மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது, வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன், அந்த உண்மைகள் என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது, அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.

இந்த வாரம் எனது முதல் இரண்டு பேச்சுகளில், நமது சுதந்தரத்தைப் பெறுவதற்கு பரிசுத்த ஆவியானவர் வகிக்கும் சிறப்புப் பங்கை விளக்கினேன். இப்போது, நமக்கு வருகின்ற நமது சுதந்தரத்தின் உண்மையான வடிவத்தை இன்று நான் விளக்கப் போகிறேன். இது மிகவும் முக்கியமானது, மேலும் இது பல கிறிஸ்தவர்கள் தெளிவாகக் காணாத ஒன்றாகும். இதன் விளைவாக, தேவன் அவர்கள் விரும்பியபடி அவர்கள் தங்கள் சுதந்தரத்துக்குள் நுழைய முடியவில்லை. இதைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய பகுதி 2 பேதுரு 1:2-4 இல் காணப்படுகிறது. நான் இந்த வசனங்களை படிக்கிறேன், இதில் பல கருத்துகளை நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.

2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினாலே உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. 3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது [அதுதான் தேவனின் தெய்வீக வல்லமை] நமக்குத் தந்தருளினதுமன்றி, [நான் அந்த பகுதியை மீண்டும் வாசிக்கப் போகிறேன், ஏனென்றால் அதுதான் முக்கியமானது] ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, 4 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே [அதுதான் இயேசுவின் மகிமையும் நன்மையுமாகும்] நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது [தேவனாலே]. [இப்போது நீங்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய இரண்டாவது பகுதி இதுதான்: தேவன்] மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே [அதாவது வாக்குத்தத்தங்களின் மூலமாக] நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, இதன்மூலம் நீங்கள் தெய்வீக இயல்பில் பங்குபெறலாம், மேலும் தீய இச்சைகளினால் உலகில் ஏற்படும் கேட்டிலிருந்து தப்பிக்கலாம்.

பேதுருவின் வார்த்தைகளில் நான் சில சமயங்களில் வியப்படைகிறேன், ஏனென்றால் அவர் ஒப்பீட்டளவில் கற்காத மனிதராக இருந்தார், இருப்பினும் மிகப்பெரிய உண்மையையும், உயர் மட்ட கல்வியைக் குறிக்கும் பல கருத்துக்களையும், வார்த்தைகளையும் கொடுத்திருக்கிறார். நிச்சயமாக, பேதுரு தனது கல்வியை பரிசுத்த ஆவியானவரின் மூலம் பெற்றார், மேலும் பரிசுத்த ஆவியானவர் உண்மையில் உலகின் மிகச் சிறந்த கல்வியாளர், அவர் இன்றைக்கும் இருக்கிறார்.

இப்போது, பேதுரு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். தர்க்க ரீதியில் உங்களுக்கு பல முக்கியமான காரியங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இரண்டாம் வசனத்துக்கு செல்வோம், “உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.” நான் சுட்டிக்காட்ட வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், நமக்கான தேவனின் ஏற்பாடு ஏராளமாக உள்ளது. தேவன் கஞ்சத்தனமானவர் அல்ல. அவர் ஏழை அல்ல. அவர் நிதி தேவையில் இல்லை. அவர் ஆவிக்குரிய தேவையிலும் இல்லை. அவர் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் ஆசிரியராகவும், ஆதாரமாகவும் இருக்கிறார், அவருடைய மக்களாகிய நமக்கு அவர் வழங்கும்போது, அவர் ஏராளமாக வழங்குகிறார்.

பேதுரு தொடர்ந்து சொல்கிறார், “தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினாலே.” தேவனின் ஒவ்வொரு ஏற்பாடும் தேவனையும் இயேசுவையும் அறிவதன் மூலம் வருகிறது என்பதை இது குறிக்கிறது. தேவனையும் இயேசுவையும் அறிகிற அறிவைத் தவிர வேறு எந்த வழியிலும் ஏற்பாடு வருவதில்லை. நான் இதை இவ்வாறு கூறுகிறேன். தேவன் மட்டுமே ஆதாரம்; இயேசு மட்டுமே வழி; நான் “மட்டும்” என்ற வார்த்தையை வலியுறுத்த விரும்புகிறேன். தேவன் மட்டுமே ஆதாரம்; இயேசு மட்டுமே வழி.

பின்னர் அந்த வியக்கத்தக்க கூற்றுக்கு நாம் வருவோம், 3 வது வசனத்தில், “[தேவன்] யாவற்றையும் நமக்குத் [ஏற்கனவே] தந்தருளினது…” இங்கு வினைச்சொல்லின் காலத்தை கவனிக்க வேண்டும். தேவன் நமக்குத் தருவார் என்று சொல்லவில்லை, நமக்குத் தேவையான அனைத்தையும் தேவன் ஏற்கனவே தந்தருளினார் என்று அது சொல்கிறது. தேவன் ஏற்கனவே நம் தேவைகளை பூர்த்தி செய்துள்ளார். அந்த உண்மையை பற்றிக் கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் அதைத் தவறவிட்டால், தேவனின் ஏற்பாட்டின் தன்மையை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. நமக்குத் தேவையான அனைத்தையும் தேவன் ஏற்கனவே கொடுத்துள்ளார்.

பின்னர் 3ஆம் வனத்தின் அடுத்த பகுதியில், பேதுரு இயேசுவில் அடங்கியுள்ள கருப்பொருளுக்குத் திரும்புகிறார், “தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் [நன்மையினாலும்] நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே.” பேதுரு, இயேசுவில் அடங்கியுள்ளதை இரண்டு முறை கூறுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. இருப்பினும், அந்த பகுதியில் “அறிவு” என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல் முந்தைய வசனத்தில் “அறிவு” என்று மொழிபெயர்க்கப்பட்ட அதே வார்த்தை அல்ல. அந்த மூன்றாவது வசனத்தில், கிரேக்க மொழியில் “அறிவு” என்ற வார்த்தைக்கு “ஒப்புக்கொள்ளுதல்” என்று அர்த்தமாகும். எனவே, இது இயேசுவைப் பற்றிய அறிவார்ந்த, இறையியல் அறிவு மட்டுமல்ல, அவரை ஏற்றுக்கொள்வதும், அவர் யார் என்பதைப் பார்ப்பதும், அவரை அங்கீகரிப்பதும், நம் வாழ்வில் அவருக்கு சரியான இடத்தை வழங்குவதுமாகும்.

நான் அடுத்து என்ன சொல்லப் போகிறேன் என்பதன் அடிப்படையாக, நான் ஏற்கனவே கூறிய அந்த நான்கு கருத்துக்களுக்குச் செல்வோம்.

முதலாவதாக, தேவன் நமக்காக வைத்திருக்கும் ஏற்பாடுகள் மிகுதியாக உள்ளது.

இரண்டாவதாக, தேவன் மட்டுமே ஆதாரம், இயேசு மட்டுமே வழி

மூன்றாவது, தேவனின் வல்லமை ஏற்கனவே நமக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளது, மேலும் நான் சரியான காலத்தை வலியுறுத்துகிறேன். அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தேவன் ஏற்கனவே கொடுத்துவிட்டார்!

நான்காவதாக, இது எதையாவது மீண்டும் செய்வதாகும், அதனுடைய நீட்டிப்பு ஆகும், இவை அனைத்தும் இயேசுவை அறிவதில் அடங்கியுள்ளது. ஆனால், அது அவரை அறிவுபூர்வமாக அல்லது இறையியல் ரீதியாக அறிந்துகொள்வது அல்லது இயேசுவைப் பற்றிய கோட்பாடுகளைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, ஆனால் அது அவரை ஒரு நபராக அறிந்து, நம் வாழ்வில் அவருக்கு சரியான இடத்தைக் கொடுப்பதாகும். இது உண்மையில் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இயேசுவை ஆண்டவராக உருவாக்குகிறது. “இயேசுவை ஒப்புக்கொள்வது” என்ற வார்த்தையில் அதுதான் அடங்கியுள்ளது.

நமக்குத் தேவையான அனைத்தையும் தேவன் ஏற்கனவே கொடுத்திருக்கிறார் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்போது, நீங்கள் இந்த கட்டத்தில், உங்கள் வாழ்க்கையை பார்த்து, “சரி, தேவன் கொடுத்திருந்தால், நான் அதை பார்க்கவில்லையே. என் வாழ்க்கையில் பூர்த்தி செய்யப்படாத தேவைகள் உள்ளன, இன்னும் நான் ஒரு விசுவாசியாக இருக்கிறேன். மேலும், கிறிஸ்தவ வாழ்க்கையில் நடக்கவும், தேவனுக்குச் சேவை செய்யவும், தேவனுடைய மக்களில் ஒருவராக இருக்கவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.” சரி, இங்கே மிகவும் முக்கியமான திறவுகோல் இருக்கிறது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்திய ஒன்று, இது எனது சொந்த ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது. அனைத்தும் எங்கே இருக்கிறது? தேவன் ஏற்கனவே கொடுத்திருந்தால், நாம் ஏன் அதைப் பார்க்கவில்லை? ஏன் நமக்கு அது இருப்பதாகத் தெரியவில்லை? இப்போது, இதோ அதற்கான பதில். நான் பேதுருவின் வார்த்தைகளை வாசிக்கிறேன், பின்னர் அதைப் பற்றி நான் கருத்து கூறுவேன்.

4 ……மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே [அதுதான் இயேசுவின் மகிமையும் நன்மையின் மூலமாகும்] நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

முந்தைய வசனத்தில், “தேவன் நமக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்திருக்கிறார்” என்று வாசிக்கிறோம். இப்போது இந்த வசனத்தில் நாம் வாசிக்கிறோம், “தேவன் தம்முடைய மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் நமக்குத் தந்திருக்கிறார்.” முடிவு என்ன? இது மிகவும் எளிமையானதும், மிகவும் தர்க்கரீதியானதுமாகும். நமக்குத் தேவையான அனைத்தும் தேவனின் வாக்குத்தத்தங்களில் அடங்கியுள்ளன, எனவே, தேவன் நமக்கு வாக்குத்தத்தங்களைக் கொடுத்தபோது, அவற்றில் அவர் காலத்துக்கும் நித்தியத்திற்கும் நமக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளார். நான் அதை இந்த வழியில் சொல்கிறேன், “ஏற்பாடு வாக்குத்தத்தத்தில் இருக்கிறது.” இப்போது இது மிகவும் முக்கியமானது, அதை நீங்கள் உங்கள் மனதில் பதியவைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதை மீண்டும் சொல்கிறேன், “ஏற்பாடு வாக்குத்தத்தத்தில் இருக்கிறது.” ஒருபுறம், தேவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்ததாகக் கூறுகிறார், மறுபுறம், பல கிறிஸ்தவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றில் குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது, இவை ஏன் இப்படி இருக்கிறது என்பதையே விளக்குகிறது. தேவனின் ஏற்பாடு எங்கே என்று அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பதே அதற்கான பதில். தேவனின் ஏற்பாடு அவருடைய வாக்குத்தத்தங்களில் உள்ளது. தர்க்கரீதியாக, உங்கள் ஏற்பாட்டைப் பெறுவதற்கு, நீங்கள் தேவனின் வாக்குத்தத்தங்களை அறிந்துகொள்ள வேண்டும், அந்த வாக்குத்தத்தங்களை எப்படிக் கோருவது, தேவனின் வாக்குத்தத்தங்களை எப்படிக் கடைப்பிடிப்பது, மேலும், அவற்றை எப்படி பெறுவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

இந்த வாரத்தின் பிற்பகுதியில், அந்த பகுதியின் போதனையை இன்னும் குறிப்பாக கையாளப் போகிறேன், ஆனால் தற்போதைக்கு நான் 2 பேதுருவில் உள்ள இந்த பகுதிக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறேன், தேவனின் ஏற்பாடு அவருடைய வாக்குத்தத்தத்தில் உள்ளது என்பதை நாம் உணரும்போது நம் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். நமக்குத் தேவையான வாக்குத்தத்தங்களை நாம் கண்டுபிடித்து, அவற்றை பெற்றுக்கொண்டு, நம் வாழ்வில் பயன்படுத்தத் தொடங்கினால், இரண்டு அற்புதமான முடிவுகள் பின்தொடர்கின்றன. முதலாவது, பேதுரு சொல்கிறார்:

4 [அவர் இதை சொல்கிறார்] இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, ……. அவைகளினாலே [அது வாக்குத்தத்தங்களின் மூலமாகும்] நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, தேவனின் வாக்குத்தத்தங்களைக் கோருவதில் இரண்டு முடிவுகள் உள்ளன. முதலாவது, நேர்மறையானது; இரண்டாவது, எதிர்மறையானது. நேர்மறையான முடிவு என்னவென்றால், நாம் தேவனின் இயல்பில் பங்கேற்கிறோம். இது ஒரு அற்புதமான கூற்றாகும். வேதத்தில் அப்படி இல்லையென்றால், நான் அதைச் சொல்ல துணியமாட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால், தேவனின் வாக்குத்தத்தங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் தேவனின் இயல்பில் பங்காளிகளாக மாறுகிறோம் என்று அது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, வாக்குத்தத்தங்கள் மூலம், தேவனின் தன்மையே நமக்குள் வருகிறது. நாம் மென்மேலும் தெய்வீகமாக மாறுகிறோம். உங்களை புண்படுத்தாமல் நான் இதை சொல்ல தைரியமாக இருக்கிறேனா? இது முறையானது என்று நான் நம்புகிறேன். தேவனின் இயல்பே, அவருடைய வாக்குத்தத்தங்கள் மூலம், நாம் அவற்றைச் செயல்படுத்தும்போது, அவற்றைப் பொருத்தும்போது, அனுபவத்தில் அவற்றை நம்முடையதாக ஆக்கும்போது, அதன்மூலம் தேவனின் இயல்பு நமக்குள் வரத் தொடங்குகிறது.

அது நம்மை தர்க்கரீதியாக, எதிர்மறையான முடிவுக்கு கொண்டு செல்கிறது, அதாவது, “தீய இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பிக்கிறோம்.” நமது பழைய வீழ்ந்த சுபாவம் அடிப்படையில் கேடாக இருக்கிறது – நல்நடக்கைக்குரிய ரீதியில், ஆவிக்குரிய மற்றும் சரீர ரீதியில் கேடாக இருக்கிறது. ஆனால், தேவனின் இயல்பு உள்ளே வருவதால், அது தேவனின் தன்மையால் அந்த கேட்டை மாற்றுகிறது, மேலும், தேவனின் இயல்பு, சாராம்சத்தில் கேடில்லாதது. எனவே, தேவனின் வாக்குத்தத்தங்களுக்கு ஏற்ப ஒரு புது வகையான இயல்பு, ஒரு புது வகையான ஆளுமை, ஒரு புது வகையான வாழ்க்கை நமக்குள் வருகிறது. இதுவே, வேதத்தில் தம்முடைய வார்த்தையில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குத்தத்தங்களின் மூலம் தேவனின் இயல்பும், ஆளுமையும், ஜீவனும் நமக்குள் வருகிறது.

நீங்கள் காணலாம், இது ஒரு மிக முக்கியமான, அற்புதமான முடிவுக்கு நம்மை கொண்டு செல்கிறது. இறுதியில், தேவன் தாமே நமது சுதந்தரமாக மாறுகிறார். இறுதியில், இது வெறும் பொருட்கள் மட்டுமல்ல, ஆசீர்வாதங்கள் மட்டுமல்ல, இது வெறும் அனுபவங்கள் மட்டுமல்ல, ஆனால் நமது இறுதி சுதந்தரம் தேவன் தானே! நாம் தேவனின் இயல்பில் பங்குபெறுகிறோம்! அன்பானவர்களே, தேவனை குறைத்து அளவிடாதீர்கள்! வெறும் அனுபவங்களிலோ அல்லது ஆசீர்வாதங்களிலோ, அல்லது வரங்களிலோ நின்று விடாதீர்கள். அவை அனைத்தும் அற்புதமானவை, ஆனால் தேவனின் உண்மையான நோக்கம், அவருடைய வாக்குத்தத்தங்கள் மூலம் நீங்கள் தேவனையே சுதந்தரித்துக் கொள்வதாகும்.

சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை, நமது சுதந்தரத்துக்குள் நுழைவதற்கு நாம் எடுக்க வேண்டிய உண்மையான படிகளை நடைமுறையில் கையாளப் போகிறேன்.

லைக்
பகிரவும்