இன்றும் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் முழுவதும் நாம் “எவ்வாறு ஜெபித்து, ஜெபித்ததைப் பெற்றுக்கொள்வது” என்ற கருப்பொருளைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறோம்.

நாம் ஜெபிக்க வேண்டும், நாம் ஜெபித்து, எதற்காக ஜெபித்தோமோ, அதையே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதைக் குறித்து, இவ்வாரத்தின் என்னுடைய முந்திய இரண்டு செய்திகளில் நான் விளக்கிச் சொன்னேன். ஜெபத்தில் நாம் தேவனை அணுகும்போது, பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் இருக்கின்றன. நேற்றைய செய்தியில் முதல் நிபந்தனையைக் குறித்து நான் சொன்னேன். அதாவது, நம்முடைய சுய சித்தத்தை மறுத்து, தேவனுடைய சித்தத்தைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து நாம் பார்த்தோம். இந்த விஷயத்தில், இயேசுவே நம் முன்மாதிரியாக இருக்கிறார். தேவனைக் குறித்து அவருக்குள் இருந்த பயபக்தியின் நிமித்தம், அவருடைய ஜெபங்கள் கேட்கப்பட்டது. “என் சித்தமல்ல. உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,” என்று பிதாவாகிய தேவனிடம் அவர் பேசிய இந்த வார்த்தைகள் மூலம் அது வெளிப்பட்டது.

நான் அதை இவ்வாறு தொகுத்துச் சொல்கிறேன்: ஜெபம் என்பது, நீங்கள் விரும்புவதையெல்லாம் தேவனை செய்ய வைக்கும்படியான ஒரு வழிமுறையல்ல. மாறாக, தேவன் தாம் விரும்புகிறதைச் செய்யும்படி உங்களை ஒரு கருவியாய் மாற்றுவதுதான் ஜெபமாகும். தேவன் செய்ய விரும்புகிற காரியங்களெல்லாம், நீங்கள் கற்பனை செய்து பார்க்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தைக் காட்டிலும் மிக மிகப் பெரியதாய், நம்மைக் குறித்து நாம் சிந்திப்பதைக் காட்டிலும் அளவிட முடியாத விதத்தில், மிகவும் உன்னதமானதாய், மிகவும் சிறந்ததாய் இருக்கின்றன. தேவனுடைய சித்தத்தின் நிலையில் நின்று கொண்டு நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் உச்சகட்ட உயர்வான நிலையில் நின்று கொண்டு ஜெபிக்கின்றீர்கள் என்று அர்த்தம். உங்களுடைய சுய சித்தத்தில் நின்று கொண்டு, உங்களால் சாதிக்க முடிவதைக் காட்டிலும் மிகவும் உயரிய காரியங்களை நீங்கள் அதில், அதாவது தேவனுடைய சித்தத்தில் நின்று சாதிப்பீர்கள்.

ஜெபத்தில் தேவனை அணுகுவதற்கான இரண்டாவது நிபந்தனையைக் குறித்து இன்றைய செய்தியில் நாம் பார்ப்போம். இதை மிகவும் எளிமையாக ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம்: விசுவாசம்.

எபிரெய நிருபம் 11-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 6-ம் வசனத்தை வாசிப்போம். தேவனை அணுகுகிற எல்லோரும் பூர்த்தி செய்ய வேண்டிய, ஒருபோதும் மாறாத, ஒரு அடிப்படை நிபந்தனையைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் அதை வாசிப்போம்:

6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.”

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். நாம் தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றால், விசுவாசம் இன்றியமையாததாக இருக்கிறது. தேவனிடம் வருகிற ஒவ்வொருவருமே விசுவாசிக்க வேண்டும். இது தேவனுடைய ஒருபோதும் மாறாத நிபந்தனையாயிருக்கிறது. அது மட்டுமல்ல. நாம் இரண்டு காரியங்களை விசுவாசித்தாக வேண்டும். தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதையும், அவரை ஜாக்கிரதையோடு ஆர்வமாய் தேடுகிறவர்களுக்கு நிச்சயமாய் பலன் கொடுக்கிறவர் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும். தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை விசுவாசிப்பதில் நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது. நாம் அவ்வளவு விசுவாசித்தால் போதும், நாம் இந்த நிபந்தனையை பூர்த்தி செய்து விடுவோம் என்றால், நிலை அதுவல்ல. ஆகையால் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசித்தால் மட்டும் போதாது, தம்மை கருத்தாய், ஜாக்கிரதையாய் தேடுகிறவர்களுக்கு அவர் நிச்சயம் பலனளிக்கிறார் என்றும் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இதுதான் உண்மையாகவே மிக முக்கியமான ஒரு கேள்வியாக இருக்கிறது. “அப்படியா? எனக்கு எந்தப் போதனையும் தெரியாது. நான் இறையியல் படித்ததில்லை. மதக் கோட்பாடுகளெல்லாம் எனக்குத் தெரியாது. இப்படிப்பட்ட விஷயங்களில் நான் கற்றுத் தேர்ந்தவனாய் இருக்கவில்லையே,” என்று நீங்கள் சொல்லலாம். அப்படியா! நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியை வைத்திருக்கிறேன். பிரதானமாக, இந்த விசுவாசம், போதனையையோ, இறையியலையோ குறித்ததல்ல. இது ஒரு நபராய், தேவன் மீது கொண்டிருக்கும் தைரியமாய், நம்பிக்கையாய் இருக்கிறது. இது தேவனுடைய உண்மையின் மீது வைக்கிற நம்பிக்கையாயிருக்கிறது. அவருடைய நம்பகத்தன்மையின் மீது கொண்டிருக்கும் தைரியமாய் இது இருக்கிறது. நீங்கள் ஜாக்கிரதையாய் ஆர்வமுடன் தேவனைத் தேடுவீர்கள் என்றால், அவர் நிச்சயம் உங்களுக்கு பலனளிப்பார் என்ற விசுவாசத்தோடுதான் நீங்கள் தேவனிடம் வர வேண்டும். உண்மையில் இதற்கு இறையியல் அறிவெல்லாம் தேவையில்லை. இது தேவனைக் குறித்து தனிப்பட்ட விதத்தில் உங்களுக்குள் இருக்கும் படமாக இருக்கிறது. ஆகையால்தான், தேவனைக் குறித்த சரியான படத்தோடு நாம் ஆரம்பிக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்று இந்த செய்தித்தொடரின் ஆரம்பத்திலேயே நான் சொன்னேன். அதுதான் விசுவாசத்தை உண்டாக்குகிறது. நாம் தேவனுடைய நல்தயவின் மீது விசுவாசம் வைக்கிறோம். நாம் அவருடைய உண்மையின் மீது விசுவாசம் வைக்கிறோம். நாம் அவருடைய நம்பகத்தன்மையின் மீது விசுவாசம் வைக்கிறோம்.

ஆகையால்தான் அதற்கு நேரெதிரான அவிசுவாசம், பாவமாயிருக்கிறது. வேதாகமம் இதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. அவிசுவாசம் ஏன் பாவமாயிருக்கிறது என்பதை அநேகரால் பார்க்க முடியவில்லை. ஒரு அடிப்படைக் காரணம், அவிசுவாசம் என்பது தேவனை, தேவனுடைய உண்மையை, அவருடைய நம்பகத்தன்மையை சந்தேகிக்கிறது. அது தேவனை அவமதிக்கிறது. அது தேவனை அவதூறாக தூற்றுகிறது. அது தேவனைக் குறித்த தவறான, வேதாகமத்திற்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு படத்தை உருவாக்குகிறது.

தேவனை விசுவாசத்தோடு அணுக வேண்டும் என்ற இந்த நிபந்தனை, தேவனை அணுகுகிற எல்லா விஷயங்களுக்கும் பொருந்துகிறது. ஆனாலும் முக்கியமாக இது ஜெபத்திற்குப் பொருந்துகிறது. எடுத்துக்காட்டிற்கு, மத்தேயு 21:22-ல், இயேசு சொல்கிறார்:

22 நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ, அவைகளையெல்லாம் பெறுவீர்கள்.

“விசுவாசமுள்ளவர்களாய்” என்ற முக்கியமான திறவுகோல் வார்த்தையை இவ்வசனத்தில் நாம் கவனிக்க வேண்டும். விசுவாசத்தோடு ஜெபத்தில் நீங்கள் கேட்கின்ற எல்லாவற்றையும், நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். திரும்பவும், 1 யோவான் 5:14-ல், நாம் இதை வாசிக்க முடியும்:

14 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்கு செவி கொடுக்கிறார் என்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

இதைக் குறித்துதான் இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இது தேவன் மீது நாம் கொண்டிருக்கும் தைரியமாயிருக்கிறது. சரியான போதனையை விசுவாசிப்பது முக்கியமானதல்ல. ஜெபங்களை மந்திரம்போல திரும்பத் திரும்பச் சொல்வது முக்கியமல்ல. அடிப்படைக் கோட்பாடுகளை பின்பற்றுவதும் முக்கியமல்ல. மாறாக, ஒரு தனி நபராய், தேவன் என்பவர் மீது கொண்டிருக்கும் தைரியம்தான் முக்கியம். அவருடைய நல்தயவின் மீதும், அவருடைய குணாதிசியத்தின் மீதும் தைரியம் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானதாயிருக்கிறது. அந்த தைரியத்தோடு நாம் கர்த்தரிடம் வருவோம் என்றால், அப்பொழுது நாம் என்ன கேட்டாலும், அவர் நமக்கு செவி கொடுக்கிறார் என்பதை அறிந்திருப்போம்.

ஆகையால் தேவன் மீது முழு நம்பிக்கையும், தைரியமும் கொண்டவர்களாய் ஜெபத்தை ஆரம்பியுங்கள். ஒரு சிறுபிள்ளை தன் பெற்றோரிடம் வருவதைப்போல முயற்சியுங்கள். என் பெற்றோர் என்னை நேசிக்கிறார்கள். நான் என்ன கேட்டாலும், என் பெற்றோர் எனக்காக அதைச் செய்வார்கள் என்ற உணர்வுடன்தான் அது வருகிறது. விசுவாசத்தோடு தேவனை அணுகுவதற்கான அடிப்படையும் இதுதான். இறையியல் அறிவை விட்டு வெளியே வாருங்கள். இது இறையியல் அல்ல. இது தேவனோடு நமக்கிருக்க வேண்டிய தனிப்பட்ட உறவைக் குறித்ததாயிருக்கிறது. அதைப் பற்றித்தான் இப்பொழுது நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிற இவ்வகையான விசுவாசத்தை நாம் எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும்? தேவனை தைரியத்துடன் அணுகச் செய்கிற இந்த விசுவாசத்தை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்? தேவனுக்கு நன்றி. காரணம், நாம் தேவனை விசுவாசத்துடன் அணுக வேண்டும் என்று சொல்வதோடு புதிய ஏற்பாடு நின்று விடவில்லை. விசுவாசம் எவ்வாறு வரும் என்பதற்கான ஒரு நடைமுறை வழியையும் அது நமக்கு எடுத்துக் காண்பிக்கிறது. நாம் இதை ரோமர் 10:17-ல் வாசிக்கிறோம். இந்த வசனத்தைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இது முக்கியமான ஒரு திறவுகோல் வசனமாக இருக்கிறது. மருத்துவர்களால் என்னை சுகமாக்க முடியாத நிலையில், இந்த வசனம்தான் என்னை மருத்துவமனையிலிருந்து சுகத்தோடு வெளியே கொண்டு வந்தது. என்னுடைய நல்ல ஆரோக்கியத்திற்காகவும், நீடிய ஆயுளுக்காகவும், என்னுடைய பெலனுக்காகவும் ரோமர் 10:17-ம் வசனத்திற்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.

17 ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.

அப்பொழுது நான் ஒரு மருத்துவமனையில் வியாதிப்படுக்கையில் இருந்தேன். எனக்கு விசுவாசம் இருந்தால், தேவன் என்னை சுகமாக்குவார் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. ஒவ்வொரு முறையும், நான் அவ்வாறு சிந்திக்கும்போதெல்லாம், “எனக்குள் விசுவாசம் இல்லையே,” என்றுதான் நான் அடுத்து எனக்குள் சொல்லிக் கொள்வேன். ஆனால் ஒரு நாள், பரிசுத்த ஆவியானவர் என்னை ரோமர் 10:17-ம் வசனத்திற்கு நேராக நடத்தினார். “விசுவாசம் கேள்வியினால் வரும்,” என்று அது சொல்கிறது. விசுவாசம் வரும் என்ற அந்த இரண்டு வார்த்தைகளையும் நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டேன். அதாவது, உங்களுக்குள் விசுவாசம் இல்லையென்றாலும், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள முடியும்.

விசுவாசம் எப்படி வரும்? விசுவாசம், கேள்வியினால் வரும். அது தேவனுக்கு செவிகொடுப்பதனால் வரும். பாருங்கள், ஜெபம் என்பது தேவனிடம் நாம் பேசுவது மட்டுமல்ல. ஜெபம் என்பது தேவனுடன் இரு வழித் தொடர்பாக இருக்கின்றது. இது அவரோடு நெருக்கமாக, தனிப்பட்ட விதத்தில் உரையாடும் ஒரு விஷயமாகும். ஆனால் தங்களுக்கு என்னவெல்லாம் வேண்டும், தங்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை தேவனிடம் தெரிவிப்பதுதான் ஜெபம் என்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். ஆகையால் அவர்கள் தேவனிடம் வரும்போது, ஒரு ஷாப்பிங் லிஸ்ட்டோடுதான் வருகின்றனர். அவர்கள் அதை தேவனிடம் கொடுத்து விட்டு, “ஆமென்” என்று சொல்லி விடுகிறார்கள். இது ஜெபமே அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் ஒரு பெற்றோராய் இருக்கிறீர்கள். உங்களுடைய பிள்ளை உங்களிடம் வரும்போதெல்லாம், தனக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அந்த லிஸ்ட்டோடுதான் வருகிறான் என்றால், நீங்கள் அதை எப்படி உணருவீர்கள்? அது சரியான உறவாயிருக்கும் என்று நீங்கள் உணர மாட்டீர்கள். தேவனும் அப்படித்தான் உணருகிறார். உங்களுடைய ஷாப்பிங் லிஸ்ட்டுடன் நீங்கள் தேவனிடம் வரும்போது, அவர் சொல்கிறார், “இதோ பார், உன்னுடைய லிஸ்ட்டில் இருக்கிற தேவைகளையெல்லாம் சந்திப்பதென்பது எனக்கு இலேசான காரியம். ஆனால் உன்னில்தான் நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். உன்னுடைய தேவைகளில் அல்ல.” ஆக, நம்முடன் ஐக்கியம் கொள்ள வேண்டும் என்றுதான் தேவன் காத்திருக்கிறார். நாம் சொல்வதையெல்லாம் கேட்கும்படி அவர் காத்திருக்கவில்லை. மாறாக, அவர் என்ன சொல்கிறார் என்பதை நாம் கவனித்துக் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இவ்விரண்டு விஷயங்களில், ஜெபத்தில் நாம் என்ன சொல்கிறோம் என்பதைக் காட்டிலும், தேவன் என்ன சொல்கிறார் என்பதற்குத்தான் மிகவும் அதிகமான முக்கியத்துவம் இருக்கிறது. நமக்கு என்ன தேவை என்பதை நம்முடைய பிதாவாகிய தேவன் ஏற்கனவே அறிந்திருக்கிறார் என்று இயேசு நமக்குச் சொல்லியிருக்கிறார். ஆகையால் நம்முடைய தேவைகளைச் சொல்லும்படி, நாம் தேவனிடம் வரும்போது, ஏற்கனவே அவருக்குத் தெரிந்த விஷயங்களைத்தான் நாம் அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு என்ன தேவை என்பதையே தேவனிடம் சொல்லிக் கொண்டிருப்பது ஜெபமல்ல. மாறாக, உங்களுக்கு என்ன தேவையோ, அதை நீங்கள் தேவனிடம் கேட்கும்போது, நிச்சயம் அதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்ற ஒரு உறுதியான மனநிலைக்குள்ளும், தேவனோடு ஒரு ஆழமான உறவிற்குள்ளும் உங்களைக் கொண்டு செல்வதுதான் ஜெபம். இவ்வகையான விசுவாசம், தேவன் என்ன சொல்கிறார் என்பதைச் செவிகொடுத்து கேட்பதன் மூலமே வருகின்றது.

சில நேரங்களில், ஆலோசனைக்காக என்னிடம் பலர் வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய பிரச்சனைகளாலும், வலிவேதனைகளினாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். கணவர் தன்னை தவறாக நடத்தி விட்டார் அல்லது சபை தங்களை தவறாக நடத்துகிறது அல்லது ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டார் அல்லது சிறு வயதிலிருந்தே எனக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றெல்லாம் அவர்கள் சொல்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் தேவன் தீர்வைக் கொடுத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் நிறைய பேசிக் கொண்டே போவதால், என்னால் அவர்களுக்கு அந்தத் தீர்வைச் சொல்ல முடியாமல் போய் விடுகிறது. பல நேரங்களில் இந்தத் தவறைத்தான் நாம் தேவனிடம் செய்கிறோம் என்று நினைக்கிறேன். நாம் நிறைய பேசிக் கொண்டே போவதால், அவர் தரும் தீர்வை நம்மால் கேட்க முடியாமல் போய் விடுகிறது.

பழைய ஏற்பாட்டில், சாலமோனின் தேவாலயம் கட்டப்பட்ட பிறகு, ஒரு இரவில், ஒரு சொப்பனத்தின் மூலம், தேவன் சாலமோனுக்குத் தோன்றினார். “உனக்கு என்ன வேண்டும்? கேள். நான் அதை உனக்குக் கொடுக்கிறேன்,” என்று அவர் அவனிடம் கேட்டார். சாலமோன் அதற்கு மிகவும் ஞானமான ஒரு பதிலைக் கொடுத்தான். அவன் சொன்னான், “உம்முடைய ஊழியக்காரனுக்கு எதையும் நுட்பமாகப் புரிந்து கொள்கிற இருதயத்தைத் தாரும்.” இது ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆனால் எபிரெய மொழியில், “செவிகொடுக்கிற இருதயம்,” என்று வருகின்றது. இதுதான் துல்லியமான அர்த்தமாகும். இதைக் காட்டிலும் மிகச் சரியாக வேறு எவ்விதத்திலும் சொல்ல முடியாது. இது தேவனுக்குச் செவி கொடுக்கிற இருதயமாக இருக்கிறது.

பழைய ஏற்பாட்டிலிருந்து, இன்னொரு எடுத்துக்காட்டையும் நான் கொடுக்கிறேன். தாவீது தன்னுடைய ராஜ்யத்தை நிறுவி, நிலைநிறுத்திய பிறகு, அவனுக்குள் ஒரு எண்ணம் வந்தது. கர்த்தருக்கு ஒரு வீட்டைக் கட்டினால் நல்லது என்று அவன் நினைத்தான். ஆகையால் அவன் இதை நாத்தான் தீர்க்கதரிசியிடம் சொன்னான். அதற்கு நாத்தான், “இது நல்ல எண்ணம்தான். அப்படியே செய்யும்,” என்று அவன் சொன்னான்.

ஆனால் அன்று இரவு, தேவன் நாத்தானிடம் பேசினார். தேவன் சொன்னார், “நான் அதை விரும்பவில்லை. தாவீது எனக்காக ஒரு வீட்டைக் கட்ட விரும்புகிறான். ஆனால் தாவீதுக்காக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” ஆகையால் அடுத்த நாள் நாத்தான் இந்தச் செய்தியை கொண்டு சென்றான்.

உங்களால் இந்த வித்தியாசத்தைப் பார்க்க முடிகின்றதா? அதாவது நம்முடைய சித்தத்திற்கும், தேவனுடைய சித்தத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உங்களால் இங்கு பார்க்க முடிகின்றதா? தாவீதினால் உச்சகட்டமாக சிந்திக்கக்கூடிய ஒரு விஷயம், தேவனுக்காக அவன் ஒரு வீட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுதான். ஆனால் தேவனுடைய சித்தம் அதைக் காட்டிலும் ஒரு உயரிய தளத்தில் இருந்தது. தாவீதுக்காக தேவனே ஒரு வீட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுதான் அது.

“தேவன் உனக்கு ஒரு வீட்டைக் கட்டியெழுப்ப விரும்புகிறார்,” என்ற இந்தச் செய்தியை நாத்தான் தாவீதிடம் கொண்டு சென்றான். தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, அவன் போய், கர்த்தருடைய சமூகத்தில் அமர்ந்தான் என்று நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். அவன் அங்கே அமர்ந்திருந்தபோது, என்ன செய்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவன் தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களையும், எண்ணங்களையும், திட்டங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, தன்னையே வெறுமையாக்கிக் கொண்டான். கர்த்தருடைய சமூகத்தில் அமைதியாக அமர்ந்திருந்ததன் மூலம், கர்த்தர் சொன்ன வார்த்தைகள் தனக்குள் ஆழமாக இறங்கும்படி அவன் இடம் கொடுத்தான். பிறகு அவன் இவ்வாறு ஜெபித்தான். 1 நாளாகமம் 17:17 மற்றும் 23 வசனங்களை வாசிப்போம்:

17 தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்சக் காரியமாயிருக்கிறது என்று தேவனான கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக் குறித்து வெகுதூரமாயிருக்கும் காலத்துச் செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தீர். 23 இப்போதும் கர்த்தாவே, தேவரீர் அடியானையும், அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைவரப்பட்டிருப்பதாக. தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.

“தேவனே, நீர் சொன்னபடியே செய்தருள்வீராக,” என்று தேவனிடம் சொல்வதுதான், விசுவாசத்திற்கு திறவுகோலாக இருக்கிறது. ஆனால் பாருங்கள், இவ்வகையான விசுவாசம், முதலில் தேவன் என்ன சொல்கிறார் என்பதற்கு நாம் செவிகொடுப்பதன் மூலமே வருகின்றது. தனக்காக தேவன் என்ன வைத்திருக்கிறார் என்று தாவீது கேள்விப்பட்ட விஷயம், அவனைக் குறித்து அவனே கற்பனை பண்ணி பார்க்க முடிந்ததைக் காட்டிலும் மிக மிக உயரிய, உன்னதமான ஒரு விஷயமாக இருந்தது.

இன்றைய செய்தியின் முடிவுக்கு இப்பொழுது நாம் வருகிறோம். இந்த நேரத்தில், நான் உங்களுக்கு ஒரு அறிவுரையைக் கொடுக்கிறேன். உங்களுடைய வேதாகமத்தைத் திறந்து வைத்த நிலையில், ஜெபியுங்கள். முதலில் வேதாகமத்தை வாசிக்காமல், ஜெபத்திற்குச் செல்லாதீர்கள், ஜெபிக்க ஆரம்பிக்காதீர்கள் என்ற ஒரு முக்கியமான அறிவுறுத்தலை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஏன்? அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலில், தேவன் பிரதானமாக வேதாகமத்தின் மூலமாகத்தான் பேசுகிறார். நீங்கள் தேவனுக்கு செவிகொடுக்க விரும்பினால், பெரும்பாலும் வேதாகமத்தின் மூலம் அவர் பேசுவதைத்தான் நீங்கள் கேட்பீர்கள். இரண்டாவதாக, வேதாகமத்திற்கு ஒத்திராத எந்தவொரு விஷயமும் தேவனிடமிருந்து வருவதில்லை. சில நேரங்களில், தேவனுடைய சத்தம்போல தங்களைக் காண்பித்துக் கொள்கிறவை, நம்மை வஞ்சிக்கிற சத்தங்களாய் இருக்கின்றன. அவை தேவனுடைய சத்தமல்ல. இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டுமென்றால், உங்களுடைய வேதாகமத்தை திறந்து வைத்த நிலையில், நீங்கள் ஜெபிக்க வேண்டும்.

நல்லது. இன்றைக்கு என்னுடைய நேரம் முடிந்து விட்டது. நாளை திரும்பவும் இதே நேரம் நாம் சந்திப்போம். ஜெபத்தில் தேவனை அணுகுவதற்காக அடுத்த முக்கியமான நிபந்தனையைக் குறித்து நாளைய செய்தியில் நான் பிரசங்கிப்பேன்

லைக்
பகிரவும்