மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் முழுவதும் நான் பரிசுத்த ஆவியின் விலைமதிப்பற்ற கனியைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். எனது கடைசி மூன்று பேச்சுகளில் நான் அன்பின் கனி, சந்தோஷத்தின் கனி மற்றும் சமாதானத்தின் கனி குறித்து கையாண்டேன்.

இன்று நான் நீடிய பொறுமையின் கனியைப் பற்றி பேசப் போகிறேன். பொறுமை என்பது இரண்டு தனித்துவமான, ஆனால் தொடர்புடைய குணாதிசயங்களை உள்ளடக்கியது. முதலாவது பிரச்சனைகளைத் தாங்குவதில் உறுதி, இரண்டாவது தவறுகளுக்கு பழிவாங்குவதில் தாமதம். அதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். பொறுமையின் முதல் அம்சம் பிரச்சனையைத் தாங்குவதில் உள்ள உறுதி. இரண்டாவது அம்சம் தவறுகளுக்கு பழிவாங்குவதில் தாமதம். இந்த இரண்டு அம்சங்களும் இல்லாமல், பொறுமை முழுமையடையாது. சிலர் பிரச்சனைகளை சகித்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார்கள் ஆனால், மிக விரைவாக பழிவாங்குகிறார்கள். சிலர் பழிவாங்குவதில் மெதுவாக இருப்பார்கள், ஆனால் பிரச்சனைகளை சகித்து கொள்வதில் மிகவும் உறுதியாக இருப்பதில்லை. உண்மையான, வேதபூர்வமான பொறுமையை – ஆவியின் முழுமையான கனியைப் பெற – நீங்கள் இந்த இரண்டு விஷயங்களையும் இணைக்க வேண்டும்: சிக்கலை சகிப்பதில் உறுதிப்பாடு, தவறுக்காக பழிவாங்குவதில் தாமதம்.

தேவனுடைய ராஜ்யத்துக்கு செல்லும் வழி மனிதனின் உபத்திரவங்கள் வழியாகவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது குறிப்பாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது. தங்கள் ஊழியத்தின் ஒரு கட்டத்தில், பவுலும், சீலாவும் தங்கள் ஊழியத்தின் மூலம் கர்த்தரிடம் வந்த புதிய சீஷர்கள், அழுத்தம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான சீஷர்கள் இருந்த நகரங்கள் வழியாகச் சென்றனர், மேலும் அது பவுலும், சீலாவும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூறுகிறது: அப்போஸ்தலர் 14:22

22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.

“வேண்டும் (கட்டாயம்)” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ஏன் “கட்டாயம்” தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு நாம் ஏன் பல உபத்திரவங்களைக் கடந்து செல்ல வேண்டும்? உபத்திரவங்கள் நமக்கு என்ன செய்கிறது? சரி, இதற்கு நான் பதிலளிக்கிறேன்: உபத்திரவம், அல்லது தொல்லை, அல்லது அழுத்தம் – நீங்கள் எந்த வார்த்தையைப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ – நம் சார்பாக இயேசுவின் மரணத்தின் நன்மைகளை நமக்குள் வெளிப்படுத்துவது அவசியம். இயேசு சிலுவையில் என்ன செய்தாரோ, அதை ஒரே முறை எல்லாவற்றிற்கும் செய்து முடித்தார். அதை ஒருபோதும் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. இது ஒரு முழுமையான மற்றும் சரியான வேலை. ஆனால் அது ஒரு கண நேர அனுபவத்தில் நம் வாழ்வில் வேலை செய்யாது. இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் நமக்காகப் பெறப்பட்ட நன்மைகளை நம் வாழ்வில் செயல்படுத்துவதற்கான தொடர்ச்சியான செயல்முறை இது. இந்த நன்மைகளை செயல்படுத்துவதில் உபத்திரவங்களும் காரணிகளில் ஒன்றாகும். இதை நான் இவ்வாறு கூறுகிறேன்: இயேசு சிலுவையில், நம்முடைய பாவத்திற்காக மரித்தார். எனவே, அவருடைய மரணத்தை நமது மரணமாக எண்ண வேண்டும். இது ரோமர் 6:10 & 11 இல் கூறப்பட்டுள்ளது.

10 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.

“அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்……” இயேசு சிலுவையில் மரித்ததைப் போலவே, நீங்களும் மரித்ததாக எண்ணுங்கள், ஏனென்றால், அவருடைய மரணம் உங்களுடைய மரணம். எனவே, இது ஒரு நிறைவேற்றப்பட்ட உண்மை, மேலும் நாம் அதை உணர்ந்து கொள்ளும் போது, நாம் உடனடியாக அதை கணக்கிட முடியும்.

இருப்பினும், அதைக் கணக்கிடுவது ஒரு காரியம். அன்றாட வாழ்வில் அதை செயல்படுத்துவது வேறொரு காரியம். எனவே, பவுல் கொலோசெயர் 3:5 இல் கிறிஸ்தவர்களிடம் பேசுகிறார்.

5 ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

நாம் இறந்துவிட்டதாக எண்ணுகிறோம், ஆனால் அதை திறம்படச் செய்ய, பழைய மறுபிறப்பற்ற தன்மையின் வெளிப்பாடான நம் வாழ்வில் உள்ள விஷயங்களை நாம் கொல்ல வேண்டும். இப்போது, நீடிய பொறுமை என்பது இதை செய்வதன் மூலம் நம்மில் உருவாகும் தன்மையின் அம்சமாகும் – இது நம் வாழ்வில் அனுபவபூர்வமாக, நம் சார்பாக, இயேசுவின் மரணத்தை செயல்படுத்துவதன் மூலம் நமக்குள் உற்பத்தி செய்யப்படுகிறது. இயேசு பாவத்திற்காக மரித்தார். நாம் பாவத்திற்கு மரித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே தேவனின் நோக்கம். இது விசுவாசத்தால் பெறப்படுகிறது, ஆனால், அது அனுபவத்தில் செயல்படுத்தப்படுகிறது. அனுபவத்தில் செயல்படுத்துவதற்கு, நீடிய பொறுமை தேவை. பொறுமையில்லாமல், சிலுவையில் இயேசுவின் மரணத்தின் மூலம், தேவன் நமக்காக செய்திருக்கிற ஏற்பாட்டின் முழுமைக்குள் நாம் நுழைய முடியாது.

நீடிய பொறுமையை பெறுவதில், இயேசு நமக்கு முன்மாதிரியை வைத்திருக்கிறார். இது 1 பேதுரு 2:20-23 இல் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பேதுரு, பிரதானமாக, எஜமானர்களின் கீழ் அடிமைகளின் நிலையில் இருக்கும் மக்களிடம் பேசுகிறார். ஆனால், கொள்கையானது எஜமானர்/அடிமை உறவை விட மிக அதிகமாக செல்கிறது. அந்த கொள்கை விசுவாசிகளான நம் அனைவருக்கும் பொருந்தும். அவர் இவ்வாறு கூறுகிறார்:

20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது, பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாக பிரீதியாயிருக்கும். [தேவன் நம்மில் விரும்புவது என்னவென்று கவனியுங்கள், நாம் அநியாயமாக நடத்தப்பட்டாலும், தண்டிக்கப்படக் கூடாதபோது தண்டிக்கப்பட்டாலும், நாம் பொறுமையாக சகித்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் தேவன் எதிர்பாக்கிறார். அடுத்து வரும் கூற்று மிகவும் குறிப்பிடத்தக்கது.] 21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; [எந்த நோக்கத்திற்காக? தவறான செயலையும், அநியாயமாக நடத்தப்படுவதையும் பொறுமையாக சகித்துக்கொள்ள வேண்டும். பல்வேறு உற்சாகமான காரியங்களைச் செய்ய அழைக்கப்பட்டதைப் பற்றி பேசும் ஏராளமான கிறிஸ்தவர்கள், நாம் இந்த நோக்கத்திற்காகவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்ற உண்மையைக் குறிப்பிடுவதில்லை. பின்னர் பேதுரு தொடர்ந்து கூறுகிறார்:] ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் [எனவே, துன்பங்களைச் சகித்துக் கொள்வதில் இயேசுவின் முன்மாதிரியை நாம் தெளிவாக பின்பற்ற வேண்டும். இப்போது, அவருடைய உதாரணம் 22 & 23 வசனங்களில் கூறப்பட்டுள்ளது] 22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. [அவர் முற்றிலும் குற்றமற்றவர். அவருக்கு வந்த துன்பங்களில் எதற்கும் அவர் தகுதியானவர் அல்ல. ஆனால் அது கூறுகிறது:] 23 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

அநியாயமாக நடத்தப்பட்டதற்கும், துன்பங்களுக்கும் இயேசு பதிலளித்த விதம் தந்தையின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையிலிருந்து எழுந்தது. அவர் தனது வழக்கை தந்தையிடம் ஒப்படைக்க தயாராக இருந்தார், தனக்காக போராடவில்லை. எனவே அவர் மோசமாக நடத்தப்பட்டதை – தவறான செய்கை, பொய்யான குற்றச்சாட்டு, நிராகரிப்பு போன்றவற்றை பொறுமையாக எதிர்த்துப் போராடாமல் சகித்துக் கொண்டார், ஏனென்றால், அவர் தனது சார்பாக, அவரது தந்தை எல்லாவற்றையும் செய்து முடிப்பார் என்பதை அவர் நம்பினார். இதுதான் நீடிய பொறுமை. நாம் பொறுமையை அடைந்தவுடன், நம்மை நியாயப்படுத்த அல்லது பழிவாங்கும் விருப்பத்தை நாம் கைவிடுகிறோம். நாம் தவறாக குற்றம் சாட்டப்படும்போது அல்லது அநியாயமாக நடத்தப்படும்போது, நம்மை நியாயப்படுத்துவதில் அல்லது பழிவாங்குவதில் மும்முரமாக இருக்கும் வரை, நாம் இன்னும் பொறுமையின் கனியை அடையவில்லை.

1 பேதுரு 4:1 & 2 இல், பேதுரு அதே பாணியில் மீண்டும் தொடர்கிறார்:

1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். 2 ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம் வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின் படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.

இது ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கை – “மாம்சத்தில் பாடுபடுகிறவன் பாவங்களை விட்டோய்ந்திருப்பான். பாவத்திலிருந்து விலகியிருப்பதால், அவன் இனிப் பாவத்துக்கு அடிமையானவன் அல்ல, இனி மாம்சத்திலிருக்கும் காலம் வரைக்கும் சுதந்திரமாக வாழ்கிறார், மனுஷருடைய இச்சைகளின் படி பிழைக்காமல், தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கிறான்.” நீங்கள் பார்க்கலாம், இன்றியமையாத விஷயம் என்னவென்றால், பாவத்திற்கு மரிப்பதாகும். நாம் பாவத்திற்கு மரித்தவர்களாக இருக்கக்கூடிய ஏற்பாடு இயேசுவின் மரணத்தின் மூலம் செய்யப்பட்டது, ஆனால் நம் அனுபவத்தில் அதைச் செயல்படுத்துவதற்கு பொறுமை தேவைப்படுகிறது; மற்றும் பொறுமை இல்லாமல் நாம் அதை அடையமுடியாது.

பாவத்திற்கு மரித்திருப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் அதை இவ்வாறு வெளிப்படுத்தலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன். நீங்கள் பாவத்திற்கு மரித்துவிட்டால், பாவத்துக்கு உங்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை, பாவம் உங்கள் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தாது, மேலும் பாவமானது உங்களிடமிருந்து எந்த எதிர்வினையையும் ஏற்படுத்தாது. இது முற்போக்கானது என்று நான் நினைக்கிறேன். பாவத்திற்கு அதிகாரம் இல்லாத விசுவாசிகளை நான் அறிவேன். அவர்கள் அழுத்தங்களால் பாவத்திற்கு தள்ளப்படவில்லை, ஆனால் அது அவர்களை இன்னும் ஈர்க்கிறது. அவர்களுக்கு இன்னும் மரணமடையாத, அந்த ஆசை இருக்கிறது. மற்ற முதிர்ந்த விசுவாசிகளை நான் அறிவேன், அவர்களிடம் பாவத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, பாவத்தின் மீது ஈர்ப்பும் இல்லை, ஆனால் அது அவர்களிடமிருந்து இன்னும் சில எதிர்வினைகளை உருவாக்குகிறது. உதாரணமாக, யாராவது உங்களைப் பற்றி தவறாகப் பேசினால், உங்களில் ஏதோ ஒன்று எழுந்து அவரை அடிக்க விரும்புகிறது – உங்கள் கையால் இல்லாவிட்டால் கூட, குறைந்தபட்சம் உங்கள் நாவால்; ஆனால் நீங்கள் உண்மையிலேயே பாவத்திற்கு மரித்துவிட்டால், அதற்கு மேல் எதிர்வினை இல்லை. பின்னர், உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனின் விருப்பப்படி வாழ நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள்.

இந்த நீடிய பொறுமையின் திறவுகோல் என்ன? உங்கள் கண்களை இயேசுவின் மீது வைத்திருப்பதில் அது காணப்பட வேண்டும் என்று நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். எபிரெயர் 12:1-3 ஐக் கவனியுங்கள்:

1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க [அதுதான், பழைய ஏற்பாட்டின் மாபெரும் விசுவாசிகள்], பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி [அதுதான் திறவுகோல்], நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; 2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். 3 ஆகையால், நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக் கொள்ளுங்கள்.

சந்தோஷத்திற்கான ஒரே வழி பாடுகளின் மூலம் மட்டுமே என்பதை இயேசு அறிந்திருந்தார். அவருக்கு முன்னால் இருந்த சந்தோஷத்தின் மீது கண்களை வைத்து அவர் பாடுகளைத் தாங்கினார். இதற்கு நமது திறவுகோல் இயேசுவின் மீது நம் கண்களை வைத்திருப்பதும், அவர் வழிநடத்திய இடத்தைப் பின்பற்றுவதும் ஆகும்.

சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்து விட்டது, ஆனால் அடுத்த வாரம் – திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். அடுத்த வாரம், ஆவியின் கனியின் மீதமுள்ள ஐந்து வடிவங்களையும் – அதாவது தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றை நான் கையாள்வேன்.

லைக்
பகிரவும்