தேவனை அணுக முதல் தேவை சுய சித்தத்தைத் விட்டுவிடு

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 11
டெரெக் பிரின்ஸின் 'தேவனை அணுகுவதற்கான முதல் தகுதி: சுய சித்தத்தைத் துறத்தல்' என்ற போட்காஸ்ட் மூலம், உங்கள் ஜெப வாழ்க்கையில் சுய சித்தத்தை விடுவிப்பதன் முக்கியத்துவத்தை அறியுங்கள். நம் ஜெபங்களில் மகிழும் அன்புள்ள பிதாவாக தேவன் நம்மை எப்படிக் காண விரும்புகிறார் என்பதை 'எப்படி ஜெபிப்பது, பகுதி 2' தொடரின் மூலம் கற்றுக்கொள்ளுங்கள். வேதத்தில் உள்ள இயேசுவின் ஜெப மாதிரியைப் பின்பற்றி, தேவனுடைய ராஜ்யத்தில் உங்கள் பங்கை நிறைவேற்றுங்கள்.
Transcript
இன்றும் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. நம் அனைவருக்கும் மிகுந்த நடைமுறை முக்கியத்துவமுள்ள “எவ்வாறு ஜெபித்து, ஜெபித்ததைப் பெற்றுக்கொள்வது” என்ற கருப்பொருளைத் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நேற்றைய என்னுடைய அறிமுகச் செய்தியில், நம்மில் பெரும்பாலானோர், தேவனைக் குறித்து நமக்குள் இருக்கும் படத்தை மாற்ற வேண்டும் என்பதை நான் விளக்கிச் சொன்னேன். மாறாத உண்மை என்னவென்றால், தேவன் பிதாவாக இருக்கிறார். அவர் நம்மை நேசிக்கிறார். அவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார். அவர் நம்முடைய ஜெபங்களுக்கு செவிகொடுத்து, அவற்றிற்கு பதில் கொடுப்பதில் பிரியமாயிருக்கிறார். அது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நாம் அடிக்கடி ஜெபிப்பதினால், நாம் மிகவும் அதிகமாக ஜெபித்துக் கொண்டே இருப்பதினால், அவர் களைப்படையப் போவதில்லை. அது அவருக்கு தொந்தரவாக இருக்கப் போவதில்லை. புதிய ஏற்பாட்டில், தேவனுடைய நோக்கம், நம்மை ஆசாரியர்களின் ராஜ்யமாய் உருவாக்குவதுதான். அதாவது நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாய் உருவாக்குவதுதான் அவருடைய நோக்கமாயிருக்கிறது.
ராஜாக்களாய் ஆளுகை செய்ய வேண்டியது நம்முடைய பொறுப்பாயிருக்கிறது. ஆசாரியர்களாய், ஜெபிக்க வேண்டியது நம் பொறுப்பாயிருக்கிறது. முதலில் நாம் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், ஆளுகை செய்வதற்கான தகுதியை நாம் இழந்து விடுகிறோம். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஜெபிப்பதன் மூலமே நாம் ஆளுகை செய்கிறோம். எவ்வளவாய் நாம் ஜெபிக்கிறோமோ, அவ்வளவாய் நம்முடைய ஆளுகை இருக்கும்.
இன்றைக்கும், இவ்வாரத்தின் எஞ்சிய நாட்களிலும், ஜெபத்தில் தேவனை அணுகுவதற்கான சரியான வழியைக் குறித்து நான் பேசப் போகிறேன். ஜெபத்தில் தேவனை சரியான விதத்தில் அணுகுவதற்கு நான்கு முக்கியமான நிபந்தனைகள் இருக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன். இன்றைக்கு நான் முதல் நிபந்தனையைக் குறித்துப் பேசப் போகிறேன்.
இயேசுவே நம் எடுத்துக்காட்டாய் இருக்கிறார். நான் திரும்பவும் எபிரெயர் 5:7-ம் வசனத்திற்குச் செல்கிறேன். நேற்றையை செய்தியிலும் நாம் இதை வாசித்தோம். இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் எவ்வாறு ஜெபித்தார் என்பதைக் குறித்து இது பேசுகிறது:
7 அவர் (இயேசு) மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டது.
ஒரு ஆசாரியராய் இயேசுவே நம் எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்பதை நான் சுட்டிக் காண்பித்தேன். பலி செலுத்துவதுதான் ஒரு ஆசாரியனின் பிரதான பொறுப்பாயிருக்கிறது என்பதையும் நாம் பார்த்தோம். அவர் இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில், ஜெபங்கள் மற்றும் விண்ணப்பங்கள் என்ற பலியை பிதாவாகிய தேவனுக்குச் செலுத்தினார். ஆனால் இவ்வசனத்தின் முடிவில், இன்னும் முக்கியமான ஒன்றும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் ஜெபங்களுக்கு ஏன் எப்பொழுதும் செவிகொடுத்தார் என்ற காரணம் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. “அவருடைய பயபக்தியின் நிமித்தம் அவருடைய ஜெபங்கள் கேட்கப்பட்டன,” என்று அது நமக்குச் சொல்கிறது. இன்றைய என்னுடைய செய்தியில், “பயபக்தியுடன் அர்ப்பணித்தல்” என்ற குறிப்பைத்தான் நான் முக்கியப்படுத்தி, வலியுறுத்திப் பேசப் போகிறேன். தேவனை அணுகும் விஷயத்தில், நாம் பார்க்க வேண்டிய முதல் குறிப்பாய் இது இருக்கிறது.
இயேசுவுக்குள் இருந்த பயபக்தியின் உணர்வு எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டது? கெத்சமேனே தோட்டத்தில் இயேசு ஜெபித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தைத்தான் எபிரெய நிருப ஆசிரியர் இங்கு குறிப்பிடுகிறார். மத்தேயு 26:39-ல் நாம் இதை வாசிக்க முடியும்.
39 சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து, “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும். ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,” என்று ஜெபம் பண்ணினார். இதே அதிகாரத்தில் கொஞ்சம் தள்ளி எழுதப்பட்டிருக்கிற 42-ம் வசனத்தையும் நாம் வாசிப்போம். அது இவ்வாறு சொல்கிறது: 42 அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய், “என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம் பண்ணினாலொழிய, இது என்னை விட்டு நீங்கக் கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது,” என்று ஜெபம் பண்ணினார்.
ஆக, பயபக்தியுடன் அர்ப்பணித்தல் என்றால், “என்னுடைய விருப்பமல்ல. உம்முடைய விருப்பமே நடக்கட்டும். உம்முடைய விருப்பத்தின்படியே ஆகட்டும்,” என்று பிதாவாகிய தேவனிடம் சொல்வதாகும். அது நம்முடைய சுய சித்தத்தை மறுத்து, தேவனுடைய சித்தத்தைத் தழுவிக் கொள்வதாகும். இயேசு ஜெபத்தின் மாதிரியை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட வழிமுறையை அவர் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதைத்தான் நாம் வழக்கமாக, கர்த்தருடைய ஜெபம் என்று அழைக்கிறோம். நாம் பேசிக் கொண்டிருக்கிற இந்த முக்கியமான காரியத்தை, அவர் இந்த ஜெபத்தில் உள்ளடக்கியிருக்கிறார். அதில் அவர் இவ்வாறு ஜெபிக்கிறார், “உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல, இந்தப் பூமியிலும் செய்யப்படுவதாக.”
நாமும் அப்படித்தான் ஜெபிக்க வேண்டும். நாம் தேவனிடம் வரும்போது, “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக,” என்று நாம் சொல்ல வேண்டும். இதையும் நாம் ஜெபத்தில் சேர்த்துச் சொல்ல வேண்டும், “உம்முடைய சித்தமும், என்னுடைய சித்தமும் ஒத்திசைந்து செல்லவில்லை என்றால், உம்முடைய சித்தம் மட்டுமே நிறைவேற்றப்படும்படி, நான் என்னுடைய சித்தத்தை நிராகரிக்கிறேன்.” இரண்டு சித்தங்களுக்கிடையே முரண்பாடு எழும்போது, தேவனுடைய சித்தம் மட்டுமே நிறைவேறும்படி நாம் இடம் கொடுக்க வேண்டும்.
இந்த நிபந்தனையை பூர்த்தி செய்வதன் மூலம், “பழைய சுபாவத்தை” நம்மால் மேற்கொள்ள முடியும். எபேசியர் 4:22-24 வசனங்களில், பவுல் இதைச் சொல்கிறார்:
22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப் போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்து போட்டு, 23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, 24 மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்.
ஆக, நமக்குள் இரண்டு ஆளுமைகள் இருக்கின்றன. பழைய மனுஷன் என்ற ஆளுமை, தேவன் நம்மை மாற்றுவதற்கு முன் நமக்குள் இருந்த சுபாவமாக இருக்கின்றது. புதிய மனுஷன் என்ற ஆளுமை என்பது, நாம் எப்படி மாற வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ, அதுவாயிருக்கிறது. இப்பொழுது புதிய மனுஷனுடைய ஆளுமை நம்மில் வெளிப்பட வேண்டுமென்றால், முதலில் பழைய மனுஷனுடைய ஆளுமையை நாம் களைந்து போட வேண்டும். இதை நாம்தான் செய்ய வேண்டும். நமக்காக தேவன் இதைச் செய்ய மாட்டார். ஆகையால் “என்னுடைய சித்தமல்ல,” என்று நாம் சொல்லும்போது, நாம் பழைய மனுஷனை களைந்து போடுகிறோம். “உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,” என்று சொல்லும்போது, நாம் புதிய மனுஷனைத் தரித்துக் கொள்கிறோம். அதன் மூலம் நம்மடைய மனதின் எண்ணங்களில் ஒரு புதுப்பித்தல் உண்டாகிறது, ஒரு மாற்றமுண்டாகிறது.
பழைய மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படியாத ஒரு முரட்டாட்டக்காரன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய சுதந்திரத்தில் அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. புதிய மனுஷனுக்குத்தான் அது உரிமைச் சொத்தாக, சுதந்திரமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் புதிய மனுஷனுக்கு மட்டுமே உரிய உரிமைச் சொத்தாகிய சுதந்திரத்தின் மீது தன் உரிமையை நிலைநாட்டும்படி பழைய மனுஷனாகிய முரட்டாட்டக்காரன் எழுந்து நிற்பதுதான், கிறிஸ்தவர்களாகிய நம்முடைய வாழ்க்கையில் அடிக்கடி உண்டாகிற பிரச்சனையாக இருக்கிறது. ஆகையால் முரட்டாட்டக்காரனுடைய உரிமை பாராட்டலுக்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும். இயேசு சொன்ன பிரகாரமாகவே, “என் சித்தமல்ல. உம் சித்தத்தின்படியே ஆகட்டும்,” என்று நாமும் சொல்ல வேண்டும்.
பழைய மனுஷன் மற்றும் புதிய மனுஷனுக்கிடையே உள்ள வித்தியாசத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நாம் அறிந்து கொள்வோம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற பழைய மனுஷனுடைய ஜெபங்களுக்கெல்லாம் தேவன் பதில் கொடுப்பார் என்றால், இந்தப் பிரபஞ்சமே உச்சகட்ட குழப்பத்தில்தான் நிற்கும். ஓரிரு எடுத்துக்காட்டுகளை நான் உங்களுக்குக் கொடுக்கின்றேன். முதல் எடுத்துக்காட்டு: ஞாயிறு பாடசாலையில் பயிலும் பிள்ளைகள் ஒரு சுற்றுலா செல்லும்படி திட்டமிடுகிறார்கள். ஆகையால், “கர்த்தாவே, மழை பெய்யாதபடி காத்துக் கொள்ளூம்,” என்று அவர்கள் ஜெபிக்கிறார்கள். அதே நேரத்தில், ஒரு ஏழை விவசாயினுடைய நிலங்களில் பயிர்கள் வாடிப் போயிருக்கின்றன. எனவே, “கர்த்தாவே, நல்ல மழையைப் பெய்யப் பண்ணும். எங்களுக்கு மழை வேண்டும்,” என்று அவர் ஜெபிக்கிறார். தேவன் எவ்வாறு இந்த இரண்டு ஜெபங்களுக்கும் பதில் கொடுக்க முடியும்? தன் சுய விருப்பத்தை மறுத்து, தேவனுடைய விருப்பத்திற்கு இடமளிக்கும் புதிய மனுஷனின் ஜெபமாக அது இல்லையென்றால், இவ்விரண்டு ஜெபங்களில் எந்த ஒன்றிற்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் தேவன் இருக்க மாட்டார். அதுதான் உண்மை.
இப்பொழுது இன்னொரு எடுத்துக்காட்டையும் நாம் பார்ப்போம். இரண்டு தேசங்கள் ஒன்றோடொன்று யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த தேசங்களில் வாழும் கிறிஸ்தவர்கள், “தேவனே, எங்களுடைய தேசத்திற்கு வெற்றி தாரும்,” என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவனால் இதை எப்படிச் செய்ய முடியும்? பாருங்கள், இதைச் செய்யும்படி தேவன் பொறுப்பாளியாக மாட்டார். புதிய மனுஷனின் ஜெபங்களுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பில்தான் தேவன் இருக்கிறார். தன்னுடைய சொந்த விருப்பங்களையே எப்பொழுது பறைசாற்றிக் கொண்டிருக்கும் பழைய முரட்டாட்டக்காரனுடைய ஜெபங்களுக்கு தேவன் நிச்சயமாய் பதிலளிக்க மாட்டார்.
ஆகையால் ஒரு காரியத்திற்காக நாம் ஜெபிக்கும்போது, நாம் நம்மையே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். “எனக்கு இது வேண்டும் என்பதற்காக நான் ஜெபிக்கின்றேனா அல்லது தேவன் இதை விரும்புகிறார் என்பதற்காக நான் ஜெபிக்கின்றேனா?” இதுதான் ஜெபத்தில் பெரிய வித்தியாசத்தை உண்டாக்குகிறது. எனக்கு இது வேண்டும் என்ற நோக்கத்தில் நான் ஜெபிப்பேன் என்றால், என்னுடைய ஜெபங்களுக்கு பதில் கிடைக்காமல் போய் விடும். மாறாக, தேவன் இதை விரும்புகிறார் என்பதற்காக நான் ஜெபிக்கிறேன் என்றால், நிச்சயம், என்னுடைய ஜெபங்களுக்கு பதில் கிடைக்கும்.
சில விஷயங்களில், தங்களுடைய விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் தேவனிடம் கொண்டு வருவதை ஒரு பழக்கமாகவே கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கின்றனர். எடுத்துக்காட்டிற்கு, வியாதியிலிருந்து தங்களுக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ஜெபிக்கலாம் அல்லது தங்களுடைய பணத்தேவை சந்திக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் ஜெபிக்கலாம். தங்களுக்கு தேவன் பணம் அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட விஷயங்களுக்காக நாம் ஜெபிக்கும்போது, ஒவ்வொரு முறையும், நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். “சுகத்திற்காக நான் ஜெபிக்கின்றேன். எனக்கு சுகம் வேண்டும் என்பதற்காக நான் ஜெபிக்கிறேனா? அல்லது நான் சுகமடைய வேண்டும் என்று தேவன் விரும்புகிறபடியால், நான் ஜெபிக்கிறேனா? பண விஷயத்தில் செழிக்க வேண்டும் என்பதற்காக நான் ஜெபிக்கின்றேன். எனக்கு அது வேண்டும் என்பதற்காக நான் ஜெபிக்கிறேனா? அல்லது தேவன் அதை விரும்புகிறார் என்பதற்காக நான் ஜெபிக்கிறேனா?” இதை நாம் சரி செய்வோம் என்றால், ஜெபத்தில் தேவனை அணுகும் நம்முடைய அணுகுமுறையில் பெரிய வித்தியாசம் உண்டாகும்.
பல வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் மகனுக்காக ஜெபிக்கும்படி ஒரு பெண் என்னிடம் வந்தார். அவனுக்கு 12 வயதிருக்கும். சுகப்படுத்த முடியாத ஒரு வியாதி அவனுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டது. அவனுக்காக ஜெபிக்கும்படி நான் ஆயத்தமானேன். ஆனாலும் அந்த நேரத்தில் அந்தப் பெண்ணிடம், “உங்களுடைய மகனை கர்த்தரிடம் ஒப்புக் கொடுத்திருக்கிறீர்களா?” என்ற ஒரு கேள்வியை நான் கேட்டேன். ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று உண்மையாகவே நான் நினைக்கவில்லை. இந்த எளிமையான கேள்வியை நான் அவரிடம் கேட்டபோது, அவர் கடும்கோபம் கொண்டார். அவருடைய மகன் மரிக்கப் போகிறான் என்று நான் அவரிடம் சொல்ல முயற்சிப்பதாக அவர் நினைத்துக் கொண்டார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அவர் தன்னுடைய சித்தத்தை உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கும் வரைக்கும், தேவனுடைய சித்தம் அங்கே நிறைவேறப் போவதில்லை என்பதைத்தான் நான் அவருக்கு சுட்டிக் காண்பிக்க விரும்பினேன். அவர் தன்னுடைய மகனின் மீது தன்னுடைய சித்தத்தை வைத்து அழுத்திக் கொண்டிருக்கும்வரைக்கும், தேவனுடைய கரம் அங்கே இறங்கி, அவருடைய மகனைத் தொட முடியாது. நாம் நம்முடைய சித்தத்தைச் செயல்படுத்தும்படி முயற்சித்துக் கொண்டிருக்கும்வரைக்கும், தேவனுடைய சித்தத்திற்கு நாம் இடம் கொடுக்க மாட்டோம்.
உங்களுடைய சுய சித்தத்தை மறுத்து, தேவனுடைய சித்தத்தைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து நீங்கள் நினைக்கும்போது, மூன்று விஷயங்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று விஷயங்களையும் உங்களுடைய மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். முதல் விஷயம், நீங்கள் உங்களையே நேசிப்பதைக் காட்டிலும், தேவன் உங்களை மிகவும் அதிகமாக நேசிக்கிறார். இரண்டாவது விஷயம், நீங்கள் உங்களையே புரிந்து வைத்திருப்பதைக் காட்டிலும், தேவன் உங்களை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். மூன்றாவதாக, மிகச் சிறந்த காரியங்களையே நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இப்பொழுது நீங்கள் இவ்வாறு சொல்வதற்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா? “என்னுடைய விருப்பத்தின்படி அல்ல. உம்முடைய விருப்பத்தின்படியே ஆகட்டும்.” இதைத்தான் நாம் சொல்ல வேண்டும்.
நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு மெய்யாகவே கீழ்ப்படிந்து இணங்கும்போது, “நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான” சித்தம் என்று வேதாகமம் சொல்கிற ஒன்றை நிச்சயமாக நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஜெபம் என்பது, நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதை தேவனை செய்ய வைப்பதற்கான ஒரு வழிமுறையல்ல. மாறாக, ஜெபம் என்பது, தேவன் என்ன விரும்புகிறாரோ, அதைச் செய்யும்படி தேவனுடைய கரத்தில் ஒரு கருவியாய் உங்களை மாற்றுகிற வழிமுறையாய் இருக்கிறது.
எபேசியர் 3:20-ல் பவுல் என்ன சொல்கிறார் என்பதை கவனிப்போம்:
20 நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு….
இன்னொரு மொழிபெயர்ப்பு இதை இவ்வாறு சொல்கிறது: 20 நாம் ஜெபிப்பதற்கும், கற்பனை செய்து பார்ப்பதற்கும் மிகவும் அதிகமாய் அளவிட முடியாத விதத்தில், நமக்குள் கிரியை செய்கிற அவருடைய வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு…… (நியு இன்டர்நேஷனல் மொழிபெயர்ப்பு)
நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கக்கூடிய தேவனுடைய வல்லமை, நாம் நினைப்பதற்கும், கேட்பதற்கும் மிகவும் அதிகமாய், அளவிட முடியாத ஒன்றாய், அபரிமிதமானதாய், ஏராளம் தாராளமானதாய் இருக்கிறது. நீங்கள் ஒருவேளை கேட்கலாம், “அது எப்படி இருக்க முடியும்? நான் ஜெபிப்பதற்கும், நினைப்பதற்கும், கற்பனை செய்வதற்கும் தாண்டிய ஒரு விஷயம் எதுவாக இருக்க முடியும்?” ஆனால் தேவன் அப்படித்தான் செய்ய விரும்புகிறார். இதுதான் பதில். பாருங்கள், தேவன் செய்ய விரும்புகிற காரியங்களெல்லாம், நீங்களோ நானோ கற்பனை செய்து பார்க்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தைக் காட்டிலும் மிக மிகப் பெரியதாய், நம்மைக் குறித்து நாம் சிந்திப்பதைக் காட்டிலும் அளவிட முடியாத விதத்தில் மிகவும் உன்னதமானதாய், மிகவும் சிறந்ததாய் இருக்கின்றன. ஆனால் நாம் விரும்புகிறவைகளை மட்டும் செய்யும்படி, தேவனை நாம் வற்புறுத்தும்வரைக்கும், தேவன் விரும்புகிற காரியங்களை நாம் தவற விடுகிறோம். ஆகையால் நம்முடைய ஜெபங்களில், தேவனிடமிருந்து சிறந்ததைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், நாம் தேவனிடத்தில் இயேசு வந்த பிரகாரமாகவே, பயபக்தியுடன் நம்மை அர்ப்பணித்தவர்களாய் வர வேண்டும். “தேவனே, என்னுடைய சித்தமல்ல. உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும். தேவனே, சுகமாக வேண்டும் என்று நான் விரும்புகிறதினால், நான் ஜெபிக்கவில்லை. மாறாக, நான் சுகமாக வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆகையால் நான் ஜெபிக்கிறேன்,” என்று நாம் சொல்ல வேண்டும்.
ஒரு மருத்துவமனையில் ஒரு வருடகாலமாய் நான் வியாதிப்படுக்கையில் இருந்தேன். மருத்துவர்களால் என்னை சுகமாக்க முடியவில்லை. சுகமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறபடியால் அல்ல, நான் சுகமடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறபடியால், அவர் என்னை நிச்சயம் சுகமாக்குவார் என்பதை நான் கற்றுக் கொள்ளும்வரை, சுகமடைந்தவனாய் என்னால் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியவில்லை. இந்தப் பாடத்தை உங்களால் கற்றுக் கொள்ள முடிகின்றதா?
சரி, இன்றைக்கு நான் இங்கே நிறுத்த வேண்டும். நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். ஜெபத்தில் தேவனை அணுகுவதற்கான இரண்டாவது நிபந்தனையான “விசுவாசம்” குறித்து நாளை பேசுவேன்.
குறியீடு: RP-R018-102-TAM









