திரும்பவும் உங்களோடு இருப்பதைக் குறித்து நன்றாக உணருகிறேன்.

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, கண்களால் பார்க்க முடியாத உலகத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றங்களைக் குறித்து நேற்றைய செய்தியில் நான் பேசினேன். அதிலும் குறிப்பாக, மரணத்தில் விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அது எவ்வாறு பாதித்தது என்பதைக் குறித்து நான் சொன்னேன்.

இன்றைய செய்தியில், தேவனுடைய திட்டத்தின் அடுத்த மிக முக்கியமான நிகழ்வைக் குறித்து நான் பேசப் போகிறேன். அதாவது உயிர்த்தெழுதலில், “அவர்களுடைய ஆத்துமாவும், சரீரமும் எவ்வாறு ஒன்றாய் இணையப் போகிறது” என்பதைக் குறித்து நான் பேசப் போகிறேன். இந்தச் செய்தியில், நீதிமான்களாய் மரித்த விசுவாசிகளின் உயிர்த்தெழுதலில் நான் கவனம் செலுத்தப் போகிறேன்.

புதிய ஏற்பாட்டில், நீதிமான்களாய் மரிக்கிற விசுவாசிகளின் உயிர்த்தெழுதல், எப்பொழுதுமே கிறிஸ்துவின் இரண்டாம் வருகையோடு நெருக்கமாக தொடர்புப் படுத்தப்பட்டிருக்கிறது. வழக்கமாக, இதைக் குறிக்கும் கிரேக்க வார்த்தை பரௌஷியா (parousia) என்ற வார்த்தையாகும். பரௌஷியா (parousia) என்றால் “பிரசன்னம்” என்று அர்த்தம். ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் கொஞ்சக்காலம் வெளியே சென்று விட்டு, திரும்பவும் வருகிறார் என்றால், அது அவர்களுடைய மறுவருகையைச் சுட்டிக் காட்டுகிறது. ஆகையால் அதை “மறுவருகை” என்றும் சொல்லலாம். ஆனால் “பிரசன்னமாகுதல்” என்பதுதான் அதன் பிரதான அர்த்தம் என்பதை நாம் எப்பொழுதுமே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிகழ்வோடு தொடர்புடைய விதத்தில் பல வித்தியாசமான தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இயேசுவின் மறுவருகையில் நிச்சயமாக என்ன நிகழப் போகிறது என்பதைக் குறித்து, பல விதமான புரிந்து கொள்ளுதல்களும், வியாக்கியானங்களும் செய்யப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு எளிமையான கருத்தைச் சொல்கிறேன். பரௌஷியா (parousia) என்ற வார்த்தையின் அர்த்தத்தின் அடிப்படையில், அது சுருக்கமான, ஒரே நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றுதான் எனக்குத் தெரிகிறது. அது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு, அது பல வருடங்களாகக்கூட இருக்கலாம், அப்படியொரு காலகட்டத்திற்கு அது தொடர்ந்து நிகழக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கக்கூடும். இது என் கருத்து.

இந்தத் தலைப்பைக் குறித்த சர்ச்சைக்குரிய விவாதங்களுக்குள் நான் செல்லவில்லை. இயேசுவின் இரண்டாம் வருகையில் நிகழப்போவதாக நான் பார்க்கிற ஐந்து முக்கியமான நோக்கங்களைக் குறித்து இங்கு நான் சொல்லப் போகிறேன்.

ஐந்து நோக்கங்களை நான் பார்க்கிறேன். இந்த நோக்கங்கள் மட்டும்தான் என்று நான் இங்கு சொல்லவில்லை. நிச்சயமாக, அப்படிச் சொல்லவில்லை. அது மட்டுமல்ல, நான் சொல்கிற இந்த ஒழுங்கில்தான், இந்த வரிசையில்தான் அவை நிகழும் என்றும் நான் சொல்லவில்லை. ஆக, நிறைவேறப் போகிற ஐந்து முக்கியமான நோக்கங்களை இங்கு சொல்கிறேன்.

1. சபையை தம் மணவாட்டியாக தம்மோடு சேர்த்துக் கொள்வார்.

2. இஸ்ரேலை ஒரு தேசமாய் காப்பாற்றி, இரட்சிப்பார்.

3. சாத்தானையும், அந்திக்கிறிஸ்துவையும் தோற்கடித்து வீழ்த்துவார்.

4. மெய்த் தேவனை ஆராதித்து ஏற்றுக் கொள்ளாத புறஜாதி தேசங்களை நியாயந்தீர்ப்பார்.

5. ஆயிர வருட அரசாட்சியை பூமியில் ஏற்படுத்துவார்.

இவற்றுள் சில ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சற்று முன் நான் சொன்னதையே திரும்பவும் சொல்கிறேன். நான் பட்டியலிட்ட இதே வரிசையில்தான் இந்தச் சம்பவங்கள் நிச்சயமாக நிகழும் என்று நான் வலியுறுத்திச் சொல்லவில்லை. நிச்சயமாக நான் அப்படிச் சொல்லவில்லை. அப்படி நினைப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருந்தாலும், இது ஒரு தோராயமான வரிசைதான்.

இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த நிகழ்வாக, நீதிமான்களாய் மரித்த விசுவாசிகளின் உயிர்த்தெழுதல் நடக்கும். 1 தெசலோனிக்கேயர் 4:13-18 வசனங்களில், பவுல் இதை விளக்கிச் சொல்கிறார். வெளிப்பாட்டினால், அவர் இதை நம் முன் வைக்கிறார்:

13 அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போல துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. 14 இயேசுவானவர் மரித்து, பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே. அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூட கொண்டு வருவார். 15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு, நாங்கள் உங்களுக்குச் சொல்கிறதாவது. கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. 16 ஏனெனில் கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். 18 ஆகையால் இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

இவை ஆறுதலின் வார்த்தைகள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவைகளை நாம் அப்படித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவைகள் குழப்பத்தின் வார்த்தைகள் அல்ல. மாறாக, இவை ஆறுதலின் வார்த்தைகள்.

“மரித்தோரின் உயிர்த்தெழுதல் (The Resurrection of the Dead) என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்திலிருந்து, பவுல் இங்கு விவரித்திருக்கிற சம்பவத்தை சுருக்கமாகக் கோடிட்டுக் காண்பித்திருக்கிறேன். என்னுடைய புத்தகத்திலிருந்து, நான் அதை வாசிக்கப் போகிறேன் (65-ம் பக்கம்):

கிறிஸ்தவ விசுவாசிகளை ஆறுதல்படுத்துவதுதான், பவுல் இங்கு எழுதிய போதனையின் பிரதானமான நோக்கமாயிருக்கிறது. இவர்கள் மிகவும் நேசித்த மற்ற கிறிஸ்தவர்கள், உறவினர்கள் மரித்ததினால் உண்டான துக்கத்திற்கு ஆறுதலான வார்த்தைகளாய் இவை இருக்கின்றன. மரித்த கிறிஸ்தவர்களை, “நித்திரை யடைந்திருக்கிறார்கள்” என்று இவர் சொல்கிறார். இன்னும் தெளிவாக, “இயேசுவுக்குள் நித்திரையடைந்திருக்கிறார்கள்,” என்று இவர் சொல்கிறார். அதாவது, மரித்துப்போன இவர்கள், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசித்திருந்தார்கள் என்று சொல்கிறார். பவுலின் இந்த ஆறுதல் செய்தி, இந்த விசுவாசிகளும், மற்ற எல்லா உண்மையான விசுவாசிகளும் உயிர்த்தெழச் செய்யப்படுவார்கள் என்ற நிச்சயத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. உயிர்த்தெழுதலின் இந்த நிகழ்வைக் குறித்து, பவுல் தரும் மெய்யான படம், பின் வரும் விதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலில், இந்த உயிர்த்தெழுதலின் நிகழ்வில், மூன்று முக்கியமான சத்தங்கள் திடீரென்று பகிரங்கமாக எழுப்பப்படுகின்றன. முதல் சத்தம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆரவாரச் சத்தமாக இருக்கும். இது யோவான் 5:28-29 வசனங்களில் இயேசு பேசின வார்த்தைகளுக்கு ஒத்திருக்கிறது: “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். அப்பொழுது நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” கிறிஸ்துவின் சத்தத்திற்கு மட்டுமே, மரித்தவர்களை அவர்களுடைய கல்லறைகளிலிருந்து அழைக்கிற, உயிர்த்தெழச் செய்கிற வல்லமை இருக்கிறது. ஆனாலும், இந்தக் குறிப்பிட்ட தருணத்தில், நீதிமான்களாய் மரித்தவர்களை மட்டுமே அவர் அழைக்கிறார், உயிர்த்தெழச் செய்கிறார். அதாவது கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் மரித்தவர்களை மட்டுமே அவர் உயிர்த்தெழச் செய்கிறார். உயிர்த்தெழுதலின் பிந்திய கட்டத்தில்தான், அநீதிமான்களாய் மரித்தவர்கள் அழைக்கப்படுவார்கள், உயிர்த்தெழச் செய்யப்படுவார்கள். இந்த நேரத்தில் அடுத்ததாகக் கேட்கின்ற இரண்டு சத்தங்கள், “பிரதான தூதனின் சத்தமும், தேவனுடைய எக்காளச் சத்தமும்” ஆகும். அடுத்ததாக, “பிரதான தூதனுடைய சத்தமும், தேவனுடைய எக்காளச் சத்தமும்” அங்கே இந்த நேரத்தில் கேட்கின்றன. இங்கே சொல்லப்பட்டிருக்கிற பிரதான தூதன், காபிரியேலாக இருக்கலாம். இந்த பூமியில் வாழும் மனுஷருடைய விவகாரங்களில் இனி தேவன் தலையிட்டுச் செய்யப் போகிற காரியங்களை அறிவிக்க வேண்டிய விசேஷமான ஊழியம் அவனுடையதாக இருக்கிறபடியால், இது காபிரியேலாக இருக்க வேண்டும் என்பதுபோலத்தான் தெரிகிறது. வேதாகமம் முழுவதும் வாசிப்பீர்கள் என்றால், ஒரு முக்கியமான இக்கட்டான நேரத்தில், கர்த்தருடைய ஜனங்களை ஒன்றுகூட்டி சேர்க்கும் நோக்கத்தில்தான் எக்காளம் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆக, இந்த நேரத்தில், எக்காளச் சத்தம் என்பது, கர்த்தருடைய ஜனங்கள் எல்லோரையும் அவரோடு ஒன்றாய் சேர்ப்பதற்கான அடையாளமாக இருக்கும். அவர்களை சந்திக்கும்படி பரலோகத்திலிருந்து அவர் இறங்கி வருகிற நேரத்தில் இது நடக்கும். அடுத்து, இந்தப் பூமியில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் அடுத்தடுத்து தொடர்ந்து துரிதமாக நடக்கும். முதலில், கிறிஸ்துவை விசுவாசித்து, மரித்த எல்லா உண்மையான விசுவாசிகளும் உயிரோடெழுப்பப்படுவார்கள். இரண்டாவதாக, அந்த நேரத்தில் இந்த பூமியில் உயிரோடிருக்கிற எல்லா உண்மையான விசுவாசிகளும், இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஒரு மாற்றத்தை தங்களுடைய சரீரங்களில் உடனடியாக அந்தக் கணமே பெற்றுக் கொள்வார்கள். அதற்குப் பிறகு, இந்த இரு கூட்ட விசுவாசிகளும், அதாவது, உயிரோடு எழுப்பப்பட்ட விசுவாசிகளும், மரிக்காமல், தங்களுடைய சரீரங்களில் மாற்றத்தைப் பெற்றுக் கொண்ட விசுவாசிகளும் ஒரே கூட்டமாய் இந்த பூமியிலிருந்து ஆகாயத்திற்குள் தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமையினால் ஒரு கணப்பொழுதில் துரிதமாய் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அங்கே அவர்கள் மேகங்களுக்குள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். இந்த மேகங்களுக்குள், அவர்கள் தங்களுடைய கர்த்தரோடும், ஒருவர் மற்றவரோடும் ஒன்றாய் இணைக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு, கர்த்தரும், அவரால் மீட்கப்பட்ட விசுவாசிகளும் என்றென்றைக்குமாய் ஒன்றாய் இணைந்திருப்பார்கள். அது ஒரு பரலோக ஐக்கியமாயிருக்கும். இந்த இணக்கத்தையும், ஒத்திசைவையும் எதினாலும் முறிக்க முடியாது.

இதே நிகழ்வை பவுல் திரும்பவும் 1 கொரிந்தியர் 15:51-52 வசனங்களில் எழுதியிருக்கிறார். இதைக் குறித்து “மரித்தோரின் உயிர்த்தெழுதல் (The Resurrection of the Dead)” என்ற என்னுடைய புத்தகத்திலும் எழுதியிருக்கிறேன். இப்பொழுது நாம் இவ்வசனங்களை வாசிப்போம்.

51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை [அதாவது நாம் மரிப்பதில்லை. நித்திரை என்ற வார்த்தை, வேதவசனத்தில், விசுவாசத்தில் மரித்தவர்களைக் குறிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை நான் இந்த இடத்தில் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். விழித்து எழுந்திருப்பதைக் குறித்து இது பேசுவதால், நாம் எல்லோரும் நித்திரையடைவதில்லை]. ஆகிலும், கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப் படுவோம். 52 எக்காளம் தொனிக்கும். அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் (அதாவது அந்நேரத்தில் உயிரோடிருக்கிற நாமும்) மறுரூபமாக்கப்படுவோம்.

இது திடீர் திருப்பமாக, நம்மை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் ஒரு நிகழ்வாக இருக்கப் போகிறது! “ஒரு இமைப்பொழுதிலே…..” என்ற வார்த்தைகள், எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. “ஒரு இமைப்பொழுதிலே” என்றால், கண் இமைக்கும் அந்த ஒரு கணத்திலே, விசுவாசிகளாகிய நீங்கள் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பொம். வழக்கமாக, நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதுபோலவே, அப்பொழுது நாம் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டிருப்போம். அந்த நேரத்தில், பிரகாசமான ஒளி வீசி, ஒரு கணம் நம் கண்களை சிமிட்டும்படி செய்யும். நம் கண்களை மூடி, திறக்கின்ற அந்த நேரத்தில், நாம் ஒருவரையொருவர் முற்றிலும் வித்தியாசமான விதத்தில் பார்ப்போம். அந்த ஒரு கணப்பொழுதில், தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமையினால் நம்முடைய மாம்ச சரீரங்கள் முற்றிலும் உருமாற்றப்படும். முற்றிலும் வித்தியாசமான ஒரு சரீரத்தை உடையவர்களாய் நாம் இருப்போம். உண்மையான விசுவாசி ஒவ்வொருவருக்கும் முன்பாக, அந்த மகிமையான நம்பிக்கைதான் இருக்கிறது.

பல்வேறு இடங்களில், இயேசு தம்முடைய இரண்டாம் வருகையை ஒரு திருடன் எப்படி வருவானோ அதோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். எடுத்துக்காட்டிற்கு, வெளிப்படுத்தின விசேஷம் 16:15-ல் அவர் இவ்வாறு சொல்கிறார்:

15 “இதோ, திருடனைப்போல் வருகிறேன்………..”

மத்தேயு 24:42-43 வசனங்களில், அவர் தம்முடைய சீஷர்களிடம் பேசுகிறார்:

42 உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். 43 திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டு எஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று (கன்னமிட விட மாட்டான் என்று) அறிவீர்கள்.

தம்முடைய இரண்டாம் வருகைக்கும், ஒரு திருடன் வரும் விதத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்று இயேசு இங்கு திரும்பத் திரும்பச் சுட்டிக் காண்பிப்பதை நாம் பார்க்கிறோம். இது 1 தெசலோனிக்கேயர் 4-ம் அதிகாரத்தில் பவுல் பயன்படுத்தின வார்த்தைக்கு ஒத்திருப்பதை நாம் பார்க்க முடியும்:

17 “…..நாமும் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம்…..”

ஹார்ப்பஸோ (harpazo) என்ற கிரேக்க வினைச்சொல் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தை புதிய ஏற்பாட்டின் பல்வேறு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டிற்கு, அப்போஸ்தலர் நடபடிகள் 8:39-ஐ வாசித்துப் பார்ப்போம்:

“கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டு போய் விட்டார்….” ஆங்கிலத்தில், “The Spirit of the Lord snatched Philip away….” என்று வருகிறது. “கொண்டு போய் விட்டார்” என்பதற்கு “snatched away” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

திடீரென்று எத்தியோப்பிய மந்திரியின் பார்வையிலிருந்து, பிலிப்பு காணாமல் போய் விட்டான். அப்பொழுதுதான் பிலிப்பு அவனுக்கு தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தான். ஆவியானவர் பிலிப்பை திடீரென்று தூக்கிக் கொண்டு போய் விட்டார். அந்த மந்திரியும் தன் வழியே போனான். ஆனால் பிலிப்புவை அங்கே பார்க்க முடியவில்லை. இதற்கு “snatched away” என்ற ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழில் “கொண்டு போய் விட்டார்” என்று வருகின்றது.

யோவான் 10:12-ல், ஆடுகள் மத்தியில் ஓநாய் செய்கிற வேலையைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. “ஓநாய் ஆடுகளைப் பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.” ஆங்கிலத்தில், “The wolf snatches the sheep,” என்று வருகிறது. ஹார்ப்பஸோ (harpazo) என்ற அதே வார்த்தைதான் இங்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளை பறவைகள் பட்சித்து விடுகின்றன என்பதைக் குறித்து மத்தேயு 13:19 சொல்கிறது:

“பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக் கொள்கிறான்……”

அக்கினியிலிருந்து சிலரை இழுத்து விடுவதைக் குறித்து (snatching people out of fire), யூதா 23-ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதே வார்த்தைதான், இந்த ஒவ்வொரு வசனத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எல்லா வேதவசனங்களையும் ஒன்றாக சேர்த்து வைத்துப் பார்ப்போம் என்றால், இயேசு வரும்போது என்ன நடக்கப் போகிறது என்பதைக் குறித்த ஒரு தெளிவாக படம் நமக்குக் கிடைக்கும். ஹார்ப்பஸோ (harpazo) என்ற கிரேக்க வினைச்சொல்தான் அது. பறித்துக் கொள்வதை இது குறிக்கிறது. இது ஒரே இழுப்பில், பலவந்தமாய் பறித்துக் கொள்வதைக் குறிக்கிறது. இது துரிதமாய், கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழும் ஒரு நிகழ்வாகும். இது வெகு சீக்கிரமாய் நடந்து முடியப் போகிற ஒரு நிகழ்வாயிருக்கிறது. ஒரு திருடன் எவ்வாறு ஒன்றைப் பறித்துக் கொண்டு, திரும்பிப் பார்க்காமல், வேகமாய் ஓடுகிறானோ, அதைக் காட்டிலும் வேகமாய், கண்ணிமைக்கும் நேரத்தில் இயேசு வருவார், தம்முடைய ஜனங்களை தம்மோடு சேர்த்துக் கொள்வார்.

ஆனாலும், இயேசு என்ன செய்வார் என்பதற்கும், திருடன் என்ன செய்வான் என்பதற்கும் இடையே ஒரு முக்கியமான வித்தியாசமிருக்கிறது. அந்த முக்கியமான வித்தியாசம் இதுதான்: திருடன் தனக்குச் சொந்தமில்லாத ஒன்றைப் பறித்துக் கொள்வான். ஆனால் இயேசுவோ தனக்குச் சொந்தமானதை தம்மோடு சேர்த்துக் கொல்வார். நமக்கு முன் இருக்கிற இந்த முக்கியமான தருணத்தைக் குறித்து 1 கொரிந்தியர் 15:23 பேசுகிறது. “அவர் (கிறிஸ்துவின்) வருகையில், அவருடையவர்கள் (கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள்)…….” என்று இந்த வசனம் சொல்கிறது. கிறிஸ்து தமக்குச் சொந்தமானவர்களுக்காகவே வரப் போகிறார். அவரால் மீட்கப்பட்ட, முழுமையாய் அவருக்கு இணங்கி, கீழ்ப்படிந்து வாழ்கிறவர்களுக்காகவே, அவர்களுக்காக மட்டுமே அவர் வரப் போகிறார். இனி அவர்கள் கிறிஸ்துவுக்கு மட்டுமே சொந்தமானவர்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா?

இன்றைக்கு நம்முடைய நேரம் முடிந்து விட்டது. அடுத்த வாரம், இதே நேரம், நான் திரும்பவும் உங்களை சந்திப்பேன். “மரணத்தின் மீது வெற்றி” என்ற இந்தச் செய்தித்தொடரை அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை நான் தொடருவேன். “நம்முடைய உயிர்த்தெழுந்த சரீரத்தின் சுபாவம் என்ன?” என்பதைக் குறித்து என்னுடைய அடுத்த செய்தியில் நான் பேசுவேன்.

இரண்டு விசேஷமான வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள். முதலில், “மரித்தோரின் உயிர்த்தெழுதல் (The Resurrection of the Dead)” என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகம். மரணத்தைக் குறித்த எல்லா பயங்களிலிருந்தும், நிச்சயமற்ற உணர்வுகளிலிருந்தும் உங்களை விடுதலையாக்கக்கூடிய சத்தியம் இதில் எழுதப்பட்டிருக்கிறது. மரணத்தை எதிர்கொள்ளக்கூடிய தைரியத்தை இது உங்களுக்குக் கொடுக்கும். மரணத்திற்கு பின் வருகிற நித்தியத்தை, எவ்வித சலனமுமில்லாமல், அசைக்க முடியாத நிச்சயத்தோடு எதிர்கொள்ளத் தேவையான திராணியையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். இரண்டாவது விசேஷ வாய்ப்பு, இந்த வாரத்தில் நான் பேசின செய்திகள் அனைத்தும், மிகவும் கவனமாக தொகுக்கப்பட்டு, 60 நிமிட ஆடியோவாக, “மரணத்தின் மீது வெற்றி – பாகம் 2” என்ற தலைப்பில் உங்களுக்குக் கிடைக்கும்படி இருக்கிறது. தொடர்ந்து கேட்டு, இதன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

லைக்
பகிரவும்