இயேசுவை சந்தித்ததன் விளைவுகள்

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
வாழ்க்கையில் ஆழமான அர்த்தத்தையும் நோக்கத்தையும் நீங்கள் தேடுகிறீர்களா? இந்த வல்லமையான செய்தியில், டெரெக் பிரின்ஸ் சத்தியத்தைத் தேடிய தனது பயணத்தையும், இயேசுவைச் சந்தித்தபோது அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையும் விவரிக்கிறார். உயிருள்ள இயேசுவைச் சந்திப்பதன் மூலம் உங்கள் வாழ்வில் ஏற்படும் அற்புதமான மாற்றத்தையும், அவருடைய உயிர்த்தெழுதலின் உண்மையான வல்லமையையும் கண்டறியுங்கள்.
Transcript
இந்த வாரம் நான் ஒரு இளைஞனாக எனது தனிப்பட்ட சத்தியத்தின் தேடலை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். என் பதின்ம வயது முதல், எப்படியாவது வாழ்க்கையில் ஒரு அர்த்தமும் நோக்கமும் இருக்க வேண்டும் என்ற உள்உணர்வு எனக்கு எப்போதும் இருந்தது, அதை எங்கே கண்டுபிடிப்பது என்று மட்டும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனக்குத் தெரிந்த கிறிஸ்தவத்தில் பதிலைத் தேடினேன், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், நான் தத்துவம் மற்றும் யோகாவில் பார்த்தேன், ஆனால், மீண்டும் நான் ஏமாற்றமடைந்தேன். இரண்டாம் உலகப்போர் வெடித்தபோது, நான் பிரிட்டிஷ் இராணுவத்தில் மருத்துவமனை உதவியாளராக சேர்க்கப்பட்டேன், பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு பைபிளை என்னுடன் எடுத்துச் சென்றேன். ஆனால், மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அடைந்தேன். வேதத்தில் எந்தவித ஒத்திசைவான செய்தியையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர், நான் ஒரு வித்தியாசமான கிறிஸ்தவ குடும்பத்தை சந்தித்தேன், அவர்கள் தாழ்மையானவர்களும், படிக்காதவர்களுமாக இருந்தார்கள், ஆனால் வித்தியாசமானவர்கள். அவர்களது வீட்டில் அவர்களோடு இருந்தபோது, அவர்களைப் பற்றி இரண்டு விஷயங்களை உணர்ந்தேன். முதலாவது, அவர்களுக்கு பைபிள் ஒரு அர்த்தமுள்ள, புதுப்பிக்கப்பட்ட புத்தகமாக இருந்தது. இரண்டாவதாக, அவர்கள் தேவனுடன் உண்மையான தனிப்பட்ட உறவைக் கொண்டிருந்தார்கள். கடைசியில், இந்தக் குடும்பம் என்ன வைத்திருந்தார்களோ அதையெல்லாம் தேவனிடம் வேண்டிக் கொள்ள முடிவு செய்தேன். மீண்டும், நான் குழப்பமடைந்தேன், விட்டுக்கொடுக்கும் கட்டத்தில் இருந்தேன். பின்னர், திடீரென்று, நான் இரண்டு விஷயங்களுடன் தொடர்பு கொண்டேன்: ஒரு வல்லமை மற்றும் ஒரு நபர் ஆகும். இறுதியாக, நான் வல்லமை மற்றும் நபர் ஆகியோரை நான் அடையாளம் கண்டேன். அந்த வல்லமைதான் பரிசுத்த ஆவியானவர்; அந்த நபர்தான் இயேசுவானவர். சத்தியம் ஒரு நபர் என்றும், அந்த நபர் நாசரேத்தின் இயேசு என்றும் நான் கண்டுபிடித்தேன்.
இயேசுவை சந்தித்ததன் விளைவாக என் வாழ்வில் உடனடியாக ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்களை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இந்த மாற்றங்களை முடிந்தவரை ஒரு குறிக்கோளான வகையில் விவரிக்க விரும்புகிறேன்.
முதல் மாற்றம் என்னவென்றால், அந்த நேரத்திலிருந்து இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை என்னால் ஒருபோதும் சந்தேகிக்க முடியவில்லை. நான் அவருக்கு கீழ்ப்படியாமல் இருக்கவும் அல்லது அவருக்கு விசுவாசமற்றவனாக இருக்கவும் சோதிக்கப்படலாம், ஆனால் இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை என்னால் சந்தேகிக்க முடியாது. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், அந்த தருணத்திலிருந்து இன்றுவரை, இது என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரே உண்மையாக இருந்தது – அந்த நாசரேத்தின் இயேசு சிலுவையில் தொங்கி, கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு, உயிருடன் இருக்கிறார், அவரை நான் அறிவேன். இது பகுத்தறிவின் விளைவு அல்ல. இது படிப்பின் விளைவு அல்ல. இது ஊழியப் பயிற்சியின் விளைவும் அல்ல. இது ஒரு சந்திப்பின் விளைவாகும். நான் அவரை சந்தித்தேன். அவர் என்னை சந்தித்தார். மேலும், நான் அவரை அறிவேன். ஒவ்வொரு நாளும் நான் அவரை அறிவேன். ஒவ்வொரு மணி நேரமும் நான் அவருடைய பிரசன்னத்தை உணர்ந்திருக்கிறேன்.
நான் சுட்டிக்காட்டும் இரண்டாவது முக்கிய விளைவு என்னவென்றால், ஜெபம் ஒரு சுவாசத்தைப் போலவே இயற்கையானதாக எனக்கு இருந்தது. நான் ஜெபிக்க முயன்ற அந்த இரவிலே, பரிசுத்த ஆவியானவர் என் வாழ்வில் வரும்வரை, எப்படி ஜெபிப்பது என்று எனக்குத் தெரியவில்லை, என்ன வார்த்தைகள் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை, யாரிடம் ஜெபம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அடுத்த நாள், நான் எனது வழக்கமான இராணுவப் பணிகளுக்குச் சென்றபோது, நான் எப்போதும் ஜெபித்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்தேன். நான் முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு சுவாசமும் ஒரு ஜெபமாக இருந்தது. குடிக்க தண்ணீர் எடுக்க குழாயின் அருகே சென்றது எனக்கு நினைவிருக்கிறது. இப்போது, பொதுவாக, அது மிகவும் சாதாரணமான காரியமாக இருந்திருக்கும், அதற்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுத்திருக்க மாட்டேன், ஆனால், தேவனுக்கு நன்றி சொல்லும் வரையில் அந்த தண்ணீரை என்னால் குடிக்க முடியவில்லை. தேவனிடம் பேசி, அவருக்கு நன்றி சொல்வது மிகவும் இயல்பாகத் தோன்றியது. ஜெபம் என்பது ஒரு மதக் கட்டிடத்தில் நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று எனவும், அது சில வகையான மத மனப்பான்மை எனவும் நான் எப்போதும் நினைத்தேன், ஆனால் ஜெபம் என்பது தேவனுடன் தொடர்புகொள்வது என்பதை நான் கண்டுபிடித்தேன், மேலும், பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வந்ததால் தேவனுடன் தொடர்புகொள்வது எனக்கு இயற்கையாகவே எளிதாக இருந்தது. தேவனுடனான இந்த தொடர்பு எனக்கு உள்ளான வலிமையை தந்தது. என்னை சுற்றி என்ன நடந்தாலும் பரவாயில்லை, நான் விழித்திருக்கும் எல்லா நேரங்களிலும் தேவனுடன் இந்த உள்ளான தொடர்பு இருந்தது.
நான் சுட்டிக்காட்டும் மூன்றாவது விளைவு என்னவென்றால், பைபிள் திடீரென்று ஒரு அர்த்தமுள்ள புத்தகமாக மாறியது. ஒன்பது மாதங்களாக அதைப் படித்துப் புரிந்துகொள்ள முயன்றேன். நான் ஆதியாகமத்தின் தொடக்கத்திலிருந்து யோபு புத்தகத்தில் எங்கோ இருந்தேன். வாசிக்கிறதைப் பொறுத்த வரையில் நான் நிறைய முன்னேற்றத்தை அடைந்தேன், ஆனால் என்னால் புத்தகத்தை வகைப்படுத்த முடியவில்லை. என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. அது என்ன சொல்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நான் இயேசுவையும், பரிசுத்த ஆவியானவரையும் என் வாழ்வில் சந்தித்த மறுநாளில், பைபிளுடனான எனது உறவில் ஒரு முழுமையான, உடனடி மாற்றம் ஏற்பட்டது. இது படிப்படியான ஒன்றாகும், இது ஒரு செயல்முறையின் விளைவு அல்ல, இது ஒரு அறிவுசார் போராட்டத்தால் வரவில்லை, இது இந்த உறவிலிருந்து வந்தது. நான் எங்கு நிறுத்தியிருந்தேனோ, அது யோபு புத்தகத்தில் எங்கோ இருந்தது, அங்கேயே படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது, அதனால் நான் என் பைபிளின் பக்கங்களைத் திருப்பிக் கொண்டிருந்தேன், அதைத் தேடாமலே திருப்பும்போது, சங்கீதம் 126 க்கு சென்றேன், அதில் முதல் இரண்டு வசனங்களை வாசித்தேன்:
“சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும் போது, சொப்பனம் காண்கிறவர்கள் போல் இருந்தோம். அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது….”
நான் அந்த வார்த்தைகளை வாசித்தபோது, “அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும்… நிறைந்திருந்தது,” முந்தைய இரவு பரிசுத்த ஆவியானவர் என் மீது வந்தபோது அந்த நகைப்பின் நதி என்னுள் பாய்ந்ததும் என் மனம் உடனடியாக என் அனுபவத்திற்கு திரும்பியது, அது எவ்வளவு மிகத் துல்லியமாக விளக்கப்பட்டிருந்தது என்பதைப் பார்த்தேன். “நாம் சிரித்தோம்” என்று கூறவில்லை, “நம்முடைய வாய் நகைப்பினால்… நிறைந்திருந்தது,” என்று சொல்லப்பட்டது. நகைப்பு வேறொரு வழியில் இருந்து வந்து அவர்களை நிரப்பி அவர்கள் வாய் வழியாக வெளியேறுவது போல் இருந்தது. அதுதான் எனக்கு நடந்தது என்று நான் கண்டேன். என் எதிர்வினை இவ்வாறு இருந்தது, “நான் ஏன் இத்தனை வருடங்கள் ஆலயத்துக்கு சென்றேன், வேதத்தில் இப்படி இருக்கிறது என்று யாரும் என்னிடம் சொல்லவில்லையே?” என்பதை நான் அறிக்கைசெய்ய வேண்டும். அதன் பிறகு மீண்டும், மீண்டும் நான் வேதத்தை வாசித்து கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவரின் மூலம், என் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளதை நான் கண்டேன். உண்மையில், என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அர்த்தமுள்ள விளக்கத்திற்கு வேறு எங்கும் செல்ல முடியாது என்று நான் கண்டேன்.
நான் இதைச் சொல்ல வேண்டும்: அன்று முதல் இன்று வரை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நான் வேதத்தைப் படிக்கத் தொடங்கும் போது அது இப்படித்தான் இருக்கும்: இந்த உலகத்தில், தேவன் மற்றும் நான் என்ற இரண்டு நபர்கள் மட்டுமே இருப்பது போலவும், வேதம் தேவனாகவும், அவர் என்னிடம் பேசுவதாகவும் இருக்கும்.
நான் ஆசிரியரை அறிந்ததிலிருந்து வேதம்தான் தேவனுடைய வார்த்தை என்று நம்புவதில் எனக்கு ஒரு இறையியல் அல்லது அறிவுசார் பிரச்சனை இல்லை. உண்மையில், எனது அறிவுசார் பின்னணியில், வேதத்தை நம்பாதவர்களை விட, நான் தனிப்பட்ட முறையில் அறிவு ரீதியாக எந்த விதத்திலும் தாழ்ந்தவனாக உணரவில்லை என்று சொல்ல வேண்டும். நான் ஒரு தொழில்முறை தர்க்கவாதியாக இருந்தேன், அந்த குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கினேன், எனது சொந்த பரிசோதனையின் அடிப்படையில் நான் சொல்ல வேண்டும், பைபிள் நான் இதுவரை படித்தவற்றில் மிகவும் அறிவார்ந்த, தர்க்கரீதியான புத்தகம் ஆகும். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு அர்த்தமுள்ள புத்தகம். அது தேவனுடைய வார்த்தையாகும். ஒரு நபரைப் போல உயிருள்ள குரலில் என்னிடம் பேசுகின்ற ஒரு தனிப்பட்ட தேவனாகும்.
இயேசுவுடனான எனது சந்திப்பின் மற்ற இரண்டு குறிக்கோளான விளைவுகளை இப்போது சொல்கிறேன், அது என் வாழ்க்கையை மாற்றிய இரண்டு விஷயங்கள். நான் இப்போது குறிப்பிடப் போகும் முதல் விஷயம், ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், மாறாக நகைச்சுவையானது, ஆனால் அது மிகவும் உண்மையானது. அடுத்த நாள் மாலை, நான் இயேசுவை சந்தித்த பிறகு, நான் வழக்கம் போல், பப் என்று சொல்லப்படுகிற பாருக்கு எனது வழக்கமான விஸ்கி கோட்டாவைப் பெறச் சென்றேன். விஸ்கி குடிப்பதில் எந்த தார்மீக அல்லது மத ரீதியான மனஉறுத்தலும் இல்லை. உண்மையில், நான் அந்த கருத்தை அழுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் நான் உள்ளே செல்லவேண்டும் என்று நினைத்து பப் வாசலுக்கு சென்றபோது, மிகவும் அசாதாரணமான விஷயம் நடந்தது – என் கால்கள் கட்டப்பட்டது. நான் எவ்வளவோ முயன்றும், என்னால் உடலை அந்த இடத்திற்கு கொண்டுசெல்ல முடியவில்லை. முதலில் நான் கோபமாகவும், விரக்தியாகவும் உணர்ந்தேன். ஆனால் அந்த இடம் எனக்கு என்ன கொடுக்க முடியும் என்று நினைத்து, அதில் ஆர்வம் இல்லாததை நான் திடீரென்று உணர்ந்தேன். தளர்வாக இருக்க எனக்கு விஸ்கி தேவையில்லை. ஆழமான, நிரந்தரமான ஒன்றை நான் கண்டுபிடித்தேன், சில கிளாஸ் கொண்ட விஸ்கியை விட அதன் விளைவுகள் மிகவும் நீடித்தவை. அதனால் நான் திரும்பி அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன். முந்தைய நாள் மாலை என் மீது வந்த அந்த மர்ம வல்லமை என் கால்களைக் கட்டுபடுத்தியது, மேலும், என் கால்கள் அந்த இடத்திற்குள் செல்ல தடை விதித்தது.
நான் குறிப்பிடும் இறுதி விளைவை யோவான் 7:37-39இல் இயேசுவின் வார்த்தைகளில் வெளிப்படுத்துவேன். அது கூறுகிறது:
“பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.”
அந்த வார்த்தைகளுக்கு செல்லலாம், “ஒருவன் தாகமாயிருந்தால்..” திரும்பிப் பார்க்கையில், நான் பல ஆண்டுகளாக தாகமாக இருந்தேன் என்பதை உணர்ந்தேன், ஆனால் என் தாகத்தை எங்கே தீர்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. பாருங்கள், மனிதன் ஆவி, ஆத்துமா, மற்றும் சரீரம் என்ற மூன்று கூறுகளால் ஆனவன் என்று வேதம் வெளிப்படுத்துகிறது. இப்போது, பிளாட்டோவின் போதனையின் முக்கிய அம்சம் ஆத்துமாவை வலியுறுத்துவதாகும். எனவே, தத்துவம், இசை, கலை, பயணம் செய்வது போன்ற பல வழிகளில் என் ஆத்துமாவுக்குத் திருப்தியைத் தேடிக்கொண்டேன். நான் பல வழிகளில் என் சரீரத்துக்கு திருப்தியைத் தேடினேன். ஆனால் அந்த திருப்திகளை எல்லாம் நான் தேடிகொண்டபோது, நான் திருப்தியடையாமல் இருந்தேன்.
இந்த அனுபவத்தின் விளைவாக, என்னில் தாகமாக இருப்பது எனது ஆத்துமாவோ அல்லது எனது உடலோ இல்லை, ஆனால் எனது ஆவி என்பதை நான் உணர்ந்தேன். பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்தவுடன், அந்த தாகத்திற்கான திருப்தியை உடனடியாக அளித்தார். மேலும், நான் இயேசு சொன்னது போல, “தண்ணீருள்ள நதிகள் ஓடும் ஒரு கால்வாய்” ஆனேன். அதுதான் என் வாழ்க்கையில் நடந்தது.
இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் உங்களுடன் மீண்டும் வருவேன். அடுத்த வாரம் என் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து இன்னும் சில பக்கங்களைத் திறக்கிறேன். அடுத்த வாரத்தில் எனது கருப்பொருள் “பாலைவனத்தில் சீஷனாக்கப்படுதல்” ஆகும். நான் வட ஆப்பிரிக்காவின் பாலைவனங்களில் கழித்த மூன்று வருடங்களைப் பற்றி பேசுகிறேன்.
நீங்கள் இந்த வானொலி ஊழியத்தினால் உதவிப் பெற்றிருந்தால், தயவுசெய்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கடிதம் கிடைத்ததும், தேவனை நம்புபவர்களை கேலி செய்த தத்துவப் பேராசிரியர்கள் இருந்த ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் நான் வழங்கிய ஒரு உரையின் பிரதியை உங்களுக்கு அனுப்புவோம். அவர்களுடைய தாக்குதலுக்கு பதிலளிக்க ஒரு கிறிஸ்தவ ஊழியரை மாணவர்கள் கேட்டிருந்தார்கள். என் உரையின் தலைப்பு, “தத்துவம், பைபிள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்டது” என்பதாகும்.
மேலும், இந்த வாரம் நான் வழங்கிய ஐந்து உரைகளையும் கொண்ட “சத்தியத்திற்கான தேடல்” என்ற தலைப்புடைய ஒரே ஒரு அறுபது நிமிட கேசெட்டை எவ்வாறு ஆர்டர் செய்யலாம் என்பதையும் உங்களுக்குத் தெரிவிப்போம். இந்தத் தகவலுக்காக இப்போது தொடர்ந்து கேளுங்கள்.
குறியீடு: RP-R030-105-TAM









