திரும்பவும், உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. பல வருடங்களாக வேதாகமத்தை ஆராய்ந்து வாசித்ததிலும், ஊழியத்திலும், தேவன் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிற விலையேறப்பெற்ற வேதவசன சத்தியங்களை நான் உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகின்றேன். “எவ்வாறு ஜெபித்து, நீங்கள் எதற்காக ஜெபித்தீர்களோ அதையே பெற்றுக் கொள்வது,” என்ற தலைப்பில்தான், இந்த வாரச் செய்திகளை நாம் கேட்டுக் கொண்டு வருகின்றோம். வெற்றிகரமான ஜெபத்திற்குத் அத்தியாவசியமான நான்கு முக்கியமான விஷயங்களைக் குறித்து, இதுவரை இந்த வாரச் செய்திகளில் நாம் கேட்டிருக்கிறோம். முதலில், நாம் தைரியத்தோடும், ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வில்லாமலும் வர வேண்டும். இரண்டாவது, தேவன் மகிமைப்பட வேண்டும் என்ற சரியான நோக்கத்தோடு நாம் ஜெபிக்க வேண்டும். மூன்றாவதாக, சக மனுஷர்களோடு, குறிப்பாக, நமக்கு நெருக்கமானவர்களோடு சரியான உறவைக் காத்துக் கொண்டவர்களாய் நாம் ஜெபிக்க வேண்டும். நான்காவதாக, நம்முடைய ஜெபங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட வேண்டும்.

வெற்றிகரமான ஜெபத்திற்கான இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறித்து இன்றைய செய்தியில் நாம் பார்க்கப் போகிறோம். தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் நாம் ஜெபிக்க வேண்டும் என்பதுதான் அது. நம்முடைய ஜெபங்களில் பரிசுத்த ஆவியானர் ஆற்ற வேண்டிய பங்கைக் குறித்து நேற்று பேசினேன். அதாவது நாம் பரிசுத்த ஆவியானவருக்கு கொடுக்க வேண்டிய மையமான, முக்கியமான இடத்தைக் குறித்து நேற்று நான் பேசினேன். ரோமர் 8:14-ம் வசனத்தை நான் மேற்கோள் காண்பித்தேன்.

14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

தேவனுடைய மகனாய், மகளாய் நீங்கள் வாழ வேண்டுமென்றால், நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும். ரோமர் 8:26-27 வசனங்களில், பவுல் குறிப்பாக நம்முடைய ஜெபங்களுக்குப் பொருத்திப் பார்க்கிறார்:

26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியது இன்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கு அடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். 27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.

நான் ஒன்றை தெளிவாகச் சுட்டிக் காண்பித்தேன். பரிசுத்த ஆவியானவருக்கு எவ்வாறு இணங்கி கீழ்ப்படிவது என்பதை அறிந்திருப்பதில்தான் வெற்றிகரமான ஜெபத்திற்கான இரகசியம் அடங்கியிருக்கிறது. அவர் நம் மீது ஆளுகை செய்யும்படி நாம் இடம் கொடுக்க வேண்டும். ஜெபிக்கப்பட வேண்டிய ஜெபத்தை நம் மூலமாய் அவர் ஜெபிக்கும்படி அவருக்கு நாம் இடம் கொடுக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் அதை பல்வேறு வித்தியாசமான வழிகளில் செயல்படுத்துகிறார் என்பதையும் நான் சுட்டிக் காண்பித்தேன். இந்த வேதப்பகுதியில், “வார்த்தைகளில் விவரிக்க முடியாத, சொற்களில் அடங்காத, ஆழமான பெருமூச்சுகளோடு,” என்று பவுல் குறிப்பிடுகிறார். மெய்யாகவே நாம் ஜெபிக்க வேண்டிய காரியங்களில் பெரும்பாலானவற்றை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அவற்றை சொற்களில் அடக்கி விட முடியாது. நம்முடைய சிறிய மனதினால் அவைகளுக்கேற்ற சரியான வார்த்தைகளைச் சிந்திக்க முடியாது. அவ்வளவு ஆழமானவையாய் அவை இருக்கின்றன. இவற்றை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். மற்ற நேரங்களில், நம் சொந்த மொழியில் அவர் ஜெபத்தைக் கொடுக்கின்றார். இது தேவனிடமிருந்து வந்த ஜெபமாக இருக்கிறது. இது நம்முடைய சொந்த சிந்தையில் உருவான ஜெபம் அல்ல. இன்னும் மற்ற நேரங்களில், பரிசுத்த ஆவியானவர் ஒரு ஜெப மொழியில் நமக்கு ஜெபத்தைக் கொடுக்கிறார். இது நாம் அறியாத ஒரு மொழியாயிருக்கிறது. இது நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பாற்ப்பட்டடாய் இருக்கிறது. ஆனால் தேவனோடு நேரடியாக தொடர்புகொண்டு, பேசும்படி இது நமக்குள் கிரியை செய்கிறது. நம் ஆவியிலிருந்து தேவனுடைய ஆவியோடு நாம் பேசுகிறோம். ஆக, இவையெல்லாம், ஜெபிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிற பல்வேறு வழிகளாய் இருக்கிறது.

ஆனால் இன்றைக்கு நம் மனதில் நிலைநிறுத்த வேண்டிய இன்னொரு மிக முக்கியமான கோட்பாட்டைக் குறித்து நான் சொல்லப் போகிறேன். அந்தக் கோட்பாடு இதுதான்: தேவனுடைய ஆவியானவர் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில், அதன் மூலமாகத்தான் செயல்படுகிறார். நான் இதை திரும்பவும் சொல்லப் போகிறேன். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தேவனுடைய ஆவியானவர் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில், அதன் மூலமாகத்தான் செயல்படுகிறார். ஆகையால் நமக்குள் தேவனுடைய ஆவியானவர் இருந்தால் மட்டும் போதாது. நாம் தேவனுடைய வார்த்தையோடும் இணைந்து செயல்பட வேண்டும். அதாவது நமக்குள் வாசம் பண்ணுகிற தேவனுடைய ஆவியானவர், தேவனுடைய வார்த்தையோடு இசைந்து செயல்படும்படி நாம் இடம் கொடுக்க வேண்டும். இதைக் குறிக்கு சங்கீதம் 33:6 பேசுகிறது. இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிப்பில் இந்தக் கோட்பாடு பொருத்திக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. சங்கீதக்காரன் சொல்கிறான்:

6 கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

“ஆவி” என்று அர்த்தங்கொள்கிற எபிரெய வார்த்தையிலிருந்துதான், “சுவாசம்” என்று இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆக, கர்த்தருடைய வார்த்தையும், அவருடைய ஆவியும் ஒன்றாய் இணைந்து, வானங்களையும், அவற்றின் சர்வ சேனையையும் உருவாக்கின. வேறு வார்த்தைகளில் சொன்னால், சிருஷ்டிப்பின் எல்லா வேலைகளிலும், இரண்டு பேர் செயல்பட்டிருக்கின்றனர் என்று சொல்லலாம். அதாவது, தேவனுடைய ஆவியானவரும், தேவனுடைய வார்த்தையும் ஒன்றாய் இணைந்து, இசைந்து, இந்த முழுப் பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்தனர்.

ஆதியாகமம் 1-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். வரலாற்றில், இது எவ்வாறு நிகழ்ந்தது என்று பார்ப்போம். ஆதியாகமம் 1:2-3 வசனங்களை வாசிப்போம்:

2 பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் [தேவனுடைய ஆவியானவர் ஏற்கனவே அங்கே அசைவாடிக் கொண்டிருந்தார்; ஆனாலும் ஒன்றும் அங்கே நடக்கவில்லை என்பதை இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டும். ஆனால் அடுத்த வசனம் சொல்கிறது:] 3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.

“தேவன் சொன்னார்” என்றால், தேவனுடைய வார்த்தை அங்கே முன் சென்றது என்று அர்த்தம். ஆக, தேவனுடைய ஆவியானவர் ஏற்கனவே அங்கு இருந்தார். தேவனுடைய வார்த்தையும் அனுப்பப்பட்டது. தேவனுடைய ஆவியானவரும், தேவனுடைய வார்த்தையும் ஒன்றாய் இணைந்து சிருஷ்டிப்பின் வேலையைச் செய்தன. தேவன் “வெளிச்சம்” என்ற வார்த்தையைச் சொன்னார். “வெளிச்சம்” அங்கே உண்டானது. இங்கே ஒரு வல்லமையான சத்தியத்தை நாம் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். நான் அதை இவ்வாறு சொல்கிறேன். நம்முடைய ஜெபங்களில், தேவனுடைய ஆவியானவரும், தேவனுடைய வார்த்தையும் ஒன்றாய் இணையும்போது, தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமை முழுமையாய் நம் மூலமாக வேலை செய்கிறது. நம்முடைய பார்வையில், நாம் மிகவும் பலவீனர்களாகத் தெரியலாம். ஒரு வரையறைக்குட்பட்டவர்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் தேவனுடைய ஆவியானவரும், தேவனுடைய வார்த்தையும் வழிந்தோடுகிற வாய்க்கால்களாக நம்மையே நாம் விட்டுக் கொடுப்போம் அல்லது அர்ப்பணிப்போம் என்றால், தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமை முழுவதும் நம் ஜெபங்களின் மூலமாய் கிரியை செய்யும். நாம் தேவனோடு ஒன்றாய் இசைந்திருப்போம் என்றால், அதாவது தேவனுடைய ஆவியானவருக்கும் தேவனுடைய வார்த்தைக்கும் இடையில் ஒரு தடையாக நாம் நிற்காதிருப்போம் என்றால், தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமை முழுவதும் நம் ஜெபங்களின் மூலமாய் கிரியை செய்யும். நாம் தேவனுக்கு இணங்கி, அர்ப்பணித்து, கீழ்ப்படிந்து, நெகிழ்ந்து, இசைவாய் நடக்கும்போது, தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமை முழுவதும் நம் ஜெபங்களின் மூலமாய் கிரியை செய்யும். காரணம், இப்பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்படும்படி இந்த இரண்டு காரியங்கள்தான் அத்தியாவசியமான தேவையாயிருந்தன. தேவனுடைய ஆவியானவருக்கும், தேவனுடைய வார்த்தைக்கும் எவ்வாறு இணங்கி கீழ்ப்படிய வேண்டும், இவ்விரண்டும் நம் மூலமாய் கிரியை செய்யும்படி எவ்வாறு இடம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்வோம் என்றால், இவ்விரண்டின் கிரியைகளும் நம் ஜெபங்களில் நமக்குக் கிடைக்கக்கூடியவைகளாய் இருக்கின்றன.

தேவனுடைய ஆவியானவரும், தேவனுடைய வார்த்தையும் ஒரு மனுஷன் மூலம் கிரியை செய்வார்கள் என்றால், அந்த ஒரு மனுஷனுடைய ஜெபத்தின் மூலம் எவ்வளவு பயங்கரமான வல்லமை வெளிப்படும் என்பதை நான் எடுத்துக் காண்பிக்க விரும்புகிறேன். எலியா தான் அந்த மனுஷன். அவனைக் குறித்த வசனம், புதிய ஏற்பாட்டில், யாக்கோபு 5:17- 18 வசனங்களில் காணப்படுகிறது. எலியாவைக் குறித்து யாக்கோபு இவ்வாறு எழுதுகிறார்:

17 எலியா என்பவன் நம்மைப்போல பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதபடிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான். அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. (எலியாவிற்கும் நமக்கும் வித்தியாசம் இருக்கவில்லை. அவன் நம்மைப்போல சாதாரண ஒரு மனுஷனாகத்தான் இருந்தான். இதை நாம் கவனிக்க வேண்டும்). 18 மறுபடியும் ஜெபம் பண்ணினான். அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது. பூமி தன் பலனைத் தந்தது.

எலியா, ஒரு சாதாரண மனுஷன்தான். நம்மிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவனாய் அவன் வாழவில்லை. ஆனாலும் அவன் தன் ஜெபத்தின் மூலம், மூன்றரை வருடங்கள் இஸ்ரவேல் தேசத்தில் மழை பெய்யாதபடி கட்டுப்படுத்தினான். இது நம்மைத் தடுமாறச் செய்கிறது. அப்படித்தானே? ஆனாலும் நம்மிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவனாய், வேறுபட்டவனாய் இங்கு எலியா காண்பிக்கப்படவில்லை. மாறாக, அவன் நமக்கு முன்பாக ஒரு சவாலாக, ஒரு எடுத்துக்காட்டாக வைக்கப்பட்டிருக்கிறான். அவன் அதைச் செய்தான். நம்மாலும் அதைச் செய்ய முடியும் என்று யாக்கோபு சொல்கிறார்.

எலியாவினுடைய ஜெபத்தின் இரகசியம் என்ன? அவனுடைய ஜெபம், தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் அமைந்திருந்தது. அதுதான் அந்த இரகசியம் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய ஆவியானவருடன், தேவனுடைய வார்த்தை ஒன்றாய் இணையும்போது வெளிப்படக்கூடிய அளவு கடந்த வல்லமையை அவன் தன் விசுவாசத்தின் மூலம், தன் ஜெபத்தில் கட்டவிழ்த்து விட்டான். எலியா தன் சொந்த முயற்சியில் ஆரம்பித்த காரியங்களுக்காக ஜெபிக்கவில்லை. அவனுடைய சிந்தையில் உருவான காரியங்களுக்காக அவன் ஜெபிக்கவில்லை. மாறாக, அவன் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் ஜெபித்தான். கர்மேல் பர்வதத்தின் மேல் நிகழ்ந்த சம்பவத்தை நாம் பார்க்க வேண்டும். எலியா, பாகால் தீர்க்கதரிசிகளுக்கு சவால் விட்டான். “உங்களுடைய பலியின் மீது வானத்திலிருந்து அக்கினியை இறங்கச் செய்யுங்கள்,” என்று அவன் அவர்களைப் பார்த்து சவால் விட்டான். அவர்கள் நாளெல்லாம் ஜெபித்தார்கள். அவர்கள் தங்களை ஈட்டிகளால் கீறிக் கொண்டவர்களாய், பலிபீடத்தின் எதிரே குதித்து ஆடினார்கள். அவர்கள் எவ்வளவு வெறி கொண்டவர்களாய் உரக்கக் கத்தியபோதும், ஒன்றும் அங்கே நடக்கவில்லை. அந்த நாளின் முடிவில், எலியா ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவன் அதில் ஒரு பலியைச் செலுத்தினான். பிறகு அவன் இவ்வாறு மிக மிக எளிமையான ஒரு ஜெபத்தைச் செய்தான். அவன் வெறி கொண்டு கத்தவில்லை. பலிபீடத்தின் எதிரே அவன் குதித்து ஆடவும் இல்லை. மாறாக, தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் அவன் ஒரு ஜெபத்தைச் செய்தான். அவன் என்ன ஜெபித்தான் என்பதைக் கவனிப்போம். 1 ராஜாக்கள் 18:36 –ஐ வாசிப்போம்:

36 அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து, “ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப் பண்ணும்.”

எது இங்கு திறவுகோல்? அந்தக் கடைசி வார்த்தைகள்தான். “உம்முடைய வார்த்தையின்படியே நான் செய்திருக்கிறேன்,” என்பதுதான். அதாவது அவன் இவ்வாறு சொல்கிறான், “நானாக எதையும் புதிதாகச் செய்யவில்லை. என்னுடைய உணர்வுகளையோ, என் நடத்துதலையோ பின்பற்றி நான் நடக்கவில்லை. ஏதோ ஒரு மனுஷ தத்துவத்தின் அடிப்படையில் நான் செயல்படவில்லை. மாறாக, கர்த்தாவே, உம்முடைய வார்த்தையின் அடிப்படையில் இதைச் செய்திருக்கிறேன். ஆகையால் நீர் என் பட்சமாய் நிற்பீர் என்று நான் எதிர்பார்க்க முடியும். காரணம், உம்முடைய வார்த்தையின் பின்னால், நீர் எப்பொழுதுமே நிற்கிறீர்.” அவன் இதைத்தான் சொல்கிறான்.

மழையை நிறுத்துவதாகட்டும், மழை பெய்யச் செய்வதாகட்டும், மழையைக் குறித்து இவ்வாறு ஜெபிக்கும்படி, தேவனுடைய எந்த வார்த்தை, எலியாவிற்கு உரிமையைக் கொடுத்தது? முதலில், மழை தடுத்து நிறுத்தப்படுவதைக் குறித்து வேதவசனம் என்ன சொல்கிறது என்று நாம் பார்ப்போம். உபாகமம் 11:16-17 வசனங்களை வாசிப்போம். இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய தேசத்திற்குள் நுழைவதற்கு முன், மோசேயின் மூலம் தேவன் அவர்களை எச்சரிக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்:

16 உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழி விலகி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். 17 இல்லாவிடில், கர்த்தருடைய கோபம் உங்கள் மேல் மூண்டு, மழை பெய்யாமல் போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும், வானத்தை அடைத்துப் போடுவார். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்து போவீர்கள்.

தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் என்ன சொல்கிறார்? கவனிப்போம். “நீங்கள் என்னை விட்டு விலகி, மற்ற தெய்வங்களை வழிபடுவீர்கள் என்றால், பயங்கரமான விளைவுகள் உண்டாகும்,” என்று சொல்லி அவர் எச்சரிக்கிறார். அப்படியே இதைத்தான் எலியாவின் காலத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் செய்தார்கள். தேவனும் தான் சொன்னபடியே, வானத்தை அடைத்துப் போட்டார். மழை அங்கு பெய்யவில்லை. வானத்தை அடைக்கும்படி எலியா தேவனிடம் ஜெபித்தபோது, தேவன் ஏற்கனவே சொல்லியிருந்த தம்முடைய வார்த்தையின் பட்சத்தில் நிற்க வேண்டும் என்றுதான் அவன் தேவனிடம் கேட்டான். அதுதான் அவனுடைய ஜெபத்தில் அவனுக்கு உண்டாயிருந்த அதிகாரமாக இருந்தது.

பிறகு சாலமோன் தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான். அந்த ஆலயத்தை பிரதிஷ்டை செய்தபோது, சாலமோன் இவ்வாறு ஜெபித்தான். 1 ராஜாக்கள் 8:35-36 வசனங்களை வாசிப்போம்:

35 அவர்கள் உமக்கு விரோதமாய் பாவம் செய்ததினால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பம் செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கை பண்ணி, தங்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் (சிட்சிக்கையில்) தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால், 36 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்க வேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்கு சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக.

மழை பெய்யும்படி தேவனிடம் ஜெபிப்பதற்கு இதுதான் வேதவசன ஆதாரமாக இருக்கிறது. தேவனுடைய ஜனங்கள் தங்கள் தவறான வழிகளை விட்டு திரும்பி, மனந்திரும்பி, வந்து, தேவனிடம் ஜெபிக்கும்போது, தேவன் சொல்கிறார், “மழை பெய்யும்படி ஜெபிப்பதற்கு இப்பொழுது உங்களுக்கு வேதவசன ஆதாரம் இருக்கிறது.” ஆக, மழை பெய்யாதபடி தடுக்கப்பட்டபோதும், மழை கொடுக்கப்பட்டபோதும், எலியா ஜெபித்த ஜெபத்திற்கு அங்கே தேவனுடைய வார்த்தையில் வேதவசன ஆதாரம் இருந்தது. அதுதான் ஜெபத்தில் அவனுக்கு உண்டாயிருந்த அதிகாரமாய் இருந்தது. அது அவனுடைய ஜெபத்திற்கான வல்லமையை நம் முன் எடுத்துக் காண்பிக்கிறது.

இதே சூழ்நிலையில், யாக்கோபு இதே அதிகாரத்தில், வியாதிப்பட்டவர்களுக்காக நாம் ஏறெடுக்க வேண்டிய ஜெபத்தைக் குறித்து எழுதுகிறார். யாக்கோபு 5:14-15 வசனங்களை வாசிப்போம்:

14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். 15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவம் செய்தவனானால், அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

விசுவாசத்தில் ஏறெடுக்கப்படுகிற இந்த ஜெபத்தின் அடிப்படை என்ன? எலியாவின் ஜெபத்திற்கு இருந்த அதே அடிப்படைதான், இதற்கும் இருக்கிறது. நாம் ஏறெடுக்கிற ஜெபத்தை, தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் ஏறெடுக்க வேண்டும். வியாதிப்பட்டவர் மீது எண்ணெய் பூசி ஜெபிப்பதென்பது மெய்யாகவே ஒரு அழகான படமாக இருக்கிறது. காரணம், எண்ணெய் என்பது பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாக இருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைக் கட்டவிழ்த்து விட வேண்டுமென்றால், முதலில் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆக, தேவனுடைய வார்த்தையின்படி அடி எடுத்து வைத்து, தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறதோ, அதன்படி நாம் செய்யும்போது, அதாவது, வியாதிப்பட்டவர் மீது எண்ணெய் பூசி ஜெபிக்கும்போது, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்த நம் செயல், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைக் கட்டவிழ்த்து, வியாதிப்பட்டவரைச் சுகமாக்குகிறது.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நேரத்தில், திங்கள் முதல் வெள்ளி வரை மீண்டும் உங்களுடன் வருவேன். அடுத்த வாரம், தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் நாம் ஜெபிக்கக்கூடிய பல்வேறு குறிப்பிட்ட வழிகளை விளக்குவேன். அதன் மூலம், “நாம் வேண்டிக் கொள்வதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய்” பலன்களை உண்டாக்கும்படி பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை எவ்வாறு கட்டவிழ்த்து விடலாம் என்பதையும் பார்ப்போம். இப்போது சில முக்கியமான அறிவிப்புகளுக்காக தொடர்ந்து கேளுங்கள். குறிப்பாக, “Appointment in Jerusalem” என்ற என் புத்தகத்தை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதைச் சொல்வோம். இது என் முதல் மனைவி லிடியாவின் உண்மையான, பரபரப்பான வாழ்க்கைக் கதையாகும். தன்னுடைய சொந்த தேசமான டென்மார்க்கில் பள்ளி ஆசிரியையாக இருந்தபோது இயேசு அவளுக்குத் தோன்றி, தன் வீட்டையும் தனக்கிருந்த அனைத்தையும் விட்டு எருசலேமுக்குச் செல்லும்படி அழைத்ததையும், அங்கே தகப்பனில்லாத பிள்ளைகளுக்கு ஒரு தாயாக அவள் மாறியதையும் இந்தப் புத்தகம் சொல்கிறது. எண்ணற்ற ஆபத்துகளும் அழுத்தங்களும் நடுவில், அவளுடைய உயிர் பிழைப்பும் அந்தப் பிள்ளைகளுடைய உயிர் பிழைப்பும், ஜெபத்தில் தேவனை எவ்வாறு அணுகுவது என்பதை அவள் அறிந்திருந்ததையே பலமுறை சார்ந்திருந்தது. ஜெபம் என்ன செய்ய முடியும் என்பதைக் குறித்து அவளுடைய கதை உங்களுக்கு புதிய புரிதலைக் கொடுக்கும். இதைத் தொடர்ந்து வரும் அறிவிப்பு, இந்தப் புத்தகத்தை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதைச் சொல்லும்.

லைக்
பகிரவும்