அவிசுவாசிகளின் உயிர்த்தெழுதல் மற்றும் நியாயத்தீர்ப்பு

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
'அவிசுவாசிகளின் உயிர்த்தெழுதலும் நியாயத்தீர்ப்பும்' குறித்த வியக்கத்தக்க உண்மைகளை டெரெக் பிரின்ஸுடன் இணைந்து ஆராயுங்கள். 'மரணத்தின் மேல் வெற்றி, பகுதி 13' இல், கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு ஆசனத்தின் முன் விசுவாசிகள் பெறும் பலன்களுக்கும், பெரிய வெள்ளை சிங்காசனத்தின் முன் அவிசுவாசிகள் சந்திக்கும் நியாயத்தீர்ப்புக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் விளக்குகிறார். தேவனுடைய நீதியையும் சுவிசேஷம் அளிக்கும் நம்பிக்கையையும் ஆழமாகப் புரிந்துகொள்ள இது உதவும்.
Transcript
திரும்பவும் உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, உண்மையான விசுவாசிகளின் மீது வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் குறித்து நேற்றைய செய்தியில் நான் பேசினேன். இது கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நடக்கும். இது ஒரு ஆக்கினைத்தீர்ப்பாக இருக்காது என்பதை நான் விளக்கிச் சொன்னேன். மாறாக, இது அவரவர் செய்த கிரியைகளுக்குத் தக்க பலனைக் கொடுக்கும் மதிப்பீடாக, அப்படிப்பட்ட ஒரு நியாயத்தீர்ப்பாக இருக்கும்.
இன்றைக்கு நாணயத்தின் மறுபக்கத்தைக் குறித்து, அதாவது உயிர்த்தெழுதல் மற்றும் அவிசுவாசிகளின் மீது வரும் நியாயத்தீர்ப்பைக் குறித்து நான் பேசப் போகிறேன்.
வேதவசனங்களில் சொல்லப்பட்டிருக்கிற இந்த இரண்டு நியாயத்தீர்ப்புகளுக்கும், அதாவது, கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக விசுவாசிகளின் மீது வரப்போகும் நியாயத்தீர்ப்புக்கும், பிறகு அவிசுவாசிகளின் மீது வரப்போகும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இரண்டு முக்கியமான வழிகளின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். ஒன்று, வித்தியாசமான இடங்களில் அது நடக்கும். இன்னொன்று, வித்தியாசமான காலகட்டத்தில் அது நடக்கும். முதலில், விசுவாசிகளின் மீது வரப்போகும் நியாயத்தீர்ப்பை நாம் பார்ப்போம்.
1. இடம்: கிறிஸ்துவின் பேமா (bema of Christ) எனும் நியாயாசனத்திற்கு முன்பாக அது நடக்கும். இதை நான் நேற்றைய செய்தியில் விளக்கிச் சொன்னேன்.
2. இது நடக்கும் நேரம் – கிறிஸ்துவின் ஆயிர வருட ராஜ்யம் நிறுவப்படுவதற்கு முன் இது நடக்கும்.
இப்பொழுது நாம் அவிசுவாசிகளின் மீது வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்து பார்ப்போம்.
1. இடம்: இது பெரிய வெள்ளை சிங்காசனத்திற்கு முன்பாக நடக்கும். நீதிபதி அமரும் நியாயாசனத்திற்கு முன்பாக அல்ல, பெரிய ராஜா அமரும் சிங்காசனத்திற்கு முன்பாக, பெரிய வெள்ளை சிங்காசனத்திற்கு முன்பாக இது நடக்கும்.
2. நேரம்: ஆயிர வருட அரசாட்சி ஆரம்பிக்கும் போது அல்ல. ஆயிர வருட அரசாட்சி முடிகிற காலகட்டத்தில் இது நடக்கும். ஆக, இந்த வித்தியாசங்களை மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். விசுவாசிகளின் மீதான நியாயத்தீர்ப்பு, கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நடக்கும். ஆயிர வருட அரசாட்சிக்கு முன்பு இது நடக்கும். அவிசுவாசிகளின் மீதான நியாயத்தீர்ப்பு, பெரிய வெள்ளை சிங்காசனத்திற்கு முன்பாக நடக்கும். இது ஆயிர வருட அரசாட்சியின் முடிவில் நடக்கும்.
அவிசுவாசிகளின் மீது வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்து வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 வசனங்களில் விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. இவர்கள் நீதிமான்களின் உயிர்த்தெழுதலின் போது, உயிர்த்தெழ மாட்டார்கள். இவர்களின் மீது வரப்போகும் கடைசி மற்றும் முக்கியமான நியாயத்தீர்ப்பைக் குறித்த ஒரு தெளிவான படத்தை மிகவும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் யோவான் வெளிப்படுத்துகிறார். அவர் சொல்கிறார்:
11 பின்பு நான் பெரிய வெள்ளை சிங்காசனத்தையும், அதன் மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன். அவருடைய சமூகத்திலிருந்து பூமியும், வானமும் அகன்று போயின. அவைகளுக்கு இடம் காணப்படவில்லை. [தேவன் தம்முடைய மாட்சிமையிலும், பாவிகளுக்கு விரோதமான தம்முடைய கோபத்திலும் அங்கே அமர்ந்திருக்கும்போது, வானமும் பூமியும் கூட அவருடைய சமூகத்தை விட்டு தப்பி ஓடின என்றால், அவர் முன்பாக நிற்பது எவ்வளவு பயங்கரமான ஒரு அனுபவமாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். யோவான் தொடர்ந்து பேசுகிறார்:] 12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன். அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். [வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த வாழ்க்கையில் அவர்கள் செய்த சகலமும் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இது உலகளாவிய, முழுமையான ஒரு நியாயத்தீர்ப்பாய் இருக்கும். இந்தப் பூமியின் எல்லா மூலைகளிலுமிருந்தும் எல்லோரும் இந்த சிங்காசனத்திற்கு முன்பாக ஒன்று கூட்டப்படுவார்கள். இப்படித்தான் யோவான் இதை விவரிக்கிறார்.] 13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது. மரணமும், பாதாளமும் [உயிர் பிரிந்த ஆவிகள் சென்றடைந்த இடமாகிய ஷியோலும்] தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். 14 அப்பொழுது மரணமும், பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். [ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சர்வ வல்ல அன்பின் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து நித்தியத்திற்கும் புறம்பே தள்ளப்படுகிற ஒரு நிலையாய் இது இருக்கும். இதை ஒருக்காலும் மாற்ற முடியாது. அவர்களுடைய உணர்வுகள் நின்று விடுவதில்லை. அங்கேயும் அவர்கள் தங்களுடைய உணர்வுகளோடுதான் வாழ்வார்கள். நாம் மனுஷர்களாய் பிறந்து விட்டோம் என்றால், நம் உணர்வுகள் என்றென்றைக்குமாய் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். பிறகு யோவான் இவ்வாறு இதைத் தொகுத்துச் சொல்கிறார்.] 15 ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாக காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான்.
முக்கியமான சில விஷயங்களை இந்த வேதப்பகுதியிலிருந்து நாம் கற்றுக் கொள்வோம். முதலில், இந்த அவிசுவாசிகள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள். உயிரோடு எழுப்பப்பட்ட பிறகும், அவர்கள் “மரித்தோர்” என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்,” என்று யோவான் இங்கு சொல்கிறார். உயிரோடு எழுப்பப்பட்ட பிறகும், அவர்கள் மரித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய சரீரங்கள் திரும்ப அவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அப்பொழுதும் அவர்கள் மரித்தவர்களாகத்தான் இருந்தார்கள். அக்கிரமங்களிலும், பாவங்களிலும் அவர்கள் மரித்திருந்தார்கள். தேவனுடைய ஜீவனிலிருந்து தொடர்பறுந்து போனவர்களாய், அதற்குப் புறம்பே அவர்கள் தனித்து விடப்பட்டிருந்தனர். தங்களுடைய சரீரங்களைக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்களோ, அதற்குரிய நியாயத்தீர்ப்பைப் பெற்றுக் கொள்ளும்படி, அவர்களுடைய சரீரங்களில் அவர்கள் உயிரோடு எழுப்பப்பட்டிருந்தனர். நாம் ஒவ்வொருவரும் செய்த ஒவ்வொரு விஷயத்தைக் குறித்தும் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. சகலமும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வுலகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற சகல மனுஷர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். இதை நாம் கவனிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும், நாம் செய்திருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் பதிலளிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். இன்றைய கலாச்சாரத்தில், ஒன்றைக் குறித்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றாலே, அது விரும்பத்தகாத ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. இன்றைக்கு நிறைய வித்தியாசமான மதங்களும், தத்துவங்களுக்கும் இருக்கின்றன. மனுஷன் மெய்யாகவே யாருக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவனுக்கு அறிவிப்பதுதான், அவற்றின் உச்சபட்ச இலக்காயிருக்கிறது. நான் ஒன்றை உங்களுக்கு பகிரங்கமாகச் சொல்கிறேன். அது ஒரு பொய்! மனுஷன், தன்னை சிருஷ்டித்த தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியவனாய் இருக்கிறான். அவரே அவனை நியாயந்தீர்ப்பார். நாம் ஒவ்வொருவருமே கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
கடைசியாக ஒரு குறிப்பை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது ஜீவ புத்தகத்தின் மூலமாகத்தான். ஜீவப் புத்தகத்தில் யாருடைய பெயரெல்லாம் இல்லையோ, அவர்களெல்லாரும் அக்கினிக் கடலிலே எறியப்படுவார்கள். அப்படியென்றால், யார், எப்படிப்பட்ட நபருடைய பெயர், ஜீவப் புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கும்? உண்மையில், இது நம் ஒவ்வொருவருக்குமே முக்கியமான ஒரு கேள்வியாயிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 21:7-8 வசனங்களில், எப்படிப்பட்ட நபருடைய பெயர் ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் என்பதைக் குறித்து யோவான் தொடர்ந்து எழுதுகிறார். எப்படிப்பட்ட நபர்கள் அக்கினிக் கடலிலே எறியப்படுவார்கள் என்பதைக் குறித்தும் யோவான் இங்கு எழுதுகிறார். வெளிப்படுத்தல் 21:7-8 வசனங்களை நாம் வாசிப்போம். அதில் தேவன் இவ்வாறு பேசுகிறார்:
7 ஜெயங்கொள்கிறவன் எல்லாவற்றையும் (அதாவது, பரலோகத்தின் மகிமைகள் அனைத்தையும்) சுதந்தரித்துக் கொள்வான். நான் அவன் தேவனாயிருப்பேன். அவன் என் குமாரனாயிருப்பான் [இங்கு பிரதானமாய் சொல்லப்பட்டிருக்கிற நிபந்தனையைக் கவனியுங்கள். மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. பாவத்தினாலும், இவ்வுலகத்தினாலும், துன்மார்க்கத்தினாலும், சாத்தானாலும் தோற்கடிக்கப்படக்கூடாது. திரும்பவும் இவ்வசனத்தை வாசிப்போம்: “ஜெயங்கொள்கிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்வான். நான் அவன் தேவனாயிருப்பேன். அவன் என் குமாரனாயிருப்பான்” இதற்கு நேரெதிரான விஷயம் 8-ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது] 8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபச்சாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரக ஆராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.
ஆக, 8-ம் வசனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிற நபர்கள் அனைவரும் அக்கினிக் கடலில் பங்கடைவார்கள். “ஒழுக்கக்கேடான நபர்களும், கொலைகாரர்களும், சூனியக்காரரும், பொய்யர்களும் அக்கினிக் கடலில் பங்கடைவார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது,” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இந்தப் பட்டியலில் சொல்லப்பட்டிருக்கிற முதல் இரண்டு வகையான நபர்களைக் கவனித்தீர்களா? பயப்படுகிறவர்கள் மற்றும் அவிசுவாசிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பயப்படுகிறவர்கள் மற்றும் அவிசுவாசிகள் என்ற இந்த முதல் இரண்டு வகையான நபர்கள் அழிந்து போவார்கள். ஒன்றை நான் விசுவாசிக்கிறேன். தியாலஜி அறிவு இல்லாத ஒரு நபர் பரலோகத்திற்குச் சென்று விடுவார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால், தைரியமில்லாத ஒரு நபர் பரலோகத்திற்குச் செல்வாரா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது.
யோவான் இதைக் குறித்து தனது முதல் நிருபத்தில் எழுதியிருக்கிறார். இந்த வசனங்களை நான் உங்களுக்கு வாசிக்கிறேன். 1 யோவான் 5:4-5 வசனங்களை வாசிப்போம்:
4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனே அன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
இங்கு நிபந்தனை என்ன? விசுவாசிப்பதன் மூலம், தேவனால் பிறக்க வேண்டும். நாம் என்ன விசுவாசிக்க வேண்டும்? இயேசுவே தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்க வேண்டும். இயேசுவே தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிற ஒரு நபருக்குள், அந்த விசுவாசத்தின் மூலம் மறுபடியும் பிறக்கிற ஒரு நபருக்குள் இவ்வுலகத்தையே மேற்கொள்கிற விசுவாசம் இருக்கிறது. இந்த மேற்கொள்கிற விசுவாசம், அந்த நபர் எல்லாவற்றையும் சுதந்தரிக்கும்படி கிரியை செய்கிறது. தேவன் அவருடைய தேவனாயிருப்பார். அவர் தேவனுடைய பிள்ளையாயிருப்பார்.
பெரிய வெள்ளை சிங்காசனத்திற்கு முன்பாக நடக்கப் போகும் கடைசி நியாயத்தீர்ப்பின் காட்சியைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும்போதெல்லாம், சில முக்கியமான சிந்தனைகள் எப்பொழுதுமே எனக்குள் வருகின்றன. இப்பொழுது அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன், நான் கொலராடோ மாகாணத்தில் இருந்தேன். நாங்கள் இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியிருந்த ஒரு சிறிய மேற்குப் பகுதியைக் குறித்து ஒருவர் இவ்வாறு சொன்னார்: “அமெரிக்க ஐக்கிய கண்டத்தின் இரண்டு ஆற்றுப் பள்ளத்தாக்குகளைப் பிரிக்கின்ற உச்சி அங்கே இருக்கிறது. அதன் ஒரு பக்கத்தில் விழுகின்ற மழைத்துளிகள் கீழே இறங்கி ஓடி, பசுபிக் பகுதியைச் சென்றடைகின்றன. அதன் மறுபக்கத்தில் விழுகின்ற மழைத்துளிகள் கீழே இறங்கி ஓடி, மெக்ஸிகோ வளைகுடா பகுதியைச் சென்றடைகின்றன. மழைத்துளிகள் விழுகின்ற ஆரம்பப் பகுதிகளுக்கிடையே உள்ள வித்தியாசம் 2 இஞ்ச்களாக மட்டுமே இருந்தாலும், அவைகள் சென்றடைகின்ற இடங்கள் ஆயிரம் மைல்கள் தள்ளியிருக்கின்றன.” இதை என் மனதிற்குள் நான் படம் பிடித்துப் பார்த்தேன். அப்பொழுது எனக்குள் நான் இவ்வாறு சொல்லிக் கொண்டேன், “இயேசுதான் மனுஷ ஆத்துமாக்களை இரு வேறு திசைகளில் பிரிக்கின்ற ஒரு உச்சிப் புள்ளியாக இருக்கிறார்.” நித்தியத்தில் அவர்கள் சென்று சேருகிற இடம், இயேசுவின் எந்தப் பக்கத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. இரண்டு ஆத்துமாக்கள், ஒருவருக்கொருவர் நெருக்கமான ஐக்கியத்தில் இருக்கலாம். அவர்கள், கணவன், மனைவியாகக்கூட இருக்கலாம். பெற்றோர், பிள்ளையாகக்கூட இருக்கலாம். சகோதரன், சகோதரியாகக்கூட இருக்கலாம். ஆனாலும் ஒருவர் இயேசுவின் ஒரு பக்கத்தில் இருக்கிறார். அவர் இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருக்கிறார், இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்னொருவர் மறுபக்கத்தில் இருக்கிறார். அவரோ இயேசுவை விசுவாசிக்கவில்லை. இயேசுவை தன் இரட்சகராக, ஆண்டவராக ஏற்றுக் கொள்ளவுமில்லை. இந்த வாழ்க்கையில் அவர்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், கடைசியில், அவர்கள் சென்றடையப் போகிற இடங்களுக்கிடையே உள்ள தூரத்தை அளவிடவே முடியாது. ஒருவர் நித்திய மகிமையால் நிறைந்திருக்கிற பரலோகத்தைச் சென்றடைகிறார். இன்னொருவர் அக்கினிக் கடலைச் சென்றடைகிறார். அது அவிசுவாசிகளுக்கென்று முன் குறிக்கப்பட்டிருக்கிற நித்திய நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையின் இடமாக இருக்கிறது. மிகவும் சிறிய இரண்டு இஞ்ச்கள் மட்டுமே உடைய அந்த உச்சியின் எந்தப் பக்கத்தில் மழைத்துளி விழுகிறதோ, அதுதான் அது கடைசியில் சென்றடைகிற இடத்தைத் தீர்மானிக்கிறது. இது அப்படியே உங்களுக்கும் எனக்கும் பொருந்துகிறது. இவ்வாழ்க்கையில் மிகவும் சிறிய வித்தியாசம்தான் காணப்படுகிறது. ஒருவர் இயேசுவின் ஒரு பக்கத்தில் இருக்கிறார். இன்னொருவர் இன்னொரு பக்கத்தில் இருக்கிறார். எந்தப் பக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதுதான் நம்முடைய நித்தியத்தைத் தீர்மானிக்கிறது. நீங்கள் இயேசுவின் எந்தப் பக்கத்தில் இருக்கிறீர்கள்?
இந்த உண்மைகளைக் குறித்து சிந்திக்கும்போது, பிரசங்கியார்களுக்கு இருக்கும் பொறுப்புதான் என் நினைவுக்கு வருகிறது. அப்போஸ்தலர் நடபடிகள் 20:20-21 மற்றும் 26-27 வசனங்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். அவர் அங்கே யாருக்கு பிரசங்கித்தாரோ, அவர்களிடம் இதைச் சொல்கிறார்:
“20 பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம் பண்ணி, 21 தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன். [அதே அதிகாரத்தில், இன்னும் கொஞ்சம் தள்ளி, அதே நபர்களிடம் அவர் திரும்பவும் பேசுகிறார்:] 26 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, 27 எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.”
“நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் சொல்லியிருக்கிற முழு சத்தியத்தில் நான் எதையும் உங்களிடமிருந்து மறைக்கவில்லை. எல்லாவற்றையும் உங்களிடம் சொல்லி விட்டேன்,” என்று பவுல் இரண்டு முறை இங்கு சொல்கிறார். இதை நாம் கவனிக்க வேண்டும். “நான் ஒன்றையும் மறைக்கவில்லை,” என்ற வார்த்தைகளை அவர் ஏன் பயன்படுத்த வேண்டும்? முழு சத்தியத்தையும் ஒரு பிரசங்கியார் பிரசங்கித்து விடாதபடி, ஒரு வகையான அழுத்தம் அவர் மீது இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். பிரசங்கங்களில் முக்கியமான, இன்றியமையாத சத்தியங்கள் இல்லாதவரை, பிசாசுக்கு அவற்றைக் குறித்து எந்தக் கவலையுமில்லை. அவன் அவற்றைக் குறித்துப் பயப்படவே மாட்டான். ஆனால் எழுந்து நின்று, முழு சத்தியங்களை பிரசங்கிக்கிறவர்களுக்கு எதிராக, எல்லா வகையான அழுத்தங்களும், எல்லா திசைகளிலிருந்தும் வருகின்றன. சமுதாய அழுத்தங்கள், பொருளாதார அழுத்தங்கள், சமூக அந்தஸ்த்தின் அழுத்தங்கள் என எல்லா வகையான அழுத்தங்களும் பயங்கரமாய் அவர்களை நெருக்குகின்றன. “தேவனுடைய நோக்கம் முழுவதையும், அவருடைய முழு ஆலோசனையையும் உங்களுக்கு அறிவிக்காமல், நான் இருக்கவில்லை. நான் எதையும் மறைக்கவில்லை,” என்று நம்மில் எத்தனை பேர் இன்று இவ்வாறு சொல்ல முடியும்?
தேவன் தெரிவிக்கிற தெளிவான நிபந்தனைகள் எவை? பவுல் அவற்றை எளிமையாகச் சொல்கிறார்: தேவனிடத்தில் மனந்திரும்ப வேண்டும்; இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்க வேண்டும். அக்கினிக் கடல் எனும் மகா பயங்கரமான அழிவின் இடத்திலிருந்து நம்மை இரட்சித்து, இயேசுவோடு கூட நித்திய மகிமையான ஒரு இடத்திற்குள் நம்மைக் கொண்டு சேர்ப்பதற்கு, இது அத்தியாவசியமானதாயிருக்கிறது.
நல்லது, இன்றைக்கு என் நேரம் முடிந்து விட்டது. நாளை, இதே நேரம், நான் திரும்பவும் உங்களை சந்திப்பேன். என்னுடைய செய்திகளை தனிப்பட்ட விதத்தில், நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்று நான் நாளை பிரசங்கிப்பேன். “மரணத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?” என்பதுதான் என்னுடைய நாளைய செய்தியின் தலைப்பு.
குறியீடு: RP-R017-103-TAM









