மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்த உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்; அந்த உண்மைகள் என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசத்தை ஏற்படுத்தின, அவை உங்களுடைய வாழ்க்கையிலும் அதையே செய்ய முடியும்.

இந்த வாரம் நான் கையாளும் கருப்பொருள் “ஜெபத்தினால் ஆளுகை செய்தல்” என்பதாகும். ஒரு தேசத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களுடைய அரசாங்கத்திற்காக அறிவோடு ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதையும், அவர்கள் விசுவாசத்துடன் அவ்வாறு ஜெபிக்கும்போது, அரசாங்கத்தின் போக்கும் தேசத்தின் விதியும் அவருடைய சித்தத்தோடு ஒத்துப்போகும்படி தேவன் தலையிடுகிறார் என்பதையும் நான் விளக்கியிருக்கிறேன்.

ஜெபத்தினால் வரலாறே மாற்றப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன் என்பதை நேற்றைய செய்தியில் நான் சொன்னேன். இரண்டு முக்கியமான எடுத்துக்காட்டுகளையும் உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இன்று இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறித்து நாம் பார்க்கப் போகிறோம். கிறிஸ்தவர்கள் தங்களுடைய தேசத்தின் அரசாங்கத்திற்காக ஜெபிக்க வேண்டும். தேவனுடைய ஜனங்கள் அவ்வாறு ஜெபிக்கத் தவறும்போது, அதன் விளைவாக, தேவனுடைய சித்தத்திற்கு விரோதமான காரியங்கள் அரசாங்கத்திலும், தேசத்திலும் வரிசையாக நடந்தேறும். ஒழுக்க நெறிமுறைகளில் பெரிய வீழ்ச்சி உண்டாகும். தேசத்தின் தலைமையிலும், ஒட்டுமொத்த தேசத்தின் கலாசாரத்திலும் சீர்கெட்ட நிலை உண்டாகும். பொல்லாத, பேரழிவை உண்டாக்கும் சக்திகள் கட்டவிழ்க்கப்படும். தேவனுடைய ஜனங்களுக்கும், அவருடைய நோக்கங்களுக்கும் விரோதமான காரியங்கள் நடக்கும். இதுதான் அமெரிக்கர்களின் வாழ்க்கையில், இதுதான் இன்றைய சூழ்நிலையாய் இருக்கிறது. ஆகையால், இன்றைய செய்தியில் நான் பேசப் போகிற காரியம், நம்முடைய இப்பொழுதைய சூழ்நிலையோடு நெருக்கமான தொடர்புடையதாயிருக்கிறது.

இன்றைய செய்தியின் தலைப்பை ஒரு கேள்வியாய் உங்கள் முன் வைக்கிறேன். கிறிஸ்தவர்களாகிய நாம் ஜெபிக்கத் தவறியிருக்கிறோம்; நம்முடைய தேசத்தின் நன்மைக்காக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த வல்லமையான அதிகாரத்தை நாம் பயன்படுத்தத் தவறியிருக்கிறோம். இந்த இரண்டு உண்மைகளையும் நாம் ஒத்துக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது இந்தச் சூழ்நிலைக்கான தீர்வைக் கண்டடையும்படி நாம் செய்யக்கூடிய காரியம் ஏதாகிலும் இருக்கிறதா?

ஆம். இருக்கிறது என்பதுதான் என்னுடைய பதில். இந்தக் கேள்விக்கு வேதாகமத்தில் தெளிவான, நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய ஒரு பதில் இருக்கிறது. வேதாகமத்தின் பதிலைப் பார்க்கும்படி செல்வதற்கு முன், கிறிஸ்தவர்களாகிய நமக்கிருக்கும் பொறுப்பின் எல்லைகளை முழுமையாய் நாம் முதலில் எதிர்கொள்ள வேண்டும். நாம் வாழ்கின்ற இந்தச் சமுதாயத்தில், தனித்தன்மை வாய்ந்த, உறுதியான தாக்கத்தை உண்டாக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு, கிறிஸ்தவர்களாகிய நமக்கு இருக்கிறது.

இயேசு இதை தனது மலைப்பிரசங்கத்தில் நமக்குச் சொல்கிறார். அவர் தொடர்ச்சியாக மூன்று மிகத் தெளிவான உருவகங்களைப் பயன்படுத்துகிறார். உப்பு, ஒளி, மலையின் மேல் உள்ள பட்டணம். மத்தேயு 5:13-14 வசனங்களில், அவர் என்ன சொல்கிறார் என்பதை நாம் கவனிப்போம்:

13 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். உப்பானது சாரமற்றுப் போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. 14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது.

ஆக, இங்கு மூன்று உருவகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. உப்பு, ஒளி, மலையின் மேலுள்ள பட்டணம்.

இந்த ஒவ்வொரு உருவகத்திற்கு ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் இருக்கிறது. இயேசு அவைகளை எந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொன்னாரோ, அதை அப்படியே மாற்றி, அவைகளை எடுத்துக் காண்பிக்கப் போகிறேன். முதலில், கிறிஸ்தவர்களாகிய நாம், ஒரு மலையின் மேல் வைக்கப்பட்ட ஒரு பட்டணமாக இருக்கிறோம். அப்படியென்றால் என்ன அர்த்தம்? நாம் எல்லோருடைய பார்வையிலும் தெரியக்கூடிய உயரத்தில் இருக்கிறோம் என்பதைத்தான் இந்த வார்த்தை எடுத்துக் காண்பிக்கிறது என்று நான் நினைக்கிறேன். நாம் எப்பொழுதும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் எல்லோராலும் பார்க்கக்கூடிய ஒரு இடத்தில் இருக்கிறோம். அதாவது நாம் எப்பொழுதும் கண்காணிக்கப்படுகிறோம். இது உண்மை. நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் அர்ப்பணிப்போடு அவரைப் பின்பற்றுகிறீர்கள், நீங்கள் ஒரு குறிப்பிட்ட சபைக்குச் செல்கிறீர்கள் என்பதை நீங்கள் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்திய அந்தக் கணத்திலிருந்து, அவர்கள் இன்னும் அதிகமாய் உங்களை உற்று நோக்கிப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் உங்களுடைய வாழ்க்கையை, உங்களுடைய நடத்தையை, நீங்கள் பழகும் விதத்தை பகுத்து, ஆராய்ந்து பார்க்கிறார்கள். “இது உண்மைதானா அல்லது ஒரு மத முகமூடியை இவர் அணிந்திருக்கிறாரா?” என்ற கேள்வி அவர்களுக்குள் எழுகின்றது. சபையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் பார்க்கப் போவதில்லை. ஆனால் அலுவலகத்தில் அல்லது தொழிற்சாலையில் அல்லது வெளியிடங்களில் அல்லது வீட்டுச் சமையலறையில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை அவர்கள் கவனிக்கிறார்கள். இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கிற நாம் எல்லோரும் மலையின் மேல் அமைந்திருக்கிற ஒரு பட்டணமாக, எல்லோருடைய பார்வைக்கும் தெரிந்தவர்களாய் இருக்கிறோம் என்று இயேசு இங்கு சொல்லியிருக்கிறார். நாம் எல்லா நேரமும் கண்காணிக்கப்படுகிறோம்.

இரண்டாவதாக, நாம் இந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறோம் என்று இயேசு சொல்கிறார். வெளிச்சத்தைக் குறித்து மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அதற்கு மாற்றாக எதுவும் இல்லை. எதுவும் அதனுடைய இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது. கிறிஸ்துவின் சீஷர்களாகிய நம்மைக் குறித்தும் இது உண்மையாயிருக்கிறது. நமக்கு மாற்றாக ஒருவரும் இருக்க முடியாது. ஒருவரும் நம்முடைய இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அதாவது ஒருவரும் நம்முடைய வேலையைச் செய்ய முடியாது. இந்த இடத்தில், வெளிச்சத்தைக் குறித்த இன்னொரு உண்மையையும் சொல்லியாக வேண்டும். வெளிச்சம்தான், இருளை அகற்றுவதற்கான ஒரே தீர்வாயிருக்கிறது. அந்தகாரத்தை விரட்டுவதற்கு வேறு எந்த வழியுமில்லை. வெளிச்சம்தான் ஒரே வழியாயிருக்கிறது. வெளிச்சம் எங்கே வருகிறதோ, அங்கே இனி அந்தகாரம் எனும் பிரச்சனையே இருக்க முடியாது. வெளிச்சம், அந்தகாரப் பிரச்சனையைத் தீர்த்து விடுகிறது. அப்படித்தான் நாம் இந்த பூமியில் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், எதிர்பார்க்கிறார். அதாவது, நாம் வெளிச்சமாய் வாழ்ந்து, அந்தகாரப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாய் இருக்க வேண்டும் என்பதுதான் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

இந்தப் பூமியில் நாம் பயன்படுத்துகிற உப்பை மூன்றாவது உருவமாக இயேசு இங்கு எடுத்துக் காண்பிக்கிறார். உப்பு என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதைக் குறித்து நாம் நிறைய பேச முடியும். ஆனால் உப்பின் இரண்டு முக்கியமான பயன்பாடுகளை இங்கே நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். ஒன்று, அது உணவிற்கு சுவை கொடுக்கிறது. இரண்டாவது, அது உணவு கெட்டுப் போகாமால் பாதுகாக்கிறது. நீங்கள் ஒரு முட்டையைச் சாப்பிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது எவ்வித சுவையுமற்றதாய், சப்பென்று இருக்குமென்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் கொஞ்சம் உப்பை அதன் மேல் தூவுவீர்கள். அது அந்த முட்டைக்கு சுவையைக் கொடுக்கும். இல்லையென்றால், அது சுவையற்றதாய் இருக்கும். ஆக, நாம் இந்தப் பூமிக்கு உப்பாய் இருக்கிறோம் என்றால், சிறு சிறு உப்புக் கற்களாய் இந்தப் பூமியெங்கும் தூவப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தம். இந்தப் பூமிக்கு சுவையூட்டுவதுதான் நம் பொறுப்பாயிருக்கிறது. யாருக்காக நாம் சுவையூட்டுகிறோம்? தேவனுக்காகத்தான், இதைத் தவிர வேறு என்ன பதில் இருக்க முடியும்? நாம் இங்கே இருப்பதன் நோக்கம், இப்பூமியை தேவனுக்கு ஏற்புடையதாய், உகந்ததாய் மாற்ற வேண்டும் என்பதுதான். நாம் இங்கே கிறிஸ்தவர்களாய், தேவனுடைய கிருபையிலும் அன்பிலும், அவரை ஆராதித்து, துதித்து, உயர்த்தி, அவருடைய சித்தத்தின்படி ஜெபித்து, நம்முடைய வாழ்க்கையை நடத்தவில்லை என்றால், இந்த பூமி அவருக்கு ஏற்புடையதாய், உகந்ததாய் இருக்காது. நாம் இங்கே எவ்வாறு வாழ்கின்றோம் என்பதுதான், தேவன் எவ்வாறு இந்தப் பூமியைப் பார்க்கிறார் என்பதில் எல்லா வித்தியாசத்தை உண்டாக்குகிறது. இரகசிய வருகை என்ற முக்கியமான சம்பவம் நடக்கும்போது, தேவன் நம் எல்லோரையும் தன்னோடு சேர்த்துக் கொள்ளப் போகிற அந்த நாளில், இந்த பூமி அதை உணரும், கண்டுபிடிக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அந்த நாள் இன்னும் வரவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில், இந்தப் பூமிக்கு உப்பாய் இருக்க வேண்டிய பொறுப்பை உடையவர்களாய் நாம் இருக்கிறோம்.

உப்பின் இரண்டாவது பயன்பாடு, அது உணவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. ரெப்ரிஜிரேட்டர், அதாவது குளிர்பதன கருவிகள் வருவதற்கு முந்தின நாட்களில், நீண்ட கடல் பிரயாணம் செய்தவர்கள், இறைச்சியை எப்படி எடுத்துச் சென்றனர்? இறைச்சி கெட்டுப் போகாதபடி, அவர்கள் அதை எப்படிப் பாதுகாத்தனர்?

அவர்கள் இறைச்சியின் மீது உப்பிட்டனர். அதாவது உப்பை அதன் மீது தூவினர். அதேபோல, நாம் வாழ்கின்ற இந்த உலகத்தைக் குறித்து, தேவன் தம்முடைய இரக்கம் மற்றும் கிருபையின் நிமித்தம் வைத்திருக்கிற நோக்கங்கள் நிறைவேறித் தீரும்வரை, சீர்கேட்டின் சக்திகளை, அதாவது ஒழுக்கச் சீர்கேடுகள், சமூகச் சீர்கேடுகள் மற்றும் அரசியல் சீர்கேடுகளின் சக்திகளை தடுத்து நிறுத்துவது நம்முடைய பொறுப்பாயிருக்கிறது.

உப்பாய் செயல்பட வேண்டிய நாம், அதாவது சுவையூட்டுவதிலும், கெடாமல் பாதுகாப்பதிலும் நாம் தவறி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம். “உப்பு, தன்னுடைய வேலையைச் செய்யவில்லை என்றால், இனி அது ஒன்றுக்கும் உதவாது,” என்று அவர் சொல்கிறார். நாம் செய்ய வேண்டிய வேலையைச் செய்யவில்லை என்றால், இது நமக்கும் பொருந்தும் என்பதை உணருகிறீர்களா? ஆம், நாமும் ஒன்றுக்கும் உதவாதவர்களாய் இருப்போம்! அந்த நிலையில், “நாம் வெளியே எறியப்படுவோம். மனுஷரால் மிதிக்கப்படுவோம்,” என்று எதிர்பார்க்கலாம். அது நடந்தால், நீங்கள் அதை எப்படி உணருவீர்கள்?

பாருங்கள், இந்தப் பூமியெங்கும் வாழ்கின்ற இலட்சக்கணக்கான ஜனங்கள் கிறிஸ்தவர்களை குறிப்பாக அமெரிக்கக் கிறிஸ்தவர்களை தரைத் தாழ்த்தி, மிதிப்பதையே தங்களுடைய மிகப் பெரிய சிலாக்கியமான நினைக்கிறார்கள். இந்த உண்மை நமக்கு விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும். இதை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்காக தேவனும் கீழே இறங்கி வந்து, நம்மைத் தரைத் தாழ்த்தி, மிதிக்கப் போவதில்லை. ஆனால் அவர் நம்மை கிறிஸ்தவத்தை எதிர்க்கிறவர்களிடமும், அவர்களோடு சேர்ந்து நிற்கிற எல்லோரிடமும் விட்டு விடுவார். அது நமக்கு மிகவும் கசப்பான ஒரு அனுபவமாக இருக்கும். “நமக்கு இது தேவைதான். இயேசு நம்மை ஏற்கனவே எச்சரித்திருந்தார். நாம்தான் அவருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை. நாம் உப்பாய் பயன்படவில்லை என்றால், நாம் வெளியே எறியப்படுவோம்; மற்றவர்களால் மிதிக்கப்படுவோம்,” என்று இயேசு சொல்லியிருந்தாரே. நாம் அவருக்குக் கீழ்ப்படியவில்லை. ஆகையால்தான் நாம் இந்த அவல நிலையில் இருக்கின்றோம்,” என்று நம் வேதனையை வெளிப்படுத்துவோம்.

இதற்கு ஒரு தீர்வு இருக்கிறதா? இதிலிருந்து தப்பிக்க வழி இருக்கிறதா? அல்லது நாம் வெளியே தூக்கி எறியப்பட்டு, மனுஷர்களால் மிதிக்கப்பட்ட வேண்டிய நிலையில்தான் நாம் வாழ வேண்டுமா? தேவன் நமக்கு ஒரு மாற்று வழியைத் தந்திருக்கிறார் என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். தேவன் தம்முடைய இரக்கத்தின் நிமித்தம், நமக்கு ஒரு மாற்று வழியை உண்டு பண்ணியிருக்கிறார் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன். ஆம், இந்தச் சூழ்நிலையை மேம்பட்ட விதத்தில் மாற்றும்படி தேவன் ஒரு மாற்று வழியைத் தந்திருக்கிறார். இதை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான வசனம், 2 நாளாகமம் 7-ம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நாம் அங்கு செல்வோம். 14-ம் வசனத்தைப் பார்ப்போம்.

14 “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்.”

ஒரு கணம் நின்று நிதானித்து, இது யாருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள்,” என்று தேவன் இங்கு சொல்கிறார். எபிரெய மூல மொழியில், “என் நாமத்தினால் அழைக்கப்படுகிறவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது கிறிஸ்தவர்களாகிய உங்களையும் என்னையும் சுட்டிக் காண்பிக்கிறது. நாம் கிறிஸ்தவர்கள். காரணம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நாம் அழைக்கப்படுகிறோம். நாம் அவருடைய ஜனங்கள். ஆகையால் இந்த வாக்குத்தத்தம் நமக்குப் பொருந்துகிறது. இந்த நிலையில், தேவன் நம்மிடமிருந்து நான்கு காரியங்களை எதிர்பார்க்கிறார். நாம் அந்த நான்கு காரியங்களைச் செய்யும்போது, அவர் மூன்று காரியங்களைச் செய்வார்.

நான் செய்வேன் என்று தேவன் சொன்ன மூன்று காரியங்களிலிருந்து ஆரம்பிப்போம். அவர் சொல்கிறார், “நான் பரலோகத்திலிருந்து செவிகொடுப்பேன். நான் அவர்களுடைய பாவத்தை மன்னிப்பேன். நான் அவர்களுடைய தேசத்திற்கு ஷேமத்தை (சுகத்தைக்) கொடுப்பேன்.” எல்லா ஜெபங்களையும் கேட்டு, பதில் கொடுப்பேன் என்று தேவன் இங்கு வாக்குப் பண்ணவில்லை. இதை நாம் கவனிக்க வேண்டும். நாம் தேவனுடைய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்போதுதான், அவர் நம்முடைய ஜெபத்திற்கு செவிகொடுப்பார், பதில் கொடுப்பார். அவர் நம்முடைய பாவத்தையும் மன்னிப்பார். இது அவருடைய ஜனங்களின் பாவம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கும், இந்த தேசத்தில் தேவன் தலையிட வேண்டும் என்பதற்கும் இடையில் எது தடையாய் நிற்கின்றது? அவிசுவாசிகளின் பாவம் அல்ல, தேவனுடைய ஜனங்களின் பாவம்தான் அதற்குத் தடையாய் இருக்கின்றது.

மூன்றாவதாக, தேவன் சொல்கிற காரியம், அவர் நம்முடைய தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுப்பேன் என்பதுதான். அதாவது நம்முடைய தேசத்தின் சீர்கேடுகளைக் குணப்படுத்தி, நலம் பெறச் செய்வேன் என்று தேவன் சொல்கிறார். ஒரு கணம் நின்று, நம்முடைய தேசத்தைக் கூர்ந்து கவனிப்போம். நம்முடைய தேசத்திற்கு ஷேமம் தேவையா என்று சிந்தித்துப் பார்ப்போம். அதாவது நம்முடைய தேசத்தின் சீர்கேடுகள் குணமாக்கப்பட வேண்டுமா என்று நிதானித்துப் பார்ப்போம். நீங்கள் என்ன சொல்வீர்கள்? அமெரிக்க ஜனங்களைக் குறித்து, அமெரிக்க தேசத்தைக் குறித்து நான் சொல்கிறேன். வரலாற்றில் முன் ஒருபோதும் இருந்திராத அளவிற்கு, இன்று இந்தத் தேசத்திற்கு நிச்சயமாய் ஷேமம் தேவைப்படுகிறது. தேவனுடைய சுகமளிக்கும் சிகிச்சை இப்பொழுது அமெரிக்காவிற்கு அத்தியாவசியமாய் தேவைப்படுகிறது. இதுதான் இன்றைய அமெரிக்காவின் நிலையாய் இருக்கிறது. நம்முடைய தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுக்கும்படி தேவன் ஒரு வழியை வைத்திருக்கிறார். அவரே அதைச் சொல்கிறார். நிச்சயமாக, இன்றைக்கு நமக்கு ஒரு வாக்குத்தத்தம் உண்டு. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது நிபந்தனையின் பேரில் நிறைவேற்றப்படுகிற வாக்குத்தத்தமாய் இருக்கிறது. நம் ஜெபத்திற்கு செவிகொடுப்பேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். நம் அக்கிரமங்களை மன்னிப்பேன் என்றும், நம் தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுப்பேன் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். இந்த மூன்று காரியங்களை அவர் செய்வதற்கு முன், நாம் சில காரியங்களைச் செய்தாக வேண்டும் என்று தேவன் சொல்கிறார்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்? தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்ற நான்கு காரியங்கள் எவை? முதலில், நம்மையே நாம் தாழ்த்த வேண்டும். இரண்டாவதாக, நாம் ஜெபிக்க வேண்டும். மூன்றாவதாக, தேவனுடைய முகத்தை நாம் தேட வேண்டும். நான்காவதாக, நம்முடைய அக்கிரம வழிகளை விட்டு நாம் திரும்ப வேண்டும். பாருங்கள், முதலில், நம்மையே நாம் தாழ்த்த வேண்டும். “பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ அவர் கிருபை அளிக்கிறார்,” என்று வேதவசனம் சொல்கிறது. நாம் ஜெபிக்கலாம். ஆனால் தற்பெருமையோடும், அகங்காரத்தோடும், சுயநீதியோடும் நாம் ஜெபிப்போம் என்றால், தேவன் நம் ஜெபத்திற்குச் செவி கொடுக்க மாட்டார். ஆகையால் முதலில் நம்மையே நாம் தாழ்த்த வேண்டும். தேவன் நம் மீதுதான் அந்தப் பொறுப்பை வைத்திருக்கிறார். ஆகையால் “தேவனே என்னைத் தாழ்மையாக்கும்,” என்று நாம் ஜெபிக்க முடியாது. காரணம், வேதவசனம் அப்படிச் சொல்லவில்லை. மாறாக, “நீ உன்னையே தாழ்த்த வேண்டும்,” என்றுதான் தேவன் சொல்லியிருக்கிறார்.

இரண்டாவதாக, நாம் நம்மையே தாழ்த்தும்போது, நாம் ஜெபிக்கிறோம். மூன்றாவதாக, நாம் தேவனுடைய முகத்தைத் தேடுகிறோம். அதற்கு என்ன அர்த்தம்? இது ஒரு ஜெபக்கூட்டம் என்பதையும் தாண்டிய ஒரு அர்த்தங்கொள்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். ஜெபக்கூட்டம் 7:30 மணிக்கு ஆரம்பித்து, 9:00 மணிக்கு முடியலாம். ஆனால் தேவனுடைய முகத்தைத் தேடுவதென்பது, நாம் தேவனைச் சந்தித்து விட்டோம், பதில் வந்து கொண்டிருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ளும்வரை, நாம் தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருக்கிற ஒரு நிலையாய் இருக்கிறது. நான்காவதாக, நம்முடைய அக்கிரமங்களை விட்டு நாம் திரும்புவதாகும். ஒரு உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டும். நம்முடைய அக்கிரமமான வாழ்க்கைமுறைதான், நம்முடைய தேசத்தில் வெடித்துக் கிளம்புகிற எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. நம்முடைய ஜெபமற்ற வாழ்க்கை, சாட்சி பகராத, சாட்சியற்ற வாழ்க்கைதான் இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறது. துன்மார்க்கனுக்கும், அவிசுவாசிக்கும் சவால் விடக்கூடிய விதத்தில், ஒளிவுமறைவு இல்லாமல், வெளிப்படையான நீதியின் வாழ்க்கை நாம் வாழவில்லை என்பதுதான் இதற்கெல்லாம் காரணம். ஆக, பொறுப்பு, நம் மீதுதான் இருக்கிறது.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். தேவன் நம்மிடம் செய்யும்படி எதிர்பார்க்கும் அந்த நான்கு காரியங்களை நாளை இன்னும் முழுமையாக விளக்குவேன். குறிப்பாக, நம்மையே தாழ்த்திக்கொள்ள ஒரு தெளிவான, நடைமுறை வழியை உங்களுக்குக் காண்பிப்பேன்.

லைக்
பகிரவும்