மனதில் புதிதாக்கப்படு

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: செப்டம்பர் 2026
Read Time: 9
உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டத்தைக் கண்டறியுங்கள்! ‘உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டத்தை எப்படிக் கண்டறிவது’ (பகுதி 3) என்ற தொடரில், நற்செய்தியின் மூலம் மனம் புதிதாக்கப்படுவதன் அவசியத்தை டெரெக் பிரின்ஸ் விளக்குகிறார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் உருமாற்றப்பட்ட மனம், தேவனுடைய பரிபூரண சித்தத்தைப் புரிந்துகொண்டு நிறைவேற்ற உங்களுக்கு எப்படி உதவுகிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
Transcript
என்னுடைய கடந்த இரண்டு செய்திகளில், முதல் இரண்டு அடிகளைக் குறித்து நான் விளக்கமாகச் சொன்னேன். முதல் அடி: தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் புதுச் சிருஷ்டியாய் உருவாக்கும்படி இடம் கொடுக்க வேண்டும். இரண்டாம் அடி: நம்முடைய சரீரத்தை தேவனுக்கு ஜீவ பலியாய் ஒப்புக்கொடுக்க வேண்டும். நாம் இந்த இரண்டு அடிகளையும் எடுத்து வைக்கும்போது, தேவன் நம்முடைய மனதைப் புதிதாக்க ஆரம்பிக்கிறார். அவர் நாம் சிந்திக்கிற விதத்தையே முற்றிலும் மாற்ற ஆரம்பிக்கிறார். பிறகு நம்முடைய புதுப்பிக்கப்பட்ட மனதிற்குள், அவர் நம்மைக் குறித்த தம்முடைய சித்தத்தை மூன்று படிப்படியான தொடர்ச்சியான கட்டங்களில் வெளிப்படுத்துகிறார்: முதலில், நன்மையான சித்தம். பிறகு இரண்டாவதாக, விரும்பத்தக்க, பிரியமான சித்தம். மூன்றாவதாக, பரிபூரணமான சித்தம். வேறு வார்த்தைகளில் சொன்னால், தேவனுடைய சித்தத்தைக் குறித்த வெளிப்பாட்டில் நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்லும்போது, அது இன்னும் இன்னும் மேம்பட்டதாக மாறிக் கொண்டே போகிறது என்று சொல்ல வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட மனதின் சுபாவத்தைக் குறித்து இன்னும் முழுமையாக இன்று நான் விளக்கிச் சொல்லப் போகிறேன். ரோமர் 12:1-2 வசனங்களில் பவுல் என்ன சொன்னார் என்பதைக் குறித்து நேற்று நாம் பார்த்தோம். நம்முடைய மனம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்து 2-ம் வசனத்தில் அவர் எழுதியிருக்கிறார். இப்பொழுது நான் அடுத்த வசனத்தை வாசிக்கப் போகிறேன். காரணம், நம்முடைய மனம் புதுப்பிக்கப்படும்போது, என்ன நடக்கிறது என்பதை ரோமர் 12:3-ம் வசனம் விளக்கிச் சொல்கிறது:
3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்கிறதாவது: உங்களில் எவனானாலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட மனதின் நான்கு அடையாளங்களை இன்று நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்க விரும்புகிறேன். இந்த அடையாளங்களை நான் எடுத்துச் சொல்லும்போது, அது உங்களுடைய மனதின் நிலையை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு உதவியாயிருக்கும். எவ்வளவு தூரம் உங்களுடைய மனம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது, இன்னும் எந்தெந்த இடங்களில் அது புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு இது உங்களுக்கு உதவிகரமாய் இருக்கும்.
முதலில், புதுப்பிக்கப்பட்ட மனம், சுயநலமானதாய் இருக்காது. அது தேவனை மையமாகக் கொண்ட ஒன்றாக இருக்கும். “எனக்கு இது வேண்டும்; இதுதான் சரி என்று நான் நினைக்கிறேன்; நான் இப்படித்தான் உணருகிறேன்” என்ற வார்த்தைகளால் இனி அது நடத்தப்படுவதில்லை. மாறாக, தேவனுடைய மதிப்பீடுகள், தேவனுடைய நோக்கங்கள் மற்றும் தேவனுடைய குறிக்கோள்களால் அது நெருக்கி ஏவப்பட்டு நடத்தப்படும். நம்முடைய தனிப்பட்ட விஷயங்களைக் காட்டிலும், இப்பொழுது இவை நமக்கு மிகவும் முக்கியமானதாக மாறி விடும். நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை காண்பிக்கும்படி ஒரு சில எடுத்துக்காட்டுகளை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். 1 கொரிந்தியர் 10:31-ல், பவுல் சொல்கிறார்:
31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
கடைசி வார்த்தைகளைக் கவனியுங்கள். “எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்,” என்று இது சொல்கிறது. இதுதான் புதுப்பிக்கப்பட்ட மனதின் உந்துசக்தியாய் இருக்கிறது. தேவனை மகிமைப்படுத்தக் கூடிய காரியங்களை மட்டும் செய்வதே அதன் வாஞ்சையும், நோக்கமுமாயிருக்கிறது. “இதினால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டாகப் போகிறது? இதிலிருந்து எனக்கு என்ன லாபம் கிடைக்கும்?” என்று அது கேட்காது. “இதினால் தேவனுக்கு மகிமை உண்டாகுமா?” என்றுதான் அது கேட்கும். திரும்பவும், மத்தேயு 6:10-ல், கர்த்தருடைய ஜெபத்தில், நாம் இவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று இயேசு நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்:
10 உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
இந்த ஜெபத்தை நாம் ஜெபிக்கும்போது, உண்மையில் நாம் நம்முடைய சுயசித்தத்தை மறுக்கிறோம், நிராகரிக்கிறோம். அதாவது, “என் சித்தமா, தேவனுடைய சித்தமா என்று வரும்போது, என்னுடையதல்ல, தேவனுடைய சித்தம் மட்டுமே செய்யப்படட்டும்,” என்ற அர்த்தத்தில் நீங்கள் சொல்கிறீர்கள். இது புதுப்பிக்கப்பட்ட மனதின் ஒரு அடையாளமாக இருக்கிறது. பிறகு இந்தப் புதுப்பிக்கப்பட்ட மனம், இந்தப் பூமியைக் குறித்த தேவனுடைய மையமான நோக்கத்தோடு, ஒரு தீர்மானத்தின் மூலம் தன்னையே இணைத்துக் கொள்கிறது. அது என்ன? “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” என்பதுதான் அது. புதுப்பிக்கப்பட்ட மனம் எப்பொழுதும் இந்தப் பூமியில் தேவனுடைய ராஜ்யம் நிறுவப்படுவதை நோக்கியே தன்னை நிலைநிறுத்துகிறது. தேவனுடைய சித்தமும், தேவனுடைய ராஜ்யமும்தான் அதன் மைய நோக்கமாய் இருக்கின்றன.
புதுப்பிக்கப்பட்ட மனதின் இரண்டாவது அடையாளம், தற்பெருமை கொள்ளாது, தனக்கு லாபமானவைகளை நாடாது. நம்மைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி நாம் எண்ணக்கூடாது என்று பவுல் எழுதிய ரோமர் 12:3-ம் வசனத்தை நாம் ஏற்கனவே பார்த்தோம். மத்தேயு 20:25-28 வசனங்களை நாம் வாசிப்போம். இயேசு தம் சீஷர்களிடம் பேசுகிறார். நாம் அதைக் கவனிப்போம்.
25 அப்பொழுது இயேசு அவர்களைக் கிட்ட வரச் செய்து, “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது. உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு பணிவிடைக் காரனாயிருக்கக்கடவன். 27 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்,” என்றார்.
இது புதுப்பிக்கப்பட்ட மனதின் இன்னொரு தனித்தன்மையுள்ள அடையாளமாகும். அது ஆளுகை செய்யும்படி அல்ல, மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்கான வழி வாய்ப்புகளைத் தேடும். என்ன வாங்கலாம் என்று அல்ல, என்ன கொடுக்கலாம் என்பதற்கான சந்தர்ப்பங்களை அது தேடும். மற்றவர்கள் தனக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இயேசு வரவில்லை. மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்படி, தன் ஜீவனையே கொடுக்கும்படி அவர் வந்தார். புதுப்பிக்கப்பட்ட மனம், இயேசுவை எடுத்துக்காட்டாகக் கொண்டு அவரையே பின்பற்றுகிறது. இன்றைய நவநாகரீக கலாச்சாரத்தில், பணியாளனாய் இருக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே எஜமானாக இருக்க விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டவே விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய பாணியிலேயே தங்களுடைய வாழ்க்கையை நடத்த விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களையே நாடித் தேடுகிறார்கள். ஆனால் இது புதுப்பிக்கப்பட்ட மனதின் நிலை கிடையாது. காரணம், “எனக்கு என்ன கிடைக்கும்?” என்று புதுப்பிக்கப்பட்ட மனம் கேட்காது. “என்னால் என்ன கொடுக்க முடியும்?” என்பதைக் குறித்துதான் புதுப்பிக்கப்பட்ட மனம் எப்பொழுதும் சிந்திக்கும். அது தன்னையே உயர்த்திக் கொள்ளும்படி நாடாது. அது தன்னையே தாழ்த்தும். மிகப் பெரிய சுவிசேஷகர் மூடி தன்னைக் குறித்து இவ்வாறு சொன்னார். அவர் சொன்னார், “தேவன் தம்முடைய நல்ல ஈவுகளை அலமாரிகளில் வரிசையாக ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறார். ஆனால் சிறந்த ஈவுகளை மேலடுக்குகளில் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார் என்றுதான் நான் வாலிபனாக இருந்தபோது, சிந்தித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது அதற்கு அப்படியே நேரெதிரான ஒன்றை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். சிறந்தவைகள் கீழ் அடுக்குகளில்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அவைகளை மேலே எட்டி எடுக்க முடியாது. அவைகளை எடுக்கும்படி நீங்கள் கீழே குனிந்தாக வேண்டும்.”
புதுப்பிக்கப்பட்ட மனதின் மூன்றாவது அடையாளம், அது யதார்த்தமானது, நிதானமானது. தெளிந்த சிந்தையுள்ளவர்களாய் நாம் சிந்திக்க வேண்டும் என்று ரோமர் 12:3-ல் பவுல் சொல்வதை நாம் சற்று முன் பார்த்தோம். இன்னொரு மொழிபெயர்ப்பு ‘நிதானம்’ என்ற அர்த்தத்தில் வரக்கூடிய ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ‘நிதானம்’ என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. புதுப்பிக்கப்பட்ட மனம், நிதானமானது, யதார்த்தமானது. இது இரண்டு வகையான உச்சகட்ட மனநிலைகளைத் தவிர்க்கிறது. ஒருபுறம், பொய்யான, மாயையான சந்தோஷங்களை விரும்பி கற்பனை செய்து பார்க்கிற மன நிலை. இன்னொரு புறம், தன்னையே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு, மனச்சோர்வுக்குள்ளாகிற மன நிலை. புதுப்பிக்கப்பட்ட மனம், இவ்விரண்டையும் தவிர்த்து விடுகிறது.
வாலிப வயதில் பிள்ளைகளை வைத்திருப்போர் இதை சீக்கிரமாய் புரிந்து கொள்வார்கள். வாலிப மனதின் பிரச்சனைகளில் ஒன்று, அது பகல் கனவு காண்பதிலும், பொய்யான, மாயையான சந்தோஷங்களை விரும்பி கற்பனை செய்து பார்க்கிற மன நிலைக்குள்ளும் சுலபமாக சிக்கிக் கொள்கிறது. யதார்த்தமாய் சிந்திப்பதற்கு, வாழ்க்கையைக் குறித்த உண்மைகளை நேருக்கு நேராய் எதிர்கொள்வதற்கு, தங்களுடைய தனிப்பட்ட ஆளுமையைக் குறித்த உண்மைகளாய் எதிர்கொள்வதற்கு ஒரு வாலிபருக்குக் கடினமாக இருக்கிறது. இந்த வாலிபர்களிடத்தில் நாம் பொறுமை காக்கும்படி தேவன் நமக்கு கிருபை கொடுக்கிறார் என்றுதான் நான் நம்புகிறேன். ஆனால் இது ஒருபோதும் பக்குவமடைந்த நிலையின் அடையாளமாய் இருக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பக்குவமடைந்து, முழு வளர்ச்சியடைந்த ஒரு மனம், பொய்யான, மாயையான சந்தோஷங்களை விரும்பி கற்பனை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது. அது வெறுமையான பகல் கனவு காணாது. அது வீணான காரியங்களை கற்பனை செய்து கொண்டிருக்காது.
மறுபக்கத்தில், வாலிப மனதின் இன்னொரு பொதுவான பிரச்சனை, அது மிகவும் சுலபமாக மனச்சோர்வுக்குள்ளாகி விடுகிறது. ஒரு வாலிபனோ அல்லது வாலிபப் பெண்ணோ அடிக்கடி தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள், சிறைப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களை மிகவும் குறைவாக மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். இதினால் கடுமையான மனச்சோர்வு அவர்களுக்குள் உண்டாகிறது. இது புதுப்பிக்கப்பட்ட மனதின் அடையாளமாகாது.
என்னுடைய வாழ்க்கையில், நானே தனிப்பட்ட விதத்தில் மனச்சோர்வின் பிரச்சனையோடு பலப் பல வருடங்களாக போராடியிருக்கிறேன். முடிவில், தேவன் பல காரியங்களை எனக்கு வெளிப்படுத்தினார். என்னுடைய மனதிற்கு நான்தான் பொறுப்புள்ளவனாயிருக்கிறேன். எதிர்மறையான சிந்தனைகளுக்கு நான் இடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. என் மனதை நான்தான் சீர்திருத்தி, ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை தேவன் எனக்குக் காண்பித்தார். நான் சிந்திக்கிற விதத்தை நான்தான் மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும். நான் இதைச் செய்தபோது, மிகவும் பயங்கரமான அந்த மனச்சோர்வின் பிரச்சனையிலிருந்து நான் விடுதலையாக்கப்பட்டேன். ஆக, நிதானமாய் செயல்படுவதும், யதார்த்தமாய் சிந்திப்பதும் புதுப்பிக்கப்பட்ட மனதின் மூன்றாம் அடையாளமாக இருக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட மனதின் நான்காவது அடையாளம், அதைப் புரிந்து கொள்வதென்பது எப்பொழுதுமே நமக்கு சுலபமாக இருக்காது. நாம் திரும்பவும் பவுல் எழுதிய வார்த்தைகளை ரோமர் 12:3-ல் வாசிப்போம். அவர் சொல்கிறார், “தேவன் நம் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்த விசுவாச அளவின்படியே தெளிந்த எண்ணமுள்ளவர்களாய் நாம் எண்ண வேண்டும்.” புதுப்பிக்கப்பட்ட மனம், தேவன் பகிர்ந்தளித்த விசுவாச அளவின் வரையறைக்குள்ளேதான் தங்கியிருக்கும். உண்மையற்ற ஒன்றைக் குறித்து தனக்கு விசுவாசம் இருப்பதாக அது அறிக்கை செய்யாது, உரிமை பாராட்டாது. அது யதார்த்தமில்லாத விஷயங்களைக் குறித்து, நிஜமில்லாத விஷயங்களைக் குறித்து மேன்மை பாராட்டாது, அறிக்கை செய்யாது, உரிமை பாராட்டாது.
ஒரு ஊழியக்காரனாய் நான் நிறைய பேரை சந்தித்திருக்கிறேன். அவர்களிடம் நான் பார்த்த பெரிய பிரச்சனை இதுதான். அவர்கள் தங்களுக்குள் நிஜமாய் இருக்கிறதை விட அதிகமான விசுவாசம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். “தேவன் எனக்கு இதைச் செய்யப் போகிறார், அதைச் செய்யப் போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்,” என்று அவர்கள் சொல்கிறார்கள். அது நடப்பதில்லை. பிறகு அவர்கள் சோர்ந்து போகிறார்கள், மனச்சோர்வுக்குள்ளாகிறார்கள். சில நேரம், அவர்கள் தேவன் மீது குற்றம் சொல்கிறார்கள். இங்கு பிரச்சனை என்னவென்றால், தேவன் பகிர்ந்தளித்த விசுவாசத்தின் அளவையும் தாண்டி, அதற்கும் அப்பாற்ப்பட்டு சென்று விட்டார்கள்.
தேவன் ஏன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு விசுவாசத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதற்கான காரணத்தை என்னுடைய அடுத்த செய்தியில் நான் சொல்லப் போகிறேன். தேவனுடைய நோக்கங்களை சரியாய் புரிந்து கொண்டு, அவருடைய நோக்கங்கள் மற்றும் இலக்குகளோடு நாம் இசைந்து செல்வோம் என்றால், அப்பொழுது தேவன் நமக்குப் பகிர்ந்தளித்திருக்கிற விசுவாசமே, உண்மையில் நமக்குத் தேவையான, போதுமான விசுவாசம் என்பதை நாம் புரிந்து கொள்வோம். தேவன் நமக்கு பகிர்ந்தளித்திருக்கிற விசுவாசத்தைக் காட்டிலும் அதிகமான விசுவாசம் நமக்குத் தேவைப்படாது. நம் ஒவ்வொருவருக்கும் தேவையான விசுவாசத்தையே தேவன் நமக்குப் பகிர்ந்தளித்திருக்கிறார். ஆனால் மற்றவர்கள் மத்தியில் தங்களை ஆவிக்குரியவர்களாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையில் அவர்களால் என்ன விசுவாசிக்க முடியுமோ, அதைக் காட்டிலும் அதிகமாக விசுவாசிக்க முயற்சிப்பதைப்போல அவர்கள் தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். இது பல வகையான பிரச்சனைகளுக்கு நேராக நடத்துகிறது. சுகத்திற்கான விசுவாசம் தங்களுக்குள் இருப்பதாக சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த சிகிச்சையையும், மருந்துகளையும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்களுக்கு சுகம் உண்டாகாது. பாருங்கள், விசுவாசம் எப்பொழுதுமே தாழ்மையானது. இதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாயிருக்கிறது. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுவதைக் குறித்துப் பேசுகிற ஒரு முக்கியமான வசனத்தை நாம் பார்ப்போம். ஆபகூக் 2:4 இவ்வாறு சொல்கிறது:
4 இதோ தற்பெருமை கொண்டவனைப் பாருங்கள். அவனுடைய ஆத்துமா அவனுக்குள் நீதியானதாக இருக்காது. ஆனால் நீதிமான் தன் விசுவாசத்தினால் வாழ்ந்திருப்பான். (நியூ அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் மொழிபெயர்ப்பு)
கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு இதை இவ்வாறு சொல்கிறது:
4 இதோ, தன்னைத்தானே அகங்காரமாய் உயர்த்திக் கொள்கிறவனுடைய ஆத்துமா அவனுக்குள் நேர்மையானதாக இருக்காது. ஆனால் நீதிமான் தன் விசுவாசத்தினால் வாழ்ந்திருப்பான்.
இதை எந்த மொழிபெயர்ப்பில் வாசித்தாலும், ஒன்றை நாம் பார்க்க முடியும். தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிற, தற்பெருமையும், அகங்காரமும் கொண்டிருக்கிற, நியாயமற்ற விதத்தில் உரிமை பாராட்டுகிற ஆத்துமாவில் விசுவாசம் இருக்காது. விசுவாசம் தாழ்மையானது. விசுவாசத்தில், பெரிய "நானும்", சிறிய "தேவனும்" என்ற ஒரு நிலை இல்லை.
மாறாக, விசுவாசத்தில், பெரிய "தேவனும்", சிறிய "நானும்" என்ற சரியான நிலைதான் இருக்கிறது. எனவே தேவன் பகிர்ந்தளித்திருக்கிற விசுவாசத்தின் எல்லைக்குள்தான் நாம் செயல்பட வேண்டும்.
குறியீடு: RP-R014-103-TAM









