கலந்திருந்த ஒருவரை தேவன் எடுத்துக் கொண்டார், அது அவர்களுக்கு ஒரு பேரிழப்பு என்பது தேவனுக்குத் தெரியும். தேவன் சொன்னார், “30 நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அழுங்கள். உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். உணர்வுகளை அடக்கிக் கொள்ளாதீர்கள்.”

சங்கீதம் 30:11-12 வசனங்களில் எழுதப்பட்டிருக்கிற தாவீதின் சாட்சியைக் குறித்தும் இப்பொழுது நான் நினைத்துப் பார்க்கிறேன்:

11 என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக (ஆனந்த நடனமாக) மாறப் பண்ணினீர். என் மகிமை (அதாவது என் ஆத்துமா) அமர்ந்திராமல், உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் (அதாவது என் துயரத்தைக்) களைந்து போட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைக்கட்டினீர். 12 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

தேவனுடைய வேதாகமம், வெளிப்படையானது, நேர்மையானது, ஒளிவுமறைவில்லாதது. வேதாகமத்தைக் குறித்த இந்த விஷயங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இது அவ்வளவு யதார்த்தமானது, நிஜமானது. “நான் துக்கப்படவில்லை, புலம்பவில்லை,” என்று தாவீது சொல்லவில்லை. “நான் புலம்பினேன், துக்கப்பட்டேன்,” என்றுதான் அவன் சொல்கிறான். “துக்கப்படுவதென்றால் என்ன என்பது எனக்குத் தெரியும்,” என்று அவன் சொல்கிறான். ஆனாலும் அவன் தொடர்ந்து சொல்கிறான், “என் துக்கத்தை ஆனந்த நடனமாக மாற்றினீர்.” அவன் துக்கப்பட்டிருக்கவில்லை என்றால், அவனால் ஆனந்தமாய் நடனமாடியிருக்க முடியாது என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். துக்கத்திற்குப் பிறகுதான், அப்படிப்பட்ட ஒரு நடனம் வெளிப்பட முடியும்.

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து என்னால் இதை உங்களுக்குச் சொல்ல முடியும். உண்மையில் இது என் வாழ்க்கையிலும் நிகழ்ந்தது. மெய்யாகவே தேவன் என்னுடைய துக்கத்தை ஆனந்த நடனமாக மாற்றினார். ஆனால் முதலில் நான் துக்கப்பட வேண்டியிருந்தது. நான் நேர்மையாக, வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டியிருந்தது. யதார்த்தமாய் நான் வாழ வேண்டியிருந்தது. “நான் வேதனைப்படுகிறேன். இது என்னைக் காயப்படுத்துகிறது,” என்று நான் சொல்ல வேண்டியிருந்தது. எவ்வித ஒளிவுமறைவு மில்லாமல், வெளிப்படையாக நாம் அவரிடம் அதைக் காண்பிக்கும்போது, தேவன் அந்தக் காயத்தைச் சுகமாக்குகிறார். மாறாக, நீங்கள் அந்த உணர்வை அடக்கிக் கொள்ளும்படி முயற்சிப்பீர்கள் என்றால், அது உங்களுக்குள் ஆழமாக வேரூன்றி விடும். அது உங்களை வதைக்கும், மகா வேதனைக்குள்ளாக்கும். ஒரு நாள், உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனைக்குள் நீங்கள் சிக்கிக் கொண்டிருப்பீர்கள். அந்த அனுபவத்தின் வழியாக கடந்து செல்வதற்கு முன்பு இருந்த நிலையை விட, இன்று மனதளவிலும், உணர்வுப்பூர்வமாகவும் நல்ல ஆரோக்கியமான, வலிமையான ஒரு நபராக நான் இருக்கிறேன். அப்படித்தான் நான் உணருகிறேன்.

ஐந்தாவது ஆலோசனை, சரீரமாகிய சபையின் மீது சாய்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய சக விசுவாசிகளின் மீது சாய்ந்து

கொள்ளுங்கள். 1 தெசலோனிக்கேயர் 4:18-ல், பவுல் சொல்கிறார்:

18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

நம்முடைய சக விசுவாசிகளிடமிருந்தும் நாம் ஆறுதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். என் மனைவி மரித்து, தேவனுடைய பிரசன்னத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, என்னுடைய ஐக்கியத்திலிருந்த சக விசுவாசிகள் என் மீது காண்பித்த அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அது என் வாழ்க்கையின் எஞ்சிய நாட்களில் என்னோடு கூடவே இருக்கும். அது மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் ஒரு வலிமையான பாதிப்பை உண்டு பண்ணியது. இப்பொழுது நான் திரும்பிப் பார்த்து, சரீரமாகிய சபையின் ஒரு அங்கமாக நான் இருந்ததற்காக, தேவனுக்கு நன்றி சொல்கிறேன். என்னோடு கூடவே நின்ற, அர்ப்பணிப்பு உணர்வுள்ள விசுவாசிகளின் கூட்டத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். நண்பரே, என்னை நம்புங்கள், அந்த நேரம் வரும்போது, உங்களுக்கு ஆறுதல் சொல்லும் நபர்கள் தேவைப்படுவார்கள். “சகல ஆறுதலின் தேவன்” என்று வேதவசனம், தேவனை அழைக்கும்போது, அதை வாசிப்பதற்கே அழகாக, அருமையாக இருக்கிறதல்லவா? ஆனால் அவர் நம்மை நம்முடைய சக விசுவாசிகள் மூலமாக ஆறுதல்படுத்துகிறார். பிரசங்கி 4:9-10 வசனங்கள் இவ்வாறு சொல்கின்றன:

9 ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம். அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். 10 ஒருவன் விழுந்தால், அவன் உடனாளி அவனைத் தூக்கி விடுவான். ஒண்டியாயிருந்து, விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கி விட துணையில்லையே.

அர்ப்பணிப்பு உணர்வுள்ள விசுவாசிகள், உங்களுக்கு ஆதரவாய் நிற்கப் போகிற ஒரு நேரம் உங்களுக்கு வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

என்னுடைய ஆறாவது மற்றும் கடைசி ஆலோசனை இதுதான்: உங்களுடைய முழு பெலத்தோடு, உண்மையாய், கிறிஸ்துவுக்கு தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற ஊழியத்தை நிறைவேற்றுவதிலிருந்து, கர்த்தருக்கு ஊழியம் செய்வதில் உங்களுக்கிருக்கும் தனிப்பட்ட கடமையிலிருந்து எதுவும் உங்களை பின் வாங்கச் செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பிலிப்பியர் 3:13-14 வசனங்களில், பவுல் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம்:

13 சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன். பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, 14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

வெற்றிகரமான கிறிஸ்தவ ஜீவியத்திற்காக இரகசியங்களில் ஒன்று இதுதான்: பின்னானவைகளை மறக்க வேண்டும். முன்னானவைகளை நோக்கிச் செல்ல வேண்டும். ஒரு பரிசு நமக்கு முன்னே இருக்கிறது! அதை நோக்கி தொடர்ந்து ஓட வேண்டும். பவுலின் மனப்பான்மையை இரண்டு வார்த்தைகளில் நான் தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன்: முன்னோக்கி ஓடுங்கள். மேலானவைகளை நாடுங்கள்! நீங்கள் அப்படித்தான் வாழ வேண்டும். பின் வாங்காதீர்கள். திரும்பிப் பார்க்காதீர்கள்! தொடர்ந்து முன்னோக்கி ஓடுங்கள். மேலானவைகளை நாடுங்கள். இப்பொழுது நான் அந்த அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, என்னுடைய வாழ்க்கையில் அது தேவனுடைய அன்பையும், தேவனுடைய உண்மையையும் ருசிபார்த்த இன்னொரு அனுபவமாக மாறியிருக்கிறது.

நல்லது. இன்றைக்கு என்னுடைய நேரம் முடிந்து விட்டது. அடுத்த வாரம், திரும்பவும் இதே நேரம் உங்களை சந்திக்கிறேன்.

லைக்
பகிரவும்