பல வருட தனிப்பட்ட அனுபவத்தின் மூலமாகவும், கிறிஸ்தவ ஊழியத்தின் மூலமாகவும் தேவன் என் கையில் வைத்துள்ள வெற்றிகரமான வாழ்க்கைக்கான சில திறவுகோல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் எனது பேச்சுகளில், நான் கிறிஸ்துவின் மூலம் நமது மீட்பின் அடிப்படையை விளக்கி வருகிறேன். சிலுவையில், இயேசு நம்முடைய கீழ்ப்படியாமையின் அனைத்து சாபங்களையும் ஏற்றுக்கொண்டார், இதற்கு பதிலாக, அவர் தம் கீழ்ப்படிதலால் நமக்கு எல்லா ஆசீர்வாதங்களையும் கிடைக்கும்படி செய்திருக்கிறார்.

எனது கடைசி இரண்டு பேச்சுகளில், கிறிஸ்து ஆவிக்குரிய தளத்திலும், சரீர தளத்திலும் கிடைக்கச் செய்த ஆசீர்வாதங்களை விளக்கினேன். இன்று நான் பொருள்சார்ந்த தளத்தில் நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களை கையாளப் போகிறேன். நான் மீண்டும் ஒருமுறை உபாகமம் 28 ஆம் அதிகாரத்திற்கு திரும்புகிறேன், அது இரண்டு எதிரெதிர் காரியங்களை முழுமையாகப் பட்டியலிடுகின்றன. முதலில், கீழ்ப்படிதலின் விளைவாக வரும் ஆசீர்வாதங்கள், பின்னர் கீழ்ப்படியாமையின் விளைவாக வரும் சாபங்களாகும். நான் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள், நாம் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுத்து, அதற்குக் கீழ்ப்படிகிறோமா அல்லது கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கவில்லையா என்பதே தீர்க்கமான பிரச்சனை. கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதும், அதற்குக் கீழ்ப்படிவதும் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது, கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடாமல் இருப்பது சாபங்களைக் கொண்டு வருகிறது.

இன்று நாம் குறிப்பாக பொருள்சார்ந்த தளத்தில், ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் பார்க்கப் போகிறோம். முதலில், கீழ்ப்படிதலுக்கு வாக்களிக்கப்பட்ட பொருள்சார்ந்த ஆசீர்வாதங்களைப் பார்க்கலாம். உண்மையில் அவை நிறைய இருக்கின்றன. இந்த சுருக்கமான உரையாடலில் அவற்றை விரிவாகப் பார்ப்பது சாத்தியமில்லை. ஆனால் உபாகமம் 28: 3-5, 8 & 11 இல் மோசே இங்கே சொல்கிறார்:

3 நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். 4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் [அது உண்மையில், விவசாய சமூகமாக இஸ்ரவேலர்களின் முக்கிய பொருள் உடைமையாக இருந்தது]. 5 உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் [இன்று அது உங்கள் ஷாப்பிங் (கடையில் பொருட்கள் வாங்கும்) கூடை, உங்கள் பர்ஸ் (பணப்பை) என்று சொல்லலாம். இவை ஆசீர்வதிக்கப்படும்]. 8 கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் [நாம் மேற்கொள்ளும் எதிலுமிருந்து முற்றிலுமாக எதையும் விட்டுவிடவில்லை. தேவன் அதை ஆசீர்வதிப்பார்] உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார் [தேவன் நம்மீது அவருடைய ஆசீர்வாதத்தைக் கட்டளையிடப்போகிறார் என்ற எண்ணத்தை நான் விரும்புகிறேன்]; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். 11 உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.

“கர்த்தர் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்” என்ற பகுதியைக் கவனியுங்கள். செழிப்பில் பெருகும் ஆசீர்வாதம் என்பது தேவனின் சத்தத்தைக் கேட்டு கீழ்ப்படிவதால் ஏற்படும் ஆசீர்வாதமாகும்.

உபாகமத்தின் அடுத்த அதிகாரமான, உபாகமம் 29:9 இல், மோசே அதே கருப்பொருளுக்கு சுருக்கமாகத் திரும்புகிறார். அங்கே அவர் இஸ்ரவேலரிடம் சொல்வது இதுதான்:

9 இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

ஆகவே, தேவனுடைய உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பது, நாம் செய்யும் எல்லாவற்றிலும் செழிப்பை ஏற்படுத்துகிறது. அது நம் வாழ்வின் எந்தப் பகுதியிலும் தோல்வி அல்லது விரக்திக்கு இடமளிக்காது. இவையே ஆசீர்வாதங்களாகும்.

இப்போது, கீழ்ப்படியாமைக்கான பொருள்சார்ந்த சாபங்களைப் பார்ப்போம். உபாகமம் 28:29க்கு திரும்புவோம்:

29 குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய் [நீங்கள் பார்க்கலாம், வாழ்க்கையில் சரியான வழியைக் கண்டுபிடிக்க இயலாமை உள்ளது]; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம்;

கவனியுங்கள், செழிப்பில் பெருகுவது ஒரு ஆசீர்வாதமாக இருப்பது போல, நம் வழியில் செழிக்காமல் இருப்பது ஒரு சாபமாக இருக்கிறது. பின்னர், இன்னும் முழுமையாகவும் தெளிவாகவும், உபாகமம் 28:47-48 இல் மோசே அதை மீண்டும் கூறுகிறார், மேலும் இங்கே ஆசீர்வாதமும் சாபமும் நேரடியாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.

47 சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற் போனதினிமித்தம், [இப்போது கவனியுங்கள், அதுதான் தேவனுடைய விருப்பம். நாம் எல்லாக் காரியங்களிலும் பெருக்கமாய் இருப்பதும், சந்தோஷத்துடனும் மனமகிழ்ச்சியுடனும் அவரை சேவிப்பதுதான் கீழ்ப்படிதலின் விளைவாகும். பெருக்கம் கீழ்ப்படிதலின் விளைவாகும். ஆனால் அதனுடைய மாற்று, மிகவும் கடினமான மாற்றாகும், சந்தோஷத்துடனும் மனமகிழ்ச்சியுடனும் அவரை சேவியாமல் இருப்பவர்களுக்காக வசனம் 48 கூறப்பட்டுள்ளது]. 48 சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.

சரி, அந்த இரண்டு வசனங்களில் இருப்பதை விட இரண்டு மாற்று வழிகளை நீங்கள் தெளிவாக சித்தரிக்க முடியாது. கீழ்ப்படிதலின் விளைவுகள்: சகலமும் பரிபூரணமாயிருக்கும், மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் தேவனாகிய கர்த்தரைச் சேவிப்பதுமாகும். கீழ்ப்படியாமையின் விளைவுகள்: சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தரை சேவியாமல் நமக்கு விரோதமாய் இருக்கும் சத்துருக்களைச் சேவிப்போம்.

ஒரு நாள் அந்த வார்த்தைகளை நான் தியானித்துக் கொண்டிருந்தபோது, இது முழு வறுமையின் விளக்கமாக இருப்பதைக் கண்டேன். பசியோடு இருப்பவனுக்கு உண்பதற்கு எதுவும் இல்லை; தாகமாய் இருப்பவனுக்கு குடிக்க எதுவும் இல்லை; நிர்வாணமாக இருப்பவனுக்கு அணிய ஆடை இல்லை; மேலும் சகலமும் குறைவுபட்டிருக்கிறது. அந்த நபர் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறார். பசி, தாகம், நிர்வாணம் மற்றும் எல்லாவற்றிலும் பற்றாக்குறையும் அதைவிட பெரிய வறுமையை கற்பனை செய்வது சாத்தியமில்லை. இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வறுமை ஒரு சாபமாக இருக்கிறது. வறுமை என்பது பரிசுத்தத்தின் அடையாளம் அல்ல. உங்களை அல்லது என்னை பரிசுத்தமாக்குவதற்கு வறுமை தேவை என்றால், உண்மையில் நாம் எவ்வளவு பரிசுத்தமானவர்கள் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். வறுமை ஒரு சாபமாகும். இது தேவனின் பிள்ளைகளுக்கு சொந்தமானது அல்ல. வறுமை தேவனின் பிள்ளைகளுக்கு சொந்தமானது அல்ல என்பதை ஒரு நாள் மிகத் தெளிவாகப் பார்த்தபோது, என் உள்ளத்தில் என்ன ஒரு மகிழ்ச்சியும், விடுதலையும் வந்தது!. இது தேவனின் மீட்கப்பட்ட மக்களுக்கானது அல்ல. தேவனின் மீட்கப்பட்ட மக்களுக்கு தேவனின் சித்தம் என்னவென்றால், நாம் மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் அவரைச் சேவிப்பதேயாகும்.

கீழ்ப்படிதலினால் ஏற்படும் பொருள்சார்ந்த ஆசீர்வாதங்கள் மற்றும் கீழ்ப்படியாமையின் விளைவாக ஏற்படும் பொருள்சார்ந்த சாபங்கள் பற்றிய இந்த புரிதல் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் தெளிவான முறையில், என்னால் மறக்க முடியாத விதத்தில் கொண்டுவரப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் நியூசிலாந்து நாட்டில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், தேவனுடைய மக்களுக்கு அவரது நிதி ஏற்பாடுகள் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தேன். நான் எனது சுருக்கக் குறிப்புகளை தயார் செய்து, அதை நான் பின்பற்றிக்கொண்டிருந்தேன், ஆனால் நான் எனது குறிப்புகளில் இருந்து பேசிக்கொண்டிருக்கும்போது, என் மனதுக்குள் நான் இதுவரை பார்த்திராத ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு சிலுவையில் தொங்குவதை நான் எனது மனக்கண்களில் பார்த்தேன். நான் வறுமையின் சாபத்தை, அதன் முழு அளவில்: பசி, தாகம், நிர்வாணம், மற்றும் எல்லாவற்றின் பற்றாக்குறையை வெளிப்படுத்தினபோது, சிலுவையில் தொங்கிய இயேசுவை பரிசுத்த ஆவியானவர் சுட்டிக்காட்டுவது போலவும், முழு வறுமையை உருவாக்கும் அந்த நான்கு நிலைகளில் ஒவ்வொன்றும் இயேசு சிலுவையில் தொங்கியபடியே நிறைவேறியதை எனக்குக் காட்டுவது போலவும் இருந்தது. அவர் பசியுடன் இருந்தார், அவர் கிட்டத்தட்ட 24 மணிநேரம் வரையில் சாப்பிடவில்லை. அவர் தாகமாக இருந்தார். சிலுவையில் அவருடைய கடைசி வார்த்தைகளில் ஒன்று, “நான் தாகமாயிருக்கிறேன்” என்பதே. அவர் நிர்வாணமாக இருந்தார், அழகான மதப் படங்கள் எதுவும் உங்களை ஏமாற்றி விடக்கூடாது. மரணதண்டனையை நிறைவேற்றிய படைவீரர்கள் அவருடைய ஆடைகள் அனைத்தையும் களைந்து பின்னர் அவர்களுக்கு இடையே பங்கிட்டுக் கொண்டதாக வேதம் கூறுகிறது. அவர் நிர்வாணமாக இருந்தார். அவர் எல்லாவற்றிலும் குறைவுள்ளவராக இருந்தார். அவரிடம் எதுவும் இல்லை. அவர் கடன் வாங்கப்பட்ட வஸ்திரத்திலும், கடன் வாங்கப்பட்ட கல்லறையிலும் அடக்கம் பண்ணப்பட்டார். அவரிடம் உண்மையில் எதுவும் இல்லை.

நியூசிலாந்தில் உள்ள அந்த சபைக்கு நான் பிரசிங்கித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய சுருக்க குறிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன், ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரே நேரத்தில் என் சொந்த ஆவியிலும் மனதிலும் ஏதோ ஒன்றை எனக்குக் காட்டிக் கொண்டிருந்தார், அது அன்றிலிருந்து என்னுடன் இருக்கிறது. சிலுவையில் தொங்கிய இயேசுவின் படத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இயேசு ஏன் பசியாக இருந்தார், ஏன் தாகமாக இருந்தார், ஏன் நிர்வாணமாக இருந்தார், ஏன் எல்லாவற்றிலும் குறைவுள்ளவராக இருந்தார் என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்குக் காண்பித்தார். காரணம்: அவர் வறுமையின் சாபத்தை நம் சார்பாக தீர்த்துவிட்டதால் அப்படி இருக்க வேண்டியிருந்தது. இயேசுவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்ட விசுவாசிகளாகிய நீங்களும், நானும், அந்த இரும்பு நுகத்தடியை, அந்த வறுமையின் சாபத்தைத் தாங்க வேண்டிய அவசியமில்லை, அவர் முழு சாபத்தையும் ஒரே முறை நீக்கிப்போட்டார். இது ஆசீர்வாதம் மற்றும் கீழ்ப்படிதலின் விளைவு அல்ல, மாறாக கீழ்ப்படியாமையின் விளைவாகும். தேவனுக்கு நன்றி, நாம் அனைவரும் கீழ்ப்படியாமல் இருந்தபோதிலும், இயேசு நம் அனைவரின் அக்கிரமத்தையும் ஏற்றுக்கொண்டார். இயேசு சிலுவையில் தொங்கியபோது, நம்முடைய கலகமும், வறுமை உட்பட அதன் அனைத்து தீய விளைவுகளும் அவர்மேல் வந்தது.

இப்போது, இந்த பரிமாற்றம் புதிய ஏற்பாட்டில் தெளிவாக சுருக்கப்பட்டுள்ளது. 2 கொரிந்தியர் 8:9 இல், பொருள்சார்ந்த தளத்தில் பரிமாற்றத்தின் இரண்டு அம்சங்களைப் பெறுகிறோம். 2 கொரிந்தியர் 8:9 இல், பவுல் கூறுகிறார்:

9 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே, ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.

அங்கு என்ன பரிமாற்றம் நடந்தது? இது மிகவும் தெளிவாக உள்ளது. இயேசு நம்முடைய தரித்திரத்தை அவர் எடுத்துக்கொண்டார், அதன் பொருட்டு, அவருடைய செல்வத்தையும், அவருடைய பெருக்கத்தையும் நாம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதுதான் கிருபை. கிருபை இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே வருகிறது. கிருபையை சம்பாதிக்க முடியாது. கிருபை விசுவாசத்தின் மூலமாக மட்டுமே பெறப்படுகிறது.

பின்னர், அதன் எதிர்பக்கம் 2 கொரிந்தியர் 9:8 இல் கூறப்பட்டுள்ளது.

8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

மூல கிரேக்கத்தில் அந்த வசனம் ஆச்சரியமாக இருக்கிறது, “பெருக்கம்” என்ற வார்த்தை இரண்டு முறை வருகிறது, “அனைத்தும் (சகல/எல்லாம்) என்ற வார்த்தை அந்த ஒரே வசனத்தில் ஐந்து முறை வருகிறது. மேலும், அவை அனைத்தும் சொல்கிறது என்னவென்றால், இதைத்தான் இயேசு நமக்காக பெற்றுக்கொண்டார். நாம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள, அவர் வறுமையின் சாபத்தைத் தீர்த்தார்.

மீண்டும் சொல்கிறேன், இந்தத் தொடர் போதனையில் நான் முன்பு கூறியதுபோல, இயேசுவால் நமக்கு கிடைத்த ஆவி, சரீரம், பொருள் ஆகிய மூன்று பகுதிகளிலும் உள்ள ஆசீர்வாதங்கள், 3 யோவான் வசனம் 2 இல் அழகாக சுருக்கப்பட்டுள்ளன. யோவான் கூறுகிறார்:

2 பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல [அதுதான் ஆவிக்குரியது] நீ எல்லாவற்றிலும் [அதுதான் பொருள் சார்ந்தது] வாழ்ந்து சுகமாயிருக்கும்படி [அதுதான் சரீரப் பிரகாரமானது] வேண்டுகிறேன்.

நினைவில் கொள்ளுங்கள், அதுதான் தேவனின் சித்தம், அது உங்கள் சுதந்தரம்.

இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் அடுத்த வாரம் மீண்டும் உங்களுடன் வருவேன். அடுத்த வாரமும், “நமது சுதந்தரத்தை உரிமை கோருதல்” என்ற தலைப்பில் தொடர்கிறேன். கிறிஸ்து நமக்குக் கிடைக்கச் செய்த அனைத்து ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கு முக்கியமான நடைமுறைக் கொள்கைகளை நான் விளக்குகிறேன். இது மிகவும் நடைமுறைக்குரியதாக இருக்கும்.

ஆனால், சில முக்கிய அறிவிப்புகளுக்காக காத்திருங்கள். குறிப்பாக, வாழ்வளிக்கும் விசுவாசம் என்ற அந்த புத்தகத்தின் பிரதியை நீங்கள் எப்படிப் பெறலாம் என்பது பற்றிய அறிவிப்பு. இந்த புத்தகம் உங்கள் கைகளில், கிறிஸ்தவ சுதந்தரத்திற்கு சொந்தமான வாழ்க்கையின் ஒரு முக்கிய திறவுகோலான, விசுவாசத்தின் திறவுகோலை வைக்கும். இப்புத்தகம், விசுவாசம் என்றால் என்ன, அது எப்படி வருகிறது, அது என்ன செய்யும் என்பதை விளக்குகிறது. இந்தப் புத்தகத்தை நீங்கள் எப்படிப் பெறலாம் என்பதை பின்வரும் அறிவிப்பு உங்களுக்குச் சொல்லும்.

லைக்
பகிரவும்