வெற்றிகரமான ஜெபம் - நம்பிக்கையுடன், குற்றமனசாட்சி இல்லாமல்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 9
டெரெக் பிரின்ஸின் 'வெற்றிகரமான ஜெபத்தின் அடிப்படை அம்சங்கள் 1 - தைரியத்துடன், குற்றவுணர்வின்றி' என்ற போதனையின் மூலம் ஜெபத்தின் இரகசியங்களைக் கண்டறியுங்கள். வேதவசனங்களின் அடிப்படையில், குற்றவுணர்வின்றி முழு நம்பிக்கையுடன் கர்த்தரை அணுகுவது ஜெபத்தை எவ்வாறு வல்லமையுள்ளதாக்குகிறது என்பதை அவர் விளக்குகிறார். 'எப்படி ஜெபிப்பது மற்றும் ஜெபத்திற்குப் பதில் பெறுவது எப்படி' என்ற தொடரின் ஒரு பகுதியான இது, உங்கள் ஆன்மீக வாழ்வை மேம்படுத்தும் நடைமுறை ஆலோசனைகளை வழங்குகிறது.
Transcript
ஒரு புதிய வாரத்தின் ஆரம்பத்தில் உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. வாழ்க்கை எனக்குப் போதித்திருக்கிற சத்தியங்களிலிருந்து உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன். இந்தச் சத்தியங்கள் என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வித்தியாசத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. இவை அதையே உங்களுக்கும் செய்யும்.
எனக்கு கடிதம் எழுதிய எல்லோருக்கும் “நன்றி” சொல்லி விட்டு, இந்தச் செய்தியை நான் ஆரம்பிக்கிறேன். நான் இந்தச் செய்தியை முடிக்கும்போது, நாங்கள் இன்னொரு விலாசத்தை உங்களுக்குக் கொடுப்போம். உங்களுடைய தனிப்பட்ட தேவைகளை, பிரச்சனைகளை, உங்களுடைய ஜெப விண்ணப்பங்களை அந்த விலாசத்திற்கு நீங்கள் தாராளமாக எழுதி அனுப்பலாம்.
அன்றாட வாழ்க்கையில், நம் எல்லோருக்குமே மிகவும் அதிகமான முக்கியத்துவம் உடைய ஒரு சத்தியத்தை கடந்த வாரம் உங்களோடு நான் பகிர்ந்து கொண்டேன். “எவ்வாறு ஜெபித்து, நீங்கள் எதற்காக ஜெபித்தீர்களோ அதையே பெற்றுக் கொள்வது?” என்ற சத்தியம்தான் அது. இந்த வாரத்திலும் நான் அதையே தொடர்ந்து பேசப் போகிறேன். இன்னும் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன.
ஜெபத்தில் நாம் எவ்வாறு தேவனை அணுக வேண்டும் என்ற முக்கியமான விஷயத்தைக் குறித்துதான் கடந்த வாரம் நான் பிரசங்கித்தேன். சரியான விஷயத்தில் தேவனை அணுகுவதற்கான நான்கு முக்கியமான நிபந்தனைகளைக் குறித்து நான் விளக்கிச் சொன்னேன். முதலாவதாக, நம் சுய சித்தத்தை நாம் மறுக்க வேண்டும். இரண்டாவதாக, நாம் தேவனை விசுவாசத்தோடு அணுக வேண்டும். தேவன் மீதும், அவருடைய நம்பகத்தன்மையின் மீதும் தனிப்பட்ட விதத்தில் தைரியம் கொண்டவர்களாய் நாம் அணுக வேண்டும். மூன்றாவதாக, நாம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க வேண்டும். நான்காவதாக, தேவனுடைய பிரசன்னத்திற்குள் ஆராதனையோடும், துதியோடும், நன்றியறிதலோடும் நாம் நுழைய வேண்டும்.
இந்த வாரம், நாம் தேவனை அணுகும் விஷயத்தையும் தாண்டி நான் செல்லப் போகிறேன். முழுமையான, வெற்றிகரமான ஜெபத்திற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகிற சில முக்கியமான விஷயங்களை நான் விளக்கிச் சொல்லப் போகிறேன்.
வெற்றிகரமான ஜெபத்திற்குத் தேவையான முதலாவது அத்தியாவசியமான கூறைக் குறித்து இன்று நான் பேசப் போகிறேன். இதை இரண்டு வழிகளில் சொல்லலாம். ஒன்றை, ஆக்கப்பூர்வமாகவும், இன்னொன்றை எதிர்மறையாகவும் நாம் சொல்லலாம். நாம் தைரியத்தோடு வர வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாகவும், ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வு இல்லாமல் என்று எதிர்மறையாகவும் நாம் சொல்ல வேண்டும். இது ஒரு நாணயத்தின் இரண்டு எதிரெதிர் பக்கங்களைப் போல இருக்கிறது. தைரியம் என்பது ஆக்கப்பூர்வமான பக்கமாகவும், ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வு இல்லாமல் என்பது எதிர்மறையான பக்கமாகவும் இருக்கிறது. ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வு என்பது தைரியத்தை வேரோடு பிடுங்கி எறிகின்றது.
வெற்றிகரமான ஜெபத்தின் இந்த அம்சத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்திப் பேசுகிற சில வேதவசனங்களை நாம் பார்ப்போம். நாம் முதலில் எபிரெயர் 4:16-ம் வசனத்திற்குச் செல்வோம்:
16 ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயம் செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
ஏன் நமக்கு இப்படிப்பட்ட தைரியம் இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. முதல் காரணம், சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஒருவரிடம் நாம் ஜெபிக்கின்றோம் என்பதாகும். சிங்காசனம் என்பது எதைக் குறிக்கிறது? அது ஒரு ராஜாவைக் குறிக்கிறது. அவர் ஏதோ சாதாரண ராஜா அல்ல. இவர் ராஜாதி ராஜாவாய், ராஜாக்களுக்கெல்லாம் மேலே மிகப் பெரிய ராஜாவாய் இருக்கிறார். இவர் எல்லா கர்த்தர்களுக்கும் மேலே மகா பெரிய கர்த்தராய், இப்பிரபஞ்சத்தை ஆளுகை செய்யும் ஒரே மகா ராஜாவாய் இருக்கிறார். “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது,” என்று இவர்தான் சொன்னார். நாம் என்ன கேட்கிறோமோ, அதைச் செய்யக்கூடிய அதிகாரமும், வல்லமையுடம் உடைய ஒருவரிடம்தான் நாம் ஜெபிக்கின்றோம். அவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். நம்மிடமிருந்தும், நம்முடைய தனிப்பட்ட தேவைகள் மற்றும் பிரச்சனைகளிலிருந்தும் நம் கண்களை எடுத்து விட்டு, மகிமையான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனை நோக்கி பார்ப்போம்.
அது மட்டுமல்ல, இது கிருபையின் சிங்காசனமாகவும் இருக்கிறது. கிருபை என்பது எப்பொழுதும் நம்முடைய தகுதியைக் குறித்ததோ அல்லது நம்முடைய முயற்சிகளால் சம்பாதிக்கக்கூடியதோ அல்ல. கிருபை என்பது புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கிற மிக முக்கியமான ஒரு வார்த்தையாக இருக்கிறது. இது எப்பொழுதும், நம்முடைய சொந்த முயற்சிகளால் சம்பாதிக்கக்கூடிய அல்லது சாதிக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்திற்கும் அப்பாற்ப்பட்டதாய் இருக்கிறது. இது கிருபையின் சிங்காசனமாக இருக்கிறபடியால், நமக்கு எது தகுதியோ அல்லது நம்மால் என்ன சாதிக்க முடியுமோ அல்லது நம்முடைய சொந்த முயற்சிகளால் நம்மால் என்ன செய்து முடிக்க முடியுமோ, அதன் அடிப்படையில் இங்கு நமக்கு எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. ஆகையால் நீங்கள் ஜெபத்தில் வரும்போது, நீங்கள் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ராஜாதி ராஜாவாகிய தேவனிடம், கிருபையின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் அவரிடம் வருகின்றீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஜெபத்தில், ஏன் நமக்கு இப்படிப்பட்ட தைரியம் இருக்க வேண்டும் என்பதற்கான இரண்டாவது காரணத்தை இப்பொழுது நாம் பார்ப்போம். ஜெபத்தில் வரும்படி, தேவனே நம்மை அழைத்திருக்கிறார் என்பதுதான் அந்தக் காரணம். இரக்கத்தையும், ஏற்ற வேளையில் நமக்கு உதவி செய்யக்கூடிய கிருபையையும் பெற்றுக் கொள்ள தம்மிடம் வரும்படி, தேவனே நம்மை அழைத்திருக்கிறார்.
என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் என்னை விழிப்பாயிருக்கச் செய்யக்கூடிய விஷயங்களில் ஒன்று, எனக்கு தேவனுடைய இரக்கம் தேவை என்பதுதான். தேவனுடைய இரக்கத்தைப் பெற வேண்டிய நிலையில்தான் நான் எப்பொழுதும் நிற்கின்றேன். இந்த உணர்வு எனக்கு எப்பொழுதுமே இருக்கிறது. தேவனுடைய இரக்கத்தைப் பெறும்படி நான் வரும்போதெல்லாம், நான் நிச்சயம் தேவனுடைய இரக்கத்தையே பெற்றுக் கொள்வேன் என்று இந்த வேதவசனம் என்னை உற்சாகப்படுத்தி, விசுவாசிக்கச் செய்கிறது. ஆனால் சிலர் இன்னும் தேவனுடைய இரக்கத்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம், தங்களுக்கு இரக்கம் தேவை என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். ஆகையால்தான் விசுவாசத்தோடு வந்து, அவர்கள் இன்னும் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை.
ஏற்ற வேளையில் உதவியைப் பெற்றுக் கொள்ளும்படி நாம் வரலாம் என்றும் இது சொல்கிறது. ஆகையால் நாம் சூழ்நிலைகளைப் பார்க்கக்கூடாது. “சூழ்நிலை ரொம்பவும் மோசமாக இருக்கிறது. பிரச்சனைகள் மலைபோல பெரிதாக இருக்கிறது. இந்த நிலையில் ஒன்றும் செய்ய முடியாது,” என்று நாம் சொல்லக்கூடாது. காரணம், உதவி தேவைப்படுகிற அந்த நேரத்தில், பிரச்சனைகள் மலைபோல பெரிதாக இருக்கின்ற அந்த நேரத்தில் தம்மண்டை வரும்படிதான் தேவன் நமக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார்.
நான் அந்த வசனத்தை திரும்பவும் வாசிக்கிறேன். இவ்வளவு நேரமும் நான் விளக்கிக் காண்பித்திருக்கிற சிந்தனைகளோடு, இதை வாசிப்போம். எபிரெயர் 4:16-ம் வசனம்:
16 ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயம் செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
இது கிருபையின் சிங்காசனமாகவும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த அழைப்பின் அடிப்படையில் நாம் வரும்போது, தேவன் நம்மை புறம்பே தள்ள மாட்டார்.
இப்பொழுது நாம் அழகான இன்னொரு வேதப்பகுதிக்குச் செல்வோம். எபிரெயர் 10:19-22 வசனங்களை வாசிப்போம்:
19-20 ஆகையால் சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு..........அவருடைய இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறபடியினால்....... 22 ..........................உண்மையுள்ள இருதயத்தோடும், விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
தைரியம், பூரண நிச்சயம் என்ற வார்த்தைகளையெல்லாம் கவனியுங்கள். இவை தேவனண்டை தைரியமாய் வரக்கூடிய உணர்வை வெளிப்படுத்துகிற வார்த்தைகளாய் இருக்கின்றன. இந்த தைரியம், இயேசுவின் இரத்தம் நமக்காக சிந்தப்பட்டிருக்கிறது, தேவனுடைய பிரசன்னத்தில் தெளிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையின் அடிப்படையில் வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அது மட்டுமல்ல, எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று நாம் அறியாத நேரங்களில் கூட, இயேசுவின் இரத்தம் நமக்காக அங்கே பரிந்து பேசி ஜெபித்துக் கொண்டிருக்கிறது.
எபிரெய நிருபத்தில் இந்த இரண்டு வசனங்களிலும், “நாம் சேரக்கடவோம்” என்ற வார்த்தைகள் வருவதை நாம் கவனிக்க முடியும். இது மிக முக்கியமான விஷயமாகும். இது இரண்டு விஷயங்களை சுட்டிக் காண்பிக்கிறது. முதலில், இது ஒரு தீர்மானமாக இருக்கிறது. இரண்டாவதாக, இது சபையோராகிய நாம் எல்லோரும் சேர்ந்து எடுக்கிற தீர்மானமாக இருக்கின்றது. இது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் எடுக்கப்படுகிறது. சில நேரங்களில், தனி நபர்களாய் அல்ல, சபையோராய், ஒன்றுகூடி நாம் தேவனிடம் வர வேண்டியிருக்கிறது. சபையின் தேவைகளுக்காக நாம் அப்படி வருகின்றோம். முழு சரீரமும் ஒன்றாய் இசைந்து சேர்ந்து நம்மோடு ஜெபிக்கும்போது, நாம் அதில் ஒரு அவயமாய் இருக்கின்றோம். ஜெபத்தில் தேவன் அணுக வேண்டிய விஷயத்தில், அதன் ஆக்கப்பூர்வமான பக்கமாக, நாம் தைரியத்துடன் வர வேண்டும் என்று நான் சொன்னேன். அதன் எதிர்மறைப் பக்கமாக, ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வில்லாமல் நாம் வர வேண்டும் என்பதையும் நான் சொன்னேன். ஆக்கினைத்தீர்ப்பின் உணர்விலிருந்து விடுதலையாய் வாழ வேண்டிய அவசியத்தைக் குறித்துப் பேசுகிற சில வேதவசனங்களை நாம் பார்ப்போம். ஒரு நல்ல வசனம், சங்கீதம் 66:18-ல் எழுதப்பட்டிருக்கிறது. சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறான்:
18 என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்கு செவிகொடார்.
என்னுடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்து, தேவனுக்கு முன்பாக என்னுடைய நிலையை நான் சந்தேகிப்பேன் என்றால், நான் மெய்யாகவே மன்னிக்கப்பட்டிருக்கிறேனா என்ற கேள்வி எனக்குள் எழுமென்றால், தேவன் தம்முடைய இரக்கத்தையும், கிருபையையும் பெறும்படி என்னை அழைத்திருக்கும்போது, நான் அதை சந்தேகிப்பேன் என்றால், என்னுடைய தகுதிகளைக் குறித்து நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன் என்று அர்த்தம். நான் அப்படித்தான் விசுவாசிக்கிறேன். நான் செய்திருக்கிற தவறான காரியங்களையும், என் தோல்விகள் மற்றும் பெலவீனங்களையும் குறித்து பிசாசு எனக்கு நினைவுபடுத்தும்படி நான் அனுமதி கொடுத்து விடுகிறேன். நம் மீதும், நம் பெலவீனங்கள் மற்றும் நம் வாழ்க்கையில் காணப்படுகிற தோல்விகள் மீதும் நம் கவனத்தைப் பதிக்கச் செய்யும்படி பிசாசினால் முடியும் என்றால், நம்மால் தேவனிடம் தைரியமாகச் செல்ல முடியாது. ஆகையால்தான், “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருப்பேன் என்றால், கர்த்தர் எனக்கு செவிகொடுக்க மாட்டார்,” என்று சங்கீதக்காரன் சொல்கிறான். இங்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், நாம் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. நாம் நம் கண்களை கிருபையின் சிங்காசனத்திற்கு நேராக ஏறெடுக்க வேண்டும். நம்முடைய தகுதியின் அடிப்படையிலோ அல்லது நம்முடைய சுய நீதியின் அடிப்படையிலோ நாம் வரவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
“கர்த்தாவே, உம்முடைய நீதியின் நிமித்தம், உம்முடைய உண்மையின் நிமித்தம் எனக்கு செவிகொடும்,” என்று தாவீது தான் எழுதிய சங்கீதங்களில் ஒன்றில் சொல்கிறான். நம்முடைய தைரியத்திற்கு அஸ்திபாரமாய் இருப்பது, நம்முடைய சுய நீதியோ அல்லது நம்முடைய உண்மையோ அல்ல, நிச்சயமாக அல்ல என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். மாறாக, தேவனுடைய நீதியும், தேவனுடைய உண்மையும்தான் நம்முடைய தைரியத்திற்கு அஸ்திபாரமாக இருக்கிறது. இதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.
1 யோவான் 3:21-21 வசனங்களை வாசித்துப் பாருங்கள். யோவான் இதே சிந்தையை இங்கு வெளிப்படுத்தியிருக்கிறார்:
21 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியம் கொண்டிருந்து, 22.............நாம் வேண்டிக் கொள்கிறது எதுவோ அதை அவராலே பெற்றுக் கொள்கிறோம்.
பாருங்கள், நம்முடைய இருதயத்திலிருக்கும் அந்த ஆக்கினைத் தீர்ப்பின் உணர்வை நாம் அகற்ற வேண்டும். தேவனண்டை செல்வதற்கு நம்மிடம் ஏதோ ஒரு நீதியும், தகுதியும் இருக்கிறது என்ற சிந்தை, அவரை அணுகும் விஷயத்தில் எந்த தைரியமுமில்லாமல் நம்மை நிற்க வைத்து விடுகிறது. காரணம், நம்மில் ஒரு தகுதியுமில்லை, நீதியுமில்லை. நம்மில் ஒன்றுமில்லை. நம்முடைய தைரியம், நம்மை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆகையால் ஆகையால் நம்முடைய இருதயமே நம்மைக் குற்றந்தீர்க்காத ஒரு இடத்திற்கு நாம் வர வேண்டும். நம்முடைய சுய நீதியையோ அல்லது நம்முடைய ஞானத்தையோ நம்பியிராமல், தேவனுடைய உண்மையை மட்டுமே நம்பியிருக்கிற ஒரு இடத்திற்கு நாம் வர வேண்டும். அதுதான் நமக்குள் தைரியத்தை உண்டாக்குகிறது.
ரோமர் 8:1-ல், பவுல் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
இந்த அதிகாரத்தின் மீதிப் பகுதியில், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிற வாழ்க்கையைக் குறித்த மிகவும் அழகான, மகிமையான ஒரு படத்தை பவுல் வரைந்திருக்கிறார். அந்த வாழ்க்கையில் உண்டாகிற எல்லா ஆசீர்வாதங்களையும், விசேஷமான சிலாக்கியங்களையும், நன்மைகளையும் குறித்து அவர் அதில் எழுதியிருக்கிறார். ஆனால் இந்த அதிகாரத்திற்குள்ளும், இப்படிப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் நுழைவாயிலாய் இருப்பது, இந்த முதல் வசனமே. நாம் இதை திரும்பவும் வாசிப்போம்: “கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” ஆகையால் ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வை நாம் புறந்தள்ள வேண்டும், வெளியே தூக்கி எறிய வேண்டும்.
இதெல்லாம் தேவனை சரியான விதத்தில் அணுகுவதற்கான மூன்றாவது நிபந்தனைக்கு திரும்பிச் செல்கிறது. இதைக் குறித்து கடந்த வாரச் செய்திகளில் நாம் பார்த்தோம். அதாவது இயேசுவின் நாமத்தில் நாம் வர வேண்டும் என்பதுதான் அது. இயேசுவின் நாமத்தில் நாம் வரும்போது, இயேசுவின் நிமித்தம் நம்முடைய ஜெபங்கள் கேட்கப்படும் என்ற நிச்சயத்தை இது நமக்குக் கொடுக்கிறது. இது நம்முடைய வாழ்க்கையின் மீதிருந்தும், நம்முடைய சுய நீதியின் மீதிருந்தும் நம் கவனத்தை எடுக்கச் செய்கிறது. நாம் இயேசுவின் நாமத்தில் வருகிறபடியால், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன என்றும், நாம் தேவனால் அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறோம் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். ஆகையால் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் வருகின்றோம், பிச்சைக்காரர்களாய் அல்ல. இது தேவனைப் பிரியப்படுத்துகிறது. இப்படித்தான் நாம் வர வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
எஸ்தர் புத்தகத்தில் ஒரு அழகான படம் இருக்கிறது. ராஜாவின் பிரசன்னத்தில் எஸ்தர் எப்படி வர வேண்டும் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அது பயங்கரமான நெருக்கடி நேரமாக இருந்தது. அவளுடைய ஜனங்களின் வாழ்க்கை அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது. உள்ளே வரும்படி, ராஜாவும் அவளுக்கு அழைப்பு கொடுக்கவில்லை. அவள் தன் ஜீவனை தன் கைகளில் பிடித்தவளாய் சென்றாள். மூன்று நாட்கள் உபவாசம் இருந்தபிறகு, அவள் தன் ராஜ வஸ்திரத்தை அணிந்தவளாய் ராஜாவின் பிரசன்னத்திற்குள் சென்றாள் என்று வேதவசனம் சொல்கிறது. அவனும் அவளை ஏற்றுக் கொண்டான். அவள் ஒரு ராணியைப்போல உள்ளே சென்றாள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவள் ஒரு பிச்சைக்காரியைப் போல செல்லவில்லை. அப்படித்தான் தம்முடைய சபையும் தம்மிடம் வர வேண்டும் என்று கிறிஸ்து விரும்புகிறார். பிச்சைக்காரியைப் போல் அல்ல, ஒரு ராணியைப் போல வர வேண்டும் என்றுதான் கிறிஸ்து விரும்புகிறார். அவருடைய கிருபை மற்றும் அவருடைய நீதியின் நிமித்தம், அவள் பெற்றுக் கொண்டாள் என்று விசுவாசித்து வர வேண்டும்.
சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். வெற்றிகரமான ஜெபத்தின் இரண்டாவது கூறான, சரியான நோக்கத்தைக் கொண்டிருப்பதைக் குறித்து நாளை பேசுவேன்.
குறியீடு: RP-R019-101-TAM









