ஒரு புதிய வாரத்தின் ஆரம்பத்தில் உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. வாழ்க்கை எனக்குப் போதித்திருக்கிற சத்தியங்களிலிருந்து உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன். இந்தச் சத்தியங்கள் என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வித்தியாசத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. இவை அதையே உங்களுக்கும் செய்யும்.

முதலில், எனக்கு கடிதம் எழுதிய எல்லோருக்கும் “நன்றி” சொல்லி விடுகிறேன். நான் இந்தச் செய்தியை முடிக்கும்போது, நாங்கள் இன்னொரு விலாசத்தை உங்களுக்குக் கொடுப்போம். உங்களுடைய தனிப்பட்ட தேவைகளை, பிரச்சனைகளை, உங்களுடைய ஜெப விண்ணப்பங்களை அந்த விலாசத்திற்கு நீங்கள் தாராளமாக எழுதி அனுப்பலாம்.

“மரணத்தின் மீது வெற்றி” என்ற தலைப்பில், கடந்த இரண்டு வாரங்களாக வேதாகமத்திலிருந்து சத்தியங்களைப் போதித்துக் கொண்டு வருகின்றேன். இது நம் எல்லோருக்குமே அத்தியாவசியமான ஒரு போதனையாகும். அவ்வளவு அர்த்தச் செறிவு நிறைந்த, அருமையான ஒரு போதனையாய் இது நமக்கு இருக்கிறது. இந்த வாரத்திலும், இதை நான் தொடர்ந்து போதித்து, நிறைவு செய்யப் போகிறேன். நாம் அறிந்து கொள்ள வேண்டிய இன்னும் பல அருமையான பொக்கிஷங்கள் இதில் இருக்கிறது!

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையோடு சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சம்பவத்தைக் குறித்து கடந்த வாரக் கடைசி செய்தியில் நான் பேசினேன். நீதிமான்களாய் மரித்த விசுவாசிகளின் உயிர்த்தெழுதலைக் குறித்து நான் அதில் பிரசங்கித்தேன்.

இந்தத் தலைப்பில், இன்னும் ஒரு அடி முன்னே எடுத்து வைத்து, இன்றையை செய்தியை நான் போதிக்கப் போகிறேன். உயிர்த்தெழுதலில், விசுவாசிகள் புதிய வகையான சரீரத்தைப் பெற்றுக் கொள்வார்கள். நீதிமான்களின் உயிர்த்தெழுந்த இவ்வகையான சரீரத்தைக் குறித்துதான் இன்று நான் பேசப் போகிறேன்.

1 கொரிந்தியர் 15-ம் அதிகாரம், இந்த உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசுகிற மிக முக்கியமான ஒரு அதிகாரமாகும். பவுல், இந்த உயிர்த்தெழுந்த சரீரத்தைக் குறித்து, 35-38 வசனங்களில் பேசுகிறார்:

35 ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், 36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்க மாட்டாதே. 37 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை (சரீரத்தை) விதையாமல், கோதுமை அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். 38 அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார். விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.

பவுல் இங்கே இரண்டு காரியங்களை ஒப்பிட்டு ஒரு படமாக வரைகின்றார்:

1. பூமியில் விதைக்கப்படும் ஒரு கோதுமை விதை

2. பூமியில் புதைக்கப்படும் ஒரு விசுவாசியின் சரீரம்

கோதுமை விதைக்கு என்ன நடக்கிறது என்பதற்கும், ஒரு விசுவாசியின் சரீரத்திற்கு என்ன நடக்கிறது என்பதற்கும் இடையே ஒரு வகையான தொடர்பு இருக்கிறது என்று அவர் இங்கு சுட்டிக் காண்பிக்கிறார்.

“மரித்தோரின் உயிர்த்தெழுதல் (The Resurrection of the Dead)” என்ற என்னுடைய புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில், இந்த ஒப்புமையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைக் குறித்து நான் எழுதியிருக்கிறேன். ஆகையால் அந்த அத்தியாயத்திலிருந்து ஒரு பத்தியை நான் இங்கு வாசிக்கப் போகிறேன் (8-ம் அத்தியாயம், 80, 81-ம் பக்கங்கள்).

பூமியில் புதைக்கப்பட்ட சரீரத்திற்கும், உயிரோடு எழுப்பப்படுகிற சரீரத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்கிக் காட்டும்படி, பூமியில் விதைக்கப்படுகிற கோதுமை விதையை எடுத்துக்காட்டாக பவுல் இங்கே பயன்படுத்துகிறார். இந்த ஒப்பீட்டிலிருந்து வெளிப்படுகிற மூன்று உண்மைகளை, உயிரோடு எழுப்பப்படும் சரீரத்தோடு பொருத்திப் பார்க்க முடியும்.

முதல் உண்மை, பூமியில் விதைக்கப்பட்ட விதைக்கும், பிறகு அந்த விதையிலிருந்து, நிலத்திற்கு மேலே வெளியே வளரும் தாவரத்திற்கும் இடையே ஒரு நேரடித் தொடர்ச்சி இருக்கிறது. அந்த விதையின் உட்பொருள், அந்த விதையிலிருந்து வெளியே வளர்ந்த தாவரத்திற்குள் இப்பொழுதும் இருக்கிறது.

இரண்டாவது உண்மை, விதைக்கப்பட்ட அந்த விதையிலிருந்து வெளியே வளருகிற தாவரமானது, சில முக்கியமான, வெளிப்படையான மாற்றங்களுக்கு உட்படுகிறது. அந்தப் புதிய தாவரத்தின் வெளிப்புற வடிவமும், தோற்றமும், விதைக்கப்பட்ட அந்த விதையிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது.

மூன்றாவது உண்மை, விதைக்கப்பட்ட அந்த விதையின் சுபாவம்தான், அதிலிருந்து முளைத்து வெளியே வளருகிற தாவரத்தின் சுபாவத்தைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு வகையான விதையும், அதற்குரிய வகையான தாவரத்தைத்தான் வளரச் செய்கின்றன. கோதுமை விதையானது, கோதுமைக் கதிரைத்தான் விளையச் செய்கிறது. ஒரு பார்லி விதையானது, பார்லி கதிரைத்தான் முளைத்து, வளரச் செய்கிறது.

விதையின் எடுத்துக்காட்டிலிருந்து இந்த மூன்று உண்மைகளையும் எடுத்து, உயிர்த்தெழச் செய்யப்படப் போகிற நம் சரீரத்தின் சுபாவத்தோடு பொருத்திப் பார்ப்போம்.

முதலில், அடக்கம் பண்ணப்பட்ட சரீரத்தின் தன்மைக்கும், உயிர்ப்பிக்கப்படப் போகிற சரீரத்தின் தன்மைக்கும் இடையே ஒரு நேரடித் தொடர்ச்சி இருக்கிறது.

இரண்டாவதாக, உயிர்ப்பிக்கப்படும் சரீரம் இந்நிகழ்வில் சில முக்கியமான, வெளிப்படையான மாற்றங்களுக்கு உட்படுகிறது. அடக்கம் பண்ணப்பட்ட சரீரத்தின் உருவமும் தோற்றமும், புதியதாக உயிரோடு எழுப்பப்படப் போகிற சரீரத்தின் உருவம் மற்றும் தோற்றத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

மூன்றாவதாக, அடக்கம் பண்ணப்பட்ட சரீரத்தின் தன்மைதான், உயிரோடு எழுப்பப்படப் போகிற சரீரத்தின் தன்மையை தீர்மானிக்கிறது. அதாவது, ஒரு விசுவாசி இப்பொழுது பூமியில் வாழ்கின்றபோது எந்த நிலையில் வாழ்கின்றாரோ, அந்த நிலைக்கேற்ற தன்மையை உடைய ஒரு சரீரத்தோடுதான் அவர் உயிரோடு எழுப்பப்படுவார். இதில் தற்செயலான, ஒரு நேரடித் தொடர்பு இருக்கும்.

ஆக, நிலத்தில் விதைக்கப்படுகிற கோதுமை விதைக்கும், அடக்கம் பண்ணப்பட்ட விசுவாசியின் சரீரத்திற்கும் இடையே அவ்வளவு ஒற்றுமையான விஷயங்கள் இருக்கின்றன.

உயிர்ப்பிக்கப்படப் போகிற சரீரத்தின் தன்மையைக் குறித்த அதே விஷயத்தை பவுல் தொடர்ந்து, 1 கொரிந்தியர் 15-ம் அதிகாரத்தில் பேசுகிறார். இப்பொழுது நாம் 1 கொரிந்தியர் 15:39-42 வசனங்களை வாசிப்போம்:

39 எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல. மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய (மீன்களுடைய) மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. 40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு (சரீரங்களுமுண்டு). பூமிக்குரிய மேனிகளு முண்டு. வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே. பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே. 41 சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே. மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. 42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும். அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.

பவுல் இங்கே பல முக்கியமான குறிப்புகளை எழுதியிருக்கிறார்:

பூமியிலே கூட பல்வேறு வித்தியாசமான சரீரங்கள் இருக்கின்றன என்பதை அவர் முதலில் குறிப்பிடுகிறார். பறவைகள், மனுஷர்கள், மீன்கள் மற்றும் மிருகங்களின் சரீரங்கள் என பல்வேறு வித்தியாசமான சரீரங்கள் இங்கே இருக்கின்றன. பிறகு அவர், பூமிக்குரிய மண்டலத்தையும் தாண்டி, வான மண்டலத்திலும் பல்வேறு வித்தியாசமான சரீரங்கள் இருக்கின்றன என்று குறிப்பிடுகிறார். அவை இந்தப் பூமியிலே நாம் பார்க்கின்ற சரீரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டிருக்கின்றன. அந்த வான மண்டலத்திலுள்ள வைகள், தோற்றத்திலும் மகிமையிலும் வித்தியாசப்படுகின்றன என்பதை அவர் தொடர்ந்து சுட்டிக் காண்பிக்கிறார். சூரியன், நிலாவிலிருந்து வித்தியாசப்படுகிறது. இவையிரண்டிலும் இருந்து, நட்சத்திரங்கள் வித்தியாசப்படுகின்றன. நட்சத்திரங்கள், ஒன்றுக்கொன்றும் வித்தியாசப்படுகின்றன என்பதையும் அவர் சொல்கிறார். அவர் இதை உயிர்த்தெழப் போகிற சரீரங்களோடு பொருத்திப் பார்க்கிறார். ஆகையால்தான், “மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும்,” என்று அவர் தொடர்ந்து சொல்கிறார். ஆக, இந்த பூமியிலே வாழும்போது, நமக்கிருக்கும் சரீரம் ஒரு வகையானது. ஆனால் நாம் உயிர்ப்பிக்கப்படும் போது, நமக்குக் கொடுக்கப்படும் சரீரம், வேறொரு வகையானதாய், வித்தியாசமாய் இருக்கும். அது நம்முடைய புதிய வாசஸ்தலமாக இருக்கப்போகிற பரலோக தளத்திற்கு ஏற்றதாய், அதற்குப் பொருத்தமானதாய் இருக்கும்.

இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு மனுஷனை விண்கலத்தில் வைத்து, விண்வெளிக்கு அனுப்பும்போது, அவனால் நேரடியாக விண்வெளிக்குள் சென்று விட முடியும். ஆனால் பூமியில் வாழ்வதற்கேற்ற சீதோஷ்ண நிலையையும், சூழ்நிலையையும் அவன் தன்னோடு எடுத்துச் செல்ல வேண்டும். காரணம், அவனுடைய சரீரம், விண்வெளியில் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. பூமியில் வாழ்வதற்குரிய சரீரம்தான் அவனிடம் இப்பொழுது இருக்கிறது. ஆனால் நம்முடைய புதிய உயிர்த்தெழுதலின் சரீரத்தை நாம் பெற்றுக் கொள்ளும்போது, அது பூமிக்குரிய சூழ்நிலைக்கும், பூமியின் சீதோஷ்ண நிலைக்கும் மட்டுமே உரியதாக, அதற்கு மட்டுமே கட்டுப்பட்டதாக இருக்காது. உயிர்த்தெழுதலில், விசுவாசிகளுக்குக் கொடுக்கப்படும் சரீரங்களின் மகிமையில், வித்தியாசங்கள் காணப்படும். பல்வேறு நட்சத்திரங்களுக்கு இடையே அவற்றின் மகிமையில் வித்தியாசம் இருப்பதுபோல, இந்த பூமியில் வாழ்ந்தபோது ஒவ்வொரு விசுவாசியும் எவ்வளவு உண்மையாய் ஊழியம் செய்தார், வாழ்ந்தார் என்பதற்குத் தக்கதாக, அவர்களுடைய மகிமையில் அவர்களுக்கிடையே வித்தியாசம் காணப்படும். ஆக, ஒவ்வொரு விசுவாசியும் இந்தப் பூமியில் எவ்வளவு உண்மையாய் வாழ்கிறாரோ, அதற்குத் தக்கதாக, அவருடைய உயிர்த்தெழப் போகிற சரீரத்தின் மகிமை இருக்கும். இந்த மகிமை, நித்திய நித்தியமாக, என்றென்றைக்குமாய் நீடித்திருக்கும்.

பவுல் தொடர்ந்து பேசுகிறார். 1 கொரிந்தியர் 15:42-44 வசனங்களை நாம் வாசிப்போம்:

42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும். அழிவில்லாததாய் எழுந்திருக்கும். 43 கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும். மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும். பலமுள்ளதாய் எழுந்திருக்கும். 44 ஜென்ம சரீரம் விதைக்கப்படும். ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். ஜென்ம சரீரமுண்டு. ஆவிக்குரிய சரீரமுண்டு.

“ஜென்ம” என்ற வார்த்தையை ஒரு கணம் நின்று, கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆங்கிலத்தில், “natural” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது soul என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதை ஆங்கிலத்தில் soulish என்று சொல்லலாம். தமிழில், ஜென்ம சுபாவமுள்ள சரீரம் என்று சொல்லலாம். ஆக, ஜென்ம சுபாவமுள்ள சரீரம் என்ற ஒன்று உண்டு. ஆவிக்குரிய சரீரம் என்ற ஒன்றும் உண்டு. இன்னும் கொஞ்ச நேரத்தில், நான் இதற்குத் திரும்பவும் வருகிறேன். ஆனால் அடக்கம் பண்ணப்பட்ட ஜென்ம சரீரத்திற்கும், அதிலிருந்து உயிரோடு எழுப்பப்படப் போகிற சரீரத்திற்கும் இடையே இன்னொரு வித்தியாசமும் இருக்கிறது என்பதை இப்பொழுது நான் சொல்லி விடுகிறேன். பவுல் இதை 1 கொரிந்தியர் 15:53-ல் எழுதியிருக்கிறார்:

53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ள வேண்டும்.

1 கொரிந்தியர் 15-ம் அதிகாரத்தில் நாம் வாசித்த இந்த வசனங்களையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது, அடக்கம் பண்ணப்பட்ட சரீரத்திற்கும், உயிரோடு எழுப்பப்படப் போகிற சரீரத்திற்கும் இடையே ஐந்து முக்கியமான மாற்றங்கள் உண்டாகப் போவதை நம்மால் பார்க்க முடியும். இந்த ஐந்து மாற்றங்களையும் இப்பொழுது நாம் பார்ப்போம்:

1. அடக்கம் பண்ணப்பட்ட சரீரம், அழியக்கூடியது. உயிரோடு எழுப்பப்படப் போகிற சரீரம் அழியாததாய் இருக்கிறது. சீர்கேடு அடையக்கூடியது, சீர்கேடு அடையாதது என்று கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு சொல்கிறது. அதாவது நம்முடைய ஜென்ம சரீரம், சீர்கேடு அடையக்கூடிய, அழியக்கூடிய சரீரமாய் இருக்கிறது என்று அர்த்தம். அது வியாதிகளுக்கும், வலி வேதனைகளுக்கும், எல்லா வகையான நோய்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறது. நம் முதிர் வயதில் பற்கள் விழுகிறது, முடி கொட்டிப் போகிறது, தோலில் சுருக்கம் உண்டாகிறது. இந்த பூமிக்குரிய சரீரத்தில் இவையெல்லாம் நடப்பது இயல்பானதுதான் என்று நாம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் உயிர்ப்பிக்கப்படப் போகிற சரீரத்தில், இவையெல்லாம் முற்றிலும் வித்தியாசமானதாய் இருக்கும்.

2. சாவுக்கேதுவான நிலையிலிருந்து சாவாமை எனும் நிலைக்கு மாற்றம் உண்டாகிறது. இந்த பூமிக்குரிய சரீரம் மரிக்கக்கூடியதாய் இருக்கிறது. ஆனால் உயிர்த்தெழச் செய்யப்படப் போகிற சரீரம், மரணமே நேரிட முடியாத ஒரு சரீரமாய் இருக்கிறது. சாவு என்றால், மரிக்கக்கூடிய நிலையைக் குறிக்கிறது. சாவாமை என்றால், மரணமே இல்லாத ஒரு நிலையாக இருக்கிறது. உயிர்ப்பிக்கப்படப் போகிற சரீரம், சாவாமையுள்ளதாய் இருக்கும்.

3. கனயீனத்திலிருந்து, மகிமையின் நிலைக்கு மாற்றம் உண்டாகும். இப்பொழுது நம்மிடம் இருக்கும் சரீரம் பாவத்தின் விளைவுகளை தாங்கிக் கொண்டிருக்கிற ஒரு சரீரமாயிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆதியில், ஆதாமின் சரீரத்தை தேவன் உருவாக்கினாரே, உண்மையில், அந்த சரீரம் இப்பொழுது நம்மிடம் இல்லை. இது மனுஷனுடைய பாவத்தின் அடையாளங்களை சுமந்து கொண்டிருக்கிற சரீரமாயிருக்கிறது. ஒரு விதத்தில் பார்த்தால், இது நம்முடைய கனயீனமான, மகிமையற்ற நிலையை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. ஆகையால், உயிரோடு எழுப்பப்படப் போகிற சரீரம், மகிமையின் சரீரமாக இருக்கும். அது ஒருபோதும் நம்முடைய பாவத்தின் விளைவுகளை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்காது.

4. பெலவீனமுள்ளதாய் இருப்பது, வல்லமையுள்ளதாய் மாற்றமடையும். அடக்கம் பண்ணப்பட்ட சரீரம், பெலவீனமான ஒரு சரீரமாய் இருக்கிறது. இறுதிச் சடங்கில் நான் பங்கெடுக்கும்போதெல்லாம், மனுஷன் எவ்வளவு பெலவீனமானவனாய் இருக்கிறான் என்று நான் எப்பொழுதுமே நினைத்துப் பார்ப்பதுண்டு. மரித்துப் போன அந்த மனுஷன் பெரிய பெலவானாய், பலசாலியாய் இருக்கலாம், அதிக அறிவுக்கூர்மையும், எதையும் செய்து முடிக்கக்கூடிய திராணியும் உடைய ஒரு நபராக இருக்கலாம். ஆனால் ஒரு நாள், அவனோடு கூடவே ஒட்டிப் பிறந்த அந்த பெலவீனம் வெளிப்படுகிறது. அவன் மரித்துதான் ஆக வேண்டும். ஆனால் உயிரோடு எழுப்பப்படப் போகிற சரீரம், வல்லமையை உடைய சரீரமாய் இருக்கும்.

5. ஜென்ம சரீரம், ஆவிக்குரிய சரீரமாய் மாற்றமடைகிறது. இது ஒருவேளை விளக்கிச் சொல்வதற்கோ அல்லது புரிந்து கொள்வதற்கோ கடினமாக இருக்கலாம். ஆனால் “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது,” என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய ஜென்ம சரீரத்தில் இரத்தம் இருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட கருத்தாய் இதை நான் சொல்கிறேன். உயிர்ப்பிக்கப்படப் போகிற சரீரம், மாம்சமும் எலும்புகளும் உடையதாயிருக்கும். ஆனால் அதில் இரத்தம் இருக்காது. அதையும் தாண்டி, ஆத்துமாவினால் அல்ல, ஆவியினால் நேரடியாக வழி நடத்தப்படுகிற, கட்டுப்படுத்தப்படுகிற ஒரு சரீரமாய் அந்த சரீரம் இருக்கும். மனுஷன் இப்பொழுது இந்தச் சரீரத்தில் வாழ்கின்றபோது, அவன் தன்னுடைய உணர்ச்சிகளினாலும், ஆத்துமாவின் தாக்கங்களினாலும் வழி நடத்தப்படுகிறான். அவன் அவற்றின் கீழ் இருக்கிறான். ஆனால் உயிர்ப்பிக்கப்பட்ட பிறகு, தேவனோடு உள்ள நேரடித் தொடர்பினால், அவன் தேவனால் நேரடியாக வழி நடத்தப்படுவான். இயேசு உயிரோடு எழுப்பப்பட்டபோது, அவருடைய சரீரம் என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலையில்தான் இந்த சரீரமும் இருக்கும். பிலிப்பியர் 3:20-21 வசனங்கள் இவ்வாறு சொல்கின்றன:

20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 21 அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தை தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். [ஒரு அற்பமான சரீரத்தில் இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவமதிக்கப்பட்ட ஒரு சரீரம் என்று கிரேக்க மொழி சொல்கிறது. நம்முடைய பாவத்தின் விளைவுகளையும், அதினால் உண்டான நிந்தை அவமானங்களையும் சுமந்து கொண்டிருக்கிற ஒரு சரீரமாய் இருக்கிறது. ஒருவர் மிகவும் அழகானவராக இருக்கலாம், பெரிய செல்வந்தராக இருக்கலாம். அவருடைய சரீரமும் இந்த இழிவான நிலையை அவருக்கு எப்பொழுதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். அவருடைய சரீரத்திலும் வியர்வை துர்நாற்றம் வீசும். அவரும் சுத்தமாக குளிக்க வேண்டும். அவருக்கும் வியாதிகள் வரும். அவருடைய சரீரம் எப்பொழுதுமே அற்பமான, இழிவுபட்ட ஒரு சரீரமாகத்தான் இருக்கும். புதிய சரீரம், கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைப் போல, மகிமையின் சரீரமாக இருக்கும்].

சரி, நம்முடைய நேரம் இன்று முடிந்து விட்டது. ஆனால் நாளை இதே நேரம் நான் திரும்பவும் உங்களை சந்திப்பேன். தேவனுடைய திட்டத்தின் அடுத்த கட்டத்தைக் குறித்து நாளைய செய்தியில் நான் பேசுவேன். அதாவது உயிர்த்தெழுதலுக்கு அடுத்து வருகிற நியாயத்தீர்ப்பைக் குறித்து நான் பேசுவேன்

லைக்
பகிரவும்