வெற்றிகரமான ஜெபம் - பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டது

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 11
பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படும் ஜெபத்தின் வல்லமையை 'வெற்றிகரமான ஜெபத்தின் கூறுகள் 4 - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுதல்' மூலம் பெற்றிடுங்கள். டெரெக் பிரின்ஸின் இந்த போதனையில், பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து ஜெபிப்பது உங்கள் ஜெப வாழ்க்கையையும் கர்த்தருடனான உங்கள் உறவையும் எவ்வாறு மாற்றியமைக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 'எப்படி ஜெபித்து பதிலைப் பெறுவது' என்ற தொடரின் ஒரு பகுதியாக, வேதாகம சத்தியத்தைக் கண்டறிந்து தேவனோடு நெருங்கிய உறவில் வளருங்கள்.
Transcript
திரும்பவும், உங்களோடு இருப்பது நன்றாக இருக்கிறது. “எவ்வாறு ஜெபித்து, நீங்கள் எதற்காக ஜெபித்தீர்களோ அதையே பெற்றுக் கொள்வது,” என்ற தலைப்பில், நம் அன்றாட வாழ்க்கையில், மிகவும் அதிகமான முக்கியத்துவம் உடைய செய்திகளை நாம் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து, தொடர்ந்து கற்றுக் கொண்டு வருகின்றோம். வெற்றிகரமான ஜெபத்திற்குத் தேவையான மூன்று முக்கியமான, அத்தியாவசியமான விஷயங்களைக் குறித்து இதுவரை இந்த வாரத்தில் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
முதலில், தைரியமாய், ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வில்லாமல் நாம் ஜெபிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டோம். இரண்டாவதாக, தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்ற சரியான நோக்கத்தோடு, நாம் ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டோம். மூன்றாவதாக, நம்முடைய உறவுகளில், எவ்வித மனக்கசப்பும், பகைவைராக்கியமும் இல்லாதவர்களாய் நாம் ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டோம். நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டிய சூழ்நிலை அங்கே இருந்தால், கோபத்தையும், தர்க்கங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, முதலில் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். காரணம், கோபமும், தர்க்கங்களும் நம் ஜெபங்களுக்குத் தடையாய் இருக்கின்றன. குறிப்பாக, கணவன், மனைவியினுடைய ஜெபங்களுக்கு இவை தடையாய் இருக்கின்றன.
வெற்றிகரமான ஜெபத்திற்கு அத்தியாவசியமாய் தேவைப்படுகிற அடுத்த முக்கியமான விஷயத்தைக் குறித்து இன்றைக்கு நாம் பார்க்கப் போகிறோம். இது நம்முடைய ஜெபங்களில் பரிசுத்த ஆவியானவர் ஆற்றக்கூடிய பங்காயிருக்கிறது. இதை மிகவும் எளிமையாக இவ்வாறு சொல்லலாம்: பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலில் ஏறெடுக்கப்படுகிற ஜெபம் மட்டுமே, தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒரே ஜெபமாய் இருக்கிறது. உண்மையில், இது நம்முடைய ஜெபங்களுக்கும் அப்பாற்ப்பட்டதாய் இருக்கிறது. இது கிறிஸ்தவ ஜீவியத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் பொருந்துகிறது. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலில் நடத்தப்படுகிற கிறிஸ்தவ ஜீவியம் மட்டுமே தேவனுக்குப் பிரியமானதாய், தேவனால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாய் இருக்கிறது. பவுல் இதை ரோமர் 8-ம் அதிகாரத்தில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ரோமர் 8:14-ல், அவர் சொல்கிறார்:
14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
அதுதான் ஒரு நபரை, தேவனுடைய மகனாக, மகளாக உருவாக்குகிறது. அதாவது தேவனுடைய ஆவியானவரால் வழிநடத்தப்படுகிற வாழ்க்கைமுறைதான், மறுபடியும் பிறந்து இரட்சிக்கப்பட்ட ஒரு நபரை தேவனுடைய மகனாக, மகளாக உருவாக்குகிறது. பாருங்கள், தேவனுடைய பிள்ளையாய் மாறுவதற்கு, நீங்கள் தேவனுடைய ஆவியானவரால் மறுபடியும் பிறக்க வேண்டும். இதுதான் ஆரம்ப அனுபவம். இது இல்லாமல், நீங்கள் கிறிஸ்தவ ஜீவியத்திற்குள் நுழைய முடியாது. ஆனால் தேவனுடைய மகனாய், மகளாய் வாழ வேண்டுமென்றால், நீங்கள் தொடர்ந்து பரிசுத்த ஆவியானவரால், தேவனுடைய ஆவியானவரால் வழிநடத்தப்பட வேண்டும். இன்றைக்கு, மறுபடியும் பிறந்து இரட்சிக்கப்பட்ட பலருக்கு, தங்களுடைய கிறிஸ்தவ ஜீவியத்தில், மெய்யாகவே பரிசுத்த ஆவியானவரால் எவ்வாறு வழிநடத்தப்பட வேண்டும் என்பது தெரியாது. இது குறிப்பாக ஜெபத்தைக் குறித்த விஷயத்தில் உண்மையாக இருக்கிறது. பிறகு இந்த அதிகாரத்தின் பின் பகுதியில், பவுல் இந்தக் கோட்பாட்டை குறிப்பாக ஜெபத்திற்கு பொருத்திக் காண்பிக்கிறார். ரோமர் 8:26-27 வசனங்களில், அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கு அடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். 27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.
நாம் பெலவீனர்களாய் இருக்கிறோம் என்று பவுல் சொல்கிறார். நாம் எல்லோருமே பெலவீனர்களாய் இருக்கிறோம். இது சரீர பெலவீனம் அல்ல. இது மன வியாதியும் அல்ல. இது நம்முடைய பழைய, விழுந்துபோன மாம்ச சுபாவமாய் இருக்கிறது. எதற்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்று நாம் அறியாதிருக்கிற நிலைதான், நம் பெலவீனமாய் இருக்கிறது. இந்த வசனத்திற்கு வித்தியாசமான அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. எதற்காக ஜெபிக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியாது என்று சிலர் சொல்கின்றனர். எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியாது என்று மற்றவர்கள் சொல்கின்றனர். இந்த இரண்டுமே உண்மை என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். எதற்காக ஜெபிக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியாது. எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியாது. சில நேரங்களில், எதற்காக ஜெபிக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அதைக் குறித்து எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பது இன்னும் நமக்குத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. மற்ற நேரங்களில், எதற்காக ஜெபிக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியாது. எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியாது. நாம் அப்படியே செய்வதறியாது நிற்கின்றோம். இதற்கு தேவன் தரும் தீர்வு இதுதான். நமக்கு உதவி செய்யும்படி, அவர் பரிசுத்த ஆவியானவரை நம்மிடம் அனுப்பியிருக்கிறார். அவரே நமக்கு தேற்றரவாளனாக, ஆறுதல் கொடுப்பவராக, உதவி செய்பவராக இருக்கிறார். நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை நடத்த வேண்டும், நாம் எப்படிப்பட்ட ஜெபங்களை ஏறெடுக்க வேண்டும் என்பதில் நமக்கு உதவி செய்யும்படி அவர் வருகின்றார். ஆகையால் பவுல் இங்கு சொல்கிறார். பரிசுத்த ஆவியானவர் வருகிறார். நாம் அவருக்கு இணங்கி, கீழ்ப்படிந்து நம்மையே ஒப்புக்கொடுக்கும்போது, அவர் நம் மீது ஆளுகையை எடுத்துக் கொள்கிறார். அப்பொழுது நம் மூலமாய் ஏறெடுக்கப்பட வேண்டிய ஜெபத்தை அவர் ஏறெடுக்கிறார். பவுலின் வார்த்தைகள், நமக்காகவே தனிப்பட்ட விதத்தில் இங்கு வெளிப்பட்டிருக்கின்றன. அவர் சொல்கிறார், “ஆவியானவர்தாமே வார்த்தைகளில் விவரிக்க முடியாத பெருமூச்சுகளோடு நமக்காக பரிந்து பேசுகிறார்.” உடனே அடுத்த வசனத்தில், “ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படி பரிசுத்தவான்களுக்காக பரிந்து மன்றாடுகிறார்,” என்று எழுதுகிறார். ஒரு விதத்தில் பார்த்தால், வெற்றிகரமான ஜெபத்திற்கு இரகசியம், அதன் ஆளுகையை பரிசுத்த ஆவியானவரிடம் விட்டு விடுவதுதான். நாமாகவே முன் வந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவரிடமே அதை முழுமையாய் விட்டு விட வேண்டும். மெய்யாகவே நம் மூலமாய் ஜெபிக்கப்பட வேண்டிய ஜெபத்தை, அவரே ஏறெடுக்கும்படி நாம் அவருக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
இந்த வகையான ஜெபம் பல்வேறு வழிகளில் வரும் என்று பவுல் இங்கு சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். அவர் இங்கு சொல்கிற ஒரு வழி, வார்த்தைகளில் விவரிக்க முடியாத, சொல்லொண்ணா பெருமூச்சுகளின் வழியாக ஜெபம் வெளிப்படுவதாகும். இப்படிப்பட்ட ஜெபம் ஜனங்கள் மூலமாக் ஏறெடுக்கப்படும்போது, நான் அங்கிருந்திருக்கிறேன். அது நமக்குள் ஒரு வலிமையான அசைவை உண்டாக்குகிறது. தேவனைக் குறித்த பயபக்தியின் உணர்வை இது கொண்டு வருகிறது. இது அவ்வளவு உறுதியாய் வெளிப்படுகிறது. இது கிட்டத்தட்ட நடுக்கத்தை நமக்குள் உண்டு பண்ணுகிற ஒரு அனுபவமாகவும் இருக்கிறது. மெய்யாகவே நாம் ஜெபிக்க வேண்டிய பல விஷயங்கள், வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு ஆழமானவைகளாய் இருக்கின்றன. நாம் வழக்கமாய் பேசுகிற வார்த்தைகள், இப்படிப்பட்ட ஜெபங்களை ஏறெடுப்பதற்குப் போதுமானவைகளாய் இருக்காது. நம் ஒவ்வொருவருக்கும் உள்ளே ஆழத்தில், நம்முடைய சிறிய மனதைக் காட்டிலும் மிகவும் பெரிய ஒன்று இருக்கிறது. வேதாகமம் அதை நம்முடைய ஆவி என்று அழைக்கிறது. நம்முடைய ஆவி எப்பொழுதுமே தேவனைக் குறித்து பசிதாகமுள்ளதாய், அவ்வளவு வாஞ்சையுள்ளதாய் இருக்கிறது. நம்முடைய ஆவி, தேவனை அடையும்படி நாடுகின்றது. ஜெபத்தில் தேவனிடம் வெளிப்படுத்தும்படி, அநேக காரியங்களை நம்முடைய ஆவி தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. நம்முடைய குறுகிய, சிறிய மனம் சரியானதென்று, நியாயமானதென்று வரையறுக்கிற காரியங்களுக்குள் நம்மை சுருக்கிக் கொள்வோம் என்றால், நம்முடைய ஆவி தன்னையே முழுமையாய் வெளிப்படுத்துவதற்கு அங்கு இடமில்லாமல் போய் விடும். ஆக, பலனுள்ள விதத்தில், பதில் பெறத்தக்க ஜெபத்தை ஏறெடுக்கும்படி, பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஆவியை விடுவிக்கும் வழிமுறைகளில் ஒன்று, வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆழமான பெருமூச்சுகளோடு ஜெபிக்கச் செய்வதாகும். இது ஒரு வகையான ஜெபமாகும்.
ஜெபிப்பதில், பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிற இன்னொரு வழி, நம்முடைய சொந்த மொழியில் சரியான ஜெபத்தை நமக்குக் கொடுப்பதாகும். ஆனால் அது நாமாகவே சிந்தித்து ஏறெடுத்திராத ஒரு ஜெபமாகும். நாமாகவே அந்த ஜெபத்தைச் செய்திருக்க மாட்டோம். இது எவ்வாறு முதலில் எனக்கு நிகழ்ந்தது என்பது தெள்ளத் தெளிவாக என் நினைவிலிருக்கிறது. பிரிட்டிஷ் ராணுவத்தில், நான் ஒரு போர்வீரனாக இருந்தேன். ஆனாலும் கர்த்தராகிய இயேசுவை தனிப்பட்ட விதத்தில் அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. நான் இருந்த பட்டணத்தில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவ குடும்பத்தார் என்னையும், சக போர்வீரன் ஒருவனையும் தங்களுடைய வீட்டிற்கு அழைத்தனர். ஒரு ஞாயிறு மாலை, தங்களோடு இரவு உண்ண வரும்படி அவர்கள் எங்களை அழைத்தனர். ஆகையால் நாங்கள் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றோம். அவர்கள் எல்லோருமே உண்மையான கிறிஸ்தவர்களாய் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு வீட்டிற்குள் நான் ஒருபோதும் சென்றதில்லை. முதலில், தங்களுடைய உணவை ஆசீர்வதிக்கும்படி, அவர்கள் தேவனிடம் ஜெபித்தனர். இப்படியெல்லாம் ஜெபிக்கக்கூடிய ஒரு வீட்டிற்கு அதற்கு முன் நான் சென்றதில்லை. அந்த சூழ்நிலைக்கேற்றவாறு நான் என்னை சரிப்படுத்திக் கொண்டேன். இரவு உணவு மிகவும் ருசியாக இருந்தது. நாங்கள் சாப்பிட்டு முடித்தோம். அந்தச் சூழ்நிலையோடு பொருந்தி விட்டதைப்போல நான் உணர்ந்தேன். அப்பொழுது உணவின் முடிவில், எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல், ஒவ்வொருவரும் ஜெபிக்க ஆரம்பித்து விட்டனர். அங்கே உணவு மேஜையைச் சுற்றி, ஏழு, எட்டு பேர் இருந்தோம். ஒருவரைத் தொடர்ந்து அடுத்தவர் என வரிசையாக அவர்கள் ஜெபித்துக் கொண்டிருந்ததை நான் சீக்கிரமாய் கவனித்தேன். என் நேரம் சீக்கிரமாய் வருகின்றது என்பதை என் கணக்கு எனக்குக் காண்பித்தது. என் வாழ்க்கையில், அதுவரை, நான் சத்தமாக ஒருபோதும் ஜெபித்ததில்லை. பயத்தில், நான் அடங்கிப் போனேன். என் நேரம் வந்தபோது, என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை, என் வாயை நான் திறந்து, “கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன். என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவி செய்யும்” என்ற வார்த்தைகளை சத்தமாகச் சொன்னேன். இந்த வார்த்தைகள் வேதாகமத்தில் இருக்கின்றன என்பது கூட எனக்குத் தெரியாது! ஆனால் நான் ஜெபித்ததிலேயே இது ஒரு நல்ல ஜெபமாக இருந்திருக்கிறது. இதற்கு நான் உரிமை பாராட்ட முடியாது. பரிசுத்த ஆவியானவரே இதை எனக்குத் தந்தார்.
ஜெபிக்கும் விஷயத்தில் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்யக்கூடிய இரண்டு வழிகளைக் குறித்து நான் பேசினேன். முதலில், வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆழமான பெருமூச்சுகளோடு பரிந்து மன்றாடுகிறார். அடுத்ததாக, நம்முடைய சொந்த மொழியில் நமக்கு ஒரு ஜெபத்தைக் கொடுக்கிறார். அது நாம் ஒருபோதும் சிந்தித்திராத ஒரு காரியமாயிருக்கும்.
இப்பொழுது ஜெபிக்கும் விஷயத்தில், பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்யக்கூடிய மூன்றாவது வழியைப் பார்ப்போம். அது அறியாத ஒரு மொழியில் ஜெபிப்பதாகும். இதைக் குறித்து புதிய ஏற்பாட்டில் பல முறை சொல்லப்பட்டிருக்கிறது. சிலருக்கு இதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இதை முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. இது நம்முடைய ஆவியின் ஒரு செயலாயிருக்கிறது. இது நம்முடைய குறுகிய மனதினால் முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய திராணிக்கும் அப்பாற்ப்பட்டுச் செல்கிறது. ஆனால் தேவனுக்கு நன்றி, காரணம், கிறிஸ்தவ ஜீவியத்தின் அனுபவம், நம்முடைய மனம் புரிந்து கொள்ளக்கூடிய திராணியின் எல்லைகளுக்கு உட்பட்டதல்ல. அது நம்முடைய மனதின் புரிதலுக்குக் கட்டுப்பட்டதல்ல. தேவனுக்கு நன்றி, காரணம், நம்முடைய குறுகிய, சிறிய மனதைக் காட்டிலும் பெரிய தேவனை நாம் ஆராதிக்கின்றோம். ஒரு ஜெப மொழியை பரிசுத்த ஆவியானவர் மூலம் நமக்குக் கொடுப்பதன் மூலம், தேவன் நம்மை நம்முடைய வாழ்க்கையின் மீது நம் மனம் செலுத்தும் ஆதிக்கத்திலிருந்து விடுதலையாக்குகிறார். நிஜமாகவே இருக்கிற ஒரு மொழியில் நாம் ஜெபிக்கின்றோம். ஆனால் இந்த மொழியின் வார்த்தைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. நாம் அதை பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கு விட்டு விடுகிறோம். இந்தப் புதிய ஜெப மொழியில், என்ன ஜெபிக்கப்பட வேண்டுமோ, அதை நம் மூலமாய் ஜெபிக்கும்படி நாம் அவருக்கு இடம் கொடுக்கிறோம்.
இன்று இந்த உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் இந்த அனுபவத்திற்குள் நுழைகின்றனர். புதிய ஏற்பாட்டில் இதைக் குறித்து எழுதப்பட்டிருக்கிற சத்தியங்களோடு இந்த அனுபவம் அப்படியே ஒத்திருக்கிறது என்று கண்டுகொள்கின்றனர். 1 கொரிந்தியர் 14:2 மற்றும் 4 வசனங்கள் பவுல் இதைக் குறித்து என்ன சொல்கிறார் என்பதைக் கவனிப்போம்:
2 ஏனெனில் அந்நிய பாஷையில் (அறியாத மொழியில்) பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 4 அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.......
ஆக, அறியாத மொழியாகிய இந்த ஜெப மொழியில் நாம் ஜெபிக்கும்போது, நாம் என்ன செய்கின்றோம்? நாம் மூன்று காரியங்களைச் செய்கின்றோம் என்று பவுல் சொல்கின்றார். முதலில், நாம் நேரடியாக மனுஷரிடமல்ல, தேவனிடம் பேசுகின்றோம். இரண்டாவதாக, நம்முடைய ஆவியில், நாம் இரகசியங்களைப் பேசுகின்றோம். அதாவது, நம்முடைய குறுகிய மனதினால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ஆழமான, வலிமையான ஞானத்திற்கடுத்த காரியங்களை நாம் பேசுகின்றோம். மூன்றாவதாக, அவர் சொல்கிறார், அந்நிய பாஷையில் நாம் பேசும்போது, நாம் நமக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகின்றோம் அல்லது ஆவிக்குரிய விதத்தில் நம்மையே நாம் கட்டியெழுப்புகிறோம். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்முடைய மனம் மெய்யாகவே புரிந்து கொள்ளவில்லை என்றாலும், இதையெல்லாம் நாம் செய்கின்றோம்.
பவுல் திரும்பவும், 1 கொரிந்திய 14:14-15 வசனங்களில் இவ்வாறு சொல்கிறார்:
14 என்னத்தினாலெனில், நான் அந்நிய பாஷையிலே விண்ணப்பம் பண்ணினால், என் ஆவி விண்ணப்பம் பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். 15 இப்படியிருக்க, செய்ய வேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன். கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன். நான் ஆவியோடும் பாடுவேன். கருத்தோடும் பாடுவேன்.
நாம் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். சில நேரங்களில், நாம் நம்முடைய மனதிலிருந்து ஜெபிக்கின்றோம். அதாவது, நமக்குப் புரிகின்ற வார்த்தைகளைக் கொண்டு நாம் ஜெபிக்கின்றோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சரி செய்வார் என்று நாம் நம்புகிறோம். மற்ற நேரங்களில், நாம் நம் மனதிற்கு ஓய்வு கொடுத்து விட்டு, பரிசுத்த ஆவியானவர் நம் மீது ஆளுகை செய்யும்படி நாம் இடம் கொடுக்கிறோம். நமக்குப் புரியாத ஒரு மொழியிலிருந்து வார்த்தைகளைப் பேசி, நம் ஆவியின் மூலம் நாம் ஜெபிக்கின்றோம். ஆனால் வேதவசனத்தின்படி பார்க்கும்போது, நாம் தேவனிடம் நேரடியாகப் பேசுகின்றோம், நாம் இரகசியங்களைப் பேசுகின்றோம், நாம் தேவனுடைய இரகசியங்களில் பங்கடைகின்றோம், நமக்கு நாமே பக்திவிருத்தி உண்டு பண்ணிக் கொள்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்பொழுது ஜெபத்தின் இன்னொரு முக்கியமான அம்சததைக் குறித்துப் பார்ப்போம். ஜெபம் என்பது ஆவிக்குரிய யுத்தத்தில் ஒரு முக்கியமான ஆயுதமாக இருக்கிறது. எபேசியர் 6:12-ம் வசனத்திலிருந்து வாசித்துப் பாருங்கள். ஆவிக்குரிய யுத்தத்தைக் குறித்து பவுல் இங்கு பேசுகிறார். 18-ம் வசனத்தில் அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:
18 எந்தச் சமயத்திலும் (எல்லா சமயங்களிலும்) சகலவிதமான வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி (ஆவியானவரால் ஜெபம் பண்ணி)............
இது ஆவிக்குரிய யுத்தத்தின் சூழலைக் குறித்துப் பேசுகிறது. மற்ற காரியங்களின் மத்தியில், ஜெபம் என்பது வல்லமையான ஒரு ஆவிக்குரிய ஆயுதமாயிருக்கிறது. நான் இதை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒரு ஏவுகணைக்கு ஒப்பிடுவேன். ஒரு கண்டத்திலிருந்து, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இன்னொரு கண்டத்தி லிருக்கும் எதிரியின் பாதுகாப்பு அரணுக்கு எதிராக, அவனுடைய முக்கியமான ஆயுத தளத்திற்கு எதிராக இந்த ஏவுகணையை ஏவ முடியும். ஆனால் அந்த ஏவுகணை வெற்றிகரமாய் தன் இலக்கை தாக்க வேண்டுமென்றால், அதன் கம்ப்யூட்டர் சரியாக வேலை செய்ய வேண்டும். இது ஒரு சிறிய உவமை என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபிக்க வேண்டுமென்றால், பரிசுத்த ஆவியானவர்தான் கம்ப்யூட்டரை இயக்க வேண்டும். நாம் எதற்கு எதிராக ஜெபிக்க வேண்டுமோ, அந்த இலக்கை அவர் தான் தீர்மானிக்க வேண்டும்.
சரி, இப்பொழுது நாம் எபேசியர் 3:20-ல், பவுல் என்ன சொல்கிறார் என்பதைப் பார்த்து, இன்றைய செய்தியை முடிப்போம்:
“20 நாம் வேண்டிக் கொள்கிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,” என்று இவ்வசனம் சொல்கிறது.
நம்முடைய ஜெபங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதில், நமக்குள் கிரியை செய்கிற வல்லமையைச் சார்ந்திருக்கிறது. எது அந்த வல்லமை? உண்மையில், அதுதான் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையாக இருக்கிறது. அவர் நமக்குள் அதிகமாய் கிரியை செய்யச் செய்ய, நம்முடைய ஜெபங்களுக்கு அதிகதிகமான பலன்களும், பதில்களும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
சரி, இன்றைக்கு நான் முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். வெற்றிகரமான ஜெபத்திற்கான இன்னும் ஒரு முக்கியமான விஷயம் எனக்கு உள்ளது. அதை நாளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
குறியீடு: RP-R019-104-TAM









